Tuesday, November 07, 2023

அம்மாவின் தையல் மெஷின்

 

பராமரிப்பு நிலையத்துக்குப் போய் உடல் தேறி, நடமாடித் திரியத் தொடங்கிய ஒரு பொழுதில் அம்மா கேட்டா என்ரை தையல் மெசின் எங்கை? அதைக் கொணர்ந்து தா. நான் தைக்கோணும் என்று.

அம்மாவின் உடல், பொருள், ஆவி அனைத்தும் அந்தத் தையல் மெசினிக்குள் இருப்பது போன்ற ஒரு உணர்வு எனக்கு. ஊரில் இருந்த போதே அம்மா நன்றாகத் தைப்பா. அப்போது அம்மாவிடம் ஒரு உஷா(USHA) தையல் மெசின் இருந்தது. அந்த மெசின் புதிதாக எங்கள் வீட்டுக்கு வந்த போது எனக்கு மூன்று நான்கு வயதாக இருந்திருக்கலாம். அது ஒரு ஒரு கனவு போலத்தான் எனக்கு இப்போது ஞாபகமாக இருக்கிறது.

ஆனால் காலாட்டித் தைக்கும் அந்தத் தையல் மெசின் இல்லாத எங்கள் வீட்டை ஒருபோதுமே என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. அது எப்போதும் எங்கள் வீட்டுப் பெரிய விறாந்தையில் வெளிச்சம் நன்றாகப் படும் ஒரு இடத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும். எங்கள் அண்ணன் தனது றலி சைக்கிளை தேங்காய் எண்ணெய் பூசிப் பூசி துடைத்து வைப்பது போல அம்மா இந்தத் தையல் மெசினை, மெசின் ஒயில் போட்டு துடைத்துத் துடைத்து எப்போதும் புதிது போலவே பளிச்சென்று வைத்திருப்பா. நினைத்த நேரமெல்லாம் அதிலிருந்து தைக்கக் கூடியவாறு எல்லாம் ஆயத்தமாகவே அந்த மெசின் எப்போதும் இருக்கும். எங்களில் யார் வேண்டுமானாலும், ஒரு சின்னக் கிளியல் எங்கள் சட்டைகளில் வந்தாலும் உடனே அதிலிருந்து தைத்து விடுவோம். தம்பி பார்த்திபன் கூடத் தைப்பான்.

அந்த மெசினில் அம்மா தைத்து விட்டவையோ எண்ணிலடங்கதாவை. பிள்ளைகள் எங்களுக்கு மட்டுமல்லாது சொந்தங்களுக்கு நட்புகளுக்கு... என்று அம்மா ஊருக்கெல்லாம் சும்மா சும்மா தைத்துக் கொடுப்பா. கஷ்டப்பட்டவர்களுக்கு தானே துணி வாங்கித் தைத்துக் கொடுப்பதற்கும் அம்மா தயங்கியதில்லை. இத்தனைக்கும் அம்மாவுக்கு நேரம் என்பதே இருக்காது. ஆனாலும் தனது நித்திரையைத் தியாகம் பண்ணியாவது தைத்து விடுவா. அம்மா அவைகளுக்கெல்லாம் பணம் வாங்கியிருந்தா என்றால் பெரும் பணக்காரி ஆகியிருப்பா.

அம்மாவின் தையல் பலரும் வியந்து வியந்து பார்க்குமளவுக்கு அத்தனை அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.

அம்மாவிடம் ஒரு டிசைன் புத்தகம் இருந்தது. அதை அப்பாதான் வாங்கிக் கொடுத்ததாக அம்மா சொன்ன ஞாபகம். அதில் விதம் விதமான சட்டை வடிவங்கள் இருந்தன. அம்மா புதுப்புது டிசைன்களைக் கண்டுபிடித்துத் தைப்பதற்கு அந்தப் புத்தகமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

அம்மா தானே தனக்குத் தைத்துப் போட்ட, ட்ரெசிங் கவுண்கள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவை அந்தளவுக்கு கனகச்சிதமாக, பிரமாதமான அழகாக இருக்கும்.

அத்தனையையெல்லாம் தைத்த அந்த உஷா(USHA) தையல் மெசின், பிள்ளைகள் எங்களுக்குள் நன்றாகத் தைக்கக் கூடிய தங்கை பிரபாவுடன் அந்த ஆத்தியடி வீட்டிலேயே தங்கி விட்டது

ஆனாலும் யேர்மனிக்கு வந்த கொஞ்ச நாட்களில் அம்மா தனக்கென ஒரு தையல் மெசின் வாங்கி விட்டா.

அது அம்மாவுக்குப் பிடித்த உஷா மெசின் அல்ல. ஆனாலும் ஓரளவு தரமான ஒரு மின்சாரத் தையல் மெசின். ஊரளவு இல்லாவிட்டாலும் அம்மா கடைசி காலம் வரை அந்த மெசினில் நிறையவே தைத்தா. பலருக்கும் தைத்துக் கொடுத்தா.

அந்த மெசினைத்தான் கொணர்ந்து தரும்படி கேட்டா. பராமரிப்பு நிலையத்துக்கு அதைக் கொண்டு போகலாமோ!‘ என்பது கூட எனக்குத் தெரியாதிருந்தது. அவர்களுடன் கதைத்துப் பார்த்தேன். அவ ஆசைப்பட்டால் கொணர்ந்து குடுங்கள் என்றார்கள்

நான் அதை அங்கு கொண்டு போனதும் அம்மாவின் முகத்தில் அப்படியொரு பிரகாசமும் சந்தோசமும்.

அதற்கு மேலால் அங்குள்ளவர்கள், வேலை பார்ப்பவர்கள்... எல்லோருமே அந்த மெசினை ஒரு காட்சிப் பொருள் போலக் கருதி அம்மாவின் அறைக்கு வந்து வந்து பார்த்தார்கள். அதன் பிறகுதான் அம்மா அங்கு போட்டுக் கொண்டு திரிகின்ற அழகழகான சட்டைகள் எல்லாம் அம்மாவே தைத்தவை என்பது அவர்களுக்குத் தெரிய வந்தது.

எல்லோரும் ஒருநாள் ஒரு திருவிழா போல ஒன்றாகக் கூடி அம்மாவின் தையல் திறமையைப் பற்றிக் கூறி அம்மாவைப் புகழ்ந்தார்கள். பாராட்டினார்கள். அவர்களது பதிவுப்புத்தகத்தில் அம்மாவோடு நேர்காணல் செய்து, அம்மாவைப் பற்றி ஒரு கட்டுரையும் எழுதி வைத்தார்கள். அம்மா மிகமிக மகிழ்ந்திருந்தா.

அது வரை காலமும் அம்மா தைத்ததற்கான வெகுமதி அப்போது தான் கிடைத்தது போன்ற ஒருவித புளகாங்கிதமான உணர்வோடு நானும் மகிழ்ந்திருந்தேன்.

அந்தத் தையல் மெசின் இப்போது எனது புத்தகங்கள், பேப்பர்கள், எழுதி முடிக்காத குறை குறையான எழுத்துகள், கொப்பிகள், பேனைகள்... இவைகளோடு பெரும் பொக்கிஷமாக... என்னோடு.

சந்திரவதனா
07.11.2023 
                                                                                                                                             

No comments:

Post a Comment