Saturday, May 07, 2005

ஒரு நாளும் இல்லாத திருநாளாய்...


ஒரு நாளும் இல்லாத திருநாளாய் இண்டைக்கு எங்கடை நகரத்திலை சந்திரமுகி படம் ஓடீனம். நான் யேர்மனிக்கு வந்து 19 வருசமாச்சு. இதுவரையிலை ஒரு தமிழ்ப்படம் எங்கடை நகரத்திலை ஓடேல்லை. முந்தநாள்த்தான் ஒரு பெடியன் ரெலிபோன் அடிச்சு "அக்கா சந்திரமுகி படம் ஓடுறம், வாங்கோ அக்கா" என்றான்.

"எங்கை? எந்தத் தியேட்டரிலை?" எண்டெல்லாம் கேட்டுப் போட்டு, "ரிக்கற் என்ன விலை?" எண்டு கேட்டன். "15யூரோ" எண்டான்.

`அவ்வளவு காசோ...! நானும் என்ரை மனுசனும் போறதெண்டால் 30யூரோ வேணும். வீட்டிலை ஏதாவது படம் ரீவியிலை ஓடினால், ஆராவது என்னை ஆய்கினைப் படுத்தி கூப்பிட்டு படத்தைப் பார்க்க வைச்சாலே அரைவாசியிலை நித்திரையாப் போற ஆள் நான். இப்ப 30யூரோ குடுக்கட்டே!

ஓசிப்பேப்பர் ஓசி வலைப்பதிவு... எண்டு கொண்டு திரியிற என்னைப் பற்றி அவையளுக்கு விளங்கேல்லை.` நான் போறேல்லை எண்டு தீர்மானிச்சிட்டன். என்ரை மனுசனும் சொல்லிப் போட்டுது "இது ஊரிலை ஆடு அடிச்சு பங்குக்கு ஆள் சேர்க்கிற மாதிரித்தான்" எண்டு.

ஆனால் என்ரை பிள்ளையள் மட்டும் சொல்லிப் போட்டீனம். "எங்கடை தமிழ்ஆக்கள் படம் போடக்கை, அதுவும் எங்கடை நகரத்திலை போடக்கை, நாங்கள் போகாட்டில் சரியில்லை. அதால நாங்கள் போறம் எண்டு."

"சரி ஏதோ உங்கடை பிரச்சனை" எண்டு விட்டிட்டம்.

பார்த்தால் படம் தொடங்கிற நேரத்துக்கு அரைமணித்தியாலம் முதல்ல பிள்ளையைக் கொண்டு வந்த தந்து, "பேத்தியோடை கொஞ்சுங்கோ" எண்டு சொல்லிப் போட்டு அவை படத்துக் ஓடீட்டினம்.

பேத்தியோடை கொஞ்சிக் கொண்டிருக்கக்கைதான் ஓசியாய் வருகிற ஒரு பேப்பரிலை, சந்திரமுகியைப் பற்றி கனடா நண்பன் லண்டன் நண்பனுக்கு எழுதினது ஞாபகம் வந்தது. அட பேப்பர் வந்து கனநாளாப் போச்சு. இன்னும் அதைப் பற்றி ஒரு வார்த்தை வலைப்பதிவிலை எழுதேல்லை எண்டும் ஞாபகமும் வந்திச்சு.

இனி எழுதியும் என்ன...? அடுத்த பேப்பரே அங்கை லண்டனிலை வந்திட்டுது போலை இருக்கு. எல்லாளன் மறுபடியும் வந்தால் அங்கை பேப்பர் வந்திட்டுது எண்டுதான் அர்த்தம். (இது என்ரை ஒரு கணிப்புத்தான்.) ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது. இந்தப் பேப்பரிலை எல்லாளன் எழுதியிருக்கிற கருத்திலை வழமைக்கு மாறா எனக்கும் நிறையவே உடன்பாடு.

எல்லாளன் மாதிரித்தான் எனக்கும். அப்பப்ப தொலைக்காட்சியிலை போற ஏதாவது நாடகங்கள் ஓரிரு நிமிடங்கள் என்ரை கண்ணிலையும் தட்டுப்படும். (ஓசியாய் ஏதாவது ஒளிபரப்பினால் மட்டுந்தான்). அந்த நேரங்களிலையெல்லாம் சடாரென்று தொலைக்காட்சி சணலை மாற்றிப் போடுவன். அவ்வளவு எரிச்சல் வரும் அந்த அழுகுணி நாடகங்களைப் பார்க்க. எந்த யுகத்துக் கதையளையெல்லாம் அவையள் எடுக்கினையோ எனக்குத் தெரியாது.

எங்கடை நாட்டுப் பொம்பிளையள் இந்த நாடகங்களைப் பார்க்கிறதுக்காண்டியே கார்ட் வேண்டி வைச்சிருக்கினமாம். இவையள் எல்லாளன் சொல்லுறது போலை அந்தந்த நாட்டு தொலைக்காட்சிகளில் போற தொடர் நாடகங்களைப் பார்த்தினம் எண்டால் எங்கடை தமிழ் தொலைக்காட்சிகளிலை போற நாடகங்கள் எவ்வளவு பின் தங்கியிருக்குது எண்டது விளங்கும். அது மட்டுமே அந்தந்த நாட்டு மொழிகளையும் ஓரளவுக்கேனும் தெரிந்து தமது வேலைகளைத் தாங்களே பார்த்துக் கொள்ளவும் முடியும்.

அடுத்து வசந்தனின் நாய்ப்பிறப்புகள் எப்பவோ வலைப்பதிவில் வந்தாலும் நான் ஒரு பேப்பரிலைதான் அதை வாசிச்சனான். நல்ல பதிவு. ஆனாலும் அந்தத் தலைப்புச் சரியோ எண்டு யோசிக்கிறன். அந்த நாய்களுக்குத்தான் எத்தனை வைராக்கியம். உயிரே போனாலும் வாழ்ந்த மண்ணையும் வீட்டையும் விட்டு வர மனமின்றி...

அறுவைப்பக்கத்தில் வழக்கம் போலை அல்வாசிட்டி விஜய் இடம் பிடிச்சிருக்கிறார்.

செல்வநாயகியின் ஆன்மீகம் அழகாகத் தொடர்கிறது.

சந்திரவதனா
7.5.2005

Friday, April 29, 2005

அவளும் பெண்தானே!


தமாரா விழித்துக் கொண்ட போது அவளோடு சேர்ந்து சோகமும் விழித்துக் கொண்டது. அவளால் தன்னுள்ளே படிந்து விட்ட சோகத்தின் சுமையை எந்த வழியிலும் இறக்க முடியாதிருந்தது. மனசு மிகவும் பாராமாக இருந்தது. பக்கத்துப் படுக்கையைப் பார்த்தாள். அது வெறுமையாகவே இருந்தது. இன்றோடு மூன்று மாதம். காந்தன் அவளை விட்டுச் சென்று மூன்று மாதங்கள் சென்று விட்டன. அவளால் எதையுமே ஜீரணிக்க முடியவில்லை.

காந்தனைப் பிரிவதென்பது காந்தனும் அவளுமாக முதலே பேசித் தீர்மானித்துக் கொண்ட விடயம்தான். ஆனால் ஐந்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த பின்னான அந்தப் பிரிவு நியத்தில் இவ்வளவு கொடியதாக இருக்கும் என்பதை அவளால் அப்போது கணிப்பிட்டுப் பார்க்க முடியவில்லை. - மிகுதி

Tuesday, April 26, 2005

கொக்கான் வெட்டுதல்


பாடசாலையில் படிக்கும் காலங்களில் எமக்குப் பிடித்தமான விளையாட்டுக்களில் கொக்கான் வெட்டுதல் முக்கிய விளையாட்டாக இருந்தது. இதைக் கூடுதலாகப் பெண்கள்தான் விளையாடுவார்கள். மாங்கொட்டை போடுதல், சிப்பி, ஏரோப்பிளேன், இது தவிர கிளித்தட்டு, கெந்திப் பிடித்தல், றவுண்டெஸ் இவைகளும் எமது பாடசாலைகளில் முக்கிய இடத்தை வகித்திருந்தன. இவையெல்லாமே உடலை அசைத்து விளையாடும் விளையாட்டுக்கள். ஆனால் கொக்கான் வெட்டுதல் அப்படியல்ல. அது இருந்து விளையாடும் விளையாட்டு. ஏதாவதொரு விறாந்தை நுனியில் இருந்துதான் இதை விளையாடுவோம். சீமெந்து விறாந்தை இவ்விளையாட்டுக்கு உகந்தது. விறாந்தை இல்லாவிட்டால் டோங்கு(மார்பிள்) மேலெழும்பாது. (bumpபண்ணாது).

கொக்கான் வெட்டுவதற்கு ஒரு டோங்கும்(மார்பிள்), இரு சிறிய கற்களும் அல்லது ஒரு டோங்கும், நான்கு சிறிய கற்களும் வேண்டும். அனேகமாக எங்கள் எல்லோரதும் பாடசாலை சூட்கேசில் ஒரு டோங்கு, ஒரு சிற்பி, ஒரு நன்கு சப்பையான காய்ந்த மாங்கொட்டை என்பன இருக்கும். சூட்கேஸ் இல்லாதவர்கள் கொம்பாஸ் பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்.

வீட்டிலும் எப்போதாவது நண்பிகள் ஒன்று கூடும் போது கொக்கான் வெட்டி விளையாடுவோம். ஆனால் இவ்விளையாட்டை வீடுகளுக்குள் யாரும் வரவேற்பதில்லை. கொக்கான் வெட்டினால் வீட்டுக்குத் தரித்திரம் பிடிக்கும் எனப் பெரியவர்கள் சொல்வார்கள். "ஏன் தரித்திரம் பிடிக்கும்?" என்ற எனது கேள்விக்கு யாருமே இதுவரை பதில் சொல்லவில்லை.

ஆனால் இவ்வளவு தூரம் எமக்குப் பிடித்தமான விளையாட்டு உலகளவில் பலருக்கும் தெரியாமல் இருப்பதுதான் ஏனென்று தெரியவில்லை. அமெரிக்காவைப் பார்த்தால் கண்ட கண்ட விளையாட்டுக்களை எல்லாம் உலக வெற்றிக் கிண்ண விளையாட்டு என்று அறிவித்துப் போட்டியாக வைத்து விடுவார்கள். எங்கள் விளையாட்டுக்களில் இந்த கொக்கான் போல் உலகளாவாத எத்தனை விளையாட்டுக்கள் இருக்கின்றன.

இந்தக் கொக்கானை மட்டும் உலக வெற்றிக் கிண்ணப் போட்டியாக்கியிருந்தால் எங்கள் பெண்களில் எத்தனை பேர் சம்பியன் ஆகியிருப்பார்கள்.

சந்திரவதனா
26.4.2005

Monday, April 25, 2005

வடலி ஐந்தாவது அகவையில்


ஏப்ரல் மாத வடலி வழமை போலவே நிறைந்த கட்டுரைகளுடன் எனைத் தேடி வந்துள்ளது. சின்னச் சின்னதாக நிறையத் துணுக்குச் செய்திகளும் சிறிய கட்டுரைகளும் பெரிய கட்டுரைகளும் என்று அறிந்து கொள்வதற்கு
தாராளமாகக் கிடைத்தன.

ஆரப்பல்லி போல அணைந்து வாழ்ந்தேனோ
இதைப் புறநானூற்றில் பலரும் படித்திருப்பீர்கள். ஆனாலும் செ.சிறீஸ்கந்தராஜா அவர்கள் நல்ல விளக்கத்தோடு எழுதியுள்ளார். புறநானூறில் வந்த ஒரு பாடலை வைத்தே அவர் இவ்விளக்கத்தைத் தந்துள்ளார். இதில் என்னைக் கவர்ந்தது பல்லி பற்றிய விடயம். தாய் நாட்டுக்கான போரிலே மாண்ட ஒரு வீரனின் மனைவி பாடுவது போலத்தான் இப்பாடல் அமைந்துள்ளது.

கலம் செய் கோவே கலம் செய் கோவே
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி
வியன்மலர் அகன் பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே
(புறநானூறு 256)

இன்பத்திலும் துன்பத்திலும் தன்னோடு கூட இருந்தவனை, இறக்கும் போது விட்டுப் போக மனமின்றி தானும் அவன் கூடவே சென்று விடத் துணிந்த. பெண் காட்டிய சில்லில் அகப்பட்ட பல்லியின் உதாரணம் நன்றாக உள்ளது.
வண்டில் சில்லிலே தொற்றிக் கொண்ட பல்லியின் கதி எப்படி இருக்கும்? எருதினால் இழுக்கப் படுகின்ற வண்டிலின் சில், ஒரு பயணத்தின் போது எத்தனை முறை சுற்றும் என்பதையோ, அது எந்தச் சேறிலும் சுரியிலும் உருளும் என்பதையோ, எத்தகைய பள்ளங்களிலும் மேடுகளிலும் ஏறி இறங்கும் என்பதையோ கணக்கிட முடியாது. இந்த நிலையில் சில்லோடு பொருந்திய குற்றத்திற்காய், பல்லி நலுங்கியும் குலுங்கியும் வதை படுமே தவிர தனக்குத் தங்க இடம் தந்த சில்லை விட்டு ஓடி விடாது சில்லிலேயே தொங்கிக் கொண்டிருக்கும்.

ஒருவர் தாழ்ந்து போனதும் அவரை விட்டு மெதுமெதுவாக நழுவி விடும் எமது மனித சமூகத்தோடு பார்க்கும் போது இந்தப் பல்லி...... வியப்பாயிருக்கிறது.

இவனெல்லாம் ஏன் படமெடுக்க வருகிறான் என்றோ இவனுக்கேன் கவிதை என்றோ எம்மில் பலர் அலுத்துக் கொள்கிறோம். பாலுமகேந்திராவும் அலுத்திருக்கிறார். இந்தக் வரிகளை அவர் படிக்கும் வரை
அழகான குரலெடுத்து
குயில்கள் மட்டுந்தான்
பாட வேண்டுமென்றால்
இந்தக் கானகம்
நிசப்தமாகி விடும்.
(றீடெர்ஸ் டையஸ்ரில் இருந்து இயக்குனர் பாலுமகேந்திரா
ஓவியர் புகழேந்தியின் "சிதைந்த கூடு" ஓவியக் கண்காட்சித் தொடக்க விழாவில்)

இதைப் படித்த பின்தான் பாலுமகேந்திரா ஒன்றைப் புரிந்து கொண்டார். காடு என்பது எல்லாப் பறவைகளுக்குமானது. இதில்கள் குயில்கள் மட்டுந்தான் பாடவேண்டும் என்றோ கிளிகள் மட்டுந்தான் பேச வேண்டுமென்றோ எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது. எல்லாப் பறவைகளும் பாடினால்தான் அது கானகம். எப்போதாவது எங்கேயாவது குயிலின் பாடலைக் கேட்டால் ரசிப்போம். தலைக்கனம் மிக்க கலைஞர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய விடயம்.

இருமலைச் சொக்களேட் கட்டுப் படுத்துகிறது.
ஆச்சரியமாக இல்லை! உங்களுக்கு எப்படியோ..? எனக்கு ஆச்சரியம்தான்.
தொடர்ச்சியான இருமல் என்றால் இருமலைக் கட்டுப் படுத்த சொக்கிளேட் சாப்பிடும் படி சொல்கிறார்களாம் லண்டன் இம்பிரீயல் கல்லூரி மருத்துவர்கள். இருமலால் பாதிக்கப் பட்ட பத்துப் பேரைத் தேர்ந்தெடுத்து இவர்கள் பரிசோதனை செய்தார்களாம். உடனடியாகவே எட்டுப் பேருக்கு இருமல் நின்று போனதாம்.

வழமையாகப் பாவிக்கும் கோடினே என்ற பொது மருந்தை விட சொக்கிளேட்டுக்கு இந்த இருமலை நிற்பாட்டும் சக்தி அதிகமாக இருக்கிறதாம். சொக்களேட்டில் சேர்க்கப் படும் கொக்கோவில் உள்ள தியோ புரோமைன் என்ற பொருள்தான் இருமலைக் குணப்படுத்துகிறதாம். வழக்கமான இருமல் மருந்தை விட இரு மடங்கு நிவாரண சக்தி சொக்ளேட்டுக்கு இருக்கிறதாம். எதற்கும் பரீட்சித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

இன்னும் பல தகவல்கள் ஏப்ரல் மாத வடலியில்.

சந்திரவதனா
25.4.2005

Saturday, April 23, 2005

அவர்கள் வரவில்லை


காற்றோடு கை கோர்த்து ஊர்க்கோலம் போகின்ற மகரந்தத் துகள்களுக்கு என் நாசித்துவாரமும் பாதையாகிப் போனதில் தொண்டைக்குழி வரை மசமசத்தது. விடுப்புப் பார்ப்பதே வேலையாக இருந்ததில் விழிகளும் சிவந்தன.

"அக்கா சித்திரைக்குப் பொங்கியாச்சே... "
பாதையில் ஒரு தமிழன் பாசமாய்க் கேட்டான்.

"...ம்ம்ம்..." காலைப் பரபரப்பில் பாணைக் கடிக்கவே மறந்தேன் என்றால் நம்புவானா...! பாதி இரவில் விழித்திருந்து ஊரில் வாழும் உறவுக்காய் அழுதேன் என்றால் நம்புவானா...! கற்தரையில் எம்மவர் நித்திரை கொள்வதை ஊர்க்கடிதம் சொன்னதில் தொடங்கி இந்திய வல்லூறுகள் எம்மவரை உயிர் வதம் செய்வதில் தொடர்ந்து... செம்மணிப் புதைகுழியில் எம் பெண்மணிகள் புதைந்தது வரை... சத்தியமாக நான் சித்திரைக்குப் பொங்கவில்லை என்றால் நம்புவானா...! - மிகுதி

Wednesday, April 20, 2005

அழகி


அழகி படத்தை அருமையான படம் என்று எல்லோரும் புகழ்ந்தீர்கள்.
ஒரு படம் அருமையாவதற்கு கரு மட்டும் காரணமல்ல என்றாலும், அதன் கருவை அனேகமான ஆண்கள் எல்லோருமே வரவேற்றீர்கள்.

இப்போது எனது கேள்விகள்
1) தேவயானி தனது பள்ளிப் பருவத்து நட்பையும் காதலையும் மையப் படுத்தி, ஒருவனை வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்திருந்தால் பார்த்திபனின் நிலைப்பாடு எந்த வகையில் வெளிப்படும்? நீங்கள் அதை எந்த வகையில் வரவேற்பீர்கள்?

2) பார்த்திபனின் நிலையில் நந்திதா இருந்து, பார்த்திபனைத் தன் வீட்டில் கூட்டிக் கொண்டு போய் வைத்திருந்தால் நந்திதாவின் கணவர் என்ன செய்திருப்பார்? அல்லது நீங்கள்தான் என்ன சொல்லியிருப்பீர்கள்?

ஆட்டோகிராப்


ஆட்டோகிராப் படத்தில் சேரனது வாழ்வில் குறுக்கிட்ட மூன்று பெண்கள் பற்றிச் சொன்னார். அதே போல ஒரு பெண் தன் வாழ்வில் குறுக்கிட்ட மூன்று ஆண்கள் பற்றிச் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதற்கான உங்கள் எதிர்வினை எப்படியிருக்கும்?

Friday, April 15, 2005

ஒரு பேப்பர் - 20 (April1-14,2005)


கற்பகதரு பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
அப்படித்தான் இப்போ ஒரு பேப்பரும். அது தன் உச்சப் பயன்பாடு வரை சென்றிருக்கிறது. பொரித்த மீனை வைக்கவும், மாவரிக்கவும் கூட அது உதவுகிறது. நீங்களும் தாராளமாகப் பயன் படுத்தலாம். அச்சடிக்கப் பட்ட மை பொரித்த மீனிலோ மாவிலோ ஒட்டிக் கொண்டு உங்களுக்குத் தெரியாமலே உங்கள் உடலுக்குள் நச்சுத் தன்மை காவப் பட்டால்.. அதற்கு நான் பொறுப்பல்ல.


சரி இனி விடயத்துக்குள் வருகிறேன்.
வழமையான விடயங்கள்தான். அவற்றுள் சிலவற்றைத் தொட்டுள்ளேன்.

மெல்லத் தமிழ் இனிச் சாகும்.
எல்லாளன் சபித்திருக்கிறாரா..! அல்லது சாபமிட்டிருக்கிறாரா...! புரியவில்லை.

நான் ஜேர்மனியில் ஒரு ரெனிஸ் ஆட்டத்தைப் பார்க்கிறேன் என்று வைப்போம். அங்கு ஒரு அமெரிக்கரும் ஒரு ஜேர்மனியரும் போட்டியிடுகிறார்கள் என்றால் நான் ஜேர்மனியர் வெல்ல வேண்டுமென்றுதான் நினைப்பேன். ஏனெனில் நான் ஜேர்மனியில் வாழ்கிறேன். அது எனக்குத் தஞ்சம் தந்த நாடு. என்னவானாலும் ஜேர்மனிக்கு அடுத்தபடிதான் அமெரிக்கா. அதனால் ஜேர்மனியர்தான் வெல்ல வேண்டும். மனசு ஜேர்மனியரையே சப்போர்ட் பண்ணிக் கொண்டு இருக்கும்.

இதே ஜேர்மனியருடன் ஒரு இந்தியர் விளையாடுகிறார் என்று வைப்போம். என்ன இருந்தாலும் இந்தியர் ஒரு ஆசியன் அல்லவா. நானும் ஆசியன்தானே. இத்தனை வசதி படைத்த ஜேர்மனிக்கு வந்து எனது ஆசிய இனத்தைச் சேர்ந்த ஒரு இந்தியர் தோற்பதா? ம்கும்.. ஒரு நாளும் கூடாது. இப்போ எனது மனம் முற்று முழுதாகச் சப்போர்ட் பண்ணுவது அந்த இந்தியருக்குத்தான்.

இதே இந்தியரும் ஒரு இலங்கையரும் விளையாடுகிறார்கள் என வைப்போம். இப்போ எனது மனம் கண்டிப்பாக இலங்கையருக்குத்தான். எனது நாட்டவரல்லவா...! சும்மா இருக்குமா மனம். அவர் வெல்ல வேண்டும் என்பதற்காக தன்னையறியாமலே பிரார்த்தனை கூடச் செய்யும்.

இதே இலங்கையர் கொழும்பைச் சேர்ந்தவராக இருந்து கொண்டு யாழ்ப்பாணத்தவரோடு விளையாடினால் எனது மனம் யாருக்கு என்பதை நான் சொல்லத் தேவையில்லை. கண்டிப்பாக யாழ்ப்பாணத்தவருக்குத்தான்.

அதே யாழ்ப்பாணத்தவர் எனது ஊரான பருத்தித்துறையோடு விளையாடினால்... அப்போது சிறிதேனும் சந்தேகமின்றி என் மனம் பருத்தித்துறையோடுதான்.

இதே பருத்தித்துறை ஆள் எனது வீட்டுக்குள் உள்ள எனது உறவு ஒன்றோடு விளையாடினால்... சொல்ல வேண்டுமா என் மனம் பற்றி.

இப்போது இதையேன் சொன்னேன் என்றால்...
இந்த மனம் இருக்கிறதே அதைப் போலச் சுதந்திரவாதி இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அதே அளவுக்கு சுயநலவாதியும் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அது அப்படித்தான் நினைக்கும். தன் சார்ந்துதான் எதையும் சிந்திக்கும்.

அப்படியிருக்க கொஞ்சம் யோசியுங்க.. என்று சொல்லி எல்லாளன் எழுதியிருக்கும் "எமது பூநகரி மொட்டைக் கருப்பன் அரிசிக்கு ஒரு இந்திய நடிகையை வைத்துத்தான் விளம்பரம் செய்ய வேண்டுமா..?" என்ற கேள்வி சரிதான். அவரது அந்தக் கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன். அந்த விளம்பரத்தை பூநகரிப் பெண்ணையே வைத்தோ, அல்லது புலம் பெயர்ந்த இலங்கைப் பெண்ணையே வைத்தோ செய்திருக்கலாம்.

அதுக்காக "அமெரிக்க நடிகர் Tom Cruise ஐ அமெரிக்கர் என்பதால் தள்ளி வைத்து, சாருகான் இந்திய நடிகர் என்பதால் தலையில் தூக்கி வைப்பது ஏன்...?" என்று கேட்கிறார். இதில் எந்த சூட்சுமமும் இல்லை. மேலே குறிப்பிட்ட ரெனிஸ் தத்துவம்தான் இதற்கும் பதிலாய் அமையும்.

ஊடகங்கள் இந்தியப் படைப்புக்களுக்கும், இந்திய நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் திறமைகள் காட்டில் எறித்த நிலவாய் வீணாகிப் போவதை மறுப்பதற்கில்லை. TTNஇல் போகும் படலைக்குப் படலை போன்ற யதார்த்தமான நிகழ்ச்சிகளை எம்மவர்களால் தர முடியும். இருந்தும் ஊடகங்கள் பெண்களை அடிமைப் படுத்தும் விதமாகவும், பெண்களை கேவலப் படுத்தும் விதமாகவும் தயாரிக்கப் படும் இந்தியத் தொடர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவைகள் எம்மவருக்கான வாய்ப்புக்களை எந்தளவுக்குப் பின்னுக்குத் தள்ளுகின்றன என்பதையும் சொல்லாமலே புரிந்து கொள்ளலாம்.

அதற்காக எல்லாளன் கொடுத்த உதாரணங்களும் மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற வாய்ப்பாடும் ஏற்புடையதாய் இல்லை.

இங்கு ஊடகங்களை மட்டும் குறை சொல்லிப் பிரயோசனமில்லை. எங்கள் புலம் பெயர்ந்த பெண்களும் இவைகளை விழுந்து விழுந்து பார்க்கிறார்களே... அவர்களை என்ன சொல்ல...!

ஆன்மீகம்
செல்வநாயகியின் எது ஆன்மீகம் என்றொரு கட்டுரை தொடராக வருகிறது. ஆன்மீகம் என்றால் மற்றப் பக்கமாய் ஓடுபவர்களை இழுத்து நிறுத்தி, இதுதான் ஆன்மீகம் என்று சொல்லும் விதம் அருமை. கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுபவன்தான் ஆன்மீகவாதி என்றில்லை... அன்பால்... என்ற கருத்துப் பட எழுதப் படும் அக்கட்டுரை உண்மையிலேயே என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

ஒளியின் பதிவுகள் பற்றிய கமரா பயனுள்ள கட்டுரையாகத் தொடரும் என்றே நம்புகிறேன்.

பெற்ற(து) சுமை.
நல்லதொரு கதை. கனடாவிலிருந்து தம்பிதாசன் எழுதியிருக்கிறார்.
புலம்பெயர்ந்த நாமல்ல. எம்மைப் பெற்று வளர்த்து, தாலாட்டிச் சீராட்டித் தலைநிமிர வைத்தவர்கள். அவர்கள் புலம்பெயர்ந்த மண்ணில் படும் அவலங்கள். எவனோ ஒருவனின் துப்பாக்கிக்கு இரையாகியிருந்தால் கூட அவர்களின் மனங்கள் இத்தனை துயரைச் சுமந்திருக்க மாட்டா. பெற்றவர்களிடமே சுமை போலான நிலையில்.. நல்ல கருவொன்றைக் கதையாக்கியிருக்கிறார் தம்பிதாசன்.

அறுவைப்பக்கத்தில்
யாருக்காவது தலையில் குட்டு வேண்ட ஆசையென்றால் தலையைச்சுற்றி மூக்கைத் தொடாமல் நேரடியாக அல்வாசிட்டி விஜய் இடம் போங்கள்.

கொதிகிழப்பல்
இலங்கை வானொலியின் பாரபட்சமனா தன்மையில் வன்னியன் கொதிப்படைந்திருக்கிறார்.

இன்னும் பல......

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite