அந்த இளம் ஜோடிகளை இப்போது சில நாட்களாக அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்தேன். வழமையில் மாலையிலோ அன்றி விடுமுறை நாட்களிலோதான் அவர்களை ஒன்றாகக் காண முடியும். அதுவும் அவசரமாக எங்காவது ஓடிக் கொண்டிருப்பார்கள். அல்லது சுப்பர்மார்க்கெட்டிலோ, அல்டியிலோ வீட்டுச் சாமான்கள் வாங்கிக் கொண்டிருப்பார்கள். படிப்பு, வேலை இவைகளின் மத்தியில் அனேகமானவர்கள் போல் அவர்களாலும் அப்படித்தான் வாழ முடிந்திருக்கிறது.
இந்தச் சில நாட்கள் மட்டும் இருவரும் மிகவும் சந்தோசமாகவும், ஆறுதலாகவும் ஐஸ்கிரீம் பாரிலும், கோப்பிக் கடைகளிலும், பார்க்குகளிலும்.. என்று அடிக்கடி என் கண்களில் தென்பட்டுக் கொண்டே இருந்தார்கள். ´ஒருவேளை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களோ!` என்ற எண்ணம் எனக்குள். ஒன்றாக, ஒரு வீட்டிலே சில வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், இருவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நான் அறிந்து வைத்திருக்கிறேன். இரவில் பகுதி நேர வேலைகளும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நேற்று வேலைக்குப் போகும் போது நான் வேலை பார்க்கும் வங்கியோடு சேர்ந்த நீண்ட படிக்கட்டுகளில் இருவருமாக ஒருவரையொருவர் அணைத்தபடி, உதடு பதித்து முத்தமிட்டுக் கொண்டும், கலகலவென்று சிரித்துக் கொண்டும் அமர்ந்திருந்தார்கள். என்னைக் கண்டதும் சிரித்துக் கொண்டு நலம் விசாரித்தார்கள்.
நன்றி கூறி நானும் நலம் விசாரித்து விட்டு “என்ன விடுமுறையா, இருவரும் இத்தனை றிலாக்சாக இருக்கிறீர்கள்..?“ கேட்டேன்.
“ம்.. ம்.. நாங்களாக விடுமுறை எடுத்திருக்கிறோம்“ என்றார்கள் அர்த்தமுள்ள முறுவலாடு!
என்ன திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா?
“இல்லை, இல்லை. எமக்குள் சரிவரவில்லை. பிரிந்து விடப் போகிறோம்“ என்றார்கள் கோரசாக.
என் கண்கள் ஆச்சரியத்தில் விரிய “அதுதான் நாங்கள் ஒன்றாக இருக்கப் போகும் இந்த இறுதி வாரத்தை சந்தோகமாகவே கழிக்கிறோம்“ என்றார்கள்.
சந்திரவதனா
15.10.2010