அ. முத்துலிங்கத்தின் `
பதினொரு பேய்கள் ´ கதை கடந்தமாதம் காலச்சுவடில் வெளியான உடனேயே நான் வாசித்திருந்தேன்.
அது பற்றி இப்போது ஏன் எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா? அன்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
´அ. முத்துலிங்கம் விடுதலைப்புலிகள் பற்றிப் புனைந்த போது உங்கள்
எதிர்கருத்தை எழுதினீர்கள். இப்போது வேறொரு இயக்கம் பற்றி எழுதியதால்
பேசாமல் இருக்கிறீர்களா?` என்று கேட்டு.
முதலாவது - ஒருவருக்கு எப்போதும் எழுதக் கூடிய மனநிலை இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
இரண்டாவது - அதில் சொல்லப் பட்ட விடயங்களில் எது உண்மை, எது புனைவு
என்பதை அறுதியிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு அது பற்றிய தெளிவும் என்னிடம்
இருக்கவில்லை.
2011 இல் `
எல்லாம் வெல்லும்´ என்ற அந்தக் கதையை
வாசித்த போது அந்தப்புனைவு ஒரு பொய்யான ஆவணமாகி விடும் என்ற ஆதங்கம்
என்னுள் எழுந்தது. அது பொய்தான் என்பதை என்னால் எனக்கே உறுதிப்படுத்த
முடிந்தது. எழுதக் கூடிய மனநிலையும் இருந்தது.
எழுதினேன்.
`பதினொரு பேய்கள்´ வாசித்த போதும் மனதுள் ஒரு வித எரிச்சல் தோன்றியது.
சும்மா ஒரு கதையாக இருந்தால் வேறு. ஒரு விடுதலைப்போராட்ட அமைப்பைப் பற்றிய
கொச்சைப்படுத்தல் அது. விடுதலைப் போராட்டத்துக்கு என்று தம்மை அர்ப்பணித்த
பெண்கள் பற்றிய தவறானதொரு ஆவணப்பதிவு அது.
எப்படித்தான் - தான் நேரே
நின்று பார்த்தது போல இப்படியெல்லாம் எழுதுகிறாரோ..! என்ற ஆதங்கம் மீண்டும்
எழுந்தது. ஆனாலும் அது பற்றி எழுதக் கூடிய மனநிலை எனக்கு இருக்கவில்லை.
ஒருவர் ஒரு தரம் ஒரு பிழையைச் செய்து, அதைச் சுட்டிக் காட்டியபின், மீண்டும் அதே பிழையைச் செய்வாராயின் நாம் என்ன தான் செய்யலாம்?
அவர் ஒன்றும் குழந்தைப்பிள்ளை அல்லவே!
சந்திரவதனா
11.2.2015