Thursday, November 11, 2004

கப்டன் மயூரன்(சபா)


சிவா தியாகராஜா

என் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது. அன்று 17.6.1993 - காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான்.

என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை. வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன். எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது..... மிகுதி

Wednesday, November 10, 2004

அவள் இன்னும் கல்யாணம் செய்யேல்லைப் போல

தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளப் பெண்மணி சிரித்துச் சிரித்து நிகழ்ச்சி நடாத்திக் கொண்டிருக்கிறார்.

அதை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த சாம்பசிவத்தார்.

"பாரடி அந்தப் பெண்ணை. என்னமாச் சிரிச்சுக் கொண்டிருக்கிறாள். பார்க்கவே சந்தோசத்திலை மனசு நிறையுது. நீயும் இருக்கிறியே..! எப்ப பார்த்தாலும் மூஞ்சையை உம் மெண்டு வைச்சுக் கொண்டு.. "

"ம்..கும் அவள் இன்னும் கல்யாணம் செய்யேல்லைப் போல. "

"என்ன அப்பிடி.. அவ்வளவு திடமாய் சொல்லுறாய்?"

"உலகமே பார்க்கக் கூடியதா இப்பிடிச் சிரிச்சுப் போட்டு வீட்டை போனால் அவளின்ரை புருசன் சும்மா இருப்பானே..? "

"குத்திக் காட்டிறாயாக்கும்."

"நான் குத்தவும் இல்லை. வெட்டவும் இல்லை. உண்மையைச் சொல்லுறன்."

"இஞ்சைபார். இந்தக் குத்தல் கதையளை மட்டும் விட்டிடு. உன்னையென்ன ரீவீ ஸ்ரேசனுக்குப் போய் சிரிக்கச் சொல்லுறனே. வீட்டிலையிருந்து அவளை மாதிரிச் சிரியன். "

"அவளுக்குத்தானே கல்யாணமே நடக்கேல்லைப் போல எண்டு சொல்லுறன்."

Sunday, November 07, 2004

எப்படி..? எல்லாமே ரொஜான் வைரஸ்கள்.

இரண்டு நாட்களாக கணினியோடு மல்யுத்தம் நடத்துவது போன்றதான உணர்வு. கணினிக்குள் நுழையவே முடியாமல் இருப்பதும், பலதர முயற்சியின் பின் அப்பாடா என்று நுழையும் போது, கணினி அப்படியே ஸ்தம்பித்து விடுவதும் என்று பாடாய்ப் படுத்தி விட்டது. மிக நல்ல பாதுகாப்பான வைரஸ் தடுப்பை நான் வைத்திருந்த போதும் எப்படி..? எல்லாம் உட் புகுந்தன. எல்லாமே ரொஜான் வைரஸ்கள். ஒருவாறு அழித்து விட்டேன் என்ற திருப்தியோடு நிமிரும் போது விண்டோஸ் செயலிழந்து விட்டது என்ற எச்சரிக்கை. எழுதிக் கொண்டிருக்கும் போது கணனியின் ஸ்தம்பிதம் எழுதியதையே தொலைக்கும் படி ஆக்கி விட்டது. இப்படியே நேற்றைய பொழுது எந்தவிதப் பயனுமின்றிக் கரைந்து போய் விட்டது. 5ந்திகதிக்குள் எழுதித் தருகிறேன் என்ற என் வாக்குறுதிகள் காற்றில் பறந்து விட்டன. பல மின்னஞ்சல்களுக்கான பதில்கள் எழுதிக் கொண்டிருக்கும் போதே இடை நடுவில் நிறுத்தப் பட்டு விட்டன.

இந்த நிலையிலும் தமிழ்மணத்துக்கு வந்த போது என்றென்றும் அன்புடன் பாலாவின் பல்லவியும் சரணமும் என்னைத் தன்பால் ஈர்த்தன. அதற்குப் பதில் எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டென்பதால், இடை நடுவே நிறுத்த நிறுத்த மீண்டும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் தொடர்ந்தேன். ஒருவாறு ஓரளவுக்காவது பதில்களை எழுதி அனுப்பிய போது அங்கு எந்தப் பதிலையுமே பார்க்க முடியவில்லை. 5comments இருப்பதாகக் காட்டுகிறதே தவிர அவைகளைப் பார்க்க முடியவில்லை.

Wednesday, November 03, 2004

தீயணைப்புப் பயிற்சி

ஈழநாதன் தீயணைப்பு நாடகம் என்ற தலைப்பில் சிங்கப்பூரில் நடைமுறைப் படுத்தப் படும் தீயணைப்புப் பயிற்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இது விடயத்தில் நான் வாழும் யேர்மனி மிகுந்த கவனமாகவே உள்ளது.
நான் யேர்மனியை நேசிப்பதற்கு யேர்மனியில் நடைமுறையில் இருக்கும் இது போன்ற மனித நேயமான செயற்பாடுகளும் முக்கிய காரணிகளாகின்றன.

இங்குள்ள பாடசாலைகளில் அடிக்கடி இந்தத் தீயணைப்புப் பயிற்சி நடக்கும்.
பிள்ளைகள் எப்படி ஓடி, தம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது
மிகுந்த கவனமான முறையில் சொல்லிக் கொடுக்கப் படும்.

அதை விட டிஸ்கோ, தியேட்டர்... போன்ற பலர் நடமாடும் இடங்களிலும் இப்பயிற்சி அடிக்கடி நடக்கும். டிஸ்கோ நிலையத்தின் பாதுகாப்புத்தன்மை, அதாவது தீ என்று வரும் போது மக்கள் தப்பித்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளனவா என ஆராயப் படும். அவசரகால வெளிச் செல் பாதைகள் உண்மையிலேயே, ஆபத்தான நேரங்களில் கும்பலாக ஓடும் மக்கள், வெளிச்செல்வதற்கு ஏற்ற வகையில் சரியாக அமைக்கப் பட்டுள்ளனவா என அடிக்கடி ஆராயப் படும்.

கடந்த வருடம் ஒரு டிஸ்கோ நிலையத்தில் அவசரகால வெளிச் செல் பாதையின் கதவு ஒன்று டிஸ்கோ நேரம் திறக்கப் படாமல் இருந்ததற்காக அந்த நிலையம் கோர்ட் வரை செல்ல வேண்டியிருந்தது.

கடந்த வருடம் அல்லது இவ்வருட ஆரம்பம் என நினைக்கிறேன். ஸ்பெயினில் ஒரு டிஸ்கோ தீப்பற்றி எரிந்ததில் பலர் அநியாயமாக உயிரை மாய்த்துக் கொண்டனர். அதன் பின்னான ஆராய்சியில் அங்கு சரியான அவசரகால வெளிச்செல் பாதைகள் அமைக்கப் படவில்லை என்பது கண்டு பிடிக்கப் பட்டது.

இப்படியான அநாராப்பான சம்பவங்கள் யேர்மனியில் மிகமிகக் குறைவு.
சட்டம், ஒழுங்கு, கல்வி... போன்றதான விடயங்களில் யேர்மனி மிகக் கவனமாகவே இருக்கிறது.

Thursday, October 28, 2004

நலந்தானா...? நலந்தானா...? உடலும் உள்ளமும் நலந்தானா...?


இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள்ளே இனம் புரியாதவொரு சந்தோசமும் கூடவே மெல்லிய சோகமும் இழைந்தோடும்.காரணம் என்னுடைய அப்பா.

என்னுடைய அப்பாவுக்கு இந்த நாதஸ்வரம், தவில் எல்லாம் நிறையவே பிடிக்கும். அவர் இலங்கையின் எந்தப் பாகத்தில் கடமையில் இருந்தாலும் ஊரில் ஏதாவதொரு கோயிலிலே மேளக்கச்சேரியோ, நாதஸ்வரமோ நடைபெறப் போகிறதென்று தெரிந்தால் உடனேயே விடுப்பெடுத்துக் கொண்டு வந்து விடுவார்.

வந்து எங்களையும் அழைத்துக் கொண்டு யோய், நாதஸ்வரம், தவில்... என்பவற்றை ஆழ்ந்து ரசிப்பார்.

அந்த வகையில் தில்லானாமோகனாம்பாள் திரைப்படமும் அப்பாவை வெகுவாகக் கவர்ந்திருந்தது. முதல்நாள் குடும்பமாய் போய்ப் பார்த்து வந்தோம். நாதஸ்வரத்தில் அப்பாவுக்கு இருந்த மோகத்தால் இரண்டாவது நாளும் என்னையும் அழைத்துக் கொண்டு போய் படத்தை ரசித்தார். நான் அந்த நேரத்தில் பரதக்கலையைக் கற்றுக் கொண்டிருந்ததாலோ என்னவோ, எனக்கு இந்தப் பாடல் காட்சி மிகவும் பிடித்தது.

இப்பாடல் காட்சியில் காயம்பட்ட கையிலே கட்டுப் போட்ட படி சிவாஜி கணேசன் நாதஸ்வரம் வாசிக்க, பத்மினியின் நடனம் நடைபெற்றது. ஓருவர் மேல் ஒருவர் காதல் கொண்ட நிலையில், அவர்கள் சந்திக்கத் தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில்தான் மேடையில் அவர்களது கலைச் சந்திப்பு.

பத்மினியின் நடனமும், சிவாஜியின் நாதஸ்வரமும், சுசிலாவின் குரலும் சேர்ந்து மிகவும் அருமையாக இருந்தது காட்சி. கூடவே ஏ.வி.எம் ராஜன், ஏ.கருணாநிதி, கே.ஏ.தங்கவேல் ஆகியோரின் நடிப்பும் நன்றாக இருந்தன.
எப்போதுமே, சிவாஜியின் நடிப்பு அதீதம் என்பது போன்றதான கருத்துக்கள் பலரிடையே இருந்தன. ஆனால் அந்த வயதில், அந்த நேரத்தில் எனக்கு அப்படியெதுவுமே தோன்றவில்லை. பாடற்காட்சி மிகமிக அருமையாக இருந்தது. அதைவிட பாடல் தொடங்க முன் ஒலிக்கும் நாதஸ்வரமும், தவிலும் மிகுந்த சந்தோசமான உணர்வைத் தரக் கூடியனவாக இருந்தன. அப்போது மட்டுமல்ல இப்போது கேட்டாலும் அந்த சந்தோச உணர்வு மனதை நிறைத்துக் கொள்ளும்.

நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா...?
என்று பாடும் போதே பாடல் வரிகள் உள்ளார்ந்த அன்புடன் நலம் விசாரிக்கும் உணர்வைத் தருகின்றன. ஓப்புக்கு வெறுமனே நலந்தானா என்று கேட்காமல் உடலும் உள்ளமும் நலந்தானா என்று கேட்பது மனதுள் உள்ள ஆழ்ந்த பிரியத்தைக் காட்டுவது போலான பிரமையை ஏற்படுத்தி எம்முள் இன்னொரு விதமான சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.

கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன்
இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவார்...

என்ற வரிகளில் அணி என்னும் அழகு சேர்க்கப் பட்டதுடன், சிவாஜி புண் பட்டதால் அவர் மேல் காதல் கொண்ட பத்மினியின் மனம் படும் பாடு, மிகச் சிக்கனமான வார்த்தைகளால் அழகாகச் சொல்லப் பட்டுள்ளது.

மொத்தத்தில் பாடலும் காட்சியும் மிகவும் அருமை. சுசீலாவின் இப்பாடலை இத்தனை வருடங்கள் கழித்தும், எந்த நேரத்தில் கேட்டாலும், எனக்குள் ஒரு வித சந்தோசம் எட்டிப் பார்க்கும். கூடவே மெல்லிய சோகமும். இப்படத்தை என்னுடன் சேர்ந்து ரசித்துப் பார்த்த அப்பா தற்சமயம் என்னோடு இல்லை. ஆனாலும் அப்பாவுடனான நினைவுகள் இப்பாடலின் போதும் மீட்டப் பட்டு இனிமை சோகம் இரண்டையும் தரத் தவறுவதில்லை.

சந்திரவதனா
யேர்மனி

Thursday, October 21, 2004

குற்றம் பிடிப்பதற்கென்றே சிலர்

எமக்குக் கற்றுத் தந்த ஆசிரியர்களின் புனிதத் தன்மை பற்றியும், அவர்களின் மகோன்னதமான செயல்கள் பற்றியும் நாங்கள் மனதுக்குள் எண்ணிப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நேற்று வெக்ரோன் தொலைக்காட்சியில் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது.

இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் அத்தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒரு தமிழ் ஆசிரியர் மிகவும் விளக்கமான முறையில் தெளிவாக Maths சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கேட்கவே ஆசையாக இருந்தது. வர்கங்களும்.. அடுக்குகள் வரும் போது அவைகளைத் தீர்க்கும் முறையும் என்று.. மிக மிக அருமையான தெளிவான சொல்லிக் கொடுப்பு அது.

இலண்டனில் வாழும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, ஆங்கிலத்தில் கல்வி கற்று விட்டு வரும் குழந்தைகளின், ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாத பெற்றோருக்கும் இது எவ்வளவு உதவியான விடயம் என நான் எனக்குள்ளே மகிழ்ந்து கொண்டு அப்பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஆங்கிலம் தெரிந்த பெற்றோர்கள் கூட பிள்ளைகளுக்கு வீட்டுப் பாடங்களில் உதவி செய்யும் போது சற்றுத் திண்டாடுவதை நான் கண்டிருக்கிறேன். அப்படியிருக்க திடீரென இன்னொரு தமிழர் வானலையில் தொலைபேசி அழைப்பில் வந்து "எனது மகன் NCG படிக்கிறான். நீங்கள் இப்படி மூன்றாம் வகுப்பு நாலாம் வகுப்புப் பிள்ளையளின்ரை கணக்கைச் சொல்லிக் கொண்டிருந்தால்... என்ற தொனியில் குற்றம் பிடித்தார்.

என்ன மனிதர்கள் இவர்கள் என்றுதான் எனக்கு எண்ணத் தோன்றியது.
அந்தத் தொலைக்காட்சி இவர்களுக்கு இலவசம். அதில் வரும் கணிதக் கல்வியும் இவர்களுக்கு இலவசம். அந்த ஆசிரியர் கற்பித்தது மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்புக் கணக்கல்ல. அவை மேல் வகுப்புக் கணக்குகள். அதையும் அவர் கற்பித்த விதம் உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய ஒன்று.

அப்படியிருக்க...?

உண்மையிலேயே அவருக்கு தனது மகனின் NCG வகுப்புக் கணக்கில் ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால், அதை அங்கு கேள்வியாகக் கேட்டிருக்கலாம். அதை விடுத்து குற்றப் பிடிப்பதற்கென்றே வந்தாரோ? இதற்கென்றே சிலரோ..?

சந்திரவதனா
யேர்மனி
21.10.2004

Wednesday, October 20, 2004

விருந்தாளிகள்

புலம்(பல்)

தொலைபேசி கிணுகிணுக்கிறது.

´ஆரது இந்த நேரம்? ஞாயிறும் அதுவுமா? நல்ல வெயில் எறிக்குது. உடுப்புகளை விரிச்சு முடிச்சுப் போடுவம் எண்டு பார்த்தன்.´
முணுமுணுத்தபடி தயங்கிய மனதுடன்தான் பல்கணியிலிருந்து ஓடி வந்து செண்பகக்கா தொலைபேசியை எடுத்தா.

"வணக்கம் அக்கா! அண்ணை நிற்கிறாரோ?"

இல்லை. அவர் வெளியிலை போட்டார். நீங்கள்...?"

"நான் அக்கா ரவி. அவரோடை முந்தி லாகரிலை இருந்தனான். அவருக்கு என்னைத் தெரியும்."

"எந்த லாகரிலை...?"

"அது வந்து... வங்கன் லாகர்.... தெரியுமோ அக்கா?"

´ம்.. இந்த மனுசன் சொன்னதுதான். நான் வரமுந்தி ஏதோ ஒரு.. லாகரிலை இருந்ததெண்டு. அது எந்தக் காலம்..! இப்ப அதையேன் இவன் புதுப்பிக்கிறான்..! இதைச் சாட்டிக் கொண்டு இப்ப ஏதும் கலியாணவீடு, சாமத்தியவீடு எண்டு செலவு வைக்கப் பண்ணப் போறானோ.. என்னவோ...?´

"எப்ப 1985 இலை ஒண்டா இருந்தனிங்களோ..? "

"ஓமக்கா. பியர்கேஸ் ரவி எண்டு சொல்லியிருப்பார்."

"அட நீங்கள்தான் சோசல் காசிலை பியர் வாங்கி வைச்சிட்டு 1 மார்க்குக்கு வித்த ஆளோ..? இப்ப விளங்குது."

"ஹி..ஹி...ஹி.. எல்லாம் அப்பச் சொல்லியிருக்கிறார். "

"அது சரி இப்ப என்ன விசயமா அடிச்சனிங்கள்..? என்னேம் விசேசமோ..?"

"நான் சுவிசுக்குப் போட்டு வாற வழியிலை அண்ணையையும் ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான்."

´என்னடா.. இது? 19வருசம் கழிச்சு அண்ணையின்ரை நினைவு இவனுக்கு வந்திருக்கு. இவனைக் காணேல்லையெண்டுதான் அண்ணை அழுது கொண்டிருக்கிறாராக்கும்.´

" என்னக்கா சத்தத்தைக் காணேல்லை. கண்டு கனகாலமாப் போச்சு. அதுதான் வந்தனாங்கள்."

"அதென்ன.. வந்த.. னாங்கள். கன ஆக்களோ..!"
செண்பகக்காவுக்கு சமையல் சாப்பாடு என்று நினைவில் வந்து பயமுறுத்தியது. எப்படியாவது வெட்டி விட்டிடோணும் என்று நினைத்துக் கொண்டா.

"அவர் தம்பி வீட்டிலை இல்லை. வெளியிலை போட்டார். நீங்கள் பிறகொரு நாளைக்கு வாங்கோவன்."

"பிறகெப்ப அக்கா வாறது. இவ்வளவு தூரம் வந்திட்டம்?"

´விடமாட்டான் போலையிருக்கு.´

"எவ்வளவு தூரம் வந்திருக்கிறியள்..? ஆரார் வந்திருக்கிறியள்?"

"என்னோடை இன்னும் நாலுபேர். இங்கை உங்கடை இடத்திலைதான் ஒரு பெற்றொல் ஸ்டேசனிலை நிற்கிறம்."

´அடப்பாவிகளா..?வெட்டவே ஏலாதோ..?´

"சரியப்ப வாங்கோவன்"

"அங்காலை வர வழி தெரியேல்லையக்கா. அதுதான்..!"

´தெரிஞ்சிருந்தால் வீட்டு வாசலிலையே வந்து பெல் அடிச்சிருப்பாங்கள் போலை இருக்கு.´

"உப்பிடியே நேரே வந்து இரண்டாவது திருப்பத்திலை இடது பக்கம் திரும்பினிங்கள் எண்டால் எங்கடை றோட்டுத்தான். 3ம் நம்பர் வீடு."

செண்பகக்கா அவசரமாக ரசேந்திரண்ணையின்ரை தொலைபேசிக்கு அழைப்பு விடுக்க.."ஆரது..? நானில்லாத நேரம் வீட்டை வரச்சொன்னனியோ..?" எண்டு ஒரு தரம் சினந்து.."ஓமப்பா அவன் என்னோடை லாகரிலை இருந்தவன்தான் வாறன்.. நான் உடனை வாறன்" என்று அவர் அமைதியாக..அவர்களும் வீட்டு வாசலுக்கு வந்து பெல் அடிக்க சரியாக இருந்தது.

செண்பகக்காவுக்குப் பயங்கர எரிச்சல். அழையா விருந்தாளிகளை அப்போது அவ துளியும் எதிர்பார்க்கவில்லை. உடுப்புக்களை விரிச்சுப் போட்டு வந்து ஆறுதலாக இருக்க வேண்டுமென்றுதான் மனசுக்குள்ளை உச்சாடனம் பண்ணிக் கொண்டிருந்தவ. எதையும் வெளியில் காட்டாமல் சிரிச்சுக் கொண்டு"வாங்கோ. வாங்கோ" என்று வரவேற்றா.

"இருங்கோ. அவர் வெள்ளெனவே வெளியிலை போட்டார். இப்ப வந்திடுவார். என்ன குடிக்கிறிங்கள்? தேத்தண்ணி போடட்டே..?"

"வேண்டாம் வேண்டாம். குளிரா ஏதாவது குடிக்கத் தாங்கோ."

செண்பகக்கா குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து தோடம்பழ யூஸைக் கொண்டு வந்து வைத்து.. கிளாசுகளையும் கொண்டு வந்து விட..
"கோலா இல்லையோக்கா..? " பியர்கேஸ் கேட்க செண்பகக்கா கீழே கெலருக்குள் சென்று கோலா எடுத்துக் கொண்டு வந்து ஊற்றிக் கொடுத்தா.

இப்ப என்ன தேவைக்கு வந்திருக்கினம் என்ற எரிச்சல் மனதுக்குள் இருந்தாலும், சும்மா ஒப்புக்கு சுகநலம் விசாரித்துக் கொண்டிருக்க ராசேந்திரத்தாரும் வந்து விட்டார். வாயெல்லாம் பல்லாய் வந்தவர்களோடு அளக்கவும் தொடங்கி விட்டார். பியர் குடிக்க ஒரு கொம்பனி கிடைத்து விட்டதிலான புழுகம் அவர் வார்த்தைகளில் துள்ளி விளையாடின.

"என்னப்பா பெடியளுக்கு ஏதும் சாப்பிடக் குடுமன். நாலைஞ்சு றோல்ஸ் செய்தீர் எண்டால் நல்லாயிருக்கும். " செண்பகக்கா வந்தவர்களுக்குத் தெரியாமல் அவரை ஒருதரம் முறைத்து விட்டுக் குசினிக்குள் நுழைந்தா.

"என்னடாப்பா சாப்பிட்டனிங்கள்? "

"இன்னும் ஒண்டுமில்லையண்ணை. காலைமை வெளிக்கிட்டனாங்கள். "

"சொல்லிப் போட்டு வந்திருந்தியள் எண்டால் செண்பகக்கா சமைச்செல்லோ வைச்சிருப்பா. "

"ஒரு surprise ஆ இருக்கட்டுமெண்டுதான்..."

´ம்... ம்... Surprise இல்லையெண்டுதான் இங்கை அழுதனாங்களாக்கும்.´

றோல்ஸ் முடிய.. இடியப்பம்.. கறி.. சொதி.. பிரட்டல்.. எல்லாம் முடித்து அவர்கள் சாப்பிட்டுப் போன பின்னும், வேலை முடியாது.. கழுவி, அடுக்கி, துடைச்சு குசினிக்கு வெளியில் வந்த போது ஞாயிறைக் காணவில்லை. பல்கணியில் அரைகுறையில் விடப்பட்ட விரிபடாத உடைகள் வெயிலில் முறுகி குளிரில் நனைந்து போயிருந்தன. விரித்த துணிகள் மீண்டும் குளிரத் தொடங்கியிருந்தன.

´இவங்கள் எங்கையாவது ஒரு ரெஸ்ரோறண்டிலை சாப்பிட்டிட்டுப் போயிருக்கலாம்தானே!´ செண்பகக்காவின் புலம்பல் யாருக்கும் கேட்கவில்லை. அது ராசேந்திரத்தாரின் குறட்டை சத்தத்துள் அமிழ்ந்து போனது.

சந்திரவதனா
யேர்மனி
10.9.2004

Monday, October 18, 2004

பெண்ணே...!


பழைய கவிதைகளில் இன்னுமொன்று

உனக்கு விடுதலை வேண்டும்
முதலில் உனக்கு உன்னிடமிருந்து
விடுதலை வேண்டும்.
கலாச்சாரம் பண்பாடு என்ற
கட்டுத்தளைகளிடம்
நீயே உன் மனசை அடகு வைத்து
இல்லையில்லை
உனது அம்மா
அம்மம்மா
ஆச்சி......
அவர்களைப் போலவே
நீயும்..
விட்டு விலகவோ
தப்பி ஓடவோ
வழி தெரியாது
உன்னை அண்டியுள்ள எல்லோராலும்
இறுகப் பிணைக்கப் பட்டு
மனசு நெரிக்கப் பட்டு...
இறுகப் பற்றியிருக்கும்
சமூகச் சங்கிலியை
உடைத்தெறியத் தெரியாமல்
மனசில்
வலியும் உளைவுமாய்..
பெண்ணே...!
உனக்கு விடுதலை வேண்டும்
முதலில் உனக்கு உன்னிடமிருந்து
விடுதலை வேண்டும்.

-6.9.2002-

இலவு காத்த கிளியாக....!


(பழைய கவிதையொன்று)

பனியது பெய்யும்
அழகினைக் கண்டு
மனமது துள்ளும்

வெளியினில் சென்றால்
பனியது பெய்யும்
குளிரது அறைய
உடலது நடுங்கும்
உதிரமும் உறையும்

பனியது பெய்யும்
குளிரது அறைய
பனியது பூவாய்
மரங்களில் தெரியும்

அழகினை ரசிக்க
அவகாசமின்றி
பணமது தேடி
வேலைக்காய் கால்கள்
பனியினில் விரையும்

"குளிரிலும் பனியிலும்
பணமது தேடி..........!
இது என்ன வாழ்க்கை"
மனம் தினம் அலுக்கும்

மடியினில் சுமந்த
மகவுடன் குலாவ
மணியின்றி
மனமது துவழும்

வெயிலதன் வரவில்
பனியது ஓடும்
மரமது துளிர்க்க
மனமது மலரும்
மலர்களும் சிரிக்கும்

மாறும் மாறும் ......!
எல்லாம் மாறும்!
பணமது தேடும்
நிலையது மாறும்!
ஓய்வாய் உட்கார்ந்து
கதைக்க முடியும்
ஒன்றாய் சேர்ந்து
உண்ண முடியும்
விரும்பிய மட்டும்
உறங்க முடியும்
குழந்தைகளுடனே
குலாவ முடியும்
குடும்பமாய் கூடி
களிக்க முடியும் ...!

முடியும் ...! முடியும்...!
பட்டியல் நீளும்!
...முடியும் ...! முடியும்..!
எல்லாம் முடியும்...!

இலவாய் நினைவுகள்
காய்த்துக் குலுங்க
கிளியாய் மனமும்
காத்து நிற்கும்.

சந்திரவதனா
யேர்மனி
1999

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite