Saturday, April 24, 2004
களிக்கும் மனங்களே கசியுங்கள்
உப்பளக் காற்றிலே
உயிரைக் கலைய விட்ட
எங்கள் பிள்ளைகளின்
குருதி வெள்ளத்தில்
ஏற்றி வைத்த
வெற்றிக் கொடியை
பற்றி
பரவசப் பட்டு
மனம்
ஆனந்தக் கண்ணீர் வடித்தது!
நியம் தந்த களிப்பில்
அவசரமாய் வந்த
ஆனந்தக் கண்ணீர்
அது நியமானது!
பிறகேன் போலியாய்
பார்ட்டியும்..!
படாடோபமும்..!
போர்க்களத்திலே வீழ்ந்தும்
குருதி வெள்ளத்திலே சாய்ந்தும்
போனவர்களின் தியாகமும்
அவர்கள்
ஈன்றவர்கள் மனதை
பற்றி நிற்கும் சோகமும்
நாம் இங்கு
பாடி நிற்கவும்
பார்ட்டி வைக்கவுமா..?
இல்லை!
வாடி நிற்கும் எம்மவர்
வாழ வேண்டும்
கூடிழந்த எம்மவர்க்கு
கூரை வேண்டும்
ஓடி ஓடிக் களைத்தவர்க்கு
ஓய்வு வேண்டும்
போலியாய்
எதுவும் வேண்டாம்..!
களிக்கும் மனங்களே
கசியுங்கள்
வெற்றி கண்ட மண்
வற்றி நிற்கிறது
பற்றோடு கை கொடுங்கள்.
சந்திரவதனா- யேர்மனி- 29.4.2001
ஆனையிறவு
240 ஆண்டு கால அடிமைச்சின்னம் அழிக்கப் பட்டு
ஆனையிறவு கைப்பற்றப் பட்டது - 22.4.2000
எனது டயறியிலிருந்து
பல்கணி கதவையும் திறந்து விட்டு வந்து, சமைப்பதற்காகக் குசினி யன்னலையும் திறந்து விட்டதில் காற்று ஊ.... ஊ.... என்று வீட்டுக்குள்ளேயே அடித்து மேசையிலிருந்த பேப்பர்கள் சிறகடித்தன. வசந்தம் வர்ணங்களாய் பூத்திருக்க, குழந்தைகள் பலர் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் உப்பளக் காற்றைப் பற்றி எதுவுமே நினைக்கவில்லை.
எங்கெல்லாமோ அலைந்து எதையெதையெல்லாமோ தொட்டு வந்த நினைவில் பள்ளிக்கூடமாக உப்பளம் வரை போனதோ, கரையொதுங்கியிருந்த உப்பை கை நிறைய அள்ளி நக்கிப் பார்த்ததோ வரவில்லை.
உலை வைத்து அரிசி போட்ட போதோ, கறி கொதித்து இறக்கிய போதோ மனம் அலைந்து கொண்டுதான் இருந்தது. பிரியமானவர்களைத் தொட்டு மகிழவோ, அக்கா என்று கதைத்து விட்டு அடுத்த நாள் சில்லாகிப் போன மாவீரர்களைத் தொட்டுக் கலங்கவோ அது தவறவில்லை. ஆனாலும் உப்பளத்தை மறந்திருந்தது. ஆனையிறவுக் காற்று அதன் நினைவில் வரவேயில்லை.
அப்போதுதான் காற்றோடு வந்தது
240 ஆண்டு கால அடிமைச்சின்னம் அழிக்கப் பட்டு ஆனையிறவு கைப்பற்றப் பட்ட செய்தி.
சந்திரவதனா
22.4.2000