Google+ Followers

Monday, August 28, 2006

சில நிர்ப்பந்தங்கள்


காரை நிற்பாட்டி விட்டு மணியைப் பார்த்தேன். வேலை தொடங்க இன்னும் 5நிமிடங்கள் இருந்தன. எனக்கொரு வசதி. நான் வேலை செய்யும் வங்கியும், தபாற்கந்தோரும் பக்கத்துப் பக்கத்திலேயே இருப்பதால் வேலைக்கு வரும்போதே தபாற்கந்தோர் வேலைகளையும் முடித்து விடுவேன்.

அன்றும், முதல்நாள் இரவு தம்பிக்கு எழுதிய கடிதத்தைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். அந்த 5நிமிடங்களுக்குள் எழுதிய கடிதத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பார்த்து விட எண்ணி வாசித்தேன்.

19.11.1993 என்று திகதியிட்ட அக்கடிதத்தில் அன்பு ####, எப்படி இருக்கிறாய்? பூநகரித் தாக்குதலுக்கு நீ போயிருக்க மாட்டாய் என்பதில் நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். ஆனால்... இவ்வளவு சாவுகள்...! மனசை நெருடுகின்றன... என்று தொடங்கி உனக்கொன்றும் ஆகவில்லை என்பதில் சந்தோசம். என்று மிகவும் சுயநலமாக முடித்திருந்தேன். இம்முறை அவனுக்கு நிறைய எழுத முடிந்ததில் எனக்கு நிறையவே சந்தோசம்.

கடிதத்துடன் எனது பிள்ளைகளின் சில புகைப்படங்களையும் என்வலப்பினுள் வைத்து ஒட்டி விட்டு, நேரத்தைப் பார்த்த போது, நேரம் 5நிமிடங்களைத் தாண்டியிருந்தது. இடைவேளையின் போது அஞ்சல் செய்ய நினைத்துக் கொண்டு நான் வேலை செய்யும் வங்கியினுள் நுழைந்து விட்டேன்.

சிரிப்புகள், குறும்புகளுக்கு மத்தியில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். என் மனமோ தம்பிக்கு எழுதிய கடிதத்தை வரிவரியாக வாசித்து, அது கிடைத்ததும் அவன் மகிழப் போவதை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தது.

ஒருவாறு இடைவேளை வந்ததும் ஓடிப்போய் கடிதத்தை அனுப்பி விட்டு வந்து வேலைகளைத் தொடர்கையில் நிம்மதியாக இருந்தது.

அடுத்தநாள் சனிக்கிழமை(20.11.2003) நானும் எனது கணவரும் காரில் போர்ட்ஸ்கைம் செல்லும் போது கணவர் ஏதேதோ கதைகள் சொல்லிக் கொண்டு வந்தார். எனது கவனம் அவரது கதைகளில் இருக்கவில்லை. நான் ஏனோ கவலையாக இருந்தேன். என்னை அறியாமலே கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. "என்ன கொம்மா கொப்பரை நினைச்சு அழுறியோ?" என்றார். "இல்லை" என்றேன். "தம்பிமாரை நினைச்சு..." அதற்கும் " இல்லை" என்றேன். எனக்கே, ஏன் நான் அழுகிறேன் என்று தெரியாமல் இருந்தது.

தொடர்ந்த நாட்களில் மனதில் ஏதோ ஒரு அமைதியின்மை. என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அடுத்து வந்த சனிக்கிழமை(27.11.2003) ஜேர்மனியில் மாவீரரை நினைவு கூரும் நாளாக அனுஸ்டிக்கப் பட்டிருந்தது. பிள்ளைகளுக்கு அன்று பாடசாலை இருந்தது. அதனால் கணவர் மட்டும் அதிகாலையிலேயே போய் விட்டார். நான் ஏதேதோ நினைவுகளோடு சமைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது.

கொழும்பில் இருந்து சித்தி அழைத்திருந்தா. இரண்டு கதை கதைத்து விட்டு "மனதைத் திடப் படுத்திக் கொள்ளு மேனை" என்றா. ஏதோ ஒரு பாதகமான செய்தி என்ற உறுத்தலில் நெஞ்சில் இடி இறங்கியது போல ஒரு உணர்வு.

"சபா பூநகரித் தாக்குதலிலை போயிட்டான்" என்றா. "11ந் திகதி(11.11.1993) நடந்தது" என்றா

"என்ன? எப்படி?" என்ற எனது கேள்விகளுக்கு "ஒரு விபரமும் சரியாத் தெரியேல்லை. நான் பிறகு எடுக்கிறன். எல்லாருக்கும் சொல்லு மேனை." தோலைபேசியை வைத்து விட்டா. நான் அழவில்லை. மலைத்துப் போய் நின்றேன். எந்தப் பிரார்த்தனைகளும் பலிக்கவில்லை என்பதில் மனது மிகவும் ஏமாற்றத்தை உணர்ந்தது.

"எல்லாருக்கும் சொல்லு மேனை" என்ற சித்தியின் குரல் மீண்டும் ஒலிக்க
லண்டனில் இருக்கும் தங்கையைத் தொலைபேசியில் அழைத்தேன். மூச்சு வாங்கிய படி "ஹலோ" என்றவள் "இப்பத்தான் கடையிலை சாமான்கள் வேண்டிக் கொண்டு வந்தனான். படியிலை வரவே ரெலிபோன் அடிச்ச சத்தம் கேட்டது. அதுதான் ஓடி வந்தனான்" என்றாள். கர்ப்பமாயிருக்கும் அவளின் மூச்சு பலமாகவே எனக்குக் கேட்டது. எனது அழைப்பு என்ற சந்தோசத்தில் "அக்கா.. " என்றவளிடம் எப்படி அந்தச் செய்தியைச் சொல்வது. இதுவும் ஒரு கொடுமைதான். ஆனாலும் சொல்ல வேண்டுந்தானே.

"சித்தி போன் பண்ணினவ. "

"என்னவாம்"

"சும்மாதான்... சபா பூநகரி அற்றாக்கிலை போயிட்டானாம்."

"சும்மா சொல்லாதைங்கோ." சிரிக்கிறாளா, அழுகிறாளா என்று யோசிக்கையில் அவளின் கேவல். தொலை பேசியை வைத்து விட்டேன். அந்தச் செய்தியை அவளிடம் சொல்லியதற்காக சிலமணி நேரங்கள் அப்படியே இருந்து அழுதேன். (அந்தக் கேவல் மாதங்கள், வருடங்களாக என்னை அழ வைத்தது.)

பின் எனது பெரிய தம்பியை அழைத்து... பிள்ளைகள் பாடசாலையால் வர அவர்களுக்கு.. இரவு கணவர் வர அவருக்கு..

அதன் பின் தம்பி இறந்ததற்காகவா அல்லது ஒவ்வொருவரிடமும் அந்தக் கொடிய செய்தியை நானே சொல்ல வேண்டி வந்த நிர்ப்பந்தத்திற்காகவா என்று தெரியாமலே நான் அழுது கொண்டிருந்தேன்.

19 comments :

காழியன் said...

தபாற்கந்தோர் என்றால் தபால் அலுவலகம்தானே?

Chandravathanaa said...

ஓம் காழியன்.
தபாற்கந்தோர் என்றால் தபால் அலுவலகந்தான்

Johan-Paris said...

சந்திரவதனா!
ஏதோ ஒருவகையில் ;மரணச்செய்திகள்; அதிகாலைகளில் வந்து; இப்போது "உயர் இரத்த அழுத்த "நோயாளியாகி இருக்கிறேன். இப்போதும் அதிகாலையில் மணியடித்தால் கைநடுங்கும்;நெங்சு பதறும்.
அடுத்து" கற்பிணி" யான இந்தச் செய்தியை ;உடனே அப்படியே ...கூறியிருக்கக்கூடாது. என்பது என் அபிப்பிராயம்.
என் தாயார் மரணமான போது,செய்தி நான் வேலை செய்த பிரான்சியர் வீட்டுக்கு வந்தது. அவர்கள் ; சற்றுக் கடுமை எனத்தான் . கூறி ,விபரம் எல்லாம் கேட்டு;தான் "மரணம்" என்பதைச் சொன்னார்கள்.
மேலும் காழியனுக்காக ;கந்தோர்- kantoor என்பது,இலங்கையில் அலுவலகங்களைக் குறிக்கும்; சொல்- உண்மையில் இது ஓர்;டச்சு(ஒல்லாந்து) மொழிச்சொல்; அவர்கள் ஆண்ட போது உருவாக்கிய தபால்;மற்றும் சேவைகள் யாவற்ருக்குமான நிலயங்களைக் "கந்தோர்" எனும் வழக்கம் நின்று விட்டது.இலங்கையில் சில ஊர்ப் பெயர்கள் கூட; ஆங்கிலத்தில் எழுதும் போது; டச்சு ஆட்சியில் வைத்த பெயர்களே! இன்றும் உண்டு. உ+ம்: நெடுந்தீவு- delft ; ஊர்காவற்றுறை- kayts; பருத்தித்துறை-point pedro இன்னும் பல.
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

சந்திரவதனா!
ஏதோ ஒருவகையில் ;மரணச்செய்திகள்; அதிகாலைகளில் வந்து; இப்போது "உயர் இரத்த அழுத்த "நோயாளியாகி இருக்கிறேன். இப்போதும் அதிகாலையில் மணியடித்தால் கைநடுங்கும்;நெங்சு பதறும்.
அடுத்து" கற்பிணி" யான இந்தச் செய்தியை ;உடனே அப்படியே ...கூறியிருக்கக்கூடாது. என்பது என் அபிப்பிராயம்.
என் தாயார் மரணமான போது,செய்தி நான் வேலை செய்த பிரான்சியர் வீட்டுக்கு வந்தது. அவர்கள் ; சற்றுக் கடுமை எனத்தான் . கூறி ,விபரம் எல்லாம் கேட்டு;தான் "மரணம்" என்பதைச் சொன்னார்கள்.
மேலும் காழியனுக்காக ;கந்தோர்- kantoorஎன்பது,இலங்கையில் அலுவலகங்களைக் குறிக்கும்; சொல்- உண்மையில் இது ஓர்;டச்சு(ஒல்லாந்து) மொழிச்சொல்; அவர்கள் ஆண்ட போது உருவாக்கிய தபால்;மற்றும் சேவைகள் யாவற்ருக்குமான நிலயங்களைக் "கந்தோர்" எனும் வழக்கம் நின்று விட்டது.இலங்கையில் சில ஊர்ப் பெயர்கள் கூட; ஆங்கிலத்தில் எழுதும் போது; டச்சு ஆட்சியில் வைத்த பெயர்களே! இன்றும் உண்டு. உ+ம்: நெடுந்தீவு- delft ; ஊர்காவற்றுறை- kayts பருத்தித்துறை- point pedro இன்னும் பல.
யோகன் பாரிஸ்

SK said...

இறந்தவர்களின் ஆன்மா உற்றவரைத் தேடி அலையுமாம்.
அப்படிதான் நிகழ்ந்து நீங்கள் 20-ம் தேதி காரணமின்றி அழுதீர்களோ?
[உடனே மூடநம்பிக்கை என்று எல்லாரும் என்னைச் சாட வேண்டாம்! பதிவைத் திருப்ப வேண்டாம்!!]

படிக்கவே கஷ்டமாயிருந்தது!

சின்னக்குட்டி said...

//இறந்தவர்களின் ஆன்மா உற்றவரைத் தேடி அலையுமாம்.
அப்படிதான் நிகழ்ந்து நீங்கள் 20-ம் தேதி காரணமின்றி அழுதீர்களோ?//

டெலிபதி என்று உளவியிலில் சொல்வார்கள்.. டெலிபதி காரணமாக பலவிசயங்களை உணர கூடியதாயிருக்குமாம்

Chandravathanaa said...

யோகன்
காழியனுக்கு விளக்கமாகச் சொல்ல வேண்டுமென நான் நினைத்ததை நீங்களே சொல்லி விட்டீர்கள்.
மிகவும் நன்றி. நான் ஜேர்மனிக்குப் புலம்பெயரும் வரை காணிக்கந்தோர், தபாற்கந்தோர், கந்தோருக்குப் போகிறேன்.... இப்படித்தான் ஊரில் சொல்லிக் கொண்டிருந்தோம். இப்போது பலது மாறியிருக்கும்.

ஒருவகையில் மரணச்செய்திகள் அதிகாலைகளில் வந்து.... கைநடுங்கும், நெங்சு பதறும்.

இதை நானும் உணர்ந்திருக்கிறேன். முன்னர் எல்லாம் அதிகாலையில் தொலைபேசி அழைப்பு வந்தால் நெஞ்சு படபடவென்று அடிக்கத் தொடங்கி விடும். அதன்பின் நான் இயல்பாக இருப்பதில்லை. ஏதோ ஒரு பதட்டம் என்னை ஆட்கொண்டு விடும்.

பின்னர் ஓரளவு இயல்பு நிலை திரும்பியிருந்தது. ஆனால் இப்போது மீண்டும் போர் என்னும் போது மனதில் ஒருவித கலக்கம் தவிர்க்க முடியாததாய் குடிகொண்டு விட்டது.

அடுத்து" கற்பிணி" யான இந்தச் செய்தியை உடனே அப்படியே ...கூறியிருக்கக்கூடாது. என்பது என் அபிப்பிராயம்.

மிகச்சரி யோகன்.
அந்தத் தவறுக்காக நான் மிக மனம் வருந்தியிருக்கிறேன்.

அம்மாவின் இழப்பு உங்களை நிறையப் பாதித்திருக்கும்
உங்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கான வைத்தியங்களைச் செய்கிறீர்களா?
கவனமாக இருங்கள்.

Chandravathanaa said...

SK,
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆவி என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
ஆனால் ஏதோ சில உணர்த்தல்கள் எமக்குக் கிடைக்கின்றன.

பூநகரித் தாக்குதலுக்கு இரு வாரங்கள் முதலும் நான் தம்பிக்குக் கடிதம் எழுதினேன். அது அவன் இறந்து 5-6நாட்களுக்குப் பின்னர்தான் அங்கு போய்ச் சேர்ந்தது. ஆனால் அவன் பூநகரிக் களத்தில் நின்ற போது "அக்காவையள் கடிதம் போட்டிருப்பினம். வேண்டிக் கொண்டு வா" என்று பலமுறை பாடகரும், மாவீரனுமாகிய சிட்டுவை எமது வீட்டுக்கு அனுப்பியிருக்கிறான். அவன் எதிர்பார்த்த, எமது அந்தக் கடிதங்கள் கிடைக்காமலே அவன் போய் விட்டான்.

சின்னக்குட்டி குறிப்பிடுவது போல இவைகள் ரெலிபதி என்றே நான் கருதுகிறேன்.

Chandravathanaa said...

சின்னக்குட்டி,

நீங்கள் சொல்லும் ரெலிபதியைத்தான் நானும் நம்புகிறேன்.
ரெலிபதியின் சக்தியை நான் பலசமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.

மலைநாடான் said...

சந்திரவதனா, சின்னக்குட்டி, எஸ்.கே !

உங்களுடைய ரெலிபதி எண்ணங்களுடன் நானும், உடன்படுகின்றேன். ஒரு சிலருக்குத் தங்கள் உறவு நிலைகள் தாண்டியும், சில அனுபவங்கள் ஏற்படுவதுண்டு.

டிசே தமிழன் said...

:-(((...இதைத்தவிர வேறெதையும் -என்னைப் போன்றவர்களால்- சொல்லிவிடமுடியாது என்றே நினைக்கிறேன்.

வெற்றி said...

மிகவும் மனதை உருக்கும் பதிவு. அனேகமாக ஒவ்வொரு ஈழத் தமிழக் குடும்பங்களிலும் இப்படியான சோகக் கதைகள் பின்னிப் பிணைந்துள்ளது. நீங்கள் புழங்கியுள்ள சில சொற்கள் புரியவில்லை.

//சிரிக்கிறாளா, அழுகிறாளா என்று யோசிக்கையில் அவளின் கேவல். //

கேவல் என்ற சொல்லின் பொருள் புரியவில்லையே? நான் இதுவரை இச் சொல்லைக் கேள்விப்படவில்லை.

SK said...

'கேவிக் கேவி அழுதான்' எனப் படித்ததில்லை, வெற்றி?

தொடர்ந்து அழும்போது, ஒரு அழுகைத் தொடருக்கும் அடுத்ததற்கும் இடையில் மூச்சு எடுக்கும்போது[அழுகையை நிறுத்தாமல்தான்!] ஒரு ஒலி வருமே, அதுதான் கேவல்!

Johan-Paris said...

வெற்றி!
நீங்க!!!கேவல் தெரியாத தமிழரா???ஆச்சரியமாக இருக்கு!நீங்க கொடுத்து வத்தவர். இது அழும் ஒலி;அதுவும் மனம் நொந்து அழும் போது எழும் ஒலி!; " இதைச் சரியாக விளக்க " படிக்காத மேதை" திரைப்படத்தில் ரங்கனாகவரும்; சிவாஜி கணேசன்; மாமாவான ரங்கராவ் ;இறந்து யாவும் முடிந்த பின்பு ,அத்தை கண்ணாம்பாமுன் ;தன் கவலையைக் கொட்டிக் கேவிக் கேவித் தான் அழுவார். அழுகைக் கிடையில் மூச்சு விடும் போது,இக்கேவல் எல்லோருக்கும் வரும்.இதற்குச் சாதி;சமய;இன வேறுபாடே இல்லை. இதைவிட யாராவது இக் கேவலை விளக்குவார்களா?,,பார்ப்போம்.புத்தர் சொன்ன "கடுகில்லா" வீடு போல் "கேவலில்லா" ஈழத்தமிழ் வீடிருப்பது;கடினம்.
யோகன் பாரிஸ்

SK said...

இவ்வளவு தூரம் வந்தாயிற்று!
இதையும் சொல்லி விடுகிறேன்!

'மழை விட்ட பின்னும் தூவானம் விடவில்லை' எனச் சொல்வோமே அது போல, ஒரு நீண்ட அழுகை அழுது ஓய்ந்த பின், அடுத்த சில நிமிடங்களுக்கு, விட்டு விட்டு அழுகையை நினைவு படுத்துவது போல ஒரு ஒலி வருமே... அதுதான் விசும்பல்!

அழும் போது, சொல்லுக்கு விளங்கா சில ஒலிகளையும் சேர்த்து, உச்ச குரலெடுத்து அழுவது.... கதறல்!

புரியும் படியான சொற்களை ஓங்கிச் சொல்லி அழுவது.... ஒப்பாரி!

:)))

Johan-Paris said...

எஸ் கே ஐயா!
தமிழ் செம்மொழிதான்! என்ன? ஆழம்!!
யோகன் பாரிஸ்

வெற்றி said...

//'கேவிக் கேவி அழுதான்' எனப் படித்ததில்லை, வெற்றி?//


//வெற்றி!
நீங்க!!!கேவல் தெரியாத தமிழரா???ஆச்சரியமாக இருக்கு!நீங்க கொடுத்து வத்தவர்//

SK அய்யா, யோகன் அண்ணை வணக்கம். ஈழத்தில் நான் பிறந்து வளர்ந்த பகுதிகளில் இச் சொல் புழக்கத்தில் இல்லையா, அல்லது புழக்கத்தில் இருந்தும் நான் அறியவில்லையா, அல்லது அறிந்திருந்தும் பல காலம் புழங்காததால் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லையா என புரியவில்லை. எமது ஊரில் விக்கி விக்கி அழுதான்/அழுதாள் என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பவும் சகோதரர்களின் பிள்ளைகள் அழும் போது விக்கி விக்கி அழுதான் எனத் தான் நான் சொல்வது வழக்கம்.விசும்பல் என்ற சொல் எமது ஊரிலும் புழக்கத்தில் உண்டு.

Chandravathanaa said...

மலைநாடான், டிசே
வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

மலைநாடான்
நீங்கள் சொல்வது போல எந்த வித உறவு நிலை இல்லாதவரிடையேயும் ரெலிபதி
வேலை செய்வதென்பதை பல இடங்களில் வாசித்திருக்கிறேன். சில அனுபவங்களும் ஏற்பட்டுள்ளன.

ஒருவரைப் பின் பக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர் திரும்பி உங்களைப் பார்ப்பதும்
இதற்குள் அடங்கும் என நினைக்கிறேன்

வெற்றி
உங்கள் சந்தேகம் எஸ்கேயும் யோகனும் தந்த பதிலில் தெளிவாகியிருக்கும் என்று நம்புகிறேன்.

யோகன், SK
கேவல் பற்றிய விளக்கமான பதில்களுக்கு மிகவும் நன்றி.

யோகன்
புத்தர் சொன்ன "கடுகில்லா" வீடு போல்
மரணமில்லா வீட்டில் கடுகு வாங்கி வரச் சொன்னார் என நினைக்கிறேன்.

காழியன் said...

சந்திரா, யோகன் இருவருக்கும் நன்றி.

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite