கல்லூரிச்சாலையின் பசுமை நினைவுகளோடு சம்பந்தம் உள்ள ஒரு பதிவு இது என்பதால் இதை மீள்பதிவு செய்கிறேன்.
எமது வாழ்வில் நல்ல விதமாகவோ அன்றிக் கெட்ட விதமாகவோ மனதில் தடம் பதித்துப் போனவர்கள் பலர் இருப்பார்கள். இவர்கள் அடிக்கடியோ அன்றி எப்போதாவதோ எமது நினைவுக்குள் முகம் காட்டிச் செல்வார்கள். அப்படியாக எனக்குள் முகம் காட்டுபவர்களில் லxxxம் ஒருவன்.
லxxல்
அவன் பற்றிய பூர்வீகம் எதுவுமே எனக்குத் தெரியாது. நான் Tuitoryக்குப் போகும் ஒவ்வொரு பொழுதிலும், அவன் வகுப்பு நடக்கும் அறையின் வாசலில் நின்று என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பான். அந்த வாசல் Tuitoryயின் வாசலைப் பார்த்த படியே இருப்பதால் உள்ளே நுழைவது யாராக இருந்தாலும் அவனைத் தரிசிக்காது செல்ல முடியாது. நான் வரும் நேரங்களில் மட்டுந்தான் அதில் அவன் நிற்கிறானா என்பது எனக்குத் தெரியாத விடயம்.
இப்போதென்றால் ஒரு தெரிந்தவரைக் கண்டால் ஒரு "ஹலோ"வோ அல்லது ஒரு "வணக்கமோ" அதையும் விட்டால் ஒரு புன்னகை சிந்தலோ இல்லாமல் நகர மாட்டோம். அப்போது (31வருடங்களுக்கு முன்) அதுவும் ஒரு பதின்னான்கு வயதுப் பெண் ஒரு ஆணைக்கண்டு தெரிந்தது போல் பாவனை பண்ணிக் கொள்வது விபரீதமான விளைவுகளையே தரும். இதற்கு மேலால் அவன் மீது எனக்கு எந்த விதமான ஈடுபாடும் இருக்கவும் இல்லை. அதனால் எந்தவித பாவனையுமின்றி நான் அவனைத் தாண்டி விடுவேன்.
நிட்சயம் அவன் என்னை விட வயதானவனாக இருப்பான். ஆனாலும் ஆங்கில வகுப்புக்கு மட்டும் எனது வகுப்பில் வந்தமர்வான்.
அவனது பெயர் லxxல் என்பதை ஆங்கில வகுப்பில் ஆங்கில ஆசிரியர் கூப்பிடும் போதுதான் நான் அறிந்து கொண்டேன். அவனது பிறப்பிடம் மட்டக்களப்போ அல்லது திருகோணமலையோ அல்லது வேறு இடமோ தெரியவில்லை. ஆனால் எங்கோயோ இருந்து பருத்தித்துறைக்கு வந்து அந்த ரியூற்றரியிலேயே ஒரு அறையில் தங்கியிருந்து படிக்கிறான் என்பது மட்டும் அரசல் புரசலாக என் காதிலும் வந்து விழுந்திருந்தது.
Tuitoryயில் ஒரு பாடம் முடிந்து வரும் இடைவேளையின் போது பெண்கள் Toilet பக்கம் செல்வதாயின் அவனது அறையைக் கடந்துதான் செல்ல வேண்டும். நான் அந்த அறையைக் கடக்க வேண்டிய ஒவ்வொரு பொழுதிலும் அவன் ஓடி வந்து அறை வாசலில் நின்று என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான். ஒரு நாளேனும் அவன் என்னுடன் கதைக்க முயற்சித்ததாய் எனக்குத் தெரியவில்லை. ஆனால் எப்போதுமே அவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை கவிந்திருக்கும்.
இது ஒரு புறம் இருக்க எங்களுக்கு பத்தாம் வகுப்புப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. பிரியப் போகிறோம் என்ற நினைப்பில் எனது சக மாணவிகள் Autograph களுடன் திரிந்தார்கள்.
"ஆழக்கடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றக் கூடாது." என்பதில் தொடங்கி எத்தனையோ சினிமாப் பாடல்களின் வரிகளால், பழமொழிகளால்... என்று தொடர்ந்து "என்னை மறந்து விடாதே..." என்பது வரை எழுதி எழுதி Autographஐ நிறைத்தார்கள்.
நானும் என் பங்குக்கு எனது Autographஐ ஒவ்வொருவரிடமும் நீட்டி வாழ்த்துக்களையும், கையெழுத்துக்களையும் வாங்கிக் கொண்டேன். இத்தனையும் சக மாணவிகளிடந்தான். மருந்துக்குக் கூட சக மாணவர்களிடம் கையெழுத்தை வாங்கும் பழக்கம் அப்போது இல்லை.
அன்று Chemistry வகுப்பு முடிய 5நிமிட இடைவேளை. அவசரமாக வகுப்பறையை விட்டு வெளியில் எமக்கான அறைக்குச் சென்று தண்ணீர் குடித்து... மீண்டும் ஆங்கில வகுப்புக்குத் திரும்பிய போது எனது மேசையில் எனது புத்தகங்களுடன் இருந்த எனது Autographஐக் காணவில்லை.
எல்லாமாணவிகளையும் மட்டுமல்லாது, Tuitory பொறுப்பாளரையும் கேட்டு விட்டேன். `ம் கூம்...` அது எங்கே யார் கைக்குப் போயிருக்குமென்று யாருக்குமே தெரியவில்லை. "பெடியன்களில் யாரோ எடுத்து விட்டாங்கள் போலை." சில மாணவியர் கருத்துத் தெரிவித்தனர். பார்த்துப் பார்த்து வேண்டிய கையெழுத்துக்களும், வாழ்த்துக்களும் தொலைந்து போய் விட்டதில் எனக்கு வருத்தந்தான். என்ன செய்வது...?
ஒரு வாரத்துக்குள் அம்மாவிடம் கேட்டு இன்னொரு Autograph வாங்கி, மீண்டும் ஒவ்வொருவரிடமாக நீட்டிக் கொண்டிருந்தேன். இப்படியே Tuitoryயின் இறுதிவாரமும் வந்து விட்டது. அந்த வாரத்தில் ஒருநாள், இடைவேளைக்கு வெளியில் போய் வந்த போது, தொலைந்த எனது Autograph எனது புத்தகங்களின் மேல் வைக்கப் பட்டிருந்தது. எனக்கு அளவிலா மகிழ்ச்சி. கூடவே பயமும், யார் யார் என்ன கிறுக்கியிருப்பார்கள் என்ற குழப்பமும் இருந்தது.
ஆங்கில வகுப்பு முடிந்து வீடு சென்றதும் Autographஇன் பக்கங்களைப் புரட்டினேன். எனது எண்ணம் சரியாகவே இருந்தது. மூன்று பக்கங்களில் ஒரே கையெழுத்தில் யாரோ ஒருவர் அழகாக எழுதியிருந்தார்.
அவற்றில் ஒரு பக்கத்தில்
கோட்டையிலே பெண் பிறந்தாலும்
தலையில் கொட்டியபடியேதான் நடக்கும்
என்ற வாக்கியங்கள் இருந்தன.
அந்த ஒரு வாரத்துக்குள் எனது நண்பிகள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டதில் அதை எழுதியது லxxல் ஆக இருக்கலாம் என்ற பதில் எனக்குக் கிடைத்தது. அவர்கள் தந்த தகவல்களின்படி அவனது கையெழுத்துத்தான் அது என என்னால் ஊர்ஜிதம் செய்து கொள்ளவும் முடிந்தது.
ஆனால் எனது பத்தாம்வகுப்புப் பரீட்சை முடிந்து, முடிவுகளுக்காகக் காத்திருந்து, மீண்டும் நான் பதினோராம் வகுப்பில் அதே Tuitoryயில் போய்ச் சேர்ந்த போது அவன் அங்கு இல்லை. "நீயா எழுதினாய்?" என்றோ, அல்லது "ஏன் அந்த வாக்கியங்களை எனக்கு எழுதினாய்?" என்றோ கேட்பதற்குக் கூட எனக்கு ஒரு வாய்ப்புத் தராமல் அவன் தனது சொந்த ஊருக்குப் போய்விட்டான் என்பது தெரிந்தது.
அந்த Autographம் இந்திய இராணுவத்தின் அத்துமீறலில் எனது வீட்டுக்குள்ளிருந்து வீசி எறியப்பட்டு விட்டது. ஆனால் இரக்கமா, விருப்பமா என்று தரம் பிரித்தறிய முடியாத அவனது பார்வையையும், அவன் எழுதிய அந்த வசனங்களையும் என் மனதுள் இருந்து தூக்கியெறிய முடியவில்லை.
சந்திரவதனா
7.11.2005
http://www.manaosai.com/
//கோட்டையிலே பெண் பிறந்தாலும்
ReplyDeleteதலையில் கொட்டியபடியேதான் நடக்கும்//
'வாழ்க்கை எப்போதும் அவரவர் தலையெழுத்துப்படி நடக்கும்'
பசுமையான நினைவுகளின் அழகான பதிவின் வரிகள்.......
வாழ்த்துக்களும் வணக்கமும்
நல்ல நினைவு மீட்டல். அந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்? எனக்கு விளங்கேல்ல. ஒருவேயை அதிஸ்டவசமாக அவர் இதை வாசித்தால் வந்து சொல்லக்கூடும்:)
ReplyDeletefacebook ன் அனுகூலங்களில் ஒன்று பழைய நண்பர்கள் எல்லாம் தேடிப்பிடிக்கிறார்கள் என்னை. 14 வருடங்களுக்கு முதல் ஒன்றாகப் படித்த பெடியங்கள் எல்லாம் இப்ப கதைக்கிறாங்கள். முந்தியெண்டால் போட்டியும் பொறமையும் மூஞ்சையத் திருப்பிக்கொண்டு போறது இப்ப அவங்கள் வந்து கதைக்க பழைய சண்டைகள் எல்லாம் ஞாபகம் வருது.
எத்தனை வருடங்கள் ஆனாலும் பள்ளி/கல்லூரி நினைவுகள் மட்டும் மறப்பதேயில்லையம்மா.. நல்ல பகிர்வு. நன்றி :)
ReplyDeleteபசுமையான வரிகள்...! எல்லாம் ஆற அமர்ந்து தனித்து இருந்து சிந்திக்கும் போது சிரிப்பும் வரும் அதனோடு கண்ணீர்த்துளிகளும் எட்டிப் பார்க்கும்..அப்படிப்பட்ட நினைவுகள் எல்லோரிடமும் உண்டு. உங்களுடையது கூட சுவாரசியமாக உள்ளது. நாமும் எமது “ஆட்டோகிராப்” பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.
ReplyDeleteஅக்கா நல்லதொரு பதிவு. உங்களுக்கு ஆண் போல சில ஆண்களின் வாழ்க்கையில் சில பெண்களும் இருக்கின்றார்கள்.
ReplyDelete//கோட்டையிலே பெண் பிறந்தாலும்
தலையில் கொட்டியபடியேதான் நடக்கும் //
இதன் அர்த்தம் என்ன?
விரும்பி, கதியால், சிநேகிதி, பிறேம்குமார், வந்தியத்தேவன்
ReplyDeleteஉங்கள் அனைவரினதும் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி
சினேகிதி said...
ReplyDeletefacebook ன் அனுகூலங்களில் ஒன்று பழைய நண்பர்கள் எல்லாம் தேடிப்பிடிக்கிறார்கள் என்னை. 14 வருடங்களுக்கு முதல் ஒன்றாகப் படித்த பெடியங்கள் எல்லாம் இப்ப கதைக்கிறாங்கள். முந்தியெண்டால் போட்டியும் பொறமையும் மூஞ்சையத் திருப்பிக்கொண்டு போறது இப்ப அவங்கள் வந்து கதைக்க பழைய சண்டைகள் எல்லாம் ஞாபகம் வருது.
சினேகிதி
உங்களுக்குத் தேடிப்பிடிக்க முடிகிறது.
பெடியன்கள் என்றால் ஓரளவு தேட முடியும். அப்பா பெயருடனேயே இருப்பார்கள்.
பெண்களை இந்த வழியில் தேடிப்பிடிப்பது கடினம். அத்தோடு என் வயதை ஒத்த என்னோடு படித்த பெண்களை இணையத்தில் இன்னும் நான் காணவில்லை. அல்லது என்னால் கண்டு கொள்ள முடியவில்லை.
அவுஸ்திரேலியா வடமராட்சி பழையமாணவர்கள் சந்திப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களில் மட்டும் சிலரைக் கண்டு மகிழ்ந்தேன்.
கதியால் said...
ReplyDeleteநாமும் எமது “ஆட்டோகிராப்” பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.
கதியால்,
கண்டிப்பாக எழுதுங்கள்.
வந்தியத்தேவன் said...
ReplyDeleteஅக்கா நல்லதொரு பதிவு. உங்களுக்கு ஆண் போல சில ஆண்களின் வாழ்க்கையில் சில பெண்களும் இருக்கின்றார்கள்.
அது பற்றி எழுதுங்கள்.
-----------------------
//கோட்டையிலே பெண் பிறந்தாலும்
தலையில் கொட்டியபடியேதான் நடக்கும் //
இதன் அர்த்தம் என்ன?
எனக்கு விளங்கியதன் படி
கோட்டையிலே பெண் பிறந்தாலும் என்றால்
கோட்டையில் பிறக்கும் பெண் அரச குடும்பத்தவளாயிருக்கலாம்.
அப்படியொரு உயர்ந்த இடத்தில் இருக்கும் பெண்ணின் வாழ்க்கை கண்டிப்பாக உயர்ந்ததாகத்தான்
இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அவளுக்கு விதிக்கப்பட்டதின் படிதான் இருக்கும் என்ற கருத்தாக இருக்கலாம்.
மிக அழகிய பெண்,
மிகவும் பணக்காரப்பெண்,
மிகவும் திறமையுள்ள பெண்,
மிகவும் அறிவுள்ள பெண்... என்று எந்த மேம்பாடு ஒரு பெண்ணிடம் இருந்தாலும் அவள்
வாழ்க்கைத்துணைவன் சரியாக அமையாத பட்சத்தில் வாழ்வு வேறுமாதிரிப் போய்விடலாம்.
இன்றைய காலகட்டத்தை விட அன்றைய பொழுதில் இதற்கான சாத்தியங்கள் இன்னும் அதிகம்.
இதைக் குறிக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.
விரும்பி குறிப்பிட்டதுதான் அதன் அடிப்படைக் கருத்தாக இருக்கும்.
இங்கு பெண்ணைப் பிரத்தியேகமாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
"சொல்லத்தான் நினைக்கின்றேன்
ReplyDeleteஉள்ளத்தால் துடிக்கின்றேன்"
என்று வாழ்ந்து விட்ட தணியாத தாகப் பாத்திரம் போல் தெரிகின்றார்.
அன்பின் அக்கா,
ReplyDeleteமுன்னரே ஒரு முறை இந்தப் பதிவைப் படித்தேன். என்னவே திரும்ப படிக்கத் தோன்றியது. மிக்க நன்றி.
பாண்டியன்
புதுக்கோட்டை.
thangal panikku anri wikipediavil eluthuvathadku
ReplyDeletewww.tamil1.tk