Friday, June 29, 2007

கணிப்புகளும் சந்தேகங்களும்

எனக்கே சந்தேகம் இருந்தது, இந்த வசந்தனும், சயந்தனும் ஒரே நபர்கள்தானோ என்று.

சயந்தன்
வலைப்பதிவு என்ற ஒன்று எனக்கு அறிமுகமாக முன்னரே இணையவழி எனக்குப் பழக்கமானவர். அவரின் உயிர்ப்பு சஞ்சிகைக்கு நானும் ஆக்கங்கள் எழுதி மின்னஞ்சல் வழியாக நான் அவருடன் கதைத்திருக்கிறேன். பின்னர் எழுநா என்ற இணையத்தளத்தை ஆரம்பித்த போது ஊரிலிருந்து ஒரு தளம் என்ற உணர்வுப் பெருக்கில், மனம் சந்தோசத்தில் பொங்க வாழ்த்தும் அனுப்பினேன்.

தொடர்ந்த காலங்களிலும், அவ்வப்போது இணையத் தொடர்பாடல்களுக்கு உரிய ஏதோ ஒரு வழியாக நாம் பேசியிருக்கிறோம்.

வசந்தன்
வலைப்பதிவின் பின்னரே எனக்கு அறிமுகமானார். அதுவும் இணைய வழிதான். அவர் மெல்பேர்ணில்தான் இருக்கிறார் என்று நான் அறிந்து வைத்திருந்தேன். ஆனாலும் மெல்பேர்ணுக்கு இரு தடவை போயும் நான் அவரைச் சந்திக்கவில்லை. முதல் தரம் 2006 ஜனவரியில் நானும் அவரும் ஒரே பொங்கல் விழாவில் இருந்திருக்கிறோம். ஆனாலும் கண்டு கொள்ளவில்லை. அதே வருட இலக்கிய விழாவுக்கு நான் போயிருந்தேன். அவர் வரவில்லை. அந்த விழாவுக்கு வந்திருந்தால் கட்டாயம் ஒருவரையொருவர் இனம் கண்டு கதைத்திருப்போம்.

அந்த விழாவில் வலைப்பதியும் சந்திரலேகாவையும் இன்னும் பல அறியப்பட்ட எழுத்தாளர்களையும் சந்தித்து ஓரிரு வார்த்தைகளாவது பேசி மகிழ்ந்தேன்.

பின்னர் 2007 ஜனவரியில் பொங்கல் விழாவுக்கு வந்தாரோ இல்லையோ தெரியாது. நான் போயிருந்தேன். சிறிய மண்டபம். மேல் மாடியிலும் கீழ் மாடியிலுமாய் பார்வையாளர்கள். சந்திப்பதற்கான வாய்ப்புகள் வெகு குறைவாகவே இருந்தன.

குறிப்பிட்ட அந்த இலக்கிய விழாவுக்கு இம்முறை வசந்தன் போயிருந்தார். என்னால் போக முடியவில்லை.

இப்படியிருக்க நான்தான் சயந்தனும், வசந்தனும் என்ற சந்தேகம் யாருக்கோ வந்திருப்பதாக சின்னக்குட்டி எழுதியிருக்கிறார். அது சின்னக்குட்டிக்கே வந்த சந்தேகமாக இருந்தாலும் இப்போது தீர்ந்திருக்குமென நம்புகிறேன்.

இப்படியான சந்தேகங்கள் எனக்கும் நிறைய உண்டு. அவ்வப்போது சினேகிதியும், டிசேயும் ஒருவரோ என்ற சந்தேகம் வரும். அந்த அவுஸ்திரேலிய வலைப்பதிவாளர் சந்திப்பு பற்றிக் கூட எனக்கு சந்தேகம் வந்தது. ஆனாலும் மறந்து விட்டேன். (இப்போதுதான் அடப்பாவிகளா இப்படியுங் கூட எழுதுவார்களா என நினைத்துக் கொண்டேன்.) இப்படிப் பல.

ஆனாலும் ஆராய்ச்சிகள் எதுவும் இப்போது செய்வதில்லை. எனது வேலைகளை முடிப்பதற்கான நேரங்களையே துரத்திப் பிடிக்க வேண்டிய நிலையில் இருக்கும் போது அநாவசிய தேடல்களில் என்னால் ஈடுபட முடிவதில்லை.

யாராவது எழுதட்டுமே. என்னால் ரசிக்கக் கூடிய எனக்கு உற்சாகம் தரக் கூடிய எதையாவது வாசிக்கும் போது எனக்குள் ஏற்படும் நிறைவும், திருப்தியும் எனக்குப் பெரியது. அது எனக்கு அவசியமானதும் கூட. சில பதிவுகள் கவலையையும், எரிச்சலையும் தரத் தவறுவதில்லை. ஆனாலும் இரவு படுக்கைக்குப் போகுமுன் டிசே போன்றோரின் பதிவுகளில் எதையாவது ஒன்றைப் படித்து விட்டுப் படுக்கும் போது மனதில் ஒருவித நிறைவு தோன்றும். தமிழ்நதியின் பதிவுகளில் பெரும்பாலும் சோகம் இழையோடி இருந்தாலும் அதைப் படித்து முடித்த பின்னரும் இனம் புரியாத ஒரு துயர உணர்வு என்னை ஆக்கிரமித்திருந்தாலும் அவரது படைப்புகளை வாசித்த பின்னும் ஏதோ ஒரு நிறைவான திருப்தி ஏற்படுவதை மறுக்க முடியாது. (இப்படியான தன்மைகள் நான் குறிப்பிடாத இன்னும் பல பதிவுகளில் இருக்கின்றன. எல்லாவற்றையும் இங்கு நான் குறிப்பிடவில்லை.) எதையும் வாசிக்க முடியாது படுக்கைக்குப் போகும் பொழுதுகள் என்னுள் ஒருவித குறையையும், திருப்தியின்மையையும் எனக்குள் ஏற்படுத்தத் தவறுவதில்லை.

நேரம் கிடைக்கும் போது பிடித்த வலைப்பதிவுகளை வாசிப்பதும், முடிந்தால் அந்தப் பதிவு என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பொறுத்து, (அது நல்ல தாக்கமோ, வல்ல தாக்கமோ... எதுவானாலும்) எனது கருத்தை ஒரு வார்த்தையிலாவது எழுதி விடுவதுமே செய்ய முடிகிறது. அதிலும் பின்னர் கருத்தை எழுதுவோம் என நினைத்து வாசித்து விட்டு எதையும் எழுதாமலே விட்டவைதான் அதிகம்.

பொதுவாக நான் சினிமா விமர்சனங்களை வாசிப்பதில்லை. சினிமாச் செய்திகளையும் படிப்பதில்லை. ஆனால் புத்தக விமர்சனங்கள் யார் எழுதினாலும் முடிந்தவரை வாசிப்பேன். கடந்த வாரமோ அதற்கு முந்தைய வாரமோ டிசே ஒரு படவிமர்சனம் எழுதியிருந்தார். அதை டிசே எழுதினார் என்பதால் வாசித்தேன். பட விமர்சனம் என்றாலும், எழுதிய விதத்தின் சுவாரஸ்யம் ஏதோ ஒன்றை வாசித்தேன் என்ற திருப்தியை என்னுள் ஏற்படுத்தியது. அந்தச் சமயம் நியூசிலாந்திலிருந்து வந்திருந்த எனது மருமகனும் வீட்டில் நின்றான். அவன் நடிப்பு, நாடகம்… சினிமாத்துறை சம்பந்தமாகப் படித்துக் கொண்டிருக்கிறான். அதனால் அவனையும் அதை வாசிக்கச் சொன்னேன். அவன் கணினியின் முன் அமர்ந்திருந்து வீடு அதிரச் சிரித்துக் கொண்டிருந்தான். டிசேயின் ஒவ்வொரு வசனமும் அவனை அப்படிச் சிரிக்க வைத்தன. (அப்போதுதான் சொன்னான், தான் முதல்நாள் இரவு இருந்து சிவாஜி படத்தின் சில பகுதிகளை தரவிறக்கம் செய்து பார்த்தேன் என்று)

இதை ஏன் எழுத வந்தேன் என்றால் இந்தப் பதிவுக்குக் கண்டிப்பாகப் பின்னூட்டம் போட வேண்டும் என்று நினைத்தேன். இத்தனை சுவாரஸ்யமான பதிவாயிருந்தும் பின்னூட்டம் எழுத நினைத்தும் செயற்படுத்தப் படவில்லை.

எனது நேரங்களும், செயற்பாடுகளும் இப்படி இருக்கும் போது எனது பிள்ளைகளின் குரலில் நான் பதிவு செய்திருப்பேனோ என்ற ஐயம் நளாயினிக்கு. அதற்கு வில்லுப்பாட்டக்காரர் போல ஒரு ஆமோதிப்பு சின்னக்குட்டியிடம் இருந்து.

காலம் போகின்ற போக்கில் பிள்ளைகளோடே மின்னஞ்சலிலும், எஸ்.எம்.எஸ்சிலும், தொலைபேசியிலுந்தான் கதைக்க முடியும் போல் இருக்கிறது. என் அருகில் அவர்கள் வருகின்ற மதிய உணவு நேரத்தின் போதும் சரி, வார இறுதி நாட்களிலும் சரி அவர்களுக்கு இருக்கும் நேரத்தை மிஞ்சிய எனது மறதிகள் ஒரு புறமும், நேரத்தின் வேகம் இன்னோரு புறமுமாய் என்னை ஆக்கிரமிக்க தேவையானதையே கேட்கவோ, கதைக்கவோ முடியாத நிலைதான் மிஞ்சுகிறது.

இந்த நிலையில் இப்படி வேற்றுப் பெயரில் குரல்ப்பதிவு செய்ய அவர்கள் ஒப்புக் கொள்வார்களா? இப்படியான தேவைகளை விட அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய இன்னும் பயனான எத்தனையோ விடயங்கள் உள்ளன.

ம்… என்னைப் பற்றி மற்றையவர்கள் எழுதிய ஓரிரு வார்ததைகளில் நான் மிகவும் ரசித்தவகைளில் இதுவும் ஒன்று. சின்னக்குட்டி எழுதியது.
சந்திரவதனா முந்தி தனது பதிவுகளை பிளைட்இலை லக்கேஜ்ஜாய்
போடுறது என்றால் முழு கார்கோ பிளேனையே கயர் பிடிக்கோணும் இப்ப சினிமா பாட்டு பதிவு தானே கை பையிலே கொணர்ந்து இடலாம் என்று தூயாவிடம் சொல்ல .தானும் தன்னுடைய சமையலை சாப்பாடுகளை கூட கார்கோ பிளேன் இலை கயர் பிடித்து கொணர்ந்ததாக தூயாவும் சொல்லி
கொண்டிருந்தா.

சந்திரவதனா
29.6.2007

Monday, June 25, 2007

பிரசுரமான கதை

அன்றைய பேப்பரைப் பார்த்த போது பற்றிமாவுக்கு ஆச்சரியமான சந்தோசம். அந்தக் கதை பிரசுரமாகியிருந்தது. அதை அவள்தான் எழுதியிருந்தாள். எழுதிய பின் தனது உற்ற நண்பியிடம் காட்டி, “நல்லாயிருக்கு" என்று சொன்ன போது வீரகேசரிக்கு அனுப்புவதாகத் தீர்மானித்தாள். அவளது கனவுகளில் அதுவும் ஒன்று. ´தனது கதை பிரசுரமாக வேண்டும்.´ அது சாதாரணமான ஒரு எழுத்தாளனுக்கு இருக்கக் கூடிய ஆசையில் எழுந்த கனவல்ல. இவளுக்கேயான பிரத்தியேகமான ஆசை.

அவள் அதை ஒரு கடிதமாகத்தான் எழுதினாள். ஆனாலும் கடிதமாகக் கொடுப்பதில் உள்ள அன்றைய 1975ம் ஆண்டுக்குரிய பயமும், தயக்கமுந்தான் அதைக் கதையாக எழுத வைத்தது. அதை அவன் வாசிப்பான் என்ற நம்பிக்கை.

அவள் வேற்று நகரில் இருந்து பருத்தித்துறைக்கு வந்து மாமா வீட்டில் தங்கியிருந்து படிக்கிறாள். இரவு ரியூசன் முடிந்து பேரூந்தில்தான் வீட்டுக்குப் போவாள். பேரூந்து ரவுண் வரைதான் செல்லும். அவள் வீடு வரையுள்ள மிகுதி தூரத்துக்கு பேரூந்து ஓட்டம் இல்லை. அதனால் அவள் ரவுணுக்குள் இருக்கும் புகாரி சேலைக் கடையடியில் காத்து நிற்க, அவளது மாமா வந்து கூட்டிச் செல்வார்.

பருவ வயது. தடைகளும், அந்த நேரங்களுக்கேயுரிய கட்டுப்பாடுகளும் மனதின் அலைவுகளை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தி விடுவதில்லைத்தானே. புகாரி கடை முதலாளி அழகானவன். கட்டுடல் கொண்ட இளைய ஆண். எமது சாதாரண தமிழர்களின் தோலை விட அவனது தோல் வெள்ளையானது. சற்று வித்தியாசமானவன். இவள் தனியாகத் தனது கடை முன்னே காத்திருக்கும் போது அவன்தான் வலிய வந்து கதை கொடுத்து... சில வாரங்களில் உள்ளே வந்து தங்கும் படி அழைத்து.. வீரகேசரி பேப்பர் கொடுத்து வாசிக்கச் சொல்லி... ஒரு நாள் காதலையும் வெளிப் படுத்தி விட்டான். இவளும் காதலித்தாள் என்பது அவளுக்கு மட்டுந்தான் தெரியும். அவனிடம் கூட இவள் தனது காதலைச் சொல்லவில்லை. அவன் முஸ்லீம். இவள் கிறிஸ்டியன். அது போக ஒரு பெண் தனது காதலை வெளிப்படையாக நண்பியிடம் சொல்லக் கூடப் பயப்படும் காலம்.

அவளது மாமாவுக்கு இந்த விவகாரம் தெரிந்தால் கதை கந்தலாகி விடும். படிப்பும் அவ்வளவுதான். தோலை உரித்து, அவளது அம்மா, அப்பாவிடமே அனுப்பி விடுவார்.

ஒவ்வொரு நாளும் புகாரி இவள் சம்மதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான். இவளோ எந்த முடிவும் சொல்லாமலே இருந்தாள். ஆனால் அவனைக் காண்பதிலும், அவனோடு ஒரு சில வார்த்தைகளேனும் பேசுவதிலும் மிகுந்த இன்பம் கண்டாள். இப்படியே சில மாதங்கள் ஓடி க.பொ.த உயர்தர வகுப்புப் பரீட்சை நெருங்கியது. இப்போது அவன் கண்டிப்போடு சொல்லி விட்டான் “முடிவைச் சொல்“ என்று.

அதுதான் அவள் காதல் தோய்த்து ஒரு கடிதத்தை அல்ல, கதையை எழுதினாள். அதை வீரகேசரிக்கு அனுப்பும் படி அவனிடமே கொடுத்தாள். கண்டிப்பாக அவன் அதை வாசிப்பான் என்ற நம்பிக்கையில்தான் தானே அதை அஞ்சல் செய்யாமல் அவனிடம் கொடுத்தாள்.

அடுத்த வாரமே கதை பிரசுரமாகியிருந்தது. அவளது காதலையும் விட, அது அவளது முதற்கதை. அவளின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி. ஆனாலும் அவளால் களிப்புற முடியவில்லை. கதை எழுதியவரின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் அவள் பெயர் இருக்கவில்லை. அங்கு புகாரியின் பெயர் இருந்தது. வீரகேசரி அனுப்பி வைத்த 50ரூபாய் சன்மானமும் புகாரிக்குத்தான்.

அதற்குப் பிறகு அவள் புகாரி கடையில் மாமாவுக்காகக் காத்திருப்பதில்லை.

சந்திரவதனா
25.6.2007

Tuesday, June 19, 2007

மசுக்குட்டி

தீயை அணைப்பது தான் நமது தீயணைக்கும் படையினரின் பொதுவான வேலை. ஆனால் இங்கே ஜேர்மனியில் அவர்கள் தீயை வளர்க்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் காரணம் நமக்கு அதிகம் பழக்கப் பட்ட மயிர்க்கொட்டிதான். என்றும் இல்லாதவாறு இங்கு மயிர்க்கொட்டிகள் பெரிய மரங்களில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் மயிர்க்கொட்டிகளை ஜேர்மனியர்கள் ஆச்சரியமாகப் பார்த்திருக்கிறார்கள். இப்பொழுது நிலைமை முற்றிலும் மாறி மயிர்க்கொட்டியைப் பார்த்தால் பதை பதைக்கிறார்கள்.

தெருவீதியில் இருந்த ஒரு மயிர்க்கொட்டியைப் பார்த்து இரக்கம் கொண்டு ஒரு பெண்மணி அதை எடுத்து வீதிக்கு அப்பால் விடப் போன பொழுது விபரீதம் புரிந்திருக்கிறது. மயிர்க்கொட்டி பட்ட இடமெல்லாம் தடித்து உடலில் எரிச்சலைக் கொடுக்க அந்தப் பெண்மணி பயந்து போய் அவசர உதவியை அழைக்கும் நிலைக்குப் போய் விட்டார்.

இப்பொழுது தீயணைக்கும் படையினர் உடலை முழுதாக மறைக்கும் மஞ்சள் உடை அணிந்து மயிர்க்கொட்டிகளைத் தீயைப் பாய்ச்சி அழித்து வருகின்றனர். ஜேர்மனியில் சாக்சன் அன்கல்ற், பயர்ன், பாடன்வூற்றம் பேர்க் ஆகிய மாநிலங்களில் மயிர்க்கொட்டிகள் அதிகம் காணப்படுவதாக அறிவித்திருக்கிறார்கள். பாடன்வூற்றம் பேர்க் மாநிலத்தில் காட்டுப் பகுதியில் இருக்கும் பாபிகியூ செய்யும் சில இடங்கள் மயிர்க்கொட்டிகளின் தொல்லையால் பாவனைக்குத் தடை செய்யப் பட்டிருக்கின்றன.

தீப்பிடிச்சு தீப்பிடிச்சு என்னை அழிடா என்று மரங்களில் ஒட்டியிருக்கும் மயிர்க்கொட்டிகள் பாடி ஆடாத குறை ஒன்றுதான் மிச்சம். 40 மில்லி மீற்றர் அளவுதான் என்றாலும் மயிர்க் கொட்டிகள் இங்கு இவர்களை பாடாயப் படுத்துகின்றன .

அந்த மயிர்க்கொட்டிகளை நாம் படுத்தும் பாட்டைப் பார்த்தால் சாவதற்கென்றே பிறப்பெடுத்து வருகின்றனவோ என்ற நெருடலான கேள்வி எழுகிறது.

ம்.. இப்ப, வெய்யில் சுள்ளென்று எறிக்கத் தொடங்க மசுக்குட்டி நூல் விட்டு இறங்கிற ஞாபகம் வந்து உடம்பெல்லாம் கடிக்கிறது போலை ஒரு உணர்வு.