Sunday, September 14, 2003

சந்தோசிக்க வைத்தார்கள்

சுபாவைக் கண்டு பிடித்தேனோ இல்லையோ, சுபாவைத் தேடும் போது சில அன்பு உள்ளங்களின் அக்கறையான செயற்பாட்டைக் கண்டு கொள்ள முடிந்தது. அவர்கள் தாமாகவே தமக்குத் தெரிந்த சுபா பற்றிய தகவல்களை எனக்கு அனுப்பி வைத்து என்னை சந்தோசிக்க வைத்தார்கள்.

இத்தனை அவசரமான உலகில் இது போன்ற உறவுகளின் தொடர்பாடல்கள் இருப்பதால்தானோ என்னவோ நாம் இன்னும் வாழ்தலை நேசிக்கிறோம்.

Friday, September 05, 2003

இவர் அவராக இருப்பாரோ...?

இந்த சுபா யாராக இருக்கும் என்று நான் பல தடவைகள் ஆராய்ச்சி செய்து விட்டேன். பலரையும் கேட்டுப் பார்த்து விட்டேன். பலன் என்னவோ பூச்சியம்தான். சுபாவைத் தெரிந்த யாரையுமே நான் இன்னும் சந்திக்கவில்லை.

சுபா ஆணா பெண்ணா என்ற ஆராய்ச்சியில் கூட நான் தோற்றுத்தான் போனேன். சுபா பெண்தான் என நான் எனக்குள்ளே தீர்மானித்து கண்டு பிடித்து விட்டேன் என்று இறுமாப்புடன் இருந்தால் சுபா அடுத்த வாரம் தனது சிறுகதையை ஒரு ஆணாக இருந்து எழுதியிருப்பார்.

ஈழமுரசில் வரும் சிறுகதைகளுக்குள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவாறு சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் சமூகப் பிரச்சனைகளை எடுத்துச் சொல்வதாகவும் அமைந்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பது இவரின் கதைகள். கதையை நகர்த்தும் விதம் மிக நன்றாக இருக்கும்.

இவரைப் போல இன்னும் எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் இருக்கும் போது நான் ஏன் இவரைக் குறிப்பாகத் தேடினேன் என நீங்கள் யோசிக்கலாம். இவர் கதையிலே ஸ்ருட்கார்ட்டில் இருக்கும் பிருந்தா சில்க் கவுஸ் சொப்பிங் பாக் பற்றி வந்தது. அதுதான் என்னை அளவுக்கதிகமாக ஆர்வத்துடன் அவரைத் தேட வைத்தது. எனக்கு அண்மையில் இப்படி ஒரு எழுத்தாளர். சத்தமில்லாமல் தனது முழுப்பெயரைக் கூடக் குறிப்பிடாமல் சுபா என்று எழுதிக் கொண்டிருக்கிறார். இடையிடையே இவர் கதைகளில் ஸ்ருட்கார்ட்டில் வசிக்கும் தமிழ் குடும்ப அங்கத்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக அவரது படைப்புக்களின் பரம ரசிகை நான்.

ஆணா பெண்ணா என்று கூட அனுமானிக்க முடியாமல்...
என் மனத் தராசு பெண்தான் என்று ஊகம் கொண்டு அந்தப் பக்கம் தாழும் போது அவரது கதையை வாசித்த இன்னொருத்தி சொல்லுவாள் சீ.. அது ஆண். என்று. ஈழமுரசுக்குக் கூட எழுதிக் கேட்டுப் பார்த்தேன். அவர்களும் மூச்சுக் காட்டவில்லை.

இப்படியே சில வருடங்களாக மனதுக்குள் கேள்விக் குறியாக சுபாவைக் கொண்டு திரிகையில்தான் எனக்கு இந்த Blog இன் அறிமுகம் கிடைத்தது. அவ்வப்போது நேரம் கிடைக்கும் நேரங்களில் ஒவ்வொருவரினதும் Blog ஆக திறந்து வாசித்துப் பார்த்த போதுதான் ஒரு Blog இனூடே சுபாஒன்லைன் அறிமுகமானது. அவரது பக்கங்களை வாசித்துக் கொண்டு போகும் போது அவர் யேர்மனியில் எஸ்லிங்கன் பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. உடனேயே எனக்குள் ஒரு சந்தோசம்.

இவர் அவராக இருப்பாரோ...? சந்தேகத்தை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அதனால் உடனடியாக அவர் தளத்துக்குள் அவர் மின்னஞ்சல் முகவரியைத் தேடி எடுத்து, எனது தேடல் பற்றி மிகச் சுருக்கமாக எழுதி அவருக்கு அனுப்பி வைத்தேன்.

ஆனால் என்ன..? அனுப்பிய வேகத்தில் மின்னஞ்சல் என்னிடமே திரும்பி விட்டது.
இன்னும் தெரியவில்லை. யார் அந்த சுபா என்று..!

Wednesday, September 03, 2003

தாய்மனமும் சேய்மனமும்

சிறகிருக்கிறது
என்னைப் பறக்க விடு
என்பது பிள்ளை மனம்.

சிறு பிள்ளை நீ
என் இறகுக்குள் ஒளிந்து கொள்
என்பது பெற்ற மனம்.

புரியாமல் பறந்தோடும்
பிள்ளை மனம்
புரியும் போது
அதுவும் பெற்ற மனம்.

சந்திரவதனா - யேர்மனி - 11.6.1999

Sunday, August 24, 2003

மேடைப்பேச்சு

அவருடன் எப்படிப் பேசலாமென மீண்டும் மீண்டுமாய் மனசு ஒத்திகை பார்த்தது. எப்படித்தான் பார்த்தாலும் எந்தளவுக்கு ஒத்திகை பார்க்கிறேனோ அந்தளவுக்கு நா ஒத்துழைக்க மறுத்து, ஒத்திகைக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லாது எத்தனையோ பேருடன்.. வாய் குளறி... தடுமாறியிருக்கிறேன். அப்படியான சமயங்களில் எழுத்தின் ஆங்காரம், பேச்சில் ஓங்கவில்லையே எனப் பலர் என்னிடம் ஆச்சரியப் பட்டுள்ளார்கள். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒத்திகை பார்ப்பு என்பது எனக்குள்ளே அரங்கேறி அசை மீட்கும்.

அவர் மீது எனக்கு நல்ல மதிப்பு. அதனால்தான் இன்று இத்தனை தரமாய் ஒத்திகை பார்ப்பு. மேடைகளிலும், வானொலிகளிலும் வாய் திறந்தாலே அருவியாகக் கொட்டும் அவர் தமிழில் நான் மெய் மறந்து போயிருக்கிறேன். வார்த்தைகளில் அழகு மட்டுமா? வயதான அவரிடமிருந்து வெளிப்படும் முற்போக்குச் சிந்தனையுடனான, புதுமை நிறைந்த, சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் என்ன ஒரு தெளிவு. அடித்து வைத்துச் சொல்லும் கருத்துக்களிலுள்ள நியாயம். உண்மையிலேயே நான் வியந்து போவேன்.

கடந்த வாரமும் ஐரோப்பிய வானொலி ஒன்றில் கிட்டத்தட்ட 40 நிமிட நேரங்கள் அவரது வீச்சான உரை ஒலிபரப்பானது. எடுத்துக் கொண்ட விடயம் ஐரோப்பியாவில் நடைபெறும் ஆடம்பரமான சாமத்தியச்சடங்குகள் அவசியமானதுதானா..? என்றதாக இருந்தது. இன்றைய எமது கணினி உலகப் பெண்களே சாமத்தியச்சடங்கு அவசியந்தான் என்று எண்ணி தமது பெண் குழந்தைகளைக் காட்சிப் பொருளாக்கிக் கொண்டிருக்கும் அவல நிலையில் அவர் அது அவசியமே இல்லை.. என்று வாதிட்டு, வானொலி அறிவிப்பாளருக்கு இடையிடையே எழுந்த அது சம்பந்தமான சந்தேகங்களுக்கும்; தங்கு தடையின்றிப் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஐம்பதைத் தொட்ட ஒருவர் இப்படி முற்போக்கு நிறைந்த ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்ததில் எனக்கு மெய்சிலிர்த்தது. அவரைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.

அந்த எனது நினைப்பை இன்று எப்படியாவது செயலாக்க வேண்டும் என்ற முனைப்பில், மீண்டும் ஒரு முறை மனசுக்குள் எப்படி அவருடன் பேசுவது என ஒத்திகை பார்த்து விட்டு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன்.

வழமைக்கு மாறாக எனக்கும் இன்று தங்கு தடையின்றிப் பேச வந்தது. பாராட்டினேன். அவரை நியமாகவே மனசாரப் பாராட்டினேன். அவரின் தமிழ்ப்புலமையை, பேசுந்திறனை, பொருள் கொண்ட கருத்துக்களை, அதைச் சபையோர்க்குத் தரும் விதத்தை ... என்று பாராட்டினேன். பேச்சு அலுக்கவில்லை. இருந்தாலும் பின்பொருமுறை பேசுகிறேன் என்று சொல்லி தொடர்பைத் துண்டிக்க முனைந்தேன்.

அவர் பல தடவைகள் நன்றி சொன்னார்.
இண்டைக்கெண்ட படியால் என்னைப் பிடிச்சிங்கள். இனி இரண்டு கிழமைக்கு எனக்கு ஒண்டுக்கும் நேரமிராது. என்றார்.

ஏன் நாட்டுக்குப் போறிங்களோ..?
இன்றைய இப்போதைய நிலையில் புலத்தில் இதுதானே சகயம் என்பதால் உடனேயே எந்த சிந்தனையுமின்றிக் கேட்டு விட்டேன்.

இல்லையில்லை... மகள் பெரியபிள்ளையாகி ஒரு மாசமாச்சு. வாற சனிக்குத்தான் ஹோல் கிடைச்சுது. அதுதான் அந்த வேலையளோடை ஓடித் திரியிறன். எல்லாருக்கும் கார்ட் குடுத்திட்டன்... அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.

நான் தொலைபேசியை வைத்து விட்டேன்.

சந்திரவதனா - 21.8.2003
பிரசுரம் - வடலி-லண்டன்(செப்டெம்பர்-2003)

Wednesday, August 20, 2003

இதற்கு என்ன பெயர்..???

ஈமெயில் பார்த்து
இதயச் சுவர்கள் வேர்த்து
முகம் தெரியா உனக்காய்
முழுமதியாய் சிரித்து..!

இதற்கு என்ன பெயர்..!
இதுவும் காதலா..?

சந்திரவதனா - 1999

Monday, August 18, 2003

எம்மவர் மட்டும் எங்கே...?

பனியின்றி குளிரின்றி
இந்த வருடத்தின் முதல் சிரிப்பு

இயற்கையின் சிரிப்பில்
துளிர்ப்பது மரம் மட்டுந்தானா..!
மலர்வது மலர் மட்டுந்தானா..!
மனிதர்களுந்தான்..!

நகரமே சிரித்தது
யேர்மனியின் அந்த நகரமே சிரித்தது
சிரித்துக் களித்தது
இயற்கையும் சிரிக்க மனிதரும் சிரிக்க
மலராய்த் தெரிந்தது

குட்டைப் பாவாடைகளும்
கட்டை ரீசேர்ட்டுகளும்
தலை காட்டா விட்டாலும்
சிட்டுக் குருவிகளாய் இளசுகள்
உதட்டோடு உதடுரசி
மூக்கோடு மூக்குரசி
கெஞ்சலும் கொஞ்சலுமாய்.....

வட்ட மேசைகளைச் சுற்றி
வட்ட மிட்ட கதிரைகளில்
பெரிசுகளும் சிறிசுகளும்
கண் பார்த்துக் கதை பேசி
மெல்லுதட்டில் தமை மறந்து
ஐஸ் சுவைத்து......
கை கோர்த்து நடக்கையிலும்
காதலுடன் இடை தழுவி
உடல் உரசி
மனம் சிலிர்க்க மலர் பரிமாறி....

இயற்கையோடு இயற்கையாக
சிரித்து... சிலிர்த்து...
ஊரே களித்திருக்கையில்
இந்நகரில் வாழும் இருபது தமிழரில்
ஒருவரையும் காணோமே...!

வன்னியும் வாகரையும்
மனத் திரையில் ஓட
எங்கேயும்
பிற்சேரியாவிலும் ரெஸ்ரோறண்டிலும்
கனவுகளைக் கழுவிக் கொண்டிருக்கிறார்களோ.....???

சந்திரவதனா செல்வகுமாரன்
3.4.1999

Thursday, August 14, 2003

நட்பென்றுதானே நம்பினேன்.....!

போரிலும்
புலம் பெயர் வாழ்விலும்
வாழ்வின் வசந்தங்கள்
வாடி விட்ட
தனிமை பூத்த
ஒரு பொழுதில் தானே
உன் தொலைபேசி அழைப்பு
எனைத் தேடி வந்தது.

நட்பென்றுதானே நம்பினேன்
கை கோர்க்க எண்ணி
விரல் நீட்டினேன்

என் விரலை
சிறை வைத்து
பின் முறித்தெறிவதற்கான
முன்னேற்பாடுதான் அது என்று
முற் கூட்டியே நீ
சொல்ல மறந்ததேன்......?

சந்திரவதனா 12.12.2001

Monday, August 04, 2003

மனசு சூனிய வெளிக்குள்..........

மனசு சூனிய வெளிக்குள்
சிக்கித் தவிக்கிறது.

உன்னவள்
உன் அஸ்தியை
ஊருக்கு அனுப்புவது பற்றிப் பேசினாள்.
அவள் புண்ணியவாட்டி.
உன் அருகிருந்து
தன் கடன் முடித்து விட்டாள்.

நான்
எதுவுமே செய்யாதிருந்து விட்டு
இப்போ..........
சூனிய வெளிக்குள் நின்று
சுற்றிச் சுழல்கிறேன்.

உயிர் போன பின்னும்
நீ அருகிருக்கிறாய் என்பதில்
வலி தெரியாதிருந்தது.
சிதையேறிய போதுதான்
நீ இனியில்லை என்ற நினைப்பில்
மனசு பதை பதைக்கிறது.

நாடொன்றுதானே
நன்றாக உறவாடியிருப்பேன் என்று
ஊரவர்கள் நினைப்பார்கள்.
யாருக்கும் நான் ஏதும் சொல்லவில்லை.
போரென்று வந்து புலம் பெயர்ந்த பின்
வேர்களும் விழுதுகளும் வெகு தூரமாகி.......
போனதை நினைத்துப்
புலம்புவதுதானே வாழ்வாகிப் போச்சு

நாமெல்லோரும்
- நேரமில்லை - யென்றும்
- தூரமாப் போச்சு - என்றும்
இயலாமைகளுக்கு
போர்வை போர்த்திப் பழகி விட்டோம்.

இத்தனை வருடங்களில்
எத்தனை தரம் சந்தித்திருப்போம்.
மின்னஞ்சலும்
தொலைபேசியும் இல்லையென்றால்
தொடர்பாடல்
என்றைக்கோ அறுந்து போயிருக்கும்
எமது ஓரிரு சந்திப்பின் போதான
உறவு முறை சொல்லி அழைக்கும்
உன் இதமான சிரிப்பு மட்டுந்தான்
என்னோடு நின்றிருக்கும்.

நான் அழவில்லை.
மனசுதான் அலைகின்றது
இல்லாத உன்னோடு கை கோர்த்து
உல்லாச உலா வருகின்றது
நீ இல்லை என்பது
உறைக்கும் சமயங்களில்
மல்லாக்காய் வீழ்கின்றது.

சந்திரவதனா - 3.8.2003

Sunday, August 03, 2003

நீயே ஒரு அழகிய கவிதைதானே.!

நீயே..!
அதிசயமாய்
அழகிய ஓவியமாய்
நகர்ந்து கொண்டே இருக்கும் நதியாய்
தழுவுகின்ற காற்றலையாய்.....
எத்தனை பேருக்கு வசந்தமானாயோ..?

உன்னை எண்ணி...!
பூக்களின் நறுமணங்களை
எத்தனை பேர் நுகர்ந்தார்களோ..!

உனது விழிமொழிதலால்
எத்தனை விழி வாசல்கள் பூச்சொரிந்தனவோ..!

உனது குடிபுகுதலினால்
எத்தனை மனமுகடுகளில்
இனிய கானங்கள் ஒலித்தனவோ..?

இன்று உன் பிரிதலினால்
எத்தனை மனங்கள் ஏக்கப் புள்ளிகளுடன்
காதல் கோலங்களுக்காய் காத்திருக்கின்றனவோ..?

புரியாமல்.... புலம்பாதே...!
நீயே ஒரு அழகிய கவிதைதானே.!
பிறகேன் தேடுகிறாய் கவி - தை யை..?

சந்திரவதனா - 4.8.02
******************************************************************************

Thursday, July 31, 2003

நினைவு நதியிலிருந்து..... (1985 ம் ஆண்டு)

"என்ரை தலேணியை ஆர் எடுத்தது? அம்மா என்ரை தலேணியைக் காணேல்லை. என்னெண்டு நான் படுக்கிறது."

தம்பி பரதனின் குரல் கேட்டு அவனது அறையை எட்டிப் பார்த்தேன்.

தலைக்கு ஒரு தலையணி, காலுக்கு ஒரு தலையணி, வலதுபக்கத்துக்கு ஒரு தலையணி என்று மூன்று தலையணிகள் தெரிந்தன. இடது பக்கத் தலையணியைக் காணவில்லை. இன்னும் நன்றாக அறையை எட்டிப் பார்த்தேன். அறையின் மற்றப் பக்கத்தில் சபா நாலு தலையணிக்குப் பதிலாக ஐந்து தலையணியுடன் ஆழ்ந்து தூங்கியிருந்தான்.

"அம்மா...! தலேணி...! "
பரதனின் குரல் எனக்கு எரிச்சலைத் தந்தது.

"டேய்..! என்ன நேரமெண்டு தெரியுதில்லே. பிறகேன் இப்பிடிச் சத்தம் போடுறாய்?"
கோபித்த படி அறையினுள் போய் சின்னவன் சபாவின் கட்டிலில் இருந்து ஒன்றை எடுத்துப் பரதனிடம் கொடுத்தேன்.

"அக்கா என்றால் அக்காதான்."
முன் இரண்டு பெரிய பற்களையும் காட்டிச் சிரித்தான்.

"சும்மா பல்லைக் காட்டாதை. கிழட்டு வயசாகுது. கொஞ்சங் கூட விவஸ்தையில்லாமல்..... தலேணிக்காண்டி இந்தக் கத்துக் கத்திறாய்..!"

டக்கென்று சுண்டிப் போன அவனது முகத்தைப் பார்க்க எனக்குக் கவலையாகி விட்டது.
"என்னடா.. நீ..........! பதினாலு வயசாச்சு.. இன்னும் சின்னப் பிள்ளை மாதிரி.. "என்ற படி
அவனின் பக்கத்தில் கட்டில் நுனியில் அமர்ந்தேன். அவன் பெரிதாகச் சிரித்தான்.

"ஏமாந்துட்டா...! ஏமாந்துட்டா...!" என்று கத்தினான். கவலை போல் நடித்து என்னை ஏமாற்றிய சந்தோசம் அவனுக்கு.

"சும்மா படு. எனக்கு வேலையிருக்கு."
என்ற படி லைற்றை அணைத்து விட்டு வெளியில் வந்தேன்.

திடீரென இரவின் நிசப்தத்தைக் குலைத்துக் கொண்டு முழங்கிய பீரங்கியின் முழக்கத்தில் ஏதேதோ நினைவுகளில் மூழ்கியிருந்த என் நெஞ்சு திக்கிட்டது. எட்டிப் பார்த்தேன். தம்பி பரதனின் கட்டில் வெறுமையாக இருந்தது. நான்கு தலையணைகள் மட்டும் அப்படியே இருந்தன.

இப்படிக் காலுக்கும் கையுக்குமாக தலையணைகளை வைத்துப் படுத்தவன் இப்போ எந்தக் கல்லிலும் முள்ளிலும் படுக்கிறானோ.! நெஞ்சுக்குள் நிறைந்திருக்கும் சோகத்தின் கனம் தாங்காது கண்ணுக்குள் நீர் நிறைந்து கன்னங்களில் வழிந்தது. வழிந்த கண்ணீரைத் துடைக்க வேண்டுமென்று கூடத் தோன்றாததால், அப்படியே வந்து கதிரையில் அமர்ந்து யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து விட்ட எனது கணவருக்கு எழுதத் தொடங்கிய கடிதத்தைத் தொடர முனைந்தேன்.

மீண்டும் பீரங்கி. இப்போ சங்கிலிக் கோர்வை போல 9 பீரங்கிகள். பேனா தொடர்ந்து எழுத மறுத்தது. எனது மனசைப் போலப் பேனா மையும் உறைந்து விட்டதோ.. என்னவோ..!

எனக்குத் தனியாக இருப்பது போலப் பிரமை ஏற்பட்டதால் மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். அம்மா பரதனின் அறை வாசலின் ஒரு ஓரமாக பாயைப் போட்டுப் படுத்திருந்தா. அவ தனது கட்டிலில் படுத்து மூன்று மாதங்களாகின்றன. எப்போ தம்பி பரதன் வீட்டை விட்டுப் புறப்பட்டானோ..! அன்றிலிருந்து அவனது கட்டிலைப் போலவே அம்மாவின் கட்டிலும் வெறுமையாகத்தான் இருக்கிறது.

பலமாதங்களுக்கு முன் பாடசாலை நேரம் யாரோ அவனை ரோட்டிலே கண்டதாகச் சொன்ன போது நாங்கள் யாருமே அலட்டிக் கொள்ள வில்லை.
பிறகுதான் அவன் நோட்டீஸ் ஒட்ட பாடசாலைச் சுவரைத் தாண்டிச் சென்று வருகிறான் என்று அறிந்து அதிர்ந்தோம். ஆனாலும் இவ்வளவு து}ரம் வருமென நாங்கள் நினைக்கவில்லை. அன்று பின்னேரம் அவன் வீட்டுக்கு வந்த போது நானும் தங்கையுமாக
"பரதன்..! நீயென்ன ஸ்கூலிலை இருந்து எங்கையாவது போறனியே..?"
என்று கேட்டோம்.

உடனே அவன் தடுமாறி "இல்லை...இல்லை... ஆர் சொன்னது..?" என்றான்.

பின்னர் ஒரு நாள் "அம்மாக்கு இப்பச் சொல்லாதைங்கோ. நான் போனாப் போலை சொல்லுங்கோ." என்று சொல்லி இரண்டு சோடி உடுப்புகளுடன் அவன் போய் விட்டான்.

எங்கள் வீட்டில் எல்லாம் மாறி விட்டது. அம்மா சிரித்து நாளாகி விட்டது. சாப்பிடும் போதும் சேர்ந்து கூடிக் கதைக்கும் போதும் முன்னர் போலச் சிரிப்பலைகள் எம்மிடமிருந்து எழுவதில்லை. கண்ணீர்தான் வழிகின்றது.

(1985ம் ஆண்டின் ஒரு அழியாத நினைவு)

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite