Thursday, March 10, 2005

எப்படித் தமிழில் எழுதுவது?

உதவுங்கள்!


எப்படித் தமிழில் எழுதுவது என்று ஒரு பெண் என்னிடம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நான் அப்பெண்ணுக்கு தமிழ் எழுத்துக்களை எங்கிருந்து தரவிறக்கலாம், எப்படி சுரதாவின் செயலியில் விரும்பிய வடிவங்களுக்கு மாற்றலாம் என்பதையெல்லாம் தெரியப் படுத்தினேன். அதற்கான அவரது பதில் அஞ்சலைப் பார்த்த போதுதான் அவருக்கு தமிழில் தட்டுவதே எப்படி என்பது தெரியாமலிருக்கிறது என்பது எனக்குப் புரிந்தது. சரி அதற்காக ஒரு விளக்கப் படத்தை அனுப்பலாமென்ற கூகிளில் தேடினேன். சரியான எதுவுமே கிடைக்கவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் அதற்கான முகவரியைத் தந்துதவுங்கள்.

Wednesday, March 09, 2005

வேஷங்கள்!


காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது மட்டும் அந்தக் காலைக்குச் சிறிதும் பொருந்தாது புழுங்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் தகித்தது என்று கூடச் சொல்லலாம்.

"எப்படி அவனால் முடிந்தது...! எப்படித் துணிந்து சொன்னான்...!" காலையில் சந்துரு சொன்ன செய்தியில் கொதிப்படைந்த அவள் கோபத்தை அக்சிலேட்டரில் காட்டினாள். தொடர்ந்து வாசிக்க

Tuesday, March 08, 2005

வழக்கம் போல்...


10.10.2001 இல் எழுதப்பட்டது

எப்போதும் போலவே
இன்றைய எனது காலையும்
அவசரமாய்த்தான் விடிந்தது.

இப்போதெல்லாம்
இனிய கனவுகள் என்பது
எல்லோருக்கும் போல்
எனக்கும்
இரவுகளில் வருவதில்லை

வானிலே பறக்கும் விமானங்கள்
நேரிலே மோதுவதாய்
ஏதேதோ கனவுகள்
தீப் பிழம்புக் குவியலுக்குள்
நான் நின்று தவிப்பதாய்
திடுக்கிட்ட விழிப்புகள்

ஆனாலும்
விடியல்கள் வழமை போலத்தான்....

இன்று என்ன சமையல்
என்பதில் தொடங்கி
கூட்டல் கழுவல்
துடைத்தல் பெருக்கல்
எல்லாம் முடித்து....
வேலைக்கு ஓட வேண்டுமென்பதில்
மனசு பரபரத்தது.

இத்தனைக்கும் நடுவே...
"அகப்பையும் கையுமாய்
அடுப்படியை வலம் வருவதும்
படுக்கை விரிப்பதுவும் தான்
பெண்ணுக்கு வரைவிலக்கணம்
என்ற நினைப்பை
கொழுத்தி எறிந்தவள் மாலதி..."
பெண் பெருமை பாடியது வானொலி.

எனக்குள்
மின்னலாய் கோடிட்டது மகிழ்ச்சி
நானே
களத்தில் நிற்பது போன்ற திருப்தியுடன்
மாலதியின் நினைப்பை மனத்தில் இருத்தி
பத்திரிகையில் வந்த கவிதை படித்து
ஒரு மிடுக்கோடு நிமிர.......

"என்னப்பா இண்டைக்குச் சாப்பாடு...?
பேப்பரும் கையுமா
நீ இருந்தால்...!
எனக்குப் பசிக்குது....!"
கடுப்போடு என் கணவன்
சிடுசிடுக்க
மிடுக்கும் போய்
மாலதியின் நினைப்பும் போய்

அகப்பையும் கையுமாய்
அடுப்படிக்குள் நான்
வழக்கம் போல....

சந்திரவதனா
யேர்மனி.
10.10.2001

Tuesday, March 01, 2005

இது ஒரு அழகிய பனிக்காலம்










நாங்கள் மணலில் விளையாடினோம்.
இவர்கள் பனியில் விளையாடுகிறார்கள்.

Photos - Thumilan

அவள்


முழுக்க முழுக்க பெண்களின் படைப்புக்களைக் கொண்டு இம்மாதத் திசைகள் இதழ் வெளிவந்துள்ளது. 27 பெண்கள் பங்களித்திருக்கிறார்கள்.





என் பங்காக

அவள்


நடுரோட்டில் நின்றவள் என்னைக் கண்டதும் ஓடி வந்து கையைப் பிடித்தாள். தனது கணவனை ஜெயிலில் இருந்து விடுவித்துத் தரும்படி மன்றாடினாள். அவள் யாரென்பதையே அவளைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன். அடையாளமே தெரியாமல் உரு மாறிப் போயிருந்தாள். உதடுகள் வெடித்துக் காய்ந்து கருமை பேர்ந்திருந்தன. கண்கள் சோபை இழந்து சோகத்துக்குச் சொந்தமாகியிருந்தன. கன்னங்கள் ஒட்டி உலர்ந்திருந்தன. பன்னிரண்டு வருடங்களின் முன் நான் சந்தித்த மதுதான் இவளென்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது. தொடர்ந்து வாசிக்க

Friday, February 25, 2005

இது சரிதானா?


ஐரோப்பியக் கலாச்சாரம் ஒரு தீண்டத்தகாத விடயம் எனக் கருதும் ஐரோப்பியத் தமிழர்கள், ஐரோப்பியாவில் தமது பிள்ளைகள் சிகரெட் புகைத்தாலோ அல்லது மது அருந்தினாலோ அல்லது காதலித்தாலோ....

ஐரோப்பியாவுக்கு வந்ததால்தான், தமது பிள்ளைகள் இப்படியான பழக்கங்களைப் பழகிக் கெட்டலைகிறார்கள். என்று சொல்லித் தலையிலடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால் இப்படித் தலையிலடித்துக் கொள்ளும் பெற்றோராகிய இவர்கள், முக்கியமாகத் தந்தையர் ஊரிலேயே தமது பருவ வயதில் சிகரெட் புகைக்கத் தொடங்கி, மது அருந்தத் தொடங்கி இன்னும் அதை இங்கு ஐரோப்பியாவிலும் தொடர்கிறார்கள்.

அத்தோடு ஐரோப்பியாவில் வாழ்வதால்தான் தமது பிள்ளைகள் காதல் என்னும் மாயவலையில் சிக்கி மாய்கிறார்கள் என்று சொல்லி ஐரோப்பியக் கலாச்சாரத்தைத் திட்டும் இவர்களில் அனேகமானோர் ஊரில் காதல் செய்யாமல் இருக்கவில்லை.

சிகரெட், மது, காதல் இவைகள் மூன்றுமே ஊரிலும் இளைஞர்களை விட்டு வைக்காத போது ( இதை அநுபவரீதியாக உணர்ந்திருந்தும், தெரிந்திருந்தும்)
எம்மவர்கள் அர்த்தமற்ற முறையில் ஐரோப்பியக் கலாச்சாரத்தைச் சாடுகிறார்களே!

இது சரிதானா?

Thursday, February 24, 2005

கண்டு பிடிப்பு

காணாமற்போகும் பதிவுகள்


தற்போது நேசகுமாருக்கு இப்பிரச்சனை வந்துள்ளது. எனக்கும் இந்தப் பிரச்சனை இருந்தது. என்னைப் போல இன்னும் பலருக்கு இருந்தது.

ஒவ்வொன்றாகச் செய்து பார்த்து, ஒரு விடயத்தைக் கண்டு பிடித்தேன். தலைப்பு எப்போதும் சிறிதாக இருக்க வேண்டும். பெரிய தலைப்புகளில் போடப் பட்ட விடயங்கள்தான் காணாமற் போகின்றன.

இது எனதே எனதான கண்டு பிடிப்பு. அதனால் சரியோ! பிழையோ! என்பதை நீங்களும் செய்து பார்த்து உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் இந்த Title விடயத்தில் நான் கவனமெடுக்கத் தொடங்கிய பின் எனது பதிவில் காணாமற் போவது நின்று விட்டது.

Wednesday, February 23, 2005

தப்பான கணிப்புகள்


ஒருவரை முதன் முதலாகப் பார்க்கும் போது அவரது தோற்றம் எப்படியிருக்கிறதோ (அதாவது உடை நடை எல்லாமே.. எப்படியிருக்கிறதோ) அதை வைத்துத்தான் அவர் உடனடியாகக் கணிக்கப் படுகிறார் என்பதை எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரியவர் அழகிய கவிதை போல நான்கே வரிகளில் சொல்லியிருந்தார். யார் அவர்? எப்படிச் சொன்னார் என்பதெல்லாம் எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை. ஒருவர் தேர்ந்தெடுக்கும் உடை முக்கியமானதுமானதுதான். அதை நான் மறுக்கவும் இல்லை. புறத்தோற்றம் என்பதும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்றுதான். அதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை.

அதற்காக
காதில் வளையம் வளையமாகத் தோடுகள் கழுத்திலே தூங்கும் நாய்ச்சங்கிலிகளுடன் உலாவரும் எம்மவர்கள், மைக் பிடித்து ரப் பாடும் இளஞர் இளஞிகள் போன்றோரை நண்பர்களூடும் செய்திகளுடூம் பார்த்தும் கேட்டும் வந்ததால் இதுவும் ஆயிரத்தில் ஒன்று என்றே எண்ணத் தோன்றியது. இப்படியான கணிப்பை சரியென்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தொள தொளா ரவுசரும், மொத்தச் சங்கிலியும், காதில் வளையமும் போடுகின்ற இளைஞனையோ இளைஞியையோ நாட்டுப் பற்று இல்லாதவரென்றும், மேலைத்தேயக் கலாச்சாரத்துள் தன்னைத் தொலைத்து விட்டார் என்றும் எடை போட்டு விட முடியாது. இத்தனையும் போட்டுக் கொண்டு நாட்டுப் பற்றோடு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இவை எதுவுமே போடாமல் தாய்நாட்டைப் பற்றிய அக்கறை துளி கூட இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபம் தொலைக்காட்சியில் "அன்பே சிவம்" படம் ஒளி பரப்பானது. அதிலே கூட ஒரு கருத்து வருகிறது. மாதவன், பார்ப்பதற்கு அநாகரீகமாகத் தெரியும் கமலகாசனை தலையிடி பிடிச்ச ஆள் என்ற மாதிரி எண்ணுகிறார். அதே நேரத்தில் ரெயினுக்குள் நல்ல desent ஆக உடை அணிந்து decent ஆகப் பேசத் தெரிந்த ஒருவரிடம் ஏமாந்து போகிறார்.

இதே போலத்தான் புலம்பெயர் இளைஞர்கள் மேலிருக்கும் தப்பான பிரமையும். இந்தப் பிரமை இன்னும் எம்மவரை விட்டுப் போகவில்லை. நாகரீகமும்.. அதனோடான உடை மாற்றங்களும் எமது நாட்டில் எமது முன்னோர்கள் மத்தியில் நடை பெறவில்லையா? எழுபதுகளில் எம்மவர்கள் பெல்பொட்டம் போடவில்லையா. அதற்கும் முன்னர் எம் மூதாதையர் கடுக்கன் போடவில்லையா? வேட்டி, சாரம், குறுக்குக்கட்டு...... என்று வாழ்ந்த சமூகம் இன்று ரவுசர் காற்சட்டை என்று போட்டுக் கொண்டு திரியவில்லையா? எங்களது பாட்டாக்கள் போல எங்களது அப்பாக்கள் உடுத்தவில்லைத்தானே. தலை இழுப்பதும் அப்படித்தானே. அப்படியிருக்க இன்றைய இளைய சமூகத்தை குற்ற முலாம் பூசிய பூதக்கண்ணாடி வைத்து ஏன் பார்க்க வேண்டும்.

காலஓட்டத்தில் சில மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையே. அதே போல வாழும் இடங்களினாலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த மாற்றங்களை வைத்து புலம்பெயர் இளைஞர் சமூகத்தைக் கணிப்பது மிகுந்த கவலைக்குரிய விடயமே.

Thursday, February 17, 2005

பனி கொட்டுகிறது

யேர்மனியில் பனி கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்கிறது. நானிருக்கும் இடமோ மலைப்பகுதி. வீட்டுக்குள்ளிருந்து பனியைப் பார்க்கும் போது கொள்ளை அழகு. பனிப்பூத்த மரங்கள்... பனி போர்த்திய வீடுகள்... அவைகளை ரசிப்பதில்தான் எத்தனை சுகம். வெளியில் இறங்கி பனிக்குள் கால் புதைத்து நடக்க வேண்டுமென்ற குழந்தைத்தனமான ஆசை.

நேற்று அந்த ஆசையைத் தீர்த்துக் கொண்டு போய் பேரூந்துக்காகத் காத்திருந்த போதுதான் அலுப்புத் தட்டியது. வாகனங்கள் எதுவுமே வழமை போல குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து சேரவில்லை. ஆங்காங்கு தடம் புரண்டு போனவையும், மதில்களிலும் மரங்களிலும் மோதியவையும், சில்லு சுற்றவே மறுத்ததால் நின்று போனவையும் என்று... வேலைக்கு யாருமே நேரத்துக்குப் போய்ச் சேரவில்லை.

இன்றும் அதே நிலைதான். காலை எழுந்ததிலிருந்து பனியை அள்ளிக் கொட்டுவதே முக்கிய பணியாய் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. யாராவது எவரது வீட்டின் முன்பாவது வழுக்கி வீழ்ந்து, அங்கு நோகுது, இங்கு நோகுது என்று வழக்குப் போட்டார்களோ..!
வீட்டின் முன்னுள்ள பனியை அள்ளாவதர் பாடு திண்டாட்டமாகி விடும். என் வீட்டின் முன் மீண்டும் குவிந்து விட்டது. அள்ளி விட்டு அல்லது தள்ளி விட்டு வருகிறேன்.

Tuesday, February 15, 2005

பாடலைக் கண்டு பிடியுங்கள்


வழமையாக பாலாதான் பல்லவியும் சரணமும் என்று தன் பதிவுக்கு எங்களை சந்தோசமாக அழைப்பார். இன்று ஒரு மாற்றத்திற்காக பாடல்களிலிருந்து எனக்குப் பிடித்த சில இடைவரிகளைத் தருகிறேன். பாடலைக் கண்டு பிடியுங்கள். முடிந்தால் படம் பாடியவர் போன்றவற்றையும்.

1)நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்

2) உயிர் தந்த பூமி எனை அங்கு தேடும்
என் தோட்டப் பூவெல்லாம் காணாமல் வாடும்
மரம் என்னைத் தேடி கிளை கைகள் நீட்டும்
குயில் கூட்டம் நானின்றி குரல் வற்றிப் போகும்

3)விரல்களைத் தாண்டி வளர்வதைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்.....!
எதற்கிந்த சோகம்? கிளியே..!

4)விண்மீன்களைக் கேட்டால் அண்ணன்கள் எல்லாம்
பறித்துப் பறித்துத் தருவார்கள்
நான் வானவில் கேட்டால் ஏணியில் ஏறி
ஒடித்து ஒடித்துத் தருவார்கள்

5) பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?


6) எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை
வாழ்க்கை போல எண்ணங்கொள் வாழ்வது துயரமில்லை
எந்த மேடை என்பதை அன்பே மறந்து விடு
ஏற்றுக் கொண்ட பாத்திரம் அதிலே கலந்து விடு

7)...... மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன
இரண்டும் சந்தித்த போது..

பேச முடியவில்லையே..

8) சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்..!
மற்றும் மூன்று விரல்கள் உங்கள்
மார்பினை காட்டுதடா..!

9) முகிலனங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ


10) நிலவினில் இருக்கின்ற களங்கத்தை இவளது
பெருவிரல் துடைத்து விடும்
புதுயுக மகள் இவள் அணிகின்ற வளையல்கள்
சிறைகளை உடைத்து விடும்

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite