Thursday, July 29, 2004

சினிமாப் பாடல்கள் - 12




தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

பாடியவர்கள் - இளையராஜா ஜானகி
இசை - இளையராஜா
படம் - அவதாரம்


கண் இல்லாமல் காதலே இல்லையென்பது இன்னும் பல பேரின் வாதமாயுள்ளது.
ஆனால் தினமும் கண்களால் எத்தனையோ பேரைக் காண்கிறோம். எத்தனையோ கண்களை நேருக்கு நேர் சந்திக்கிறோம். அத்தனை கண்களும் காதல் வயப் பட்டு விடுகின்றனவா? இல்லையே! காரணம் அங்கு மனங்கள் இணையவில்லை.

மனங்கள் இணையும் போதுதான் அங்கு நியமான காதல் மலர்கிறது. பார்த்த மாத்திரத்தில் சிலரின் அழகில் மயங்கிப் போவதுண்டுதான். ஆனால் அது வெறும் அழகின் கவர்ச்சி. பழகும் போது மனம் இணையவில்லையானால் அந்த அழகின் கவர்ச்சி மெதுமெதுவாகக் குறைந்து விடும்.

அத்தோடு கண்களின் கலப்பில் மட்டுந்தான் காதல் மலரும் என்றால் இந்த உலகில் அழகில்லாத எவருமே காதலைச் சந்தித்திருக்க மாட்டார்கள்.
சேர்ந்து பழகும் போது மனங்களின் சங்கமிப்பில் அழகில்லாதவர்கள் கூட அழகாகத்தான் தெரிவார்கள். எல்லாமே மனங்களில்தான் தங்கியிருக்கிறது.

அதைத்தான் இப்பாடலும் சொல்கிறது.

இப்பாடல் இடம் பெற்ற அவதாரம் படத்தை நினைத்தாலே ரேவதியினதும் நாசரினதும் அருமையான நடிப்புத்தான் நினைவில் வருகிறது. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வகையில் மிக நல்ல திரைப்படங்களில் இவ் அவதாரம் படமும் ஒன்றாக உள்ளது.

இதில் கண்பார்வையற்ற ரேவதிக்கும், நாசருக்கும் இடையில் ஒருவர் மீதொருவர் காதல் வருகிறது. இந்தக் காதல் கூட மனங்களின் இணைவில்தான் வருகிறது.

ரேவதிக்கு வெளியுலகம் எப்படியிருக்கும், வர்ணங்கள் எப்படியிருக்கும் என்று அறிந்து கொள்வதில் ஆர்வம். எல்லாம் மனம்தான். மனங்களின் எண்ணம்தான் வண்ணம் என்பதை நாசர் பாடலினாலேயே சொல்லி, ரேவதியை ஆறுதல் படுத்துவது அருமையாக உள்ளது.

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா


உண்மையிலேயே எப்படித்தான் வண்ணம் வண்ணமாக எங்கள் முன் எல்லாம் கொட்டிக் கிடந்தாலும், எமது மனதுக்குள் சந்தோசம் இல்லையென்றால், எந்த வண்ணமும் எங்களை அவ்வளவாகக் கவராது. அதே நேரம் எமது மனது சுத்தமாய், சந்தோசமாய் இருக்கும் போது எல்லாமே அழகாய் வண்ணம் வண்ணமாய்த் தெரியும்.

தென்றல் வந்து தீண்டுவதைக் கண்களால் பார்க்க முடியாது. திங்களின் குளிர்ச்சியையும் கூடப் பார்க்க முடியாது. இவைகளை உணரத்தான் முடியும்.
உணர்தலின் போது மனசுக்குள் தோன்றும் உவகைக்கு இணையாக உலகில் வேறெந்த சந்தோசங்களும் இருக்க முடியாது. எங்கள் எண்ணங்கள்தான், எங்கள் மனசின் பார்வையில் தோன்றுபவைதான் நியமான சந்தோசங்கள். அந்த சந்தோசங்களின் வர்ணங்களை தீட்ட முடியாது.

அதைக் கவிஞர் அழகாகச் சொல்லியுள்ளார். இளையராஜாவினதும், ஜானகியினதும் குரல்கள் பொருத்தமாக இணைய, ரேவதியும் நாசரும் காட்சியுடன் கலந்து நடிக்க, இசையுடன் இணைந்து இனிமையாகிவிட்ட அருமையான பாடல்.

பாடலைக் கேட்கும் போதும், வர்ணம் வர்ணமாய் ஊற்றிய படியுள்ள அந்தப் பாடல் காட்சியில் ரேவதியையும் நாசரையும் பார்க்கும் போதும் மனதுக்குள் ஏற்படும் அந்த சிலிர்ப்பான உணர்வை வார்த்தையில் வடிக்க முடியவில்லை.
வார்த்தையில் வடிக்க முடியாத ஏதோ ஒன்று மனசுக்குள் ஒரு நியத்தை உணர்த்துவதை மட்டும் நன்கு உணர முடிகிறது.

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை இந்த உலகம் அது போலை
ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போலை

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை


3.9.1999

Wednesday, July 21, 2004

எங்கள் வீட்டில் ஒரு புதிய பூ பூத்திருக்கிறது.




நானும் எனது கணவரும் எமது பேரக்குழந்தை நதியுடன்.
Nathi born on 20.07.2004 at 12.30AM in Schwaebisch Hall, Germany

அவர்கள் எப்போதும் குழந்தைகள்தான்.

செல்வராஜின் பதிவை வாசித்த போது கண்கள் கலங்கி விட்டன.

எனது பிள்ளைகள் அவர்களே பெற்றோராகுமளவுக்கு வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். ஆனாலும் பல சமயங்களில் என் சிந்தனை ஓட்டத்தில்
- அவர்கள் சிறியவர்களாக இருக்கும் போது
நான் அந்த விடயத்தில் பிழை விட்டு விட்டேன்.
அந்த சந்தர்ப்பத்தில் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. –
போன்றதான குற்ற உணர்வுகள் தோன்றும்.

ஆனால் என் மகள் கர்ப்பமாக இருந்த போது
"அம்மா நான் உங்களைப் போல ஒரு நல்ல அம்மாவாக என் குழந்தைக்கு இருப்பேனோ என்று சந்தேகமாக இருக்கிறது." - என்று அடிக்கடி சொல்லுவாள்.

நேற்று என் மகனுக்குக் குழந்தை பிறந்து விட்டது.
அவன் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது நியூ படத்துக்காக உன்னி கிருஸ்ணன் பாடிய அம்மா சம்பந்தமான ஒரு பாடலைப் போட்டுக் கொண்டு வந்தான்.
இப்படியான சமயங்களில் குற்ற உணர்வுகள் பறந்து மனசு இலேசாகி விடுகிறது.

ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால்..
குழந்தைகளும் வளர்ந்த பின் பெற்றோர்களது சின்னச் சின்னத் தவறுகளைப் பெரிதாக நினைத்துக் கொண்டிராமல் பசிக்குதுப்பா என்ற போது பால் வார்த்துக் கொடுத்த அப்பாவின் அன்பு போன்ற, அம்மா அப்பாவின் அன்பு தோய்ந்த சின்னச் சின்ன விடயங்களையெல்லாம் நினைத்து நினைத்துத்தான் நெக்குருகுவார்கள்.

சிந்து


Tuesday, July 20, 2004

எவ்வளவு பணம் கொடுக்கிறாய்?


முன்னர் தாயகத்தில் இருந்த காலத்தில் எனது பெயர் ஏதாவது சில ஆக்கங்களின் மூலம் தினமும் குறைந்தது மூன்று நான்கு தடவைகளாவது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிக்கும்.

இதை வைத்து எனக்கு வரும் கடிதங்கள் ஏராளம். இவைகளில் பாராட்டுக்கள் ஒரு புறம் இருக்க, மிகவும் அநாகரீகமாகத் திட்டித் தீர்ப்பவையும் இருக்கும்.

அனேகமானோர் என் மீது வைக்கும் குற்றச்சாட்டு
இலங்கை ஒவிபரப்புக் கூட்டுத்தான அறிவிப்பாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்து உங்கள் பெயரை வானொலிலியில் வர வைக்கிறீர்கள் என்பதாகவே இருக்கும்.

அவர்கள்தான் முகம் தெரியாதவர்கள். பரவாயில்லை என்று விட்டு விட்டேன். ஒரு தரம் என்னோடு க.பொ.த உயர்தரம் வரை படித்த ஒரு நண்பியிடம் இருந்து வந்தது. அவள் அப்போது கொழும்பில் கடமையில் இருந்தாள். எத்தனையோ ஆக்கங்களை எழுதிப் போட்டாளாம். ஒன்றுமே ஒலிபரப்பாகவில்லையாம். அவளும் இப்படியான சில
எவ்வளவு பணம் கொடுக்கிறாய்?
எந்த அறிவிப்பாளர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறாய்?

போன்ற கேள்விகளுடன் கடிதமெழுதினாள்.
நான் இன்றுவரை அவளுக்குப் பதில் எழுதவே இல்லை.
ஆனாலும் அடிக்கடி இந்தக் கேள்விகள் என் நினைவுகளில் வந்து போகும்.

இன்று சத்யராஜ்குமார் வலைப்பூக்களில்,...
எழுத்துலகத்துடனான இப்படியான மூட நம்பிக்கைகளைத் தொட்டிருக்கிறார்.
எனக்குத் திருப்தியாக இருக்கிறது.

Monday, July 19, 2004

வலைவலம் 19.7.2004


Description ஐ எப்படி எழுதுவது என்று யோசிக்கிறீர்களா? கவலையே வேண்டாம். பேசாமல் இந்தப் பக்கத்துக்குப் போங்கள். குசும்புவதற்கென்றே இருக்கிறாரே ஒருவர். அவர் இலவசமாக உங்களுக்கு எழுதித் தருவார். நல்ல Description எழுதித் தந்து விட்டார் என்ற சந்தோசத்தில் இந்த தினத்துக்கு அவருக்கு வாழ்த்து அனுப்பி விடாதீர்கள். தனக்கு வேண்டாமென அவர் ஏற்கெனவே அறிவித்து விட்டார்.

அத்தோடு தேடியில் தேடும் போது உங்கள் பெயருக்கான சுட்டிகள் அதிகமாக இருக்க வேண்டும் என்ற சின்னச்சின்ன ஆசையேதாவது உங்களுக்கு இருக்கிறதா? அதற்கும் இணைய குசும்பன் தருகிறார் ஐடியா. இதைச்சுட்டிப் பயன் பெறுங்கள்.

துகள்கள் சத்யராஜ்குமாரின் என்னை எழுதியவர்கள் எட்டாவது அங்கமும் தமிழ்ஓவியத்தில் வந்து விட்டது.
நாவலை நான் அனுப்பி வைக்க - நாலைந்து வாரங்கள் கழித்து கோயமுத்தூர் பூராவும் என்னுடைய பெயரைத் தாங்கி போஸ்டர்கள். பெட்டிக் கடைகளில் பெயர் தொங்குகிறது. கூடப் படிக்கும் நண்பர்கள், " என்னங்க நீங்க கதை எழுதுவிங்களா? சொல்லவே இல்லை? பெரிய ஆளா நீங்க? " என்று சூழ்ந்து கொண்டார்கள். உடன் படிப்பவர்களும், ப்ரொ·பஸர்களும் எனக்குப் பாராட்டு விழா நடத்தியே தீருவது என்று முடிவெடுத்தார்கள். குன்னூருக்கு அப்புறம் மாலை போட்டு மறுபடி ஒரு பாராட்டு விழா.
வாசிக்கும் போது எனக்கே தலைக்குள் ஒரு சந்தோசக் கிறுகிறுப்பு. சத்யராஜ்குமாருக்கு அப்போது எப்படி இருந்திருக்கும்?

இம் முறை இவரது சிறுகதை ஒன்றும் தமிழ்ஓவியத்தை அலங்கரித்துள்ளது. இன்னும் வாசிக்கவில்லை. கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

கும்பகோணம் விபத்தை இங்கிருந்தே தொலைக்காட்சியில் பார்த்து வெந்தோம். இதையிட்டு மனம் புழுங்கியவர்களில் மாயவரத்தானும் ஒருவர்.
குழந்தைகள் பாடசாலைகள் என்னும் போது அவை எந்தளவுக்குப் பாதுகாப்புடன் அமைக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு இத்தனை அசிரத்தையாக இருந்திருக்கிறதே! இங்கு யேர்மனியில் இப்படியான விடயங்களில் மிகுந்த அக்கறை செலுத்தி, மிகுந்த பாதுகாப்புகளுடனேயே ஒவ்வொரு பொதுக் கட்டிடங்களையும் கட்டுவார்கள். கட்டுவதோடு விட்டு விடாமல் அடிக்கடி அதன் பாதுகாப்புத்தன்மையைப் பரிசோதித்துக் கொள்வார்கள். இந்த விதமான தன்மை, இந்தியா போன்ற நாடுகளிலும் வரவேண்டும். பணமில்லையென்ற சாட்டுக்கள் தவிர்க்கப் படவேண்டும். மக்களில்.. நாட்டின் நலனில்.. நாட்டின் முன்னேற்றத்தில்... என்று ஒவ்வொரு விடயத்திலும் அக்கறை கொள்ளும் படியான செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட வேண்டும். இப்படியான இடங்களில் வேலைக்கமர்த்தப் படுபவர்கள் சமூகப்பிரக்ஞை உள்ளவர்களாக, இருக்க வேண்டும்.

Friday, July 16, 2004

மூக்குத்தி


நிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை. ஆனால் மூக்குத்தி அடிமைச்சின்னம் என்கிறார் மயூரன்.

உண்மையில் என்ன?
ஆதிகாலத்தில் இவையெல்லாம் காரணத்தோடுதான் செய்யப் பட்டன. இடையிலே எப்படியோ அடிமைச் சின்னங்களாகி விட்டன.

உதாரணமாக,
 பூக்களுக்கு பஞ்சினைப் போல ஈரத்தை உறிஞ்சும் இயற்கையான தன்மை உண்டு. அதனால் Hair drier இல்லாத அந்தக் காலத்தில் கூந்தலில் நிறையப் பூக்களைச் சூடி தலையைக் காய வைத்தனர். ஆனால் கணவனை இழந்த பின் தலை ஈரத்தோடே இருக்கலாம் என்பது போல, கணவனை இழந்த பெண்கள் பூச்சூட மறுக்கப் பட்டது எப்போது வந்தது? ஏன் வந்தது என்பது கேள்விக்குறியே.  
 
மூக்கு குத்துவதினாலும், காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.   
 உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள். ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.  மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். 
 
மூக்குக் குத்துவற்கு இப்படிப் பல காரணங்கள் உண்டு. மூக்குத்தி அணிவதால் பல நன்மைகள் உண்டு. ஆனால் கணவனை இழந்ததும் பெண் மூக்குத்தியைக் கழற்ற வேண்டுமென்பது  எப்படி வந்தது என்பது  தெரியவில்லை. அப்படிக் கழற்றும்  போதுதான் மூக்குத்தி அடிமைச்சின்னமாக மாறுகிறது. 
 
இத்தனை நன்மைகள் இருந்தும் நான் மூக்குக் குத்தவில்லை.
மூக்கைக் குத்தும் போது வலிக்கும் அல்லவா! 

Thursday, July 15, 2004

வலைவலம் - 15.7.2004


A 5-year-old boy cries as his father is pulled from Leonard Pond yesterday afternoon. Framingham Police Officer Mike Degnan, right, and the boy's grandfather try to console him. (Staff photo by Bill Thompson)
மரணத்தை வென்ற துயரத்தை
இந்த மானுடர் சந்தித்திருப்பாரோ...?
வாழ்வை முடித்து விட்ட ஒரு இனியவனின் கதை
இவன் குடும்பத்தில் துயரம் இனி ஒரு தொடர்கதை

பூவினால் பூத்தது. நாங்கள் புலத்தில் தமிழர்கள் ஏன் தமிழர்கள் இல்லாத இடம் தேடி ஓடுகிறார்கள் என்று ஆராயும் போது, பொறாமைப் பட வைக்கிற மாதிரி வலைப்பூ நண்பர்கள் புது அப்பா மெய்யப்பன், கீழக்கரைக்குப் புதுசா வந்த இரமணீதரன், பதிவுப் புயல் (காசா பணமா ஒரு பட்டத்தை நீங்களும் வச்சுக்கங்க பாலா) பாஸ்டன் பாலாஜி, வம்புணி சித்தர் கார்த்திக்ராமாஸ், அப்புறம் அமைதியான சுந்தரவடிவேல் எல்லாரும் சந்தித்திருக்கிறார்கள்.
கூடித்தான் வாழ வேண்டும் என்று சொல்லி கிட்டக் கிட்ட இருந்து கிண்டுப் படுவதை விட, கிட்ட இருந்தால் முட்டப் பகை என்பதற்கமைய தள்ளித் தள்ளி இருந்து கொண்டு, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எங்கோ ஒரு இடத்தில் இப்படிக் கூடிச் சந்தித்துக் கொள்வது உண்மையிலேயே இன்பமான பொழுது.

Tuesday, July 13, 2004

வலைவலம் - 13.7.2004


ஷ்ரேயாவின் பழைய குருடி கதவைத் திறடி மாதிரி ஒன்று..
எனக்குத் தெரிந்த இளம் பெண்ணெருத்தி கர்ப்பமா இருக்கிறா.
அவவுக்கு பொம்பிளைப் பிள்ளைதான் என மருத்துவர் சொல்லி விட்டார்.
என்னிடம் நல்ல தமிழப் பெயரா செலக்ட் பண்ணித் தரச் சொன்னா.
"முல்லை " என்றேன்.
"ஐயோ அதென்ன முள்ளு எண்டு.
எனக்கு அந்தப் பெயர் வேண்டாம்" என்றா.
"அலை" என்றேன்.
"ஐயோ என்ரை பிள்ளையை அலையச் சொல்லுறிங்களோ?
அதுவும் வேண்டாம்" என்றா.

குரல் இதழ் பற்றி அறிந்திருக்கிறீர்களா?
திசைகள் மாலன் அவர்கள் ஒரு பரிசோதனை முயற்சியாக ஆவணி மாதம் வாரமொருமுறை ஒரு குரல் இதழைத் தர முயற்சிக்கிறாராம். பார்ப்போமே...! இல்லை கேட்போமே..!

சோடா பாட்டில் கேள்விப் பட்டிருக்கறீங்களா? நானும் ஏதோ அடிபிடிப் பிரச்சனைகாரனாக்கும் என்று நினைத்துக் கொண்டு போனேன். ஹட்சன் நதிக் கரையிலிருந்து இவ் வார வலைப்பூ ஆசிரியராக வந்திருக்கிறார். தமிழ் வலைப்பதிவுகளில் எந்தெந்த விஷயங்கள் பேசப் படுகின்றன? எதெல்லாம் பேசப் படுவதில்லை? என்று ஒரு unscientific ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறார். நீங்களே நேரே போய்ப் பாருங்கோ. சோடாப்போத்தல் ஏதாவது தலையிலை விழுந்தால் நான் பொறுப்பில்லை.

ஜெயந்தியின் நுடம் சிறுகதைக்கு அமரர் கல்கி நினைவுப் போட்டியில் முதற் பரிசு கிடைத்திருக்கிறது. ஜெயந்தி எமக்கெல்லாம் அறிமுகமானவர்தான். சில வாரங்களுக்கு முன் வலைப்பூ ஆசிரசியராகவும் இருந்தார். தோழியரிலும் இவரது ஆக்கங்களைக் காணலாம். இன்னும் சமச்சார், திண்ணை, திசைகள், தமிழ்ஓவியம்... என்று பல்வேறு தளங்களில் இவரது
படைப்புக்கள் உள்ளன.

Monday, July 12, 2004

புலத்தில் உங்களுக்கு அருகில் தமிழர்கள்


புலத்தில் உங்களுக்கு அருகில் தமிழர்கள் இருப்பது நல்லதா கெட்டதா
என்பது பற்றியதான கருத்தாடலொன்று யாழ்கருத்துக்களத்தில் என் கவனத்தை ஈர்த்தது.

அனேகமான தமிழர்கள், தமிழர்கள் இல்லாத இடம் தேடி ஓடுகிறார்கள். ஏன்..? கேள்விக்குறிதான்.

யதார்த்தமாகச் சிந்தித்துப் பார்த்தால் காரணங்கள் புரிகின்றன.

புலம் பெயர்ந்த பின் தனிமை என்ற ஒன்றைக் கண்டு வெகுண்டு...
எங்காவது ஒரு தமிழ் முகத்தைக் கண்டாலே மகிழ்நது...
தமிழ்க் குரலுக்காக ஏங்கி....
தமிழ் எழுத்துக்களையே காணாது வாடி....
இன்று தமிழர்கள் இல்லாத இடம் தேடி ஓடுமளவுக்கு வந்து விட்டுதே.

ஏன்...?

புலத்தில் உங்களுக்கு அருகில் தமிழர்கள் இருப்பது நல்லதா கெட்டதா எனக் கேட்கும் போது எடுத்த உடனே தமிழர்கள் இருப்பது நல்லதில்லை என்று சொன்னால் அது ஏதோ நாம் தமிழரை வெறுக்கிறோம் என்ற காட்சிப் பிரமையையே ஏற்படுத்தும். ஊரிலே தமிழர்களுடன் வாழவில்லையா என்ற கேள்வி எழும்.

வாழ்ந்தோம்தான்.
அப்படி வாழ்ந்த நாங்களும் எங்களோடு வாழ்ந்தவர்களும்...
தமிழர்கள் என்பதையும் கடந்து அடியடியாக வந்த உறவுகள். எம்மோடு ஒத்து... அதாவது ஓரளவுக்காவது எமது நடைமுறைக்கு.. எமது பழக்கவழக்கங்களுக்கு.. என்று ஒத்து வாழப் பழக்கப் பட்டவர்கள். ஒரு கூட்டாக எம்மோடு வாழ்ந்தவர்கள். அது மட்டுமன்றி அடி, நுனி என்று அவர்தம் பரம்பரைப் பழக்க வழக்கங்கள் கூட எமக்குத் தெரிந்திருக்கும்.

இந்தக் குடும்பத்துடன் இந்தளவுக்குத்தான் சகவாசம் வைக்க வேண்டும் என்னும் கணக்குப் போட்டு வைக்கும் அளவுக்கு ஓரளவுக்கேனும் ஒவ்வொரு குடும்பத்தையும் அறிந்து வைத்திருப்போம்.

ஆனால் புலம் பெயர் மண்ணில் அப்படியில்லையே.
சந்திப்பவர்களில் எத்தனையோ பேர் தேவை கருதிப் பழகிவிட்டு, சமயம் வரும் போது உதைத்து விடுபவர்களாக இருக்கிறார்கள். நட்பென்று சொல்லிக் கரம் நீட்டி விட்டு தருணம் பார்த்து முறித்தெறிய முனைகிறார்கள். அவர்களது சுயரூபமோ, குணாதிசயமோ எடுத்த எடுப்பிலேயே எங்களுக்குத் தெரிந்து விடுவதில்லை. சிலரின் அநாகரீகமான பழக்க வழக்கங்களுடன் ஒன்ற முடிவதில்லை.

தனிமை, அந்நியச் சூழ்நிலை... என்ற ஒரு அந்தர நிலையில் தமிழர் என்று கண்ட உடனே மகிழ்ச்சியில் திளைத்து... அவர்கள் பற்றி எதுவுமே தெரியாமலே, நண்பர்களாக மதித்து வீடுகளுக்குள் அனுமதிக்கிறோம். அது மட்டுமா..? இதயத்தையே திறந்து பேசுகிறோம். காலப்போக்கிலோ அன்றி ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலோ... நண்பர்கள் என்று நம்பியவர்களின் ஏமாற்றுச் செயல்களால் ஏமாந்து போகிறோம்.

இது இன்று நேற்றல்ல. பலகாலமாக புலத்தில் தொடர்கிறது. இது போன்றதான சில சம்பவங்கள்.. நடைமுறைகள்.. போன்றவற்றின் பிரதிபலிப்புத்தான்
"தமிழர்களோ...! அங்கே வேண்டாம்." என்ற குரல்கள்.

அது மட்டுமன்றி ஐரோப்பியர்கள் பெரும்பாலும் தமது வீட்டுப் பிரச்சனைகளை விடுத்து, அடுத்த வீட்டுப் பிரச்சனைக்குள் தலை போடுவதில்லை. ஆனால் எமது தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமது வீட்டு பிரச்சனைகளை மூடி மறைத்து விட்டு, அடுத்த வீட்டுக்குள் என்ன நடக்கின்றதென்று பார்த்து, அதற்கு கை, கால், மூக்கு, வாய்... என்று வைத்து இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி ஊருக்குப் பறை சாற்றுவதில் இன்பம் காண்பார்கள்.

இதெல்லாம், தாம் உண்டு. தம் வேலை உண்டு என்று வாழும் தமிழருக்கு தலையிடி கொடுக்கும் விடயங்களே. இப்படியான பல பிரச்சனைகளிலிருந்து தப்பிக் கொள்வதற்காகத்தான் பல தமிழர் எந்தச் சோலியும் வேண்டாம். பேசாமல் ஒரு மூலையில் இருப்போம் என்று நினைத்து, தமிழர்கள் யாரும் இல்லாத இடமாகப் பார்த்து வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.

இவர்களை நாட்டுப்பற்றல்லாதவர்களென்றோ, தமிழ்பண்பாடு இல்லாதவர்கள் என்றோ நினைத்து விடாதீர்கள். கூடி இருந்து குழப்பம் விளைவிப்பவர்களை விட, தனித்திருந்து அமைதியாக வாழ விரும்பும் இவர்களிடம் அனேகமாக நல்ல பண்புகளே இருக்கும்.

அதே நேரம், சிலர் இளைஞர்களினாலான பிரச்சனைகளே தமிழர்கள் தனித்து வாழ விரும்புவதற்கான காரணம் எனக் கருதுகிறார்கள். அதை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ள முடியாது. சில இடங்களில் இளைஞர்களின் வரம்பு மீறல் சற்று அதீதம்தான். அதையும் விட மேலான பல பிரச்சனைகள் பெரியவர்களாலேயே ஏற்படுகின்றன.

Saturday, July 10, 2004

வலை வலம் 10.7.2004


புது வரவு


எனது பார்வை மெய்யப்பன், சுஜா தம்பதியினரின் வீட்டில் ஒரு புதுக் கதிர்.

நிலாமுற்றம் திவாகரன் புதிதாக தொடங்கவிருக்கும் இணையத்தளத்துக்கு கவிதைகள் கட்டுரைகள் சிறுகதைகள் கேட்கிறார்.
அனுப்ப வேண்டிய முகவரி - info@ulagatamilan.tk

Big Brother உங்களைக் கவனிக்கிறார்.

Friday, July 09, 2004

ஈழத்தில் இந்திய இராணுவக்காலம்

நூல்தொகுப்பு -

ஒரு அறிவித்தல்


ஒல்கார்

"அமைதிப்படை" என்ற பெயரில் ஈழத்தில் இந்திய இராணுவம் இருந்த காலகட்டத்தைப்பற்றி எழுந்த சிறுகதைகள் கட்டுரைகளுக்கான தொகுப்பு. இந்திய இராணுவத்தால் ஏற்பட்ட பாதிப்பின் (கவிதை நீங்கிய) பிறவெளிப்பாட்டு வடிவங்களையும் தேடுகின்றோம்.

இந்திய இராணுவத்திடம் பெற்ற அனுபவங்களையோ நீங்கள் பார்த்தவற்றையோ கேட்டவற்றையோ கதைகளாகக் கட்டுரைகளாக எழுதியிருந்தால் அனுப்பலாம். இனி எழுத நினைப்பவர்களும் எழுதி அனுப்பலாம்.

அல்லது இந்திய இராணுவம் பற்றிய உங்கள் அனுபவங்களைப் பதிவு செய்ய விரும்பியும் உங்களால் எழுத முடியவில்லையாயின் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் அதைப் பதிவுகளாக்குவோம்.

நாட்களின் நகர்வுகளில்
ஞாபகங்களின் உடைவில்
காயங்கள் ஆறுவதும்
ஆற்றப்படுவதும் இயல்பு

தேசத்தின் வேர்களில்
நெருப்பள்ளிக் கொட்டியவரை
வானத்தின் மீது
இருளள்ளிப் பூசியவரை
மறக்கவும் முடியவில்லை
மன்னிக்கவும் முடியவில்லை
இன்னும்..........

படைப்புக்களை யூலை 31ந் திகதிக்குள் எதிர் பார்க்கிறார்கள்.
எழுத்துருவம் பாமினியில் இருக்க வேண்டுமென்பது அவர்களது தாழ்மையான வேண்டுகோள்.


படைப்புக்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி

POBox # 63617; 1571,
Sandhurst circle
Toronto-ON
Canada
M1V 1V0
Tel: 416-841-5172 : Email: tamilvoice@hotmail.com

Thursday, July 08, 2004

வந்தவர்களும் வராதவர்களும்


நிலாமுற்றம் திவாகரன் சித்திரை 17க்குப் பின் மீண்டும் இப்போ வந்துள்ளார்.

நிர்வியாவும் Torontoவில் கும்மாளமடித்து விட்டு வந்திட்டார்.

உதயாவின் மனமுற்றம் நீண்ட நாட்களாகக் கவிமழையின்றி வரண்டு கிடக்கிறது.

நாட்டாண்மை வரவேயில்லை.

Wednesday, July 07, 2004

ஆச்சரியமான சந்தோசங்கள்


கரிகாலனின் மனவெளியிலிருந்து...
சில தினங்களுக்கு முன்னர் கூகிளில் ஒரு விடயம் சம்பந்தமாக தேடிக்கொண்டுஇருந்தேன்.பின்னர் கரிகாலன் என்றபெயரினை உள்ளிட்டு தேடிப்பார்த்தேன். முதலாவதாக எனது வலைபதிவையும் பின்னர் வேறு பல தளங்களையும் பட்டியல் இட்டு காட்டியது.இரண்டாவது பக்கத்தில் புகழ்பெற்ற தமிழர்கள் எனும் தலைப்பில் ஒரு தளத்தினையும் காணமுடிந்தது.தளத்தினுள் புகழ்பெற்றதமிழர்கள் எனும் தலைப்பின் கீழ் பாரதியார்,கவிஞர் கண்ணதாசன், பெரியார்,எம்.ஜி.ஆர்,வே.பிரபாகரன் போன்ற பலருடைய வாழ்க்கைவரலாறுகள் தொகுக்கப்பட்டிருப்பதையும் பார்க்கமுடிந்தது.சிலருடைய விபரங்கள் மேலோட்டமாக உள்ளது. தளத்தில் பல விடயங்கள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை. ஐக்கிய இராச்சியத்தில் இருந்து சிவசோதி சதீஷன் என்னும் ஒரு மாணவனால் இந்த தளம் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக விபரம் உள்ளது. புகழ் பெற்ற தமிழர்கள் தொடர்பாக விபரங்கள் தருமாறு வேண்டுகோளும் காணப்படுகிறது.ஒரு மாணவனால் இப்படி ஒரு தளம் பராமரிக்கப்பட்டு வருவது பாராட்டத்தக்கது.பல குறைகள் காணப்படினும் கூட.

கரிகாலனுக்கு தோன்றியது போன்றதான உணர்வுகள் சில சமயங்களில் எனக்குள்ளும் தோன்றியுள்ளன.

இளைஞர்களின் இப்படியான முயற்சிகள் ஆச்சரியமான சந்தோசங்கள்.
இந்த வகையில் ஈழநாதனின் முயற்சியும் அவரின் வயதையும் மீறிய எழுத்தின்
முதிர்ச்சியும் கூட எனக்கு மிகுந்த ஆச்சரியமே!

இவர் போல இளைஞன் எனப் புனைபெயர் கொண்ட சஞ்சீவ்காந்தும் வயதில் மிக இளையவர்.
யாழ்கருத்துக்களத்தில் ஏற்பட்ட பல கருத்து மோதல்களின் போது இவர் விடுத்த சிந்தனை பூர்வமான கருத்துக்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.

Tuesday, July 06, 2004

வலைவலம் - 6.7.2004

புதிது புதிதாகப் பூக்கும் வலைப்பூக்களில் என்னைக் கவர்ந்தவைகளில் ஷ்ரேயாவினது பதிவும் ஒன்று. சின்னச் சின்னதாய்... விடயம் கலந்த சுவைகள்.

இவர் பற்றி ஈழநாதனும் குறிப்பிட்டுள்ளார். இவ்வார வலைப்பூ ஆசிரியர் ஈழநாதன் சற்று வித்தியாசமான சிந்தனையோடு ஈழப்பூக்களை அட்டவணைப் படுத்தியுள்ளார்.

துகள்கள் சத்யராஜ்குமாரின் அடுத்த அங்கம் அதாவது என்னை எழுதியவர்களின் ஆறாவது அங்கம் தமிழ்ஓவியத்தில் வந்துள்ளது. கூடவே துகள்களிலும் ஒரு புதிய கதையைப் பதிந்துள்ளார். பிழைப்பு - இன்னும் வாசிக்கவில்லை. நிட்சயம் நல்லாக இருக்கும் என்ற நம்பிக்கை.

சுரேன் ஊர் சுற்றுகிறார். பொறாமையாக இருக்கிறது. ஆனாலும் ஓடி வந்து சின்னதாகப் பதிந்து விட்டுப் போயுள்ளார்.

திசைகள் ஆனி மாத இதழ் கணினி சங்கடப் படுத்தியதால் மிகவும் தாமதமாகி எங்களைச் சங்கடப் படுத்தியது. இம் மாத இதழும் 6ந்திகதியாகியும் இன்னும் வரவில்லை. மாலனுக்கு என்ன பிரச்சனையோ? நேர்த்தியான இணைய இதழ்களில் திசைகள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒன்று.

பாலா அழகிய புகைப்படங்களைப் பதிக்கிறார். இன்றைய பதிவு தொட்டாச்சிணுங்கி. எத்தனை காலத்துக்குப் பிறகு பார்க்க முடிந்தது. சின்ன வயசு ஞாபகங்களைக் கிளறி விடும் படம்.

ஜெயந்தி வலைப்பு ஆசிரியராக இருந்த போது வலைப்பதிவகளுக்குப் புள்ளிகள் போட்டார்.
அதைத் தொடர்ந்து இன்னொரு பதிவாளர் தனது பதிவில் அது பற்றி எழுதி 30 வலைப்பதிவுகளின் பெயர்களையும் குறிப்பிட்டு, ஒரு சில குறிப்பிட்ட வரைவிலங்கணங்களோடு அவைகளுக்குப் புள்ளியிடச் சொல்லியிருந்தார். புள்ளி போடும் வேலை எனக்குச் சரி வருமோ என்று தெரியவில்லை. ஆனாலும் அதை மீண்டும் ஒரு முறை வாசிக்கலாமென்ற எண்ணத்தில் தேடினேன். கண்டு பிடிக்க முடியவில்லை.

என்ன கிரகதோஷமோ...?

இப்போது சில நாட்களாகவே Blogger மக்கர் பண்ணிக் கொண்டு நிற்கிறது. ஒரேயடியாக உள்நுழைய முடியவில்லை. எழுதியதை பதிய முனையும் போது மறுக்கிறது. Blogger இல் உள்ள வலைப்பதிவுகளுக்கு ஒரு தரத்தில் விஜயம் செய்ய முடியவில்லை. விக்ரமாதித்தன் போல மனந்தளராமல் மீண்டும் மீண்டுமாய் முயற்சிக்கும் பட்சத்திலேயே அவைகள் எமக்குக் காட்சி தருகின்றன.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite