சனி எங்கெங்கெல்லாம் குந்தியிருக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அவருக்கு அன்று அவரது இரவுச்சாப்பாட்டில் குந்தியிருந்ததோ?
அவர் எங்கள் குடும்ப நண்பர். கடந்த சனிக்கிழமை, கனடாவிலிருந்து எனது
கணவருடன் தொலைபேசிக் கொண்டிருந்தார். திடீரென எனது கணவர் என்னைக்
கூப்பிட்டு „நீயும் ஒரு ஹலோ சொல்லி விடு“ என்று சொல்லி தொலைபேசியை என்னிடம்
தந்தார்.
இரண்டு கதை கதைத்ததும்
அந்நபர் கேட்டார். „அந்தப் புட்டு எப்பிடி அவிக்கிறனிங்கள்? என்ரை
மனிசியின்ரை புட்டு இங்கை நல்ல பேமஸ். எல்லாருக்கும் பிடிக்கும். ஆனால்...
உங்கட புட்டு... நல்ல சின்னச் சின்னதா, மெதுமையா...“ அவர் 3 வருடங்களின்
முன் விடுமுறைக்கு வந்து எம்மோடு நின்று போனவர்.
எனக்குச் சங்கடமாக
இருந்தது. அவர் குறிப்பிட்டது எனது கோதுமைப் பிட்டைத்தான். நான் ஒன்றும்
பெரிய வேலைகள் பார்ப்பதில்லை. அரை மணித்தியாலத்துக்கு மாவை அவிய விட்டு
அரித்து வைத்து விட்டேன் என்றால் நினைத்த உடன் பிட்டை அவித்து விடுவேன்.
அவசரசமான நேரங்களிலெல்லாம் பிட்டையே அவித்து விடுவதால் எனது கணவர் எனக்கு
செம்மனச்செல்வி என்று பெயர் வைத்திருப்பது தெரியாதவர்கள் என் பிட்டைச்
சாப்பிட்டு விட்டு பாராட்டாமல் சென்றதில்லை.
தேங்காய்ப்பூவையும்
எனது கணவரே துருவித்தர குளிர்சாதனப் பெட்டியில் பக்குவமாக வைத்தெடுத்து,
கொதிதண்ணியில் மாவைக்குழைத்து, அந்தத் தேங்காய்ப்பூவைப் போட்டு பிட்டு
அவிப்பேன்.
„சும்மா சாதாரணமாக எல்லோரையும் போலத்தான் அவிக்கிறேன்“
என்று சொன்ன பின், சரி இவவோடையும் கதையுங்கோ என்று சொல்லி தொலைபேசியை
அவவிடம் கொடுத்... வாங்கினாவா, இல்லையா தெரியவில்லை.
„ணொங்“ என்ற சத்தம். தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
எனது கவலையெல்லாம், அன்று அவருக்கு அவரது மனுசியின் அந்த அருமந்த பிட்டு கிடைக்காமல் போயிருக்கும்
சந்திரவதனா
10.01.2017
https://www.facebook.com/chandravathanaa.selvakumaran/posts/10154387893812869
No comments:
Post a Comment