எழுது எழுது என்று மனம் உந்தினாலும் எதுவோ தடுக்கிறது. எதை எழுத நினைத்தாலும் சில சொற்களுக்கு மேல் முடியவில்லை. ஏதோ ஒரு வெறுமை.
பிறப்பவர் ஒவ்வொருவரும் இறந்துதான் ஆக வேண்டும் என்பது நியதி என்றாலும் எந்தப் பொழுதிலும் மரணத்தை ஏற்றுக் கொள்ள மனங்களால் முடிவதில்லை. இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா! முடியவில்லை. எந்த மின்னஞ்சலுக்கும் பதில் எழுதவோ, எந்தத் தொலைபேசி அழைப்பையும் சந்தோசத்தோடு அணுகவோ முடியவில்லை.
எனது தம்பிமார் மாவீரர் ஆன போதோ, எனது அப்பா மரணித்த போதோ, என் அண்ணன் சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாய் சென்று விட்ட போதோ ஆற்றொணாத் துயரில் அழுது புலம்பியது போல் இன்று நான் அழுது புலம்பவில்லை. துயரம்தான். மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லைத்தான். தாங்க முடிகிறது. ஆனாலும் மனதில் சூழ்ந்துள்ள வெறுமையில் இருந்து வெளியேற முடியவில்லை. மரணத்தை வெல்ல முடியாது என்ற உண்மை நன்கு தெரிந்திருந்தாலும் வென்றிருக்க முடியாதோ என்று மனசு நப்பாசை கொள்கிறது. கண்கள் அடிக்கடி பனிக்கிறது. சமயங்களில் கன்னங்களிலும் வழிகிறது.
தூரத்து மரணம் எப்போதும் மற்றவர்களுக்கு ஒரு துயரச் செய்தி மட்டுமே. அது ஒரு துன்பியல் நாடகம் போல அவரவர் மனங்களுக்கு ஏற்ப அவரவர்களைத் தாக்கி கண்ணீர் சிந்தவோ, மனம் வருந்தவோ வைக்கும். சில மரணங்கள் மனங்களைப் பிழிந்தும் எடுக்கும். இதை எல்லோரும் அறிந்தும் உணர்ந்தும் இருப்பார்கள். ஆனால் மிக மிக நெருங்கிய உறவின் மரணம், அதாவது மிக மிகப் பிரியமான அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, தங்கை, குழந்தை… என்று எவராவது ஒருவரின் மரணமும், அது தரும் சோகமும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது. அனுபவித்து மட்டுமே உணரக் கூடியது.
அப்படியானதொரு ஆற்றொணாத் துயரில் என் பிரியமானவன் அமிழ்ந்து தவிக்கிறான். அவனுக்கு அழக் கூடத் தெரியவில்லை. எப்படி அவனை ஆற்றுவது என்று தெரியிவில்லை. தேற்றுவதற்கும் என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவன் துயரமே என்னிடம் பெருந்துயராய் படர்ந்து என்னைப் படுத்துகிறது.
மாமி (என் கணவரின் தாயார்) 3.4.2008 அன்று மரணித்து விட்டாள். நாற்பது வயதிலேயே கணவனை இழந்து விட்டாலும், மனதைரியத்தோடு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவள். தற்போது வயது 89. ஆனாலும் படுக்கையில் வீழ்ந்து விடாமல் கடைசி வரை சமையலில் இருந்து பல வேலைகளிலும் வீட்டில் பங்கேற்று வாழ்ந்து கொண்டிருந்தவள். இறப்பதற்கு முதல்நாள் கூட தொலைபேசியில் எம்மோடு பேசி விட்டு, போய் விட்டாள். ஆயிரக் கணக்கான மைல்களை அவசரமாய் ஓடிக் கடக்க முடியவில்லை. நியூசிலாந்தில் உயிரற்று அவள் உடல் இருக்கிறது என்ற உண்மையை ஏற்க மறுக்கிறது மனம். மாமியார் கொடுமைகளைப் பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். வாசித்திருக்கிறேன். ஆனால் என்றைக்குமே நான் அனுபவித்ததில்லை. நல்லவள். எம்மை விட்டுப் போய் விட்டாள்.
இதற்கு மேல் எழுத முடியவில்லை.
4.4.2008
Saturday, April 05, 2008
Wednesday, April 02, 2008
இலக்கியப் போட்டி
தமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு
வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம் இலக்கியப் போட்டிகளை நடத்த திட்டமுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் வரும் ஜூலை மாதம் நடை பெறவிருக்கும் முத்தமிழ்- பிரவாக நண்பர்களின் சந்திப்பில் வழங்கப் படும்.
அன்புடன் நண்பர்களுக்கு!
வணக்கம்!
ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக விளங்குவதோடு நல்ல பல நட்புகளையும் வழங்கி இருக்கின்றது. இலைமறை காயாக இருக்கும் பல படைப்பாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர இணையத் தளமும் , வலைப்பூக்களும் , தமிழ் குழுமங்களும் பெரிதும் உதவி வருவது ஆத்ம திருப்தியை தரும் விசயமாக இருந்து வருகிறது. இத்தனை பெருவெள்ளமாக இலக்கியப் பெருக்கும், கருத்துக் களமுமாக தமிழ் குழுமங்கள் வளர்ந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதில் ஒரு துளியாக, சிறு தளமாக எமது தமிழ் பிரவாகம் உருவாகி வருவது குறித்து நாம் மிகவும் பெருமையடைகின்றோம்.
தமிழ் பிரவாகத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களுக்கும் , எமது குழுமத்தின் வளர்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு பின் புலத்தில் எமக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்து வரும் நல் இதயங்களுக்கும் இந்த வேளையில் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்க விழைகிறோம்.

போட்டிகளின் விபரங்கள் வருமாறு:
இலக்கியப் போட்டிகள்
சிறுகதை
கவிதை
கட்டுரை
நகைச்சுவை துணுக்கு
ஆகிய பிரிவுகளில் நடாத்தப்படும்.
ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்கு பெறலாம். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு ஆக்கம் மட்டுமே அனுப்பலாம். ஒவ்வொரு ஆக்கமும் உங்கள் சொந்தக் கற்பனையில் படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும்;
வேறெந்த ஊடகங்களிலும் பிரசுரமாகாத படைப்புகளாக இருக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பு படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. ஆபாசம் அல்லது தனி மனிதக் கீறல் இருப்பதாகக் கருதப்படும் எந்த ஆக்கமும் போட்டியிலிருந்து நீக்கப்படும் அதிகாரம் நடுவர்களுக்கு வழங்கப்படும்.
போட்டிகளுக்கான ஆக்கங்கள் நம்மை வந்தடைய வேண்டிய கடைசி திகதி 2008 ம் ஆண்டு மே 31ம் திகதி.
சிறுகதை & கட்டுரை போட்டிகளின் பரிசு விபரங்கள்:
பரிசு பெறும் ஒவ்வொரு ஆக்கமும் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு மலரிலும், குழுமத்திலும் பிரசுரமாகும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்தில் பிரசுரமாகும்.
சிறுகதை:
கட்டுரை:
கட்டுரைகளுக்கான தலைப்புகள் :
நகைச்சுவைத் துணுக்கு:
கவிதை:
1வது பரிசு 1500.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
2வது பரிசு 1000.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1000 .00இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டியில் யாரும் கலந்து கொள்ளலாம். பரிசு பெறும் ஆக்கங்கள் ஆண்டு மலரிலும் , தமிழ் பிரவாகக் குழுமத்திலும் பிரசுரிக்கப்படும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்து இழைகளாகப் பிரசுரிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துப் பகிர்வுகளுக்கு சமர்பிக்கப்படும்.
எந்தவொரு ஆக்கமும் தனிமடலில் thamizmakal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். போட்டி சம்மந்தமான மேலதிக விபரங்களுக்கும் இதே மின்னஞ்சல் மூலமே தொடர்பு கொள்ளவும். Subject பகுதியில் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்- 2008 என்று குறிப்பிடவும்.
இணையத் தளத்தில் எழுதிவரும் அத்தனை அன்புள்ளங்களும் இவ் அறிவித்தலை ஏற்று பங்குபெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுவதோடு ஆர்வமுள்ள படைப்பாளிகள் , இணையத்தள அனுபவமில்லாத ஆனால் எழுத்துத் திறமையுடைய உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
*படைப்புகள் கட்டாயமாக யுனிகோடு முறையிலான ஈ-கலப்பை தமிழ் உருவிலே தட்டச்சுப் பெற்றிருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
நன்றி !
வணக்கம்!!

1வது பரிசு - 2500.00 பெறுமதியான புத்தகங்களும், 2500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
2 வது பரிசு- 1250.00 பெறுமதியான புத்தகங்களும் 1250.00 இந்திய
ரூபாயும் வழங்கப்படும்.
பரிசு பெறும் ஒவ்வொரு ஆக்கமும் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு மலரிலும், குழுமத்திலும் பிரசுரமாகும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்தில் பிரசுரமாகும்.
சிறுகதை:
ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். எத்தகைய கருவையும் பின்னணியாகக் கொண்டு கதை புனையப்படலாம்.
ஒருவர் ஒரு சிறுகதை ஆக்கம் மட்டுமே அனுப்பலாம்.
சிறுகதை 7 பக்கங்களிலிருந்து 10 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)
நடுவர்களின் முடிவே இறுதியானது.
கட்டுரை:
ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். கட்டுரைகள் இங்கு தரப்பட்டிருக்கும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ஒருவர் ஒரு கட்டுரை மட்டும் எழுதலாம். ஒவ்வொரு கட்டுரையும் 1000 சொற்களுக்கு மேற்படாதவையாக இருக்க வேண்டும்.
கட்டுரைகளுக்கான தலைப்புகள் :
பெண்ணியம்.
உலக அரங்கில் புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய நிலை.
தமிழ் கலாச்சாரமும் , இந்துசமயத்தின் ஆதிக்கமும்.
உலக அரங்கில் இந்தியா வல்லரசாகக் கணிக்கப்டுகிறாதா இல்லையா?
ஈழத்தமிழரும் , இந்திய அரசியலும்.
அரசியலில் பொது மக்களின் பங்கு.
இன்றைய இளைஞர்களின் வளர்ச்சி ஆக்கபூர்வமான பாதை நோக்கியா? அழிவுப்பாதையை நோக்கியா?
இன்றைய சூழ்நிலையில் பணத்தின் ஆதிக்கத்தில் பாசம் மறைந்துவிட்டதா? இல்லையா?'
மெல்லத் தமிழினி....வாழும்?வீழும்?
கடவுள் பக்தியா , சுய கட்டுப்பாடா மனிதனை செம்மைப் படுத்த வல்லது?
தியானம் என்பது....!
நகைச்சுவைத் துணுக்கு:
ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். ஒருவர் ஆகக் குறைந்தது ஐந்து துணுக்குகளை ஒரே தாளில் அனுப்பலாம். ஆனால் சிறந்த துணுக்காக 3 துணுக்குகளே தேர்வு செய்யப்படும்.
ஒவ்வொரு துணுக்கும் பரிசாக தலா 500.00 இந்திய ரூபாய்கள் வழங்கப்படும்.
கவிதை:
கவிதைப் போட்டி 2 பிரிவுகளில் நடத்தப்படும்.
மரபுக் கவிதை. புதுக்கவிதை ஒவ்வொரு பிரிவிலும் ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான, இயல்பான
ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். இரண்டு பக்கங்களுக்குள் கவிதை இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப் பட்டுள்ளது)
1வது பரிசு 1500.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
2வது பரிசு 1000.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1000 .00இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டியில் யாரும் கலந்து கொள்ளலாம். பரிசு பெறும் ஆக்கங்கள் ஆண்டு மலரிலும் , தமிழ் பிரவாகக் குழுமத்திலும் பிரசுரிக்கப்படும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்து இழைகளாகப் பிரசுரிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துப் பகிர்வுகளுக்கு சமர்பிக்கப்படும்.
எந்தவொரு ஆக்கமும் தனிமடலில் thamizmakal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். போட்டி சம்மந்தமான மேலதிக விபரங்களுக்கும் இதே மின்னஞ்சல் மூலமே தொடர்பு கொள்ளவும். Subject பகுதியில் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்- 2008 என்று குறிப்பிடவும்.
இணையத் தளத்தில் எழுதிவரும் அத்தனை அன்புள்ளங்களும் இவ் அறிவித்தலை ஏற்று பங்குபெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுவதோடு ஆர்வமுள்ள படைப்பாளிகள் , இணையத்தள அனுபவமில்லாத ஆனால் எழுத்துத் திறமையுடைய உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
*படைப்புகள் கட்டாயமாக யுனிகோடு முறையிலான ஈ-கலப்பை தமிழ் உருவிலே தட்டச்சுப் பெற்றிருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
நன்றி !
வணக்கம்!!
Saturday, March 29, 2008
சம்மதமா நான் உங்கள் கூட வரச் சம்மதமா?
நாடகம்
பிரதியாக்கம் - மூனா
தயாரிப்பு - சந்திரா ரவீந்திரன்
பங்கேற்றவர்கள் - N.T.ஜெகன், S.K.ராஜென், ஜெயா பெனடிற், ராஜி

Monday, March 17, 2008
கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி
கோணேஸ்வரி அவளது பெண்ணுறுப்பில் குண்டு வைத்துச் சிதறடிக்கப்பட்ட போது கலாவின் மன அதிர்வில் சிதறிய வார்த்தைகள் கோர்வைகளாகி ஒரு கவிதையானது.
அந்தக் கவிதை பலரிடமும் பலவிதமான அதிர்வுகளை ஏற்படுத்தியது.
போர் இப்படிப் பலவிதமான பெண்கள் மீதான வன்முறைகளை ´போரியலில் இது சகயம்´ என்ற சால்யாப்புடன் (தமது இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதே நோக்கமாக இருந்தாலும், அதுவும் ´போரியலில் இது சகயம்´ என்ற பேச்சுக்குள்ளேயே அடங்கி விடுகிறது) உலகம் பூராவும் நடத்தினாலும், அது எமது நாட்டில், எமது சகோதரி ஒருவரின் மீது நிகழ்த்தப் பட்ட போது நாம் ஒவ்வொருவரும் அதிர்ந்துதான் போனோம்.
(கோணேஸ்வரிக்கு நடந்ததை வேறு எந்தப் போராட்ட வரலாற்றிலும் நடந்து முடிந்ததாக நான் அறியவில்லை. அத்தனை கொடுமையான, போரின் உக்கிரத்தைத் தாங்க மாட்டாதவர்களின் வக்கிரமான செயற்பாடு அது)
இந்த அதிர்வுகள், மன்னம்பேரி.... கிருஷாந்தி... என்று ஒவ்வொரு பெண்ணின் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட செய்திகள் வந்து எமது செவிப்பறைகளை அறைந்த போது தவிர்க்க முடியாமல் ஏற்பட்டுக் கொண்டேதான் இருந்தன.
ஆனால் கலாவின் கவிதை இத்தகைய அதிர்விலிருந்து வேறுபட்ட அதிர்வுகளையும் பலர் மனதில் ஏற்படுத்தி விட்டுச் சென்றது.
வெறும் வசைச் சொற்களாக மட்டுமே, குறிப்பாக எமது ஆண்களால் (சில பெண்களாலும்) பாவிக்கப் பட்ட பெண் உறுப்புகளின் பெயர்களில் ஒன்று கலாவின் கவிதையில் வந்த போது அது எம்மவரிடையே அதிர்வை ஏற்படுத்தியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. கலா பாவித்த சொல் பொதுவாக வசைச் சொல்லாகப் பாவிக்கப் படுவதில்லை. அது மரியாதையான முறையில் Biologyயிலும், சங்க இலக்கியங்களிலும் பாவிக்கப் பட்டுள்ளது.
அந்தச் சொற்களைப் பாவித்துத்தான் கவிதை எழுத வேண்டுமா, என்ற கேள்வியை ஒரு புறம் வைத்து விடுவோம். எதை எழுதுவது, எதை எழுதக் கூடாது என்ற வரையறைகளை எவருக்கேனும் வகுக்க எமக்கென்ன உரிமை இருக்கிறது. அது அவரவர் சுதந்திரம்.
யாரோ ஒரு பெரியவர் சொன்னார் "எந்த ஒரு அழகற்ற விடயத்தையும் அழகாக எழுதுவதே எழுத்தாளருக்கு அழகு" என்று. இங்கு எது அழகு, எது அழகில்லை என்பதைத் தீர்மானிக்க வேண்டியது எழுத்தாளரது பொறுப்பு.
மீண்டும் நான் கலாவின் கவிதைக்கு வருகிறேன்.
அந்தக் கவிதையின் தொனியும், பொருளும் ஒரு பெண்ணுக்கு, அதுவும் எங்கள் நாட்டுப் பெண்ணுக்கு நடந்து விட்ட ஒரு கொடுமையின் அதிர்வில் இன்னொரு பெண்ணின், மனதில் இருந்து சிதறிய வார்த்தைகளினால் பின்னப் பட்டவை. எந்த வித விரசத்தையும் மனதில் கொள்ளாது, விமர்ச்சனங்கள் பற்றிய எந்த அக்கறையும் கொள்ளாது... இன்னும் பல எதிர்வுகள் வரலாம் என்ற யதார்த்தத்தைக் கூடச் சிந்தியாது கோர்க்கப்பட்ட வார்த்தைகள் அவை.
அந்தக் கவிதை ஏற்படுத்திய அதிர்வும், (இந்த அதிர்வுகளுக்கான காரணங்கள் பல்வேறு கோணத்திலானவை) அதற்குக் கிடைத்த பிரபல்யமும் தொடர்ந்தும் பலரையும் வில்லங்கமாகத் தமது கதைகளிலும், கவிதைகளிலும் இச்சொற்களைப் பாவிக்க வைத்தன. சில இந்தியத் திரைப்படங்களில் கதைக்குப் பொருத்தமில்லாது, தேவையில்லாது இலங்கைப் பிரச்சனைகள் எங்காவது புகுத்தப் பட்டிருக்கும். யாரோ ஒருவர் ஏதோ ஒரு சிறு பிரச்சனைக்காய் கழுத்தில் சயனைட் கொழுவியிருப்பார். இப்படியான தன்மையுடையதாகத்தான் தேவையில்லாமல் இச்சொற்களைச் சேர்த்துக் கொண்ட, இன்னும் சேர்த்துக் கொண்டிருக்கின்ற… பலரது படைப்புகள் தோற்றமளிக்கின்றன.
இவைகளின் மத்தியில் எத்தனையோ பேரின் கதைகளும், கவிதைகளும் அவசியம் கருதியும் (சில சமயங்களில் அவசியமே இல்லாதும்) இச் சொற்கள் சேர்த்துப் புனையப் படுகின்றன. அவை பேசு பொருளாகவும், விவாதத்தின் கருவாகவும் பரிணமிக்கின்றன. அதை எழுதியவர்களில் சிலர் பிரபல்யமான எழுத்தாளர்களாகக் கூட ஆகி விடுகிறார்கள்.
அதைப் பார்த்து, அந்தப் பிரபல்யத்துக்கு ஆசைப்பட்டு தேவையோ, தேவையில்லையோ என்ற சிந்தனைகள் எதுவுமின்றி இன்னும் இன்னும் சிலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
எழுதட்டும். நன்றாக எழுதட்டும். நாம் யார் அவர்களின் சிந்தனைகளின் ஊற்றெடுப்புகளைத் தடுக்க…! எந்தெந்தச் சொற்களைப் பாவிக்க வேண்டும் என்று வரையறைகளை விதிக்க…!
அதற்காக எங்கள் சகோதரிகளை பகடைக்காய்கள் ஆக்குவதை விட்டு விடுங்கள். ஒவ்வொரு பொழுதிலும் நாம் சிந்தியது வெறும் கண்ணீரல்ல.
சந்திரவதனா
17.3.2007

Tuesday, March 11, 2008
மனசு தகிக்கின்றது
உடல் சிதற முன்னமே மனம் சிதறிய
கோணேஸ்வரியின் மரணச் செய்தியிலும்
உடல் புதையும் முன்னரே மனம் வதை பட்ட
கிருசாந்தியின் மரணச் செய்தியிலும்…
இன்னும் இவை போலவே
வெளியுலகத்துக்குத் தெரிந்தும்
தெரியாமலும்
மனம் கருகியும் உடல் சிதறியும்
சிதை பட்டுப் போன சகோதரிகளின்
வந்ததும் வராது போனதுமான
மரணச் செய்திகளிலும்...
வந்த வேதனையையும் கோபத்தையும் விட
அதிக கோபம் வருகிறது
இன்றைய சிலரின் பேனா முனைகளில்
அந்த சகோதரிகளின்
அங்கங்கள் சிதையும் போது
கவிதைகளுக்கும் விவாதங்களுக்கும்
அவர்களின் அங்கங்கள்தான் கிடைத்தனவா?
மனசு தகிக்கின்றது
எங்கள் சகோதரிகளின் மூச்சை நிறுத்திய
இராணுவங்களின் துப்பாக்கிகளை விட
இவர்கள் பேனா முனைகள் கொடியன
எங்கள் தேசக்காற்றை மாசு படுத்திய
எக்காளங்களை விட
இவர்களின் சிந்தனைகளில் ஊற்றெடுக்கும்
எழுத்துக்கள் குரூரமானவை.
11.3.2007
கோணேஸ்வரியின் மரணச் செய்தியிலும்
உடல் புதையும் முன்னரே மனம் வதை பட்ட
கிருசாந்தியின் மரணச் செய்தியிலும்…
இன்னும் இவை போலவே
வெளியுலகத்துக்குத் தெரிந்தும்
தெரியாமலும்
மனம் கருகியும் உடல் சிதறியும்
சிதை பட்டுப் போன சகோதரிகளின்
வந்ததும் வராது போனதுமான
மரணச் செய்திகளிலும்...
வந்த வேதனையையும் கோபத்தையும் விட
அதிக கோபம் வருகிறது
இன்றைய சிலரின் பேனா முனைகளில்
அந்த சகோதரிகளின்
அங்கங்கள் சிதையும் போது
கவிதைகளுக்கும் விவாதங்களுக்கும்
அவர்களின் அங்கங்கள்தான் கிடைத்தனவா?
மனசு தகிக்கின்றது
எங்கள் சகோதரிகளின் மூச்சை நிறுத்திய
இராணுவங்களின் துப்பாக்கிகளை விட
இவர்கள் பேனா முனைகள் கொடியன
எங்கள் தேசக்காற்றை மாசு படுத்திய
எக்காளங்களை விட
இவர்களின் சிந்தனைகளில் ஊற்றெடுக்கும்
எழுத்துக்கள் குரூரமானவை.
11.3.2007
Saturday, March 08, 2008
பாதை எங்கே?

அவளை சோகம் பிடுங்கித் தின்றது. அழவேண்டும் போல இருந்தது. சின்னச் சீரகத்தைப் பலகையில் போட்டு அரைக்கும் போது இரண்டு சொட்டுக் கண்ணீர்த்துளிகள் சின்னச் சீரகத்துள் விழுந்தன. அவள் குலுங்கி அழவில்லை. கண்ணீர் தரைதாரையாக ஓடவில்லை. இரண்டே இரண்டு சொட்டுக் கண்ணீர்தான். அந்தக் கண்ணீரில் ஒரு கடலளவு சோகம் நிறைந்திருந்தது.
அவளுக்கு அவள் மேலேயே பச்சாத்தாபம் ஏற்பட்டது. கண்ணுக்குத் தெரியாத விலங்கொன்று தன்னை இறுக்குவதை உணர்ந்தாள். கண்ணுக்குத் தெரியும் விலங்கென்றாலும் உடைந்தெறிந்து விட்டு ஓடிவிடலாம். எங்கே உடைப்பது, எங்கே ஓடுவது, என்று தெரியாத பயமும் குழப்பமும் அவளுள்.
ஜேர்மனிக்கு வந்து மூன்று மாதங்களாகியும் இந்த வீட்டை விட்டு அவள் எங்கும் செல்லவில்லை. அவள் சென்றிருப்பாள். மரியதாஸ்தான் அவளை எங்குமே அழைத்துச் செல்லவில்லை.
குசினி யன்னலினூடே வெளியிலே தெரிந்த எல்லா மனிதர்களுமே சந்தோசமாகத் திரிவது போலவும், தான் மட்டும் துன்ப வெள்ளத்துள் அமிழ்ந்து போனது போலவும் அவளுக்கு இருந்தது.
இப்படியெல்லாhம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவள் தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த, ஊரான தெல்லிப்பளையை விட்டு இங்கு ஜேர்மனி வரை வந்திருக்கவே மாட்டாள்.
வெளிநாட்டு மாப்பிள்ளை என்று மணம் பேசி வந்த போது அவளை விட அவள் அப்பா அரிநாயகம்தான் பெரிதும் சந்தோசப் பட்டார். ஆமி, ஷெல் என்ற பயங்கர நிலையிலிருந்து மகளுக்காவது ஒரு விடுதலையும், அதே நேரம் ஒரு நல்ல வாழ்க்கையும் அமையப் போகிறதென்ற நம்பிக்கையும், சந்தோசமும் அவரை உசார் படுத்த காலங்காலமாய் அவர்களுக்கு என்றிருந்த அந்த நிலத்தையும், அந்தக் குடிலையும் விற்று அவளை வெளிநாட்டுக்கு அனுப்பவும் துணிந்தார்.
“வேண்டாம் அப்பா, எங்கடை வீடு ஒரு குடில் எண்டாலும் அம்மா வளைய வந்த குடில். இதை வித்துத்தான் எனக்கு ஒரு வாழ்க்கை அமையோணும் எண்டால், எனக்கு அப்பிடியொரு வாழ்க்கை வேண்டாம் அப்பா" கலங்கித் தடுத்தாள் அவள்.
ஒரு கணம் நோய்வாய்ப் பட்டு இறந்து போய் விட்ட மனைவியையும், அவளின்றித் தனித்த வாழ்வையும் நினைத்துக் கலங்கிய அரியநாயகம் “இஞ்சை பார் பிள்ளை. அம்மாவும் இல்லாமல் உன்னையும், தம்பியையும் இந்த நாட்டிலை வைச்சு வளர்க்கிறதுக்கு நான் படுற பாடு கொஞ்சமில்லை. எப்ப ஆமி வருவானோ, எப்ப ஷெல் வந்து விழுமோ, எப்ப புக்காரா குண்டு பொழியுமோ, எண்டு எந்த நேரமும் என்ரை நெஞ்சு பதைச்ச படியேதான் கிடக்குது. வந்த வரனை வேண்டாமெண்டு சொல்லாமல் நீ போயிடு பிள்ளை. உனக்கொரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிட்டுது எண்டால், நீ பிறகு உன்ரை தம்பியையும் அங்கை கூப்பிட்டு வாழ வைக்க மாட்டியே? உங்கள் இரண்டு பேரையும் ஒரு பாதுகாப்பான இடத்திலை விட்டிட்டன் எண்டால், நான் பிறகு அம்மா போன இடத்துக்கே நிம்மதியாப் போய்ச் சேர்ந்திடுவன்" என்றார்.
அப்பா அரியநாயகத்தின் யதார்த்தமான பேச்சு அவளை மேற்கொண்டு எதுவும் பேச முடியாமற் தடுத்து விட்டது. மௌனம் சம்மதமாக, வாழ்ந்த குடிலும் விற்கப் பட்டு திருமணம் நிட்சயமானது. மனம், குணம்… என்று எதுவுமே தெரியாமல், வெறுமனே புகைப்படத்தைப் பார்த்து விட்டு ஜேர்மனியில் வாழும் மரியதாசுக்கு மனைவியாக அவள் தயாரானாள்.
விசாவுக்காகத் தாண்டிக்குளம் தாண்டி கொழும்பு வந்தவள் மீண்டும் தெல்லிப்பளை போவதில் உள்ள சிரமத்தை நினைத்து கொழும்பிலேயே தங்கி விட்டாள். கொழும்பில் இருந்த அந்த ஏழு மாதங்களும் மரியதாஸ் அவளைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவதும், இவள் கடிதங்கள் போடுவதும் என்று ஒரு இனிமையான தொடர்பு அவர்களைக் காதலர்கள் ஆக்கியது. எட்டாம் மாதம் ஸ்பொன்சர் எல்லாம் சரி வந்து மரியதாசின் சொற்படி அவள் தன் சொந்தச் செலவிலேயே ரிக்கற் எடுத்து விமானம் ஏறினாள்.
அப்பா, தம்பி இருவரையும் பிரிந்த சோகம் அவளை வாட்டினாலும், காதல் சிறகை விரித்தபடிதான் வானில் பறந்து ஜேர்மனி வந்து சேர்ந்தாள்.
ஃபிராங்போர்ட் விமான நிலையத்தில் அவளுக்காக நண்பர்களுடன் காத்திருந்த மரியதாஸ் அவளையும், அவள் மரியதாஸையும் இனம் கண்ட போது புகைப்படத்தில் பார்த்த மரியதாசுக்;கும், நேரே பார்க்கும் மரியதாசுக்கும் இடையே நிறம், அழகு, வயசுத் தோற்றம் எல்லாவற்றிலுமே சற்று வித்தியாசம் இருந்ததால் சட்டென்று மனசுக்குள் ஏமாந்து மீண்டும் சமாளித்துக் காரில் ஏறினாள்.
வழியில் காருக்குள்ளேயே மரியதாஸ் “என்ன நீங்கள் ஃபோட்டோவிலை பார்க்க வடிவா இருந்தீங்கள். இப்ப பார்த்தால் காகக்குஞ்சு மாதிரி இருக்கிறீங்கள்?" என்று நக்கலும், சிரிப்புமாய் அவளைக் கேட்டான். அவளுக்குத் தன் மனசை யாரோ சாட்டையால் அடிப்பது போன்ற வலி ஏற்பட்டது. ஆனாலும் ´சும்மா பகிடிக்குத்தான் சொல்கிறான்´ என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லி, அசடு வழியச் சிரித்து, கலங்கிய கண்களை மறைத்து மௌனமாகி விட்டாள்.
அவள் மனசு போலவே அடுப்பிலும் கறி கொதித்துக் கொண்டிருந்தது. அரைத்த சின்னச் சீரகப் பொடியைக் கறிக்குள் போட்டுக் கறியை இறக்கியவள் ஓடிப்போய் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். ஊரில் இருந்ததை விட முகம் வாடிக் கறுத்துப் போயிருந்தது.
இவ்வளவு நாளும் அவள் தன் வாழ்க்கை பற்றி எதுவுமே தன் அப்பா அரியநாயகத்துக்கோ, தம்பிக்கோ எழுதவில்லை.
தன் கண் முன்னாலேயே மரியதாஸ் ஒரு இத்தாலி நண்பியுடன் சல்லாபிப்பதை எப்படி அவள் எழுதுவாள். வாய்க்குவாய் “நீங்கள் வடிவில்லை. நாட்டுக்குத் திரும்பிப் போயிடுங்கோ" என்று அவன் சொல்வதை எப்படி எழுதுவாள். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு ஜடமாக வாழ்ந்தாள்.
ஆனால் அந்த ஜடத்தனத்தைக் கூடச் சீண்டிப் பார்ப்பது போன்ற விடயம் நேற்று நடந்தது. இருட்டு வெளிச்சத்தை விழுங்கி விட்டது போன்று, தொலைதூரத்தில் அவளுக்குத் தெரிந்த சின்னஞ் சிறு நம்பிக்கை நட்சத்திரத்தையும் விழுங்கி விட்டது அந்த விமானச்சீட்டு.
அதை, வேலையால் வரும் போது மரியதாஸ்தான் கொண்டு வந்தான்.
“நீங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போயிடுங்கோ. வடிவா இருக்கிறியள் எண்டு நினைச்சுத்தான் கூப்பிட்டனான். நீங்களென்ன காகக்குஞ்சு மாதிரி இருக்கிறிங்கள். இன்னும் மூண்டு நாளைக்குத்தான் உங்களுக்கு விசா இருக்கு. அதுதான் ரிக்கற் எடுத்திட்டன்." விமானச்சீட்டுடன் வந்த மரியதாஸ் இப்படித்தான் அவளை வார்த்தைகளால் தேளாகக் கொட்டினான்.
துணுக்குற்றவள் “உங்களோடை மூண்டு மாசங்கள் வாழ்ந்திட்டன். இனி நான் அங்கை போய் என்ன செய்யிறது? நான் இங்கை சந்தோசமா வாழுறன் எண்டு நினைச்சுத்தான், அப்பா அங்கை சந்தோசமா வாழுறார். நான் இப்பத் திரும்பிப் போனால் அவர் செத்திடுவார். என்னை அனுப்பின காசுக்குத் தம்பியை அனுப்பியிருந்தாலும் உழைச்சுக் குடுத்திருப்பான்." சொல்லிக் கதறினாள்.
“நீங்கள், இப்ப போங்கோ. நான் உங்களைத் திரும்பக் கூப்பிடுறன்." என்றான். பொய் சொல்கிறான் என்று அவளுக்குத் தெரிந்தது.
“நீங்கள், இப்ப என்னைச் சட்டப்படி கலியாணம் செய்தால், எனக்கு இங்கை தொடர்ந்து இருக்க விசா கிடைக்குந்தானே! நான் திரும்பிப் போக மாட்டன். நீங்கள் என்னைக் கலியாணம் செய்யாட்டி நான் தற்கொலை செய்திடுவன்." என்றாள்.
“இஞ்சை பார், நான் இங்கை மரியாதையா வாழுறன். இங்கை செத்து என்ரை மானத்தை வாங்கிப் போடாதை. சாகிறதெண்டால் அங்கை ஊரிலை போய்ச் சா." இரக்கமின்றிக் கத்தினான்.
மரியதாஸ் ஜேர்மனிக்கு வந்து பதினாறு வருடங்கள். வேறு நகரத்திலிருந்து ஏதோ திருகுதாளம் செய்து விட்டு, இப்போ இந்த நகரத்துக்கும் வந்திருந்து இங்கும் வேலை செய்கிற இடங்களில் கள்ள வேலைகள் செய்து, பிடிபட்டு தமிழரின் மானத்தையே கப்பல் ஏற்றிக் கொண்டிருக்கிறான்.
இவனுக்கு, என்ன மரியாதை இங்கிருக்கிறது என்று அவளுக்குத் தெரியாது. ஆனாலும் தன்னை ஏமாற்றித் திருப்பி அனுப்பப் போகிறான் என்பது மட்டும் தெரிந்தது.
இப்ப நாட்டுக்குத் திரும்பினால் என்ன நடக்கும் என்றும் அவளுக்குத் தெரியும். அப்பா எப்படி உடைந்து போவார் என்ற நினைப்பே அவளை உடைத்தது. ஊரார் முகத்தில் எப்படி முழிப்பேன் என்ற நினைப்பு அவளைக் கலங்கடித்தது.
எங்காவது ஓடி விடலாமா, என்று யோசித்தாள். எங்கு ஓடுவது? ஸ்பொன்சரில் வந்ததால், அகதி விண்ணப்பமும் கோர முடியாத நிலை. தெரியாத நாடு. தெரியாத வீதி. ஆங்கிலம் தெரியாது. டொச்சில் ஒரு வார்த்தை தெரியாது. என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை.
´இவன் திட்டமிட்டுத்தான் என் வாழ்க்கையோடு விளையாடியிருக்கிறானா? வேணும் என்றுதான் யாரையும் என் கண்களில் காட்டாது இந்த வீட்டுக்குள் சிறை வைத்தானா?´ குழப்பமும் சந்தேகமும் நிறைந்த கேள்விகள் அவளுள் எழுந்தன.
தமிழர்கள் கூட அதிகம் இல்லாத இந்த நகரில் யாரிடம் போவது? என்ன கேட்பது? யோசித்து யோசித்தே மூளை குழம்பி விடும் போலிருந்தது. நேரத்தைப் பார்த்தாள். மரியதாஸ் வேலையால் வர இன்னும் சிலமணி நேரங்கள்தான் இருந்தன. அதற்கிடையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
உடைகளை மாற்றிக் கொண்டு எங்கே போவது, என்று கூடத் தெரியாமல் வெளியில் இறங்கினாள். அந்தப் பாதை எங்கே வளைகிறது, என்பதும் அவளுக்குச் சரியாகத் தெரியாது. ஆனாலும் மரியதாஸின் கேவலமான செயல்களுக்கு ஒரு நிரந்தர முடிவினைக் காணும் நோக்கோடு நிதானமாக நடக்கத் தொடங்கினாள்.
சந்திரவதனா
10.2.2000
மனஓசை - 53-57
Labels:
Short story
,
சந்திரவதனா
,
சிறுகதை
,
பெண்
,
மனஓசை
Friday, February 08, 2008
அம்மா
ஐனவரி மாத யுகமாயினியில் பிரசுரமாகியது
கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும் குளிர் வெளிக்குள் கவின் நுழைந்து விட்டான். சந்தியாவுக்கு மனம் விறைத்தது. சுந்தரேசனோ எந்தவித அலட்டலுமின்றிப் படுக்கையறையுள் புகுந்து படுக்கையில் சாய்ந்து கொண்டான்.
கவின் அமெரிக்காவுக்குப் போக வேண்டுமாம். அதுதான் இப்போது சில வாரங்களாகவே வீட்டில் புயல். இன்று உச்சக் கட்டம். மகன் அமெரிக்காவுக்குப் போவதில் சந்தியாவுக்கும் எந்தவித உடன்பாடும் இல்லைத்தான். அதற்காக அப்பா சுந்தரேசனும், மகன் கவினும் இத்தனை வாக்குவாதங்களும், சண்டைகளும் போட்டுக் கொள்ள வேண்டுமா?
பிள்ளைகளுக்கும், அப்பாவுக்கும் இடையில் சண்டைகள் வந்து விடக் கூடாதென்று எத்தனை விடயங்களைப் பக்குவமாகச் சமாளித்திருப்பாள். இந்த விடயம் தவிர்க்க முடியாததாய், அவள் கையை விட்டு நழுவி முற்று முழுதாகச் சுந்தரேசனிடம் சென்று விட்டது. அதுவும் கவின் இப்படி கதவை அடித்துச் சாத்தி, வீட்டை விட்டு வெளியில் போகுமளவுக்கு வந்து விட்டதே என்பதில் அவளுக்கு நியமாகவே வருத்தம். அவளால் அதைத் தாங்க முடியவில்லை.
எல்லாம் இந்த இணையத்தால் வந்ததுதான். சட், எஸ்.எம்.எஸ் என்று எல்லாப் பிள்ளைகளையும் போலத்தான் கவினும் கணினியோடும், கைத் தொலைபேசியோடும் திரிவான். படிப்பிலும் படு கெட்டிக்காரன் என்பதால் அவன் கணினியோடு மினைக்கெடும் போது சந்தியாவோ அன்றி சுந்தரேசனோ அவ்வளவான கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை. ஆனால் அது
இப்படி முகம் தெரியாத ஒருத்தி மீது காதலை ஏற்படுத்தும் என அவர்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை.
´இங்கை, ஜேர்மனியிலை இல்லாத பொம்பிளையையே கொம்பியூட்டருக்குள்ளை கண்டிட்டான்´ என சந்தியா சலித்துக் கொள்வதும் உண்டு. ஆனாலும் அது இணையத்தோடே போய்விடும் என்றுதான் நினைத்திருந்தாள். இந்தளவு தூரம் வரும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
“அண்ணாவை மட்டும் அவுஸ்திரேலியாவிலை ஒரு வருசம் போயிருந்து படிக்க விட்டீங்கள். ஏன், நான் போனால் என்ன? என்னையும் விடுங்கோ" இதுவே அவன் அடிக்கடி பாவிக்கும் ஆயுதமாக இருந்தது.
“அண்ணாவுக்குப் பதினெட்டு வயசாகீட்டுது. அவனாலை இப்பத் தனிய இருந்து படிக்கேலும். அதாலை பயமில்லாமல் விட்டம். உனக்கு இப்பத்தானே பதினாறு வயசு. உனக்கும் பதினெட்டு வயசு வரக்கை பார்ப்பம்." என்று எத்தனையோ தடவைகள் சுந்தரேசன் சொல்லி விட்டான்.
கவினும் விடுவதாயில்லை. “உங்களுக்கு அண்ணனிலைதான் பாசம். என்னிலை இல்லை. அவன் என்ன கேட்டாலும் விடுவீங்கள். செய்வீங்கள். நான் கேட்டால்தான் உங்களாலை ஏலாது." என்பான்.
“அவுஸ்திரேலியா போலையோ அமெரிக்கா. அங்கை ஒரு நாளும் உன்னைத் தனிய விடேலாது." சந்தியாவும் முந்திக் கொண்டு கத்துவாள்.
வாக்குவாதங்களும், கருத்து முரண்பாடுகளின் வெளிப்பாடுகளும் இப்படித்தான் சில வாரங்களாகத் தொடர்ந்து கொண்டிருந்தன. இன்றோ, எப்படியாவது அப்பாவைச் சம்மதிக்க வைத்து விடுவது என்ற முடிவோடுதான் கவினும் ஆரம்பித்திருக்கிறான். அவனுக்கு அங்கு அமெரிக்காவில் இருக்கிற யூலியா என்ற பெண்பிள்ளை மேல் காதலாம். அந்தப் பிள்ளை பாவமாம். அதுன்ரை அம்மா கான்சர் வந்து இறந்து விட்டாவாம். அது அம்மம்மாவோடைதான் வாழ்கிறதாம். அதுவும் இவனைப் பார்க்கத் துடியாய்த் துடிக்கிறதாம். கணினியூடு வந்த அந்தப் பிள்ளையின் படங்களை இவன் பிறின்ற் பண்ணி தன் அறைச் சுவர் முழுவதும் கொழுவி வைத்திருக்கிறான்.
சுந்தரேசனுக்குத் தெரியாத காதலே. அவன் அதைப் பற்றி ஒன்றுமே கதைக்க மாட்டான். “நீ, அமெரிக்காவுக்கு இப்போதைக்குப் போகேலாது. முதல்லை இங்கை படிச்சு முடி. பிறகு பார்ப்பம்." என்று அடித்துச் சொல்லி விடுவான்.
சந்தியாதான் “அவள், சும்மா ஒரு படத்தை அனுப்பியிருப்பாளடா. உன்னை விட வயசு கூடவாயும் இருக்கும். வீணா அவளை நினைச்சுக் கொண்டிராதை" என்று அவனைச் சமாதானம் செய்யப் பார்ப்பாள்.
எப்படியோ இன்றைய சுந்தரேசனுக்கும், கவினுக்குமான வாக்குவாதம் சற்றுக் காரமாகவேதான் இருந்தது. சுந்தரேசன் என்னவோ அமைதியாக, நிதானமாகத்தான் கதைத்தான். கவின்தான் வீட்டின் மேற்கூரையில் போய் முட்டாத குறையாகத் துள்ளிக் குதித்தான். “நீங்கள் ஒரு அப்பாவோ?" என்று வாய்க்கு வாய் கேட்டான். சுந்தரேசன் அசையவில்லை. “முடியாது" என்று திடமாகச் சொல்லி விட்டான்.
அந்தக் கோபந்தான். தான் வீட்டை விட்டுப் போகிறேன், என்று சொல்லி, கவின் அந்த இரவில் விறைக்கும் குளிருக்குள் வெளியில் போய் விட்டான்.
அவன் இப்படி விறைக்கும் குளிருக்குள் போக, சுந்தரேசன் தன்பாட்டில் போய்ப் படுத்துக் கொண்டது சந்தியாவை இன்னும் கோபத்துக்கும், கவலைக்கும் ஆளாக்கியது. கவினின் வேண்டுதல் நியாயமற்றதுதான். என்றாலும் இந்த நிலையில் சுந்தரேசனின் பாராமுகம் அவளைக் குமுற வைத்தது. படுக்கையறைக்குள் ஓடிச் சென்று “நீங்கள் ஒரு அப்பாவே? அவன் இந்தக் குளிருக்குள்ளை விறைச்சுச் சாகப் போறான். நீங்கள் நிம்மதியாப் படுப்பிங்களோ? போய் அவனைக் கூட்டிக் கொண்டு வாங்கோ!" கத்தினாள்.
சுந்தரேசன் மிகவும் அமைதியான சிரிப்புடன் “உனக்கு வேணுமெண்டால் நீ போய்ப் பார். கூட்டிக் கொண்டு வந்து உன்ரை அன்பு மகனைப் படுக்க வை. எனக்கு நாளைக்குக் காலைமை வேலை. நான் படுக்கப் போறன்." என்று விட்டு, இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்து விட்டான்.
சந்தியாவுக்கு மனங் கொள்ளவில்லை. அழுகை அழுகையாக வந்தது. ஓடிச் சென்று ஜன்னலாலும், பல்கணியாலும் எங்காவது அவன் தெரிகிறானா என எட்டிப் பார்த்தாள். குளிர் மட்டுமே உறைந்து கிடந்தது. வேறு எந்த அசுமாத்தமும் இல்லை.
சுந்தரேசனை எட்டிப் பார்த்தாள். அவன் தூங்கி விட்டான் போலிருந்தது. மெதுவாக ஜக்கற்றை எடுத்துப் போட்டு, சப்பாத்தையும் போட்டுக் கொண்டு வெளியில் இறங்கினாள். குளிர், செவிப்பறையை அறைந்தது. சப்பாத்தையும் தாண்டி கால்விரல்களில் ஊசியாகக் குத்தியது. அவளோ தன் குளிரைப் பொருட்படுத்தாது ´கவின் இந்தக் குளிரில் எங்கு உறைந்து கிடப்பானோ´ என்ற பதைப்போடு வீட்டைச் சுற்றியுள்ள எல்லா இடங்களையும் ஓடி ஓடித் தேடினாள். இளைப்பாறுவதற்கென ஆங்காங்கு வைக்கப் பட்டிருக்கும் வாங்கில்கள், கதிரைகள்... என்று எல்லாவற்றையும் பார்த்தாள்.
12மணியாகப் போகும் அந்த நடுநிசியில் அவள் தனியாக அலைந்தாள். இடையிடையே ஒளி பாய்ச்சிச் செல்லும் மோட்டார் வாகனங்கள், குருவியோ, கோட்டானோ எழும்பும் ஓசைகள், அவ்வப்போது அவளைத் தாண்டிச் செல்லும் ஓரிரு மனிதர்கள் தவிர வேறெதையும் அவளால் காண முடியவில்லை. குளிரையும் விட தூரத்து இருள்களே அவளை அடிக்கடி அச்சத்தில் சில்லிட வைத்தன. ஒரு தரம் கவினின் நண்பன் ஒருவன் அவளைத் தாண்டிய போது மனதில் நம்பிக்கை ஒளி வீச ஓடிச் சென்று “கவினைக் கண்டாயா?" என்று கேட்டாள். அவனும் “இல்லை" என்ற போது அப்படியே ஏமாற்றத்தில் மனம் துவண்டாள்.
அவனைக் கண்டு பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை தளர, கூடவே இனி அந்தக் குளிரில் முடியாது என்று கால்களும், கைகளும் கெஞ்ச… வீடு திரும்பினாள்.
சுந்தரேசன் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். ´எப்படி இந்த மனுசனால் முடிகிறது?´ என்ற வியப்பும், கோபமும் மனதை விள்ள கதிரையில் அமர்ந்தாள். அவளால் முடியவில்லை. அழுகையும், பயமும் அவளின் அமைதியைக் குலைத்தன. ´இந்தக் குளிரில் அவன் எங்கே போவான்! சொந்தம் என்று சொல்ல யாரும் இல்லாத ஊர். நண்பர்கள் வீடுகளுக்கும் இந்த நடுநிசியில் எப்படிப் போவது? குளிரில் உறைந்து விடுவானோ?´ அவளுக்கு நடுங்கியது. மீண்டும் சப்பாத்தையும், ஜக்கற்றையும் போட்டுக் கொண்டு வெளியில் படியில் இறங்கினாள்.
ஏதோ ஒரு நப்பாசையில் வெளிக்கதவைத் திறவாமல் கெலருக்கான(நிலவறை) படிகளில் இறங்கி, கீழே போனாள். அங்கும் அவர்களுக்கான அறையின் திறப்பு அவனிடம் இல்லை. ஆனாலும் ஒரு தரம் திறந்து பார்த்தாள். இல்லை. அவன் இல்லை. ஏமாற்றம் இன்னும் ஒரு படி அவளைச் சோர வைக்க அந்த வீட்டின் பிளாற்றுகளில் வசிக்கும் எல்லோருக்கும் பொதுவான சைக்கிள்கள் வைக்கும் அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தாள். அங்கும் ஒருத்தரையும் தெரியவில்லை. ஏதோ ஒரு உந்துதலில் இன்னும் உள்ளே போய்ப் பார்த்தாள்.
ம்.. உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு. அவன் இருந்தான். கூனிக் குறுகி குளிர் தாங்க முடியாமல் கைகளைக் குறுக்காகப் போட்டு தன்னைத் தானே கட்டிப் பிடித்த படி, கவின் நடுங்கிக் கொண்டு இருந்தான். இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகை அடக்க முடியாமல் பீறிட, சந்தியா குமுறிக் கொண்டு அவனைக் கட்டிப் பிடித்தாள்.
“ஏனடா, ஏனடா இப்பிடியெல்லாம் செய்யிறாய். இந்தக் குளிரிலை இப்பிடிக் கெலருக்கை(நிலக்கீழ் அறை) இருக்கிறது உனக்கு நல்லாயிருக்கோ? வா. மேலை வா."
“ம்.. நான் வர மாட்டன். நான் அமெரிக்காவுக்குப் போப்போறன்." வார்த்தைகள் இன்னும் திமிறலோடே வெளி வந்தன.
“முதல்லை மேலை வா. அங்கை போயிருந்து கதைப்பம்"
“இல்லை, அந்தாள் இருக்கிற இடத்துக்கு வரமாட்டன்."
“டேய், அவர் உன்ரை அப்பாவடா. அவர் உன்ரை நல்லதுக்குத்தான் சொல்லுறார்."
“அவர் அப்பாவே?"
“அதைப் பிறகு கதைப்பம். முதல்லை வா."
ஒருவாறு அவனை மேலே கூட்டிக் கொண்டு போய் படுக்க வைப்பதற்குள் சந்தியாவுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது.
அடுத்த நாள் காலையில் சுந்தரேசன் “என்ன, மோன் வந்திட்டாரே?" என்றான்.
“ம்..." என்றாள் சந்தியா. அவளுக்கு சுந்தரேசன் அப்படிப் பாராமுகமாகப் படுத்து விட்டதில் மெலிதான கோபம்.
“வேறையெங்கை போறது? வருவார் என்று எனக்குத் தெரியும். நீதான் சும்மா தேவையில்லாமல்..."
சந்தியா பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் வந்தது காணும் என்றிருந்தது அவளுக்கு.
சந்திரவதனா
3.4.2007
பிரசுரம் - ஐனவரி யுகமாயினி

Sirukathai
,
சந்திரவதனா
,
சிறுகதை
,
யுகமாயினி
Sunday, February 03, 2008
Wednesday, January 16, 2008
கேணல் கிட்டு

"கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்,
நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும்
எமது விடுதலை வரலாற்றின்
ஒரு காலத்தின் பதிவு"
கேணல் கிட்டு
வல்வை மண் தந்த - வீரத்
தமிழ்ப் பொட்டு!
வெல்வோம் நாம் என்று
நல்ல தமிழ் மண் மீட்கத்
துள்ளியெழுந்த தூய புலிவீரன் -
அவன் கிட்டு!
இல்லை என்ற சொல் துறந்து
கால் இல்லை என்று ஆன பின்னும்
தன் பணியை மண் பணியாய்
தன் நெஞ்சில் சுமந்தான் -
தன் நலம் விட்டு!
தலைவனுக்கு ஒரு கையாய்
தமிழ் மண்ணிற்கோ தளபதியாய்
நிலை இழந்த மக்களிற்கு நீதிபதியாய்
கலையுள்ளம் கொண்ட காளை - இவன்
வாழ்ந்த காலமதோ மிக மட்டு!
தாய் மண்ணைத் துறந்தது மட்டுமல்ல
தன் பெண்ணையும் துறந்திங்கு
அந்நிய மண்ணில் அவனிருந்தாலும்
எண்ணியதெல்லாம் ஈழமண் விடிவுதான்!
மண்ணைப் பொன்னாக்க
அவன் செய்த புண்ணியங்கள்
ஆயிரம் ஆயிரம்!
இதயம் பிழியும் இடர்கள் நேர்ந்து -
பன்னிரண்டு ஆண்டுகள்!
நெஞ்சம் மகிழ........தன் மண் நோக்கிப்
புறப்பட்ட மாவீரன்!
என்ன நினைத்திருப்பான்?
வங்கக் கடலலையும்
வழியனுப்பி வாழ்த்திசைக்க -
இந்தியமோ -
இன்னோர் இழிசெயலை
இருளில் திணித்து விட
நம் வீரர் தமக்காக வாழ்பவரல்லவே!
திண் வீரர் - மண் காக்க -
விண்ணை உடைத்தொருகால்
வீர இடிமுழங்க -
தண்ணென்ற நீரலையில்
தம்மைக் கரைத்தனரே!
விண் வீரன் - கிட்டு
நீ எங்கள் காவிய நாயகன்.
சந்திரா இரவீந்திரன்
இலண்டன்
Monday, December 31, 2007
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )