Showing posts with label தாயகப் பயணம். Show all posts
Showing posts with label தாயகப் பயணம். Show all posts

Monday, November 02, 2015

தமிழ்செல்வனுடன்


தமிழ்செல்வனுடன் அரசியல்துறை அலுவலகத்தில் 
28.05.2002
தமிழ்செல்வனுடன் அரசியல்துறை அலுவலகத்தில் 28.05.2002

 தலைவர் பிரபாகரனுக்கும் எமக்கும் இடையில் ஒரு பாலமாக எப்போதும் இருந்தவர் தமிழ்செல்வன். தமிழ்செல்வனை முதல் முதல் நான் வன்னியில் 2002 மே மாதத்தில் சந்தித்த போது அவர் அதே சிரிப்புடன், எப்போதும் நாம் பத்திரிகைகளிலும், ஒளி நாடாக்களிலும் பார்த்தவர் போலவே என்னை எதிர் கொண்டார். அக்கா..! அக்கா..! என்று உரிமையோடு அழைத்து அன்போடு பேசினார். அவரது அன்பும், பழகும் தன்மையும் எனக்கு ஆச்சரியமான சந்தோசத்தையே தந்தன.

நாங்கள் வன்னியில் வெண்புறாவில் நின்ற சமயத்தில் அடிக்கடி வந்து எம்மைச் சந்தித்து எமக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். எப்போது வந்தாலும் அக்கா.. என்ற படி வந்து என்னோடு பேசி விட்டுத்தான் செல்வார்.

ஒருதரம் கதையில் சொன்னார் "மொறிஸ் வடமராட்சிக்கும், நான் தென்மராட்சிக்கும் பொறுப்பாய் இருந்தோம். நான் இங்கு வந்து விட்டேன். மொறிசும் வருவதாகத்தான் இருந்தது. அதற்கிடையில் மாவீரனாகி விட்டார்" என்று.

எம்மோடு அவருக்கு 2002 இலிருந்து மின்னஞ்சல் தொடர்புகள் இருந்தன. அலெக்ஸ்சும், வசந்தனுமே அவரது மின்னஞ்சல்களை அவரது பெயரில் எனக்கு அனுப்பி வைப்பார்கள். ஒவ்வொரு மின்னஞ்சலுமே அன்புடன் அக்காவுக்கு... என்றுதான் தொடங்கியிருக்கும். அன்புடன் சகோதரன், சு.ப. தமிழ்ச்செல்வன் என்று முடித்திருப்பார்.

அலெக்சும், வசந்தனும் ஒரே நபர்களா என்ற சந்தேகம் எனக்கு இடையிடையே ஏற்பட்டதுண்டு. பின்னர் ஒரு தடவை ஜேர்மனி, ஸ்ருட்கார்ட் நகரில் அலெக்சுடன் அருகில் இருந்து கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தமிழ்செல்வன் ஜேர்மனிக்கு வரும் போதுகளில் மின்னஞ்சல் மூலம் அறிவித்து விட்டுத்தான் வந்தார். வந்து நின்ற போதும் தொலைபேசியில் அழைத்து பலதடவைகள் கதைத்தார். நாங்கள் அவரை நேரே சென்றும் சந்தித்தோம். (ஒரு தடவை சந்தித்த போது பாலா அண்ணையும் கூட இருந்தார். பாலாண்ணை எனது தம்பி மயூரனை நன்கு அறிந்து வைத்திருந்தார்)

இறந்தாலும் இறவாது
நினைவுகளில் என்னோடு வாழ்பவர்களில்
தமிழ்செல்வனும் ஒருவர்.

கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு என்பது போல
சிலர் பற்றி சொல்ல முடிவது சிறிதே. சொல்லாதவை பெரிது.

சந்திரவதனா
02.11.2015

Wednesday, October 14, 2015

செல்வா




தலைவர் பிரபாகரனை முதல்முறை(30.05 2002 ) சந்தித்த பொழுது, “பிபிசி தமிழ்ச் சேவையில் விவரணம் ஒன்றின் போது உறுதியோடு பேசிய, 14 வயதிலேயே இரண்டு கைகளையும் இழந்த ஒரு பெண்ணை நவம் அறிவுக்கூடம் போயும் சந்திக்க முடியாது போய் விட்டது என்று ஆதங்கப் பட்டேன்.

„நீங்கள் சொல்லுறது செல்வாவை எண்டு நினைக்கிறன். அவ நவம் அறிவுக் கூடத்திலை இல்லை. இங்கை கிட்டத்தான் இருக்கிறா” என்றார்.

„அந்தப் பிள்ளையை சந்திக்க வாய்ப்பிருக்கோ?“ கேட்டேன்.

„இப்பவே சந்திக்கலாம். பத்து நிமிசத்துக்குள்ளை ஆள் வந்திடும்” என்றார்.

அவர் சொன்ன படி பத்தாவது நிமிடத்தில் கையில்லாத போதும் மனவலிமையோடு வாயாலும், காலாலும் எலக்ரோனிக் துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் செல்வா அங்கே நின்றாள்.

என் விருப்பத்துக்கு அமைய வாயால் ஒரு கவிதை எழுதித் தந்தாள். வியப்பாக இருந்தது.

சந்திரவதனா
12.10.2015

Friday, July 24, 2015

வலன்ரீனா

இன்றாவது அவளைப் பற்றி நான் எழுதி விட வேண்டும். 13 வருடங்களாக மன இடுக்குகளில் ஒளிந்திருப்பவள்.

அவள் ஒரு சிங்களப் பெண். பெயர் வலன்ரீனா. மிகவும் மென்மையாகப் பேசத் தெரிந்தவள்.

இடுப்பில் குடத்துடன் தண்ணீர் மொண்டு கொண்டு செல்ல வந்திருந்தாள். பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு அவளைப் பிடித்துப் போயிருந்தது. அவளுக்கும் என்னைப் பிடித்திருந்தது என்றுதான் நினைக்கிறேன். கிணற்றிலிருந்து தண்ணீரை மொண்டு குடத்தை நிரப்பும் போதும் சரி, குடத்தை இடுப்பில் வைத்துத் திரும்பும் போதும் சரி என்னுடன் கதைத்துக் கொண்டே இருந்தாள். எனது அந்தரமான மனநிலை பற்றி அவளுக்கு ஏதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

„தம்பி விடுதலைப்போரில் மாவீரனாகி விட்டான்“ என்றாள். ஆச்சரியம் மேலிட „எங்கே நடந்தது?“ என்று கேட்டேன். தாங்கள் முதலில் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகவும் அங்கு நடந்த போரில்தான் தம்பியை இழந்ததாகவும் சொன்னாள். விடுதலைப்புலிகள்தான் தமக்கு இப்போது இங்கே பாதுகாப்புத் தந்திருக்கிறார்கள் என்றாள்.

நான் எனது தம்பிமாரைப் பற்றியும் சொன்னேன்.

உடனே அவள் „நானும் அம்மாவும் மட்டுந்தான் அங்கே எங்கள் வீட்டில் தனியாக வசிக்கிறோம். ஒருக்கால் வந்து விடு. உன்னைப் பார்த்தால் எனது அம்மா மிகவும் சந்தோசப் படுவாள்“ என்றாள்.

இப்போது ஒரு முக்கியமான விடயத்துக்காகக் காத்திருப்பதால் வர முடியாத சங்கடமான நிலையில் உள்ளேன் என்பதைச் சொன்னேன். என்ன விடயம் என்று சொல்லி விடலாமா என்று கூட யோசித்தேன். எனது தயக்கத்தைப் பார்த்து „கனதூரம் இல்லை. பக்கத்தி லைதான் வீடு“ அவள் மீண்டும் மீண்டுமாய் வலிந்தழைத்தாள். ஒரே ஒரு தடவை வரும்படி இரந்து கேட்டாள்.

நான் அவள் காட்டிய பக்கம் பார்த்தேன். எந்த வீடும் என் கண்களுக்குத் தெரியவில்லை. எல்லா வீடுகளுமே அங்கு ஒளித்து வைக்கப்பட்டிருந்தனவோ?

„உடனை போயிட்டு வந்திடலாம்“ என்றாள்.

அவளது அன்பான வேண்டுதலும், கனிவான பேச்சும், என்னைத் தன் அம்மாவிடம் அழைத்துப் போக வேண்டுமென்ற ஆர்வமும், ஆவலும் அதீதமானதாகவே இருந்ததால் என் மனது மிகவும் சஞ்சலப்பட்டது. ஒருக்கால் போயிட்டு வருவோமா என்ற எண்ணம் என்னை உந்திக் கொண்டே இருந்தது. ஆனாலும் போகவில்லை.

அன்று 30.05.2002 தலைவர் பிரபாகரனைச் சந்திப்பதற்காக கிளிநொச்சி வெண்புறாநிலையத்திலிருந்து புறப்பட்டு இடையில் மரங்களும், செடிகொடிகளும் நிறைந்து மறைந்திருந்த ஒரு குடிசையடியில் அடுத்து வரப்போகும் வாகனத்துக்காகக் காத்திருந்தோம். வாகனம் வருமா? எப்போது வரும்? அல்லது பிரபாகரனே அங்குதான் வரப்போகிறாரா? என்று எத்தனையோ கேள்விகள் தொக்கி நிற்க காத்திருந்த அந்த வேளையில்தான் வலன்ரீனா அங்கே குடத்துடன் வந்தாள். மிகவும் மெல்லிய, சிறிய, அழகிய, இளம் சிங்களப் பெண்.

இன்றும் கூட எனக்குள் ஒரு வேதனை. அவளது ஆசைக்கு இணங்கி ஒரு தரம், ஒரே ஒரு தரம் போய் அவளது அம்மாவைச் சந்தித்திருக்கலாமே என்று.

சந்திரவதனா
24.7.2015

Friday, August 08, 2008

நிழற்குடை


2002 இல் நாம் வன்னிக்குச் சென்ற போது கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்திருந்த வெண்புறா செயற்கை உறுப்பு தொழில் நுட்ப நிறுவனத்தில்தான் தங்கினோம்.

வெண்புறா நிறுவனத்துக்கு அப்போது பொறுப்பாக இருந்தவர் வீரன். வெண்புறாவில் பணி புரிந்த, சிகிச்சை பெற்ற, தங்கியிருந்த அனைத்து உறவுகளையும் போலவே வீரனும் எங்களுடன் அன்போடு பழகினார். அந்த நிறுவனத்தில் இருந்த பல பேரையும் போல வீரனுக்கும் ஒரு கால் செயற்கைக்காலாகவே இருந்தது. ஆனாலும் செயற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன.

அந்த சமயத்தில்தான் வற்றாப்பளைப் பொங்கல். வெண்புறா உறவுகள் அத்தனை பேரும் அங்கு போவதாகத் தீர்மானித்தார்கள். ஒரு வான் பிடித்து எல்லோருமாகப் புறப்பட்டோம். கரடு முரடான ஏ9 பாதையில் ஆரம்பித்த அந்தப் பயணம் ஒரு இனிமையான பயணம். அந்தப் பயண அனுபவத்தைத் தனியாக எழுதலாம்.

முல்லைக் கடற்கரையில் (வைகாசி 2002)

போகும் போது முல்லைக் கடற்கரைக்குச் சென்று அங்கிருந்து வீரனின் வீட்டுக்குச் சென்று அவரின் மனைவியையும், குழந்தையையும் பார்த்து விட்டுப் போவதாகத்தான் தீர்மானித்திருந்தோம். அது வீரனின் விருப்பமும் கூட. முல்லைக் கடற்கரையில் சில மணி நேரங்களைக் கழித்து விட்டு வீரனின் வீட்டுக்குச் சென்ற போது அங்கு வீரனின் மனைவி எங்களைப் புன்னகையுடன் வரவேற்றார். அவரது இரு சகோதரர்கள் மாவீரர்கள்.

வற்றாப்பளை அம்மன் கோவிலில் ஹொல்கர், வீரனின் மனைவி, வீரன்

மதியஉணவு மரக்கறிகளுடன், பப்படமும் சேர்ந்து சுவைத்தது. வீரனின் மனைவி, குழந்தைகளுடனான பொழுதுகள் இனித்தன. வெண்புறா உறவுகள் எல்லோரும் ஆள் மாறி ஆள் மாறி வீரனின் குழந்தையைத் தூக்கிக் கொண்டு திரிந்தார்கள். கதை, சிரிப்பு,... என்று சில மணி நேங்களைக் கழித்து விட்டு மாலையில் வற்றாப்பளைக்குப் புறப்பட்டோம்.

ஹொல்கருடன் வீரனின் குழந்தை

வீரனின் மனைவி எப்போதுமே புன்னகை மாறாத முகத்துடன் இனிமையாகக் கதைத்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்.

ஜேர்மனிக்குத் திரும்பிய பின்னும் வீரனின் அந்த வீடும், பப்படம் மொருமொருக்க வீரனின் மனைவி மகிழ்வோடு பரிமாறிய அந்த விருந்தும், புன்னகை தவழ்ந்த முகத்தோடு எம்மோடு உறவாடிய வீரனின் மனைவியும் அவ்வப்போது என் நினைவுகளில் மிதந்து கொண்டே இருந்தார்கள்.

சில வருடங்கள் கழித்து வீரன் ஜேர்மனிக்கு வந்திருப்பதாக அறிவித்தல் வந்து, எம்மைக் கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று சொல்லி எமது வீட்டுக்கும் வந்தார்.

மனைவி, குழந்தைகளைப் பற்றி விசாரித்த போது 2004இல் ´கடலே எழுந்து வீழ்ந்த போது சுனாமி அலையோடு போய் விட்டார்கள்´ என்றார் வேதனையோடு.

மனைவியின் நினைவாக நிழற்குடை ஒன்றைக் கட்டியுள்ளதாகவும் சொன்னார். இப்போதெல்லாம் நிழற்குடைகளைக் காணும் போது பல நூறு நினைவுகளின் மத்தியில் வீரனின் மனைவியின் புன்னகையும், அந்தக் குழந்தையும முகம் காட்ட மறப்பதில்லை.

சந்திரவதனா
8.8.2008

சதீசு குமாரின் படம் தந்த நினைவு

Monday, October 16, 2006

நினைவுகள் சிட்டுக்குருவிகளாய்...

மனசின் இடுக்குகளில் திட்டுத் திட்டாய் பயம் ஒட்டியிருக்க, என் வீட்டுப் பிச்சிப்பூ மரத்தில் குந்துவதும், நெல்லி மரத்தை அண்ணாந்து பார்ப்பதுவும், சிதம்பரத்திகளில் கெந்துவதுமாய்... நினைவுகள் சிட்டுக்குருவிகளாய் சிறகடித்துக் கொண்டிருந்தன. நான் எனது உடமைகளுடன் பேரூந்தினுள் நின்றேன்.

கிளிநொச்சி வெண்புறா நிலையத்திலிருந்து புறப்பட்டதில் இருந்து இதுவரையிலான பொழுதுகளின் வெயில் குளிப்பிலும், நிச்சுதனுடனான மோட்டார் சைக்கிள் பயணத்தின் அலுப்பினிலும் உடல் களைத்திருந்தது. மீண்டும் மீண்டுமாய் வேர்த்ததில் முகத்தில் ஏதோ ஒன்று படர்ந்து காய்ந்திருப்பது போன்ற உணர்வு தோன்றியது. தாகம் தண்ணீருக்காய் ஏங்க வைத்தது.

ஜேர்மனியில் பிள்ளைகளை விட்டு விட்டு வந்து, கிளிநொச்சியில் கணவரையும் விட்டு விட்டு நான் மட்டுமாய் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் என் வீடு நோக்கிச் செல்கிறேன். இடையிடையே என் மன இடுக்குப் பயங்கள் எட்டிப் பார்ப்பதில் நெஞ்சு திக்கிட்டுத் திக்கிட்டு அடங்குகிறது.

"நீங்கள் வெளிநாட்டிலை இருந்து வாறிங்களோ..?"

பேரூந்தின் நெரிசலுக்குள் உடமைகளோடு தள்ளாடித் தளர்ந்து நின்ற என் முகத்தில் ஏதாவது எழுதி ஒட்டியிருந்ததோ என்னவோ..! பக்கத்தில் நின்றவன் கேட்ட போது தடுமாறி "ஓம்" என்றேன். வரணி, கொடிகாமம்... என்று பேரூந்து தாண்டிக் கொண்டிருந்தது. வெளியில், கிளிநொச்சி போல வரண்டில்லாமல் பச்சை, பச்சையாய்... குளிர்ச்சியாய் `மா´ க்களும், `தென்னை´களும்... மிக மிக அழகாக... போரின் வடுக்கள் எதுவுமே தெரியாமல் உயிரோட்டமாகத் தெரிந்தன.

"கனகாலத்துக்குப் பிறகு வாறிங்களோ..?"

"ஓம்.. 16 வருசத்துக்குப் பிறகு வாறன்.
ஏன்.. எப்பிடி... அப்பிடிக் கேட்கிறீங்கள்..?"

"ஏதோ..! உங்கடை முகத்தைப் பார்த்தாலே தெரியுது. பயம் ஆர்வம் இரண்டும் உங்கடை கண்ணிலை இருக்குது."

இவனென்ன மனம் பார்க்கும் கண்ணாடி வைத்திருக்கிறானோ..? மனதுக்குள் வினாவினேன்.

"எந்த இடத்துக்குப் போறிங்கள்? உங்கடை... ஆராவது இங்கை....?"

அவனது கேள்வி மாவீரராக.. யாராவது என்பது போலவே எனக்குப் பட்டது. எனது தம்பிமார் மாவீரர் என்பதைச் சொல்வது சில சமயம் எனக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.. ஒரு கணம் உள்ளுணர்வு எச்சரிக்க "இல்லை... ஆத்தியடியிலை என்ரை வீடிருக்கு. அங்கைதான் போறன். தங்கைச்சி இருக்கிறா." என்றேன்.

சடாரென இரண்டு சீற்றுக்கு முன் இருந்த இளைஞன் திரும்பி "ஆத்தியடிக்கே போறிங்கள்? நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறன். ஓராங்கட்டையிலை இருந்து சூட்கேசுகளைத் தூக்கிக் கொண்டு வந்து தாறன்." என்றான்.

நிட்சயம் அவன் எனது தூரத்து உறவினர்களில் ஒருவனாக என் ஊரவனாகத்தான் இருப்பான். ஆனாலும் ரவுணுக்குப் போனால் ஓட்டோ பிடித்துக் கொண்டு சுலபமாக வீடு போய்ச் சேர்ந்து விடலாம். ஏன் யாரிடமாவது கடமைப் பட வேண்டும் என்ற நினைப்பில் நன்றி சொல்லி ஒதுங்கிக் கொண்டேன்.

பேரூந்து நெல்லியடிச் சந்தியையும் தாண்டிய போது மனசுக்குள் இனம் புரியாத படபடப்பு. வந்து விட்டேன் என்ற நம்ப முடியாத ஒரு உணர்வு. கிராமக்கோட்டையும் கடந்து, மணியம் மாஸ்டரின் ரியூற்றரியைக் கடந்து.. ஓராங்கட்டையடிக்கு வந்த போது உதவுவதாகச் சொன்ன இளைஞன் இறங்கிக் கொண்டான்.

ஓராங்கட்டைச் சந்தி வீடு, மாமாவின் வீடு. முன்னர் கலகலத்துக் கொண்டிருந்த அந்த மெத்தை(மாடி) வீடு களையிழந்து போய் தெரிந்தது. பேரூந்து புறப்பட்டதுந்தான் சந்தியின் மற்றப்பக்க மூலைக் காணிக்குள் கேணல் சங்கரின் பெயர் எழுதிய கொடி மரத்தோடு சரிந்திருந்தது தெரிந்தது. எனக்குள் எழுந்த கேள்விக்கு, முதலில் கதை கொடுத்தவன் பதில் தந்தான். "ஆமி கோவத்திலை எல்லாத்தையும் அடிச்சு விழுத்திப் போட்டான்."

என் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறானோ? அவனைத் தீர்க்கமாகப் பார்த்தேன். தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

மருதடியையும் தாண்டிய பேரூந்து பருத்தித்துறை ரவுணுக்குள் வந்து நின்ற போது எனக்கு வேறெங்கோ நிற்பது போன்ற பிரமையே தோன்றியது. களைத்து விழுந்து வெளியில் இறங்கிய போது மந்திகள் போல மரங்களிலும் மதில்களிலும் சீருடை துப்பாக்கி, சகிதம் சிங்கள இராணுவத்தினர் அமர்ந்திருந்தார்கள். தூரத்தில் இருப்பவர்கள் கூட என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். ஏளனமா, நட்பா என்று பிரித்தறிய முடியாத சிரிப்புகள்.

நியூ மார்க்கற்றைக்(புதிய சந்தை) காணவில்லை. நடுவெல்லாம் வெளியாய், சுற்றி வரக் கடைகள் என்று இருந்தன. முந்தைய அழகையோ கலகலப்பையோ அங்கு காண முடியவில்லை. ஏதோ ஒரு வெறுமை என்னையும் தொற்றிக் கொண்டது. முன்னர் இல்லாத ஓட்டோக்கள்(முச்சக்கர வாகனம்) மட்டும் அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டிருந்தன. சில நிறுத்தியிருந்தன. நிறுத்தியிருந்த ஒரு வாகனச் சாரதியை அழைத்து எனது வீட்டு முகவரி சொல்லிப் போக வேண்டும் என்றேன். 500ரூபா என்றான். ஏறிக் கொண்டேன்.

பத்திரகாளி அம்மன் கோவிலடியால் ஓடக்கரை வழியாக தங்கப்பழத்தின் சைக்கிள் கடையைத் தாண்டிய போது "நீங்கள் பிரபாக்கா வீட்டையோ போறிங்கள்?" சாரதி கேட்டான். "ஓம்" என்றேன். "அப்ப நீங்கள் மொறிசின்ரை அக்காவோ?" "ஓமோம்." ஊர் நிலைமைகளையும் சொல்லிக் கொண்டு வந்தான்.

ஹாட்லிக் கல்லூரி வீதியில் ஆத்தியடியை நோக்கி வாகனம் விரைந்த போது மனசு பறந்தது. இன்னதென்று சொல்ல முடியாத உணர்வில் கண்கள் பனித்தன.

ஆத்தியடிதான் எனது ஊர். அங்கே ஆலும் அரசும் தெற்கு வீதியை நிறைத்து நிற்க, அலரிகளால் எல்லை போட்டு அழகான அளவான புனிதமான ஆத்தியடிப் பிள்ளையார் கோயில். அத்திமரத்தில் பிள்ளையார் தோன்றி, கல்லிலே கற்பூரம் கொழுத்தி வழிபடப்பட்ட இடந்தான் பின்னர் ஊர் கூடி உணர்வோடு வழிபடும் இடமாகி அத்திமரப் பிள்ளையாரினால் ஆத்தியடி என்ற ஊரானதாக அம்மம்மா சொல்லியிருக்கிறா. ஆத்தியடி எனது ஊர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குள் அளவிலா ஆனந்தம்.

சப்பரம் என்றால் என்ன, தேர் என்றால் என்ன, சூரன் போர் என்றால் என்ன, அந்தப் பெரிய வடக்கு வீதியில் சில மணித்தியாலங்கள் தரித்து மேளக்கச்சேரியும், நாதஸ்வரமுமாய் நெஞ்சை நிறைத்து... மறக்க முடியாத நினைவுகள். அப்பாவின் கைபிடித்து அந்த வீதியில் நடந்ததிலிருந்து என் பிள்ளைகளை என் கையில் பிடித்து அந்த வீதியில் நடந்தது வரை எல்லாமே இனிமை.

வடக்கு வீதியில் கோயிலை ஒட்டிய பூங்காவனம். அது என்றும் நறுமணம் வீசும் நந்தவனம். திருவிழா இல்லாத காலங்களில் ஆத்தியடி இளைஞர்களின் விளையாட்டு மைதானமும் அந்த வடக்கு வீதிதான். காற்பந்து என்றால் என்ன, கைப்பந்து என்றால் என்ன அவர்கள் கூடிக் குதூகலிக்கும் இடம் அது.

தெற்கு வீதியில் ஆல், அரசுகளின் கீழ் பிரமாண்டமான நீளமான செதுக்கப் பட்டது போன்ற கற்கள். அவைகளில் நான் சின்னப் பெண்ணாக இருந்த போதுதான் இருந்திருக்கிறேன். வளர்ந்த பின் அவை பெண்களுக்குச் சொந்தமில்லை. ஆண்களின் சொத்துக்கள் அவை. அந்தக் கற்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த இளைஞர்கள் மேல் எனக்குப் பொறாமை வரும்.

ஆத்தியடி என்றாலே கண்முன் தோன்றும் பிள்ளையார் கோயிலை விட்டுச் சந்திக்கு வந்து, கிழக்கே நோக்கினால் கோயில் ஒழுங்கை விநாயகர் முதலியார் வீதியை நோக்கி வளைந்திருக்கும். வெள்ள வாய்க்காலோடு உள்ள சந்திக் கிணற்றிலே கோவணத்துடன் யாராவது குளித்துக் கொண்டிருப்பார்கள். அனாதரவாய் நிமிர்ந்திருக்கும் ஆவுரஞ்சிக் கல்லில், எப்போதாவது யாராவது ஒருவர் முதுகு தேய்த்துக் கொண்டிருப்பார்.மாடுகள் பக்கத்துத் தொட்டியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும். பனைகளில் இருந்து கொட்டிய பாளைகளும் பன்னாடைகளும் ஒழுங்கை முழுவதும் கோலம் போட்டிருக்கும்.

தெற்கே நோக்கினால் வடமராட்சி வீதி தெரியும். வீடுகளைப் பார்த்தால் மாமரம் இல்லாத வீடுகள் இல்லை. வேலிகள் எல்லாம் பூவரசும், கிளிசறியாவும், வாதனாராயணியும், ஒதியுமாகப் படர்ந்திருக்க, இடையிடையே சிதம்பரத்தி சிவந்திருக்கும். ஆங்காங்கு பாவாட்டைகளும் பரந்திருக்கும்

மேற்கு நோக்கினால் ஆத்தியடி ஒழுங்கை. முதலிலே தெரிவது வெறுங்காணியில் தனி ஒரு புளிய மரம். அதைச்சுற்றி நான்கைந்து பனைமரம். வேலியெல்லாம் பாவட்டையும், அண்ணாமுண்ணாவும். புளியின் அடியில் பெரிய பாம்புப் புற்று. அடிக்கடி உழுத்தம் பிட்டு மணக்கும். நாகபாம்புதான் அதற்குள்ளே வாழ்வதாய் ஆத்தியடி மக்களுக்கு அபாரமான நம்பிக்கை. விருட்சமாய் காணியை நிறைத்திருக்கும் அந்தப்புளி காய்ப்தே இல்லை. பூக்கும். சருகாகி விடும்.

வடக்கே நோக்கினால் ஹாட்லிக் கல்லூரி வீதி நீண்டு தெரியும். ஆர்ப்பரிக்கும் கடலலையின் ஒலி, ஒரு தாலாட்டுப் போலக் காதில் விழும். சற்றுத் தள்ளி கண்களைச் சுழற்றினால் வடக்கு வீதியைத் தாண்டி பனைகள், பனைகள்... எழுதி முடிக்க முடியாத அழகான சின்னஞ்சிறிய ஊர். அங்கு வாழக் கொடுத்து வைக்காத என்னை அது வரவேற்றதா? தெரியவில்லை.

மேற்கு நோக்கிய அந்த ஆத்தியடி ஒழுங்கையில் முச்சக்கர வண்டி நுழைந்த போது அந்தப் புளிய மரத்தைக் காணவில்லை. மூச்சு முட்டித் திணறும் படியாக ஒரு பெரிய மாடிவீடு காணியை முழுவதுமாக நிரப்பிய படி முளைத்திருந்தது. என் வீட்டின் முன் வந்து இறங்கிய போது கேற்றில் பெரிய மாங்காயப்பூட்டு தொங்கியது.

சந்திரவதனா
16.10.2006

2002 இல் எனது தாயகம் நோக்கிய பயண அனுபவங்களை எழுதத் தொடங்கினேன். ஆறுக்கு மேல் அது தெடராமலே நின்று விட்டது. இப்போது மீண்டும் தொடர்கிறது.

தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
தாயகம் நோக்கி - 3
தாயகம் நோக்கி - 4
தாயகம் நோக்கி - 5
தாயகம் நோக்கி - 6

இன்னும் தொடரும்

Thursday, August 24, 2006

தாயகம் நோக்கி - 6


கவனம் மிதிவெடிகள் - உங்களின் தற்பாதுகாப்பு உங்களுக்கு
ஏற்படக் கூடிய அங்கவீனத்தையோ அல்லது மரணத்தையோ தடுக்கும்.



காகங்களின் கரையல்களும், வானொலிகளின் இரைச்சல்களும்.... விடியலின் வரவைச் சொல்ல மரக்கட்டிலிலிருந்து எழுந்து கொண்டேன். ஊருக்குப் போகும் நினைவுகள் ஒரு புறம் பதட்டத்தையும் மறு புறம் உற்சாகத்தையும் தந்து கொண்டிருந்தன.

நேற்று ஐனனியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த துணிவுடன் யாழ் செல்வதற்கான அனுமதியைப் பெற நிச்சுதனுடன் நந்தவனம் பயணமானேன்.

"நிச்சுதன் மெதுவாய்..."

"பயப்படாதைங்கோ அன்ரி..! நான் விழுத்த மாட்டன்."

ஏ-ஒன்பது பாதையின் குழிகளில் மோட்டார் சைக்கிளை இறக்கி விடாமல் அவன் லாவகமாக ஓட்டிச் சென்ற போதும், இடையிடையே மோட்டார் சைக்கிள் துள்ளத்தான் செய்தது. `பறந்து போய் விழுந்து விடுவேன்´ போன்றதொரு உணர்வு எனக்கு வந்து கொண்டிருந்தது. எதிரே வந்து கொண்டிருக்கும் வாகனங்களின் வேகத்தில் கிராவல் மண் புகை போல எழுந்து என் மேல் அப்பியது. இடையிடையே எதிர் வரும் வாகனத்துடன் மோதி விடாதிருக்க திருத்தப் படாத பாதையின் கரையில் ஒதுங்குகையில் மோட்டார் சைக்கிள் கவிண்டு விடுமோ என்ற பயம் கூட வந்தது.

நிச்சுதனோ "பயப்படாதைங்கோ அன்ரி..! நான் விழுத்த மாட்டன்." என்று சொல்லிக் கொண்டு பயணித்து, என்னை நந்தவனத்தில் கொண்டு சேர்த்தான்.

நந்தவனத்தின் முன்றலில் மாங்காய்களும் பலாப்பழங்களும் மரங்களில் தொங்கின. விலாட் மாங்காயை எட்டிப் பிடுங்கலாம் போலிருந்தது. அங்கு நின்ற இருவரில் ஒருவர் என்னை வரவேற்க, உள்ளே நின்றவர் எனது யேர்மனியப் பாஸ்போர்ட்டை வாங்கி நம்பர் பதிந்து விட்டு, பெயரெழுதும் போது எனது பெயரை.. சந்திரவதனா... என்று இழுத்தவர் கணவரின் பெயரையும் வாசித்து விட்டு "நீங்கள்தானே அக்கா மொறிஸின்ரை அந்த ஆர்ட்டிக்கலை எழுதினனிங்கள்..? நல்லாயிருந்தது." என்றார்.

"எது..?" ஆச்சரியத்துடன் கேட்டேன்.

"ஈழமுரசிலை வந்தது." என்றார்.

"ஈழமுரசு இங்கை வருமோ..? " மீண்டும் ஆச்சரியமாகக் கேட்டேன்.

"ஓம் கஸ்ரோ அண்ணையிட்டை வாறது" என்றார்.

ஐரோப்பியாவில் பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழமுரசை வன்னியில் உள்ளவர்கள் வாசித்தது மட்டுமல்லாமல், முன் பின் தெரியாத ஒருவர், என் பெயரைப் பார்த்ததும் அதை நினைவில் கொண்டு வந்தது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியத்தையும், சந்தோசத்தையும் தந்தது.

"நீங்கள்..?" அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டேன்.

"இளங்கோ" என்றார்.

மற்றவர் "அறிவு" என்றார்

எல்லாம் நிரப்பி என்னிடம் கையெழுத்தை வாங்கிய பின் "சரி அக்கா நீங்கள் வீட்டை போங்கோ. நான் சைன் வேண்டிக் கொண்டு வந்து தாறன்." என்றார்.

நான் செய்ய வேண்டிய வேலையை என்னை அலைக்கழிய விடாமல், இளங்கோ தானே செய்ய முன்வந்த போது மனசு நன்றி சொல்லியது.

" நான் வெண்புறாவில்தான் நிற்கிறன்." என்றேன்.

"அப்ப நல்லதாப் போச்சு. அரைமணித்தியாலத்துக்கை அங்கையே கொணர்ந்து தாறன் அக்கா." என்றார்.

சந்தோசமான உணர்வுகள் என்னை நிறைத்திருக்க இளங்கோவிடமும், அறிவிடமும் இருந்து விடைபெற்றேன்.

வெளியில் காத்திருந்த நிச்சுதனுடன் மீண்டும் வெண்புறா சென்ற அரைமணிக்குள் இளங்கோ பாஸைக் கொண்டு வந்து தந்து விட்டுச் சென்றார்.

வெண்புறா உறவுகள் எல்லோரும் வாசலில் வந்து என்னை வழியனுப்பி வைக்க மதிய வெயில் உச்சியில் சுடும்போது ஊர்க் கனவுகளைச் சுமந்தபடி வெண்புறாவிலிருந்து முகமாலை நோக்கி நிச்சுதனுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன். "அன்ரி...! திங்கட்கிழமை வற்றாப்பளைப் பொங்கலுக்குப் போறது ஞாபகந்தானே. அதுக்குள்ளை வந்துடுங்கோ" என்ற சுந்தரத்தின் குரல் பின்னால் ஒலித்தது. நீங்கள் வராட்டில் நாங்களும் போகமாட்டம் இன்னொரு குரல் தொடர்ந்தது.

கரடிப்போக்குச் சந்தி, வெள்ளவாய்க்கால் மதவில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது நான் வீழ்கிறேன் என்றுதான் நினைத்தேன். எப்படி முகமாலை வரை போய்ச் சேரப் போகிறேன் என்ற பயத்தில், "எவ்வளவு நேரம் பிடிக்கும்.. நிச்சுதன்..?" என்று கேட்டேன்.

"பயப்படுறிங்கள் போலை இருக்கு அன்ரி. நான் ஓடுற வேகத்தைப் பொறுத்து ஒண்டு ஒண்டரை மணித்தியாலத்துக்கை போயிடலாம். நான் இருபதிலை இருந்து முப்பதுக்குள்ளைதான் ஓடுறன். பயப்படாதைங்கோ"என்றான்.

வீதியோரங்களில் ஆங்காங்கு ஓரிரு கடைகள் திறக்கப் பட்டு வாழைக் குலைகள் தொங்கிக் கொண்டிருந்தாலும் மீதி இடங்கள் வீடுகளோ, வாசல்களோ இன்றி பெரு வெளிகளாக வெறிச்சுப் போயிருந்தன.



"இதுதான் அன்ரி நாங்கள் பிடிச்ச இராணுவத்தின்ரை வாகனம்"

"இதிலைதான் அன்ரி பெரிய கிபீர் விழுந்தது"

"இது இராணுவம் ஷோ காட்டுறதுக்காண்டி எங்கடை வாகனத்தைக் கொண்டு வந்து முன்னுக்கு விட்டிருக்கிறாங்கள்."



என்று நிச்சுதன் ஆனையிறவுச் சண்டையை என் மனக் கண்ணுக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான்.

மோட்டார் சைக்கிள் ஓடிக் கொண்டிருந்ததால் காற்றின் எதிர் மோதலில் ஆரம்பத்தில் வெயிலின் அகோரம் அவ்வளவாகத் தெரியவில்லை. போகப் போக பாதைகளின் இருமருங்கிலும் இருந்த காட்டு மரங்களும் செடிகளும் எரிக்கப் பட்டுக் கொண்டிருந்ததால் பயணம் மிகவும் அகோரமாக அனல் கக்கியது.

பரந்தன் பளை பாதையில் போய்க் கொண்டிருக்கும் போது தூரத்தில் வரும் சைக்கிளைப் பார்த்ததும் "அன்ரி, அதிலை வாறது எனக்குத் தெரிஞ்ச பெடியன் போலை இருக்கு. யாழ்பாணத்திலை இருந்து வாறான். கனகாலத்துக்குப் பிறகு வாறான். இறங்கிக் கதைச்சிட்டுப் போவம்." என்ற படி மோட்டார் சைக்கிளை நிறுத்தினான்.

நல்லது. என்னை சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு இறங்கினேன். இறங்கிய உடனே என் முன்னே நாட்டப் பட்டிருந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் மனம் திக்கென்றது.


கவனம் மிதிவெடிகள்
உங்களின் தற்பாதுகாப்பு உங்களுக்கு ஏற்படக் கூடிய அங்கவீனத்தையோ அல்லது மரணத்தையோ தடுக்கும்...
என்ற வாசகங்களில் கால் கூசியது. இறங்கிய வேகத்தில் பாய்ந்து, விழுந்து ஓடி ரோட்டில் நின்றேன்.

நிச்சுதனின் உரையாடலில் சில நிமிடங்கள் கரைந்தன. மீண்டும் மோட்டார் சைக்களில் ஏறிய பின் என் நினைவுகள் என் வீட்டுப் பிச்சிப்பூ மரத்தையும், வேப்பம்மரத்தையும் எதிர்கொள்ளப் போகும் உறவுகளையும் சுற்றத் தொடங்கி விட்டது.

"என்ன அன்ரி. வெய்யில்லை களைச்சிட்டிங்களோ..? பேசாமல் வாறிங்கள்..?"

"இல்லை நிச்சுதன். ஊர் எப்பிடி இருக்கும் எண்டு நினைச்சுப் பார்த்தன்.
அதுசரி நீங்கள் உங்கடை ஊருக்குப் போனனிங்களோ? "

"இன்னும் இல்லை அன்ரி. நான் முகமாலை தாண்டேலாது."

மீண்டும் நான் நினைவுகளுக்குள் மூழ்கிய போது, "அன்ரி, நான் இப்ப எழுபதிலை ஓடுறன் தெரியுமோ.? நீங்கள் என்ரை ஓட்டத்துக்கு ஏற்ற மாதிரி வளைஞ்சு குடுககத் தொடங்கீட்டிங்கள். அதாலைதான் இவ்வளவு கெதியா வந்து சேர்ந்தனாங்கள்."

"கிட்ட வந்திட்டமோ..?"

ஓமன்ரி. இன்னும் இரண்டு நிமிசந்தான்.

ஒருவாறு தமிழீழச் சோதனைச் சாவடியை வந்தடைந்த போது நா வரண்டிருந்தது. எங்காவது இளநீர் வாங்க முடியுமோ என்று பார்த்தேன். மருந்துக்குக் கூட அங்கே இளநீர் தெரியவில்லை.

கிடுகுகளால் வேயப் பட்ட சோதனைச் சாவடிக்குள் நுழைந்து பெண்களுக்கான வரிசையில் நின்று கொண்டேன். நிச்சுதன் எனது சூட்கேசைத் தூக்கியபடி ஆண்களுக்கான பக்கத்தால் என்னோடு கதைத்த படி வந்து கொண்டிருந்தான்.

அமர்ந்திருந்த தமிழ்ப் பெண்ணிடம் பாஸ் காட்டும் போது அவள் நிச்சுதனை அடையாளம் கண்டு கொண்டவளாய் மெல்லிய சிரிப்புடன் என்னைப் போக அனுமதித்தாள்.

"அன்ரி இனி நீங்கள் தனியத்தான் போகோணும். அங்காலை நான் வரேலாது. அதிலை பஸ் எடுத்திங்களெண்டால் முகமாலை வரை கொண்டு போய் விடுவாங்கள்." சொல்லிக் கொண்டே அந்தக் கொட்டில் வரை வந்து என்னை விட்டிட்டுப் போனான்.

இரண்டு தட்டிவான்கள் பட்டிகளில் மாடுகளை அடைப்பது போல மனிதரை ஏற்றிச் சென்றதைப் பார்த்துப் பயந்து எப்படி எனது உடைமைகளுடன் போய்ச் சேருவது என்று நான் தவித்துக் கொண்டிருந்தேன். அதில் ஏறும் துணிவு எனக்கு வரவில்லை. சில நிமிடங்களில் நிச்சுதன் மீண்டும் வந்தான்.

"என்ன நிச்சுதன்..?"

"அன்ரி நான் அனுமதி எடுத்திட்டன். உங்களை அங்கை மட்டும் கொண்டு வந்து விட்டிட்டுப் போறன்."

மனசு நன்றி சொன்னது. மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறினேன். கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த இராணுவச் சோதனைச் சாவடியை அடைய சில நிமிடங்கள்தான் தேவைப் பட்டன.

அவன் என்னை இறக்கிய போது எம்முன்னே இரண்டு மூன்று இராணுவத்தினர் வந்து விட்டனர். தடுப்படியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சில அடிகள் என்னுடன் நடந்தவன்

"நான் போறன் அன்ரி..." என்றான்.

இப்போ எனக்கு அழுகை வந்து விடும் போலிருந்தது. எங்கும் இராணுவம். நான் தனியாக என் சூட்கேசை இழுத்துக் கொண்டு...

அவர்களின் பார்வைகளிலும், சிரிப்பிலும் ஏளனமா..? நட்பா..? குரோதமா..? எல்லாம் கலந்தா..? புரியவில்லை. எனக்கு மிக அருகில் நின்றார்கள். பயமாகப் பதட்டமாக இருந்தது.

நிச்சுதனின் மோட்டார் சைக்கிள் திறப்பு நிலத்தில் வீழ்ந்து மண்ணுள் புதைந்து விட்டது. சாடையாகத் தேடி விட்டு நிற்க விருப்பம் இல்லாததால் "பரவாயில்லை, மற்றத் திறப்பைப் பாவிக்கிறன்" என்று சொல்லி விட்டுப் வேகமாக மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தான்.

"நன்றி நிச்சுதன்..!"

திரும்பிப் பார்த்து, சிரித்துக் கொண்டு விரைந்தான்.

பெண்களுக்கான சோதனை இடத்தைக் காட்டி என்னை அங்கே போகும் படி சொன்னார்கள். அங்கு தூரத்தில் வரிசையில் நின்ற சில பெண்கள் என் கண்களுக்குள் பட்ட போது பயம் கொஞ்சம் குறைந்தது. ஒரு சூட்கேசை இழுத்துக் கொண்டும், மற்றையதைத் தோளில் கொழுவிக் கொண்டும் அந்த இடத்தைச் சென்றடைந்த போது, முதலில் மறைவான பகுதியில் உடைகளுக்குள் உடம்போடு ஏதாவது வைத்திருக்கிறேனா எனச் சோதித்து வெளியில் அனுப்பினார்கள்.

வெளியில் ஐந்தாறு சிங்களப் பெண்கள் வரிசையில் இருந்து அடையாள அட்டை சூட்கேஸ் போன்றவற்றைச் சோதனை செய்து கொண்டிருந்தார்கள். என் முறை வந்ததும் "அக்கா சூட்கேசைத் திறங்க." தமிழில் கதைத்தார்கள்.

எனது சூட்கேசில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் ஆர்வமாக ஆராய்ந்தார்கள். ஆளுக்காள் மாற்றி மாற்றி விடுப்புப் பார்த்தார்கள். வெளிநாட்டுச் சாமான் என்பதில் ஆசைப் பட்டார்கள். ஒரு சிறிய கீரெக்கை தரமனமின்றி வைத்திருந்தாள் ஒருத்தி. "வேணுமெண்டால் வைச்சிருங்கோ" என்றேன். "வேண்டாம்" என்று தந்து விட்டாள். கமராவைப் பிரட்டி உருட்டிக் கொண்டிருந்தாள் இன்னொருத்தி. "என்ன போட்டோ எடுத்திருக்கிறன்" என்று கேட்டாள்.

ஒருமாதிரி அடையாள அட்டையையும் காட்டி வெளியில் போன போது நிறைய பேரூந்துகள் நின்றன. பருத்தித்துறைக்கான பேரூந்தைத் தேடி ஏறப் போன போது வெளியில் நின்ற கொண்டெக்கடர் என்னிடம் கட்டணமாக 15 ரூபாவைக் கேட்டு வாங்கினார்.

எதிரே தண்ணீர் விற்பது தெரிந்தது. அதனோடு சேர்ந்திருந்த கடையில் பின்னுக்குப் போத்தல்கள் அடுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இது வரை அடக்கி வைத்த தாகத்தை இப்போது என்னால் அடக்க முடியவில்லை. எப்படியும் அங்கே `பிளெயின் சோடா´ இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பேரூந்திலிருந்து இறங்கிப் போனேன்.

சிங்களச் சிப்பாய் மிகவும் நட்பாகச் சிரித்த படி என்னை வரவேற்றான்.
"சோடா இல்லை" என்றான். வன்னி தாண்டி விட்டேன்தானே. இது யாழ்ப்பாணத் தண்ணீர்தானே குடிப்போம் என நினைத்து தண்ணீராவது தரும்படி கேட்டேன்.

"தண்ணி இல்லை. நெல்லிக்கிரஸ்தான் இருக்கு." தமிழும் சிங்களுமும் கலந்து சொன்னான். தண்ணி வேணுமெண்டால் பைப்பில் குடிக்கச் சொன்னான்.
வேறு வழி தெரியாததால் சரியென்று பத்துரூபாய் கொடுக்க றம்மிலிருந்து தண்ணீரை ஒரு ரம்ளரில் எடுத்து, நெல்லிரசத்தைக் கலந்து தந்தான். அருந்தினேன். றம் தண்ணீர் ஊத்தையாக இருந்திருக்குமோ என்ற நினைப்பில் எனக்கு நெல்லிரசம் இனிக்கவில்லை.

பஸ்ஸில் ஏறிய பின் வெளியில் கண்களைச் சுழல விட்ட போது இராணுவம், மனிதர் என்று முகமாலை சோதனைச் சாவடி சனமாய்த் தெரிந்தது. நெல்லிரசம் தந்த சிப்பாய், சிரித்த படி என்னைப் பார்த்துக் கை காட்டிக் கொண்டிருந்தான். பேரூந்து ஊரத் தொடங்கியது. என் கிராமத்தை நோக்கி...

சந்திரவதனா
யேர்மனி
2002

தொடரும்

தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
தாயகம் நோக்கி - 3
தாயகம் நோக்கி - 4
தாயகம் நோக்கி - 5

Monday, August 14, 2006

தாயகம் நோக்கி - 5


மனிதநேய வெளிப்பாடுகளில் வெண்புறாவின் செயற்பாடு

ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செயற்கைக் கால் செய்வதென்பது மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டது. பயனாளிகள் ஒவ்வொருவரதும் பாதிப்புக்குள்ளான கால்களை துல்லியமாக அளவெடுத்து, அதற்கான வடிவத்தை அச்சில் (plaster of paris) வார்த்தெடுத்து, பின்னர் அந்த அச்சின் வடிவத்தைக் கொண்டே செயற்கைக் கால் பைபர்கிளாஸில் (Fiber glass) செய்யப் படுகிறது.

அதனால்தான் மூன்று தகரக் கால்களை இரண்டு மணித்தியாலத்துக்குள் செய்து முடிப்பது போல வேகமாக Fiber glass கால்களைச் செய்து முடிக்க முடியவில்லை.

ஒரு தகரத்தாலான செயற்கைக் காலினைத் தயாரித்து, ஒரு பயனாளியை ஒரு கிழமை வெண்புறா நிறுவனத்தில் தங்க வைத்து, பயிற்சி கொடுத்து, உணவும் கொடுத்து அனுப்பி வைக்க வெண்புறா நிறுவனத்துக்கு ஏற்படும் செலவு ரூபா12000 (150 யூரோ) தான்.

ஆனால் தகரக்கால்கள் என்ற ஒரே காரணத்தால் 1994 முதல் 2001 மார்கழி வரை வெண்புறா நிறுவனத்தால் பொருத்தப் பட்ட 1197 பேரினது செயற்கைக் கால்களுக்கான திருத்த வேலைகள் மட்டும் 9893 தடவைகள் மீண்டும் மீண்டுமாய் செய்ய வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இதே நேரம் ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செய்யப்படும் செயற்கைக் கால்களுக்கான செலவும் நேரமும் சற்று அதிகமாக இருந்தாலும் ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செய்யப்படும் செயற்கைக் கால் பல முன்னேற்றமான நன்மைகளைக் கொண்டுள்ளது.

அதாவது ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செய்யப்படும் செயற்கைக் கால்,
1. தகரத்தால் செய்யப்பட்ட கால்கள் போலத் துருப்பிடிக்காது.
2. அணிபவருக்கு இலகுவானது. (பாரம் குறைவு)
3. வார்த்தெடுக்கப்பட்ட அச்சில் செய்யப்படுவதால், காலுடன் பொருந்தக்கூடியது. எனவே செயற்கை உறுப்பை பொருத்துவதற்கு எந்தவிதமான பட்டிகளும் தேவையில்லை
4. தகரத்தில் உருவாக்கப்படும் செயற்கைக்காலில் ஏற்படும்
திருத்த வேலைகள் இந்த வகையில் உருவாகும் கால்களுக்கு மிகமிக அரிது.
5. கால்களின் அளவும் முழங்கால் சில்லின் அளவும் மிகத் துல்லியமாக அளந்து
எடுக்கப்படுவதால், முதுகெலும்பு வளைவதற்கான சாத்தியங்கள் இல்லை.
6. பாதிப்புக்குள்ளான காலின் பகுதி மெலிந்து போவதற்கான காரணிகள் குறைகின்றன.
7. பாதிக்கப்பட்ட காலின் பகுதிக்கும் செயற்கை உறுப்புக்கும் இடையில் உள்ள இறப்பரினால் ஆன பகுதி காலில் ஏற்படும் வீணாண எரிச்சல் உபாதைகளைத் தடுக்கிறது.
8. காலினை இலகுவாக மடித்து நீட்டக்கூடியதாக இருக்கும்.
9. இலகுவாகக் கழற்றி வைக்கக்கூடியது.

இதுவரை காலமும் செய்யப் பட்ட தகரத்தாலான செயற்கைக் கால்களையும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும், யேர்மனியில் செயற்கை உறுப்புகளை உருவாக்கும் தொழில் நுட்பத்துடன் ஒப்பீடு செய்தே நவீன முறையிலான ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செயற்கை கால்கள் செய்வதில் உள்ள இந்த நன்மைகள் அறியப் பட்டன.

அறியப் பட்டதுடன் மட்டும் நின்று விடாமல் அதைச் செயற்படுத்தும் திட்டம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் யேர்மனியக் கிளையினால் கிளிநொச்சியில் அமர்ந்திருக்கும் வெண்புறா நிறுவனத்தின் செயற்கை உறுப்புச் செய்யும் பட்டறைக்குள் வெற்றிகரமாக செயலாக்கம் பெறத் தொடங்கியது.

எடுத்ததைச் செவ்வனே செய்து முடிக்கும் திறமையானவர்கள் அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த போதும் மின்சாரத்தினதும், நவீன தொழில் நுட்பத்துக்கான கருவிகளினதும், பற்றாக்குறைகள் வேலை நேரத்தை நீட்டிக் கொண்டிருந்தன.

அஸ்பெஸ்டோஸ் கூரையைப் பிய்த்துக் கொண்டு வெயிலின் வெப்பம் எம்மை வதக்கியது. பொறுப்பாளர் அன்ரனியின் கட்டளைகளுக்கமைய அடிக்கடி Fanta, Spreit என்று சுகுணனும், கண்ணனும் கொண்டு வந்து தந்து கொண்டிருந்தாலும் அவைகளில் எதையும் நான் தொட்டும் பார்ப்பதில்லை. தாகத்தைத் தீர்த்து, வரண்டு போன தொண்டைக்கு இதம் தந்தது அவர்கள் அன்போடு வெட்டித் தந்த இளநீரும், பின் காணிகளுக்குள் எழுந்து நின்ற பனைகளில் ஏறி மயூரன் பிடுங்கித் தந்த நுங்கும்தான்.

மதியம் ஒரு மணித்தியாலம் இடைவேளை. அன்றே கிளிநொச்சிச் சந்தையில் வாங்கப் பட்ட கரவலையால் இறக்கப்பட்ட புதிய இறாலில் பொரியலும், மீனில் குளம்பும்... என்று நாக்குச் சப்புக் கொட்டியது. மனசு சமையல் பணியில் இருக்கும் படையப்பா எனச் செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படும் தேவசுந்தரத்துக்கும், அங்கிள் என அழைக்கப் படும் நசாருக்கும், பாரைக்குட்டி என அழைக்கப்படும் சந்திரன் தம்பிக்கும் மானசீகமாக நன்றி சொன்னது. சாப்பாட்டுக்கு மேல் பலாப்பழமும், மாம்பழமும் தித்தித்தன.

ஆனாலும் என்னால் இன்று அவை எல்லாவற்றையும் முற்றாகச் சுகிக்க முடியவில்லை. கால் வேலைகளை முடித்து விட்டு பருத்தித்துறையில் இருக்கும் அழகிய சிறிய கிராமமான ஆத்தியடியில் இருக்கும் நான் தவழ்ந்த எனது வீட்டுக்குப் போய் ஒரு கிழமையாவது நின்று வருவதாக நாம் போட்ட திட்டம் நிறைவேறாது போலத் தெரிந்தது. வேலை முடியாமல் எனது கணவரையோ, ஹொல்கெரையோ அங்கிருந்து கூட்டிப் போக முடியாது. அதுதான் மனசு சங்கடப் பட்டது.

ஆத்தியடியையும் எனது வீட்டையும் நினைக்கும் போதெல்லாம் மனசு தழுதழுத்தது. போகவேண்டும் என்று பரிதவித்தது. இருக்கும் ஒரே ஒரு வழி நான் தனியப் போய் வருவதுதான். தனியான பயணம் எந்தளவு சிக்கலாக இருக்கும் என்பது தெரியவில்லை. புலிகளின் கட்டுப்பாடற்ற பகுதிக்குள் குன்றும் குழியுமான வீதிகளில் சில மணித்தியாலங்களுக்குப் பேரூந்தில் பயணிக்க வேண்டும். வன்னியிலிருந்து புறப்படும் அல்லது வன்னிக்கு வந்து கொண்டிருக்கும் வாகனங்களைப் பார்த்திருக்கிறேன். சனங்களைப் பட்டியில் அடைப்பது போலத் திணித்துக் கொண்டு..., நினைக்கவே பயமாக இருந்தது. ஆனாலும் நான் தவழ்ந்த, தத்தி நடை பயின்ற... என் பிரிய உறவுகளுடன் கைகோர்த்துத் திரிந்த... நான் வாழ்ந்த எனது வீட்டுக்குப் போக வேண்டும் என்ற ஆசை பயத்தைத் துரத்தியடித்தது.

திடீரென, உடனேயே எனது கிராமத்துக்குப் போய் விடவேண்டுமென்ற ஒரு வேகம் எனக்குள் எழுந்தது. எனது கணவருக்கு எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். அடுத்தநாள் காலையே புறப்பட்டு விடத் தீர்மானித்துக் கொண்டேன்.

மற்றவர்களிடம் விசாரித்த போது, "அப்படி நினைக்கிற போலை நாளைக்கே போகேலாது. பாஸ் எடுக்கோணும். பஸ் புக் பண்ணோணும். இப்படிக் கனக்கச் சிக்கல்கள் இருக்குது அக்கா....! அதோடை பஸ்சுக்கை நீங்கள் இருக்க மாட்டிங்கள் அக்கா. நெரிச்சுத் தள்ளிப் போடுவாங்கள். சிலநேரம் நிண்டு கொண்டுதான் போகவேண்டி வரும்" என்றார்கள்.

எனக்குத் தாமதிக்க இஸ்டமில்லை. எல்லாவற்றையும் தாங்கி நான் பயணிக்கத் தயார். அதனால் "எப்படியாவது நான் போகோணும்" என்று வெண்புறா உறவுகளிடம் சொன்னேன். அவர்கள் நல்லவர்கள். என்னைத் தனியே அனுப்ப அவர்களுக்கு மனம் இல்லாவிட்டாலும் என் விருப்பத்தை நிறைவேற்ற உடனேயே எனக்கு உதவ முன்வந்தார்கள். நாளை காலை அவர்களில் ஒருவருடன் நந்தவனத்துக்குப் போய் யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கான பாஸ் எடுக்க ஏற்பாடாகியது.

வெண்புறாவின் பொறுப்பாளர் அன்ரனி மோட்டார்சைக்கிள் சாரதி நிச்சுதனிடம் "நாளைக்கு அக்கா பாஸ் எடுத்த உடனை அக்காவை முகமாலை வரை கொண்டு போய் விட்டு விடு. இங்கை இருந்து பஸ்சிலை அக்கா போகமாட்டா" என்றார். எனக்கு மோட்டார் சைக்கிளில் பின்னுக்கு இருந்து பழக்கமில்லை.

பின்னேரம் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென செஞ்சோலை ஐனனி வந்தாள். விடயத்தைச் சொன்ன போது "நான் பழக்கிறன்" என்று சொல்லி போரின் அனர்த்தங்களில் குழி விழுந்து போயிருந்த ஏ-ஒன்பது வீதியில் என்னை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு திரிந்தாள். மெதுவாக ஓடி, நிறையக் கதைத்து... அவள் வேகமாக ஓடத் தொடங்கிய போது பயம் குறைந்திருந்தது.

அன்றைய இரவு ஐனனியுடன் கதைத்து, சாப்பிட்டு, படுக்க வெகுநேரமாகி விட்டது. ஊர் செல்லும் நினைவுகளில் தூக்கம் வரமறுத்தது. கூடவே ஏதோ விதமாக நுளம்பு வலைக்குள் புகுந்து கொண்ட நுளம்பு ஒன்று என்னைத் தூங்க விடாமல் மிகுந்த தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தது.

சந்திரவதனா
யேர்மனி
2002

- தொடரும் -

தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
தாயகம் நோக்கி - 3
தாயகம் நோக்கி - 4

Sunday, August 06, 2006

தாயகம் நோக்கி - 4


தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
தாயகம் நோக்கி - 3

அடிக்கடி ரோச்சைப் பிடித்து நேரம் பார்த்து 5.30 என்றதும் எழுந்து கொண்டேன். வெளியில் போய் இருள் கலைந்து கொண்டிருக்கும் அதிகாலையின் இயற்கை அழகைச் சிறிது நேரம் பருகி விட்டுக் காலைக் கடன்களை முடித்து, குளித்து வரும் போது வோச்சர் ஐயா முற்றம் கூட்டத் தொடங்கி இருந்தார். கணக்காளர் பாஸ்கரன் எனது அறைக்கு முன்பக்கமுள்ள சிறிய முற்றத்தைக் கூட்டத் தொடங்கியிருந்தான். மாஸ்டர் என அழைக்கப் படும் சுகுணன் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தான்.

நான் ஒற்றைப் பனையின் கீழ் கதிரை போட்டு அமர்ந்து கொள்ள சுகுணன் தேநீருடன் வந்தான். அம்மாவுடன் வாழ்ந்த காலங்களுக்குப் பிறகு இருந்த இடத்தில் எனக்காகத் தேநீர் தயாரிக்கப் பட்டு வருவது புது அனுபவம். தேநீர் சுமாராக இருந்தாலும் வெண்புறா உறவுகள் அத்தனை பேரும் என்மேல் காட்டும் அன்பு என்னை நெகிழ வைத்தது. தமது கஷ்டங்களைப் பற்றியதான அக்கறைகள் எதுவுமின்றி எனக்கு எந்த விதமான அசௌகரியங்களும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலான அவர்களது அவதானம், அவர்கள் மேல் எனக்கு மிகுந்த பிரியத்தை ஏற்படுத்தியது.

அவர்களில் சிலர் காலை வணக்கங்களுடன் என்னைத் தாண்டி கேற் கடந்து கரடிபோக்குச் சந்தி வெள்ளவாய்க்காலுக்கு குளிப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள். சிலர் நின்று என்னோடு சிரித்து, பேசிச் சென்றார்கள்.

சொல்லாமல் கொள்ளாமல் வெயில் வெண்புறா நிறுவனத்துக்குள்ளும் புகுந்து மெய் கருக்கத் தொடங்கியது. கால் போடுவதற்காக ஆட்கள் வரத் தொடங்கி இருந்தார்கள். சடகோபன் வேலையைத் தொடங்குவதற்காக செயற்கைக் கால் தயாரிக்கும் பட்டறைக்குள் நுழைந்தான். நேரத்தைப் பார்த்தேன். எட்டு மணியாகி இருந்தது.

முதல்நாட்தான் Fiberglass இல் கால்செய்வதற்கான வகுப்பு சரியாகத் தொடங்கியது. நாம் புறப்படும் போதே யேர்மனியின் டுசுல்டோர்ஃப் (Düsseldorf) விமான நிலையத்தில் Fiberglass இல் கால் செய்வதற்கான மருந்துப் பொருட்களில் பவுடர் போல இருந்த சில பொருட்களை எம்முடன் கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி விட்டார்கள். பின்னர் நாங்கள் விளக்குவைச்ச குளத்தில் பொருட்களுடன் தாண்டப் பயந்து வவுனியாவில் சிலதை விட்டு விட்டோம். அதனால் வந்த உடனே நாம் எதிர்பார்த்தது போல வகுப்பைத் தொடங்க முடியாதிருந்தது.

ஆனால் அந்த நேரம் அவர்கள் செய்யும் தகரக் கால்களையே செய்ய விட்டு எப்படிக் கால்களைத் தயாரிக்கிறார்கள் எனப் பார்த்தோம். மிகவும் ஆச்சரியம்தான். இரண்டு மணித்தியாலங்கள் கூடத் தேவைப்படவில்லை. வசதியான நவீன தொழில் நுட்ப உபகரணங்கள் ஏதுமின்றி அவர்கள் மூன்று கால்களைச் செய்து முடித்த வேகம் எங்களை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது.

சடகோபனும், ஹரிஹரனும், யுவராஜ்யும் கால் போட வந்தவர்களில் மூவரின் கால்களை ஒரே நேரத்தில் அளவெடுக்கத் தொடங்கி, கத்தரிக்கோலால் தகரங்களை வெட்டி, அதை கால் வடிவத்திற்கு சிறிது சிறிதாகத் தட்டியெடுத்து அடித்து நெளித்து, நேர்த்தியாக மடித்துக் கொண்டிருக்க, சிறீயும் கிருஷ்ணாவும் பாதத்தையும் மேற்காலையும் பொருத்துவதற்கான கட்டையை வெட்ட (உபகரண வசதிகள் இல்லாததால் ஒரு சிறிய வட்டக் கட்டையை வெட்டி எடுப்பதற்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் தேவைப்பட்டது.) அங்கிருப்பவர்களில் மிகவும் வயது குறைந்த தம்பி என்றழைக்கப் படும், 17 வயது நிரம்பிய சதாசிவம் செயற்கைக் காலின் மேற்பகுதியை அதாவது முழங்காலுக்கு மேல் தொடையோடு பொருந்தும் பகுதிக்கான தோல் பட்டியை மெசினில் தைக்க, இன்னும் சிறிய சிறிய தொட்டாட்டு வேலைகளை மற்றவர்கள் தொடர, நாம் பார்த்துக் கொண்டிருக்கவே இரண்டு மணித்தியாலங்களுக்குள் மூன்று கால்கள் தயார்.

காலையில் கால் இல்லாமல் வந்தவர்களில் அளவெடுக்கப் பட்ட அந்த மூவரும் காலை அணிந்து கொண்டு நடப்பதற்கான பயிற்சியை எடுக்கத் தொடங்கிய போது நியமாகவே எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசமும் வியப்பும் ஏற்பட்டது.

இன்னும் ஐந்து நாட்கள் அவர்கள் மூவரும் வெண்புறாவிலேயே தங்கியிருந்து நடப்பதற்கான பயிற்சியை எடுத்து, காலுடன் செல்வார்களாம். காலை எட்டு மணியிலிருந்து மாலை நான்கு மணிவரை பயிற்சி நடக்கும். அவர்கள் அந்ந ஐந்து நாட்களும் அங்கு தங்கிச் செல்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப் படும். இருப்பிட, உணவுச் செலவுகள் அனைத்துமே வெண்புறாவினுடையதுதான். என்ன ஒரு மனிதநேயமான கரிசனமான செயல்! வியப்பு..! வியப்பு..! வியப்பு...!

தகரத்தில் கால்களைச் செய்யும் அவர்களது அந்த வேகத்துக்கு ஏற்ப Fiberglass கால்களைச் செய்ய முடியாது என்று ஹொல்கெர் சொல்லி விட்டார்.

முதல்நாட்தான் நாம் ஜேர்மனிய விமான நிலையத்தில் விட்டு வந்த பொருட்களை தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் ஜேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் ஆனந்தராஜா அவர்கள் எடுத்து மீளவும் எமக்கு அனுப்பி இருந்தார். வவுனியாவில் விட்டு வந்த பொருட்களும் எம்மை வந்தடைந்தன. இதற்கிடையில் முல்லைத்தீவுக் கடற்கரை வரை சென்று இது சம்பந்தமான சில பொருட்களை கப்பல் தயாரிப்பாளர்களிடமும் பெற்று வந்தோம்.

முதல்நாள் தொடங்கிய வகுப்பை வெண்புறா உறவுகள் அனைவரும் ஒன்றாக இருந்து மிக ஆர்வமாக அவதானித்தார்கள். சரியான உபகரணங்களோ, புதிய தொழில்நுட்ப வசதிகளோ அங்கு இல்லாததால் நாம் கொண்டு சென்ற புதிய Fiberglass கால் செய்யும் திட்டத்தைச் செயற்படுத்துவதில் சில அசௌகரியங்களும் இருக்கத்தான் செய்தன. மின்சாரம் பெரும் பிரச்சனையாக இருந்தது. வழமையில் இரவு மட்டுமே ஆறு மணியிலிருந்து பத்து மணிவரை இயங்க வைக்கப்பட்டு மின்சாரத்தைத் தந்த ஜெனரேட்டரிலிருந்து Fiberglass கால் செய்வதற்குத் தேவையான மின்சாரத்தைப் பெறுவது மிகவும் கடினமாயிருந்தது. பலதடவைகள் மின்சாரம் நின்று நின்று, திரும்பத் திரும்ப ஜெனரேட்டரை இயங்க வைத்து, வகுப்பைத் தொடர்ந்த போது ஜேர்மனிக்குப் போனதும் கண்டிப்பாக இவர்களுக்கு இன்னும் இரண்டு ஜெனரேட்டர் வாங்கப் பணம் சேர்த்து அனுப்ப வேண்டுமென நினைத்துக் கொண்டேன். தாயகம் நோக்கிப் பயணிப்பவர்களை பட்டறைக்குத் தேவையான உபகரணங்களை கொண்டு சென்று அன்பளிப்புச் செய்யச் சொல்ல வேண்டுமென எனது கொப்பியில் குறித்துக் கொண்டேன்.

சடகோபனைத் தொடர்ந்து மற்றையவர்களும் பட்டறைக்குச் சென்று கொண்டிருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன் தகரக் கால்களைப் பெற்றுக் கொண்ட மூன்று பிள்ளைகளுக்குத் தாயான ராஜலட்சுமி நடைப்பயிற்சி எடுக்கத் தொடங்கியிருந்தாள்.

எனது கணவரும் ஹொல்கெரும் பட்டறைக்குள் நுழைந்தார்கள். உடனே நானும் எழுந்து கொண்டேன். முற்றத்து மண் செருப்புக்குள் புகுந்து கால்பாதங்களுடன் சரசமாட பட்டறையை நோக்கி விரைந்தேன். வெயில் சுட்டது.

அண்ணையை எப்படிச் சந்திக்கலாம்? அவரைச் சந்திக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா? கேள்வி இன்னும் எனக்குள்...!

சந்திரவதனா
யேர்மனி.

Thursday, August 03, 2006

தாயகம் நோக்கி - 3


தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2

ரோச்சைப் பிடித்து நேரத்தைப் பார்த்தேன். 3.30 மணி. இங்கு வந்த பின் இப்படித்தான். வேளைக்கே விழிப்பு வந்து விடுகிறது. இன்று இன்னும் வேளைக்கு. இயற்கையின் சலசலப்புகள்தான் என்னை அருட்டினவோ!

மெதுவாக எழுந்து மெத்தை இல்லாத மரக்கட்டிலில் முட்டுக்காலில் இருந்த படியே மரச்சட்டங்களினூடே வெளியில் பார்த்தேன். விடியலுக்கான அறிகுறியாய் இருள் விலகியும் விலகாமலும் மங்கிய பொழுது. வெண்புறா செயற்கை உறுப்புத் தொழில் நுட்ப நிறுவனம் அமைதியாக உறங்கிக் கிடந்தது.

எனது அறைக்கு முன்னால் கேற்வாசல் மூலையோடு நிற்கும் பருத்த பெரிய ஒற்றை ஆண்பனை ஆடாமல் அசையாமல் அழகாய் கம்பீரமாய் எழுந்து நின்றது.

போரின் அனர்த்தங்களால் பொலிவிழந்து ஆங்காங்கு குழி விழுந்து வாடிப் போயிருக்கும் ஏ9 வீதியில் கடாமுடா என ஏறி இறங்கிச் செல்லும் வாகனங்கள் வீசிச் செல்லும் ஒளி வெள்ளத்தில், கேற்றுக்கு வெளியே மதிலோடு ஏ9 பாதையின் ஓரமாக நிமிர்ந்து நின்ற அறிவிப்புப் பலகையில் உள்ள வெண்புறாச் சின்னமும், வெண்புறா செயற்கை உறுப்பு தொழில் நுட்ப நிறுவனம், கிளிநொச்சி பிராந்தியச் செயலகம் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருந்த வாசகங்களும் மின்னி மின்னி மறைந்தன.

நேற்று வரை மூடிய படியே கிடந்த பாழடைந்த எதிர் வீட்டில் இன்று ஒரு வகை உயிர்ப்புத் தெரிந்தது. மோட்டார் சைக்கிள் ஒன்று வாசலில் நின்றது. திறந்த கதவினூடே ஒரு பெண்ணின் அசைவுகள் தெரிந்தன. இடம் பெயர்ந்து போன வீட்டுச் சொந்தக்காரர் மீண்டுள்ளனர் என்பது புரிந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் இங்கு ஒரு கடை முளைத்திருக்கும். நான் வந்த சில நாட்களுக்குள் இந்த வீதிகளில் முளைக்கும் புதிய புதிய கடைகள் என்னை அப்படித்தான் எண்ண வைத்தன.

பக்கத்துக் கோயிலில் வேர் பரப்பி, விழுது விட்டு, குடை விரித்திருக்கும் அழகிய அரச மரத்தின் கிளைகள் எனது அறையின் தகரக் கூரையில் உரசும் சத்தத்தை விட, அதிகாலையிலேயே குதித்துக் கொண்டும், இறகைச் சிலுப்பிக் கொண்டும் மற்றவர்களைத் தொந்தரவு பண்ணுகிறோமே..! என்ற எந்தப் பிரக்ஞையுமின்றி தமக்கு மட்டுந்தான் இந்தப் பிரபஞ்சம் சொந்தம் என்பது போல கரைந்து கொண்டிருந்த காகங்களின் சத்தம் அதிகமாகவே இருந்தது.

இவையெல்லாவற்றையும் மீறி எங்கிருந்தோ விட்டு விட்டு ஒலித்த அந்தச் சத்தம் என்னைத் தன்பால் ஈர்த்தது. "அது வானொலியா...!" "இந்த நேரத்தில் எந்த வானொலி...!" எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடும் முனைப்பில்... கேட்கும் திறனையெல்லாம் ஒன்று கூட்டி, ஒரு நிலைப் படுத்தி கூர்ந்து கவனித்தேன். அது வானொலியல்ல. ஒலி பெருக்கி.

எங்கோ தொலைவிலிருந்து காற்று அள்ளி வந்த அந்தத் துண்டுத் துண்டு வாக்கியங்களைக் கோர்த்துப் பார்த்ததில், சிறார்களைப் பள்ளிக்கு அழைப்பது தெரிந்தது. அழியாத செல்வமாம் கல்வியைப் பற்றி குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் விளக்கும் அவசரம் தெரிந்தது. கல்வியின் மகத்துவம் விளக்கப் பட்டது. எந்தக் குழந்தையும் பள்ளிக்கு வராமல் இருந்து விடக் கூடாது என்ற கரிசனம் தெரிந்தது. தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தின் ஒழுங்கு படுத்தலில் UNICEF நிறுவனத்தின் நிதியுதவியுடன் கிராமிய கல்வி பொருளாதார நிறுவனம் நடைமுறைப் படுத்தும் அந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாது பயன் படுத்தி விட வேண்டுமென்ற அக்கறை தெரிந்தது.

இந்த அக்கறை, மனிதம் மீதான இந்தக் கரிசனம் வன்னிக்குள் எங்கும் ஒட்டியிருந்தது. சிதைக்கப் பட்ட ஒரு பூமியில் நம்பிக்கை விதை நல்லெண்ணத்தோடு விதைக்கப் பட்டு செழிப்போடு வளர்ந்திருந்தது. அந்த நிர்வாகத்திறன் என்னை வியக்க வைத்தது.

கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி வன்னிமண் செப்பனிடப் பட்டிருந்தது. நான் நினைக்கிறேன் இலங்கையிலேயே கூடுதலான அங்கவீனர்கள் வன்னியில்தான் இருக்கிறார்கள் என்று. ஆனால் வன்னி அவர்களை வீதியில் வீசி எறியாமல் தன்னோடு அணைத்து வைத்திருந்தது. ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்தது.

இந்த மனிதத்தனம், இந்த மனிதநேயம், மக்களோடான இந்த நட்பு, மக்களின் எதிர் காலத்தின் மீதான இந்த அக்கறை இவைதான் என்னுள் சந்தோசப் பிரவாகத்தையும் அளவிலாப் பிரமிப்பையும் ஏற்படுத்திக் கொண்டேயிருந்தன. போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பது தெரிந்தது.

தாயக விடுதலைக்காய் தோள் கொடுத்த, கால் கொடுத்த, கை கொடுத்த... போராளிப் பிள்ளைகளைச் சந்திக்கும் போதெல்லாம் வன்னியின் இப்படியான நடப்புக்கள் எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் ஆச்சரியம் பற்றிப் பேசினேன். அதனால் ஏற்பட்டிருக்கும் இன்பத் திணறல் பற்றிப் பேசினேன். இவையெல்லாவற்றையும் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன் மிக்க அண்ணனைப் பற்றிப் பேசினேன்.

"அண்ணன்" அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.

வாய்க்கு வாய் "அண்ணை" என்றும் "அண்ணன்" என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம், ஏற்கெனவே எனக்குள் முளை விட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து தளிர்த்து சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. "நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்கு உரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்." எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.

நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும், அது எனது ஆசை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளாதபடி, பொதுவாகக் கேட்பது போல் "அண்ணனை யாருக்காவது சந்திக்கும் வாய்ப்பிருக்கா..?" என்று கேட்டுப் பார்த்தேன்.

எல்லோரிடமிருந்தும் "அண்ணன் இப்ப பிஸியாக இருக்கிறார். முடியாது." என்ற பதில்கள்தான் வந்தன. "எத்தனையோ பேர் வந்து காத்திருந்து விட்டுப் போய் விட்டார்கள்." என்றும் சொன்னார்கள். அந்தப் பதில்களில் நான் சற்று ஏமாற்றத்தை அடைந்தாலும் எனக்குள் விசுவரூபம் எடுத்த அந்த ஆசையை என்னால் வீசி எறிய முடியவில்லை.

என் தாய் வயிற்றில் பிறந்து, விடுதலை வேட்கையில் எம் மண்ணுக்காக தம் இன்னுயிரை ஈந்த என் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு காலத்தில் அவரோடு அவர் அருகில் இருந்தவன். அவன் பற்றியும் எனக்குக் கிடைக்காத சில விடயங்களை அவரோடு பேச வேண்டும். அந்த ஆசை கூட என் மனதின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது.

"என்ன...! வெளியிலை ஆரும் நிக்கினமே...? விடிஞ்சிட்டே..? "
அருகில் ஆழ்ந்து தூங்கியிருந்த எனது கணவரின் விழிப்போடு வந்த கேள்வியில் நான் நினைவுச் சிறகுகள் அறுபட்டு தொப்பென்று மீண்டும் மரக்கட்டிலில் வீழ்ந்தேன்.

"இல்லை. ஒருத்தரும் இல்லை. எனக்கு மூண்டு மணிக்கே நித்திரை போட்டு."

சொல்லி விட்டு மீண்டும் படுத்தேன். எனக்கு நித்திரை வரவில்லை. மனசு இறக்கை கட்டிக் கொண்டு சிலிர்ப்பு, தவிப்பு, துடிப்பு... என்று பல்வேறு உணர்வுகளுடன் எங்கெல்லாமோ அலைந்தது. இடையிடையே "அண்ணையை எப்படிச் சந்திக்கலாம்! அவர் என்னைச் சந்திக்கச் சம்மதிப்பாரா..?" என்ற கேள்விகளுடன் வெண்புறாவுக்குள் வந்து மரக்கட்டிலில் விழுந்தது.

சந்திரவதனா
யேர்மனி.

- தொடரும் -

Monday, July 31, 2006

தாயகம் நோக்கி - 2


தாயகம் நோக்கி - 1

ஒரு சின்னக் குளியல் செய்து விட்டு, முடிந்தால் சுடச் சுட ஒரு தேநீர் அருந்தி விட்டு பயணத்தைத் தொடரலாம் என்ற நினைப்போடுதான் வவுனியாவில் இருந்த வன்னிலொட்ஜ் இனுள் புகுந்து கொண்டோம்.

என்னவொரு ஏமாற்றம்..! வாழ்க்கையில் நான் சந்தித்த மிக மிக அருவருப்பான இடங்களில் ஒன்று அது. அறைக்குள் நுழைந்த பொழுதே அப்படியொரு நாற்றம். குளியலறைக்குள் நுழைந்தேன். வருடக்கணக்காகத் துப்பரவு செய்யப் படாதிருந்தது. போன வேகத்தில் வெளியில் வந்து விட்டேன். ஐந்து நிமிடங்கள் கூட அங்கு நிற்க முடியவில்லை. ஹொல்கெர் ஓடியோடி அந்த அசிங்கத்தைத் தனது கமராவுக்குள் திணித்துக் கொண்டிருந்தான். எனக்குச் சங்கடமாக இருந்தது. என்றாவது ஒருநாள் யேர்மனியத் தொலைக்காட்சியில் இது ஒளிபரப்புச் செய்யப் படலாம்.

எனது பயணத்தின் மணிப் பொழுதுகளில் இது ஒரு மாசு படிந்த பொழுது. ஒரு நாளைக்கான கட்டணப் பணத்தைக் கட்டி விட்டு வெளியேறினோம்.

வெளிப் பார்வைக்குப் பிரமாண்டமாகத் தெரிந்த அந்த லொட்ஜ் தன்னோடு வைத்திருந்த அருவருப்பு இப்போது என்னோடு ஒட்டிக் கொண்டு வந்து விட்டது போலிருந்தது.

கையோடு கொண்டு வந்த ஃபைபர்கிளாஸ் (Fiberglass) இல் கால் செய்வதற்கான மருந்துப் பொருட்களையும், உபகரணங்களையும் விளக்குவைச்ச குளத்தினூடே கொண்டு செல்வதில் சிக்கல் இருக்கலாம் என்ற எண்ணம் எமக்கு இருந்ததால், அவைகளை வவுனியாவில் ஒரு கடையில் வைத்து விட்டுப் போய் றெட்குறோஸ் (Red Gross) மூலம் எடுத்துக் கொள்ளலாம் என நேற்றுக் கடைசி நேரத்தில் தீர்மானித்ததை இன்று செயற்படுத்து முகமாகக் குறிப்பிட்ட ஒரு கடையைத் தேடினோம்.

அதிகாலை நான்கு மணி என்பதால் அனேகமான எல்லாக் கடைகளும் பூட்டியே இருந்தன. ஒரு சில கடைகளுக்கு உள்ளிருந்து பாடல்கள் மட்டும் கேட்டன.

தூங்கி வழிந்த மாடுகளுக்கும், தூங்கியே கிடந்த மாடுகளுக்கும் மத்தியில் காத்திருந்தோம். பொறுமை கெட்டு வாகனத்திலிருந்து இறங்கி வீதியில் நடக்கையில் வீதியோரங்களிலும் கட்டிடத் திண்ணைகளிலும் மனிதர்களும் உறங்கியும் உறங்காமலும் இருப்பதைக் கண்டோம். ஓட்டோக்களும் நின்றன.

ஐந்து மணியாகிக் கொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிள்களினதும் துவிச்சக்கர வண்டிகளினதும் வரவைத் தொடர்ந்து ஒரு சில கடைகள் திறக்கப் பட்டு சாம்பிராணிப் புகை வாசம் கமகமக்கத் தொடங்கியது. சுப்ரபாதம் மனசையும் காதையும் நிறைத்து புத்துணர்ச்சியைத் தந்தது. காத்திருப்புகளைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி குறிப்பிட்ட கடையைக் கண்டு பிடித்துப் பொருட்களை ஒப்படைத்து விட்டு வவுனியாவிலிருந்து புறப்பட்டோம்.

வாகனம் விளக்குவைச்ச குளத்தை நோக்கி விரையத் தொடங்கியது. யாரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. எல்லோரிடமும் ஒரு அவசரம். நேரத்துக்குப் போய் வரிசையில் நிற்க வேண்டும். இடையிடையே "கெதியாப் போனால்தான் லைனில் நின்று பாதை கடக்கலாம்." என்று சிவா மாஸ்டரும் கணவரும் முணுமுணுப்பது கேட்டது. ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பின் லைனைக் கட் பண்ணி ஆட்களைத் திருப்பி விடுவார்களாம்.

எமக்குள் பதட்டம். பதினாறு வருடங்களின் பின், சரியான முறையில் சிங்கள இராணுவத்தை இனித்தான் சந்திக்கப் போகிறோம். பாதை திறக்கப்பட்ட பின் விளக்குவைச்ச குளத்தில் செக்கிங் எப்படி இருக்கும் என்பது பற்றியதான சரியான தகவல்களை யாருமே எமக்குத் தரவில்லை. சிவா மாஸ்டரும் பன்னிரண்டு வருடங்களின் பின் இப்போதான் கொழும்பிலிருந்து தமிழீழத்தை நோக்கிப் பயணிக்கிறாராம்.

எப்படியான வரவேற்பு எமக்காகக் காத்திருக்கிறது என்று தெரியாமலே விளக்கு வைச்சகுளத்தின் செக்கிங் பொயின்ற் இலிருந்து ஒரு மைல் நீளமளவில் நீண்டிருக்கும் மனிதர்களும், வாகனங்களும் நிரைப் படுத்தப் பட்ட வரிசையை வந்தடைந்தோம். எட்டு மணிக்கு முன்னமே இப்படியொரு நீள்வரிசை. செக்கிங் இன்னும் தொடங்கவில்லையாம். எட்டிப் பார்த்தோம். இறங்கி நடந்து பார்த்தோம்.

ஒவ்வொரு பத்து யார் தூரத்துக்கும் மூட்டைகளை அடுக்கி முள்ளுக்கம்பிச் சுருள்களை வைத்துத் தடைமுகாம்களை அமைத்திருந்தனர் சிங்கள இராணுவத்தினர். அடிக்கடி அதன் பின்னிருந்த சிறு குடில்களுக்கு உள்ளிருந்து எட்டியும் பார்த்தனர். நட்பாகச் சிரித்தனர். போர் என்று வரும் போது இவர்கள்தானா பேய்களாக மாறுகிறார்கள்..? நம்ப முடியாதிருந்தது. குளித்து விட்டு ஈரத் துவாலையைத் தோளில் போட்டுக் கொண்டு வந்த குட்டையாகத் தலையை வெட்டியிருந்த அவர்களில் சிலர் சிரித்த படி கை காட்டினார்கள். இவர்களும் மனிதர்கள்தான். ஆனாலும் பணத்தைக் காட்டிப் பகடைக் காய்களாக்கப் படுகிறார்கள். யதார்த்தம் புரிந்தது.

காத்திருப்புகளில் எம்மவர்கள் களைத்துப் போயிருந்தார்கள். சுள்ளி வைத்து எரிக்கும் மணத்தைக் காற்று அள்ளி வந்தது. ஆங்காங்கு களையிழந்த வீடுகளின் முன்றலில் சிலர் அடுப்பின் மேல் பானை வைத்து தண்ணீர் சுட வைத்து தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். கொண்டு வந்த உணவுகளையும், அந்தத் தேநீரையும் சுவைத்துப் பலர் தமது பசியையும் களையையும் ஆற்றிக் கொண்டிருந்தார்கள். எமது வாகனத்தின் சிங்கள சாரதி ஓடியோடி ஒவ்வொரு தடைமுகாம்களுக்குள்ளும் புகுந்து சிரித்தபடி வெளியில் வந்தான்.

வரிசை நத்தையாக நகரத் தொடங்கியதும் நாங்களும் நகர்ந்தோம். எமது முறை வந்ததும் சிறீலங்கா அடையாள அட்டையைக் காட்டினோம். ஹொல்கரின் எம்ஓடீ(MOD) யைப் பார்த்து விட்டு, அதில் "இரு பிரதி தமக்கு வேணும்" என்றார்கள். "எமக்கு அதுபற்றித் தெரியாது. அதனால் நாம் ஒரு பிரதியும் எடுக்கவில்லை." என்றோம். ஒரு சிலர் எம்மைப் பாவமாகப் பார்த்தாலும் ஒரு சிங்களவன் "எம்ஓடீ யின் கொப்பி இல்லாமல் நாம் மேற்கொண்டு நகர முடியாது" என்று கடுமையாகச் சொல்லி விட்டான். அவன் முகத்தில் இனக்குரோதம், அதிகாரத்திமிர்... எல்லாமே அளவுக்கு அதிகமாகவே இருந்தன.

இனி நாங்கள் மீண்டும் வவுனியா வரை போய் கொப்பி(பிரதி) எடுத்து வந்து வரிசையில் நின்று... பயணம் தொடர்ந்த மாதிரித்தான். மனசுக்குள் சலிப்பும் கோபமும் வந்தன. சாரதி சிங்களத்தில் மீண்டும் அந்த அதிகாரியிடம் கேட்டுப் பார்த்தான். ம்கும்.. அதிகாரி சற்றும் இளகவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினோம். ஆனாலும் தடைமுகாம்களுக்குள் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களிடம் சாரதி ஆலோசனை கேட்ட போது அவர்களில் ஒருவன் எம்மை அவர்களது அலுவலகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பிரதி எடுத்துத் தந்து, எமது வாகனத்தில் ஏறி எம்மை மீண்டும் வரிசையில் முன்னுக்குக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போனான். அவனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. கண்களால் சொன்னோம். சிரிப்பை உதிர்த்துச் சென்றான்.

ஒருவாறு பாஸ், எம்ஓடீ, ஐசி செக்கிங்குகள் முடிந்தால் இனி நாம் கொண்டு வந்த பொருட்களின் மீதான செக்கிங். அதற்கு வாகனத்தை அங்கிருந்த பரந்த காணிக்குள் இறக்க வேண்டி இருந்தது. மரநிழல்கள், வெயில்கள், இருக்கைகள் என்று பலதரப்பட்ட நிலைமைகள் அதற்குள். பொருட்களின் மீதான செக்கிங்கில் கடுமை இருக்கவில்லை. எமது உடமைகளில் சிலவற்றை அவர்கள் திறந்து கூடப் பார்க்கவில்லை. ஹொல்கெரின் கமராவைத்தான் கழற்றியும் பார்த்தார்கள். அத்தோடு முடியவில்லை. வாகனத்தையும் பதியவேண்டுமாம். அதனால் சாரதி அதற்குரிய இடத்துக்குச் சென்று விட நாம் காத்திருந்தோம்.

களைப்புக்கு நடுவிலும் அது ஒரு இனிமையான பொழுது. அங்கு காத்திருந்தவர்களில் பல உறவுகள் என்னை இனம் கண்டு வந்து பேசிச் சென்றார்கள். அவர்கள் உள்நாட்டிலேயே வாழ்ந்திருந்தாலும் 12, 15, 16.. வருடங்களின் பின் இப்போதான் வடக்கை நோக்கிச் செல்கிறார்களாம். அவர்களுடனான சந்திப்பு எதிர்பாராத சந்தோசம்.

வாகனமும் பதிந்து முடிய விளக்குவைச்சகுளத்தை விட்டுப் புறப்பட்டோம். "அப்பாடா" என்றதொரு உணர்வு மனத்துக்குள்.

நிம்மதியோடு தொடர்கையில் தமிழீழம் எங்களை வரவேற்றது. மனசு குதூகலித்தது. பெண் பொலிஸ்களும், எம் பெடியளும் என்று கண்டதில் மனசு துள்ளியது.

தமிழீழத்தில் ஆங்காங்கு ஓரிரு செக்கிங் பொயின்ற்ஸ் இருந்தாலும் மரையடிச்ச குளத்தில் எமக்கான செக்கிங். அங்கு பதிந்து வெளிநாட்டிலிருந்து வந்த காரணத்தால் 500 ருபா கட்டணம் செலுத்தி வன்னிக்குள் புகுவதற்கான பாஸைப் பெற்றுக் கொண்டோம். ஹொல்கெர் வெளிநாட்டவர் என்பதால் அவரிடம் எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப் படவில்லை. சிங்கள சாரதியை உள் விடுவதில்தான் சில தயக்கங்கள். எம்மை அழைத்துப் போக வெண்புறாவிலிருந்து இரு உறவுகள் வந்திருந்தார்கள். ஆனாலும் எமது பொருட்களை அவர்களது வாகனத்தில் வைக்க முடியவில்லை. அதனால்
இன்றே திரும்பி விட வேண்டுமென்ற உத்தரவுடன் சிங்களசாரதியை உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

எமது பயணம் எமது மண்ணில் தொடர்ந்து... கிளிநொச்சியின் வெண்புறாசெயற்கை உறுப்பு பிராந்தியச் செயலகத்தை வந்தடைந்தது.

வைத்தியமே கேள்விக்குறியாகிப் போன நேரத்தில் செயற்கை அங்கங்களைப் பொருத்துவது, அதுவும் பணம் கொடுத்து, செயற்கை உறுப்புகளைப் பொருத்துவது என்பது சாதாரண மக்களுக்கு முடியாத காரியம். இந்த நிலையில் முற்று முழுதாக இலவசமாக தனது சேவையை தமிழ் மக்களுக்குத் தர 15.06.1994இல் யாழ்ப்பாணம் குளப்பிட்டி வீதியில் தோற்றம் பெற்றதுதான் இந்த வெண்புறா நிறுவனம்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையால் யாழ்ப்பாணம் குளப்பிட்டி வீதியிலிருந்து கிளிநொச்சி, கோணாவில், புதுக்குடியிருப்பு எனப் பறந்து வந்த வெண்புறா, தனது தலைமைச் செயலகம் இன்னும் புதுக்குடியிருப்பிலேயே இருந்தாலும் 15.6.02 இலிருந்து கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் வந்து கம்பீரமாக அமர்ந்திருக்கிறது.

தொழில் நுட்பவியலாளர், திட்ட இணைப்பாளர், நிர்வாக அலுவலகர், வரவேற்பாளர், தட்டச்சாளர், கணக்காளர், காசாளர், களஞ்சியக் காப்பாளர், காவலாளர், சமையலாளர், பராமரிப்பாளர், கள அலுவலகர், விழிப்புணர்வுப் பணியாளர்கள், மருத்துவர், கண்ணிவெடி அகற்றும் பிரிவினர்... என்று 32 பேர்கள் பணியாற்றும் வெண்புறாவின் உள்ளே வீசும் காற்றுக் கூட என்னை நேசக்கரம் நீட்டி வாவென வரவேற்றது.

எம்மை ஏற்றி வந்த வாகனச் சாரதிக்கு மிகுதிப் பணத்தையும் கொடுத்து அனுப்பி விட்டு, வெண்புறாவின் உறவுகளுடன் நான் கைகோர்த்துக் கொண்டேன். அது இறுக்கமான நேசமான அன்பான கைகோர்ப்பு.

கோர்த்த கைகளை இழுத்துப் பிரித்துக் கொண்டு மீண்டும் யேர்மனி திரும்பும் ஒரு நாள் வரும் என்பது பற்றிய பிரக்ஞைகள் எதுவுமின்றி நான் வெண்புறாவுக்குள் உலா வந்தேன்.

சந்திரவதனா
யேர்மனி
2002

- தொடரும் -

Friday, July 28, 2006

தாயகம் நோக்கி - 1

12.5.2002 இலிருந்து 9.6.2002 வரையிலான தயாகம் நோக்கிய பயண அனுபவங்கள்

மெல்லிய பய உணர்வுகள் என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க நான் இன்னும் கொழும்பு வீதிகளில்தான் திரிந்தேன்.

வன்னி நோக்கிய பயணத்தைப் பற்றித்தான் எனக்குப் பயம். வழியில் யாரும் வெடி வைப்பார்களா..?! நான் மாவீரர்களின் சகோதரி என்பதை இராணுவம் கண்டு பிடிக்குமா..?! என்பதை எல்லாம் விட, எம்முடன் நாம் கொண்டு வந்த ஃபைபர்கிளாஸ் (Fiber Glass) இல் கால் செய்வதற்கான உபகரணங்களும், மருந்துப் பொருட்களும்தான் இராணுவத்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற பயம்.

ஆனாலும் கொழும்பு வீதிகளில் திரிகிறேன். எம்மோடு நாம் கூட்டி வந்த செயற்கைக் கால் செய்வதற்கான யேர்மனியத் தொழில் நுட்பவியலாளரான திரு.ஹொல்ஹெர்.தாம் (Holger Thamm) க்கு வன்னிக்குச் செல்வதற்கான அனுமதியான எம்.ஓ.டீ (MOD) எடுப்பதில் தாமதம். அதுதான் அவரோடு என் கணவரும் ஓடிக் கொண்டு திரிகிறார். வழமைபோல் நான் தனியேதான். யேர்மனியப் பதினாறு வருட வாழ்க்கையில் தனிமை எனக்குப் புதிதில்லை. தனிமை என்னை ஒரு போதும் கொன்றதுமில்லை.

ஆனாலும் நாள் முழுவதும் ராஜசிங்க வீதியில் எமக்காக ஒதுக்கப் பட்ட வீட்டில் தனியே குந்திக் கொண்டிருப்பதை விட கொழும்பு வீதிகளில் திரிவது பரவாயில்லாமல் இருந்தது. வெயில்தான் கொளுத்தி எறிந்தது.

வீதி ஒழுங்குகள் வாகனங்களின் வேகங்களில் கரைய அங்கு பாதை கடப்பதே சாதனை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பாதை கடப்பதில் சாதனை புரிந்தேன். இன்டர்நெட் கடை தேடி யேர்மனியில் விட்டு வந்த எனது பிள்ளைகளுக்கு மின்னஞ்சல் செய்தேன். இளநீர்க் கடைகளைக் கடக்கும் போதெல்லாம் ஒன்றுக்கு மூன்றாய் இளநீர் வெட்டுவித்துக் குடித்தேன்.

மதியமானதும் வீட்டுக்குச் சென்று உடை மாற்றி அதே ராஜசிங்கவீதியில் இரண்டு வீடுகள் தள்ளியுள்ள வீட்டுக்கு மதிய உணவுக்காகச் சென்றேன். அது எனது மைத்துனரின் (கணவரின் சகோதரனின்) வாசஸ்தலம். 1983 க் கலவரத்தின் வடுக்களைத் தாங்கி நிற்கும் அந்த வாசஸ்தலத்தில் எப்போதும் சாப்பாட்டில் குளியல்தான். கணவரின் அண்ணி உபசரிப்பதில் விண்ணி. இரண்டு மூன்று நாட்களில் உடல் உப்பி உடைகளெல்லாம் இறுக்கி....

ஹொல்கெருக்கும் உடைகள் வெடிப்பதற்குத் தயாராக இருந்தன. உறைப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு... என்று வியந்து வியந்து, குழந்தை போல விரல்களால் அளாவி, அள்ளி எடுத்து வாயில் திணித்து, ரசித்து, சுவைத்து, வியர்வை நெற்றியில் துளிர்த்து... பின் ஆறாய் ஓட "ஊ... ஆ.." என்று அவர் சாப்பிட்ட போது சிரிப்பாய் இருந்தது.

எம்.ஓ.டீ (MOD) க்கான காத்திருப்புக்கள் எரிச்சலைத் தந்தன. நானும் எனது கணவரும் 1981 இல் வழங்கப்பட்ட சிறீலங்கா அடையாள அட்டையை வைத்திருந்ததால் அதனுடன் வன்னி செல்லத் தீர்மானித்து இருந்தோம். ஆனால் ஹொல்ஹெருக்கு எம்.ஓ.டீ (MOD) கட்டாயம் என்பதால் 500 ரூபா லஞ்சம் கொடுத்து விட்டுக் காத்திருந்தோம்.

ஐந்தாம் நாள் 17.5.2002 அன்று எம்.ஓ.டீ (MOD) கிடைத்து விட்டதாகத் தொலைபேசி அழைப்பு வந்தது. அதை எடுத்து வருவதற்காகக் கணவரும் ஹொல்ஹெரும் சென்று விட மீண்டும் கொழும்பு வீதிகளில் திரிந்தேன். வெள்ளவத்தைத் தமிழருக்கு வணக்கம் என்பதன் அர்த்தம் தெரியுமோ? நுனி நாக்கு ஆங்கிலம்.... வீட்டுக்கு இரு வேலைக்காரர்கள்... நாட்டு நடப்புகள் பற்றி இவர்கள் அறிவார்களோ...? மனசுக்குள் ஏனோ எரிச்சலான கேள்வி எழுந்தது.

இரவு வன்னிக்குப் பறப்படுவதாகத் தீர்மானிக்கப் பட்டது. கொழும்பில் புதிதாகத் திறக்கப் பட்டிருக்கும் தமிழர் புனர்வாழ்வுக்கழக அலுவலகத்தினர் நாம் கேட்டுக் கொண்டதின் பேரில் தனியார் வாகனம் ஒன்றை ஒழுங்கு படுத்தித் தந்தார்கள். முற்பணம் கொடுத்தால்தான் தொடரும் என்று தொலைபேசி அழைப்பு வர பயணத்துக்கு 4 மணி நேரம் முன்பு மீண்டும் எனது கணவர் ஓடிச் சென்று 10,000ரூபா கொடுத்து வந்தார்.

இரவு 9மணிக்கு நாம் ஐந்து நாட்கள் தங்கியதற்கான வாடகையாக 15000ரூபாவை, வீட்டு உரிமையாளரிடம் கொடுத்து விட்டு ராஜசிங்க வீதியில் இருந்து புறப்பட்டோம். புறப்படும் போதுதான் அன்று எமது 26வது திருமணநாள் என்பதை வழியனுப்பியவர்களுக்குச் சொல்லி வாழ்த்தைப் பெற்றுக் கொண்டோம்.

வாகனத்தில் ஏறிய பின்தான் சாரதி சிங்களவன் என்பது தெரிந்தது. பயம் இரட்டிப்பானது. நாம் கதைப்பது அவனுக்கு விளங்குவது போலிருந்தது. அவன் சிங்களத்தில் மட்டுமே கதைத்தான்.

கொழும்பு தாண்டிய பின் வன்னியை நோக்கிய அந்த இரவுப் பயணம் எனக்குள் மிகுந்த திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இயற்கை அழகின் மேல் போர்த்தியிருந்த இரவின் அமைதி அசாதாரணமாகவே தோன்றி என்னை அச்சப் படுத்தியது. போதாததற்கு சிங்கள சாரதி. மனசு அடிக்கடி அனர்த்தங்கள் ஏற்பட்டு விடக் கூடாது எனப் பிரார்த்தித்தது.

எம்மோடு தொற்றிக் கொண்டு வந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கொழும்பு அலுவலக அன்பர்களில் ஒருவரான சிவா மாஸ்டர், சிங்களவனை சாரதியாக நியமித்ததற்காக எனது கணவரது கண்டனதுக்கு ஆளானார். அவருக்கும் சிங்களவன் சாரதியாக வரப் போவது தெரியாது இருந்திருக்கிறது. தனியார் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் வாகனம் ஒழுங்கு படுத்தப் பட்டுள்ளது. சாரதியாக சிங்களவனும் கடமையாற்றுகிறான். எப்படியோ அந்தத் தவறு நிகழ்ந்து விட்டது. நல்லதுக்கா, கெட்டதுக்கா என்று தெரியாத குழப்பம் எம்மைப் பற்றிக் கொண்டது. பயணம் சிங்களப் பாடல்களுடன் தொடர்ந்தது.

சிங்கள சாரதிக்கு இது வன்னியை நோக்கிய முதற் பயணமாம். தேங்காய்ப் பூரானை நினைவு படுத்தும் குருநாகலில் திடீரென சாரதி இறங்கி ஒரு தேநீர்க் கடைக்குள் நுழைந்து கொண்டான். அது அர்த்த ஜாமம். அவன் ஏன் போகிறான்? கடைக்குள் என்ன கேட்கிறான்? என்பது தெரியாததால் பயம் என்னைச் சித்திரவதை செய்தது.

"வாகனத்துக்குள் தமிழர். வெட்டுங்கள்" என்பானா?! திகில் நினைவுகள் எனக்குள் தோன்றிய அடுத்த கணமே, சிறியவர்கள் பெரியவர்கள் என்று வயது வித்தியாசமின்றிய ஆண்கள் கும்பல் ஒன்று வாகனத்தைச் சூழ்ந்து கொண்டது. பார்த்தால் காடையர்கள் போலத் தெரிந்தார்கள். வாகனத்துக்குள் தலையை நுழைத்து ஏதோ சிங்களத்தில் கேட்டார்கள். தமிழ், வன்னி என்ற வார்த்தைகள் அவர்கள் கதைகளுக்குள் அடிக்கடி வந்தன. நான் பயத்தில் உறைந்து போனேன்.

சிவா மாஸ்டரும் கணவரும் சிங்களத்தில் பதில் சொன்னார்கள்.சாரதி வாகனத்துள் ஏறிய பின்னும் இழுத்துப் பிடித்து ஒருவன் சிங்களத்தில் கத்திக் கத்திக் கதைத்தான். அவன் உருவம் கூடப் பயத்தையே தந்தது. ஒருவாறு வாகனம் புறப்பட்ட பின்தான் எனக்கு சீரான மூச்சு வரத் தொடங்கியது. "என்ன பிரச்சனை..?" என்று கேட்ட போது "ஒன்றுமில்லை. அவர்கள் சும்மாதான் கதைத்தார்கள்" என சிவா மாஸ்டரும், எனது கணவரும் சொன்னார்கள். ஏனோ அவர்கள் சொல்வதில் முழுமையான நம்பிக்கை எனக்கு வரவில்லை. சாரதி பாதை கேட்கத்தான் கடைக்குள் போனானாம்.

ஒரு காலத்தில் அப்பா கடமையாற்றிய நாகொல்லகம, களனியா போன்ற இடங்களைத் தாண்டுகையில் பயங்களுக்கு நடுவிலும் குழந்தைப் பருவத்தில் அம்மா, அப்பாவுடன் அங்கு கழிந்த பொழுதுகளும் இளமைக்கால இனிய நினைவுகளும் மனசுக்குள் வந்து இனிய ராகமிசைத்தன. நாகொல்லகம ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகில் இருக்கும் ரெயில்வே குவார்ட்டர்ஸ் இல் நின்ற குண்டுமணிச் செடியும் புலம்பெயர்ந்த பின் ஐரோப்பிய ஈழமுரசில் பிரசுரமான என் குண்டுமணி மாலை சிறுகதையும் நினைவில் வந்து போயின.

அநுராதபுரத்தைத் தாண்டுகையில் நான் மட்டுமல்ல, தடைமுகாம்களின் தடங்களோடு இருந்த அதன் அமைதியில் சாரதி கூட அச்சப்பட்டான் போலத் தெரிந்தது. பாதை பிரிகையில் எந்தப் பக்கம் போவதென்று தடுமாறினான். தாண்டிய பின் சாரதிக்கு நித்திரை தூங்கியதால் வெள்ளை அப்பங்கள் நூற்றுக் கணக்கில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த ஒரு தேநீர்க்கடையின் முன் மீண்டும் வாகனத்தை நிறுத்தினான். நாங்களும் இறங்கிக் கடைக்குள் புகுந்து கொண்டோம். எல்லோரும் எங்களை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். சந்தோசமாக வரவேற்றார்கள். அவர்கள் சிங்களவர்களா தமிழர்களா என்பது இன்று வரை எனக்குத் தெரியாது. பாஷைகள் அதிகம் தேவைப்படவில்லை. ஆனால் பேசினோம் பார்வைகளால்.

சாரதி தேநீர் குடிக்க நாங்கள் சோடா குடித்தோம். (அதிகமான இனிப்பில் தாகம் அதிகரித்தது.) அப்போதுதான் சாரதியை நேராகப் பார்த்தேன். அவன் கண்களில் நட்புத்தான் தெரிந்தது. எந்த வித இனக்குரோதமும் தெரியவில்லை. சிநேகமாகச் சிரித்தான்.

தொடர்ந்த வவுனியா நோக்கிய பயணத்தில் சிக்கல் எதுவும் மட்டுமல்ல, எனக்குள் பயம் கூட இருக்கவில்லை. அவனோடு தேவைக்குத் தமிழில் பேசினேன். அவன் சிங்களத்தில் பதில் தந்தான். மதவாச்சி தாண்டியதும் தமிழ்ப் பாடல்கள் போட்டான்.

அதன் பின் தடைமுகாம்களின் அடையாளங்கள் வழி வழியே இருந்தாலும் அநாவசியப் பயங்கள் ஒளிந்து, மனசு எதையோ எதிர்பார்த்து இன்பராகம் இசைக்கத் தொடங்கியது. உணர்வுகள் கனவும் கற்பனையுமாய் இறகு கட்டிப் பறக்கத் தொடங்கியது. "விரை விரை, தமிழீழம் எமக்காகத் காத்திருக்கிறது." என்று எதுவோ என்னை அவசரப் படுத்தியது.

மனசு கேட்ட படி விரையாவிட்டாலும் வாகனம் தனக்கே உரிய விரைவோடு வவுனியாவுக்குள் புகுந்த போது வவுனியா தூங்கிக் கொண்டிருந்தது. வன்னி லொட்ஜில் தங்கி சற்று ஆறி, பயணத்தைத் தொடரலாம் என எண்ணியதில் வவுனியாவில் இருக்கும் வன்னி லொட்ஜினுள் புகுந்து கொண்டோம்.

சந்திரவதனா
யேர்மனி
2002

- தொடரும் -

Monday, July 24, 2006

அவர்கள் அவர்களாகவே...!


இது ஒரு நினைவுக்கோலம். எந்தவிதக் கற்பனையும் கலக்காத உண்மையின் வடிவம். பாதை திறந்த பின் எழுந்த தாயக தரிசன ஆசையில், இது அவசியந்தானா, என மனதின் ஒரு மூலையில் அச்சத்துடனான கேள்வி தொக்கி நிற்க.. வன்னி எப்படி இருக்கிறது? போர் எப்படி எமது மக்களைச் சிதைத்திருக்கிறது? நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்...? என்று பார்க்க வேண்டும், உதவ வேண்டும் என்ற ஆசையில் தொடங்கப் பட்ட பயணம் இது. அங்கு போன பின்தான் பயணத்தின் அவசியம் தெரிந்தது. 12.5.2002 இலிருந்து 9.6.2002 வரையிலான அங்கு கழிந்த பொழுதுகள் மிகவும் அர்த்தம் நிறைந்தவை. அந்த மணிப்பொழுதுகளில் ஒரு துளி இது..!

யேர்மனிய அவசரம் போல் விரையாமல் இங்கு பொழுதுகள் ஏ9 பாதை போல நீண்டிருந்தன. கிளிநொச்சியில் அமைந்திருக்கும் வெண்புறா செயற்கை உறுப்புத் தொழில் நுட்ப நிறுவனப் பிராந்தியச் செயலகத்தின் செயற்கை உறுப்புத் தயாரிக்கும் பட்டறையில் தகரங்களை "ணொங்.." "ணொங்.." கென்று செவிப்பறை அதிர அறையும் சத்தம் ஓய்ந்து அரை மணி நேரமாகியிருந்தது. சுட்டெரிக்கும் வெயில் மட்டும் விட்டுப் போக மனமின்றி இன்னும் கொளுத்திக் கொண்டேயிருந்தது.

முற்றத்தில் நான் அமர்ந்திருந்தேன். தனிமை என்று சொல்ல முடியாது. அடிக்கடி வெண்புறாவின் உறவுகளில் யாராவது வந்து "அன்ரி" என்றும் "அக்கா" என்றும் அன்போடு அழைத்து பாசத்தோடு பேசிச் சென்றார்கள்.

சற்று முன்தான் சுந்தரம் வந்தான். "அன்ரி..." என்று அவன் கூப்பிடும் போதே என் நெஞ்சுக்குள் பிசையும். வேதனை சுமந்த அவன் கண்களின் நோக்கலில் பாசம் பீரிடும்.

"என்ன..! சுந்தரம் சொல்லுங்கோ. தேத்தண்ணி குடிச்சிட்டிங்களோ?"

"ஓம் அன்ரி.. எனக்குக் கவலையா இருக்கன்ரி."

......

"என்ரை அம்மா அப்பா எல்லாரையும் பார்த்து ஏழு வருசமாச்சு அன்ரி.. அதுதான். அவையளை ஒருக்கால் பாத்தனெண்டால் ஆறுதலாயிருக்கும் போலை இருக்கு."

"கவலைப் படாதைங்கோ சுந்தரம். வழி கிடைக்கும்.."

"மற்றாக்களை எல்லாம் அம்மாமார் வந்து பாத்திட்டுப் போயிட்டினம்..."

அவனது வேதனையை என்னால் உணர முடிந்தது. பட்டறை வேலைகளை முடித்து விட்டு கரடிப் போக்குச் சந்தி வாய்க்காலில் குளித்து விட்டு வந்திருந்தான். எப்போதும் போல துப்பரவாக உடை அணிந்திருந்தான். ஏழு வருசத்துக்கு முதலே தொடையோடு ஒரு காலை இழந்து விட்டான். தகரத்தில் செய்த செயற்கைக் காலை அவன் அணிந்திருந்தாலும் இழுத்து இழுத்து அவன் நடப்பதைப் பார்க்கும் போது தொடையோடு கால் இல்லை என்பதை உடனேயே உணர்ந்து கொள்ளலாம்.

"உங்கடை கால் போனாப் போலை நீங்கள் இன்னும் அம்மாவைச் சந்திக்கேல்லையோ....?"

"இல்லை அன்ரி. இப்ப நாட்டிலை பிரச்சனை இல்லை எண்டாலும் அம்மாவையள் அம்பாறையிலை இருக்கிறதாலை போய் வாறதிலை கொஞ்சம் சிக்கல்"

"கால் போனதாலை இன்னும் கவலையா இருக்கிறீங்களோ..?"

"இல்லை அன்ரி. எனக்கு இப்ப ஒரு கால் இல்லை எண்ட நினைவே வாறேல்லை. எனக்கது பழகிப் போட்டுது. "

"கால் போன உடனை உங்கடை உணர்வுகள் எப்பிடி இருந்திச்சு சுந்தரம்?"

"போன உடனை எனக்கு சாகலாம் போலை இருந்திச்சு. இப்ப எனக்கு அப்பிடியான ஒரு உணர்வும் இல்லை. அம்மாவை அண்ணாவையை எல்லாம் ஒருக்கால் பார்க்கோணும்...!"

வேதனை அவன் முகத்தில் அப்பியிருந்தது. அவனது கண்கள் எனது கண்களுக்குள் நேசமாக ஊடுருவி எனது தாய்மையைச் சீண்டின. ஏனோ என் மனச் சுவர்கள் வேர்த்து கண்கள் பனித்தன.

இப்படித்தான் இவனுக்குள் உள்ளது போலத்தான் இந்த வெண்புறா செயற்கைக் கால் திட்ட பிராந்தியச் செயலகத்தில் கடமையாற்றும் 32 உறவுகளுக்குள்ளும் ஒவ்வொரு சோகக் கதை. சிலநாட்களாக மட்டும் அவர்களோடு பழகிக் கொண்டிருக்கும் என்னிடம் வந்து தமது துயர்களையும், சந்தோசங்களையும், தோல்விகளையும், சாதனைகளையும் ஒரு மகவு தனது தாயிடம் சொல்வது போல சொல்வார்கள். அவர்களுடனான அந்தப் பொழுதுகள் மிகவும் அர்த்தம் நிறைந்தவை.

எனக்குத் தனிமை தெரிவதில்லை. அவர்கள் விட்டுப் போகும் சமயங்களில் நான் வெண்புறாவின் முன்றலில் வாயிலோடு ஒரு ஓரமாக உயர்ந்து பருத்து அழகாக நிமிர்ந்திருக்கும் ஆண்பனையிடமோ அல்லது எனக்காக ஒதுக்கப் பட்ட அறையின் தகரக் கூரையின் மேல் கிளைகளைப் பரப்பி வைத்திருக்கும் பக்கத்துச் சிறிய கோயிலில் விழுதுகள் பதித்து நிற்கும் அரசமரத்திடமோ அல்லது பட்டறையின் முன் அசைந்தாடிக் கொண்டிருக்கும் சஞ்சீவி மரத்திடமோ அல்லது பட்டறையின் பின்னால் எட்டியும் ஒட்டியும் நின்று ஓராயிரம் கதை சொல்லும் புளிய மரத்திடமோ லயித்துப் போய் விடுவேன்.

இன்று எனது புளியமரத்தின் மீதான லயிப்பு, அதை புளியமரம் மீதான லயிப்பு என்று சொல்வதை விட, அந்தப் புளியமரத்தின் அசைவில் கிளறப்பட்ட எனது பாடசாலைப் பருவத்து வாழ்க்கை மீதான லயிப்பில் நான் எங்கோ சென்றிருந்தேன்.

நான் அரிவரியிலிருந்து "கபொத" உயர்தரம் வரை பயின்ற வடமராட்சி இந்துமகளிர் கல்லூரியிலும் பின்பக்க விளையாட்டு மைதானத்தில் கிளை பரப்பியபடி இப்படித்தான் ஒரு பெரிய புளியமரம். அதன் அடி வெள்ள வாய்க்கால் கடந்து அடுத்த காணிக்குள். முள்ளுக்கம்பியைப் பிரித்து வெள்ள வாய்க்காலுக்குள் இறங்கி அந்தப் புளிய மரத்தின் குருத்து இலையில் தொடங்கி பூ, பிஞ்சு, காய்கள் என்று சுவைத்ததும் "முனி..., பிள்ளைபிடிகாரன்... என்ற கூக்குரல்களினால் குடல் தெறிக்க ஓடியதும் ஒரு பருவம். வீட்டிலிருந்து களவாக உப்பும் தூளும் கொண்டு வந்து அதே புளியங்காய்களைச் சுவைத்தது இன்னொரு பருவம். எல்லாவற்றையும் விடப் பசுமையாக மனதில் பதிந்திருப்பது அதன் கீழ் இருந்து அரிவரியிலிருந்து என்னோடு கூடவே வந்த நால்வருடன் சேர்ந்து நாம் ஐவருமாகக் கதையளந்ததுதான்.

அந்த ஐவரில் அவளும் ஒருத்தி. நாங்கள் ஐவரும் எப்போதும் நட்பாகவே இருந்தாலும் அவள் எனக்கு எப்போதும் பிரத்தியேகமாகவே தெரிந்தாள். உயரத்தில் நாமிருவரும் கிட்டத்தட்ட ஒரேயளவு என்பதால் ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கைக்காக வரிசைப் படுத்தப் படும் போது நாம் பக்கத்துப் பக்கத்திலேயே வருவோம். இருப்போம்.

அவளுடனான அந்தப் பிரத்தியேகமான உண்மையான நட்பு, அது எப்போ எப்படி வந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவளுக்கு அப்பா இல்லை என்பது சாவைப் பற்றிய அதிக பிரக்ஞை இல்லாத வயதிலேயே எனக்குத் தெரிந்தது. சக்கடத்தாரின் மகள் என்று எல்லோரும் சொல்வார்கள். சக்கடத்தார் ஐந்து பெண்களைப் பெற்று விட்டு திடீரென்று ஒருநாள் அவள் அம்மாவை அம்போ என்று விட்டு விட்டு இறந்து விட்டார். இவள் கடைக்குட்டி.

எப்படியும் அவள் வீட்டில் கஸ்டம் இருந்திருக்கும். ஆனால் கஸ்டத்தின் ரேகையை அவள் ஒருபோதும் யாருக்கும் காட்டியதில்லை. கடைக்குட்டி என்ற செல்லம் அவள் முகத்தில் தெரிந்தாலும் அதை அவள் துர்ப்பிரயோகம் செய்ததில்லை. அவள் அக்காமார் அவளை அப்பா இல்லை என்ற குறை தெரியாமல் மட்டுமல்ல மிக நேர்த்தியாகவும் வளர்த்தார்கள் என்பது அவளைப் பார்த்தாலே தெரியும். காலையிலிருந்து மாலைவரை அவளோடு அருகமர்ந்துதானே எனது பாடசாலை வாழ்க்கையை அனுபவித்தேன். ஒருநாள் அவள் ஒரு பொய் சொல்லியோ அல்லது வகுப்பில் யாரையாவது ஏமாற்றியோ நான் பார்த்ததில்லை. அதையெல்லாம் அப்போது நான் நினைத்ததில்லை. இப்போ நினைத்துப் பார்க்கிறேன். அவளின் நற்குணம் தெரிகிறது. அவளின் திறமையைப் பார்த்து நேர்த்தியைப் பார்த்து பொறாமைப் பட்டவர்கள் உண்டு. அவள் யாரையாவது பார்த்துப் பொறாமைப் பட்டாளா..? அப்படியெதுவும் என் நினைவில் இல்லை.

சந்தி.....! நான் டொக்டரா வருவன். அப்படித்தான் எனக்குத் தெரிந்த நாளிலிருந்து அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். அதனால் "கபொத" உயர்தரத்தில் நான் பிரயோககணிதமும், தூயகணிதமும் படிக்கையில் அவள் எழுந்து உயிரியல் வகுப்புக்கும், தாவரவியல் வகுப்புக்கும் போய் வருவாள்.

அவளுக்குள் இருந்த இன்னொருத்தியை சிவகுமாரனின் மரணத்தின் போதுதான் பார்த்தேன். சிவகுமாரனின் மரணம் எங்கள் எல்லோரையும் பாதித்திருந்தது. ஆனால் அது அவளுள் ஏற்படுத்திய பாதிப்பு எனக்கு சற்று வித்தியாசமானதாக நியமாக அவளை வாட்டுவதாகத் தெரிந்தது. அவளுக்குள் எப்போதும் இருந்த உறுதி சற்று அதீதமாகத் தெரிந்தது. ஆனால் அவள் டொக்டராக வருவாள் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இருக்கவில்லை. அதே கனவோடுதான் அவள் தொடர்ந்தும் படித்தாள். பாடசாலை வாழ்க்கை முடியப் போகும் காலங்களில் அதே புளியமரத்தின் கீழ் இருந்தும், இன்னும் தள்ளி வந்து விளையாட்டு மைதானத்தின் அடுத்த பக்கத்தில் இருக்கும் அப்பா கடை வேலியோடுள்ள கல்லில் இருந்தும் வாய் சிவக்க அப்பா கடைச் சோளப் பொரியைச் சுவைத்த படி நிறையப் பேசினோம். பிரியப் போகும் சோகத்தை மறக்க பசுமை நிறைந்த நினைவுகளே... பாடினோம்.

பாடசாலை முடிந்து பிரிந்த போதும் அவள் டொக்டர்தான் என்ற கனவும் நினைவும் எனக்குள்ளும் இருந்தது. 1983 இல் அவள் உண்ணாவிரதம் இருக்கிறாள் என்ற செய்தி என் காதில் வந்த போதும் நான் என் கனவைக் கலைக்கவில்லை. அவளைச் சீரியஸான நிலையில் தூக்கிச் சென்று விட்டார்கள் என்றறிந்த போது தலை விறைப்பது போலிருந்தது.

பின்னர் ஒவ்வொன்றாகக் காற்றில் வந்த செய்திகள் எனக்குள் நம்ப முடியாததொரு பிரமையைத்தான் ஏற்படுத்தின. மதிவதனியின் திருமணத்தின் பின் அவளது இருப்பு பற்றிய தகவல்கள் வருவது குறைந்து போயின. ஆனால் அவளுடனான அவள் பற்றியதான நினைவுகள் என்னோடு வாழ்ந்தன. அவளது அம்மா வீதியில் என்னைக் கண்டு என் கைபற்றிக் கதறிய போது நானும் அழுதேன்.

நான் ஜேர்மனிக்கு வந்த பின் அவள் என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்தாளாம். பின்னர் 1987, 1988 களில் இந்திய இராணுவத்தின் அட்டகாசக் காலங்களில் மாறு வேடத்தில் ஒரு புலனாய்வாளியாக என் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாளாம். அம்மாதான் எல்லாம் எழுதினா. அவ்வப்போது அம்மா மூலம் அவளும் கடிதங்கள் எழுதி அனுப்பினாள். அம்மாவும் புலம் பெயர்ந்த பின் அவளுடனான கடிதத் தொடர்புகள் குறைந்து குறைந்து ஒரு கட்டத்தில் தொடர்புகள் அற்றுப் போயின. நினைவின் தொடுகைகள் மட்டும் என்னோடு எப்போதும் கூடவே இருந்தன.

இப்போ அவள் செஞ்சோலையின் பொறுப்பாளராம். என்னை ஒரு பொருட்டாக நினைப்பாளா? மனசு சந்தேகப் பட்டது. நேற்றிரவு வெண்புறாவின் உறவுகளில் ஒன்றான தினேஸ் புதுக்குடியிருப்புக்குப் போவதாகச் சொன்னான். ஒரு துண்டுக்கடிதம் "நான் இங்கு நிற்கிறேன்." என்பதைத் தெரியப் படுத்தி மூன்று வரிகளில் எழுதி, "இதை ஜனனியிடம் குடுத்து விடுங்கோ" என்று சொல்லிக் கொடுத்து விட்டேன்.

இன்று மத்தியானம்தான் அதை ஜனனியிடம் கொடுப்பதாகச் சொன்னான். கொடுத்திருப்பானா..? கொடுத்தாலும்...! அவளுக்கு எத்தனை சோலியிருக்கும். அதையெல்லாம் விட்டு விட்டு, சுயநலக்கரியாக ஜேர்மனிக்கு ஓடிவிட்டு, இப்போ நாட்டில் பிரச்சனை இல்லை என்றதும் வந்திருக்கும் என்னைப் பார்க்க வருவாளா..! அல்லது தேவையெண்டால் வந்து பார்க்கட்டுமன், என்று நினைப்பாளா..! நேரமில்லை என்று சொல்லி விடுவாளா..? மனசுக்குள் எத்தனையோ சஞ்சலமான சந்தேகமான கேள்விகள் எழுந்தன.

"அன்ரி என்ன யோசிக்கிறிங்கள்? இளநி ஒண்டு வெட்டித் தரட்டே..? " வெயில் விட்டுப் போன இந்த அந்திக் கருக்கலில் இப்போது என் தனிமையில் தன் தனிமையைப் போக்க வந்தவன் ஹரிகரன். எனக்கு இளநீர் மேல் அத்தனை மோகம் என்பது அவனுக்குத் தெரியும்.

"ஓம் ஹரிகரன். இளநி ஒண்டு குடிக்கலாம்தான்."

இவனுக்குச் சுந்தரம் போல் தொடையோடு கால் போகவில்லை. முழங்காலுக்குக் கீழேதான் இல்லை. தகரக் கால் போட்டிருந்தான். நேற்றுத்தான் Fiber Glass இல் கால் செய்வதற்காக அவனின் கால் அளவு எடுக்கப் பட்டது.

மெல்லிய நொண்டலுடன் நடந்தான். நானும் கூடவே சென்றேன். முற்றத்திலிருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப் புறமாக கறுத்தக் கொழும்பான் மாமரத்துக்குக் கீழ் இருந்த மூலையில் வைத்து இளநீரை வெட்டித் தந்தான். அவனது களங்கமில்லாத அன்பைப் போலவே இளநீரும் இனித்தது.

நான் அதைக் குடித்துக் கொண்டிருக்கும் போதே "அன்ரி ஜனனி அக்காவுக்கு லெற்றர் அனுப்பினனிங்களோ?" கேட்டான்.

"ஓம் ஹரிகரன் தினேசிட்டைக் குடுத்துவிட்டனான். ஆனால் ஜனனி வருவா எண்டு எனக்கு நம்பிக்கையில்லை."

"இல்லை அன்ரி. ஜனனி அக்கா நல்லவ. கட்டாயம் வருவா. "

அவன் எனக்கு இரண்டாவது இளநீரையும் வெட்டித் தந்தான்.

நேரம் 7 மணியைத் தொட்டிருந்தது. 4.30 க்கே கால் தயாரிக்கும் வேலையை முடித்த வெண்புறா உறவுகள் மற்றைய வெளி வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஒவ்வொருவராக வந்து முற்றத்தில் கூடத் தொடங்கினார்கள். சிரிப்பு கதை ரேடியோ என முற்றம் கலகலத்தது.

எனக்குக் குளிக்க வேண்டும் போலிருந்தது. எழுந்து என் அறைக்குச் சென்றேன். திடீரென்று ஒலித்த மோட்டார் சைக்கிள் சத்தத்தைத் தொடர்ந்து "அன்ரி...!" சத்தமான கூப்பிடல்கள். "அன்ரி.....! ஜனனி அக்கா"

நம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிப் பார்த்தேன். அவளேதான். குளுகுளுவென்று செல்லம் கொஞ்சும் முகத்துடன் எனக்குத் தெரிந்த ஜனனி இப்போ கறுத்து மெலிந்து... ஆனால் கண்களுக்குள் அதே பழைய கனிவுடன் மோட்டார் சைக்கிளை பிராந்தியச் செயலகத்தின் முற்றத்தில் நிறுத்தி விட்டு இறங்கினாள். என் கை கோர்த்து நடந்தாள். கிராவல் மண் அவள் உடைகளில் அப்பியிருந்தது. பள்ளிப் பருவத்தில் இருந்த அதே உறுதி பேச்சில் துள்ளி வந்தது.

எனக்குத்தான் சற்று நேரம் பேச்சு வர மறுத்தது. அது சற்று நேரம்தான். பின்னர் பேசினோம் நேரம் போவதே தெரியாமல். சரஸ்வதி பூசையின் போது சரம் கட்டப் பூ காணாது என்று சொல்லி ரீச்சரிடம் அனுமதி பெற்று பூப்பறிக்கப் போகும் சாக்கில் அவள் என் வீட்டுக்கு வந்தது பற்றி, அவள் கொண்டுவரும் கத்தரிக்காய் பொரியலும் பிட்டும் எனக்கு மதிய உணவாக, எனது தோசையும் சம்பலும் அவளுக்கு மதிய உணவானது பற்றி, புளியமரத்தின் கீழ் இருந்து கதையளந்தது பற்றி...! அவள் போராட்ட வாழ்க்கை பற்றி...., செஞ்சோலைக் குழந்தைகள் பற்றி.....! என்று கதைகள் பல் வேறு திசைகளில் நீண்டு விரிந்தன. வெண்புறா உறங்கிய பின்னும் நாம் பேசிக் கொண்டிருந்தோம். சேர்ந்து சாப்பிட்டோம்.

கடமைக்கு வந்தது போல் அந்த ஒரு நாளுடன் அவள் ஒதுங்கிக் கொள்ளாமல் தொடர்ந்தும் என்னைத் தேடி வந்தாள். தனது 109.. இலக்க மோட்டார் சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு திரிந்தாள். குழந்தைகள் போலப் பேசினோம். சிரித்தோம். அவளும் என்னைப் போலவே என்னைத் தன் நினைவுகளால் தொட்டுக் கொண்டு வாழ்ந்திருக்கிறாள். செஞ்சோலைப் பிள்ளைகளுடன் என்னைப் பற்றிப் பேசியிருக்கிறாள்.

எந்த ஒரு போராட்டமும் அவள் நினைவுகளைப் பறிக்கவில்லை. அவளை அவள் இயல்பிலிருந்து மாற்ற வில்லை. அவள் அவளாகவே இருந்தாள். அதே நட்புடன் பேசினாள்.

"அன்ரி...! அப்பிடி நேரம் போறதே தெரியாமல் ஜனனி அக்காவோடை மணித்தியாலக் கணக்கிலை என்னதான் கதைக்கிறனிங்கள்?" வெண்புறா உறவுகள் என்னைச் செல்லமாகச் சீண்டினார்கள்.

அவளுடனான அந்தப் பொழுதுகள் அர்த்தம் நிறைந்தவை. நட்பின் ஆழத்தைச் சொல்பவை. ஆயுதந் தூக்கிய அவர்களுக்குள்ளும் ஈரம் இருப்பதை எனக்கு உணர்த்தியவை. இன்னும் பசுமையாய் எனக்குள் பதிந்திருப்பவை.

அவள் டொக்டராக வராவிட்டால் என்ன..? நான் மூன்று குழந்தைகளுக்குத்தான் அம்மா. அவள் செஞ்சோலையின் இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் அம்மா. அவளைப் பற்றிய நினைவுகள் இன்னும் எனக்குள் உயர்ந்து...!

சந்திரவதனா
யேர்மனி
August - 2002

Sunday, July 23, 2006

செல்வாவுடன்

பத்து மணிக்கு செல்வா வருவாள் என்பதால் சற்று அவசரமாய் இருந்தேன். அவளின் எலக்ரோனிக் கை செய்வதற்கு இன்று அளவெடுப்பதாக ஏற்பாடு.

நேற்று அண்ணன் பிரபாகரன் அவர்களிடம் போனபோது யேர்மனிய செயற்கை உறுப்புத் தயாரிக்கும் தொழில்நுட்பவியலாளர் ஹொல்கர் தாமும் எம்முடன் வந்திருந்தார்.

அண்ணையுடன் கதைக்கும் போது  தகரமல்லாத Fiberglass இல் செயற்கைக் கால்களைச் செய்வதிலுள்ள நன்மைகளையும், செயற்பாடுகளையும் பற்றி விளக்கினேன்.

அப்போதுதான் 1990 இல் பலாலித் தாக்குதலின் போது இரு கைகளையும் இழந்து விட்ட செல்வாவின் கதை வந்தது. BBCயின் விவரணம் ஒன்றின் போது உறுதியோடு பேசிய செல்வாவை சந்திக்க வேண்டுமென்றதொரு ஆர்வம் என்னுள் இருப்பதை அண்ணனுக்குத் தெரியப் படுத்தினேன். நவம் அறிவுக்கூடம் போயும் அவளைச் சந்திக்க முடியாது போனது பற்றி ஆதங்கப் பட்டேன்.

"அவ நவம் அறிவுக் கூடத்திலை இல்லை. இங்கை கிட்டத்தான் இருக்கிறா" என்று அண்ணை சொன்னார். அவவின் அந்த நிலை பற்றிப் பேசும் போது அவவுக்கு கை போட்டால் என்ன..? அது முடியுமா..? என்ற கேள்விகள் எம்முள் எழ அது பற்றி  ஹொல்கரிடம் கேட்டோம்.

கையில்லாத போதும் மனவலிமையோடு வாயாலும், காலாலும் எலக்ரோனிக் துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் செல்வா சில பொழுதுகளின் பின் அழைத்து வரப் பட்டாள். என் விருப்பத்துக்கு அமைய வாயால் ஒரு கவிதை எழுதித் தந்தாள். வியப்பாய் இருந்தது.

அவளை பரிசோதித்த ஹொல்கர் "இயலாது கஷ்டம் நிறைய செலவாகும்" என்று சொல்லி விட்டார். அண்ணை "செலவைப் பற்றிப் பிரச்சனையில்லை. அதை நான் தருகிறேன்" என்றார். அதன் விளைவாகத்தான் அவள் இன்று வருகிறாள். 

இன்று அளவெடுத்து அதைப்  Plaster of Paris இல் செய்து யேர்மன் கொண்டு சென்று அவளுக்கு அளவான கை செய்வதாகத் திட்டம்.  இரு கைகளும் அடியோடு இல்லாத நிலையில் கையைப் பொருத்துவதற்கு பிடிமானமாக ஒன்றுமில்லாத நிலையில் கையைச் செய்து முடிப்பதென்பது எவ்வளவு கடினமானது என்று அடிக்கடி ஹொல்கர் சொன்னார்.

ஆனாலும் ஒரு துணிந்த முயற்சி. அண்ணன் கேட்டு விட்டார் என்பதற்காக மட்டுமல்லாமல் 13 வருடங்களாக கை இல்லாமல் இருக்கும் ஒரு 25 வயதுப் பெண்ணுக்கு கை கொடுத்து உதவ வேண்டுமென்ற ஆர்வமும் எமக்குள்.

அதற்காக சனிக்கிழமை வன்னியிலிருந்து புறப்படுவதை திங்கள் வரைக்கும் தள்ளிப் போட்டோம்.

பத்து மணிக்குச் சற்று முன்னரே (1.6.2002) அவள் வந்தாள். போராளி இன்சுடர் துணைக்கு வந்தாள். அவர்களை ஏற்றி வந்தது ரேகாதான்.

இந்த அமளிக்குள்தான் எனக்கு டுபாய் புட்டவித்துக் காட்ட அண்ணன் புகழோவியனையும் நிமலனையும் அனுப்பியிருப்பது தெரிய வந்தது. பிட்டை இரவு அவிப்பதாகத் தீர்மானித்துக் கொண்டோம்.

அன்றைய பகற் பொழுது எனக்கு செல்வாவுடனே கழிந்தது. மாலை 4 மணியளவில் அரசியல் துறை அலுவலகத்துக்குச் சொந்தமான குசினிக்கு சாருவுடன் சென்றேன். செல்வாவும், இன்சுடரும் கூட வந்தார்கள்.

அங்கே நிமலனும் புகழோவியனும் எனக்காக எல்லாவற்றையும் வெட்டி வைத்து விட்டுக் காத்திருந்தார்கள். அடுப்பு கதகத வென்று எரிந்து கொண்டிருந்தது.

புகழோவியன் அடுப்போடு நின்றார்.  நிமலன் எனக்கு விளக்கத் தொடங்கினார்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite