Saturday, November 25, 2023

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி...

 

அன்று 1985ம் ஆண்டு மார்ச் மாதம் 7ந் திகதி. தாயகத்தில் அமைதியாக இருந்த குளங்களிலெல்லாம் கல்லெறியப் பட்டு விட்ட காலம் அது.

எங்கள் வீடும் அப்போது கல்லெறியப்பட்ட குளமாய்த்தான் இருந்தது. இருந்தாலும் எங்கள் குட்டித் தங்கை பாமாவின் 13 ஆவது பிறந்த நாளை அதாவது ரீன்ஏஜ் இல் காலடி எடுத்து வைக்கும் அவளின் பிறந்தநாளைக் கொண்டாடாமல் இருக்க அக்காமாரான எங்களுக்கு மனம் இடந் தரவில்லை. பெரிய கேக் ஒன்று அடித்து, நண்பி இந்துமதியிடம் கொடுத்து பேக் பண்ணினோம். எங்களிடம் அப்போது மின்சாரச்சூளை இருக்கவில்லை.

அந்தக் கேக்குடன் அம்மா செய்த வடை, முறுக்கு, இதர சிற்றுண்டிகளையும் வழக்கமான சாப்பாட்டு மேசையை விடுத்து வரவேற்பறையில் இருக்கும் மேசையில் வைத்து விட்டு அந்த மேசையைச் சுற்றி இருந்தோம்.

ஆனால் யாருமே எதையுமே சாப்பிடவில்லை. என் சின்னக் குழந்தைகள் கூட எதற்குமாய் அடம் பிடிக்கவில்லை. என்னையும் என் தங்கைமாரையும் போலவே அவர்களும் யாரையோ எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள்.

அந்த எதிர்பார்ப்புக்குரியவர் வேறு யாருமல்ல. எங்கள் தம்பி மொறிஸ்தான் அது. தம்பி மயூரனுக்கும்(சபா) தங்கை பாமாவுக்கும் மட்டும் அவன் அண்ணா. என் பிள்ளைகளுக்கோ குறும்பு நிறைந்த ஆசை மாமா.

காத்திருந்த கணங்கள் யுகங்களாக நீண்டிருக்க, மணிகள் சில கடந்து அவன் வந்தான். தோளிலே துணிப்பை கிரனைட்டுகளுடன் பருமனாகத் தொங்க, கையிலே இன்னொரு கிரனைட்டைப் பொத்தியபடி, முகத்திலே மட்டும் என்றுமே மாறாத புன்னகையுடன் வந்த அவனது வாய் ஒரு பாடலை முணுமுணுத்தது.

அவன் எங்களை நெருங்க நெருங்க காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி. பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி... என்ற பாடல்வரிகள் தெளிவாக எம் காதுகளையும் வந்தடைந்தன.

எமது காத்திருப்புக்குத்தான் ஏதோ சொல்ல வருகிறான் என நாம் நினைத்தோம். ஆனால் அவனோ அக்கா.. அத்தான் யேர்மனியிலை இருந்து உங்களையே நினைச்சு நினைச்சு ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி...‘ எண்டு பாடிக் கொண்டிருக்கிறார் என்றான். அப்போது எனது கணவர் யேர்மனிக்குப் பயணித்து சில மாதங்கள்தான் ஓடியிருந்தன.

ம்..ம்..ம்... உனக்கு இஞ்சை மட்டும் அவர் பாடுறது கேட்குதாக்கும். சும்மா போடா..! நான் அவனைச் செல்லமாகக் கடிந்து கொண்டேன்.

எனக்குத் தெரியாதே? என்ற படி தொடர்ந்து பாடலைப் பாடிக் கொண்டே அவன் என் பிள்ளைகளை நோக்கினான்.

என் மகள் தீபா ஓடிப்போய் பரதன் மாமா.. என்ற படி அவனைக் கட்டிப் பிடித்தாள். கிரனைட் பொத்திய கைகளுடன் அவன் அவளை அணைத்தான்.

ஐயோ.. அவளை விடடா. முதல்லை உதெல்லாத்தையும் அங்காலை கொண்டு போய் வைச்சிட்டு வந்து பிள்ளையளைக் கொஞ்சு மனசு பதை பதைக்க அவனைக் கடிந்தேன்.

அக்கா, உங்களுக்கு எப்பவும் பயம்தான் என்ற படி தள்ளிப் போனவன், இந்தக் கிரனைட் கிளிப் உடைஞ்சிட்டுது. தலைக்குக் குத்துற கிளிப் ஒண்டு தாங்கோ. இதைச் சரிப்படுத்த... என்றான்.

உடனே தங்கை சந்திரா உனக்கு இப்ப என்ன கிளிப் தானே வேணும். இஞ்சை வா. நான் தாறன் என்று கூறி விறாந்தைகள் கடந்து குசினிக்குப் பக்கத்திலுள்ள ஸ்டோர் றூமுக்கு அவனை அழைத்துச் சென்றாள்.

அது ஒரு இரட்டை அறை. ஒரு அறைக்குள் போனால் சேர்ந்திருக்கும் இன்னொரு அறைக்குள்ளும் போகலாம். அந்த இன்னொரு அறைக்குள் மா, சீனி, அரிசி, புளி, ஒடியல், ஊறுகாய்... என்று மூட்டைகளும், பானைகளும், சாடிகளும் நிறைந்திருக்க முன் அறையில் அம்மா அவ்வப்போது சமையற் தேவைக்கு எடுக்கக் கூடிய வகையில் சிறிய சாடிகளிலும் போத்தல்களிலும் உணவுப் பொருட்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. கூடவே சாப்பாட்டுக் கோப்பைகள் குடிகோப்பைகள் ரம்ளர்களுடனான ஒரு அலுமாரியும் ஒரு பெரிய மேசையும் இருந்தன.

சந்திரா, அந்த மேசைக்குத்தான் மொறிஸைக் கூட்டிச் சென்றாள். நானும் அவர்களின் பின்னாலே போய்ப் பார்த்து கெதியா கிளிப்பைப் போட்டிட்டு வாங்கோ. இனியாவது பிறந்தநாளைக் கொண்டாடுவம் என்று சொல்லி விட்டு வரவேற்பறைக்கு வந்து காத்திருந்தேன்.

ஐந்து நிமிடங்கள் தான் அசைந்து போயிருக்கும். ஒரு மாபெரும் சத்தம். வீடு அதிர்ந்தது. எனக்கு நெஞ்சே வெடித்தது போலிருந்தது. என் பிள்ளைகள் விழிகள் பிதுங்க விறைத்து நின்றார்கள்.

நல்ல வேளையாக அம்மா அந்த நேரம் வீட்டில் நிற்கவில்லை. நின்றிருந்தால் கதிகலங்கிப் போயிருப்பா. நானும் மற்றைய தங்கை பிரபாவும் பாமாவும் ஸ்டோர் றூம் வாசலையே பார்த்தபடி நின்றோம். ஸ்டோர்றூமுக்குள்ளிருந்து புகை வந்து கொண்டிருந்தது. ஸ்டோர்றூம் வாசல் புகை மண்டலமாயிருந்தது. வாசலிலிருந்து நீளத்துக்கு விறாந்தையிலிருந்து முற்றம் வரை துகள்களாய் சிவப்பாய், கறுப்பாய் பலநிறங்களில் ஏதேதோ வந்து விழுந்தன. வேறு எந்தச் சத்தமும் இல்லை.

உள்ளே, தம்பி மொறிசும் தங்கை சந்திராவும் என்ன ஆனார்கள்? சிதறி விட்டார்களா? ஒரு கணம் இதயம் துடிக்க மறந்து செயலிழந்து நின்றேன். அடுத்த கணம் எப்படி வரப்போகிறது என்று தெரியாத அந்தக் கணத்தில்தான் அந்த அதிசயம் நடந்தது. வாழ்க்கையில் மறக்கவே முடியாத கணங்களில் ஒரு கணம் அது.

தங்கை சந்திராவும் தம்பி மொறிசும் உயிரோடு வெளியே வந்தார்கள். அப்போதும் அவன் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி... என்று பாடிக் கொண்டே வந்தான். முகத்தில் எப்போதும் போலப் புன்னகை பூத்திருந்தது.

தங்கைதான் வெலவெலத்துப் போயிருந்தாள். அக்கா எனக்குக் காது கேட்கேல்லை. செவிடாகீட்டன் போலை இருக்கு என்றாள். எனக்குப் போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது.

ஆனால் அதற்கு மேல் எம்மால் அந்தப் பிறந்தநாளைச் சாதாரணமாகக் கொண்டாடவே முடி,யவில்லை. பயம், பதட்டம், சந்தோஷம்... என்று எல்லாம் கலந்த இனம் புரியாத உணர்ச்சிக் கலவை எம்மை ஆட்கொள்ள நாம் சில நிமிடங்கள் வாய் விட்டுச் சிரித்தோம். பின்னர் அழுதோம். தம்பி மொறிஸைக் கட்டித் தழுவினோம். அதன் பின்னர்தான்உள்ளே என்ன நடந்தது?‘ என்பதை அறிந்து கொண்டோம்.

நடந்தது இதுதான். கிளிப் போடும் போது, மொறிஸின் கை நழுவி கிரனைட் வெடித்து விட்டது. கிரனைட் வெடிக்கப் போவதைக் கணத்தில் உணர்ந்து கொண்டவன், தங்கையையும் இழுத்துக் கொண்டு ஓடிப்போய் மற்ற அறையின் அரிசி மூட்டைகளின் பின் படுத்து விட்டான். அந்த அரிசி மூட்டைகள்தான் அன்று அவர்கள் இருவரையும் காத்தன.

அதன் பின் அதற்கான தண்டனையாக, மொறிஸ், ஆயிரம் தோப்புக்கரணம் போட்டது இன்னுமொரு கதை.

சந்திரவதனா

12.10.2001

Saturday, November 11, 2023

தம்பிமார், அக்காமார்களுக்குக் கிடைத்த கொடைகள்

அப்போதெல்லாம் இப்போது போல வட்ஸ்அப், வைபர், மெசெஞ்சர்... என்று எதுவுமே இருக்கவில்லை. கைத்தோலைபேசி கூட இல்லை. வீட்டுத் தொலைபேசியில் விரல் விட்டு ஒவ்வொரு எண்ணாகச் சுற்றித்தான் யாருடனாவது தொலைபேச முடியும்.
 
யேர்மனியிலிருந்து ஊரில், ஆத்தியடியில் இருக்கும் அம்மாவுடன் தொலைபேச விரும்பினால் அப்படி நம்பரைச் சுழற்றி எங்களூர் உபதபாற்கந்தோருக்கு அழைப்பை மேற்கொள்ள வேண்டும். அங்கிருந்து ஒருவர் ஓடிப்போய் அம்மாவை அழைத்து வருவார். அம்மா வரும்வரை அத்தனை கஷ்டப்பட்டு பலமுறை சுழற்றி கிடைத்த தொடர்பைத் துண்டிக்க மனம் வராது. அம்மா வந்து இரண்டு கதை கதைக்க முன்னம் தொடர்பு தானாகவே துண்டிக்கப்பட்டு விடும். 
 
அம்மாவோடு கதைக்காமலே இருந்த பொழுதை விட பன்மடங்கு அதிகமான துயரம் தொற்றிக் கொள்ள எதுவும் செய்யத் தோன்றாது கண்கள் கலங்க அப்படியே கொஞ்ச நேரம் இருப்பேன். 
 
கதைத்ததற்கான ரெலிபோன் பில் பற்றிய பயம் பின்னர்தான் வரும். அது 200, 300... டொச்சமார்க் ஆக இருக்கும். அப்போது யூரோ வரவில்லை.
இந்திய இராணுவகாலத்தில் அதற்குக் கூட தடை வந்தது. ஊருக்குப் போன் பண்ணுவது என்பது சாத்தியமே இல்லாமல் போனது. ஊர் நிலைமை பற்றிக் கொஞ்சமாவது அறிந்து கொள்வதற்கு அப்போது எங்களுக்குக் கைகொடுத்தது ‘தகவல் நடுவச் செய்தி‘.
 
தகவல் நடுவச் செய்தியை, உள்ளூருக்கு போன் பண்ணுவதற்கான செலவில் ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கேட்கலாம். இங்கிருந்த தமிழர்களில் ஒரு சிலர் சேர்ந்துதான் அந்த வசதியை உருவாக்கியிருந்தார்கள்.
 
எனது கணவர் தினமும் அதைக் கேட்டு, எங்களுக்கும் ஊர்ச் செய்திகளைச் சொல்வார். அப்படித்தான் 02.05.1989 அன்று, முதல்நாள்(01.05.1989) தம்பி மொறிஸ், இந்திய இராணுவத்துடனான நேரடிமோதலில் வீரமரணமடைந்த செய்தியை வேலையிடத்தில் இருந்தே கேட்டு விட்டு, மாலையில் வீடு வந்து சொன்னார். இன்னொரு தடவை எனக்காக அழைப்பை மேற்கொண்டு என்னையும் கேட்க விட்டார்.
 
எனது தவிப்பைப் பார்த்து விட்டு "அது பொய்ச் செய்தியாக இருக்கும்" என்றார். தாங்க முடியாத சோகம். தவிப்பும் அழுகையுமாய் என் நாட்கள் நகர்ந்தன. ‘அப்படி எதுவுமே நடந்திருக்காது, ஊரிலிருந்து நல்ல செய்தி வரும்‘ என்ற நப்பாசை வேறு எனக்கு.
 
ஒருமாசம் கழித்துத்தான் அம்மாவினதும் தங்கையினதும் கடிதங்கள் வந்து சேர்ந்தன. அது சுமை தாளாத சோகம் நிறைந்த ஒரு நாள்.
1993இலும் நிலைமைகளில் பெருமாற்றங்கள் ஏற்படவில்லை. அம்மாவுடன் தொலைபேச முடியாமலே இருந்தது. நான் ஒரு கடிதம் எழுதினால் அது அம்மாவைச் சென்றடைய கிட்டத்தட்ட ஒரு மாசம் செல்லும். அதற்கான பதில் வர இன்னொரு மாசம்.
 
அதே நிலைதான் களத்தில் நிற்கும் தம்பி சபாவுக்கு(கப்டன் மயூரன்) எழுதும் கடிதங்களுக்கும். இருந்தாலும் எழுதிக் கொண்டே இருப்பேன். அவனும் அவ்வப்போது எனக்கு எழுதுவான். அன்றும் தம்பிக்கு எழுதினேன்.
 
19.11.1993 என்று திகதியிட்ட அக்கடிதத்தில் "அன்புச் சபா, எப்படி இருக்கிறாய்? பூநகரித் தாக்குதலுக்கு நீ போயிருக்க மாட்டாய் என்பதில் நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். ஆனால்... இவ்வளவு சாவுகள்..! மனசை நெருடுகின்றன... என்று தொடங்கி உனக்கொன்றும் ஆகவில்லை என்பதில் சந்தோசம்" என்று மிகவும் சுயநலமாக முடித்திருந்தேன். 
 
இம்முறை அவனுக்கு நிறைய எழுத முடிந்ததில் எனக்கு நிறையவே சந்தோசம். கடிதத்துடன் எனது பிள்ளைகளின் சில புகைப்படங்களையும் வைத்து ஒட்டி அஞ்சல் செய்தேன்.
 
அடுத்தநாள் சனிக்கிழமை(20.11.2003), நானும் எனது கணவரும் எமது நகரிலிருந்து 120கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் போர்ட்ஸ்கைம் நகருக்கு, காரில் சித்தியின் பிள்ளைகளிடம் சென்று கொண்டிருந்தோம். வழியெல்லாம், கணவர் ஏதேதோ கதைகள் சொல்லிக் கொண்டு வந்தார். எனது கவனம் அவரது கதைகளில் இருக்கவில்லை. நான் ஏனோ கவலையாக இருந்தேன். என்னை அறியாமலே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. "என்ன கொம்மா கொப்பரை நினைச்சு அழுறியோ?" என்றார். "இல்லை" என்றேன். "தம்பிமாரை நினைச்சு..." அதற்கும் "இல்லை" என்றேன். "ஏன் நான் அழுகிறேன்?" என்று எனக்கே தெரியாமல் இருந்தது.
 
தொடர்ந்த நாட்களில் மனதில் என்னவென்று தெரியாத ஏதோ ஒரு அமைதியின்மை. அடுத்து வந்த சனிக்கிழமை(27.11.1993) யேர்மனியில் மாவீரரை நினைவு கூரும் மாவீரர் நாளாக அனுஸ்டிக்கப் பட்டிருந்தது. பிள்ளைகளுக்கு அன்று பாடசாலை இருந்தது. அதனால் கணவர் மட்டும் அதிகாலையிலேயே போய் விட்டார். நான் ஏதேதோ நினைவுகளோடு சமைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது.
 
கொழும்பில் இருந்து சித்தி அழைத்திருந்தா. இரண்டு கதை கதைத்து விட்டு "மனதைத் திடப் படுத்திக் கொள்ளு மேனை" என்றா. ‘ஏதோ ஒரு பாதகமான செய்தி‘ என்ற உறுத்தலில் நெஞ்சு திக்கென்றது.
"சபா பூநகரித் தாக்குதலிலை போயிட்டான். 11ந் திகதி(11.11.1993) நடந்தது" என்றா
 
"என்ன? எப்படி?" என்ற எனது கேள்விகளுக்கு "ஒரு விபரமும் சரியாத் தெரியேல்லை. நான் பிறகு எடுக்கிறன். எல்லாருக்கும் சொல்லு மேனை" தோலைபேசியை வைத்து விட்டா. நான் அழவில்லை. மலைத்துப் போய் நின்றேன். ‘எந்தப் பிரார்த்தனைகளும் பலிக்கவில்லை‘ என்பதில் மனசு மிகவும் ஏமாற்றத்தை உணர்ந்தது.
 
"எல்லாருக்கும் சொல்லு மேனை" என்ற சித்தியின் குரல் மீண்டும் ஒலிக்க, இலண்டனில் இருக்கும் தங்கையைத் தொலைபேசியில் அழைத்தேன். மூச்சு வாங்கிய படி "ஹலோ" என்றவள் "இப்பத்தான் கடையிலை சாமான்கள் வேண்டிக் கொண்டு வந்தனான். படியிலை வரவே ரெலிபோன் அடிச்ச சத்தம் கேட்டது. அதுதான் ஓடி வந்தனான்" என்றாள். கர்ப்பமாயிருக்கும் அவளின் மூச்சு பலமாகவே எனக்குக் கேட்டது. எனது அழைப்பு என்ற சந்தோசத்தில் "அக்கா.." என்றவளிடம் எப்படி அந்தச் செய்தியைச் சொல்வது? இதுவும் ஒரு கொடுமைதான்! ஆனாலும் சொல்ல வேண்டுந்தானே!
 
"சித்தி போன் பண்ணினவ"
 
"என்னவாம்..?"
 
"சும்மாதான்..." சொல்ல முடியாமல் இழுத்தேன்.
 
பின்னர் சொன்னேன் "சபா... பூநகரி அற்றாக்கிலை போயிட்டானாம்"
 
"சும்மா சொல்லாதைங்கோ" சிரிக்கிறாளா? அழுகிறாளா? என்று யோசிக்கையில் அவளின் கேவல். தொலைபேசியை வைத்து விட்டேன்.
 
அந்தச் செய்தியை அவளிடம் சொல்லியதற்காக சிலமணி நேரங்கள் அப்படியே இருந்து அழுதேன். அந்தக் ‘கேவல்‘ மாதங்கள், வருடங்களாக என்னை அழ வைத்தது.
 
பின் எனது பெரிய தம்பியை அழைத்து... பிள்ளைகள் பாடசாலையால் வர அவர்களுக்கு... இரவு கணவர் வர அவருக்கு...
 
அதன் பின் தம்பி இறந்ததற்காகவா அல்லது ஒவ்வொருவரிடமும் அந்தக் கொடிய செய்தியை நானே சொல்ல வேண்டி வந்த நிர்ப்பந்தத்திற்காகவா என்று தெரியாமலே நான் அழுது கொண்டிருந்தேன்.
 
சந்திரவதனா
11-11-2023
 
(தம்பிமார், அக்காமார்களுக்குக் கிடைத்த கொடைகள். அவர்களிடம் பட்ட அன்புக் கடனைத் தீர்த்து வைக்கும் பாக்கியம் எல்லா அக்காமாருக்கும் வாய்த்து விடுவதில்லை)

Friday, November 10, 2023

மூன்று சுற்று

நான் தொங்கித் தொங்கி கயிறடித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுதொன்றில் அம்மா கூப்பிட்டுச் சொன்னா "குக்கருக்கு மண்ணெண்ணெய் முடிஞ்சுது, ஒடிப்போய் வாங்கிக் கொண்டு வா" என்று.

அப்போது எனக்கு பத்து வயது இருக்கலாம். அல்லது அதை விடக் குறைவாகவும் இருக்கலாம். நினைவு படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் என்னைக் கடைக்கு அனுப்புவதை மெதுமெதுவாகக் குறைக்கும் வயதாகிக் கொண்டிருந்தது என்பது மட்டும் நல்ல ஞாபகம்.

அப்போதெல்லாம் அம்மா ஒரு வேலை சொன்னால் அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் பழக்கம் எங்களிடம் இருந்ததே இல்லை. கூப்பிட்டால் "ஓம், என்னம்மா?" என்று கேட்பதும் ஒரு வேலை சொன்னால் உடனே அதைச் செய்ய முனைவதும் இயல்பாகவே இருந்தன.

அதிலும் வெளியில் போய் செய்யும் ஒரு வேலையென்றால், அதை நான் மிகச் சந்தோசமாகவே செய்வேன். அப்பாச்சி வீட்டுக்கு ஏதாவது கொண்டு போய்க் கொடுப்பது, வட்டப்பாதிக்கு பிண்ணாக்கு வாங்கப் போவது, புதியாக்கணக்கனுக்கு நல்லெண்ணெய் வாங்கப் போவது... என்று எதற்கு அனுப்பினாலும் எனக்குச் சந்தோசம். வழிவழியே கிளுவங்காய், மாங்காய், புளியங்காய், இலந்தைக்காய்... ஒன்றும் ஆப்பிடாவிட்டால் அண்ணாமுண்ணாப் பூ என்று எதையாவது பிடுங்கிச் சாப்பிட்டுக் கொண்டு, அண்ணாமுண்ணாப் பூ எந்த வடிவில் இருக்கிறது! கிளிசரியாப்பூக்களெல்லாம் எப்படி இவ்வளவு அழகாக இருக்கின்றன! யார் யார் வீட்டுக்குள் எல்லாம் அழகழகான பூச்செடிகள் இருக்கின்றன... என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு போவது பெரும் ஆனந்தம்.

அம்மா சொல்லித்தான் அனுப்புவா "உந்த வேலி, விராயளோடை நிண்டு, கரட்டி, ஓணானோடையெல்லாம் கதைச்சுக் கொண்டிராமல், கொண்டு போய்க் குடுத்திட்டு ஓடிவா" என்று.

அம்மா சொல்லும் போது என் மனதிலும் ‘போறதும் வாறதும்‘ தான் இருக்கும். வீதியில் இறங்கிய உடனேயே மனசு பறக்கும். மூளை எல்லாவற்றையும் மறந்திடும். அதுவும் அப்பாச்சி வீட்டுக்குப் போகும் வழியில் வேலி முழுக்கக் கிளுவங்காய். அதில் இரண்டையாவது பிடுங்கி வாயில் போடாமல் அங்காலே போக மனசு வராது. அப்பாச்சி வீட்டுக்குள் போனால் அங்கு அப்பாவின் தம்பி பரமகுருக்குஞ்சையா நிறையப்புத்தகங்கள் வைத்திருப்பார். அதில் ஒன்றையாவது எடுத்து, ஒரு கதையையாவது வாசிக்காமல் திரும்பவும் மனசு விடாது. மேசையிலேயே ஏறியிருந்து வாசிப்பேன்.

அப்பாச்சிக்கு என்னைப் பற்றித் தெரியும். "ஓடு பிள்ளை, அங்கை கொம்மா பேசப் போறா" என்பா.

அதுக்குப் பிறகுதான் சட்டென்று விழித்தது போல எழுந்து, மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடி, வீடு வந்து சேர்வேன்.

இன்று அம்மா அப்படியொன்றும் சொல்லவில்லை. நான் கொஞ்சம் வளர்ந்து விட்டேன். ‘பொறுப்பாய் இருப்பேன்‘ என்று நினைத்தாவோ என்னவோ. "சங்கக்கடை பூட்டீடும். கெதியாப்போய் வாங்கிக்கொண்டு வா" என்று மட்டும் சொன்னா.

"சைக்கிள்ளை போயிட்டு வாறனம்மா" என்றேன்

"நாலெட்டு நடக்கிற கடைக்கு என்னத்துக்குச் சைக்கிள்?" என்று சொன்ன அம்மாவுக்கு, ‘சைக்கிள் ஓடுவதென்றால் எனக்கு நல்ல விருப்பம்‘ என்பது தெரியும். "சரி எண்ணையோடை சேர்ந்து கவிண்டு விழாமல், கவனமாப் போட்டு வா" என்றா.

உண்மையிலேயே எங்கள் சங்கக்கடை எங்கள் வீட்டிலிருந்து நாலெட்டு நடை தூரத்தில்தான் இருக்கிறது. எங்கள் வீட்டைத் தாண்டினால் இருபக்கமும் ஒவ்வொரு ஒழுங்கைகள் பிரிகின்றன. அதையடுத்து இடது பக்கம் உபதபாற்கந்தோரும் வலது பக்கம் பாம்புப் புற்றுகள் நிறைந்த ஒரு பெரிய புளியங்காணியும் இருக்கின்றன. அந்த ஒரேயொரு புளியங்காணியைத் தாண்டினால் ஆத்தியடிச்சந்தி வந்து விடும். வலது பக்கம் திரும்பினால் உடனே சங்கக்கடை. இதற்குச் சைக்கிள் தேவையே இல்லை.

ஆனாலும் சைக்கிளில்தான் போனேன்.

ஆத்தியடிச் சந்தி வரை மண்ணெய் வாங்குவது மட்டுந்தான் என் மூளைக்குள் இருந்தது. சந்தியடிக்கு வந்த போதுதான் எல்லாம் மாறியது. நேரே ஆத்தியடி வெட்டையில் வாசுகியும் சிவாவும் சைக்கிள்களுடன் நின்றார்கள். அது ஆத்தியடிக்கோயில் வீதி. ஏன் அதை வெட்டை என்று சொல்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அதுபற்றி நான் அப்போதெல்லாம் சிந்தித்ததும் இல்லை.

வாசுகியும் சிவாவும் என்னை நோக்கி வர நான் அவர்களை நோக்கி சைக்கிளை உழக்கினேன்.

இருவரும் எங்கள் ஊர். எங்கள் சொந்தம். அதற்கு மேலால் வாசுகி என் பாடசாலை நண்பி. பெரும்பாலான பொழுதுகளில் இருவரும் ஒன்றாகவே பாடசாலைக்குப் போய் ஒன்றாகவே திரும்புவோம். சிவாவின் வீடு எங்கள் வீதியிலேயே நாலைந்து வீடுகள் தள்ளி உள்ளது.

விடலைப்பெண்கள் மூவர். எங்களையே மறந்து கொஞ்ச நேரம் கதைத்தோம். பிறகு கோயிலைச்சுற்றி ஆத்தியடி வீதியில் மூன்று சுற்று சைக்கிள்களில் சுற்றி வருவதாகத் தீர்மானித்தோம்.

சைக்கிளில்தானே! உடனே முடிந்து விடும். மனசு சொல்லியது. தொடங்கினோம். மனசு ஆனந்தத்தில் பறந்தது. மூன்று சுற்று பத்து, பதினைந்து இருபதாகப் போய்க் கொண்டிருந்தது. முதலில் கோயிலோடு சேர்ந்து சின்னச்சுற்றாகச் சுற்றிக் கொண்டிருந்த நாங்கள் இப்போது கோயில் வீதியின் வடக்கு எல்லைவரைக்கும் - தெற்குஎல்லைவரைக்குமாய் எங்கள் சுற்றுக்களைப் படுபயங்கரமாகப் பெருப்பித்திருந்தோம். பொழுது மம்மலாகியதோ இருட்டிக் கொண்டு வந்ததோ எங்களுக்குத் தெரியவேயில்லை.

அப்படியே ஒருதரம் தெற்கு வீதிக்கு வந்த போது சந்தியடியில் தம்பி பார்த்திபன் நிற்கிறான். ‘ஏன் இவன் வந்திருக்கிறான்!?‘ சட்டென்று உறைத்தது. சைக்கிளை நிற்பாட்டி அவனிடம் போன போது "அம்மா மண்ணெண்ணெய்க்கு காத்துக் கொண்டிருக்கிறா. உடனை கூட்டிக் கொண்டு வரச்சொன்னவ" என்றான்.

எல்லாம் போச்சு! சங்கக்கடையை எட்டிப் பார்த்தேன். பூட்டி விட்டது. பயத்துடன் தம்பியையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனேன்.

குக்கரைப் பற்ற வைக்க முடியாத அம்மா ஈரவிறகைப் பற்ற வைப்பதற்காக புகைந்து கொண்டிருக்கும் அடுப்பை ஊதிக் கொண்டிருந்தா.மண்ணெய் வேண்டுப்படவில்லை‘ என்றதும் திரும்பி ஒரு பார்வை என்னைப் பார்த்தா. ‘அந்தப் பார்வை ஒன்றே போதும்‘ பேசவோ, அடிக்கவோ தேவையில்லை.

நான் குற்ற உணர்வில் குறுகிப் போனேன்.

அதற்குப் பிறகெல்லாம் நான் வெளியில் போகும் போது, வேலி, விராய், கரட்டி, ஓணான் இவைகளோடு வாசுகி, சிவா அவர்களையும் சேர்த்து என்னை எச்சரித்து அனுப்புவதற்கு அம்மா மறந்ததில்லை.

சந்திரவதனா

10.11.2023

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite