Thursday, June 03, 2004

கண்ணாடி

இப்படியும் மனிதர்கள் ஏமாற்ற முனைவார்களா?



செல்வராஜா கண்கள் சொல்லும் கதை சொல்கிறார். நானும் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்ட கதை.

1991 இல் Car லைசென்ஸ் எடுக்கும் போது கண்களைச் சோதித்துப் பார்த்து கண்ணாடி போட வேண்டுமென்று சொன்னார்கள். அத்தோடு விட்டு விடாமல் எனது லைசென்ஸ் இல் கண்ணாடியோடுதான் Car ஓட்ட வேண்டுமென்ற முத்திரையும் குத்தி விட்டார்கள்.

சின்ன வயதில் சாதுவாக இருந்த ஆசை பெரிய வயதில் நிறைவேறிய போதுதான் கண்ணாடி அணிவது எத்துணை அசௌகரியமானது என்பது விளங்கியது. ஒரு சின்னத்தூசி கண்ணாடியில் இருந்தாலே போதும். ஒரு பெரிய தலையிடிக்கு அது காரணமாகிவிடும். எப்படித்தான் துடைத்துத் துடைத்துப் பாவித்தாலும் ஏதாவது வந்து விடும். எதுவோ மறைப்பது போலச் சினம் கொடுக்கும்.

இத்தனைக்கும் மேலால் எனக்கு கண்ணாடி போடுவதற்கும் போடாமல் இருப்பதற்கும் இடையில் பெரிதாக வித்தியாசம் எதுவும் தெரியவுமில்லை. அதனால் கொஞ்சக் காலத்தில் வேண்டாமப்பா இந்தத் தலையிடி என்று நினைத்துக் கண்ணாடியைக் கழற்றியும் வைத்து விட்டேன்.

எனது லைசென்ஸில் கண்ணாடியின் அவசியம் வலியுறுத்தப் பட்டிருப்பதால் ஏதாவது சோதனைகளின் போது மாட்டி, கண்ணாடி அணியாமல் Car ஓடியதற்கான தண்டனையைப் பெறாதிருப்பதற்காக எனது கண்ணாடி எப்போதும் எனது காரினுள்ளேயே இருக்கும். 1991 கார்த்திகை மாதத்துக்குப் பின் அதை நான் எப்போதுமே அணிந்ததில்லை.

இப்படியிருக்க கடந்த மாதம் நான் வேலை பார்க்கும் வங்கியில் முழுமையான மருத்துவச் சோதனை செய்வதற்காக எம்மை அழைத்திருந்தார்கள். விரும்பியவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் போய்ச் செய்யலாம். முழுக்க முழுக்க இலவசம். ஏன் விடுவான்..! என்ற எண்ணம் தோன்ற நானும் சென்றேன். ஒவ்வொரு கொம்பனியிலிருந்தும் வந்து கண் தெரிகிறதா..!, காது கேட்கிறதா..! என்பதிலிருந்து இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம்... என்று சகலதையும் சோதித்து இறுதியில் முதுகு, தோள்மூட்டு என்று நல்லதொரு Massage ம் செய்து விட்டார்கள். வீடு திரும்பும் போது எனக்கு வலு சந்தோசமாக இருந்தது.

கண்ணைச் சோதிக்கும் போது என்னைச் சோதித்தவர்
"என்ன நீ கண்ணாடி போடாமல் இருக்கிறாயா? உனது கண் எவ்வளவு பார்வைக் குறைபாட்டுடன் இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? இந்த நிலையில் நீ கார் ஓட்டவே கூடாது......... "
என்று ஒரு பிரசங்கமே வைத்தார்.
இறுதியாக எனது கண்பார்வையின் குறைபாட்டு அளவுகளை எழுதி ஒரு துண்டு தந்தார். எனது கடைக்கு வந்தாயானால் 20வீதம் கழிவுடன் கண்ணாடி தருவேன் என்றும் சொல்லி விட்டார்.

நான் மனசுக்குள் எனது வங்கிக்கு நன்றி சொன்னேன். இப்படியொரு இலவச வசதியை அவர்கள் செய்து தராது விட்டிருந்தால் நான் இப்போது கூட எனது பார்வைக் குறைபாட்டைக் கவனித்திருக்க மாட்டேன் என நினைத்துக் கொண்டேன்.

ஒரு வாரம் கழித்து குறிப்பிட்ட கடை எங்கிருக்கும் என்று தேடியபோது அது எனது வீட்டில் இருந்து மிகுந்த தூரத்தில் இருப்பதை அறிய முடிந்தது. பெற்றோலைச் செலவழித்து அங்கு போவதை விடுத்து எனது நகரில் எனக்கு அருகாமையில் இருக்கும் கண்ணாடிக் கடைகளை நோட்டம் விட்டேன். "மருத்துவரிடம் சென்று 10யூரோவைச் செலவழிக்காதீர்கள். எங்களிடம் வாருங்கள். நாங்கள் இலவசமாக உங்கள் கண்களைப் பரிசோதிக்கிறோம்"
என்ற வாசகங்கள் சில கடைகளில் பொறிக்கப் பட்டிருந்தன.

இந்த வருடத்திலிருந்து யேர்மனியில் அமுலாக்கப் பட்டிருக்கும் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு காலாண்டுக்கும் மருத்துவரிடம் செல்லும் போது 10யூரோக்கள் செலுத்த வேண்டும். அந்த 10யூரோவை மிச்சம் பிடிப்போம் என்ற எண்ணத்துடன் ஒரு கண்ணாடிக் கடைக்குள் புகுந்து வங்கியில் கிடைத்த துண்டையும் கொடுத்து என்னைப் பரிசோதிக்கச் சொன்னேன். அங்கு ஒரு பெண் என்னைப் பரிசோதித்து "கண்ணாடி இல்லாமல் எப்படி நடக்கிறாய்...?" என்பது போன்ற பாணியில் என்னோடு பேசினாள்.

வேறு வழியில்லை என்ற நிலையில் நான் கோயில் மாடு போலத் தலையாட்ட அவர்கள் எனக்கான கண்ணாடியைத் தெரிவு செய்து எனக்குப் பிடித்த ஐயும் எடுத்துக் காட்டினார்கள். நான் எனது தகுதிக்கு ஏற்ற விலையில் என் முகத்துக்கும் ஓரளவு பொருந்தக் கூடிய வடிவத்தில் Frame ஐத் தெரிவு செய்திருந்தேன். எல்லாம் முடியத்தான் தெரிந்தது இந்த வருடத்திலிருந்து Frame க்கு மட்டுமல்ல கண்ணாடிக்கான பணத்தையும் நானேதான் கொடுக்க வேண்டுமென்பது. இதுவரை காலமும் எமது மருத்துவக் காப்புறுதி இச் செலவை ஏற்றுக் கொண்டிருந்தது.

ம்... எனக்கு அவ்வளவு பணம் கொட்டி கண்ணாடியைப் பெற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. உடனேயே "எனது கண்ணாடிக்கான வேலைகளைத் தொடராதீர்கள். நான் வீட்டுக்குப் போய் தொலைபேசியில் எனது முடிவைச் சொல்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டேன்.

மனசுக்குள் குழப்பம். இவ்வளவு பணத்தை செலவழிக்கத்தான் வேணுமா? அப்படிச் செலவழிப்பதாயின் 10யூரோ செலவழித்து டொக்டரிடம் காட்டி மிகச் சரியான கண்ணாடியைப் பெற்றுக் கொள்ளலாமே என்ற எண்ணம் தோன்றியது. டொக்டரிடம் நாள் குறித்து விட்டுச் சென்றேன். ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. பரவாயில்லை. அங்கிருந்த Magazins ஐ வாசித்துக் கொண்டிருந்தேன்.

ஒருவாறு Doctor என்னை அழைத்து மிகவும் சிரத்தையோடு கண்களைப் பரிசோதித்தார். இறுதியில் ஒரு சிரிப்போடு
"யார் உன்னைக் கண்ணாடி அணியச் சொன்னார்கள்"
என்று வினவினார். யாரென்று சொன்னேன்.
அவர் மீண்டும் சிரித்து விட்டு
"உனது கண்கள் மிகவும் ஆரோக்கியமானவையாகவே இருக்கின்றன. உனக்கு கண்ணாடியே தேவையில்லை."
என்றார்.

நல்லவேளை தப்பித்துக் கொண்டேன். என்ற உணர்வோடு Doctorக்கு நன்றி சொல்லிக் கொண்டு புறப்பட்டேன்.

Wednesday, June 02, 2004

மனநோயாளி




நீதான்
உலகமென்ற நினைப்பில்
இத்தனை வருடங்கள்!
எனது
அசைவுகள் எல்லாமே
உன்னோடு மனம் கோர்த்து
உன்னையே மையப் படுத்தி.....!

உனது கை கோர்ப்பு
நட்புடனா!
அல்லது நடிப்புடனா!
எனக்குத் தெரியவில்லை.

திடீரென நீயென்
கைகளை உதறி விட்டு
விசுக் விசுக்கென
உன் கை வீசி
நடக்கத் தொடங்கியதும்.....
மனவெளிகளின்
தனிமை தாங்காது
புடைத்த மூளைநரம்புகளின்
வலியோடு....... நான்

அவை
வெடித்துச் சிதறி....
- மனநோயாளி - என்ற முத்திரை
என் மேல் குத்தப் படுமுன்
ஒரு வார்த்தை சொல்லிவிடு
நட்புடனா...?
நடிப்புடனா...?

சந்திரவதனா-யேர்மனி
24.3.2002
(கணவனால் கைவிடப்பட்ட நண்பிக்காக)

Monday, May 31, 2004

வலைவலம் - 31.5.2004

வாராவாரம் மின்னஞ்சலில் வந்து சேரும் வெங்கடேஷின் இவ்வார மின்னிதழில் வந்த அவரது என் எழுத்து: சில எண்ணங்கள் சுவையாக இருக்கிறது.
அதில் வரும் கதை எழுதுவதை விட, அதை யோசிப்பது ஒருவிதப் பரவசம் தரும் அநுபவம். சொல்லப்போனால், இதைத்தான் நான் அதிகம் செய்துகொண்டிருக்கிறேன். காலாற நடந்து போகும் எல்லா சமயங்களிலும் ஏதேனும் ஒரு கதை என்னுள் ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது. இந்த பரவசம் அவருக்கு மட்டுமல்ல. பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.

தன் சொந்த அனுபவம் போன்ற பிரமைப்பாட்டுடன்
சுவையான கதைகளை ரசனை கலந்து தரும் சத்யராஜ்குமாரின்
என்னை எழுதியவர்கள் தொடர் ஒன்று தமிழ்ஓவியத்தில் ஆரம்பித்திருக்கிறது.
அவரது சுயஅனுபவம் என்றாலும் அவருக்கேயுரிய பாணியில் சுவையோடு ஆரம்பித்திருக்கிறார். நிட்சயம் அது எமக்கு நல்ல விருந்தாகும் என்ற நம்பிக்கை எனக்கு.

168 பின்னூட்டங்கள் வந்த சுந்தரவடிவேலின் வலைப்பதிவைப் பார்த்தேன். இவ்வார வலைப்பூ ஆசிரியர் ராஜா அறிமுகப் படுத்தியிருந்தார். ரமணீதரன், மெய்யப்பன், கார்த்திரமாஸ், ஈழநாதன், செல்வராஜ் எல்லோரும் பின்னூட்டங்களிலேயே ஒரு கவியரங்கம் நடத்தியிருக்கிறார்கள்.

Sunday, May 30, 2004

Der Grosse Russische Staatscircus


துமிலனின் கமாராவுக்குள் சிக்கிய Circus Photos இல் சில


கோளத்துள் மேற் பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களும்,
கீழ்ப்பகுதியில் 1 மோட்டார் சைக்கிளும் ஓடிக்கொண்டிருக்கின்றன.
படத்தைப் பெரிதாகப் பார்க்க


ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல்ய விகடர் Oleg Popov
படத்தைப் பெரிதாகப் பார்க்க


படத்தைப் பெரிதாகப் பார்க்க

Friday, May 28, 2004

Circus


நேற்று எமது நகரில் ரஷ்யக் குழுவினரது Circus நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது. ஆர்வம் அதிகம் இல்லாவிடினும் இலவச அனுமதிச்சீட்டு கிடைத்திருந்ததால் நானும் எனது கணவரும் சென்றிருந்தோம். காரை நிறுத்துவதற்கு சரியான இடம் கிடைப்பதே பெரும்பாடாக எம்மை அலைக்கழிக்க.. நேரத்தைத் தொலைத்து, தூரத்தில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு நடந்தோம். நடப்பது பிடித்தமான விடயம் என்றாலும் அப்படி நடக்கும் போது.. இடையிடையே தேவைதானா..? என்ற கேள்வி எழுந்தது.

வீட்டில் தொலைக்காட்சியில் எத்தனை விதமான Circus நிகழ்சிகளைக் காணக் கிடைக்கும். அப்போதெல்லாம் எனது கணவரும், குழந்தைகளும் அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க நான் மெதுவாக அவ்விடத்திலிருந்து நழுவி வேறேதாவது எனக்குப் பிடித்தமானதைச் செய்து கொள்வேன். இருந்தாலும் நேரில் பார்ப்பது வித்தியாசமான உணர்வைத் தரலாம் என்ற நம்பிக்கையோடு உள் நுழைந்தேன்.

எனது மகன்தான் இந் நகரத்துக்குரிய பத்திரிகை நிரூபராக வந்திருந்தான். தோளில் பாரமான ஒரு பெரிய கமராவைக் கொழுவிக் கொண்டு இன்னொரு சிறிய டிஜிற்றல் கமராவால் கிளிக் செய்து கொண்டு திரிந்த அவனை எனக்குத் தெரிந்தது. அவனால் எம்மைக் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு ,இன்று ஒரு வேலைநாள் என்பதையும் பொருட்படுத்தாது எமது ஸ்வெபிஸ்ஹால் நகரமே கூடியது போல சனம் நிறைந்து வழிந்தது.

Circus நன்றாகத்தான் இருந்தது. வீட்டிலே தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், மண்டபத்தினுள்ளே இருந்து நிகழ்ச்சியை நேரே பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் அதிகம்தான். வீட்டில் போல காலைத் தூக்கி மேசை மேலே போட்டுக் கொண்டு ஒய்யாரமாகச் சோபாவில் சாய்ந்திருந்து பார்க்கும் வசதி மண்டபத்தினுள் இல்லையாயினும், சில - நேரடி - என்பதற்கான சுவாரஸ்யங்கள் இல்லாமல் இல்லை.

அனேகமான எல்லாமே வழமையான Circus காட்சிகளில் வரும் நிகழ்வுகள்தான். Charlie Chaplin, Heinz Ruehmann போன்றவர்களை எடுத்துக் காட்டாகக் கொண்டு அவர்கள் பாணியில் கோமாளித்தனம் செய்யும் ரஷ்சியரான பிரசித்தி பெற்ற Oleg Popov வின் கோமாளிச் சேஷ்டைகள் அங்கு வந்திருந்த குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களைக் கூட வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தது.

ஒரு கோளத்தினுள் 3 மோட்டார் சைக்கிள்கள் தலைகீழாக என்று ஓடிக்கொண்டிருக்க அதற்குள் ஒரு பெண் நிற்பதும் அதே கோளத்தினுள் 4 மோட்டார்சைக்கிள்கள் ஓடிக் கொண்டிருக்க கோளம் மேலும் கீழும் துண்டுகளாகப் பிளவு படுவதும், தொடர்ந்தும் மோட்டார் சைக்கிள்கள் ஓடிக் கொண்டே இருப்பதும் எல்லோரையும் நன்கு கவர்ந்தது.

இருந்தாலும் சின்ன வயதில் கொழும்பு வீதிகளில் அம்மா அப்பாவுடன் கைகோர்த்து நடந்து சென்று, ஒவ்வொரு Circus கொட்டகையினுள்ளும் புகுந்து Circus பார்க்கும் போதிருந்த அதீத பரவசம் நேற்றைய பொழுதில் எனக்கு வரவில்லை. பறக்கும்பாவை படத்தில் வந்த Circus காட்சிகள் கூட என்னை அப்போது மிகவும் சந்தோசப் படுத்தியிருக்கின்றன.

Thursday, May 27, 2004

வலைவலம் - 27.5.2004

சுந்தரவடிவேலின் அறிவியல் கூட்டு வலைப்பதிவு மிகவும் பயனானது. அழகாக அந்தப் பக்கத்தைத் தயாரித்திருக்கிறார்.
இன்று அவரது பதிவில் அரோராவை முடக்கினால் புற்று நோய் குறைகிறது
என்றொரு கட்டுரை போட்டிருக்கிறார்.

கண்ணன் நாணயங்கள், தபால்தலைகள்,
நளபாகம்.. என்று பல்வேறுபட்ட விடயங்ளைத் தொட்டிருக்கிறார்.
நாணயங்கள், தபால்தலைகள் சேர்ப்பதிலும் அவை பற்றி அறிவதிலும் எனக்கும் ஆர்வம் இருப்பதால் அவர் பக்கம் எனக்குப் பிடிக்கிறது.

அப்பாவின் அன்பு பேசப் படுவதில்லை என்பது பற்றி நான் சில வாரங்களுக்கு முன் பேசினேன். அதே போன்ற கருத்துப் பட என்மூக்கு பசுபதி சுந்தரும் அப்பா என்ற தலைப்பில் ஒரு விடயத்தைக் குறித்துள்ளார். பாலாவும் அப்பாவுக்கு என்ன தெரியும் என்ற தலைப்பில் தான் படித்த ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். முன்னரே ஒர தடவை உதயா உருக்கமாக ஒரு கவிதை தோழியர் பகுதியில் எழுதியிருந்தார். அப்பாவின் அருமை உணர்ந்து கொள்ளப் படுவதில் சந்தோசமான திருப்தி.

Tuesday, May 25, 2004

வலைவலம் - 25.5.2004


விமர்சனம், பாராட்டு என்பன எத்தனை தூரம் மற்றவர்களை அசைக்கின்றன என்பதை சில நாட்களாக சில வலைப்பதிவுகளை வாசிக்கும் போது உணர்ந்தேன். அதனால் இனி நேரம் ஒத்துழைக்கும் பட்சத்தில் நான் தரிசிக்கும் வலைப்பதிவுகளில் என்னைக் கவர்ந்த சிலவற்றைப் பற்றி ஓரிரு வார்த்தையாவது எழுதலாமென நினைக்கிறேன்.

முன்னரைப் போலல்ல. தற்போது நூற்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவுகள். அதனால் தினமும் அனைத்தையும் வலம் வர முடிவதில்லை. ஒரு கணக்கு வைத்தும் போக முடிவதில்லை. அன்றன்றைக்கு எனக்கிருக்கும் நேரத்தைப் பொறுத்து சிலதைத்தான் வலம் வர முடிகிறது. முடிந்ததை எழுத முயற்சிக்கிறேன்.

இந்த வருடம் பங்குனி, சித்திரை காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பபட்டு ஈழத்து இலக்கியத் தகவல்களைத் தந்து கொண்டிருக்கும் ஈழநாதனின் http://www.kavithai.yarl.net/ ம் http://www.eelanatham.yarl.net/ ம் மிகவும் பயனுள்ள ஆவணப் படுத்தி வைக்க வேண்டிய பதிவுகள்.

கொஞ்சம் நிஜம், கொஞ்சம் கதை என்று நிஜம் கலந்து நீட்டி முழக்காமல், சின்னதாக சத்தியராஜ்குமார் தரும் துகள்கள், மிகவும் சுவாரஸ்யமானவை.

யேர்மனி, மலேசியா என்று நிறைய விடயங்களைத் தந்து கொண்டிருந்த சுபாவை தை மாதத்துக்குப் பிறகு காணவில்லை.

Monday, May 24, 2004

நினைவுநதியில் மனதின் ஜதி -6


வருசம் பிறந்த அந்த நாளில் இரவு கோயிலுக்குப் போவது மிகவும் சந்தோசமான விடயம். எங்களது பக்கத்துக் கோயிலான ஆத்தியடிப் பிள்ளையார் கோயிலுக்குத்தான் நாங்கள் முதலில் போவோம்.

ஆலும் அரசும் தெற்கு வீதியை நிறைத்து நிற்க அலரிகளால் எல்லை போட்டு அளவாகவும் அழகாகவும் வீற்றிருக்கிறது ஆத்தியடிப் பிள்ளையார் கோயில். அத்தி மரத்தில் பிள்ளையார் தோன்றி, கல்லிலே கற்பூரம் கொழுத்தி வழிபடப் பட்ட அந்த இடந்தான் இப்போ ஊர் கூடி உணர்வோடு வழிபடுமிடமாகியதாகவும், அத்திமரப் பிள்ளையாரினால் அந்த இடம் அத்தியடியாகி கால ஓட்டத்தில் திரிபு பட்டு ஆத்தியடி என்ற ஊரானதாகவும் அம்மம்மா அடிக்கடி சொல்லுவா.

கோயில் கிணற்றில் கால் கழுவித்தான் உள்ளே நுழைவோம். கற்பூரம் சாம்பிராணி என்று வாசனை கமகமக்கும். சனங்கள் நிரம்பி வழிவார்கள். காவடி ஆடுபவர்களுக்கெல்லாம் செடில், அலகு... என்று குத்தப்பட்டுக் கொண்டிருக்கும். பால் செம்பு எடுக்கும் பெண்களும் அதற்கேற்ப ஆயத்தங்களுடன் யாருடனும் அவ்வளவாகப் பேசாமல் அமைதியாகத் தியானித்துக் கொண்டிருப்பார்கள். சுவாமி இருக்கும் இடம் திரைச்சீலையால் மறைக்கப் பட்டிருக்கும்.

நான் பட்டுப் பாவடை கசங்கி விடுமே என்று அந்தரப் பட்டு, யோசித்து... ஒரு மாதிரி அமர்ந்து கொள்வேன். ஏதோ ஒரு சந்தோசமான உணர்வு மனதை நிறைத்திருக்கும். எனது வயதையொத்த பெண் பிள்ளைகளும் என்னோடு வந்து அமர்ந்து கொள்வார்கள். அம்மா, அப்பா.. தொடங்கி எல்லோரும் மிகுந்த பக்தியுடன் தரிசனம் செய்து கொண்டிருப்பார்கள்.

ஐந்து மணியானதும் பூசை தொடங்கும். அதற்கிடையில் காண்டாமணி மூன்று தரமாக அடிக்கப் பட்டு.... கோயில் ஒளியும் ஓசையுமாய் மங்களகரமாய் கலகலக்கும். விழுந்து கும்பிட்டு சுவாமியுடன் கோயில் உள்வீதியைச் சுற்றிக் கும்பிடுவோம்.

வெளிவீதி சுற்றுவது மிகவும் ஆர்வமானதாக இருக்கும். ஆல், அரசு, சீனிப்புளி;, வேம்பு, செவ்வரளி, பொன்னலரி,........ என்று அடுக்கியிருக்கும் தெற்கு வீதியில் நடப்பதே ஒரு சுகம். மெல்லிய தென்றல் தழுவ, நீண்டு, புரண்டு பின்னிப் பிணைந்து கிடக்கும் அரசின் வேர்களில் பட்டுப் பாவாடை காலில் தடக்கி விடாது பிடித்துக் கொண்டு ஏறி ஓடுவதும் கெந்துவதுமாய் நடப்பது மிக மிக இன்பமானது.

வடக்கு வீதியில் கோயிலை ஒட்டிய பூங்காவனம். அது என்றும் நறுமணம் வீசும் நந்தவனம். திருவிழா இல்லாத காலங்களில் ஆத்தியடி இளைஞர்களின் விளையாட்டு மைதானமும் அந்த வடக்கு வீதிதான். கால் பந்தென்றால் என்ன கைப்பந்தென்றால் என்ன அவர்கள் கூடிக் குதூகலிக்கும் இடம் அது. திருவிழாக் காலங்களில் சப்பரம் என்றால் என்ன? தேர் என்றால் என்ன? சூரன் போர் என்றால் என்ன? அந்தப் பெரிய வடக்கு வீதியிலே சில மணித்தியாலங்கள் தரித்து மேளக்கச்சேரியும், நாதஸ்வரமுமாய் நெஞ்சை நிறைக்கும்.

வெளிவீதி சுற்றி காவடி வெளிக்கிட எப்படியும் ஏழுமணியாகி விடும். காவடி மயில் இறகுகளுடன் அழகாக இருந்தாலும் காவடி ஆடுபவர்களைப் பார்க்கச் சகிக்காது. அவர்களின் முதுகில் செடில் குத்தப் பட்டிருக்கும். அதிலிருந்து நீளும் கயிற்றை யாராவது பிடித்துக் கொண்டு நிற்பார்கள். நடக்கும் போதெல்லாம் அவர்கள் முதுகுத் தோல் இழுபட்டுக் கொண்டே இருக்கும். எதற்காக இது..? என்று மனசு சங்கடப் படும். சிலர் வாயில் அலகு குத்தியிருப்பார்கள். அது வாயின் ஒரு பக்கத்தில் குத்தி மற்றப் பக்கத்தால் எடுக்கப் பட்டிருக்கும். அலகு குத்தியிருக்கும் போது குத்தியிருப்பவர் பேசவோ வாய் திறக்கவோ முடியாது. அவரவர் நேர்த்திக்கு ஏற்ப நேர்த்திக்கடன் என்ற பெயரில் இந்த ஆரவாரம் நடக்கும். கடவுள் இத்தனை தூரம் கஸ்டப் படும் படி மனிதர்களைக் கேட்டாரா என மனசு எண்ணும். சிலர் அலகை நாக்கில் கூடக் குத்திக் கொள்வார்கள்.

மெதுவாக வீதியில் இறங்கும் காவடிகள் சிறிது நேரத்திலேயே பலத்த ஆட்டங்களுடன் எங்கள் வீடு தாண்டும். புதியாக்கணக்கன் ஊடாக அப்பாச்சி வீடு தாண்டி பண்டாரி அம்மன் கோயிலுக்குப் பயணிக்க நாங்களும் பின் தொடர்வோம். காவடி ஆடுபவர்களின் மேல் வீடுகளுக்குள் இருந்து வாளியுடன் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவார்கள். காவடி எடுப்பவர்களின் உருத்துறவுப் பெண்கள் பாற்செம்புடன் பின் செல்வார்கள்.

மாயக்கைப் பிள்ளையார் கோயில் காவடியும் பண்டாரி அம்மன் கோவிலுக்கு வந்து சேரும். இவைகளுக்குள் வேறு வேறு கோவில்களிலிருந்து கரகாட்டக் காரர்களும் வந்து சேருவார்கள்.

24.5.2004

(தொடரும்)

Sunday, May 23, 2004

பயம்

- தொடர்ச்சி -

அது 1984ம் ஆண்டு புரட்டாதி மாதம் 1ந் திகதி.(1.9.1984)

அப்போது எனது கணவர் தவிர்ந்த மற்றைய எல்லாப் பிள்ளைகளும் வெளிநாடு சென்று விட, மாமி தனியேதான் இருந்தா. அதனால் நாங்களும் எங்களது ஆத்தியடி(புலோலி மேற்கு) வீட்டை விடுத்து மாமிக்குத் துணையாக மாமியுடன் காக்கியவளவு(புலோலி கிழக்கு) வீட்டில் தங்கியிருந்தோம்.

அன்று வழக்கம் போல் நானும் எனது கணவரும் எங்களது மூன்று குழந்தைகளும் எங்களுக்கான அறையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தோம். எங்களது வீட்டுக் கதவு தட்டப்பட்டது.

இந்த அர்த்தஜாமத்தில் மாங்காய்ப்பூட்டுப் போட்டு பூட்டப் பட்டிருக்கும் கேற்றைத் தாண்டி வந்து உள் வீட்டுக் கதவைத் தட்டக் கூடியவர்கள் வேறு யாராக இருக்க முடியும். இலங்கை இராணுவத்தினர்தான். கணப்பொழுதில் கோர்வையாக்கப் பட்ட எண்ண ஓட்டத்தில் திடமாக முடிவெடுத்துக் கொண்டேன். பயத்தில் நெஞ்சு படபடத்தது.

அது இலங்கை இராணுவத்தினர் வீடுவீடாகப் புகுந்து ஆண்களை இழுத்துச் செல்லும் காலம். எமது ஆத்தியடி வீட்டை விட இந்த வீடு பாதுகாப்பாக இருக்கும் என்ற சின்னதான நம்பிக்கையும் தளர்ந்து போக எனக்கு உடம்பு வெடவெடத்தது.

பேய் பிசாசு என்று எதுவுமே இல்லை என்று எனக்குள்ளே நான் ஒரு தீர்வுக்கு வந்திருந்தாலும் மாமி வீட்டின் பின் வளவுக்குள் அசுரத்தனமாய் குடை விரித்திருக்கும் புளியமரங்களின் அசைவுகள் இரவின் இருட்டில் என்னை மருட்டும். அதனால் முடிந்தவரை இரவு 9மணிக்கு மேல் அந்தப் பக்கம் போகவே மாட்டேன். இப்போது இராணுவ வடிவில் மனிதப் பேய்கள் என் வீட்டு வாசலில்...
எனது கணவரை - பின் கதவால் - அந்தப் புளியமரங்களினூடே இழுத்துக் கொண்டு எங்காவது ஓடி விட நான் தயார்.

கதவு மீண்டும் தட்டப் பட்டது. எனது கணவரில் கூட ஒரு தடுமாற்றம். ஆனாலும் கதவைத் திறக்க முன்னேறினார். நான் அவசரமாய் அவரை மறித்து திறக்க விடாது தடுத்தேன். அறையின் பின் கதவைச் சுட்டிக் காட்டி அந்த வழியால் ஓடும் படி சைகை காட்டினேன். வாய் திறந்து பேசவோ பலத்து மூச்சு விடவோ முடியாத பயம். பின் கதவைத் திறந்தால் அது Binding அறை. அதைத் திறந்தால் நாற்சார முற்றம். அதனூடு பின் கதவு வழியாக ஓடினால் புளியம்மரங்களைத் தாண்டி.. அடுத்த காணிக்குள் குதித்து ஓடலாம். ஆனாலும் எனது கணவர் ஒரு வித தடுமாற்றத்துடன் முன் கதவைத் திறக்க முனைந்தார்.

இப்போ என்ன நடக்கப் போகிறது? எனக்கு நடுங்கியது. எல்லா வீடுகளிலும் போல் எனது கணவர் எனக்கு முன்னாலேயே சுடப் படுவாரா..?
அல்லது இழுத்துச் செல்லப் பட்டு எங்காவது நிறுத்தி வைக்கப் பட்டு மற்றவர்களுடன் வரிசையில் நிறுத்திச் சுடப் படுவாரா..? அல்லது பிடித்துக் கொண்டு போய் திரும்பி வராதவர்கள் பட்டியலில் சேர்க்கப் படுவாரா..? நெஞ்சு திக் திக் கென்று கொண்டே இருந்தது. பயம் நெஞ்சை அடைக்கப் பின் தொடர்ந்தேன். ஆனால் வெளியிலே இராணுவம் இல்லை. எனது தம்பிதான் வெளிறிய முகத்துடன் நின்றான்.

போன உயிர் திரும்ப வந்தது போன்ற ஒரு பெரு நிம்மதி. ஆனாலும் ஏன் இந்த நேரம் வந்தான் என்ற கேள்வி மனதுள் அவசரமாய் எழுந்தது. அவன் சத்தமாகக் கதைக்கத் திராணியற்றவனாய் எனது கணவரை வெளியில் அழைத்துச் சென்று மேலே காட்டினான். ரவுண் பக்கமாக வான் நோக்கிய தீச்சுவாலையும் அதனோடு போட்டி போட்டுக் கொண்டு கரிய புகையும்................

தம்பியின் கிசுகிசுப்பில் எல்லாம் விளங்கி விட்டது. இராணுவம் தன் கைவரிசையைக் காட்டி விட்டது. New Market எரிகிறது. கூடவே எனது கணவரின் புத்தகக்கடையும்.

சில லட்சங்களை விழுங்கிக் கொண்டிருக்கும் வானளாவிய தீச்சுவாலையை அந்த அர்த்தஜாமத்தில் புளியமரங்களுக்கு அருகில் நின்று பார்த்துக் கொண்டு நின்றேன். புளியம்மரங்களின் அசைவுகள் எனக்கு எந்தப் பயத்தையும் தரவில்லை.

22.5.2004

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite