Tuesday, August 25, 2009

அமானுஸ்யங்கள்

விழிப்பு வந்து சில நிமிடங்களாகும் வரை அந்தக் கனவு நினைவில் வரவில்லை. வெளியில் இருந்து வந்த மண்வெட்டியால் வறுகி வறுகி இழுக்கும் ஓசை இரவிரவாக பனி கொட்டியிருப்பதை உணர்த்தியது. உறுமிக் கொண்டு செல்லும் கார்களின் ஓசைகள் நான் விழித்தேனோ இல்லையோ ஊர் விழித்து விட்டது என்பதைத் தெளிவு படுத்தியது. வீட்டுக்குள் குளிர்சாதனப்பெட்டியின் மெலிதான சத்தமும், மணிக்கூட்டின் டிக், டிக் சத்தமும், இன்னும் மின்சார இணைப்புடனான கருவிகளும் ஒருவித ஒழுங்குடனான ரிதத்துடன் ஒலித்துக் கொண்டே இருந்தன.

எட்டுமணி வரை கட்டிலில் இப்படிப் போர்த்திக் கொண்டு படுத்திருப்பது என்பது, அதுவும் ஒரு வெள்ளிக்கிழமை, ஐரோப்பிய வாழ்க்கையில் என்றேனும் அபூர்வமாகத்தான் நடக்கும். ஊரெல்லாம் ஒரு வைரஸ் காய்ச்சல். காய்ச்சல் என்று மட்டும் சொல்லி விட முடியாத படியான உடல் உபாதைகள். சில மாதங்களாகத் தொடர்ந்து கொண்டிருந்த இந்த வைரஸ் தொல்லையிலிருந்து நான் தப்பி விட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனாலும் அது என்னையும் கெட்டியாகப் பிடித்து விட்டது. கை வைத்தியத்தோடு சமாளித்து விடலாம் எனப் பார்த்து, இயலாத நிலையில் மருத்துவரை நாட வேண்டியதாகி விட்டது.

அதன் பலன் கணவரை வேலைக்கு அனுப்பி விட்டு நான் மீண்டும் போர்த்திக் கொண்டு படுத்து விட்டேன். நித்திரையை விட கனவுகள்தான் அந்த மூன்று மணித்தியாலங்களிலும் என்னை ஆட்கொண்டிருந்தன. இன்றைய அந்த அதிகாலைக் கனவுகளை விட அர்த்தராத்தியிரியில் கண்ட கனவு ஒன்று என்னை இன்னும் மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டே இருந்தது. நன்கு நினைவு படுத்திப் பார்த்தேன்.

அது எனது அண்ணன்தான். கனவிலே அவன் என்னை இறுகக் கட்டியணைத்தான். அதுவும் மூன்று தடவைகள் போல ஞாபகம். இறந்து போனவர்கள் பேயாக அலைவார்கள் என்று பயந்த காலங்கள் ஓடி ஏதாவது ஒரு வடிவிலாவது என்னிடம் வரமாட்டார்களா என்ற ஏக்கம் நிறைந்த காலங்களோடேயே வாழ்க்கை நகர்ந்தும், ஓடியும் கொண்டிருக்கிறது. 2000இல் மரணித்து விட்ட எனது அண்ணன் என் நினைவுகளில் எப்போதுமே இருப்பது போலில்லாமல் கனவுகளில் அவ்வப்போது மட்டும்தான் வருவான். அனேகமான கனவுகளில் மௌனமாக இருந்து விட்டுப் போய் விடுவான். எப்போதாவது கனவில் பேசியிருப்பானா என்பது இன்று வரை ஞாபகத்தில் இல்லை. எமது ஊர் வீட்டின் ஏதாவது ஒரு பகுதியிலோ அன்றி ஊரின் ஏதாவது ஒரு தெருவிலோ அவனோடு நானும் இருப்பது போலவும், நடப்பது போலவும் பல கனவுகள் பல முறை வந்துள்ளன. ஆனால் இப்படியொரு கனவு இதுதான் முதல் முறை. அதுவும் என்னை மிகுந்த வாஞ்சையோடு கட்டியணைத்தான். எனக்குள் இன்னும் ஆனந்தமாகவே இருந்தது.

யாரிடமாவது இந்தக் கனவு பற்றிச் சொல்ல வேண்டும் போல இருந்தது. அம்மாவைத் தொலைபேசியில் அழைத்துப் பார்த்தேன். தொடர்பு கிடைக்கவில்லை. விட்டு விட்டேன். நினைவில் அந்தக் கனவு இனித்துக் கொண்டே இருந்தது. கூடவே நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

மாலையில் எனது வேலைத்தோழி தொலைபேசியில் அழைத்தாள். எனது உடல்நிலை பற்றி விசாரித்து விட்டு தான் ஒரு கனவு சம்பந்தமான புத்தகம் வாங்கியிருக்கிறேன் என்றாள். உடனேயே நான் எனது கனவு பற்றிச் சொன்னேன். 'பொறு பொறு. உனது கனவின் அர்த்தத்தை நான் சொல்கிறேன்' என்றவள் புத்கத்தின் சில பக்கங்களைப் புரட்டி, ஏதோ ஒரு பக்கத்தில் நிலைத்து, 'உனது சகோதரனைக் கனவில் கண்டிருக்கிறாய். மிகவும் நல்ல சைகை அது...' என்றாள். இன்னும் தொடர்ந்து சொன்னாள்.

எந்த மூடநம்பிக்கைகளையும் தூக்கி எறிந்து விடும் என் மனதும் சில சமயங்களில் ஏதேதோ நம்பிக்கைகளில் சலனப் படத் தொடங்கியது என் வீட்டில் நடந்த முதல் மரணத்தின் பின்தான். இன்னும் கூட எதையும் நம்புவதில்லை என்றாலும் சில சைகைகளை நம்பாமல் இருக்கவும் முடிவதில்லை. அவ்வப்போது சில உணர்த்தல்கள் என்னையறியாமலே எனக்குக் கிடைத்திருக்கின்றன. அதை எக்காரணம் கொண்டும் மறுக்கவும் முடிவதில்லை.
என்ன.. அப்படி நல்லது நடந்து விடப் போகிறது..? தமிழீழம் கிடைத்து விடப் போகிறதோ..!

ஓரிரு நாட்கள் நகர்ந்தன. அந்தக் கனவு மட்டும் மறக்காமல் எனக்குள் தித்தித்துக் கொண்டே இருந்தது. நினைவுகள் மனதுக்குள் விரிந்து விரிந்து நான் எனது கற்பனை உலகில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன். ஜேர்மனி எனக்கு மறந்து போயிருந்தது. நான் எனது அண்ணனுடனும் மற்றைய உறவுகளுடனும் ஆத்தியடி வீட்டில்;, பருத்தித்துறையின் காற்றில் மிதந்து வரும் அதற்கேயுரிய வாசனைகளுடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். இடையிலே தேநீர் தேவைப்பட்டது போலும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து விட்டு குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து பாலை எடுக்கும் போது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. எப்படியோ தடுக்கி, கைகள் மேற்தட்டுடன் மோதி பாற்பெட்டி நிலத்தில் வீழ்ந்தது. நினைவுச் சிறகுகள் பட்டென்று அறுபட நான் சட்டென்று நியத்துக்கு வந்தேன். சமையலறை நிலத்தில் கிட்டத்தட்ட ஒரு லீற்றர் அளவுள்ள பால் ஓடிக்கொண்டிருந்தது. மனசுக்குள் சுருக்கென்றது.

பயமாக இருந்தது. நெஞ்சுக்குள் குளிர்வது போல இருந்தது. மீண்டும் மனதுக்கு எட்டாத ஏதோ ஒரு உணர்த்தல். இப்படித்தான், இதே மாதிரித்தான் அன்றும் ஒரு நாள் நடந்தது. அது 1997 இல் பழைய வீட்டில் நடந்தது. அன்றும் சமையலறைக்குள் பால் ஆறாய் ஓடியது. பின்னர் ஊரிலிருந்து அம்மாவின் தொலைபேசி அழைப்பு வந்தது. எண்ணிப் பதினைந்து நாட்களுக்குள் அப்பாவின் மரணம்.

சே... என்ன... நானா இப்படி... எனக்குள் கேள்வி எழுந்தது. அப்படியொன்றும் நடக்காது. ´காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தது போல...` மனதைச் சமாதானப்படுத்த முயன்றேன்.

சமையலறையைச் சுத்தம் செய்து முடித்த பின் தேநீருக்கான ஆர்வம் இருக்கவில்லை. அப்போதுதான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. அண்ணனின் மகன் பரதன் அந்த வெள்ளிக்கிழமை வன்னிக்குள் நடந்த போரில் வீரமரணம் அடைந்து விட்டான் என்று.

சந்திரவதனா
25.8.2009

Tuesday, August 11, 2009

சிதைவுகள்

நேற்று அவளைச் சந்தித்த போது அவள் கவலையாக இருப்பது போலவே தெரிந்தது. எனக்கு 9.30க்கு அப்பொயின்ற்மென்ற். அவசரமாக நடந்து கொண்டிருந்த போதே அவள் தனது 7வயது மகனுடன் என் எதிரில் வந்தாள். அதே வேகத்தில் நடந்தால்தான் குறித்த நேரத்தில் போகவேண்டிய இடத்தை நான் அடைவேன்.

ஆனாலும் அந்த முகத்தைப் பார்த்த பின் ஒரு ´ஹலோ´வுடன் சாதாரணமாகத் தாண்டிவிட என்னால் முடியவில்லை.

“எப்பிடி இருக்கிறிங்கள்?”

“பரவாயில்லை அக்கா”

சொன்ன விதத்திலேயே ஏதோ ஒரு சோகத்தின் அழுத்தம்.

“வேலை செய்யிறிங்கள்தானே?”

“அந்தச் சீனா ரெஸ்ரோறன்ற் வேலையை விட்டிட்டனக்கா? ஆனால் உதிலை இருக்கிற ரெஸ்ரோறன்றிலை இப்ப வேலை செய்யிறன். சலாட் கழுவுற வேலைதான். 8யூரோ சம்பளம் தாறான். பரவாயில்லை. மக்டொனால்ஸ், சீனாக்கடை இரண்டிலையும் எண்டால் நாள் முழுக்க வேலை சேய்யோணும். இதெண்டால் 5மணித்தியாலம்தான். அதுதான் இது எனக்கு வசதியா இருக்கு. கொஞ்சநேரமெண்டாலும் வீட்டிலை பிள்ளையளோடை நிற்கலாம்.”

கடைசியாக என்னைச் சந்தித்த போது ஏதாவது வேலை எடுத்துத் தரும்படி கேட்டிருந்தாள். இப்ப அந்த வேலையும் இருக்கிறது. ஆனாலும் அவளிடத்தில் ஏதோ ஒரு சோர்வு.

“சரி, சந்தோசமாயிருங்கோ. நான் போகோணும்.”

“அக்கா, நான் இந்தியாவுக்குப் போப்போறன்.”

“ஊருலாவா?”

“இல்லை, இல்லை. இவன் சின்னவனையும், மகளையும் அங்கை கொண்டு போய் விடப்போறன். இங்கையிருந்து கெட்டுப் போடுவினம்.”

“எந்த மகளை?”

“இரண்டாவதை”.

அவளுக்குப் 12வயது என்பது எனக்குத் தெரியும்.

“என்ன? 12வயது மகளை அங்கை கொண்டு போய் விடப் போறிங்களே. இவருக்கும் 7 வயதுதானே. அம்மா இல்லாமல்...”

“ஓ.. கொஞ்சநாளைக்கு நிண்டு எல்லாம் பழக்கிப் போட்டு வரப்போறன். அங்கை என்ரை தங்கச்சி குடும்பமா இருக்கிறாள். அவளோடைதான் விடப்போறன்.”

“ஏன்?”

“இங்கையிருந்தால் பிள்ளையள் கெட்டுப் போடுங்கள். மூத்தவன் சிகரெட் எல்லாம் குடிக்கத் தொடங்கீட்டான். பெடியளோடை பார்ட்டி, டிஸ்கோ எண்டு போயிட்டு குடிச்சிட்டும் வாறான்.”

எனக்கு அவனையும் தெரியும் 19வயது மகன்.

"அதுக்காண்டி இந்தப் பிள்ளையளைத் தனியா யாரையும் நம்பி இந்தியாவிலை கொண்டு போய் விடப் போறிங்களே? அங்கை இந்தியாவிலை ஒருதரும் சிகரெட் குடிக்கிறேல்லையே? அங்கையுள்ள பிள்ளையளும் இதுகளைப் பழகித்தானே வைச்சிருக்குதுகள்."

“இல்லையக்கா, இங்கை கூட.”

இன்னும் சொல்லிப் பார்த்தேன் அவள் ஏற்பதாய் இல்லை. நடுரோட்டில் அழுது விடுவாள் போலிருந்தது..

“என்ன இருந்தாலும் யோசிச்சுச் சேய்யுங்கோ. பொம்பிளைப்பிள்ளை. அதுவும் 12வயசு. அம்மா இல்லாமல் தனிய இன்னாரு இடத்திலை... அதோடை உங்கடை கணவரும் மற்ற இரண்டு பிள்ளையளும் இங்கை, நீங்கள் இந்த இரண்டு பேரோடையும் அங்கேயும் இங்கேயும் எண்டு...”

நான் என்ன சொன்னாலும் அவள் மாற மாட்டாள் போலத் தெரிந்தது. எனக்கு நேரமாகியது. நான் விடைபெற்றேன்.

Friday, June 26, 2009

கவிதைகளால் என்னோடு பேசியவன்



அன்பையும், பாசத்தையும் பொழியும் ஒரு சில கவிதைகளோடு, பல போர்க்காலக் கவிதைகளையும், மாவீரர் சம்பந்தமான கவிதைகளையும் கொண்டு,
92 கவிதைகளுடன் வெளிவருகிறது தீட்சண்யம் கவிதைத் தொகுப்பு.
எழுத முனையும் போதெல்லாம் வார்த்தைகளுக்கு முன் முந்திக் கொண்டு பொலபொலவென்று கொட்டி விடுவது கண்ணீர்த்துளிகள்தான். அந்தத் துளிகளில் பிரிய உறவொன்று இந்த உலகத்திலேயே இல்லை என்ற சோகம் நிறைந்திருக்கிறது. மரணத்தின் வலி ஒட்டியிருக்கிறது. எத்தனை தரந்தான் கண்ணீராகக் கொட்டி விட்டாலும் விட்டுப் போகாது மனதின் ஒரு ஓரமாக ஒட்டியிருக்கும் சோகத்தின் வலி அது.
அண்ணன்..
கூடப் பிறந்தவன். என்னோடு மிகப்பிரியமாக இருந்தவன். இனி அவன் இல்லை என்று ஆன பின்னும் நினைவுகளோடு எனக்குள்ளே வாழ்பவன். இன்று இந்த உலகத்தின் எந்த அந்தத்திலும் அவன் இல்லை என்ற உண்மை ஒரு வலியாக விவரிக்க முடியாத வேதனையாக அடிமனதின் ஆழத்தில் பதிந்து கிடக்கிறது. அதை எந்தப் பொழுதிலும் தூக்கி எறிந்து விட முடியவில்லை. இறந்து விட்டான். போய் விட்டான். இனிக் கிடைக்க மாட்டான்... என்ற பல ஏமாற்றங்களையும் தாண்டி அவனோடான நினைவுகள் மீண்டும் மீண்டுமாய் மனதுள் விரிந்து கொண்டிருக்கின்றன. இன்று மட்டும் என்றில்லை. இந்த ஒன்பது வருடங்களில் பல பொழுதுகளில் அவனுடனான சின்னச் சின்ன சம்பவங்கள் கூட மனசுக்குள் எட்டிப் பார்த்து கண் சிமிட்டியிருக்கின்றன. சில சிறியதாகத் தொடங்கி பெரிய படமாக விரிந்தும் இருக்கின்றன. அவைகளில் சில சுகமானதாகவும், சில தாங்க முடியாத சோகத்தின் கனமானதாகவும் முடிந்திருக்கின்றன.

இப்போதும் அப்படித்தான்.
அவனது கவிதைகளைத் தொகுக்கும் போதெல்லாம் நான் எனக்குள் மருகி, அவன் நினைவால் உருகி நொய்ந்து போயிருந்தேன். அதனால்தானோ என்னவோ 2002இல் பதிவாக்க நினைத்த இந்தத் தொகுப்பு பதிவாவதற்கு 2009 வரை சென்று விட்டது.

2002இல் நினைத்தது 2009இல் நிறைவேறுகிறது.

அப்போது 2002 இலேயே இதில் பல கவிதைகளைத் தொகுத்து மாதிரி வடிவமாக்கி வன்னி வரை கொண்டு சென்றேன். அதன் பிரதிகளை வன்னியில் மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன், அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், புலிகளின் குரல் ஜவான், மறைந்த கவிஞர் நாட்டுப்பற்றாளர் நாவண்ணன், செஞ்சோலை ஜனனி ஆகியோருக்குக் கொடுத்தேன். எல்லோருமே இது புத்கமாக வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டினார்கள்.
அங்கு கிடைத்த மேலதிக கவிதைகளையும் இத்தொகுப்பில் இணைத்து, மீண்டுமாகச் செய்து விட்டு அனுப்புவதாகக் கூறி ஜேர்மனி திரும்பிய பின்னும் கவிஞர் நாவண்ணன் இதில் மிகுந்த ஆர்வம் கொண்டு முனைப்போடு செயற்பட்டார். இலக்கியச் செல்வர் முல்லைமணி (வே.சுப்பிரமணியம் S.l.E.A.S), ஆசிரியர் திரு.க.ஜெயவீரசிங்கம் (BA) வற்றாப்பளை போன்றோரிடம் அணிந்துரை, முகவுரை எல்லாம் எழுதுவித்து வாங்கி எனக்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் அந்த நேரத்தில் கவிஞர் நாவண்ணன் அவர்கள் வாழும் போது இந்தப் புத்தகத்தை பதிப்பித்து வெளியிடுவதற்கான பொசிப்புகள் ஏனோ இல்லாமற் போய் விட்டன.
இந்தத் தொகுப்பை மீண்டும் மீண்டுமாய் பல தடவைகள் படித்து, தொகுத்து, மீண்டும் வடிவமைத்து பொங்கி வரும் சோகத்தோடும், அணை உடைக்கும் கண்ணீரோடும் பதிப்பாக்குகிறேன்.

சுவடி பதிப்பகத்தாரின் தயாரிப்பில்,
´மனஓசை` வெளியீடாக
வெளிவருகிறது ´தீட்சண்யம்` கவிதைத் தொகுப்பு


THEEDCHANYAM (Poems)
Author: S.T.Premarajan (Theedchanyan)
(Thiyagarajah Premarajan)

First Edition: May 2009
© by Manaosai Verlag
© Chandravathanaa Selvakumaran
Email: chandra1200@gmail.com
Compilation: Chandravathanaa Selvakumaran
Illustrations & Cover design: Muunaa
Production: Chuvadi, Chennai - 600 005, India
Printed by:
Chennai Micro Print (P) Ltd, Chennai – 29

ISBN- 978-3-9813002-1-5

Tuesday, May 26, 2009

அமைதியற்ற நாட்கள்


"சந்திரா, மெதுவாக... ஏன் இவ்வளவு வேகமாக உழக்குகிறாய்? உனது காலுக்கு இது நல்லதல்ல."

மெலானியின் அன்பான அதட்டல் என்னை மீண்டும் உடற்பயிற்சி நிலையத்துக்குள் அழைத்து வந்தது. சைக்கிள்கள், ரெட்மில்லர்களுடன், இன்னும் ஏதேதோ சாதனங்கள் இரைந்து கொண்டிருந்தன. வேர்வைகள் வடிய காதுக்குள் ஐபொட்டின் வயரைச் சொருகி பாட்டுக்களை ரசித்தபடி எல்லோரும் தத்தமது உடலுக்கு ஏற்ற பயிற்சிகளுடன் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சில சிரிப்புகள், சில முகஸ்துதிகள், அனைத்தையும் மீறிய இரைச்சல்கள், கண்ணாடிச்சுவரினூடு தெரியும் கிம்னாஸ்ரிக் வகுப்பாரின் அசைவுகள்.. எல்லாமே என் கண் முன்னே நடந்து கொண்டிருந்தாலும் நான் வேறொரு உலகத்தில் இருந்தேன். அது 19.5.2009 இன் காலைப்பொழுது.

´எங்கள் தலைவர் கொல்லப்பட்டு விட்டாராம்.` அதை நான் நம்பவில்லை. ஆனாலும் மனதில் அமைதியில்லை. அவரது மகன் சார்ள்ஸ் என்று சொல்லி ஒருவர் கொல்லப்பட்டு விட்டார் என்றார்களே! அது உண்மையிலேயே சார்ள்ஸ்தானா? மனதுக்குள் பதிந்து வைத்த இரண்டு படங்களையும் மனம் மீண்டும் மீண்டுமாய் ஒப்பீடு செய்து பார்த்துக் கொண்டே இருந்தது.

´ஏன் எல்லோருமே பொய் சொல்கிறார்கள்? ஏன் எம்மையெல்லாம் கொல்லாமல் கொல்கிறார்கள்?`

சரியாக உடற்பயிற்சியைச் செய்ய முடியவில்லை. மெலானியும், குளோரியாவும் என்னை பல தடவைகளாக எச்சரித்து விட்டார்கள். ´இருப்பது, அசைவது, சைக்கிளை உழக்குவது என்று எல்லாவற்றையுமே நிதானமிழந்து செய்து கொண்டிருக்கிறேன்` என்றார்கள். "சந்திரா, உனக்கு இன்று என்ன நடந்தது?" என்று கேட்டார்கள். மெலானி வந்து சத்திரசிகிச்சைக்குள்ளான முழங்காலை அழுத்திப் பார்த்து விட்டு இன்று இன்னுமொரு புதிய பயிற்சி தொடங்க வேண்டுமென்று சொல்லி இன்னொரு இயந்திரத்திடம் என்னை அழைத்துச் சென்றாள். 70கிலோக்களை வைத்து விட்டு சில மாற்றங்களைச் செய்து விட்டு அந்த இயந்திரத்தில் படுத்தபடி காலை ஊன்றி அழுத்தச் சொன்னாள். எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வீட்டுக்குப் போய்விடலாம் போலிருந்தது.

70கிலோ... "என்னால் முடியாது. கொஞ்சம் குறைத்து விடு" என்றேன். 50கிலோ ஆக்கினாள். பரவாயில்லாமல் இருந்தது. Menuscus ஒப்பரேசன் செய்யப் பட்டதிலிருந்து தற்போது ஒரு வருடமாக இதே ரோதனை.

அவர்கள் அன்பும், சிரிப்பும் என்னைத் தழுவினாலும் அன்றைய பொழுதில் என்னால் எதையும் ரசிக்க முடியவில்லை. வீட்டுக்கு ஓடி விடவேண்டும் என்பதே நினைப்பாயும், முனைப்பாயும் இருந்தது.

பயிற்சி முடித்து, உடைமாற்றும் அறையில் பெண்களின் அரட்டைகளுக்கும், சிரிப்புகளுக்கும் நடுவில் குளித்து, வெளியில் வந்த போது வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. காரை புகையிரதநிலையத்தில் விட்டு விட்டு பேரூந்தைப் பிடிக்க வேண்டும். எனது கணவர் மாலை வேலையால் வரும் போது அவருக்குக் கார் வேண்டும்.

இடையிலே எந்த இடையூறுகளும் வராவிட்டால் 12மணி பேரூந்தைப் பிடித்து விடலாம். விரைந்தேன். ஒரு செக்கன் பிந்தியிருப்பேன் போலத் தெரிந்தது. நானும் காரை நிற்பாட்ட, பேரூந்து புறப்படுவதற்கான சமிக்ஞையைச் செய்தது. அடுத்த பேரூந்துக்கு 20நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.

ம்.. இந்த நேரத்தில் தொலைபேசியில் முடிக்க வேண்டிய சில விடயங்களை முடித்து விடலாம் என்று தோன்ற, கைத்தொலைபேசியினூடு வேலையிடத்துக்கு அழைப்பை மேற்கொண்டு அடுத்தநாள் வேலைக்கு வர ஒருமணிநேரம் பிந்தலாம், என்பதைச் சொன்னேன். அடுத்த சனிக்கிழமை குடும்ப நண்பர் ஒருவருக்கு எமது வீட்டில் சாப்பாடு என்பதை மீண்டுமொரு முறை உறதிப் படுத்தலாம் என்ற நினைப்பில் அவரை அழைத்தேன்.

அந்த ஜேர்மனிய நண்பர்தான் மீண்டும் அந்த இடியைத் தூக்கிப் போட்டார்.
"கேட்டனியா செய்தியை" என்றார்.

"என்ன, சார்ள்ஸ் அன்ரனியின் செய்திதானே? அது சார்ள்ஸ் இல்லை. இரண்டு போட்டோக்களையும் ஒப்பிட்டுப் பார்" என்றேன்.

"இல்லையில்லை உங்கள் தலைவர் இறந்து விட்டதாக எல்லாத் தொலைக்காட்சிகளும் அவர் உடலைக் காட்டுகின்றன."

"இல்லை, இருக்காது."

"இல்லை காட்டுகிறார்கள். இப்போதும் காட்டுகிறார்கள். அது உங்கள் தலைவரின் உடல்தான்."

சாப்பாட்டுக்கு வருவது பற்றிய உறுதிப்படுத்தலைச் செய்து கொண்டு தொலைபேசியை வைத்து விட்டேன்.

´இருக்காது. அவ்வளவு சுலபமாக எங்கள் தலைவரை.... இவர்களால் முடியாது.`

தலைவர் நாட்டில் இல்லை. அவர் என்றைக்கோ, வேற்று நாட்டுக்குப் போய் விட்டார்... என்றெல்லாம் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருந்தார்களே!

இப்போது...

என்ன நடந்தது...?

- தொடரும் -

Monday, April 27, 2009

அக்கரைப்பச்சைகள்

ரொறென்றோ மாநகரின் வீதியின் இருமருங்கிலும் கட்டிடங்கள் வானளாவ எழுந்திருக்க, வீதிகள் வாகனங்களால் நிறைந்திருந்தன. என் மகன் கார் கண்ணாடிகளினூடே உலகப் பிரசித்தி பெற்ற CN ரவரை தனது கமராவுக்குள் அடக்கிக் கொண்டிருந்தான். அவன் இப்படித்தான். கமரா கையில் கிடைத்தால் போதும், பாலுமகேந்திரா ஆகி விடுவான்.

உயரங்களில் அழகு பிரதிபலிக்க, கீழே சாலையோரங்களில் உருண்டு கிடந்திருந்த கோலா ரின்களும், உருட்டிப் போடப்பட்டிருந்த அழுக்குப் பேப்பர்களும் கனடா மீதான எனது பிரமைகளை ஒவ்வொன்றாகக் களைந்து கொண்டிருந்தன. ´ஜேர்மனியின் சுத்தத்துக்கும், ஒழுங்குகளுக்கும் மத்தியில் கனடா எந்த மூலைக்கு வரும்.` மனம் தன்னையறியாமலே ஒப்பீடு செய்யத் தொடங்கியது.

தற்போதெல்லாம் எந்த நாட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாலும் சட்டென்று இப்படியொரு எண்ணம் தோன்றி விடுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. எனது தாய் நாட்டுக்கு அடுத்த படியாக நான் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜேர்மனியை நேசிக்கிறேன் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஆனாலும் எம்மவரில் பலர் ஜேர்மனியில் வதிவிட உரிமை கிடைத்ததும் லண்டனுக்கு ஓடி விடுவதும், கனடாவுக்கு ஓடி விடுவதும் நடக்காமலில்லை. புகலிட அந்தஸ்து கிடைக்காது என்று தெரியும் பட்சத்தில் இன்னொரு நாட்டுக்கு ஓடி, தம்மைக் காத்துக் கொள்ள வேண்டியது அவசியந்தான். ஆனால் புகலிட அந்தஸ்துக் கிடைத்த பின் வருடக்கணக்காக வாழ்ந்த நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு ஓடுவது ஏதோ அக்கரைப்பச்சைத் தனமாகவே எனக்குத் தெரிந்தது.

மல்லிகாவும் அப்படி குடும்பமாக ஜேர்மனியை விட்டு ஓடிப் போனவர்களில் ஒருத்திதான்.

அது 1993ம் ஆண்டின் ஓர் நாள் என்றுதான் எனக்கு ஞாபகம். வேலை முடிந்து வீடு திரும்பும் போது இரவு எட்டு மணிக்கு மேலாகியிருந்தது. ரீன்ஏஜ் பருவக் குழந்தைகள் வீட்டில். வேலை முடிந்து விட்ட ரிலாக்ஸ் மனதில் இருந்தாலும் என் வரவுக்காய் காத்திருக்கும் பிள்ளைகள் பற்றிய கவலைகள், யோசனைகள், பதட்டங்கள்... என்னிடம் இருந்தன.

வீட்டுக்குள் நுழைந்த போது எனது சிந்தனைகளோடு ஒட்டாது வீடு இருந்தது. வரவேற்பறை கலகலப்பால் நிறைந்திருந்தது. மல்லிகாவும், அவளது கணவரும், அவர்களது ஆறு குழந்தைகளும் சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றார்கள். எனது குழந்தைகள் தமது படிப்பு, மற்றைய விடயங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டு உடைக்கு மாறி, எனது குழந்தைகளின் அன்றைய பொழுதுகள், தேவைகள் பற்றிய அளவளாவல்களுக்கான எனது சுதந்திரத்துடன் கூடிய சின்ன சந்தோசம் சட்டென என் கனவுகளிலிருந்து கலைய அவர்களது கலகலப்புடன் நானும் கலந்து கொண்டேன்.

மல்லிகா குடும்பத்தினரது திடீர் விஜயம், அதுவும் முன்னறிவுப்பு ஏதுமின்றிய அந்த வரவு எனக்குள் கேள்விக் குறியாகவே குந்தியிருந்தது.

"ஏதாவது குடிச்சனிங்களோ? ரீ போடட்டோ?" என்ற போது எனது கணவர்
அவசரமாக "பிறிட்ஜ் க்குள்ளை இருந்து இறால் பக்கற் எடுத்து வைச்சிருக்கிறன்" என்றார்.

´ம்.. சமைக்க வேண்டும். சாப்பிடாமல்தான் வந்திருக்கிறார்கள்.`

அந்த நேரத்தில் சமைக்க வேண்டுமென்பது எனக்குச் சுமையாகவே தெரிந்தது. பிள்ளைகளுக்கும், கணவருக்குமான உணவை, காலை வேலைக்குப் பின் சமைத்து வைத்து விட்டே மாலை வேலைக்குச் சென்றேன். இப்போது எனக்குத் தேவையாக இருந்தது பிள்ளைகளையும், கணவரையும் கவனித்து விட்டு ஒய்யாரமாக எனது சோபாவில் அமர்ந்து ஒரு தேநீர் அருந்துவதே. இருந்தாலும், மனசின் சோர்வை வெளியில் தெரியவிடாமல் சில நிமிடங்கள் அவர்களோடு அளவளாவி விட்டு, எழுந்து குசினிக்குள் சென்றேன்.

பின்னால் தொடர்ந்து வந்த கணவர் "அவையள் நாளைக்கு இரவு கனடாவுக்குப் புறப்படுகினமாம். திரும்பி வாற எண்ணம் இல்லை. சொல்லிப் போட்டுப் போகத்தான் வந்திருக்கினம்" என்றார்.

எனது சோர்வு, களைப்பு எல்லாம் சட்டென என்னை விட்டுப் பறந்தன. நம்ப
முடியாதிருந்தது. ஓரிரு தடவைகள் மல்லிகா கனடா பற்றி அங்கலாய்த்திருக்கிறாள்தான். எல்லாம் வெறும் பேச்சுக்குத்தான் என்று நினைத்திருந்தேன். ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்கும் ஆறு பிள்ளைகளின் படிப்புகள், நட்புகள், இன்னும் எத்தனையோ விடயங்கள்.. எல்லாவற்றையும் குழப்பிக் கொண்டு புறப்படுவாள் என்ற எண்ணம் எனக்குக் கனவிலும் வந்ததில்லை.

"புட்டு விருப்பமோ, இடியப்பம் விருப்பமோ?" என வெளியில் சென்று மல்லிகாவைக் கேட்டேன். "இடியப்பம் எண்டால் இதுகள் வாயிலையும் வையாதுகள்" என்றபடி அவளும் எழுந்து குசினிக்குள் வந்தாள்.

"கனடாவுக்குப் போப்போறம். எல்லாம் சரி வந்திட்டுது. நீங்களும் இங்கை இருந்து என்ன செய்யப் போறியள். வெளிங்கிடுங்கோ. ஒண்டாப் போவம்" என்றாள்.

"ம்... கும் என்னாலை ஏலாது. ஏழு வருசங்கள் இங்கை வாழ்ந்திட்டம். பிள்ளையள் இங்கை படிக்கினம். இதையெல்லாம் குழப்பிக் கொண்டு..."

"என்ன சொல்லுறிங்கள்? நீங்கள் எத்தனை வருசமா வாழ்ந்த உங்கடை நாட்டையும், ஊரையும் விட்டுப் போட்டு வந்தனிங்கள். இது பெரிய விசயமே? உங்கடை அவர் நீங்கள் ஓமெண்டால் வருவாராம். உங்களை சமாளிக்கிறது என்ரை பொறுப்பெண்டு சொல்லிட்டார். உங்கடை கையிலைதான் இருக்கு. வாங்கோ"

எனக்குத் தெரியுந்தானே எனது கணவரைப் பற்றி. தனக்கு பிடிக்காத ஒன்று என்றால் என்னைச் சாட்டி விட்டு தான் நல்லபிள்ளைக்கு இருந்து விடுவார். பரவாயில்லை.

இருப்பதில் நிலைப்படுவதிலேயே பிரியம் கொண்டவள் நான். அங்கு இங்கு என்று தாவுவதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை. அப்படி இருக்கும் போது நாடு விட்டு நாடு பாய என் மனத்தில் துளி எண்ணமும் இல்லை.

'போனால் இலங்கை. இருந்தால் ஜேர்மனி' இதற்கு மேல் கேட்க வேண்டாம் என்ற விதமாக, திடமாக எனது மறுப்பைத் தெரிவித்தேன். மல்லிகாவுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. எப்படியாவது கதைத்து என்னை மாற்றலாம் என்ற அவளது நம்பிக்கை தளர்ந்ததில் அவள் முகம் வாடிப் போயிற்று.

பிட்டும், இறால் பிரட்டலும், மதியம் வைத்த போஞ்சியும், கத்தரிக்காய் வதக்கல் குழம்பும்.. என்று எல்லோரும் ஒரு பிடிபிடித்தார்கள். எனது குழந்தைகளுக்கும் மல்லிகாவின் குழந்தைகளோடு அரட்டை அடிக்க முடிந்ததில் வலுவான சந்தோசம். அவர்கள் புறப்பட இரவு 11மணிக்கு மேலாகி விட்டது.

வாசலில் நின்றும் "நல்லா யோசிச்சுப் போட்டு நாளைக்குப் போன் பண்ணிச் சொல்லுங்கோ. நல்ல சந்தர்ப்பத்தை விட்டிடாதைங்கோ" என்றாள் மல்லிகா.

´யோசிக்க எதுவுமே இல்லை. எனது முடிவு ஜேர்மனி அல்லது இலங்கைதான். இதில் எந்த மாற்றமும் இல்லை` என்பதை நான் சொல்ல நினைத்தும் சொல்லாமலே கையசைத்து விடை கொடுத்தேன்.

இந்த மல்லிகா வீட்டை நோக்கித்தான் நாம் கனடாவின் வீதியொன்றில் பயணித்துக் கொண்டிருந்தோம். அவர்கள் ஜேர்மனியில் இருந்த போது எனது கணவர்தான் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி சென்றிருக்கிறார். மல்லிகாவின் கணவரும், எனது கணவரும் ஏதோ ஒரு அமைப்பு ரீதியான நண்பர்கள். நான் ஒரேயொரு தடவைதான் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். ஆறு பிள்ளைகள் உள்ள பெரிய குடும்பம். மல்லிகாவைப் போலவே அழகான குழந்தைகள். வீடு விலையுயர்ந்த பொருட்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஆனாலும் எனது ரசனைக்குள் அகப்படாத ஏதோ ஒரு குப்பைத்தனம். மூலைகள், முடுக்குகளில் எல்லாம் கவனம் செலுத்தவில்லை என்று எண்ணும் படியாக சிலந்திப் பின்னல்கள். ஆங்காங்கு எறும்புகளின் ஊர்வலம். குசினிக்குள் முற்றுமுழுதாகக் கரப்பான் பூச்சிகளின் இராச்சியம்.

"ஏன்..?"
தாங்க முடியாமல் கேட்டு விட்டேன்.

"அது தமிழ் ஆட்கள் எல்லாற்றை வீட்டிலையும் இருக்கும். அதுக்கு ஒண்டும் செய்யேலாது" என்றாள் மல்லிகா.

ஊரில் கரப்பான் பூச்சி தவிர்க்க முடியாததாய் இருக்கலாம். ஜேர்மனியில் அப்படியல்ல. ஜேர்மனியர் யாருடைய வீட்டிலும் கரப்பான் பூச்சியைக் காணவே முடியாது. இப்படியானவற்றை அழிப்பதற்கான மருந்துகளும், வசதிகளும் இங்கு ஏராளம். வீட்டுக்குத் திரும்பும் போது எனது உடைகளோடு ஏதாவது வந்து விடுமா என்ற பயம் எனக்குள்ளே இருந்தது.

இனிமையான ஒரு சந்திப்பைப் பற்றிய கனவுகளோடு அந்தக் கரப்பான் பூச்சிகளின் ஊர்வலமும் தவிர்க்க முடியாமல் நினைவில் வந்து கொண்டே இருந்தது. மூன்று வருடங்களின் பின் சந்திக்கப் போகிறோம். எப்படி இருப்பார்கள். பிள்ளைகள் வளர்ந்திருப்பார்களோ... என்ற பல கேள்விகளுடன் அவர்கள் வீட்டைச் சென்றடைந்தோம்.

வரவேற்பு இனிமையாக, சந்தோசப் படுத்தியது. மல்லிகா எப்போதும் போல் அழகாகவே இருந்தாள். பிள்ளைகள் ஒரு படி வளர்ந்திருந்தார்கள்.

தோசை, இட்லி, பிட்டு.. என்று சாப்பாடு அமர்களமாக இருந்தது. சாப்பிட்டு விட்டுச் சோபாவில் அமர்ந்த போதுதான் கவனித்தேன், காலடியில் கரப்பான் பூச்சி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.

திடீரென மகன் கீச்சிட்டான். பார்த்தால் சுவரில் எனது தலைக்கு மேலே கரப்பான் பூச்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.

சந்திரவதனா
ஜேர்மனி
13.2.2009

Saturday, April 11, 2009

கவனயீர்ப்பு போராட்டங்களும் உண்ணாநோன்புகளும்

எம் தமிழ்மக்கள் படும் துன்பங்களுக்கு ஒரு விடிவு வேண்டி, புலம்பெயர் தமிழர்களால் நாடு தழுவியதான‌ கவனயீர்ப்பு போராட்டங்களும் உண்ணாநோன்புகளும்.

பிரான்சில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிச்சுவர் பகுதியில் இடம்பெற்று வரும் இந்த போராட்டத்தில் நான்கு இளைஞர்கள் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்

இத்தாலி மிலானோ நகரில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 3 மணி வரை ஐரோப்பிய பாராளுமன்ற இத்தாலி கிளை அமைந்துள்ள அலுவலகத்திற்கு அண்மையிலுள்ள திடலில் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு மிகவும் பதட்டமான சூழ்நிலையில் இடம் பெற்றுள்ளது

டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்கேக்கனில் வெளிவிவகார அமைச்சின் சதுர்க்கத்தில் 7 ஆம் திகதி திங்கள் அன்று மு.ப. 11 மணியளவில் நம் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு மூன்றாவது நாளான இன்றும். டென்மார்க்கில் தொடரும் கவனயீர்ப்பு: ஆறு பேர் உண்ணாவிரதப் போராட்டம்

நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்களால் தொடர் போராட்டம் நடாத்தப்பட்டது தாயகத்தில் உடனடியாகப் போரை நிறுத்தச்சொல்லி நேற்றும் ஐந்தாவது நாளாக..

சுவிஸ் ஜெனீவா,பேர்ண், சூரிச் நகரங்களில் தமிழ் மக்களால் தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டங்கள் அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுப்பும் நோக்குடன் சுவிஸ்சில் கடந்த 6ஆம் திகதி பேர்ண், சூரிச்சில் தொடங்கிய கவனயீர்ப்பு போராட்டங்கள் நேற்றும் பல மாநிலங்களில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜெனீவா ஜ.நா முன்றலிலும, பேர்ண் பாராளுமன்ற பிரதான தொடரூந்து நிலையத்தை அண்மித்த பகுதியிலும் தமிழ் மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை நிகழ்த்துகின்றனர்.

தென்னாபிரிக்கவில்: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு மா.க. ஈழவேந்தன் அவர்கள் தன்னுடைய உண்ணாநோன்பை இரண்டவாது நாளாக தென்னாபிரிக்க டேர்பன் நகரில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். தன்னுடைய கோரிக்கைகளை சர்வதேச சமூகம் பரிசீலிக்கும் வரைக்கும் தான் இந்தப் போராட்டத்தைத் தொடரப் போவதாகத் தெரிவித்தார்.

சுவீடனில் நடக்கும் தொடர் போராட்டத்தில் இந்திய தூதரக வாசலின் மத்தியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சுவீடன் காவற்துறையினர் பலர் சம்பவ இடத்துக்கு வந்து பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் வளங்கினர்.

கனடாவில்: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கனேடிய தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாகவும், அதனை உடனடியாக தடுத்து நிறுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது. ஜனநாயக நாடு என்ற ரீதியில் சட்டரீதியாக நடைபெற்று வரும் எந்தவொரு போராட்டமோ அல்லது ஆர்ப்பாட்டமோ தடை செய்யப்படமாட்டாதென கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

நியூயோர்க் மாநகரில்: விடுதலைப் புலிகளே தமிழர் பிரதிநிதிகள், நியூயோர்க் நகர மும்முனை ஆர்ப்பாட்டங்களில் தமிழர்கள் முழக்கம். நியூயோர்க் மாநகரில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட நீராகாரம் கூட அருந்தாத உண்ணாநிலைப் போராட்டம் மூன்று நாடுகளின் ஐ.நா. நிரந்தர வதிவிட பிரதிநிதிகளின் அலுவலகங்களின் முன்பாக தொடர்ச்சியாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டங்களின் பின்னர் நேற்று வியாழக்கிழமை முடிவுக்கு வந்தது.

பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருப்பவர்களில் ஒருவரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிற்கு எதிர்வரும் புதன்கிழைமை அழைத்துச் செல்ல பிரித்தானிய அரசாங்கம் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Wednesday, February 11, 2009

வீரமரணம் (கப்டன் மயூரன்)


மயூரன்(பரதன் பிறேமராஜன்) களப்பலியானார்.

5.2.2009 அன்று நடைபெற்ற மோதலில் மயூரன்(பரதன் பிறேமராஜன்) களப்பலியானார்.

மயூரன்(பரதன்), பிறேமராஜன்(கவிஞர் தீட்சண்யன்), மஞ்சுளா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், ஜனகன் (France), கௌசிகன், தாட்சாயணி ஆகியோரின் அன்புச் சகோதரனும், திரு+திருமதி தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் (ஆத்தியடி, பருத்தித்துறை) அன்புப் பேரனும் ஆவார்.

இவர் வற்றாப்பளை முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், நிரந்தர வதிவிடமாகவும் கொண்டவர்.

தகவல் - புலிகளின் குரல்

Sunday, February 08, 2009

இலவசம்

தபால்கள் கொணர்ந்து தருவதாலேயே தபாற்காரன் மேல் நட்பாயிருந்த எனக்கு அன்று ஏன்தான் தபாற்காரன் வந்தானோ என்றிருந்தது. விடுமுறையும் அதுவுமாய்.. பிள்ளைகளும் வீட்டில் நிற்கும் நேரம் பார்த்து... அந்தக் கடிதம் வந்ததில், இருந்த சந்தோசமெல்லாம் வடிந்து போயிற்று.

பிள்ளைகளுக்கு விடுமுறை என்றால் நானும் வேலைக்கு விடுப்பு எடுத்து வீட்டில் நிற்பது வழக்கம். முதல் மாதமும் ஏதோ காரணத்துக்காக நான்கு நாட்கள் பாடசாலை விடுமுறை. விடுப்பு எடுத்து வீட்டில் நின்றேன். அப்படியான விடுமுறை நாட்களில் பிள்ளைகள் விளையாடும் எல்லா விளையாட்டுகளிலும் நானும் பங்கு பற்றி விளையாடுவேன்.

அவர்கள் சிறுவர்களாயிருந்த போது லூடோ, கரம்... போன்ற விளையாட்டுக்கள். கொஞ்சம் வளர மொனோபோலி (Monopoly). இன்னும் கொஞ்சம் வளர ஹேம்போய் (Gameboy), நின்ரெண்டோ (Nintendo) என்று அவர்களின் ஆர்வத்துக்கும், காலத்திற்கும் ஏற்ப விளையாட்டுக்களும் மாறும். அப்போது தொண்ணூறின் ஆரம்ப காலகட்டம். எங்கள் வீட்டுக்குள்ளும் கணினி நுழைந்து பிள்ளைகளின் விளையாட்டுக்கள் மெதுமெதுவாக இணையத்துக்கு மாறிக்கொண்டிருந்தன. சாப்பாட்டைக் கூட மறந்து உலகம் முழுவதும் ´சட்´ செய்வதும், மின்னஞ்சல் அனுப்புவதுமே எனது கடைசி மகனின் வேலையாக இருந்தது.

அன்றும் அப்படித்தான் மேசையில் சாப்பாட்டை வைத்து விட்டு "வா. வந்து சாப்பிடு" என்று பல தடவைகள் கூப்பிட்டுப் பார்ததேன். அவன் வருவதாயில்லை. ஒருவித சலிப்புடனான எரிச்சல் மனதில் தோன்ற கணினி இருக்கும் அறைக்குள் நுழைந்தேன். "அம்மா பிற்ற (Please) இன்னும் கொஞ்ச நேரம். வெரி இன்ரெஸ்ரிங் (very interresting)” என்று மூன்று பாஷைகள் கலந்து அவன் கெஞ்சினான்.

கணினித் திரையைப் பார்த்தேன். ஒரே நேரத்தில் நிறையப் பேருடன் ´சட்´ செய்து கொண்டிருந்தான். அடிக்கடி WWW... என்று அழுத்தினான். மின்னஞ்சலும் அனுப்பிக் கொண்டிருந்தான். இருபது வயதுப் பெண்ணொருத்திக்கு தனது பதினைந்து வயதை இருபத்தியொரு வயது என எழுதினான். அவள் உடனே ´ஐ லவ் யூ´ என்று எழுதினாள். ஒரு ஆணுக்கு தான் ஒரு பெண் என்றும் வயது பதினேழு என்றும் எழுதினான்.

அவன் அப்படி அமெரிக்கா, நியூசிலாந்து... என்று உலகமெல்லாம் பொய்யும், புரட்டும் காதலுமாய்... சட்டன் செய்து கொண்டிருந்தது எனக்குச் சிரிப்பைத் தந்தது. சுவாரஸ்யமாகக் கூட இருந்தது.

இருந்தாலும் "இப்ப வா. வந்து சாப்பிடு" என்றேன்.

இப்போது அவன் கணினித் திரையில் "அம்மா கத்துகிறா. சாப்பிட்டு விட்டு அரைமணியில் வருகிறேன்" என்று எழுதி எல்லோருக்கும் அனுப்பி விட்டுச் சாப்பிட வந்தான்.

பரீட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்த மூத்தவனையும் ஒருவாறு இழுத்துக் கொண்டு வந்து அவர்களுடன் சேர்ந்து சாப்பிடத் தொடங்கினேன். கதைகள் எங்கெல்லாம் சுற்றி வந்தாலும் கடைசியில் இன்ரநெற்றிலேயே வந்து சங்கமித்தன.

"நீ இப்பிடி நாள் முழுக்க ´சட்´ செய்து கொண்டிருந்தால் ரெலிபோன் பில் எக்கச்சக்கமா வந்திடும். அது போக உன்ரை கண்ணுக்கும் கூடாது. தெரியுமே" அவனைக் கண்டித்தேன்.

"என்னம்மா, எப்பவும் இப்பிடிச் செய்யப் போறனே? பள்ளிக்கூடம் தொடங்கினால் நேரம் எங்கை இருக்கப் போகுது? அது போக உங்களுக்கு ஞாபகமில்லையே? போன கிழமை போஸ்ரிலை ஒரு CD வந்ததில்லோ! இல்லையில்லை இரண்டு CD. அது AOL என்ற கொம்பனியிலை இருந்துதான் வந்தது. அந்த ஒவ்வொரு சீடீயிலையும் காசில்லாமல் இன்ரநெற்றுக்குப் போய் வர இருபந்தைஞ்சு, இருபத்தைஞ்சு மணித்தியாலங்கள் இருக்குது."

சாப்பிட்டு முடிந்ததும் அந்ந CD க்களை வாங்கி ஒரு முறை வாசித்துப் பார்த்து அது இலவச இன்ரநெற் நுழைவுக்குத்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டேன். அவன் மீண்டும் கணினி அறைக்குள் நுழைந்து கணினிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டான்.

தொடரும் வீட்டு வேலைகளின் மத்தியில் எனது மனதுக்குள் ஒரு ஆசை பிறந்தது. தொலைபேசிக் கட்டணங்கள் மிகவும் அதிகமாயிருந்த, எந்தத் தொலைபேசி அட்டைகளும் அவ்வளவாக அறிமுகப் படுத்தப் படாத அந்தக் காலகட்டத்தில் நியூசிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மகளுடன் தொலைபேசியில் நிறையப் பேச முடிவதில்லை. ´அவளுடன் ´சட்´ செய்தால் என்ன..?´ என்ற ஆசைதான் அது.

மகனிடமும் எனது ஆசையைச் சொல்லி அந்த 50 மணித்தியாலங்களில் குறைந்தது ஆறு மணித்தியாலங்களையாவது எனக்குத் தரும்படி கேட்டுக் கொண்டேன். அவன் கணினியை எனக்காக விட்டுத் தரும்வரை அவனோடு சேர்ந்து நானும் இன்ரநெட் நண்பர்களுடன் அரட்டை அடித்தேன்.

மாலை கணவர் வேலையால் வர அவரைக் கவனித்து விட்டு கணினி முன் போயிருந்து நியூசிலாந்திலிருக்கும் மகளுடன் ´சட்´ செய்யத் தொடங்கனேன். ஓசிதானே என்ற நினைப்பில் உப்புச் சப்பற்ற விடயங்களெல்லாம் எழுதினோம்.

இடையில் எனது கணவர் வந்து ரெலிபோன் பில் பற்றி எச்சரித்த போது அவசரமாய் "அது ஓசி. காசெண்டால் நான் இப்பிடிச் செய்வனே?" என்றேன். எனது புத்திசாலித்தனத்தின் மீது எனது கணவருக்கு நல்ல நம்பிக்கை. மறு பேச்சின்றிப் போய் விட்டார். அன்று இரவு சிவராத்திரிதான். மூத்தவன், கடைசிமகன், நான் என்று மாறி மாறி கீபோர்ட்டைத் தட்டினோம்.

கணவர் இடையிடையே எழும்பி வந்து "என்னப்பா இரவிரவாச் செய்யிறியள். லைற்றையும் போட்டு வைச்சுக் கொண்டு... மனிசரை நித்திரை கொள்ளவும் விடமாட்டியள்" என்று அதிருப்திப் பட்டுக் கொண்டார்.

இன்றும் அப்படியொரு விடுமுறை நாள் தான். ´பிள்ளைகளோடு வெளியில் போகலாமா அல்லது வேறு ஏதாவது செய்யலாமா´ என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் தபாற்காரன் அதைக் கொண்டு வந்திருந்தான். எனக்கு அதிர்ச்சிதான். ஆயிரம் மார்க்கைத் தாண்டிய ரெலிபோன் பில்லைத் தன்னோடு காவி வந்த அக் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு யோசித்தேன். ´ஊருக்கு அம்மாவுக்கும் போன் பண்ணேல்லை. நியூசிலாந்துக்கு மகளுக்கும் போன் பண்ணேல்லை. எப்பிடி இவ்வளவு பெரிசா வந்திருக்கும்..?´ பில்லை மீண்டுமாகச் சரி பார்த்தேன். உள்ளுர் தொடர்புக்குத்தான் 8860யூனிற்றுகள் என்று போடப்பட்டு கணக்கும் போடப் பட்டிருந்தது. ´என்னவாயிருக்கும்.? மிகவும் மலைப்பாக இருந்தது.

இதற்குள் எனது கணவர் பில்லைப் பார்த்துவிட்டு கத்தத் தொடங்கி விட்டார். "மனுசர் கஸ்டப் பட்டு வேலை செய்யிறது உங்களுக்கெங்கை தெரியப் போகுது. நான் வேலைக்குப் போக நீங்கள் வீட்டிலை இருந்து ஊர் ஊரா ரெலிபோன் பண்ணியிருக்கிறியள்"

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ´ஒவ்வொரு சதத்தையும் எவ்வளவு கவனமாகச் செலவு செய்வேன். எப்படி, இப்படியொரு பில் வந்திருக்கும்?´ மிகவும் குழப்பமும், கவலையும் என்னை ஆட்கொள்ள தொலைத்தொடர்பு நிலையத்துடன் தொடர்பு கொண்டு "ஏன், இப்படி ஒரு தவறான கணக்கை அனுப்பியிருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர்களும் மிகவும் சங்கடப்பட்டு, மன்னிப்புக் கேட்டு "பொறுங்கள்..! இரண்டு நாட்களில் பதில் தருகிறோம்' என்றார்கள். கடைசியில் தொலைபேசியை வைக்கும் போதுதான் எனக்கு AOL கொம்பனியின் ஞாபகம் வந்தது. உடனேயே அந்த சீடியை வைத்து ´சட்´ செய்தது பற்றிச் சொன்னேன்.

அப்போதுதான் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தவர் உயிர் பெற்றவர் போல உற்சாகமாக "AOL இனூடான இன்ரநெற் நுழைவு இலவசம் என்றாலும் ஜேர்மனியின் இந்த அந்தத்திலுள்ள உங்கள் நகரத்திலிருந்து மறு அந்தத்தில் இருக்கும் AOL Company உள்ள நகரத்துக்கான இணைப்பு இலவசமில்லையே" என்றார்.

சந்திரவதனா
ஜேர்மனி


பிரசுரம் - யுகமாயினி ஜனவரி 2009

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite