முல்லைக்கடல்
தனக்கேயுரிய அமைதி கலந்த ஆரவாரத்துடன் எம்மை வரவேற்றது. அலைகள் நிதானமாக
எழுந்து, சரிந்து வந்து கரையைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன. வான்
கடலோடு முட்டிக் கொண்டிருந்தது. சின்ன வயதில் பருத்தித்துறைக் கடற்கரையில்
நின்று, எதிர்கரையைத் தொட்டுக் கொட்டிருக்கும் வானத்தை ஒரு தடவையாவது
எட்டிப் பிடிக்க வேண்டும் என்று தீராத ஆவல் கொண்டு மனம் அலைந்த நாட்கள்
சட்டென்று நினைவில் வந்து போயின.
கடற்படைத் தளபதி கேணல் சூசை
அவர்கள் மணலிலேயே கதிரைகளும், மேசையும் போட்டு எமக்காகக் காத்திருந்தார்.
சொன்ன நேரத்தையும் விடத் தாமதமாகவே வந்திருந்தோம். மாலையாகிக்
கொண்டிருந்ததால் சுட்டெரிக்கும் வெயில் இன்றி இதமான மெல்லிய குளிர்காற்று
எம்மைத் தழுவியது. இன்முகத்துடன் சூசை எம்மை வரவேற்றார்.
“என்ன..
வீட்டை வாறனான்தானே என்றார்.” ம்.. எனக்கு அது தெரியாது. அவர் எனது
வீட்டுக்கு வந்து போகும் காலத்துக்கு முன்னரே நான் புலம் பெயர்ந்து
விட்டேன்.
“பருத்தித்துறைக்குப் போனால் உங்கடை ஆத்தியடி வீட்டுக்குப் போகாமல்
நான் திரும்பிறேல்லை.” என்றார். அம்மாவையும் தங்கைமாரையும் நன்கு நினைவு
வைத்திருந்தார். தம்பி மொறிஸை இந்திய இராணுவம் தேடத்தொடங்கிய காலத்தில்
அம்மாவும், அப்பாவும், தங்கைமாரும் யாழ்ப்பாணத்துக்கு இடம் பெயர்ந்து
விட்டார்கள். அதன் பின் தம்பி போகாத, ஸ்ரேசன் ரோட்டில் இருந்த அந்த
யாழ்ப்பாண வீட்டுக்குக் கூட தனது நண்பர்களுடன் சென்று அம்மாவைச் சந்தித்து
அளவளாவி அம்மாவின் கைப்பதங்களைச் சுவைத்துச் செல்வாராம். கடற்படைத்தளபதி,
கேணல் என்பதற்கும் அப்பால் எனது தம்பி மொறிஸின் நெருங்கிய நண்பனாக இருந்து
எம்மோடு கதைத்தார்.
என்னால்தான் அதிகம் கதைக்க முடியாதிருந்தது.
குரல் வெளிவர மறுத்தது. எனது கணவரும், பிள்ளைகளும்தான் கதைத்தார்கள்.
கதைத்துக் கொண்டிருக்கும் போதுதான் அவர் இயல்பிலேயே இனிமையாகப் பழகும்
சுபாவம் கொண்டவர் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
வருண கிரண...
பற்றி நான் கேட்டதும் முல்லைக்கடலின் அந்த எல்லையில்... என்று தொடங்கி போர்
வியூகங்கள், திட்டமிடல்கள் என்று அவர் மிகவும் தெளிவாக விளக்கிய போது,
வீடியோக்களில் அவரைக் களத்தில் பார்த்த ஞாபகம் வந்தது. அப்படியொரு தெளிவான
விளக்கமான பேச்சு.
கதைத்துக் கொண்டிருக்கும் போதே அருகில் எங்கோ
சூட்டுச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. மனம் அசௌகரியப் பட நாம் சற்றுக்
குழம்பினோம். 'பயப்படாதைங்கோ. அது ஒண்டுமில்லை. பெடியள் சுட்டுப்
பழகிறாங்கள். பிறகு உங்களைக் கூட்டிக் கொண்டு போய்க் காட்டுறன்" என்றார்.
அப்போது
கரையில், வீதியில் நின்ற இன்னொரு வாகனத்தில் இருந்து ஒருவர் ஒரு
பாத்திரத்துடன் இறங்கி வந்தார். நாம் வரும்போதே அந்த வாகனம் அவ்விடத்தில்
நிற்பதை அவதானித்திருந்தேன். அதில்தான் சூசை அவர்கள் வந்திருக்க வேண்டும்.
கூடவே ரேகாவும் சிறு தட்டுக்களைக் கொண்டு வந்து மேசையில் எம்முன் வைத்து
கரண்டிகளும் வைத்தான். பாத்திரத்தில் இருந்தது சில்லுக்கழி.
கடலும்,
வானும் இணைந்து உலகமே அதுவாய் ஒரு புறத்தை ஆக்கிரமித்திருக்க, பனைகள்
மறுபுறம் நெடுத்திருக்க கடற்கரை மணலில் கதிரை போட்டமர்ந்து கடற்படைத் தளபதி
சூசை அவர்களுடன் கதைப்பதிலேயே ஆனந்தித்திருந்த எமக்கு, அந்தச் சமயத்தில்
தித்திக்கும் சில்லுக்கழி பரிமாறப்படும் என்பது எந்தக் கனவுகளிலும்
வந்திராத நனவு.
நியமாகவே சில்லுக்கழி தித்தித்தது. உளுத்தம்மாவும்,
தேங்காய்ப்பாலும் கலந்த வாசனையும், இதமான இனிப்பும் சேர்ந்து நாக்கைச்
சப்புக் கொட்ட வைத்தது.
நாவுள்ள வரை மறக்க முடியாத அந்தச்
சுவையுடன் சுடுபயிற்சி நடை பெறும் இடத்துக்கு மணலில் கால்கள் பதித்து
நடந்தோம். வழி நெடுகிலும் ஆங்காங்கு மரங்களோடும், செடிகளோடும்
மெய்ப்பாதுகாவலர்கள் துப்பாக்கிகளை ஏந்தியபடி நின்றார்கள். நாம் இருந்து
அளவளாவியது வரை சற்றுத் தள்ளியே நின்ற ஒரு இளம் போராளி மட்டும் எங்களுடன்
சூசையைப் பின் தொடர்ந்தான். அவனைப் பார்த்ததுமே இனம் புரியாத கனிவு மனதில்.
என் தம்பிமாரை ஞாபகப்படுத்தினான். மிகநேர்த்தியாக போராளிக்குரிய உடைகளை
அணிந்து பிஸ்ரோல், குண்டுகள், துப்பாக்கி சகிதம் என் கண்களைப் பனிக்க
வைத்தான்.
அவனைப் பார்த்துச் சிரித்தேன். அவன் கண்களில் மிகுந்த
கனிவு தெரிந்தாலும் சிரிக்கக் கூடாது என்ற வைராக்கியம் கொண்டவன் போல
மௌனமாகவே என்னைப் பார்த்தான். இதைப் பார்த்து விட்ட ரேகா “அக்காவைப்
பார்த்து நீ சிரிக்கலாம். அக்கா எங்கடை ஆள்தான்” என்றான். அப்போதும் கூட
அவன் வாய் இறுக மூடி, மௌனமாகவே தொடர்ந்தான். கனிவு நிறைந்த அந்தக் கண்கள்
மட்டும் என்னைப் பார்த்து மிக மிக மென்மையாகச் சிரித்தன. மெதுமெதுவாக என்
அருகில் நடக்கத் தொடங்கினான். அவன் தலையைத் தடவி ஆதரவாக இரண்டு
வார்த்தைகளாவது பேச வேண்டும் என மனசு அவாப்பட்டது.
அவனது அம்மா,
அப்பா, சகோதரர்கள் எல்லோருமே இந்திய இராணுவத்தினரால் அழிக்கப்பட்டு
விட்டனர் என்று ரேகா மெதுவாக என்னிடம் சொன்னான். அவன் அப்போது குழந்தையாக
இருந்தானாம். ரேகா எனது தம்பி மயூரனின் நண்பனாக இருந்ததாலோ என்னவோ
எப்போதும் என்னோடு `அக்கா..´ என்றொரு அந்நியோன்னியத்தோடு பழகுவான்.
அவ்வப்போது ஏதாவது சிறுசிறு தகவல்களை என் காதில் போட்டு வைப்பான். என்னில்
அத்தனை நம்பிக்கை வைத்திருந்தான்.
சுடுபயிற்சி நடைபெறும் இடத்தை
நாம் வந்தடைந்ததும் பயிற்சியில் இருந்தவர்கள் சுடுவதை நிறுத்தி எம்மை
வரவேற்றார்கள். எனது பிள்ளைகளுக்கு துப்பாக்கி இயங்கும் விதம் பற்றியும்,
இயக்கும் விதம் பற்றியும் சூசையும், அவர்களும் சிறு சிறு விளக்கங்கள்
கொடுத்தார்கள். சிறிது நேரம் அங்கு பொழுதைக் கழித்த பின் ´கடலுக்குள் போய்
போர்க்கப்பலைப் பார்த்து வருவோம்` என்றார் சூசை. போர்க்கப்பல் ஒரு
குறிப்பிட்ட தூரத்தில் நின்றது.
போராளிகளுடன் படகில் சென்ற போது
மிக இறுக்கமாக இருந்த போராளிகள் கூட நட்போடு கதைக்கத் தொடங்கினார்கள்.
சிலர் கதைப்பதற்கு சங்கோஜப் பட்டாலும் சிரிப்பால் நட்பையும், மகிழ்வையும்
உணர்த்தினார்கள்.
போர்க்கப்பலுக்குள் நின்று பார்த்த போது எம்மைச்
சூழக் கடல். ஆக்ரோசமாக மேலெழும்பி, சுனாமியாக உயிர் குடிக்கக் கூடிய
கண்ணுக்குத் தெரியாக புதிர்களையெல்லாம் தனது ஆழத்தினுள்ளே அமுக்கி விட்டு,
ஒரு வித அழகிய லயத்தோடு அலைகளை அள்ளி வந்து கப்பலோடு மோதியது அந்தப்
பெருங்கடல். அலைகளோடு இசைந்து இசைந்து எம்மைத் தாலாட்டியது கப்பல். ஊ..
ஊ.. என்ற ஓசையோடு வந்து எம்மைச் சீண்டியது காற்று. போர்க்கப்பலில் இருந்து
குண்டுகள் எப்படி அனுப்பப் படுகின்றன, கப்பலுக்குள்ளான செயற்பாடுகள் என்ன,
என்பது பற்றியெல்லாம் விளக்கிக் கொண்டிருந்தார் சூசை.
எனது
பிள்ளைகளும் அதை இயக்கிப் பார்த்த போது அண்டவெளியே அதிர்ந்தது போன்ற பாரிய
சத்தம் எம்மையும் அதிர வைத்தது. உடனேயே தூரத்தில், ஒரு குறிப்பிட்ட
எல்லையில் நின்ற இலங்கை இராணுவமும் இரு குண்டுகளை வெடிக்க வைத்தது. நாம்
கலவரப்பட்டோம். “அது சும்மாதான். தாங்களும் இருக்கிறம் எண்டதைக்
காட்டுறதுக்கு... பயப்படாதைங்கோ” என்றார்கள் சூசையும், ரேகாவும்.
கரையில்
இருந்து பார்க்கும் போது கவனத்துக்கு அவ்வளவாக எட்டாத தூரத்தில், மறைத்து
நங்கூரமிடப்பட்டிருந்த ஒரு பெரிய கப்பலைக் காட்டினார் சூசை. அது
இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்டதாம். முகத்தில் வெற்றிப்புன்னகை
மிளிர்ந்தது. போராளிகளிகளின் முகங்களிலும் அந்த வீரச்செயலின்
வெற்றிப்பிரதாபம் ஜொலித்தது.
காற்றின் ஓசையும், அலையின் சலசலப்பும்
பெரு ஒலியெழுப்ப அதையும் விடச் சத்தமாகக் கப்பலுக்குள் கதைத்துக்
கொண்டிருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. சூரியன் தன்னையோ, தன் கடமையையோ
மறக்கவில்லை. அஸ்தமனத்துக்காய் விரைந்து கொண்டிருந்தான். வானம் சிவந்தது.
கடலும் செந்நிறமாய் மின்னியது. கஸ்ரோவிடம் ஏழு மணிக்கு வருவதாகச்
சொல்லியிருந்தோம். எனது கணவர், சொன்னபடி போய்விட வேண்டும் என்பதில்
அவதானமாக இருந்தார்.
சூசை “நீங்கள் என்னட்டை வந்து இரவுச்
சாப்பாட்டைச் சாப்பிட்டிட்டுத்தான் போகோணும்” என்றார். நாம் சங்கடப்பட்ட
போது “கொஞ்சம் லேற்றாக வருவதாக கஸ்ரோவுக்கு அறிவிக்கிறேன்” என்றார்.
(தொடரும்)
சந்திரவதனா
4.2.2010
நந்திக்கடல் தாண்டி... 1
நந்திக்கடல் தாண்டி... 2
நந்திக்கடல் தாண்டி... 3
Monday, February 08, 2010
Monday, February 01, 2010
நந்திக்கடல் தாண்டி...
ஐந்து நாட்கள்தான் இம்முறை வன்னியில் நிற்க முடியும். ஜேர்மனியிலிருந்து புறப்படும் போதே அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களுக்கு ´இம்முறை பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வருகிறேன்´ என்று மின்னஞ்சல் மூலம் என் வரவைத் தெரிவித்திருந்தேன்.
நாம் 22ந்திகதி ஐப்பசி மாதம் 2002 இல் வன்னியைச் சென்றடைந்த அன்று நோர்வே பேச்சு வார்த்தைக் குழுவினருடனான சந்திப்பு கிளிநொச்சி அரசியல் துறை அலுவலகத்தில் நடந்து கொண்டிருந்ததால் தமிழ்செல்வன் அவர்களால் உடனடியாக எம்மை வந்து சந்திக்க முடியவில்லை. ஆனாலும் தன் சார்பாக சுதா மாஸ்டரையும், மருத்துவத்துறை ரேகாவையும் அனுப்பி வைத்திருந்தார். அவர்களோடு டுபாய் பிட்டு அவித்துத் தந்த நிமலனும், புகழோவியனும் வந்து இணைந்து கொண்டார்கள்.
அடுத்தநாள் 23ந்திகதி கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்திருக்கும் வெண்புறா நிலையத்தில், நாம் தங்கியிருப்பது தெரிந்து எம்மைத் தேடி வந்த உறவுகளோடு நின்று கதைக்க முடியாதிருந்தது. அத்தனை பேர் வருவதும் போவதுமாக இருந்தார்கள். யாருடன் கதைப்பது என்று தடுமாற்றமாக இருந்தது. நாள் நகர்ந்ததே தெரியவில்லை.
இரவு வெண்புறா உறவுகளுடன் ஆறுதலாகக் கதைக்க எண்ணி முற்றத்தில் கூடினோம். மெல்லிய குளிர்ந்த காற்று எம்மைத் தழுவ மரங்களின் கீழ் கதிரைகள் போட்டு அமர்ந்து அந்த அன்பு உறவுகளுடன் பேசிக் கொண்டிருப்பது மிகவும் இனிமையானது. அந்தப் பொழுதில்தான் செஞ்சோலை ஜனனி வந்தாள். எனது குழந்தைகளை எத்தனையோ வருடங்களின் பின் சந்தித்த அவளின் முகத்தில் சந்தோசம் தவழ்ந்தது. அவளோடு இரண்டு வார்த்தைகள்தான் பேசியிருப்பேன். எதுவித முன்னறிவித்தலுமின்றி அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் இனிய நட்புக் கலந்த சிரிப்புடன் வந்தார். முதல்நாள் வரமுடியாமற் போனதற்காக மன்னிப்புக் கேட்டார். தனியாக என்னை அழைத்து “அக்கா, நாளைக்கு உங்களுக்கு ஒரு இனிய சந்திப்பு இருக்கிறது“ என்றார். எனது பிள்ளைகள் அண்ணன் பிரபாகரன் அவர்களைச் சந்திக்க விரும்புகிறார்கள் என்பதை நான் முதலே மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தேன். அதுதான் அண்ணன் முக்கியமாகப் பிள்ளைகளைச் சந்திக்கப் போகிறார் என்றார்.
இம்முறை அண்ணையுடனான சந்திப்பு அரசியல் துறை அலுவலகத்திலேயேதான். அன்றும் ஒரு முக்கிய சந்திப்புக்காக வேறொரு இடத்தில் நிற்க வேண்டி இருந்ததால் குறிப்பிட்ட நேரத்தை விட அரைமணி நேரம் தாமதமாகவே அண்ணன் எம்மிடம் வந்து சேர்ந்தார். வந்ததும் தனது தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்த நேரம் பாலாண்ணையும் வன்னியில்தான் நின்றார். பாலாண்ணையுடன் கூடிய நேரத்தைச் செலவழிக்க முடியாதிருப்பதையிட்டு வருத்தம் தெரிவித்தார்.
அரசியற்துறை அலுவலகத்தின் முன் வெளிவிறாந்தையிலேயே நாம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சுக்கள் பல திசைகளிலும் விரிந்தன. எனது பிள்ளைகளுடனான அண்ணனின் நட்பான உரையாடல் என்னை வியக்க வைத்தது. வன்னியில் இருந்து கொண்டு உலகத்தையே அவர் புத்தகங்கள் வாயிலாகவும், படங்கள் மூலமாகவும் படித்துக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருப்பதை பிள்ளைகளுடன் அவர் பரந்து பட்டு பல்வேறு விடயங்களையும் கதைக்கும் போது புரிந்து கொண்டேன். அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் துப்பாக்கி ஏந்திய எமது வீரர்கள் நின்றிருந்தாலும் இறுக்கமான சூழ்நிலையோ, மனநிலையோ இருக்கவில்லை. மதிப்புக்குரிய மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு நண்பன் போல எம்மோடு பேசிக் கொண்டிருந்தார்.
மலேரியா எம்மைத் தொற்றிக் கொள்ளாதிருக்க எம் எல்லோருக்கும் ஒரு குளிகை தந்து உட்கொள்ள வைத்தார். எனது கணவரைத் தனியாக அழைத்துச் சென்று சில தனிப்பட்ட விடயங்களைப் பேசினார்.
எனது மூத்தமகனின் ஆர்வங்களையும், திறமைகளையும் கண்டு, உடனடியாக எங்கோ நின்ற தமிழேந்தி அவர்களை ஆட்களை அனுப்பி அழைத்து என் மகனுடன் கதைக்க வைத்தார். தமிழேந்தி அவர்களும் எனது மகனும் தனியாக அமர்ந்திருந்து அரசியலையும் தாண்டி இலக்கியம், சரித்திரம்.. என்று அளவளாவியது சுவாரஸ்யமானது.
அன்று அரசியல் துறை அலுவலகத்திலேயே எங்களுக்கு அருமையானதொரு பெரிய விருந்து. வெண்புறா உறவுகளில் சிலரும் எம்மோடு இணைந்திருந்தார்கள். மிகமிகச் சுவையான உணவுகள். நண்டு பிரமாதமாக இருந்தது. சமையற்கலையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் சமைத்திருந்ததை உணர முடிந்தது. அதை அவர்கள் அன்போடு பரிமாறிய விதம் இன்னும் இனிமையாக இருந்தது. சாப்பாட்டுக்கு மேல் வட்டில் அப்பம், பலாப்பழம், மாம்பழம் என்று... பல. எனது இரண்டாவது மகன் பலாப்பழத்தை மிகவும் ரசித்துச் சுவைத்துச் சாப்பிட்ட போது தமிழ்செல்வன் அவர்கள் தனது பலாப்பழத்தையும் அவனிடமே கொடுத்து விட்டார். அவர் ஓரிரு தினங்களில் பாங்கொக் செல்லத் தயாராக இருந்தார்.
சாப்பாட்டு மேசையிலும் கதைகள் பல்வேறு திசைகளிலும் விரிந்திருந்தன. எனது பிள்ளைகளின் ஆர்வம் நிறைந்த கேள்விகளுக்கெல்லாம் அண்ணை அலுக்காமல், சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். இம்முறை அண்ணையுடனான சந்திப்பு கடந்த மே மாதம் (வைகாசி-2002) சந்தித்ததை விட நீண்டதாக இருந்தது
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் ரேகாவிடம் சொன்னார் “நாளைக்கு இவர்களை முடில்லைக்கடலடிக்குக் கூட்டிச் செல்“ என்று.
எங்களிடம் சொன்னார் “சூசை எல்லாம் காட்டுவார்“ என்று
அது மிகவும் இனிமையானதொரு சந்திப்பு. சூசை என் தம்பி மொறிசுக்குப் பரிச்சயமானவர் என்பது மட்டுந்தான் எனக்குத் தெரியும்.
அன்று அதி காலையே புறப்பட்டு, முதலில் இனிய வாழ்வு இல்லத்துக்குச் செல்வதாகத்தான் தீர்மானித்திருந்தோம். போகும் போது வழியில் கஸ்ரோ அவர்களின் முகாமுக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய ஒரு தனிப்பட்ட தேவை வந்தது. அங்குதான் கஸ்ரோ அவர்களின் மெய்க்காப்பாளர்களில் ஒருவனான முத்தழகனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பெயரைப் போலவே அழகானவன். துப்பாக்கி ஏந்திய அவன்தான் என்னை உள்ளே அழைத்துச் சென்றான். மௌனத்தால் பேசினான். அவசியம் ஏற்பட்ட போது மட்டும் முத்தென சில வார்த்தைகளை உதிர்த்தான்.
புறப்படும் போது அன்றிரவு தன்னிடம் கண்டிப்பாக வந்து போக வேண்டும் என்று கஸ்ரோ எங்களுக்குப் பணித்தார். நாமும் கண்டிப்பாக வருவதாகச் சொல்லி விட்டே புறப்பட்டோம். கஸ்ரோவுக்கு எனது கணவரையும், அவரது நகைச்சுவைகளையும் நன்கு பிடிக்கும். நாம் வந்திருக்கிறோம் என்ற போது வெண்புறா வரை வந்து வாகனத்தில் இருந்து இறங்காமலே எம்மோடு கதைத்து விட்டுச் சென்றார்.
இனிய வாழ்வு இல்லத்தில் எங்களுக்கு இனிய வரவேற்புக் கிடைத்தது. நாம் அவர்களுக்கெனக் கொண்டு சென்ற பொருட்களை அவர்கள் ஆசையுடனும், நன்றியுடனும் பெற்றுக் கொண்டார்கள். அவர்களுடன் உறவாடி அவர்களின் மதிய உபசரிப்பில் உளம் நிறைத்து நாம் விடைபெற்றோம். நாம் விடை பெறும் போது ஒரு சின்னப்பையன் ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம், ஓடி வந்து என்னைப் பார்த்து, தனது முகத்தை வட்டமாகச் சுற்றி... ஏதோ சைகை செய்தான். அவன் முகம் சந்தோசமாக இருந்தது. நான் புரியாது விழித்து போது அவனது ரீச்சர், “அக்கா, நீங்கள் நல்ல வடிவா இருக்கிறிங்கள்“ என்று சொல்கிறான் என்றா. வாய் பேசமுடியாத அந்தக் குழந்தையை அப்படியே என்னுடன் அள்ளி அணைத்த போது மனசு கரைந்தது.
இனியவாழ்வு இல்லத்தின் இன்னொரு பகுதியில் எட்டுச் சின்னஞ்சிறு குழந்தைகள் இருந்தார்கள். பெற்றோரை ஏதோ ஒரு வழியால் இழந்த அந்தக் குழந்தைகளைக் கொஞ்சி விட்டு, விடைபெற மனம் வரவில்லை. அவர்களுடனேயே இருந்து விடலாம் போல இருந்தது. ஒரு குழந்தை என்னோடு நன்கு ஒட்டிக் கொண்டது. நான் விடைபெறும் போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியது. மனதும், கண்களும் கலங்க அங்கிருந்து புறப்பட வேண்டியிருந்தது.
அங்கிருந்து செஞ்சோலைக்குச் சென்றோம். செஞ்சோலை மிகவும் ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் இருப்பது போன்ற பிரமையைத் தோற்றுவிக்கும் படியாக சரியான தூரத்தில் இருந்தது. அங்கு அம்மா, அம்மா என்ற படி மழலைகள் ஜனனியோடு இணைந்திருக்க நாம் நீண்ட நேரம் ஜனனியுடன் பேசிக் கொண்டிருந்தோம். குழந்தை குயில் ஐனனியையே சுற்றிச் சுற்றி வந்தாள். அது ஒரு இன்பமான பொழுது.
ஜனனியிடம் விடைபெற்று முகிலன் பேஸ் நோக்கிப் பயணிக்கையில் வழியிலே 3பெண் போராளிகள் போய்க் கொண்டிருந்தார்கள். எமது வாகனத்தை ஓட்டி வந்தவர் நின்று அவர்கள் எந்த பேஸ் நோக்கிப் போகிறார்கள் என்பதை விசாரித்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டார். வழிநெடுக என்னோடு கதைத்துக் கொண்டு வந்தவர்கள் தமக்குச் சாப்பிட என்று வைத்திருந்த திராட்சைப்பழக் குலைகளோடு, அவர்கள் பற்றிய இனிய நினைவுகளையும் என்னிடம் தந்து விட்டு இடையிடையே இறங்கிக் கொண்டார்கள்.
முகிலன் பேஸ் அருகில் மருத்துவத்துறை ரேகா எமக்காகக் காத்திருந்தார். ரேகாவுடன் என்னால் பேசமுடியவில்லை. முதல்நாள் அண்ணையுடன் நிறையப் பேசி விட்டேனோ, என்னவோ தெரியவில்லை. சாப்பாட்டின் பின் அரசியல் துறை அலுவலகத்தில் மாங்காய் பறித்துச் சாப்பிட்டு விட்டு, வெண்புறா சென்று இளநீர் அருந்திச் சிறிது நேரத்தில் எனது குரல் மெதுமெதுவாக ஒலி இழந்து போகத் தொடங்கி விட்டது. ரேகாவைச் சந்தித்த போது முற்றிலுமாக நான் பேசுந்திறனை இழந்தவள் போல் ஆகியிருந்தேன்.
நந்திக்கடல் கடந்து கடற்படைத்தளபதி சூசை அவர்களைச் சந்திக்க என்று முல்லைக் கடல் நோக்கிப் பயணிக்கையில் பேச வரா விட்டாலும் ஆனந்தமாக இருந்தது
(தொடரும்)
சந்திரவதனா
28.1.2010
நந்திக்கடல் தாண்டி... 1
நந்திக்கடல் தாண்டி... 2
நந்திக்கடல் தாண்டி... 3
Labels:
ஈழம்
,
கேணல் சூசை
,
நந்திக்கடல் தாண்டி
,
நிகழ்வு
,
நினைவுகள்
Monday, January 25, 2010
வெற்றி மனப்பான்மை - Written by எம்.ரிஷான் ஷெரீப்
Sunday, January 10, 2010
குட்டி இளவரசன்
ஒரு நீண்ட உறைநிலையின் பின் மீண்டும் ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கான உந்துதல் எனக்குள் வந்திருந்தது. அப்போது நான் குட்டி இளவரசனை அரை மனதுடன்தான் கையில் எடுத்தேன்.
Thursday, December 31, 2009
Wednesday, December 09, 2009
interview with MAAVEERAR FAMILY - 27.11.2009 - GTV
Part-1
27.11.2009 - GTV
27.11.2009 - GTV
Labels:
GTV
,
சந்திரா ரவீந்திரன்
,
மாவீரர்
,
மாவீரர் நாள்
,
லண்டன்
Tuesday, December 01, 2009
'தீட்சண்யம்' நூல் வெளியீட்டு விழா - ஒரு பார்வை
ஈழத்துக் கவிஞர் மறைந்த தீட்சண்யன் (எஸ்.ரி.பிறேமராஜன்) அவர்களது 92 கவிதைகள் அடங்கிய 'தீட்சண்யம்' என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த 22.11.2009 ஞாயிறு அன்று லண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
Friday, November 27, 2009
உங்களை நாங்கள் வணங்குகின்றோம்!
Labels:
ஈழம்
,
தீட்சண்யம்
,
தீட்சண்யன்
,
மாவீரர்
,
மாவீரர் நாள்
Tuesday, November 24, 2009
கவிதை நூல் வெளியீட்டு விழா
கடந்த ஞாயிற்றுக்கிழமை 22.11.2009 அன்று லண்டன், என்பீல்ட நாகபூசணி அம்பாள் ஆலய மண்டபத்தில் மறைந்த கவிஞர் தீட்சண்யன் (எஸ்.ரி.பிறேமராஜன்) அவர்களது ´தீட்சண்யம்` கவிதை நூல் தீட்சண்யனின் தங்கை திருமதி சந்திரா இரவீந்திரன் அவர்களால் வெளியிட்டு வைக்கப் பெற்றது.
Thursday, November 19, 2009
மனஓசை - கவிஞர். முல்லை அமுதன்
நூல்- மனஓசை
நூலாசிரியர்- சந்திரவதனா
விமர்சனம்- கவிஞர். முல்லைஅமுதன்
ஈழத்து பெண் படைப்பாளர்களில் வித்தியாசமாக சிந்திக்க முனைந்த சந்திரவதனா பாராட்டுக்கு உரியவர். மீனாட்சி நடேசையர் தொடக்கி வைத்த பெண்களின் படைப்புலகம் இன்று வரை தொடர்கிறது.
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )







