Friday, March 29, 2024

Merry Christmas படத்தில் ஒரு சம்பாசணை

காதலுக்காக, தூக்குப் போட்டு, பூச்சி மருந்து குடித்து என்று செத்தவர்கள் பலர்.

Merry Christmas படத்தில் ஒரு சம்பாசணை வரும்,

எனக்கெது கஷ்டம் என்று தெரயேல்லை,
லவ் பண்ணினவ செத்துப் போவதா அல்லது லவ் செத்துப் போவதா
கஷ்டம் என்று தெரயேல்லை என்று.

லவ் செத்துப் போவது கஷ்டம்தான், கவலைதான். அதுவும் அந்தப் பருவத்தில், வயதில் காதல் தோல்வி என்பது தாங்க முடியாதது தான்.

அதற்காக லவ் பண்ணினவ செத்துப் போவதை அதனுடன் ஒப்பிட முடியுமா?

மரணத்தை அருகிருத்திப் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அதற்கு ஒப்புவமையாக எந்தக் கஸ்டமோ, கவலையோ இல்லையென்பது.

Saturday, February 03, 2024

தேவை ஒரு கண்ணாடி

நான் வடிவோ வடிவில்லையோ என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு நான் எனது படமொன்றை Facebook இல் போட்டுவிட்டுப் படுத்து விட்டேன். இன்று காலையில் எழுந்து பார்த்த போது அந்தப் படத்துக்கு முந்நூறுக்கு மேல் லைக்ஸ். நூறுக்கு மேல் கொமென்ற்ஸ். உள் பெட்டியில் ஊருப்பட்ட செய்திகள்.

'வடிவு, நீங்கள் நல்ல வடிவு'

'உங்களோடை கதைக்கோணும். போன் நம்பரைத் தாங்கோ'

'உங்களுக்கு ஒண்டு சொன்னால் கோவிப்பிங்களோ? நீங்கள் நல்ல வடிவு'

'உங்கடை வடிவாம்பிகை என்ற பெயரைப் போலயே நீங்கள் வடிவா இருக்கிறிங்கள்'

'மடம், பிளீஸ் போன் நம்பர் தாங்கோ'

'அக்கா, ஐ லவ் யூ"

இப்படித்தான் அந்தச் செய்திகள் என்னை மயக்கும் எண்ணத்தில் எழுதப் பட்டிருந்தன. நான் Teenage இல் இருந்திருந்தால் அப்படியே பாசியில் வழுக்கி விழுவது போல வழுக்கி விழுந்து பிடரியை உடைத்திருப்பேன். நல்ல வேளையாக அதை எப்போதோ கடந்திருந்தேன். சிலர் நல்ல அழகான கவிதைகள் கூட எழுதியிருந்தார்கள். இன்னும் சிலர் நான் முதலே வாசித்த வேறு யாருடையதோ கவிதைகளை  தங்களது கவிதைகள் போல எழுதியிருந்தார்கள். எல்லாம் என் வடிவையும் அதனால் அவர்களுக்கு என் மேல் எழுந்த காதலையும் வைத்துத்தான்.  அதுதான் எனக்குக் குழப்பமாக இருந்தது.

வீட்டில் சண்டை வருகிற பொழுதெல்லாம் வடிவில்லாத என்னை தனது தலையில் கட்டி விட்டதற்காகவும் எனக்கு `வடிவாம்பிகை´ என்ற பெயர் வைத்ததற்காகவும் எனது கணவர், ஊரிலிருக்கும் எனது அம்மாவைத் தாறுமாறாகத் திட்டித் தீர்ப்பார்.  'உன்ரை மூஞ்சைக்கும் முகரக்கட்டைக்கும் இந்தப் பெயரொன்றுதான் குறை"  என்றும் சொல்லிக் கத்துவார். உண்மையில் எனக்கு வடிவாம்பிகை என்று பெயர் வைத்தது அம்மா இல்லை. அம்மாச்சிதான் நான் பிறந்த உடனேயே எனது வடிவைப் பார்த்து விட்டு `வடிவாம்பிகை´ என்ற பெயர் வைத்தாவாம். நான் இதைக் கனதரம் எனது கணவருக்குச் சொல்லி விட்டேன். ஆனாலும் மறந்து போனது மாதிரித் திரும்பத் திரும்ப அம்மாவைத் திட்டிக் கொட்டிக் கொண்டிருப்பார்.  நான் நினைப்பூட்டினால் 'காகத்துக்கும் தன்ரை குஞ்சைப் பார்த்தால் வடிவாத்தான் தெரியும்' என்று சொல்லி, கெக்கட்டம் விட்டுச் சிரிப்பார்.  அது மட்டுமே? வேறு பெண்களிடம் அவர் அசடு வழிகிற பொழுதெல்லாம் நான் கேட்டால் 'நீ வடிவா இருந்தால் நான் ஏன் வேறையாரையும் பார்க்கப் போறன்?' என்பார்.

நான் ஓடிப்போய் நான் வடிவோ அல்லது இவர் சொல்லுறது  மாதிரி உண்மையிலேயே வடிவில்லையோ என்று கண்ணாடியில் பார்த்தேன். அந்த நேரம் பார்த்துத்தான் அந்த அழைப்பு வந்தது.

யாரோ Facebook மெசஞ்சரின் ஊடாகத்தான் அழைக்கிறார்கள் என்பதைச் சத்தத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். சாதாரணமாக நான் மெசஞ்சர் அழைப்பென்றால் பேசாமல் விட்டு விடுவேன். ஆனாலும்  ஓடி வந்து யாரென்று பார்த்தேன்.

நம்பவே முடியவில்லை. டொக்டர் சுதர்சனின் அழைப்பு அது. டொக்டர் சுதர்சனை உங்களுக்கும் எப்பிடியும் தெரிஞ்சிருக்கும். சரியான நல்ல மனுசன். முள்ளிவாய்க்கால் பிரச்சனை நடக்கிற போது சுவிசிலிருந்து  அங்கேயே போய் நின்று பாதிக்கப்பட்ட சனங்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்தவர். யாருக்குத்தான் அப்படியொரு துணிச்சலும், சேவை மனப்பான்மையும்  வரும். அதுவும் அந்தப் போர் நேரம், உயிரைப் பணயம் வைத்து அங்கேயே நின்று...

எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்தது. அவர் ஏன் எனக்குப் போன் பண்ணுகிறார்?

இரண்டு கிழமைகளுக்கு முன்னர்தான் என்னோடு Facebook இல் நட்பானவர். அவரின் நட்புக்கான அழைப்பு வந்த உடனேயே கொஞ்சமும் யோசிக்காமால் நான் accept பண்ணி விட்டேன். இப்படியான ஒரு ஆளோடு நட்பாயிருப்பது எவ்வளவு பெரிய விசயம். பெருமையும் கூட.  அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு விருது கூடக் கொடுத்திருக்கிறார்கள்.

 நான் தயக்கமில்லாமல் தொலைபேசியை எடுத்து வணக்கம் என்றேன்.

அங்கிருந்தும் வணக்கம் வந்தது

நீங்கள் டொக்டர் சுதர்சன் தானே?“

ஓமோம், அவரேதான்

உங்கடை சேவையளைப் பற்றியெல்லாம் அறிஞ்சிருக்கிறன். உண்மையிலேயே நீங்கள் பெரிய ஆள். உங்கடை நல்ல மனசை எப்பிடிப் பாராட்டிறதென்றே எனக்குத் தெரியேல்லை

அவர் பதிலுக்குச் சிரித்தார்.

எனக்கு உங்களோடை கதைக்கக் கிடைச்சது பெரிய சந்தோசமா இருக்கு. அது சரி, ஏன் என்னைத் தேடி, போன் பண்ணினனீங்கள்?“

நான் அங்கை உங்களிட்டை வரோணும். உங்களிட்டைத் தங்கோணும்

ஏன் இங்கையும் ஆருக்கும் ஏதும் உதவி செய்யப் போறிங்களோ?“

ம்.. ம்.. அங்கை வந்திருந்துதான் ஆருக்காவது உதவி வேணுமோ எண்டு பார்க்கோணும்

எனக்கு உடனடியாக ஒன்றுமே விளங்கவில்லை. யாருக்காவது உதவி தேவைப்படும் பட்சத்தில் அதற்காக வரும் ஒருவர் தங்குவதற்கு இடம் தேடுவது உண்டு. இது இங்கு வந்து தங்குவதற்காக யாருக்காவது உதவி செய்யத் தேடுவது... குழம்பினேன்.

எனது குழப்பம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

இப்போது தெளிவாகச் சொன்னார்உங்களோடு தங்க வேண்டும்

எனக்கு எதுவோ புரிந்தது.

ஓ... அது சாத்தியப்படாது. என்ரை வீட்டிலை தங்கிறதுக்கான எந்தச் சாத்தியங்களும் இல்லை

ஏன்.. ஏன்?“ அதிர்ச்சியோடு கேட்டார்.

எனக்குக் குடும்பம் இருக்குது. கணவர் இருக்கிறார்

அதிலையென்ன? அவர் நாள் முழுக்க வீட்டிலையோ  இருக்கப் போறார். வேலைக்கும் போவார்தானே

இல்லை, அது ஒரு போதும் சாத்தியப்படாது

ஏன் அப்பிடிச் சொல்லுறிங்கள். நினைச்சால் எதையும் சாத்தியப்படுத்தலாம்

நான் ஆகாயத்துக்கு மேலால் உயரமாகத் தூக்கி வைத்திருந்த டொக்டர் சுதர்சனை வெடுக்கெனக் கீழே போட்டு விட்டேன்.  இந்தப் பூனையுமா? மனசு ஒருவித ஏமாற்றத்தில் வெட்கித்துக் கூசியது.

உங்களுக்கு எத்தினை வயசு?“ கேட்டேன்

நான் அப்படிக் கேட்டதும், வளைகிறேன் என நினைத்தாரோ? மிகுந்த உற்சாகமாக தனது வயதைச்  சொன்னார்.

என்ரை மகனுக்கு உங்களை விட இரண்டு வயசு கூட. அது தெரியுமோ உங்களுக்கு?“

அப்ப Facebookஇலை நீங்கள் போட்டிருக்கிற படத்திலை சரியான இளமையா இருக்கிறீங்கள்? வடிவாயும் இருக்கிறீங்கள்

அந்தப் போட்டோவைப் பார்த்திட்டோ இப்ப போன் பண்ணினனீங்கள்?“

அதுவும் தான்… உங்கடை மற்றப் படங்களையும் பார்த்தனான்இழுத்தார்.

போட்டோவை மட்டும் பார்த்திட்டு நான் வடிவு, இளமையெண்டெல்லாம் எப்பிடி நினைச்சனிங்கள்? நான் நேற்றுப் போட்டது பத்து வருசத்துக்கு முந்தி எடுத்த போட்டோ. மற்றது அதிலை பார்த்தால், நல்லா லைற் விழுந்து என்னை நல்ல வெள்ளை மாதிரிக் காட்டுது. ஆனால் நான் அந்தளவு வெள்ளையில்லை

இப்போது அவரது கதைகளின் சுரம் குறைந்து கொண்டு போனது. ஆனாலும் நம்ப முடியாதவராய் சில கேள்விகள் கேட்டார்.

நான் உங்கடை அம்மான்ரை வயசை ஒத்திருப்பன். சில வேளையிலை அதையும் விட அதிகமாகவும் இருப்பன் என்றேன்.

அவர் தடுமாறுவது வார்த்தைகளில் தெரிந்தது.

நீங்கள் இன்னும் கலியாணம் கட்டேல்லையோ?“ கேட்டேன்.

கட்டீட்டன்

குழந்தையள்..?“

இரண்டு பேர். இரண்டும் பொம்பிளைப் பிள்ளையள்

அப்ப ஏன் எனக்கு போன் பண்ணினனிங்கள்?“

நீங்கள் வடிவு...இழுத்தார்

உங்கடை பெஞ்சாதி Facebookஇலை இருக்கிறாவோ?“

ஓம் ஐடி சொன்னார்.

பார்த்தேன்.  Facebook இல், புகைப்படத்தில் அந்த மனைவி மிக அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தார். மனைவியை அணைத்த படி டொக்டர் இருந்தார். கூடவே தேவதைகள் போல் இரு பெண் குழந்தைகள்.

'ஐயோ இப்பிடி வடிவா இருக்கிறாவே! அவவையும் பிள்ளையளையும் அங்கை தனிய விட்டிட்டு சுவிசிலையிருந்து இங்கை அமெரிக்காவுக்கு இவ்வளவு தூரம் வரப் போறிங்களோ? அதுவும் ஆரெண்டே தெரியாத என்னட்டை…

ஹி.. ஹி.. ஹி..

அதன் பிறகு 'நான் வடிவோ இல்லையோ?' என்ற கேள்வியோ,  ஆயிரத்தெட்டுத்தரம் கண்ணாடியைப் பார்க்கும் எண்ணமோ எனக்குள் வரவில்லை. `இப்படியானவர்களின் மனசைப் பார்ப்பதற்குக் கண்ணாடி ஒன்றிருந்தால் நல்லாயிருக்கும்´ என்ற எண்ணம்தான் வந்து கொண்டேயிருக்கிறது.

30.04.2020

Friday, February 02, 2024

தாய் சொல்லைத் தட்(டினேன்)டாதே!

Platform ரைல்ஸ் பெரிய பெரிய சதுரங்களாக, நீளத்துக்கும் பெட்டிகளை அடுக்கி விட்டது போல நீண்டு பரந்து இருந்தன. நான் ஒவ்வொரு பெட்டியாகக் கடந்து கொண்டிருந்தேன். அது 1968ம் ஆண்டின் ஏதோ ஒரு மாதம். அப்போது நாங்கள் பாடசாலை விடுமுறையைக் கழிப்பதற்காக மாகோவுக்கும் குருநாகலுக்கும் இடையில் இருக்கும் மூன்று புகையிரத நிலையங்களில் ன்றான நாகொல்லகமவுக்கு வந்திருந்தோம்.

அப்பா, அப்போது அந்தப் புகையிரதநிலையத்தில்தான் புகையிரதநிலைய அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். நாங்கள் அப்பாவின் ரெயில்வே குவார்ட்டேர்ஸில் தங்கியிருந்தோம். அந்த பங்களா, Platform இன் ஒரு அந்தத்தின் முடிவில் இருந்தது. அன்று அப்பாவுக்குப் பகல் வேலை. மாலை நான்கு மணியளவில் அம்மா கடலைப் பருப்பு வடை சுட்டு, சுடுதண்ணீர்ப்போத்தலில் தேநீரும் விட்டு, அப்பாவிடம் கொண்டு போய்க் கொடுக்கும் படி சொல்லித் தந்து விட்டா.

"கவனமாகப் போ. Platform கரைக்குப் போயிடாதை. விழுந்திடுவாய். ரெயின் வந்திடும் என்ற அம்மாவின் அன்பு நிறைந்த கட்டளை என் மூளையின் ஆழத்தில் பதிந்திருந்து என்னை எச்சரித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் நான் அந்த எச்சரிக்கையைச் சட்டை செய்யாமல் ஒரு பக்கம் கையிடையில் சுடுதண்ணீர் போத்தலை அணைத்த படியும் மறு கையில் வடைப் பார்சலை இறுகப் பிடித்த படியும், எனக்கேயுரிய துள்ளலில் நடந்து கொண்டிருந்தேன். அம்மா எங்கே பார்க்கப் போகிறா என்ற தைரியம்.

நாகொல்லகம போலவே புகையிரதநிலையமும் அழகாக இருந்தது. தண்டவாளம் தாண்டிய புல்வெளியில் சிலர் Volley Ball விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களையும் தாண்டிய பச்சை மரங்களிடையே சிவப்பு, மஞ்சள், வெள்ளை... என்று பற்பல வர்ணங்களில் பூக்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. மாங்காய்கள் போல ஏதோ காய்கள் சில மரங்களில் காய்த்துத் தொங்கின.

நீலமாய், அழகாய் வானம் இருக்க, வானவெளியில் கூட்டங் கூட்டமாய் சிறுபறவைகள் சிறகை விரித்துப் பறந்து கொண்டிருந்தன. நகரும் முகில் கூட்டங்களுக்குள் விதம் விதமான உருவங்கள் தெரிந்தன. ம்.... என்ன நடந்தது?

இயற்கையோடு சேர்ந்து நடக்கையில் ஒரு கணம் என்னை மறந்து போனேன். கீழே வீழ்ந்து விட்டேன். தண்டவாளத்தில் "டொங்" என்று இடிபட்ட சத்தத்தோடு சுடுதண்ணீர்ப்போத்தல் உருண்டது. வடைப்பார்சல் அருகில்தான் இருந்தது. உதட்டில் வலித்தது. தடவினேன். சிவப்பாக இரத்தம். உதடு வெடித்து விட்டது.

யாராவது பார்க்கிறார்களா‘ என்று பார்த்தேன். ஒருவரும் பார்க்கவில்லை. வலியை விட யாரும் பார்த்து விடக் கூடாது என்பதில்தான் என் முழுக்கவனமும் இருந்தது. பார்த்து விட்டால் வீழ்ந்ததிலான அவமானத்தோடு தகவல் அப்பாவுக்கும் போய் விடும்.

அவசரமாக பிளாஸ்கைத் தூக்கிக் கொண்டு Platform இல் ஏற முயற்சித்தேன். எனது அந்தரமும் அவசரமும் உடலில் திடீரென்று ஏற்பட்டு விட்ட வலியும் சேர்ந்து என்னால் Platform இன் உயரத்துக்குத் தொங்கி ஏற முடியாமல் இருந்தது. திரும்பிப் பார்த்தேன். ஒரு கணம் நெஞ்சு சில்லிட்டது. சிக்னல் வீழ்ந்து விட்டது. ஏதோ ஒரு லைனில் ரெயின் வரப் போகிறது. Platform கரையோடு நான் நின்றேன். தண்டவாளங்களைக் கடந்து மற்றப் பக்கம் ஓடலாம் என்ற யோசனை ஏனோ உடனே வரவில்லை. ஓடினாலும் ரெயின் வருமுன் தாண்டுவேனா என்பது அடுத்த விடயம்.

அப்போதுதான் புகையிரதநிலைய உதவிஅதிபரான டிக்சன் அங்கிள் Tablet உடன் வந்தார். அவர் அப்பாவின் உதவியாளர். என்னைக் கண்டதும் திடுக்கிட்ட அவர் ஓடி வந்து கையை நீட்டினார். நான் அவரது கையைப் பிடித்ததும் இழுத்து.... எறியாத குறையாய் Platform இல் என்னைப் போட்டார்.

ரெயின் காற்றைக் கிழித்துக் கொண்டு வந்து, Platform இன் தொடக்கத்தில் நின்ற போர்ட்டர் மார்ட்டினிடம் Tablet ஐக் கொடுத்து, டிக்சன் அங்கிளின் கையிலிருந்த Tablet ஐ வாங்கிக் கொண்டு நிற்காமலே போய் விட்டது. அதன் பின்தான் டிக்சன் அங்கிள் என்னை மிகுந்த கோபத்தோடு பார்த்தார். சிங்களத்தில் திட்டினார்.

நான் அப்பாவின் அலுவலக அறைக்குள் போய் விட்டேன். அப்பா தொலைபேசியில் அலுவலக விடயமாக யாருடனோ சிங்களத்தில் கதைத்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் மெல்லிய முறுவலுடன் நோக்கியவர் உடனேயேமுகத்தில் கேள்விக்குறி தொக்க.. என்னைப் பார்த்து விட்டுக் கதையைத் தொடர்ந்தார். உடைந்திருந்த சொண்டும் அதன் வழி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த இரத்தமும் அவரைக் குழப்பியிருக்க வேண்டும்.

நின்றால் பிழை‘ என்று வடையையும் தேநீரையும் உள் அறை மேசையில் கொண்டு போய் வைத்து, விட்டு உடனேயே ரெயில்வே குவார்ட்டர்ஸ்சுக்குத் திரும்பி விட்டேன். சொண்டை உடைத்துக் கொண்டு வந்திருந்த என்னைக் கண்ட அம்மா பதறிப் போய் "என்ன நடந்தது..?" என்று கேட்டா. அம்மாவுக்குப் பொய் சொல்ல அப்போது, அந்த எட்டு வயதில் எனக்குத் தெரியாது. பிறகென்ன அம்மாவிடம் மாட்டினேன்.

அது மட்டுமா..? அப்பாவிடமும்தான். வேலை முடிந்து அப்பா வந்த விதத்திலேயே டிக்சன் அங்கிள் எல்லாம் சொல்லி விட்டார் என்பது தெரிந்தது. கோபம் தெறிக்க வந்தவர் என்னைக் கண்டதும் சற்று ஆறி விட்டார்.

"என்ன பிள்ளை... இப்பிடியே பொறுப்பில்லாமல் நடக்கிறது..?" என்று கண்டித்து விட்டு, அம்மாவிடம் "உம்மடை மகள் இண்டைக்கு என்ன செய்தவள் தெரியுமே..? டிக்சன் மட்டும் இல்லையெண்டால் ஒரு செத்த வீடெல்லோ இப்ப கொண்டாடியிருப்பம்" என்றார்.

உண்மைதான். அன்று டிக்சன் அங்கிள் மட்டும் இல்லாதிருந்திருந்தால், இன்று நான் இதை எழுதக் கூட இங்கில்லாது போயிருப்பேன்.

(இது ஏற்கெனவே சந்திரமதி அவர்களின் ‘மரத்தடி‘யில் 2004 இல் வெளியானது. இப்போது சற்று மெருகேற்றி மீண்டும் பதிகிறேன்.)

 https://www.facebook.com/chandravathanaa.selvakumaran/posts/pfbid036m3V3NAgLqQxcRmgm7iVe569FxgeSmGHsn3UV7HWwnUWuHuFE5LxXfH31xakUJASl

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite