நினைவு நதியில் மனதின் ஜதி - 4
உலாந்தா(நிலஅளவையாளர்-சேவையர்) வீட்டு இலந்தைக் காணிக்குள் யாரும் சொல்லாமல் போக முடியாதாம். அவர்கள் பொல்லாதவர்களாம். பெரீய்ய்ய்ய்..ய வீட்டில் தாயும் இரு முதிர் கன்னிகளையும் தவிர வேறு ஆண்கள் யாரையும் நான் காண்பதில்லை. பணம் அவர்கள் பிரச்சனையில்லையாம். குணம் - அது - இலந்தைக் காணிக்குள்ளேயே யாரையும் விடாத அளவுக்குக் கஞ்சர் என்பதைத் தவிர வேறெதுவும் எனக்குத் தெரியவில்லை. பணம் வேறிடம் போகக் கூடாது என்பதற்காக பத்துக்குடி என்றழைக்கப் படும் தமக்குள்ளேயேதான் மணம் செய்து கொள்வார்களாம். அதனால்தான் அந்த வீட்டுக்குள் மாப்பிள்ளைப் பஞ்சம்.
மல்லிகைக்கலட்டி பாட்டி வீட்டுக்குப் போகும் வழியெல்லாம் இலந்தைக் காணிகள். அலம்பல் வேலிகள்தான் அவைகளின் அரண்கள். ஆனால் அதற்குள் முள், கல், ஊத்தை..... எல்லாம் இருக்கும் என்பதனால் அங்கெல்லாம் போகக் கூடாது என்பது அம்மாவின் கட்டளை. என்றாலும் வேலியோரம் எட்டிப் பார்க்கும் கொப்புகளில் இலந்தைக்காய் தொங்கினால் பார்த்துக் கொண்டு சும்மா போவோமா? சித்தப்பா(பரமகுரு) கல்லெறிந்து விழுத்தி விடுவார். சில வேளைகளில் பல தடவைகள் எறிந்து இலந்தைப் பழத்தைக் காணிக்குள்ளேயே விழுத்தி விட்டு வாய் பிளந்ததும் உண்டு. எப்படியாயினும் வெளியில் கொஞ்சமாவது விழும். உள்ளே போனால் நிறையப் பொறுக்கலாம். அம்மாவின் கட்டளையை விட காணிக்களுக்கு அங்கால் தெரியும் கொட்டிலுக்குள் பேய் வாழ்கிறது என்பதுதான் நாம் அந்தக் காணிகளுக்குள் துப்பரவாகவே கால் வைக்காததற்கான முக்கிய காரணம். சித்தப்பாவுக்கு எந்தெந்த வீடுகளுக்குள்ளும் கொட்டிலுகளுக்குள்ளும் பேய்கள் வாழ்கின்றன என்பது அத்துபடி.
அம்மாவுக்கு இன்னொரு பயம். ஒதுக்குப் புறமாக இருக்கும் இலந்தைக் காணிகளுக்குள் கள்ளர், காடையர் யாராவது நின்று எமக்கு ஆபத்து விளைந்து விடுமோ என்று. அதனாலோ என்னவோ எனக்கு எனது ஆத்தியடி வீட்டிலிருந்து தம்பசிட்டிப் பக்கமாக இருக்கும் புதியாக்கணக்கனில் இருக்கும் அப்பாச்சி வீடுவரை மட்டுந்தான் தனியப் போக அனுமதி. அந்த வழியெல்லாம் சொந்தக் கார வீடுகள். திலகம் அக்கா வீட்டுப் பின் காணிக்குள்ளும் தேன்இலந்தை, புளி இலந்தை எல்லாம் இருக்கிறது. இலந்தைக்காய்களில் ஒவ்வொரு மரத்துக் காய்க்கும் ஒவ்வொரு சுவை. அப்பா பயணத்தால் வந்தால் சந்தைக்குப் போய் பெட்டியாக இலந்தைக் காய், பழம் எல்லாம் கலந்து வாங்கிக் கொண்டு வருவார். அதை சுத்தம் செய்து பொடியாக்கிய செத்தல், உப்பு, மிளகு, கொஞ்சம் சீனி எல்லாம் கலந்து உரலுக்குள் போட்டு அம்மா ஒரு துவையல் செய்வா. ஆளுக்கு தோடம்பழ அளவிலான இரு உருண்டைகள் கிடைக்கும். உறைப்பு, இனிப்பு, மெல்லிய புளிப்பு எல்லாம் கலந்த அதற்கு ஒரு தனிச்சுவை. உறைப்பில் கண்களில் கண்ணீர் ஓடும்.
அதை விட எல்லா வீடுகளிலும் விலாட், கறுத்த கொழும்பான், வெள்ளைக் கொழும்பான், கிளிச்சொண்டு.......... என்று மாமரங்கள். சித்தப்பாவோடு போனால் ஏதாவதொரு வீட்டு மாங்காய் பிடுங்கப் பட்டு விடும். சித்தப்பா சாரத்தைச் சண்டிக் கட்டாக கட்டிப் போட்டு அதுக்குள்ளை ஒளிச்சுக் கொண்டு வருவார். கள்ள மாங்காய் பிடுங்கினது அப்பாச்சிக்கோ அல்லது அம்மாக்கோ தெரிஞ்சால் போதும். நல்லாக வாங்கிக் கட்டுவார். சின்னப் பிள்ளையளுக்கு நல்ல பழக்கம் பழக்கிறாய் எண்டு உபரியாய் இன்னும் கொஞ்சப் பேச்சும் கிடைக்கும்.
அவர்கள் காணாவிட்டால் எங்கள் பாடு படு குஷிதான். மாமியவை ஒருத்தருக்கும் சொல்ல மாட்டினம். ராணி மாமிக்கும் என்னைப் போல மாங்காய் என்றால் நன்றாகப் பிடிக்கும். அவ சின்னப்பாச்சிக்குத் தெரியாமல் தூள் உப்பு எல்லாம் கலந்து கொண்டு வருவா. சித்தப்பா மாங்காயைச் சுவரிலை எறிஞ்சு உடைப்பார். பிறகென்ன ஆளுக்கொரு துண்டு.. உப்பையும் தூளையும் தொட்டுத் தொட்டு. .......ம் இப்பவும் வாயூறுகிறது.
(தொடரும்)
No comments :
Post a Comment