Friday, May 27, 2005

இரயில் பயணங்களில்...


அப்போது எனக்கு 22வயதுகள் நிரம்பியிருந்தன. நான் கர்ப்பமாயிருந்தேன். எனது கணவர் என்னை ரெயினில் ஏற்றி, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவரிடம் எனக்கு ஏதாவது உதவிகள் தேவையாயின் செய்து கொடுக்கும் படி சொல்லி விட்டுச் சென்றார். கொழும்பிலிருந்து கொடிகாமத்திற்குத் தனியாகப் பயணிப்பது எனக்குப் புது அனுபவம். அதனால் சற்றுப் பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது.

மூன்று மாதங்கள் மட்டுமே ஆனதால் எனது கர்ப்பமான வயிறு வெளியில் தெரியவில்லை. கர்ப்பமான பெண்களுக்குள்ள வழமையான இயல்புகள் என்னையும் விட்டு வைக்கவில்லை. சத்தியிலும், குமட்டலிலும் அதானாலான அசௌகரியங்களிலும் நான் நன்கு மெலிந்திருந்தேன். பூப்போட்ட பச்சை நிறச் சேலை அணிந்திருந்தேன். அதற்கு மச்சிங்காக பச்சை மேற்சட்டையும் என் உடம்போடு ஒட்டியிருந்தது.

என் கணவரின் சிபாரிசு இல்லாமலே எனக்கு உதவத் தயாராக இருந்தான் அந்த இளைஞன். ரெயின் வெளிக்கிட்டு, பிரிய மனமின்றி என் கணவர் பிரிந்த கையோடு அந்த இளைஞன் அவசரமாக எழுந்து என் இருக்கைக்கு வந்து விட்டான். "என்ன வேணும்?" அவன் கேட்ட விதமே எனக்கு என்னவோ போலிருந்தது. அவனைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை.

சடாரென்று எழுந்து நான் இன்னொரு இருக்கைக்கு நகர்ந்தேன். வெறுமையாக இருந்த அந்த இருக்கையில் இருந்து இவனைத் திரும்பிப் பார்த்தேன். இவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். "வந்து இங்கே இரேன்" என்பது போல சைகை செய்தான். நான் அவசரமாகத் திரும்பி விட்டேன்.

றாகம வரை பிரச்சனைகள் எதுவும் இல்லை. தனியாகத்தான் இருந்தேன். இவன் வந்து என் பக்கலில் அமர்ந்து விடுவானோ என்ற பயம் மட்டும் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.

நான் எதிர்பாராத ஒரு கணத்தில் றாகம புகையிரதநிலையத்தில், என் பக்கலில் இன்னொரு இளைஞன் வந்து அமர்ந்தான். நான் ஜன்னல் பக்கமாக நன்கு தள்ளி அமர்ந்தேன். அவன் என் பக்கம் திரும்பி மெதுவாகச் சிரித்தான். சாந்தமாக இருந்தான். முதலாமவன் மேல் இருந்த பயம் இவன் மேல் எனக்கு வரவில்லை. ஆனாலும் சங்கடமாக இருந்தது.

வேறெங்காவது இடமிருக்கிறதா என எட்டிப் பார்த்தேன். எல்லா இருக்கைகளும் நிரம்பி வழிந்தன. இரண்டாமவன் என்னோடு மெதுமெதுவாகப் பேச ஆரம்பித்தான். நான் கஸ்டப் பட்டுப் பதில் சொன்னேன். தனக்கு சாப்பாடு வாங்கப் போகும் போது எனக்கும் ஏதாவது வாங்கிக் கொண்டு வர வேண்டுமா எனக் கேட்டான். வயிற்றுக்குமட்டலுக்கு ஏதாவது சாப்பிட்டால் நல்லாயிருக்கும் போலிருந்தது. ஒரு சான்ட்விச் வாங்கும் படி சொல்லிக் காசு கொடுத்தேன். காசை வேண்ட மறுத்தான். "காசு வேண்டாவிட்டால் எனக்கு சான்ட்விச் வேண்டாம்" என்றேன். காசை வாங்கிக் கொண்டு போய், சான்ட்விச் வாங்கிக் கொண்டு வந்தான். அவன் மேல் கொஞ்சம் நன்றியாயிருந்தது.

இப்போது சரளமாக அவன் என்னுடன் பேசத் தொடங்கி விட்டான். பல்கலைக்கழகத்தில் படிக்கிறேன் என்றான். சாதாரணமாகக் கதைத்துக் கொண்டு போனவன் திடீரென "ஐ லவ் யூ" என்றான். நான் திருமணமானவள் என்றேன். அவன் நம்பவில்லை. சுத்தமாக அவன் நம்பவில்லை. "நான் கர்ப்பமாகக் கூட இருக்கிறேன்" என்றேன். அவன் நம்பவே இல்லை. நான் முழுப்பொய் சொல்வதாகவே அவன் நம்பினான். என்னைத் தன்னுடன் வவுனியாவுக்கு வந்து விடும்படி கேட்டான். நான் சம்மதித்தால் என் வீட்டுக்கு வரவும் தயாராக இருந்தான். தனது முகவரியைத் தருகிறேன் என்றான். "வேண்டாம்" என்று சொல்லி விட்டேன்.

வுவுனியா புகையிரதநிலையம் வந்ததும் ரெயினை விட்டு இறங்க மனமின்றி அப்படியே இருந்தான். என்னுடன் யாழ்ப்பாணம் வரப் போகிறேன் என்றான்.
அவனது செய்கை சற்றுக் குழந்தைப் பிள்ளைத்தனமாகவே இருந்தது. "போய் உங்கள் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடருங்கள்" என்றேன். அரைமனதோடு இறங்கிச் சென்றான்.

வவுனியாவில் ரெயினால் இறங்கும் வரை அவன் வரம்பு மீறவுமில்லை. நான் கர்ப்பமாயிருக்கிறேன் என்பதை நம்பவுமில்லை.

இப்போது அவன் ஒரு பட்டதாரியாக இருக்கலாம். அல்லது எமது நாட்டின் போர் அவனை அடித்துப் புரட்டி அகதியாக்கியிருக்கலாம். அல்லது இன்னும் ஏதாவது நடந்திருக்கலாம். எதுவாயினும்...

அவனை என் நினைவுகளிலிருந்து முற்று முழுதாகத் தூக்கியெறிந்து விட முடியவில்லை. எப்போதாவது வந்து முகம் காட்டிப் போகிறான்.

சந்திரவதனா
ஜேர்மனி
27.5.2004

13 comments :

enRenRum-anbudan.BALA said...

சந்திரவதனா,

எப்போதுமே ரயில் பயணங்கள் சுவாரசியமானவை :) ஆனால், இந்த "கண்டவுடன் காதல்" தான் புரியவில்லை. அந்த இளைஞர், கடைசி வரை நீங்கள் திருமணமானவர் என்பதை நம்ப மறுத்தது ஏன் என்று விளங்கவில்லை !!! உங்கள் ஊரில் திருமணமான பெண்களுக்கென்று அடையாளம் (மெட்டி, தாலி ...) ஏதும் கிடையாதா ?

இவ்வார இறுதியில் நான் பதியவிருக்கும் "பல்லவியும் சரணமும் - 25" போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன் !! இதன் பின்னர், தற்காலிகமாக "பல்லவியும் சரணமும்" போட்டியை நிறுத்த முடிவு செய்துள்ளேன்.

என்றென்றும் அன்புடன
பாலா

Anonymous said...

பாலா!
நீங்கள் குறிப்பிடும் தாலி,மெட்டி போன்றவற்றை எங்களூரில் திருமணமான பெண்கள் அனிவார்கள் தான்.1990க்கு முற்பட்ட காலங்களில் கொழும்பு ரயலில் பயணிப்போர் தம்மை தமிழராக
இனம்காட்டிக் கொள்வதில்லை.

ஏனெனில்
ரெயில்(யாழ்தேவி) யாழ்ப்பாணத்தில்
இருந்து புறப்பட்டு கொழும்பு வரும் வழிகளில் பல சிங்கள் ஊர்களை தாண்டியே வரவேண்டும்.அதில் அனுராதபுரம் பொல்காவல போன்றவை
மோசமானவை.காலத்திற்கு காலம்
அந்த ஊர்களில் வைத்து தமிழர்கள்
தாக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு.

எனவே தமிழ் பெண்கள்
விதவைகள் மாதிரிதான் பயணம் செய்வார்கள் யாழதேவியில் அந்தகாலகடங்களில்.(பொட்டு,தாலி,பூ
மற்றும் தமிழராக காட்டும் இன்ன பிற அடையாளங்கள்)

எனது தந்தை வேலை செய்தது கொழும்புக்கண்மையில் உள்ள ஒரு ஊரில்
எனது சிறு வயதில் நாம் அடிக்கடி ரெயிலில் பயணம் செய்வோம் மேற்படி ஊர்களுக்கூடாக.இந்த ஊரில்
இறங்கிதான் யாழ்தேவியில் ஏறவேண்டும்

அப்போது எனது தாய் பொட்டு ,தாலி இல்லாமல் பயணம்
செய்ததும் அப்போது சிறு பிள்ளைகளாக இருந்த எம்மை அந்த ஊர்கள் வந்ததும் தமிழில் கதைக்க வேண்டாம் என்று ஆறிவுறுத்தப்பட்டதும் எனது ஞாபகங்களில் வந்து போகிறது.

அண்மையில் எங்கோபடித்தேன் ஈழத்தமிழர்களுக்கு தமிழ்மேல் பற்று அதிகம் என்று.ஏன் பற்று அதிகம்
என்பது இப்போது தெரிகிறதல்லவா?

Thangamani said...

நல்ல பதிவு!

ஒரு பொடிச்சி said...

மொழிபெயர்ப்புக் கதைகளது நடைபோல வித்தியாசமாய் நல்லா இருக்கு எழுத்துநடை. மிகவும் இயல்பாக எழுதியிருக்கிறீர்கள்.

மேலே சிலபின்னூட்டங்களைப் பார்த்தால் பார்த்தால்
தாலி + மெட்டி இவையுடன் பேயிருந்தால் - இந்த அனுபவம் நேர்ந்திருக்காது?! அப்படியானால் ஆண்களுக்குத்தான் அடையாளங்களில்லாமல் நினைத்துப்பார்க்க அழகான அனுபவங்கள் கிடைக்கும்போல!

இப்படி ஒரு ரயில்பயணத்தை வைத்துத்தான் Mr & Mrs Iyer என்றொரு அருமையான படத்தை Aparna Sen இயக்கியிருந்தார்... அதில் இப்படி தாலி.பொட்டு.மெட்டி `அடையாளங்கள்' இருக்கிற பெண்ணிற்கும் அதைத் `தெரிந்த' ஆணிற்கும் வருகிற மெல்லிய நேசம் பேசப்படுகிறது. கறுப்பி இந்தப் படத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.வாசிக்கையில்
அப்படத்தை நினைவுபடுத்தியது. அதுபோல
ஒரு இனிய பயணம்..அழகா இருக்கு!

Anonymous said...

அக்கா, இக்கதையை வாசித்தபோது எனக்கும் Mr.&Mrs. Iyer திரைப்படமே ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் அத்திரைப்படத்தில் Mrs.Iyer படிப்படியாகக் காதல் வயப்படுவதை அழகாகக் காட்டியிருந்தார் அபர்ணா சென். யாழ்-கொழும்பு யாழ்தேவி அனுபவம் எல்லாம் எனக்குப் பெரிதாக இல்லை. எனது காலத்தில் தண்டவாளங்களே இல்லை. நல்லதொரு சிறுகதை.

enRenRum-anbudan.BALA said...

Dear karikAlan,

thangkaL viLakkaththiRku nanRi.
purinthu koNtEn.

இளங்கோ-டிசே said...

நல்லதொரு பதிவு. மிக இயல்பாய் எழுதியிருக்க்கின்றீர்கள் சந்திரவதனா.

Chandravathanaa said...

பாலா
கண்டவுடன் காதல் வியப்பில்லை. எதிர்பாராத ஒரு கணத்தில்தான் காதல் வருகிறது. அது வளர்வதும் தேய்வதும்தான் மனங்களையும் குணங்களையும் பொறுத்துள்ளது. நிற்க உங்கள 25வது பல்லவியும் சரணத்திற்குமான அழைப்புக்கு நன்றி. பங்கு பற்ற முயற்சிக்கிறேன்.

கரிகாலன்
பாலாவுக்குக் கொடுத்த விளக்கத்துக்கு நன்றி.

செல்வநாயகி, தங்கமணி, அருவி
உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.
அருவி நீங்கள் அருவி பத்திரிகை முன்பு நடத்தினீர்களா?

பொடிச்சி
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆண்களே இந்தப் பதிவை வரவேற்றுக் கருத்தெழுதியது
சற்று வியப்பான சந்தோசத்தையே எனக்குத் தருகிறது.
நீங்கள் குறிப்பிட்ட Mr.&Mrs. Iyer படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.
கிடைத்தால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

சஞ்சீவன் டி.சே.தமிழன்
உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி. சஞ்சீவன்,
படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆவலை நீங்கள் இன்னுமொரு படி உயர்த்தியுள்ளீர்கள்.
தண்டவாளமில்லாத காலமா...?

Nirmala. said...

ரசனையான பதிவு. வாசிக்கப் பிடித்திருந்தது.

ஈழநாதன்(Eelanathan) said...

ஒரு பேரூந்துக் காதலைச் சொல்லிய பார்த்தேன் அதே நெகிழ்வை உங்கள் பதிவு தராவிட்டாலும் சுவாரசியமாக இருந்தது.
சஞ்சீ நீங்கள் பிறந்தது தண்டவாளமில்லாத காலமா?நான் பிறக்கும்போது தண்டவாளம் இருந்தது புகைவண்டிதான் இல்லை

Anonymous said...

அக்கா, ஈழநாதன்,
நான் பிறக்கும்போது தண்டவாளம், தொடரூந்து எல்லாம் இருந்தன. பயணங்களுக்கான அத்தியாவசியத் தேவையேற்பட்ட பருவத்தில் இவையில்லை. "கோச்சி வரும் கவனம்" என்ற அறிவிப்புப் பலகை மட்டும் தெருவோரம் அனாதரவாய் நிற்கும்.

Chandravathanaa said...

நிர்மலா ஈழநாதன் சஞ்சீவ்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

Chandravathanaa said...

சஞ்சீவ்
கோச்சி ஓடவில்லை என்பதுதான் எனக்குத் தெரிந்தது.
தண்டவாளமே இல்லாமல் இருந்தது என்பது தெரியாமற் போய் விட்டது.
அவ்வப்போது நடைபெற்ற குண்டு வெடிப்புகளினால் தகர்க்கப் பட்டிருந்ததா?

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite