240 ஆண்டு கால அடிமைச்சின்னம் அழிக்கப் பட்டு
ஆனையிறவு கைப்பற்றப் பட்டது - 22.4.2000
எனது டயறியிலிருந்து
பல்கணி கதவையும் திறந்து விட்டு வந்து, சமைப்பதற்காகக் குசினி யன்னலையும் திறந்து விட்டதில் காற்று ஊ.... ஊ.... என்று வீட்டுக்குள்ளேயே அடித்து மேசையிலிருந்த பேப்பர்கள் சிறகடித்தன. வசந்தம் வர்ணங்களாய் பூத்திருக்க, குழந்தைகள் பலர் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் உப்பளக் காற்றைப் பற்றி எதுவுமே நினைக்கவில்லை.
எங்கெல்லாமோ அலைந்து எதையெதையெல்லாமோ தொட்டு வந்த நினைவில் பள்ளிக்கூடமாக உப்பளம் வரை போனதோ, கரையொதுங்கியிருந்த உப்பை கை நிறைய அள்ளி நக்கிப் பார்த்ததோ வரவில்லை.
உலை வைத்து அரிசி போட்ட போதோ, கறி கொதித்து இறக்கிய போதோ மனம் அலைந்து கொண்டுதான் இருந்தது. பிரியமானவர்களைத் தொட்டு மகிழவோ, அக்கா என்று கதைத்து விட்டு அடுத்த நாள் சில்லாகிப் போன மாவீரர்களைத் தொட்டுக் கலங்கவோ அது தவறவில்லை. ஆனாலும் உப்பளத்தை மறந்திருந்தது. ஆனையிறவுக் காற்று அதன் நினைவில் வரவேயில்லை.
அப்போதுதான் காற்றோடு வந்தது
240 ஆண்டு கால அடிமைச்சின்னம் அழிக்கப் பட்டு ஆனையிறவு கைப்பற்றப் பட்ட செய்தி.
சந்திரவதனா
22.4.2000