Thursday, May 28, 2020

`மே´ மாதம்

ஆங்கில ஆசிரியர், கவிஞர், த.ஈ.வி.பு. புலனாய்வுத்துறை
இப்போது வந்து போகும் `மே´ மாதங்களிலெல்லாம் மனதை ஒருவித சோக அலை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும். சமயங்களில் வாழ்க்கை ஸ்தம்பித்து நிற்பது போல் தோன்றும். அவ்வப்போது குற்ற உணர்வுகள் மனசைப் பிடுங்கி எடுக்கும். ஏகாந்தப் பொழுதுகளில் என்னையறியாமலே மனம் கண்ணீர் உகுக்கும்.

எல்லோருக்கும் இப்படித்தானா? அல்லது நான் மட்டுந்தான் இப்படி மனதுழன்று தவிக்கிறேனா?

என் தம்பி மொறிஸ் இப்படியொரு `மே´ மாதத்தில்தான் (01.05.1989) மரணத்தை விட மேலானதோர் பெருந்துயர் இவ்வுலகில் இல்லை என்பதை எனக்கு உணர்த்தி விட்டுச் சென்றான். அதுவும் பிரிய உறவொன்றின் மரணம். அது தரும் துயர். அதை முழுமையாக எழுதித் தீர்த்து விடவோ, சொல்லித் தீர்த்து விடவோ எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை. Whatsapp, Viber, Facebook, Messenger, Mobil எதுவுமே இல்லாத, ஊருக்கு நினைத்த மாத்திரத்தில் தொலைபேசக்கூட முடியாத ஒரு பொழுதில்தான் அந்தத் துயரம் நடந்தேறியது. இப்போதும் கூட அந்த நாட்களின் துயர் பெரும் அலையென எழுந்து என் மனதை உலைக்கிறது.

என்னதான் வேறு விடயங்களில் மனதை ஈடுபடுத்திக் கொண்டாலும் மற்றவர்களோடு கதைத்தாலும் சிரித்தாலும், உள்ளுறங்கும் இத்துயர் மீண்டும் மீண்டுமாய் விழித்தெழுந்து மனதை அலைக்கிறது.

என்னையே நான் ஆற்றுவது போல என் பிரிய சகோதரர்கள் பற்றிய மற்றையவர்களின் பதிவுகளையெல்லாம் தேடித் தேடிப் படித்து, மனம் கலங்கி, விழி கசிந்து, இப்படியெல்லாம் இருந்தார்களா என எனக்குள் நானே பெருமை கொண்டு, அவைகளை எனது கணினியிலும் பத்திரப்படுத்தி, எனது இணையத்தளத்திலும் பதிவேற்றி, இங்கு Facebookஇலும் பதிந்து விட்டு மீண்டும் சோர்ந்து போய் விடுகிறேன். அவர்கள் உயிரோடு வாழ்ந்த போது எனக்குத் தெரியாத இந்த விடயங்களை இப்போது நானறிந்துள்ளேன் என்பதை அறிந்து கொள்ளக் கூட இந்த உலகின் எந்த மூலையிலும் அவர்கள் இல்லாத போது நான் அறிந்தென்ன விட்டென்ன?

என் அண்ணனும் இதே `மே´ மாதத்தில்தான் (13.05.2000) ஆற்றொணாத் துயரைத் தந்து விட்டுச் சென்றார். அப்போது அம்மாவும் ஜெர்மனிக்கு வந்து விட்டிருந்தா. நானே ஆற்றாமையில் வீழ்ந்து கிடந்து போது அம்மாவை எப்படித் தேற்றுவது என்று தெரியாது தவித்திருந்த பொழுது அது. அண்ணன் 1990 இல் `ஷெல்´ தாக்குதலில் உடலால் ஊனமுற்றதோடு மனதாலும் பெரிதும் ஒடிந்து போனார். அவர் இறக்கும் வரையான அந்தப் பத்து வருட காலத்தில் கடிதங்களில்தான் நானும் அண்ணனும் பேசினோம். பக்கம் பக்கமாக இருவருமே மாறி மாறி எழுதினோம். அந்த நேரத்தில் தொலை பேசுவது அந்தளவு சாத்தியமானதாக இருக்கவில்லை. ஓரிரு தடவைகள் சொல்லி வைத்து அண்ணனை யாராவது வற்றாப்பளையிலிருந்து மல்லாவி வரை கூட்டி வந்து, லைன் கிடைக்காமல் காத்து நின்று சில நிமிடங்கள் பேசினோம். அந்தப் பேசலுக்காக பின்னர் நூற்றுக்கணக்கில் ரெலிபோன் கட்டணம் கட்டியது வேறு விடயம். அப்படிப் பேசிய பொழுதுகளில் இயக்க சம்பந்தமான விடயங்களையோ, இரகசியங்களையோ பாதுகாப்புக் கருதி பேசாது தவிர்த்துக் கொண்டோம். எழுதிய கடிதங்களில்தான், தான் தீட்சண்யன் என்ற பெயரில் பொட்டம்மானிடம் வேலை செய்வதாகவும், மிகுதியான விபரங்கள் எதையும் எழுத முடியாதிருக்கிறதென்றும் குறிப்பிட்டிருந்தார். எப்போதாவது ஆற அமர இருந்து எல்லாவற்றையும் பேசுவோம் என்ற எனது கனவும் இந்த `மே´ மாதத்தில்தான் கனவாகியே போனது. அதன் பின்தான் தேசியத்தலைவரைச் சந்தித்த போதும், மற்றைய தளபதிகள், போராளிகளிடமிருந்தும், அண்ணனின் நண்பர் கவிஞர் நாவண்ணனிடமிருந்தும் அண்ணனின் செயற்பாடுகள் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொண்டேன்.

2002 இல் வன்னிக்குச் சென்ற போது வற்றாப்பளையில் இருந்த, அண்ணன் இல்லாத என் அண்ணனின் வீட்டுக்கும் சென்றேன். அதுவும் இதே `மே´ மாதம். இதே 27ம் நாள். (27.05.2002)

அது ஒரு பெருந்துயரம். வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரம். மனமெல்லாம் முட்டியிருந்தது அந்தத் துயரம். அண்ணனின் பிள்ளைகள் „இது அப்பா இருந்து கதைக்கும் இடம், இது அப்பா இருந்து எழுதும் இடம், இது அப்பா எப்போதும் இருக்கும் இடம், இது அப்பாவின் கதிரை...“ என்று ஒவ்வொன்றாக எனக்குக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அண்ணனின் வீட்டில் எல்லாமே இருந்தன. என் பிரிய அண்ணனை மட்டும் காணவில்லை. தாங்கொணாத் துயரது.

(திரும்பும் போது அண்ணன் சேர்த்து வைத்திருந்த போராட்டம் சம்பந்தமான புத்தகங்களையும், அண்ணனின் கவிதைகளையும் என்னோடு எடுத்துக் கொண்டேன். அந்தப் புத்தகங்கள் எனக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எல்லோருமே எச்சரித்தார்கள். ஆனாலும் ஒரு வித அசட்டுத் துணிச்சலுடன் தடைகளையும் தாண்டி அவைகளை நான் ஜெர்மனி வரை கொண்டு வந்து சேர்த்தேன்)

அண்ணனுக்கு முன்னமே எனது மற்றைய தம்பி மயூரனும் பூநகிரியில் காவியமாகி விட்டான். அவன் ஒரு முறை „Frontline (Magazine) இல் என்னைப் பார்த்தீர்களா மூத்தக்கா?“ என்று கேட்டு எழுதியிருந்தான். அப்போது நான் Frontlineக்கு எங்கு போவேன்? இப்போது மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் அவன் நிற்கும் அந்தப் (Frontline முன்னட்டைப்படம்) படம் இணையத்தில் ஆங்காங்கு பதியப் பட்டுள்ளது. „பார்த்தேனடா அந்தப் படத்தை“ என்று எப்படி நான் அவனிடம் சொல்வேன்?

2009 பெப்ரவரியில் அண்ணனின் மகன் பரதனும் போய் விட்டான். அவனும் போன பின் வந்த அந்த முள்ளிவாய்க்கால் `மே´ அது ஏமாற்றத்தின் உச்சம்.

சந்திரவதனா
27.05.2020

Monday, May 25, 2020

CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை


நான் என்னும் பெருங்கனாக் கொண்ட உமையாழின் எழுத்துக்கள், சில வருடங்களின் முன், Facebookஇன் மூலந்தான் எனக்கு அறிமுகமாயின. வழமையாக எனக்குக் கிடைத்த எழுத்துக்களிலிருந்து மாறுபட்ட, சுவாரஸ்யமான அந்த எழுத்துக்களைதேடித் தேடி வாசித்தேன். பிரித்தானியாவில் குடியேற முன்னர் ஆறாண்டு காலம் சவுதியில் வாழ்ந்த உமையாழ் தான் வாழ்ந்த அந்த சவுதியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தையும் அப்போது தொடராக எழுதினார்.  அதை மிகுந்த ஆர்வத்தோடு காத்திருந்து காத்திருந்து வாசித்தேன். 

இதேநேரம் இந்த `உமையாழ்´ என்ற பெயரும் பெண்கள் பற்றிய உமையாழின் பதிவுகளும் இவரொரு பெண்ணா ஆணா என்ற குழப்பத்தையும் அவ்வப்போது என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன.  

எதுவாயினும் எவராயினும் என்ன? உமையாழின் எழுத்துக்கள் எனக்குப் பிடித்தன. ஒன்று விடாமல் படித்துத் தீர்த்தேன்.

அந்த வகையில் சில ஆண்டுகள் கழித்து என் கரம் கிட்டிய உமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை` நூலை பெரும் எதிர்பார்ப்புடனேயே கையில் எடுத்தேன்.

அட்டைப்படம் ஆர்ப்பட்டமில்லாத, அமைதியானதொரு நீரோவியம். அதை வரைந்தவர் பற்றியோ, வடிவமைத்தவர் பற்றியோ எந்த ஒரு குறிப்பையும் புத்தகத்தில் காணவில்லை. ஒருவேளை றஷ்மியாக இருக்கலாம்.

பின்னட்டையில் உமையாழின் படத்துடன்
எங்களூரின் மொழியும், இந்தத் தமிழை நாங்கள் உச்சரிக்கும் முறையும் எனக்கு எப்போதும் உவப்பானது. கொஞ்ச நாட்களாக என்னுடைய தனிப்பட்ட பாவனையில் இருந்து நழுவிக்கொண்டிருக்கும் அந்தத் தமிழை, எழுதிக் கடக்கிற போது நான் அடைகிற ஆனந்தம் அளவிட முடியாதது. அவற்றின் எச்சங்களை நான் பதிவுசெய்ய வேண்டாமா! போலவே அரேபிய பாலைவனங்களில் அலைந்த திரிந்த ஆறாண்டுகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளும் ஆச்சரியங்களையும் நான் எங்கே போய் வெளிப்படுத்துவேன்! இப்போது, நீலக்குளிர் பிரதேசம் எனக்குள் பொழிகிற, உறைய வைக்கும் இந்தக் குளுமை எனக்கானதுதானா! அல்லது நான் வேரோடிஎனது கரையை போய்ச் சேர்ந்து விட வேண்டுமா?
கடந்து வந்த நிலமெல்லாம் பெரும் ஆச்சரியங்கள்தான். ஆகவே நிலங்களை எழுதுவதுதான் எனது பணியாக இருக்கிறது. அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்தக் கதைகளுக்குள் உலவுகின்ற மனிதர்கள் எங்கிருந்து வந்து சேர்ந்தவர்கள்!  அவர்களுக்கும் எனக்குமான பந்தம் என்ன என்கிற கேள்விகள்தான் என்னை அலைக்கழிக்கின்றன.
என்ற உமையாழின் மனவரிகள் பதியப் பட்டிருக்கின்றன.

உள்ளே  அர்த்தங்களிலிருந்தான விடுதலை என்ற தலைப்பில் உமையாழின் நூல் பற்றிய முகவுரையோ அணிந்துரையோ நன்றியுரையோ ஏதோ ஒன்று உமையாழினால் எழுதப்பட்டுள்ளது. 

பெரும்பாலும் நான் முகவுரை, அணிந்துரை, பதிப்புரை... போன்றவைகளை கடைசியாகவே படிப்பேன். அதனால் அதைக் கடந்து நூலைப் படிக்கத் தொடங்கினேன். உள்ளே சிறிதும் பெரிதுமாக ஒன்பது கதைகள் தொகுக்கப் பட்டுள்ளன.

கிழக்கிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட உமையாழ் அந்தக் கிழக்கிலங்கையின் ஒரு ஊரையும், அங்கு வாழ் மக்களின் இயல்புகளையும், பழக்கவழக்கங்களையும் தொகுப்பின் முதற்கதையான ´ஊர்க்கத` யினூடு எம்முன் விரிக்கிறார். 

முந்தைய காலத்தில், அனேகமான எங்களுக்குச் சொல்லப்பட்ட கதைகள் `ஒரு ஊரில் ஒரு இராஜா/அரசன் இருந்தான்´ என்றோ அல்லது `ஒரு ஊரில்  ஒரு இராணி இருந்தாள்´ என்றோ தான் தொடங்கியிருக்கின்றன. இங்கே இந்தக் கதை அப்படித் தொடங்கவில்லை. `மூன்றாவதாகவும் பிறந்த பெண்குழந்தையை ஏற்கெனவே தோண்டியிருக்கும் குழியில் போட வேண்டிய சடங்கை தந்தையே செய்ய வேண்டும்...´ இப்படித்தான் தொடங்குகிறது. கி.மு நான்காம் நூற்றாண்டுக் கதையை மடியில் படுத்திருக்கும் 13-14 வயது நிரம்பிய உமையாழுக்கு சாலியாப் பெரியம்மா சொல்லத் தொடங்குகிறா. (கதையை தன்னிலையில் இருந்து உமையாழ் எழுதியதால்  அந்தச் சிறுவன் உமையாழ்தான் என மனம் எண்ணிக் கொண்டது) கதை சொல்லும் சாலியாப் பெரியம்மாவைப் பற்றிய விவரணங்களோடு,  இஸ்லாமிய மதத்தவர்கள் வாழும் ஒரு ஊரின் கதை, அதன் பேச்சு வழக்கு, அங்கு வாழ் மக்களின் வாழ்க்கைமுறை... என்று பலவிடயங்களையும் கதை சொல்லி விடுகிறது.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite