Sunday, July 09, 2006

கனவுகள்


கனவுகள் பற்றி நான் அடிக்கடி சிந்திப்பேன்.மறக்க முடியாத கனவுகளும், நினைத்துப் பார்க்க முடியாத அளவு சாத்தியமில்லாத விடயங்களைக் கொண்ட கனவுகளுமே என்னை அப்படிச் சிந்திக்க வைத்திருக்கின்றன
சில கனவுகள் கண்டு ஓரிரு நாட்களில் அதனோடு சம்பந்தமான சம்பவங்களும் நடந்துள்ளன.


இந்த நிலையில் இன்று உமா கதிரின் பதிவில் கண்ட கனவு பற்றிய சில தகவல்கள் என்னைக் கவர்ந்துள்ளன.

கனவுகளுக்கு ஜாதக ரீதியாக பலன்கள் உண்டோ, இல்லையோ, விஞ்ஞான ரீதியாக பலன்கள் உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருநாள் இரவில் ஆறு கனவுகள் வருகிகின்றன. ஒவ்வொரு கனவும் குறைந்தது 10 நிமிடங்கள் நீடிக்கின்றன!. என்கிறார் தூக்கத்தை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள செம்டெக் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் ஹார்ட்மென்.

நமது தூக்க ஓய்வின் போது தசைகள் தூண்டி விடப் படுகின்றன. அதனால், மூளை லட்சக்கணக்கான நரம்பியல் தொடர்களை தூண்டி விடுகிறது. அவை பிம்பங்களாக தெரிகின்றன. நரம்பியல் சமிக்ஞைகளின் மூலம், தான்தோன்றித் தனமாகத் தோன்றும் பல்வேறு பிம்பங்களை நமது மூளை இணைத்து ஒரு கனவாக உருவாக்குகிறது.

விஞ்ஞான பூர்வமாக இப்படி 1973ல் கனவை பற்றிக் கூறினார்கள், ஆலன் ஹாப்ஸன் மற்றும் ராபர்ட் மெக்கார்லே எனும் விஞ்ஞானிகள்.

ஒரு பிரச்சினையில் சரியான தீர்வுக்கு வரமுடியவில்லையா? கவலையை விடுங்கள். அந்தப் பிரச்சினையைப் பற்றியே சிந்தித்தபடி தூங்கி விடுங்கள். அந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கலாம் என்கிறார் அமெரிக்காவின் அறிஞர் கார்பீல்டு. தினமும் ஏதேனும் பயங்கரமான கனவுகள் தோன்றினால் அவை உங்களுக்கு ஏதோ ஒன்றை உணர்த்த முயல்கின்றன என தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் கார்பீல்டு.

பிரபல விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், துப்பறியும் நிபுணர்களுக்கு, சில விஷயங்களில் அவர்கள் மண்டையை போட்டு உடைத்து கொண்ட போதெல்லாம் அவர்கள் கண்ட கனவுகள் மூலமே நல்ல தீர்வு கிடைத்தது என்கிறது வரலாறு.

டாக்டர் ஜக்கைல் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க ராபர்ட் லூயிஸ்ஸ்டீவன்சனுக்கு அவர் கணட கனவு கனவுதான் உதவியது.

தையல் இயந்திரம் கண்டு பிடிக்கும் போது, பல தவறுகள் செய்த படி இருந்தார் எல்லீஸ் ஹோவோ என்பவர். இறுதியில் அவர் கண்ட கனவின் மூலமே அந்த தவறுக்குச் சரியான தீர்வு கிடைத்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இரவில் நீங்கள் கண்ட கனவினை துல்லியமாக நினைவில் வைத்திருந்து திரும்ப நினைத்துப் பார்க்க முடியுமானால், அது உங்கள் வாழ்வில் நீங்கள் முன்னேற பல நல்ல உத்திகளைத் தெளிவு படுத்தும் என்கிறார் டாக்டர் கோல்டர் ரூல்.

Saturday, July 08, 2006

வானலையில் நூல் வெளியீடு


ஐபிசி தமிழ் வானொலியில் ஒரு புதிய நிகழ்ச்சி அறிமுகமாகி உள்ளது.

ஒரு புத்தகத்தை வெளியிட்டு, அதற்கு சிறப்புரை, ஆய்வுரை, ஏற்புரை என எல்லாம் நடாத்தி, புத்தகத்தின் விபரங்களையும் தந்து விடுகிறார்கள். இது வழமைதானே இதில் என்ன விசேசம் இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? தொடர்ந்து வாசியுங்கள். விபரங்கள் கிடைத்துவிடும். அந்தப் புதிய நிகழ்ச்சியின் புதுமைகள் தெரிந்து விடும். இலக்கிய மாலை, அதுதான் அந்த நிகழ்ச்சிக்குப் பெயர். செவ்வாய் தோறும் ஐரோப்பிய நேரம் இரவு பத்துமணிக்கு இந் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. ஈழத்துக் கலைஞர்கள் சம்பந்தமான பல நிகழ்ச்சிகளை வழங்கும் எஸ்.கே. ராஜென் அவர்களால் இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்படுகிறது.

நூல் வெளியிடுவதற்கான நாளைக் குறித்து, மண்டபம் எடுத்து, ஆய்வாளர்களை அழைத்து, முக்கியமாகப் பார்வையாளர்களை வருந்தி அழைத்து, பேச்சாளர்களின் மனம் நோகாமல் நடந்தொழுகி, "வருவீங்கள்தானே?" என்று ஒன்றுக்குப் பத்துத் தடவையாக தொலைபேசியில் அலுக்காமல் சிறப்பு விருந்தினர் வருவதை நிச்சயப் படுத்தி, வருபவர்களுக்கு விருந்து படைத்து.... இப்படி ஒருவர் தனது படைப்பை அறிமுகம் செய்வதற்குள் களைத்துப் போய் விடுகிறார். இதனால் தனது மற்றைய படைப்பைப் பற்றி சிந்திக்கவே மறந்து போகிறார். இவ்வகையான பின்னடைவுகளுக்கு படைப்பாளிகள் தள்ளப் படாமல் இருக்கும் விதமாக, சிரமமில்லாத முறையில் தளம் அமைத்திருக்கிறது ஐபிசி தமிழ். எங்களது தொகுப்புக்களை ஐபிசி தமிழிடம் கொடுத்து விட்டு அமைதியாக அடுத்த படைப்புக்களைப் பற்றிய சிந்தனைகளில் ஆழ்ந்து விடலாம். எல்லாவற்றையும் இலக்கிய மாலை பார்த்துக் கொள்ளும்.

நூல்களின் ஆய்வுகளை வெவ்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள் ஊடாகச் செய்து வானலைகளில் தவழ விட்டு விடுகிறார்கள். அதுவும் ஒரு மேடையில் நடப்பது போன்று நேரடியாகவே கதைத்து, கருத்துக்களைப் பரிமாறி சிறப்பாகத் தருகிறார்கள்.

இனி வெயிலில் அலைந்து மழையில் நனைந்து, பனியில் குளிர்ந்து புத்தக வெளியீடுகளுக்குப் பல கிலோ மீற்றர்கள் ஓடத் தேவையில்லை. அறையில் இருந்து கொண்டே நூல் விமர்சனத்தைக் கேட்கலாம். படைப்பாளியோடு வானலையில் உறவாடலாம். ஏதாவது மேலதிகத் தகவல்கள் தேவையென்றால் வானொலி நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.கே.ராஜென் அவர்களைக் கேட்கலாம்.

படைப்பாளிகள், ஒவ்வொரு நாடாகா அலைந்து திரிந்து தங்கள் நூல் வெளியீடுகளை நடாத்த வேண்டிய சிரமங்களில்லை. புத்தகங்களை அச்சிட்டு விட்டு சரியான முறையில் மக்களை அணுக முடியாமல், வீட்டுக்குள்ளேயே புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டு சோர்ந்து போயிருப்பவர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு வரப்பிரசாதம்.

மேலும் இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும். இலக்கியமாலையில் விமர்சனம் செய்வதால் வானலையில் இலவசமாக ஒரு பெரிய விளம்பரமும் அந்த நூலுக்குக் கிடைத்து விடுகிறது.

இலக்கியம், இலக்கணம் என்று வரும்போது அது பலரிடம் போய்ச் சேருமா என்ற கேள்வி எழுந்தாலும், கண்டிப்பாக இந்தத் துறையில் உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பிக் கேட்பார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒரே விமர்சகர்கள் வரும்போதும், வருபவர்கள் தங்களது மேதாவித் தனங்களைக் காட்டும் போதும், நிகழ்ச்சி மெதுவாக சோம்பலைத் தரத் தொடங்கிவிடும். ஆகவே நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.கே. ராஜென் இந்த விடயங்களையும் கவனத்தில் கொண்டு இலக்கியமாலையை நடாத்துவாராயின், படைப்பாளிகளும் பயன் அடைவார்கள். நிகழ்ச்சியும் சிறப்புறும்.

இலக்கிய மாலை ஒரு நல்ல நோக்கோடு ஆரம்பமான நிகழ்ச்சி. அது நன்றாக நடைபெற வாழ்த்துவதோடு, ஐபிசி தமிழ் வானொலிக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.கே. ராஜென் அவர்களுக்கும் படைப்பாளி என்ற நிலையில் இருந்து எனது நன்றி.

சந்திரவதனா
ஜேர்மனி
7.7.2006

Thursday, July 06, 2006

எதிர்பார்ப்பு இல்லையென்றால்...


எதிர்பார்ப்புகளுடன்தான் வாழ்க்கை நகருகிறது. எவ்வளவுதான் பிழைத்துப் போனாலும் சரிவந்து விடும் என்ற நம்பிக்கையுடனான எதிர்பார்ப்பே ஒவ்வொருவரையும் வாழ வைக்கிறது. அந்த நம்பிக்கையும் பிழைத்துப் போகும் கட்டத்தில்தான் மனம் வேறொன்றை நாடத் தொடங்குகிறது. அங்கும் மீண்டும் எதிர்பார்ப்பு. ஏதோ ஒன்றுக்கான எதிர்பார்ப்பு இல்லையென்றால் அடுத்து வரப்போகும் பொழுதின் மீதான சுவாரஸ்யமே அற்றுப் போய் விடும். அந்த வகையில் எதிர்பார்ப்பு என்ற ஒன்று வாழ்வில் அவசியம் என்பதை உணர முடிகிறது.

Wednesday, July 05, 2006

அழகு மாணிக்கங்கள் அல்ல, அத்திவாரக் கற்கள்



நாங்கள் அழகு மாணிக்கங்கள் அல்ல,
அத்திவாரக் கற்கள்
அழகான ஈழம் அமைவதற்காக
வெளியில் தெரியாமல் புதைந்து போனவர்கள.;

எங்கள் சிலரின்
முகங்களையும் முகவரிகளையும்
சுவரொட்டிகளில் தேடாதீர்கள்
நாங்கள்
உங்கள் பாதங்கள்
உரிமையுடன் நடப்பதற்காக
எங்கள் உடல்களைப்
பஸ்பமாக்கிக் கொண்டவர்கள்.

மண்ணின் விடிவுக்காக
மாற்றானின் அருகிற் சென்று
கூற்றுவனை வலிந்தழைத்து
குசலம் விசாரிப்பவர்கள்

மின்னல்க் கீற்று வெடி முழக்கத்துடன்
கண்ணில் படாமல் கரைந்து போன
எங்கள் கல்லறைகள்
வெளியில் தெரிவதில்லை.

அநேகமான சமயங்களில் நாங்கள்
அஞ்சலிக்கு வைக்கப் படாத
அநாமதேய வித்துடல்கள்.

- தீட்சண்யன் -

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய...

ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!


வென்றிடவே கரும் வேங்கைகளாகிய
வீரக் கொழுந்துகளே!
உம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்
என்ன நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!

தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில்
சாவைச் சுமந்தவரே!
உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில்
ஆரை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய
அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!


தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய
தாயை நினைத்தீரோ!
உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின்
கையை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!


நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்
நாயகனை நினைத்தீரோ!
உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்
சோகம்தனை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!


நன்றி - தமிழீழ விடுதலைப்புலிகள்(சுவிஸ் கிளை)

Wednesday, June 28, 2006

தமிழ்சினிமா தமிழ்ப் பெண்களைக் கேவலப் படுத்துகிறது


இயக்குனர் மகேந்திரனுடனான சந்திப்பில் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள்

நா. கதிர்வேலன்

துப்பாக்கிகளுக்கும், கண்ணி வெடிகளுக்கும் இடையே ஒரு அதிரடி சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இயக்குநர் மகேந்திரன் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார்.

திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த சாசனத்தின்இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா பற்றிச் சொல்லி, ஒரு படமும் தயாரித்துத் தரவேண்டும். வரமுடியுமா? என்று கேட்டார்கள். மறுவார்த்தையாக மறுப்புச்சொல்லாமல் சம்மதித்தேன். அருமையான மூன்று மாதங்கள். அங்கேயிருந்து 1996என்ற அவர்களின் வாழ்க்கை சார்ந்த சினிமாவை எடுத்துக் கொடுத்தேன். யாருமே முறைப்படி அனுபவம் பெற்ற நடிகர்கள் கிடையாது. 1996ன் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தபோதுதான், திடீரென்று எடிட்டிங் அறையின் வெளியே கார் வந்து நின்றது.

சினிமா, கலைப் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சேரா என்னை அணுகினார். நீங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும். அவரும் உங்களோடு கதைக்க விரும்புகிறார். இப்போதே நீங்கள் புறப்பட வேண்டும் என்றார்கள். அதற்கான ஏற்பாடுகள், விவரணைகள், பாதுகாப்பு, சிறிய பதட்டம், பரபரப்பு, ஆர்வம். நாம் சந்திக்கப்போகிறவர் யார் என்று புரிந்துவிட்டது. வேகம் பற்றிக்கொண்டது. சூழ்நிலை கெடுபிடி ஆகிவிட்டது. வழியெங்கும் தம்பியின் படை. பிரமாதமான கட்டுக்கோப்பு. உங்களில் யாராலும் யூகிக்க முடியாத இடத்தை நோக்கிய பயணம். சேரா என்னிடம் மெல்லிய சிரிப்போடு, பேசிக் கொண்டே வந்தார். தலைவர் உங்களின் உழைப்பைப் பற்றி விசாரித்தார். சந்தோஷப்பட்டார். பார்க்க வேண்டும் என்று விரும்பினார். இந்த விருப்பம் சாதாரணமானதல்ல என்று பேசிக்கொண்டே வந்தார். எனக்கு ஒன்றுமே நிலை கொள்ளாமல் தவித்தேன். உலகத்தையே தன் பக்கம் பார்க்க வைக்கிற மாபெரும் தலைவன். அவரையே சந்தித்துப் பேசப் போகிற பேரனுபவம். அதை எப்படி நாம் உள்வாங்கப்போகிறோம் என்றெல்லாம் சிந்தனைகள்.

திடீரென்று அடுக்கடுக்கான விசாரணைகள். பாதுகாப்பு குளறுபடி இல்லாத கம்பீரமான விசாரணை. இருப்பிடம் நெருங்கப்போகிறோம் என்று தெரிந்துவிட்டது. சேராவிடம், நான் அவரை எப்படிக் கூப்பிடுவது. சார் என்றா, அல்லது வேறு முறையிலா? என்று, போட்டோக்களில் பார்த்திருந்த அவரின் கம்பீரத்தை நினைவுபடுத்திக் கேட்டேன். நீங்கள் அவரைத் தம்பி என்று அழைத்தால் பிரியப்படுவார். நாங்கள் எல்லோருமே அவரை எங்களுக்குள் அழைக்கும் விதம் அதுதான். ஒன்றும் பயப்பட வேண்டாம் என்றார். நான் பயப்படவில்லை. பெருமிதப்பட்டேன்.

அந்த இடமும் வந்தது. அரசியல் பிரிவுத்தலைவர் தமிழ்ச்செல்வன் வெள்ளைச் சிரிப்போடு எங்கிருந்தோ பிரசன்னமானார். என்னை வரவேற்று, அவர் இருக்கிற அறைக்கு அழைத்துப்போனார். நான் எப்படி அந்தக் கதவைத் திறப்பது என்று கணநேரம் திகைத்தபோது, மெல்லத் திறந்தது கதவு. வர்ணிக்க முடியாத கம்பீரத்தில் என்னை வணங்கினார் பிரபாகரன். என்னால் அவரை ஐயா என்றுதான் அழைக்க முடிந்தது. என்னை இருக்கையில் அமர்த்திய பிறகே உட்கார்ந்தார். என் மனக்கதவுகளையெல்லாம் திறந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தார் தலைவர். உருகிக்கரைந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தேன். அன்போடு பேசத்தொடங்கினார் தம்பி.

நாங்கள் உறக்கம் இல்லாமல், சதா விழித்துக்கொண்டேயிருக்கிறோம் என்றால், நீங்களும் ஏன் அப்படி இருக்கவேண்டும்?. உழைக்கிற நேரத்திற்குத் தகுதியாக நீங்கள் ஓய்வெடுக்கலாம் என்ற கரிசனத்தோடு ஆரம்பமானது பேச்சு. இரண்டு பேருமே ஐயா என்று விளித்துக் கொண்டோம். ராணுவம் எங்கள் நாட்டில் இளம்பெண்களைக் கற்பழித்தது. அப்படிக் கேவலப் படுத்தியதைவிட, தமிழ் சினிமா பெண்களை இழிவுபடுத்துகிறது என்று வருத்தத்தோடு பேசினார். கன்னத்தில் முத்தமிட்டால் எங்களைச் சரியாக முன்னெடுத்து வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். பாரதிராஜா ஆய்த எழுத்து படத்தில் நடித்திருக்க வேண்டியது அவசியம்தானா? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ் சினிமாவின் மீது அக்கறைப்பட்ட பேச்சை அப்படியே ஹாலிவுட் பக்கம் திருப்பினார் தம்பி. எனக்கு ஆச்சர்யம்... யார் இவர்! இவரின் பார்வைகள் என்ன? இப்படி ஒரு சின்ன தேசத்திலிருந்து உலகமே திரும்பிப் பார்க்க புறப்பட்டு வந்தது எப்படி? என்றெல்லாம் மனம் அலை பாய்ந்தது. ஹாலிவுட் படங்களும் திசை திரும்பியதைக் குறிப்பிட்டார். உங்களுக்கு ஹாரிசன் போர்டை பிடிக்குமா? என்று எனக்குப் பிடித்த அவரையே குறிப்பிட்டார். படக்காட்சிகளைத் தனித்தனியாகப் பிரித்துப்பேசினார். எனக்கு 200 ஹாலிவுட் சி.டிகளைப் பரிசாகத் தந்தார். அரைமணி நேரத்திற்கு இருக்கும் என்று நினைத்திருந்த பேச்சு மூன்றரை மணி நேரத்திற்கு விரிந்தது. என்னோடு உணவருந்தினார். என்னை முழுமையாக விசாரித்தார் முள்ளும் மலரும் க்ளைமேக்ஸ் தன்னைப் பாதித்ததைக் குறிப்பிட்டார். உதிரிப்பூக்கள் அனுபவத்தைப் பகிர்ந்தார்.

நாங்கள் விடைபெறுகிற அந்தத் தருணம் வந்தேவிட்டது. வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பினார். கடைசியாகப் பேசிக்கொள்கிற நிமிடங்கள் உன்னதமாக அமைய, கூடியிருந்த பாதுகாப்புகளை விலகியிருக்கச் சொன்னார். நீங்கள் அடுத்த முறையும் வருவீர்கள். ஆனாலும் யுத்தம் அப்போதும் நடக்கும். இருந்தாலும் உங்களைச் சந்திப்பேன். என்றார். அவரது பேரன்பின் அடையாளமாகச் சிறிய தங்கப்பதக்கத்தைக் கொடுத்தார். அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிற விருப்பம் உடனே நிறைவேற்றப்பட்டது. திரும்பி வண்டியில் உட்கார்ந்தபோது சீருடை, துப்பாக்கிகளோடு தலைவரின் அனுபவ சாந்தமும் மனசுக்குள் வந்தது.

கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தேன். என்னுடைய கைப்பையை வாங்கி, ஒரு சிங்கள அதிகாரி சோதனையிட்டார். அந்தப் பதக்கத்தைப் பார்த்த மறு விநாடி என்னை நிமிர்ந்து பார்த்து, புன்னகைத்து, உடனே கைப்பையை மூடி என்னை விமானத்தின் வாசல் வரைக்கும் வழி நடத்தினார். விமானத்தில் வந்து உட்கார்ந்து யோசித்தபோது, சந்தித்த மூன்றரை மணி நேரமும் ஒரு வார்த்தை கூட பிரபாகரன் அரசியல் பேசவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது. அவருக்கு எரிக் சோல்ஹம்மிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. தமிழ்ச்செல்வனிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. இந்த மகேந்திரனிடமும் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது.

Quelle - Kumutham-June-2006

Friday, June 16, 2006

PLEASE, STOP THE HUMAN RIGHTS VIOLATIONS

BY THE SRI LANKAN GOVERNMENT

இலங்கையில் சமீபகாலமாக அதிகரித்து வரும் தமிழர்கள் மேலான தாக்குதலை நிறுத்தக்கோரி UN க்கு இந்த online petition அனுப்பப்படுகிறது. முடிந்த அளவு இதை நண்பர்களுக்கு அனுப்பி கையெழுத்து பெற உதவவும். நன்றி.

http://www.petitiononline.com/UN061506/petition.html

Friday, June 09, 2006

கன்பரா கண் விழிக்குமா?

தெ.நித்தியகீர்த்தி

அல்லைப்பிட்டி நெஞ்சிலே அனலைக் கொட்டிவிட்டது. அந்தக் குழந்தையின் பிஞ்சு முகம் மீண்டும், மீண்டும் நெஞ்சக் கதவுகளைத் தட்டி எதையோ கேட்கின்றது. பேச முடியாத சிறுவர்களுக்காகப் பேசுங்கள். “அப்பாவி மக்களின் அநியாயச் சாவிலே கொக்கரிக்கும் கொடூர சிறிலங்காவின் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுங்கள்” என்று இரத்த வெள்ளத்தில் இருந்த அந்தக் குடும்பத் தலைவனும், தலைவியும் கதறுவது காதில் ஒலிக்கின்றது. அதனாலோ என்னவோ கன்பராவில் உரிமைக் குரல் ஒலிக்கப் போகின்றது என்று கேள்வியுற்றதும் மெல்பேர்ன் மக்கள் துள்ளி எழுந்தனர்.

பயண ஒழுங்குகள் செய்வதில் ஒரு குழு வேகமாக இயங்க ஆரம்பித்தது. எத்தனை பஸ்கள்? எத்தனை கார்கள்? எத்தனை பேர் வருவார்கள்? தொலை பேசிகள் தொடர்ந்து பேசின. இரவுகள் பகலாகின. பல புதிய நட்புறவுகள் உருவாகின. நான் முந்தி, நீ முந்தி என்று உதவுவதற்குப் பலர். எப்படியும் போக வேண்டும் என்ற துடிப்பு ஒவ்வொருவருக்கும். பலரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஆவலோடு ஆட்களைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மாறி மாறி வரும் தொலை பேசி அழைப்புகளில் தடுமாறி நின்றார்கள்.

“ அண்ணை பஸ்ஸில இடமில்லை. உங்கடைக் காரைக் கொண்டு வாரீங்களோ? உங்களோட இன்னும் நாலு பேர் வருவீனம்.” உரிமையோடு கேட்கும் குரல்கள்.

பலர் வருகின்றார்கள் என்றதும் மகிழ்வோடு மறுக்காது ஏற்றுக் கொண்டு, “ முருகா, டயரும் செக் பண்ணல்லை. வழியில ஏதும் நடக்கக் சுடாது” என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டார்கள். நட்ட நடுநிசியில், டயர் வெடித்த போது கொட்டும் பனியில் கை விறைக்க இன்னொரு வழுக்கல் டயரை மாற்றி, புன்முறுவலோடு பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

“தம்பி நானும் வர வேணுமடா”

“அப்பா, 700 கிலோ மீட்டரப்பா. உங்களால அவ்வளவு தூரம் இருக்க ஏலாது”

“அப்பா இல்லே சொல்லுறார். கூட்டிக் கொண்டு போவன்.” அம்மா கண்டிப் போடு சொல்லி, மெதுவாக “ நானும் வாரன்” என்கின்றாள்.

இயலாத வயது. இருவருமே தொடர்ந்து ஒரு இடத்தில் அரை மணி நேரத்துக்கு மேல் இருக்க முடியாதவர்கள். மகனால் மறுக்க முடியவில்லை. எழுநூறு கிலோ மீட்டர்களை அரை மணிக்கு ஒரு முறை காரை நிறுத்தி, அவர்களை ஆசுவாசப்படுத்தி ஏற்றிச் செல்கிறான்.

பஸ்ஸில், பிள்ளை அழுகின்றது.

“உமக்குச் சொன்னனான். ஒன்றறை வயசுப் பிள்ளையை இந்தக் குளிருக்குள்ள பஸ்ஸில கூட்டிக் கொண்டு போக ஏலாது என்று கேட்டால்தானே?” கணவன் கடிந்து கொள்கின்றான்.

“ அதுக்கென்னப்பா. அல்லைப்பட்டி பிள்ளைக்காக என்ரை பிள்ளையும் ஒருக்கா அழட்டுமே”

அந்தத் தாயின் வார்த்தையைக் கேட்ட எண்பத்தேழு வயதுப் பெரியவர் குளுசையை வாயில் போட்டுக் கொண்டு, ‘இந்தப் பிள்ளைக்கு இவ்வளவு துணிவென்றால், நான் கிழடு பஸ்ஸில செத்தால்தான் என்ன’ என்று எண்ணுகின்றார். ஆனாலும் கன்பரா சென்று எங்கள் ஈழ மக்களுக்காகக் கத்தி விட்டுத்தான் சாக வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கின்றார். தங்கள் மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேட்கையை கட்டுப்படுத்த முடியாது பேரூந்தில் ஏறிக் கொண்ட அவர் வயதுக்காரர்கள், அடிக்கடி பேரூந்தை நிறுத்த முடியாது சலத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார்கள்.

இரவு 12 மணி. தொலை பேசி ஒலிக்கின்றது.

“என்னடி நித்திரை கொள்ளயில்லையே”

“எல்லாரும் கன்பராவுக்குப் போகீனம்.”

“ஓமடியப்பா எனக்கும் போக வேணும் போல இருக்கு. இந்த மனுசனுக்கு நாளைக்கென்று ஒபிசில கண்டறியாத மீட்டிங்காம்”

“இவரும் ஓவர்சீஸ். எடியே நாங்கள் கார் ஓடிக் கொண்டு போவமே. இன்னும் இரண்டு பேரைக் கேட்பம்”

“நல்ல ஜடியா”

நாலு பெண்கள் இரவு, இல்லை காலை 2.30 மணிக்குப் புறப்பட்டு காரில் 700 கிலோ மீற்றர்கள் ஓடி கன்பராவை பகல் 10 மணிக்கு அடைகின்றார்கள். காலைக் கடனை பாராளுமன்ற கார்ப் பார்க்கில் இருந்த லேடீசில் முடித்து விட்டு விழிப்புப் போராட்டத்தில் இணைந்து கொள்கின்றார்கள்.

கன்பராவில் தேனீக்கள் போல் எங்கள் தமிழ் அன்பர்களில் வாகனங்கள் அங்குமிங்கும் ஓடுகின்றன. மெல்பேர்ன், பிரிஸ்பேர்னில் இருந்து வந்த நூற்றுக் கணக்கானவர்களுக்கு தங்கள் வீட்டுக் கதவுகளைத் தாராளமாகத் திறந்து புன்னகை பூத்த முகத்தோடு வரவேற்ற அந்த நல்ல உள்ளங்களில் தமிழரின் விருந்தோம்பல் பொங்கி வழிந்தது. இடியப்பம், சொதி, முட்டைப் பொரியல், கிழங்குக் கறி என்று அத்தனை பேருக்கும் அங்கே விருந்து. அது மட்டுமா மதிய போசனத்துக்கு உணவுப் பொதி வேறு.

பாராளுமன்ற முன்னிலை. புற்றீசல் போல் திரண்டு வருகின்றது புலம் பெயர்ந்த தமிழர் படை. கைக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், கைலாகு கொடுத்து நடக்கும் வயோதிபர்கள், துடிப்போடு நிற்கும் இள வயதினர்.. அப்பபப்பா என்ன காட்சி? தமிழ்ப் பேரலை பாராளுமன்றத்தை மோதி நின்றது. சிட்னியில் இருந்து தொடர்ந்து வரும் பேரூந்துகள் வரிசையாக வரும் எறும்புகள் போல் வந்து கொண்டிருந்தன. அல்லைப்பிட்டி கொடூரக் கொலையைச் சித்தரித்து அண்ணாவியார் இளையபத்மநாதன் அமைத்திருந்தது வெறும் காட்சிப் பொருளல்ல. உலகத்தின் மனச் சாட்சியை உலுக்கும் கேள்வி. சிறீலங்கா அரச பயங்கரவாதத்திற்கு மறுக்க முடியாத சாட்சி. இன்பத்தமிழொலி முதல் சிகரம் தொலைக்காட்சி வரை ஓடியோடி செய்தி சேர்க்கும் ஊடகவியலாளர் சுறுசுறுப்பாக இயங்குகின்றார்கள்.

“ கொல்லாதே கொல்லாதே தமிழர்களைக் கொல்லாதே”

ஆழிப் பேரலை எழுப்பிய ஓசை போல் தமிழர் குரல் பாராளுமன்ற உயர்ந்த சுவர்களில் முட்டி மோதியது. உணர்வு வெள்ளத்திலே அள்ளுண்ட அந்த மக்களின் குரல் மகேசன் காதிலும் விழுந்திருக்கும். அவன் தோடுடைய செவியன் அல்லவா? இரும்பாகிவிட்ட மேலை நாட்டு ஆளும் அரசியல்வாதிகளின் செவிகளில் விழுந்ததா? பல பாராளுமன்ற உறுப்பினர் தமிழருக்காக மனமுருகிக் குரல் கொடுத்தார்கள். அவர்களுள் டொன் மேபி மனதில் நிறைந்தார். தமிழருக்கு தனி நாடே தீர்வு என்று பேசிய பிறையன் செனிவிரத்தனா அவர்களைச் செவிமடுத்த என்னருகில் இருந்த நண்பர்,

“தமிழீழம் கிடைத்ததும் இவரை நாங்கள் ஓர் அமைச்சர் ஆக்க வேண்டும் ” என்றார்.

கத்திக் கத்தி அனா பரராஜசிங்கத்தின் குரல் அடங்கினாலும் குமுறல் அடங்கவில்லை.

“இது ஒரு சனநாயக நாடு. இங்கே எங்கள் உரிமைகளுக்கு குரல் கொடுப்பது குற்றமல்ல. கொடுக்காமல் இருப்பதே தமிழருக்கு இழைக்கப்படும் குற்றம்” என்று ஒரு குட்டிப் பெண் அழகான ஆங்கிலத்தில் உணர்ச்சி பொங்க பேசிய போது, ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும் அவள் தாயை நினைத்துக் கொண்டேன்.

தொண்டை வறண்டு போகும் வேளையில் தாகந் தீர்க்க ஒரு தண்ணீர்ப் பந்தலே அங்கிருந்தது. பசி தீர்க்க உணவு. தேடித் தேடி வந்து எங்களுக்குத் தந்துதவிய தொண்டர்களை நன்றியோடு நோக்கினோம்.

மடை திறந்த வெள்ளம் போல், தமிழர் மீது சுமத்தப்பட்ட தடை உடைக்கப் புறப்பட்ட தமிழர் படை பல செய்திகளைக் கூறியது. உணர்வால் நாம் ஒன்று பட்டவர்கள். தமிழரின் உரிமைக் குரலைத் தடைகளால் நசுக்கி விட முடியாது. தமிழர் போரை வலிந்து ஏற்றவர் அல்ல. தங்கள் தற்காப்புக்காக, தமது மனித உரிமைகளைப் பேண ஆயுதம் தூக்கியவர்கள். தற்கொடை அவர்கள் தற்காப்பின் உயரிய தியாகம். நம்மை ஆண்டு, எங்களுக்கு அடிமை சாசனம் எழுதி அதை சிறிலங்காவின் கையில் கொடுத்த கொலொனிய மேற்கத்தைய நாட்டு ஆட்சியாளர், மீண்டும் நம் உரிமைகளைப் பறிக்க இன வெறி கொண்ட அரசுக்கு உதவ முன் வந்தால், அதை எதிர்த்து குரல் கொடுக்க புலம் பெயர்ந்த தமிழர் தயங்க மாட்டார்கள். சிறிலங்காவின் அரசியல் படுகொலைகளையும், அரச பயங்கரவாதத்தையும் தடுத்து நிறுத்த முடியாத மேற்கத்தைய நாடுகள், தமிழர் விடுதலைப் போராட்டத்திற்குப் பயங்கரவாத வண்ணம் பூசுவது அவர்கள் இயலாமையா? அல்லது தமது சர்வதேச அரசியல், பொருளாதார இலாபங்களுக்காக ஓர் இனத்திற்கு அடிமை சாசனம் எழுத உதவுகின்றார்களா?

ஒரு திரை இசைப் பாடல் நினைவு வருகின்றது.

“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை”

அலைகடல் போல் கன்பராவில் கூடிய மக்களின் செய்தி இதுவே. யார் தடுத்தாலும் தமிழினம் தன் விடுதலை பெற்றே தீரும்.

மெல்பேர்னில் தொடர்ந்து நடந்த பகிரங்கக் கண்டனக் கூட்டத்திற்கு என்றுமில்லாத அளவில் திரண்ட மக்களின் செய்தி மேலும் அதை உறுதிப்படுத்தியது.

Tuesday, June 06, 2006

புதிய பூ


எங்கள் குடும்பத்தில் இன்று ஒரு புதிய பூ பூத்திருக்கிறது.
சிந்து, நதியுடன் நிலாவும் சேர்ந்திருக்கிறாள்.















Sinthu & Nila


Nathi

Monday, June 05, 2006

அமெரிக்காவுக்குத் தெரியுமா இந்த வலி


உலகத்தில் பயங்கரவாதங்களைப் பட்டியலிடும் அமெரிக்கா தனது பயங்கரவாதத்தைப் பற்றி மூச். என்னதான் மறைக்க முயன்றாலும் சமீபகாலமாக பத்திரிகைகள் அமெரிக்க இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர்ந்து கொண்டே இருக்கின்றன. இன்றைய பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் ஈராக்கைச் சேர்ந்த இமான் வலிட் என்ற ஒன்பது வயது சிறுமியின் பேட்டியே முதலிடம் பெறுகின்றது.

மேற்கு ஈராக்கில் உள்ள ஹடீத்தா என்ற நகரத்தில் 2005 நவம்பர் 19ம் திகதி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 24பேர்களை அமெரிக்க இராணுவம் அநியாயமாகச் சுட்டுக் கொன்றது. இந்த நிகழ்வை நேரடியாகப் பார்த்த இமான் வலிட்டின் பேட்டியே தற்போது முக்கிய செய்தியாக இடம் பெற்றிருக்கிறது. இந்த பயங்கரமான அமெரிக்க இராணுவத்தின் வெறியாட்டத்தில் இமான் வலிட் தனது தாய் தந்தை உட்பட ஏழு உறவினர்களை இழந்திருக்கிறாள்.

தனது தந்தையைக் கொலை செய்த இராணுவத்தினர் அவரது உடலை முற்றாக எரியுமாறு செய்து விட்டுத் தாயைக் கொலை செய்யும் போது அந்தக் காட்சியைக் காண முடியாது தானும் தனது தம்பியும் தலையணைகளால் தமது முகத்தை மூடிக் கொண்டதாகச் சொல்லும், இந்த அனர்த்தத்தில் இருந்து தப்பிக் கொண்ட இமான் வலிட் "நாங்கள் அனுபவிக்கும் எங்களது மனவலிகளை எங்களைப் போன்று அமெரிக்கர்களுக்கும் உணர்த்த வேண்டும் " என்று கூறியிருக்கிறாள். ஒரு சிறுமி துணிந்து கமராவிற்கு முன்னால் இப்படி பேட்டி தருகிறாள் என்றால் எந்தளவுக்கு அவள் பாதிக்கப் பட்டிருக்கிறாள் என்பது புரிகிறது.

அமெரிக்காவே பயங்கரவாதப் பட்டியல் தயாரிப்பதால் ஒரு போதும் அதன் பெயர் அதில் வராது.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite