Thursday, November 10, 2005

தோளில் என் சின்னவனைப் போட்டுக் கொண்டு ஒழுங்கைகள் தாண்டி குறுக்கு வழியால் எனது மாமி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதுதான் அவளைக் கண்டேன். அவளது பெயரைக் குறிப்பிடாமல் இருப்பதே நல்லது என நினைக்கிறேன். ஆனால் அது அவள்தானா என்று எனக்குச் சந்தேகமாகவும் இருந்தது.

என்னோடு அவள் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது அவளை அழகி என்று சொல்ல முடியா விட்டாலும் அவள் கூந்தல் அழகு. நீளக் கூந்தலை நேர்த்தியாகத் வாரி இழுத்து அழகாகப் பின்னியிருப்பாள். அவள் அம்மாதான் அவளுக்குப் பின்னி விடுவாளாம். ஒற்றைப் பெண்பிள்ளை.

நான் ஐந்தாம் வகுப்புக்குப் போன போது அவள் ஆறாம் வகுப்புக்குப் போயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை. எங்களோடு இருந்தாள். வரிசையெடுத்துப் பார்த்து இருந்த போது அவள் எங்கள் எல்லோரையும் விட உயரமாக இருந்ததால் வகுப்பில் கடைசி வாங்கில்களின் வரிசையில் கடைசி மூலையில் அவளுக்கு இடம் கிடைத்தது.

அவளுக்கு அந்த நீண்ட கூந்தலும் இல்லையென்றால் நாங்கள் அவளை ஒரு பொருட்டாகவே கருதியிருக்க மாட்டோம்.

திடீரென்று ஒருநாள் அவள் பாடசாலைக்கு வரவில்லை. ஓடிப்போய் விட்டாளாம். அதுவும் பக்கத்து வீட்டுக்காரனோடு ஓடிப் போய் விட்டாளாம். வகுப்பறையில் கடைசி மூலையில் இருந்தவள் "நடுச்சாமத்திலை பாத்ரூம் போகோணுமெண்ட, தாய் கூட்டிக் கொண்டு போனவவாம். "ஏனணை கூட வாறாய். நீ அதிலை இரு. நான் ஆறுதலாப் போயிட்டு வாறன்" எண்டு சொல்லிப் போட்டுப் போனவள் அப்பிடியே போயிட்டாளாம்." என்று பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல சந்து பொந்துகளில் கூடப் பேசப் பட்டாள். பக்கத்து வீட்டுக்காரனுக்கு இவளை விடப் பதினைந்து வயது கூடவாம்.

பத்து வயது கூட நிரம்பாத எனக்கு அப்போது ஓடிப்போவதன் தாத்பர்யமே புரியவில்லை. ஏன் படிக்காமல் போனாள்? என்ற ஒன்றுதான் எனக்குள் பெரிய கேள்விக்குறியாய் நின்றது. வகுப்பில் ஒரே அவள் கதையாய் இருந்ததால் அவளைப் பற்றியும் அவள் குடும்பத்தைப் பற்றியும் பல தகவல்கள் கேட்காமலே கிடைத்தன. அவளுக்கு எங்களை விட மூன்று நான்கு வயது கூட என்ற தகவலும் கொசுறாய்க் கிடைத்தது.

ஒருநாள், "இனி அவளைப் பற்றி ஒருத்தரும் வகுப்பிலை கதைக்கக் கூடாது" என்று முருகேசம்பிள்ளை ரீச்சர் பிரம்பை மேசையிலை ஓங்கி அடித்துச் சொன்னதோடு அவள் பற்றிய கதை குசுகுசுப்பாய் மாறி ஒரு கட்டத்தில் முழுவதுமாய் நின்று போனது. இடைக்கிடை எப்பவாவது அவள் நினைவு வந்தாலும் அது அப்படியே என் மனசோடு அடங்கி விடும்.

அந்த அவளைத்தான், 1969இல், "ஓடிப்போன ..." என்று எல்லோராலும் அடைமொழி போட்டு அழைக்கப் பட்ட அவளைத்தான் குட்டிமணி, தங்கத்துரை.. எல்லோரும் கொல்லப்பட்டு, நாடு அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்த 1983இன் ஒரு நாளில் கண்டேன்.

நீண்ட கூந்தல் எலிவாலாகி, சோகம் முகத்தின் இருப்பிடமாகி.... உருக்குலைந்து நின்றாள். அவள் காலுக்குள் ஒரு சிறுமியும், இரு சிறுவர்களும். என்னைக் கண்டதும் சிரிக்கவா விடவா என்ற யோசனையோடு சங்கோஜித்தாள். நானாவது ஏதாவது கேட்டிருக்கலாம். சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டுப் போய் விட்டேன். பின்னர் மாமியிடம்தான் "அது அவள்தானா!" என விசாரித்தேன்.

அவளேதானாம். கூட்டிக் கொண்டு போனவன் சில வருசங்களில் இவளையும் பிள்ளைகளையும் நடுத்தெருவிலை விட்டிட்டு இன்னொருத்தியோடை போயிட்டானாம். சாப்பிடவே வழியில்லாமல் பல்லைக் கடிச்சுக் கொண்டு வாழ்ந்தவள் `இனியும் இயலாது` என்ற நிலையில் 14வருசங்கள் கழிச்சு தாயைத் தேடி வந்திருக்கிறாளாம்.

எனக்கு அப்போதெல்லாம் அவளை நினைக்க ஒரு புறம் பாவமாக இருந்தது. இன்னொரு புறம் ஏன் மொக்கு மாதிரி ஓடிப்போனவள்? என்றிருந்தது.

பலவருடங்களின்பின்தான் அவள் போனால் ஓடிப்போனவள். அவன் போனால் கூட்டிக் கொண்டு போட்டான். என்ற அவள் அவனுக்கான சமூகத்தின் பார்வை விளங்கியது.

இன்னும் சில வருடங்களின் பின்தான் 13வயதுச் சிறுமியை 28வயதுகள் நிரம்பிய ஒருவன் பாலியல் துர்ப்பிரயோகத்துக்குப் பயன் படுத்தியிருந்த கொடுமை புரிந்தது.

சந்திரவதனா
10.11.2005

No comments:

Post a Comment