போர் தொடங்கிய பின்தான் கெளதமி எங்கள் வீட்டுக்கு அருகில் குடிவந்தாள்.
மாம்பழம் போல ஒருவித மஞ்சள் நிறத்தில் மொழுமொழுவென்றிருந்தாள். அவள்
சிரித்தால் முத்துக்களை அடுக்கி வைத்தது போன்ற சீரான அழகிய பற்கள்
பளிச்சிடும். நினைத்தவுடன் சிரிக்கவும் தேவைப்படும் போதெல்லாம் கண்களைக்
குளமாக்கவும் அவளுக்குத் தெரிந்திருந்தது.
என்னை விட இரு வயதுகள் குறைந்தவளாக இருந்தாலும் என்னோடு சிரிக்கவும் என்னோடு அழவும் அவளால் முடிந்தது.
இன்னும், அம்மா பிள்ளைகளாக படிப்பும் பாட்டும் வேலையும் என்றிருந்த என்
தங்கைமாரோடு பேச முடியாத விடயங்களைக் கூட மூன்று வயதுக் குழந்தைக்கு
அம்மாவாக இருந்த அவளுடன் என்னால் பேச முடிந்தது. அவளது கணவன் யோகன்
சவுதியிலும் எனது கணவர் யேர்மனியிலும் இருந்தது நாங்கள் பேசுவதற்கான பேசு
பொருட்களை எங்களுக்கு அள்ளித் தந்து கொண்டிருந்தது.
என்ன ஒரு பாகுபாடு..! அவளுக்கு சவுதியிலிருந்து கணவன் யோகனின் கடிதங்கள்
வாரத்துக்கு ஐந்து, ஆறு என்று வரும். சில சமயங்களில் ஒரே நாளில் இரண்டு
அல்லது மூன்று கடிதங்களும் வருவதுண்டு. வெள்ளை நீள் சதுரத்தில் நாற்பக்க
விளிம்புகளிலும், சிவப்பிலும் நீலத்திலும் வர்ணம் தீட்டப்பட்ட உறைகளை
தபாற்காரன் என்னைத் தாண்டிப் போய்த்தான் அவளிடம் கொடுப்பான்.
எங்கள் வீட்டையும் அவள் குடியிருந்த வீட்டையும் ஒரு செம்பருத்தி
வேலிதான் பிரித்திருந்தது. நானும் அவளும் அந்த வேலிக்குள்ளால் கதைத்த படியே
தபாற்காரனுக்காய் காத்திருப்போம். சந்தியில் வரும் போதே தபாற்காரன் தனது
சைக்கிள் மணியை ஒரு விதமாக அடிப்பான். அவன்தான் வருகிறான் என்பது
எங்களுக்குத் தெரிந்து விடும். இருவரும் படபடப்போம். கதையை அந்தரத்தில்
விட்டு விட்டு எங்களெங்கள் கேற்றடிக்கு ஓடுவோம்.
தபாற்காரன் முன்னொழுங்கையில் திரும்பி, அதற்குள் இருக்கும் நான்கைந்து
வீடுகளுக்குக் கடிதங்களைக் கொடுத்து விட்டுத்தான் எங்கள் வீட்டுக்கு
வருவான். பெரும்பாலான நாட்களில் அவன் எனக்கு ஒன்றுமே தரமாட்டான். அப்படியே,
ஒரு முறுவலுடன் என்னைத் தாண்டிப் போய் கெளதமியிடம் கொடுப்பான். எனக்கு
அழுகை வரும். அழவும் வெட்கமாக இருக்கும். ஒரு மாதத்துக்கு ஒன்று அல்லது
இரண்டு கடிதங்களைத்தான் எனது கணவர் எனக்கு எழுதி அனுப்புவார். கெளதமிக்கோ
கொள்ளை கொள்ளையாகக் கடிதங்கள் வரும். அவ்வப்போது சூட்கேஸ் நிறையச் சேலைகள்
வரும். குடைகள் வரும். சொக்ளேற்ஸ் வரும். நான் மனசுக்குள் பொருமிக் கண்ணீர்
வடிப்பேன்.
கெளதமி அடிக்கடி ரவுணுக்குப் போவாள். யோகன் அனுப்பும் காசோலையை
வங்கியில் மாற்றுவதற்கு, சந்தையில் புதிய மரக்கறிகள், மீன் வாங்குவதற்கு…
என்று ஏதாவது காரணங்கள் அவளுக்கு இருக்கும். ஒவ்வொரு முறை போகும் போதும்
ஒவ்வொரு புதுப் புதுச் சேலையுடுத்து அதற்குப் பொருத்தமான நிறத்தில்
குடையும் பிடித்துக் கொண்டு போய் வருவாள். அவளது செருப்புக் கூட அந்தச்
சேலைக்குப் பொருத்தமான நிறத்திலேயே இருக்கும். பெரிதான ஒப்பனை ஒன்றும்
அவளுக்குத் தேவையாக இருக்கவில்லை. அவள் பேரழகி.
ரவுணிலிருந்து வந்ததும் சமைப்பாள். அவளது குசினிக்குள்ளிருந்து களஞ்சிய
அறைக்குள் போவதற்கு வெளிவிறாந்தைக்கு வந்துதான் போக வேண்டும். அவள் அப்படி
ஒவ்வொரு முறை வெளியில் வரும் போதும் போகும் போதும் தனது வானொலியில்
ஒலிக்கும் பாடல்களுக்கேற்ப நடனமாடிக் கொண்டும் துள்ளிக் கொண்டும் தான்
போவாள்.
அவளிருந்த வீடும் எங்கள் வீடும் டானா படக் கட்டப்பட்ட வீடுகள். இரண்டு
டானாக்களும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டிருந்தன. நாங்களும் ஒருவரையொருவர்
செம்பருத்தி வேலிக்குள்ளால் பார்க்கத் தவறுவதில்லை. எங்கள் வீட்டுப் பெரிய
விறாந்தையில் நடப்பதெல்லாம் அங்கு தெரியும். அதே போல் அங்கு நடப்பதெல்லாம்
எங்களுக்குத் தெரியும். அது ஒன்றும் எங்களுக்குத் தொந்தரவாகவும்
இருக்கவில்லை.
கெளதமியிடம் நிறைய பாட்டு-ஒலிப்பேழைகள் இருந்தன. ரவுணுக்குப் போகும்
பொழுதுகளில் அவள் தனக்குப் பிடித்த சினிமாப்பாடல்களைத் தேர்ந்தெடுத்து
எழுதிக் கொண்டு போவாள். அதை அங்கு ரவுணுக்குள் இருக்கும் ஓடியோக் கடையில்
கொடுத்து ஒலிப்பேழையில் பதிவு செய்வித்துக் கொண்டு வருவாள். அப்படிப்
பாடல்களைப் பதிவிப்பது அப்போது அனேகமான எல்லோர் வீடுகளிலும் நடந்து
கொண்டுதான் இருந்தது. அதையேதான் அவளும் செய்தாள்.
ஒரு நாள் வேலிக்குள்ளால் கதைக்கும் போது “இண்டைக்கு ஓடியோக்கடையிலை
சரியான சனம். அங்கை வேலை செய்யிற ஒரு அண்ணா, தான் வீட்டை போகேக்கை அந்த
ஒலிப்பேழையை இங்கையே கொண்டு வந்து தந்திட்டுப் போறன் எண்டு சொன்னவர்“ என்று
சொன்னாள்.
அன்று மாலை ஆறுமணியளவில் அந்த அண்ணா வந்து அவள் வீட்டு வாசலில்
துவிச்சக்கர வண்டியின் மணியை அடித்ததையும் அவள் ஓடிச்சென்று அந்த
ஒலிப்பேழையை வாங்கியதையும் நான் முன்விறாந்தையில் நின்ற போது கண்டேன்.
பிறகுதான் அந்த அண்ணாவின் பெயர் இளங்கோ என்பதைத் தெரிந்து கொண்டேன்.
அந்த நாளுக்குப் பிறகு அவள் பாடல்களைப் பதிவு செய்யக் கொடுத்து விட்டுக்
காத்திருந்து வாங்கி வருவதில்லை. இளங்கோவுக்காகத்தான் காத்திருப்பாள்.
இளங்கோ, மாலையில் கடையிலிருந்து வீட்டுக்குப் போகும் போது வழியில்
இருக்கும் இவள் வீட்டடியில் ஒலிப்பேழையைக் கொண்டு வந்து கொடுப்பான். இவள்
‘நன்றி‘ சொல்லி வாங்குவாள். இளங்கோ “போட்டு வாறன்“ சொல்லிப் போவான்.
நாட்டில் போர் வளர்ந்து கொண்டிருந்தது. எப்போது
குண்டுமழை பொழியும்? எப்போது பருத்தித்துறைக் கடலிலிருந்து பீரங்கி
முழங்கும்? எப்போது ‘ஷெல்‘ வந்து சிதறும்? என்று தெரியாத பதட்டம் எம்மைச்
சூழ்ந்து கொண்டது.
இவைகளிலிருந்து எனது மூன்று பிள்ளைகளையும் காப்பாற்றிக் கொண்டு
யேர்மனிக்கு எனது கணவரிடம் ஓடி விடுவதே எனது இலக்கானது. கடவுச்சீட்டு
எடுப்பதற்கான வேலைகள், விசா, ஏஜென்சி, காணிக்கந்தோர், போட்டோக்கொப்பிக்
கடை, மொழிபெயர்ப்பு… என்று நான் அலையத் தொடங்கியிருந்தேன்.
‘யோகன் வருவான் வருவான்‘ என்று எதிர்பார்த்த படியே கெளதமி
காத்திருந்தாள். அவனும் ‘நான் ஆடியில் வருகிறேன். ஆவணியில் வருகிறேன்‘
என்று இவளைக் கடிதங்களில் ஏமாற்றிக் கொண்டே இருந்தான். வேலை ஒப்பந்தமும்
நாட்டுப் பிரச்சனைகளும் அவன் சாட்டுச் சொல்வதற்கான சாதனங்களாக அமைந்தன.
யோகன் ஊர்ப் பெரியவர் ஒருவரின் மகன். கெளதமி ஒரு சாதாரண குடும்பத்துப்
பெண். அதனாலோ என்னவோ யோகனதும் கெளதமியினதும் காதலை யோகனது குடும்பத்தினர்
ஏற்றுக் கொள்ளவேயில்லை. அவர்களை மொத்தமுமாக எதிர்த்தே இவர்கள் திருமணம்
செய்து கொண்டார்கள். யோகனின் அப்பா தனது செல்வாக்கைக் காட்டத் தவறவில்லை.
சினிமாப்படங்களில் வருவது போல ஏதோ தில்லுமுல்லுச் செய்து, யோகனைச்
சவுதிக்கு அனுப்பி விட்டார். அப்போது கெளதமிக்கு 19 வயது. இரண்டு மாதங்கள்
மட்டுமே அவள் யோகனுடன் வாழ்ந்தாள். அந்த இரண்டு மாதங்களின் சாட்சியமாக
கெளதமியின் மகன் பிரணவன் மெதுமெதுவாக வளர்ந்து கொண்டிருந்தான். அவன் தனது
அப்பாவைப் புகைப்படங்களில் மட்டுந்தான் பார்த்திருக்கிறான். குரலை யோகன்
அவ்வப்போது கதைத்து அனுப்பும் ஒலிப்பேழைகளில் கேட்டிருக்கிறான். கெளதமிக்கு
அது பெருங்கவலை.
கெளதமி இருக்கும் அந்த வீடு ஒரு பெரிய வீடு. 1983 யூலைக் கலவரத்தோடு,
அந்த வீட்டில் வாழ்ந்தவர்கள் வெளிநாடு, வேற்றூர் என்று சென்று விட்டார்கள்.
ஒரு வருடத்துக்கும் மேலாகப் பூட்டியிருந்தது. இப்போது கெளதமி வாடகைக்கு
வந்திருக்கிறாள். அந்தப் பெரிய வீடு அவளுக்கும் அவளது ஒற்றை மகனுக்கும் மகா
பெரிது.
அவளது படுக்கையறைக்குள் ஒரு பெரிய அலுமாரி இருக்கிறது. அதற்குள்
ஊருப்பட்ட சேலைகள், அதற்கேற்ப பாவாடைகள், சேலைகளுக்கான மேற்சட்டைகள்,
ரிபன்கள், புதிதுபுதிதான குடைகள். மறுபக்கத்தில் பத்துக்கும் மேற்பட்ட
சூட்கேசுகள். அதற்குள்ளும் சேலைகள், புதுப்புதுத் துணிகள், சட்டைகள்,
தலைக்கிளிப்புகள்… ஒரு நாளுமே அவள் பாவிக்காத இன்னும் பல. எல்லாமே
சவுதியிலிருந்து யோகன் அனுப்பியவைதான். அதே அறைக்குள் ஒரு பெரிய கட்டில்.
இத்தனை சேலைகளும் சட்டைகளும் பணமும் இந்தப் பெரிய வீடும்… ஒரு கணவனுக்கு
ஈடாகி விடுமா? யோகன் சவுதிக்குப் போய் ஐந்து வருடங்களாகின்றன. கெளதமி
மனசுக்குள் வெந்து கொண்டிருந்தாள். அந்தக் கட்டிலில் படுப்பதையே
வெறுத்தாள். ‘ஷெல்‘ வீச்சின் போது சனங்கள் வீட்டை விட்டு ஓடும் போது கெளதமி
எங்கும் ஓட மாட்டாள். பிரணவனையும் அணைத்துக் கொண்டு அப்படியே இருப்பாள்.
ஓடிக்கொண்டிருக்கும் சனங்களில் யாராவது கணவன், தனது மனைவியை சைக்கிள்
பாரில் இருத்தி, பிள்ளையையும் ஒரு கையில் தூக்கிக் கொண்டு சைக்கிள் பெடலை
முக்கி முக்கி உழக்கிக் கொண்டு போவதைக் கண்டால் போதும். அது பற்றி மீண்டும்
மீண்டுமாய் சிலாகித்துச் சொல்லுவாள். அந்தப் பாதுகாப்பு தனக்கு இல்லையே!
என அங்கலாய்ப்பாள். ஏங்குவாள். கண்கலங்குவாள்.
அப்போதெல்லாம் இப்போது போல வட்ஸ்அப், வைபர், மெசெஞ்சர், பேஸ்ரைம்… என்று
எதுவுமே இருக்கவில்லை. அலைபேசி என்றாலே என்னவென்று தெரியாது. சாதாரணத்
தொலைபேசி கூட வீடுகளில் இருக்கவில்லை. கடிதம் ஒன்றே தொலைத்தொடர்புக்கான
சாதனமாக இருந்தது. யோகனை ஊருக்கு வந்து விடும்படி கேட்டு அவள் கடிதங்களாக
எழுதுவாள். பதில் கடிதங்களுக்காக, தபாற்காரனுக்காய் காத்திருப்பது போலவே
காகங்களையும் பார்த்திருப்பாள்.
காகங்களை அவள் நேசித்தாள். வீட்டுத் தாழ்வாரத்திலிருந்து கரையும்
காகங்கள் எல்லாம் தனக்கு யோகனின் கடிதங்கள் பற்றிய செய்திகளைச் சொல்கின்றன
என்றே அவள் நம்பினாள். சனிக்கிழமைகள் தோறும் சிவன் கோவிலுக்குப் போய்,
‘தனக்கிருக்கும் சனிதோஷம் நீங்கி, யோகன் விரைவில் வந்து விடவேண்டும்‘ என்று
மன்றாடி, சனிபகவானுக்கு எள்ளுச்சட்டி எரிப்பாள். கெளதமியின்
மன்றாட்டங்களுக்கு, சனிபகவான் உட்பட எந்தக் கடவுள்களுமே செவிசாய்க்கவில்லை.
அவளது எந்தப் பிரார்த்தனைகளும் பலிக்கவில்லை. யோகனின் பெற்றோர், யோகனை
ஊருக்கு வரவிடாது சவுதியிலேயே மறித்து வைத்திருந்தார்கள்.
ஆரம்பத்தில் ‘நன்றி‘, “போட்டு வாறன்“ என்றிருந்த
கெளதமி இளங்கோவினது உறவும், தொடர்ந்த காலங்களில் அந்தக் கேற்வாசலில் அவன்
துவிச்சக்கர வண்டியில் இருந்த படியே ஒருகாலை நிலத்தில் ஊன்றியபடி நின்று
கதைப்பதுவும், இவள் வாய்விட்டுச் சிரிப்பதுவுமாக வளர்ந்து கொண்டிருந்தது.
கதைக்கும் நேரமும் ஐந்து நிமிடங்கள், பத்து நிமிடங்களாகி, பதினைந்து
நிமிடங்களாகி அரைமணித்தியாலத்துக்கும் மேலாய் நீண்டு கொண்டு போனது. இளங்கோ
ஓரிரு தடவைகள் ‘தான் தேத்தண்ணி குடிக்க உள்ளை வரப்போறன்‘ என்று அவளைக்
கேட்டிருக்கிறான். அதற்கு மட்டும் அவள் ஒரு போதும் சம்மதித்ததில்லை. கேற்
வாசலுடன் அவனை திருப்பி அனுப்பி விடுவாள்.
போரும் இன்னுமின்னுமாய் வளர்ந்து கொண்டேயிருந்தது. பெடியள் இயக்கங்களில்
இணைந்து கொண்டேயிருந்தார்கள். கிரனைட் பைகளுடன் திரிந்தார்கள். சென்றிக்கு
நின்றார்கள். நியாயவிலைக்கடை நடாத்தினார்கள். இராணுவம் அடிக்கடி
வீடுகளுக்குள் நுழைந்தது. ஆண்களைச் சுட்டு வீழ்த்தியது. அல்லது பெடியளைப்
பிடிப்பதாகச் சொல்லி அப்பாவி மக்களைப் பிடித்துக் கொண்டு சென்றது. பெண்களை
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியது. பாடசாலைப்பிள்ளைகள் இடைநடுவில்
வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப் பட்டார்கள். வாழைப்பொத்தி போன்ற ‘ஷெல்‘
கள் வீடுகளை நோக்கி வரத் தொடங்கும் போதெல்லாம் சனங்கள் வீட்டை விட்டு எங்கோ
ஓடிக் கொண்டிருந்தார்கள். அப்படி ஓடிக் கொண்டிருந்தவர்கள் மீது கூட ‘ஷெல்‘
கள் வீழ்ந்தன. உயிர்கள் போயின. அடிக்கடி பெடியளுக்கும் இராணுவத்துக்கும்
இடையே மோதல்கள் நடந்தன. தினமும் யாராவது கொல்லப்பட்டுக் கொண்டே
இருந்தார்கள்.
அன்றும் அப்படித்தான். திடீரென்று தொடங்கியது ‘பட பட‘
வென்ற வேட்டுச் சத்தம். குண்டுகள் வெடித்தன. ரவுணுக்குள் பெடியளுக்கும்
ஆமிக்கும் சண்டை. சனங்கள் கிலி கொண்டு, ரவுணை விட்டு ஓடி வந்து
கொண்டிருந்தார்கள். கடைக்காரர்கள் கடைகளைப் பூட்டிக்கொண்டு தத்தம்
வீடுகளுக்கு ஓடிக் கொண்டிருந்தார்கள். வெளியில் போன பிள்ளைகளுக்காக,
கணவனுக்காக, சகோதரர்களுக்காக… என்று ஒவ்வொரு வீட்டு வாசல்களிலும் சனங்கள்
மிகுந்த பதட்டத்துடன் கூடிக் கூடிக் காத்து நின்றார்கள். நாங்களும்
காத்திருந்தோம். ஓடி வருபவர்கள் ஆங்காங்கு நின்று ரவுணுக்குள் நடக்கும்
சண்டையைப் பற்றி தாம் கண்டவைகளுடன் சேர்த்து கை, கால், மூக்கு, வாய்…
எல்லாம் வைத்து காணாதவைகளையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கடையைப்
பூட்டிக்கொண்டு துவிச்சக்கரவண்டியில் ஓடி வந்த இளங்கோவும் தன் வீட்டுக்குப்
போகாமல் கெளதமியின் வீட்டு வாசலில் நின்று விட்டான்.
சில மணி நேரச் சண்டையின் பின் ‘எல்லாம் ஓய்ந்து விட்டன‘ என நாம்
எண்ணுகையில் இராணுவம், முகாமை விட்டு வெளிக்கிட்டு ஹாட்லிக் கல்லூரி
வீதிக்கு வந்து விட்டது. சண்டையின் போது இராணுவத்தரப்பிலும் இருவர்
மரணித்து விட்டனர். அந்தக் கோபத்தில், இராணுவக் கவசவாகனத்துக்குள் இருந்த
படியே காண்பவரையெல்லாம் தாறுமாறாகச் சுட்டது. சூட்டுச்சத்தங்கள் பீதியைக்
கிளப்பின. எல்லோரும் திக்குத்திசை தெரியாமல் சிதறி ஓடினார்கள்.
மரங்களுக்குப் பின்னால் ஒளிந்தார்கள். காணிகளுக்குள் பாய்ந்தார்கள்.
வெள்ளவாய்க்காலுக்குள் வீழ்ந்து படுத்தார்கள். வீட்டுவாசல்களில்
நின்றவர்கள் வீடுகளுக்குள் நுழைந்தார்கள். கெளதமியும், பிரணவனையும்
இழுத்துக் கொண்டு உள்ளே ஓடினாள். அவளுக்குப் பின்னால் இளங்கோவும்
துவிச்சக்கரவண்டியையும் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான். யாரும் யாரது
அநுமதிக்காகவும் காத்திருக்கவில்லை. எங்கெல்லாம் மறைந்து கொள்ள முடியுமோ
அங்கெல்லாம் மறைந்து கொண்டார்கள். உயிர் தப்புவது ஒன்றே ஒவ்வொருவர்
குறிக்கோளாகவும் இருந்தது. நாங்களும் எங்கள் வீட்டு முன் கதவுகளைச்
சாத்திக் கொண்டு வீட்டுக்குள்ளே ஓடினோம்.
இராணுவம் எந்தக் கணத்திலும் வீட்டுக்குள் நுழையலாம். எல்லோரையும் சுட்டு
வீழ்த்தலாம். மனசு நடுங்கியது. பாடசாலைக்குப் போன பிள்ளைகள், வேலைக்குப்
போன தங்கைமார், சென்றிக்கு நிற்கும் தம்பி… எல்லோரும் பத்திரமாக வந்து
சேர்வார்களா? நெஞ்சு பதறியது. அம்மா செய்வதறியாது திகைத்துப் போய் நின்றா.
அப்பாச்சி, லலித் அத்துலக்முதலியை ‘அச்சுலக்கை முதலி‘ என்று சொல்லித்
திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தா.
நான் ஒரு வித உறைநிலையோடு பெரியவிறாந்தை நுனியில் அமர்ந்தேன். கெளதமி
அவளது வீட்டு விறாந்தையில் களஞ்சிய அறை வாசலோடு ஒட்டி நின்றாள். அது
கொஞ்சம் உட்புறமாக இருந்ததால், கேற் வாசலில் இருந்து பார்த்தால் தெரியாத
விதமாக மறைந்து கொள்ள ஏதுவாக இருந்தது. அவளோடு ஒட்டியபடி பிரணவன். அருகில்
இளங்கோ.
இராணுவம் எங்கள் வீடுகளைக் கடந்து சென்றது, திகில் நிறைந்த, இறுக்கமான
அந்த நிமிடங்கள் தளர்ந்தன. கெளதமி, இளங்கோவைப் பார்த்துச் சிரித்துக்
கொண்டு மெதுவாக நகர்ந்தாள். சட்டென்று இளங்கோ கெளதமியை இழுத்து அணைத்துக்
கொண்டான். ஒரு கணம், அவளும் இசைந்தாள் போலிருந்தது. ஒரே ஒரு கணம்தான். தனது
இருகைகளையும் இளங்கோவின் நெஞ்சில் ஊன்றி அவனைப் பலமாகத் தள்ளினாள். அவன்
அதை எதிர்பார்க்கவில்லைப் போலும். அணைப்பிலிருந்து விடுபட்டு களஞ்சிய
அறைக்கதவோடு பின்பக்கமாய் மோதினான். கௌதமி பிரணவனையும் கூட்டிக் கொண்டு
ஓடி, எங்கள் வீட்டுக்கு வந்து விட்டாள்.
அவளது மாம்பழக் கன்னங்கள் சிவந்திருந்தன. கண்கள் கலங்கிக் கசிந்தன. மேனி
நடுங்கியது. என் கையை எடுத்துத் தன் நெஞ்சில் வைத்தாள். அது பட பட வென
அடித்துக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் அவள் எதுவுமே பேசவில்லை. குற்றம்
செய்து விட்டவள் போலக் குறுகினாள். திடீரென்று குலுங்கி அழுதாள். சும்மா,
தொட்டாலே கற்புப் போய் விட்டதாய் கருதும் காலமது. இளங்கோ கட்டியணைத்து
விட்டானல்லவா! மாபெரும் தப்பு நடந்து விட்டது போல அவள் தவித்தாள்.
‘யோகனுக்குத் தெரிந்தால் என்னாகும்‘ என்று பயந்தாள்.
‘உயிருக்கே உத்தரவாதமில்லாத அந்தரமானதொரு வாழ்வைத்தான் நாம் இப்போது
வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது ஒன்றும் உயிர் போகுமளவுக்குப்
பெரியவிடயமில்லையே!‘ என்று சொல்லி அவளை ஆற்றுப்படுத்தக் கூடிய
மனப்பக்குவமோ, தேற்றக் கூடிய தைரியமோ அப்போது என்னிடம் இருக்கவில்லை.
அந்த நாளுக்குப் பின்னான நாட்கள் மிகவும் பதட்டமான, பயமான நாட்களாகவே
இருந்தன. பருத்தித்துறை அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டே இருந்தது. சாவுகளும்
வன்புணர்வுகளும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. மக்களின் இயல்பு நிலை வாழ்க்கை
முற்றிலுமாக மாறிக் கொண்டிருந்தது. ரவுண் கடைகள் எல்லாம் உள்நோக்கி நகரத்
தொடங்கின. சந்தையும் இடம் மாறியது.
கௌதமியும் மாறிப் போனாள். சோகம் அவளைப் பற்றியிருந்தது.
குசினிக்கும் களஞ்சிய அறைக்குமான நடமாட்டங்களின் போது ஆடுவது, ஓடுவது,
குதிப்பது எல்லாவற்றையும் அவள் மறந்திருந்தாள். ஓடியோக் கடைப்பக்கம்
போவதையும் நிறுத்தியிருந்தாள். இளங்கோவும் அதன் பின் அவளிடம் வர வில்லை.
அதை அவளால் தாங்க முடியாதிருந்தது. இளங்கோ வரவேண்டும் என்றே அவள்
விரும்பினாள். அவன் அப்படி வராதிருப்பது பெரும் இழப்புப் போலவே அவளுக்குத்
தோன்றியது.
ஒவ்வொரு துவிச்சக்கரவண்டியின் மணிச்சத்தத்துக்கும் நெஞ்சு திக்கிட,
இளங்கோவையே அவள் எதிர்பார்த்தாள். இளங்கோவின் அந்த அணைப்புக்காக அவளது மனம்
ஏங்கியது. வருவான் என்ற நம்பிக்கையோடு அவள் காத்திருந்தாள்.
நானும் எனது யேர்மனியப் பயண அலுவல்கள் சரிவந்து ஊரை, உறவுகளை… எல்லாம்
விட்டு விட்டு எனது பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு கொழும்பு நோக்கிப்
பயணமானேன்.
பன்னிரண்டு வருடங்கள் கழித்து எனது அம்மாவும் யேர்மனிக்கு வந்து
சேர்ந்தா. அப்போது ஒவ்வொருவர் பற்றியும் கேட்கும் போது “கௌதமி
எப்படியிருக்கிறாள்? யோகன் ஊருக்கு வந்தானா?“ என்றும் கேட்டேன்.
“வந்தான். ஆனால் கௌதமியிடம் வரவில்லை“ என்றா அம்மா.
“அப்ப இளங்கோ?“
“அவன் அப்போதே கனடாவுக்குப் போய் விட்டான்“ என்றா.
சந்திரவதனா
04.04.2024