Monday, August 23, 2004
பார்வைகள்
வெளியில் இறங்கியபோதுதான் தெரிந்தது சூரியன் தனது இருப்பை இன்று சற்று அதீதமாகவே வெளிக்காட்டுவது. உடனேயே வீட்டினுள் நுழைந்து மின்குமிழ் வெளிச்சத்திலும், வெப்பமூட்டியின் வெப்பத்திலும் பச்சயத்தை மெதுமெதுவாக இழந்து இயல்பான பச்சையின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் எனது பூமரங்களில் சிலவற்றைத் தூக்கி வெளியில் வைத்து விட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு அவசரமாய் விரைந்தேன்.
ஆறு நிமிடத்தில் நடக்க வேண்டிய பேரூந்து நிலையத்தை, மூன்று நிமிடத்தில் அடைந்ததில் மூச்சு வாங்கியது.
"காலை வணக்கம்"(Guten Morgen) சொல்லி மாதப் பயணச்சீட்டை ஓட்டுனரிடம் காட்டி, இருக்கையில் அமர்ந்த போது மூச்சின் வேகம் சற்றுக் குறைந்திருந்தது. முழுவதுமாகச் சீரானதும் வாசிக்கலாமென கைப்பையிலிருந்த மாதசஞ்சிகை ஒன்றை எடுத்த போதுதான் அந்த மாது என் எதிரே வந்தமர்ந்தாள்.
தெரிந்த பாவனையுடன் சிரித்துக் கொண்டு காலை வணக்கம் சொன்னாள். பதிலுக்கு நானும் சொல்லிய போதுதான் அவள் சுமதி வீட்டுக்கு எதிர் வீட்டு மாது மரியானா என்பது ஞாபகத்தில் வந்தது. போனகிழமை ஒரு திருமணவைபத்தில்தான் சுமதி இவளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
"சுமதி யேர்மனிக்கு வந்து கொஞ்சக்காலந்தான். அதற்கிடையில் யேர்மனிய மனிசியைப் Friend பிடிச்சு, ஓரளவு டொச்சும்(Deutsch - யேர்மனிய மொழி) கதைக்கத் தொடங்கீட்டாள். அவள் கெட்டிக்காரி." இப்படித்தான் எமது நகரத் தமிழர்கள் பேசிக் கொள்வார்கள்.
"ரவுணுக்குப் போறியோ..?" மரியானா கேட்டாள்.
"ஓம். சில சாமான்கள் வேண்டோணும்."
"நல்ல வெதர்."
"ஓமோம். நல்ல வெதர். சந்தோசமாயிருக்கு."
சூரியச்சிரிப்பில் ஸ்வெபிஸ்ஹால் நகரம் மிகவும் அழகாயிருந்தது. வழி நெடுகலும் மரங்கள் கிளைகளைப் பரப்பி விரிந்து... சோலைகளினூடே பயணிப்பது போன்றதொரு பிரமையை ஏற்படுத்தின. வீடுகளின் முன் ரோஜாக்களும், செவ்வந்திகளும்.... என்று பூத்துக் குலுங்கியதிலான அழகு மனசைக் கொள்ளை கொண்டது.
"எப்பிடி இருக்கிறாய்?" மரியானா மீண்டும் கதை கொடுத்தாள்.
"இருக்கிறன். நல்லாயிருக்கிறன்.நீ எப்பிடி இருக்கிறாய்?
"எனக்கென்ன...? எல்லாம் நல்லாயிருக்கு."
பேரூந்து அடுத்த தரிப்பில் நின்று புறப்பட்டது. யன்னலினூடே தெரிந்த சந்தி வீட்டில் செர்ரி(cherry) மரம் குண்டு குண்டான கருஞ்சிவப்பு செர்ரி(cherry) பழங்களுடன் ஆடி அசைந்து கொண்டிருந்தது. முன்னர், புலம் பெயர்வு பற்றிய பிரக்ஞைகள் எதுவும் எம்மத்தியில் இல்லாத காலகட்டத்தில், பணம் தேட என்று ஐரோப்பியாவை நோக்கிக் கடல் கடந்தவர்கள் எழுதும் கதைகளின் தலைப்புகள் எல்லாம் "செர்ரி பழங்கள் காய்த்து விட்டன", "ப்ளம்ஸ் மரங்கள் பூத்து விட்டன..." என்று எங்களுக்கு ஒரு வித ஆவலைத் தூண்டுவனவாகவே இருந்திருக்கின்றன. இப்போ இவையெல்லாம் எமக்குக் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தாலும், அவைகளைப் பணம் கொடுத்து வாங்கி வாய்க்குள் போட்டுச் சுவைப்பதோடு அவைகளின் கதைகள் முடிந்து விடுகின்றன. பெரியளவாக யார் கதைகளிலும் இடம் பெறுவதில்லை.
"என்ன யோசிக்கிறாய்? வெளீலை அழகாய் இருக்கு என்ன..?" மரியானா மீண்டும் கதை கொடுத்தாள்.
"ஒண்டுமில்லை. வெளியில் அழகு....அது சரி சுமதி எப்பிடி இருக்கிறாள்?"
சுமதி மரியானாவுடன் நல்ல வாரப்பாடு என்பது எனக்குத் தெரியும். ஏற்கெனவே சுமதி சொல்லியிருந்தாள். தினமும் மரியானா சுமதி வீட்டுக்குப் போவதும், சுமதி மரியானா வீட்டுக்குப் போவதும், சுமதியின் உறைப்புக் கறிகளை மரியானா விரும்பிச் சுவைப்பதுவும் என்று அவர்கள் மிகவும் நெருக்கமாகப் பழகத் தொடங்கி விட்டார்களாம். மரியானாவுக்காக, சுமதியும் அவள் கணவன் அரவிந்தனும் உறைப்பைக் குறைத்துச் சமைத்துச் சாப்பிடவும் பழகி விட்டார்களாம்.
"அரவிந்தன் நல்ல பெடியன். நல்ல உழைப்பாளி." ஊருக்குள் தமிழரின் வீடுகளில் அவன் பெயர் இப்படித்தான் உருளும். உண்மையிலேயே அவன் யேர்மனிக்கு வந்ததிலிருந்து ஒரு சோலி சுரட்டுக்கும் போகாமல், தானுண்டு, தன் வேலையுண்டு என்றுதான் இருந்தான். குடி, சிகரெட் எதுவும் கிடையாது. அதிகாலையில் ஒரு தொழிற்சாலையில் வேலை தொடங்கும். முடிந்து வந்தால் இன்னொரு கடையில் கூட்டிக் கழுவும் பகுதி நேர வேலை. சனி, ஞாயிறுகளில் ஒரு உணவகத்தில் சலாட் கழுவும் வேலை. இப்படியே வேலை வேலையாகச் செய்து சொந்தமாய் ஒரு வீடும் வாங்கி விட்டான். நல்ல பிரயாசி. அதன் பின்தான் சுமதியைப் ஸ்பொன்சர் பண்ணிக் கூப்பிட்டான். சுமதியும் வந்து இரண்டு வருடங்களாகிறது.
"சுமதி குடுத்து வைச்சவள்." தங்கவேலின் மனைவி லலிதாவும், தேவதாசின் மனைவி மெலிண்டாவும் அடிக்கடி என்னிடம் சொல்லிப் பெருமூச்சு விடுவார்கள்.
தங்கவேல் பயங்கரக் குடிகாரன். இந்தப் பகுதிநேரவேலை செய்கிற பழக்கமெல்லாம் அவனிடம் இல்லை. வேலை நேரம் போக மற்றைய நேரமெல்லாம் வீட்டிலேயே குந்திக் கொண்டிருப்பான். பணப் பற்றாக்குறை வரும் போதெல்லாம் லலிதா புறுபுறுப்பாள். நல்லாக வாழும் சுமதியை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடுவாள்.
தேவதாஸ் பெரிய குடி என்றில்லை. ஆனால் அவனுக்கு வாய்த்தது மக்டொனால்ஸ்(Mc Donals) வேலை. அதனால் பணப் பற்றாக்குறை என்பது மெலிண்டாவின் வாழ்வில் தவிர்க்க முடியாதது. இதற்குள் அவனுக்கு ஆயிரத்தெட்டு நண்பர்கள். அவர்களுக்குச் சமைத்துப் போடுவதிலேயே மெலிண்டாவுக்குப் போதும்... போதும்... என்றாகி விடும்.
இந்தத் தொல்லையொன்றும் இல்லாது, சொந்த வீட்டில், கார், நகை, வீடு......... என்று வாழும் சுமதி, இவர்கள் பார்வைகளில் அதிர்ஸ்டக்காரி. கொடுத்து வைச்சவள்.
"சுமதி நல்லாயிருக்கிறாள். இப்ப அவளைச் சந்திச்சிட்டுத்தான் வாறன். வேலையேதுமிருந்தால் எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டவள். புட்ற்சன் (Putzen –துப்பரவாக்கும் வேலை) எண்டாலும் பரவாயில்லையாம்."
புட்ற்சனோ...! புட்ற்சன் (Putzen) செய்ய நினைக்குமளவுக்கு சுமதிக்கு என்ன கஸ்டம்..? மனதுள் எழுந்த வியப்பில் என்னையறியமால் வார்த்தை வந்து வெளியில் வீழ்ந்தது.
மரியானா எனது ஆச்சரியத்தைப் புரிந்து கொண்டவளாய் "என்ன செய்யிறது அவளும்...? அரவிந்தன் நல்ல பெடியன்தான். நல்ல பிரயாசிதான். ஆனால் அவன் வேலை வேலையெண்டு காலையிலேயே போய் விடுவான். மாலையில் கூட அவள் துணையென்று யாருமின்றித் தனியேதான். என்னட்டை ஓடி ஓடி வருவாள். நானும் என்னத்தை அவளோடை கதைக்கிறது?. அவள் இருபது வயசுச் சின்னப் பெண். நான் அறுபது வயசுக் கிழவி. என்ரை கதையள் அவளின்ரை வயசுக்கு ஒத்துப் போகுமே..? வேறை வழியில்லாமல் வாறாள். ஆனால் தனிமை அவளைக் கொல்லுது எண்டு எனக்குத் தெரியும்...."
சற்று மூச்சு விட்டு மீண்டும் தொடர்ந்தாள். "வேலைக்குப் போனாள் எண்டாலும் பொழுதுகள் கெதியிலை போகும். டொச்(deutsch) வகுப்புக்குப் போனவள்தான். போட்டு வந்து வீட்டுக்குள்ளை இருந்தால் எப்பிடிக் கதைக்கப் பழகேலும்? ஏதாவதொரு வேலையெண்ட சாட்டிலையாவது வெளியிலை போய் நாலு பேரோடை கதைச்சு.. சிரிச்சு... வாழ்ந்தால்தான் பாசையும் தெரியவரும். வாழ்க்கையிலையும் ஒரு பிடிப்பு வரும்."
இப்போ அவள் பார்வை "என்ன இதுக்குச் சொல்லுறாய்..?" என்பது போல என்னை நோக்கியது.
அவள் சொல்வது அவளது பார்வையின் நோக்கலுடனான வெளிப்பாடு என்பது எனக்குத் தெரிந்தது. இதற்கு நான் என்ன சொல்லலாம். புலம் பெயர்ந்த எமது நாட்டுப் பெண்கள் பெரும்பாலானோரின் வாழ்வு இப்படித்தானே இங்கு தொடர்கிறது.
எனது மௌனம் அவளை என்ன செய்ததோ..?"பாவம் சுமதி. அவளுக்கு ஏதாவது வேலை எடுத்துக் குடுக்கோணும்." என்றாள்.
ரவுணுக்குள் எனது வேலைகளுடன் நான் விரைந்து கொண்டிருந்தாலும் மனசுக்குள் சுமதியும், அவள் மீதான மரியானாவின் பார்வையும், லலிதா, மெலிண்டா... போன்றோரின் பார்வைகளும் சுழன்று கொண்டே இருந்தன.
ரவுணில் இருந்து திரும்பிய போது வெளியின் அழகுகள் அவ்வளவாக என்னைக் கொள்ளை கொள்ளவில்லை. ரவுணுக்குள்ளேயான அலைச்சலும், அங்கொன்று இங்கொன்று என்று வேண்டி விட்ட சாமான்கள் ஒரு துணிப்பையில் நிரம்பி அது பாராமாய் என் கையில் தொங்குவதால் ஏற்பட்ட தோள்மூட்டின் வலியும்... சூரியன் உச்சிப் பகுதிக்கு வந்து விட்டதால் ஏற்பட்டு விட்ட அதீத வெப்பமும் என்னுள் ஒரு வித களைப்பையே ஏற்படுத்தியிருந்தன.
ஆனாலும் பேரூந்திலிருந்து இறங்கிய போது ஏதோ ஒரு உந்துதலில், எனது வழமையான பாதையை விடுத்து சுற்று வழியான சுமதியின் வீடிருக்கும் பாதையினூடு நடந்தேன். சுமதி அவள் வீட்டு வாசலில்தான் நின்றாள்.நீண்ட காலங்கள் அவள் வீட்டுப் பக்கமே போகவில்லை. வழியில் எங்காவது அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்புகள் கிடைப்பதால் வீட்டுக்கென்று போக வேண்டிய தேவைகளெதுவும் எனக்கு ஏற்படவில்லை.
வீட்டின் முன்றலில் பெரியதொரு செர்ரி (cherry) மரம் கிளைபரப்பி குடை போல விரிந்திருந்தது. சில கிளைகள் செர்ரி (cherry) பழங்களின் கனம் தாங்காமல் நிலம் நோக்கிச் சாய்ந்திருந்தன. இவள் வீட்டுச் செர்ரி(cherry) பழங்கள் சந்தி வீட்டுப் பழங்கள் போல் பெரிதாக இல்லாமல், எங்கள் ஊர் நாவற்பழ சைஸில் சிறிதாக இருந்தன. நன்கு பழுக்காதவைகள் இளஞ்சிவப்பு நிறத்திலும், பழுத்தவை கருஞ்சிவப்பு நிறத்திலும் அழகூட்டின. சுமதி அதன் கீழ் உள்ள நிலத்தைக் கூட்டிக் கொண்டு நின்றாள். என்னைக் கண்டதும் மிகவும் சந்தோசப் பட்டு, முகம் மலர "வாங்கோ... அக்கா வாங்கோ" என்று வரவேற்றாள். என் கைகளுக்குச் சிக்கிய கிளைகளில் ஒன்றில் இருந்து இரண்டு பழங்களை பிடுங்கி வாய்க்குள் போட்டுக் கொண்டேன். நாவற்பழ விதைகள் போலத்தான் இதன் விதைகளும். பழத்தின் சுவை மட்டும் மிகவும் வேறாய்.. தித்தித்தது.
சுமதியின் வீடு மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும், துப்பரவானதாகவும் இருந்தது. ஏற்கெனவே அவள் உள்ளி, வெங்காயம் எல்லாம் போட்டுச் சமைத்திருந்தாலும் மற்றைய தமிழ் வீடுகள் போல சமையல் மணம் வீட்டுக்குள் இருக்கவில்லை. யன்னல்களைத் திறந்து வைத்திருந்தாள்.
எனக்கென கேக், சொக்கலேட்... என்று உள்ளதெல்லாம் கொண்டு வந்து வைத்தாள். சாப்பிடுங்கோ.. சாப்பிடுங்கோ.. என்று அன்புத் தொல்லை கொடுத்தாள். அடிக்கடி கேட்டும் வராத என்னை வீட்டுக்குள் வரவழைத்து விட்டதிலான சந்தோசம் அவள் உபசரிப்பில் தெரிந்தது. கதையின் இடையே எனக்கு "விசராக்கிடக்கு அக்கா. பொழுதே போகுதில்லை. அவர் காலைமை நாலு மணிக்கே வேலைக்குப் போயிட்டார். இனிப் பின்னேரம்தான் வருவார். வந்த உடனே சாப்பிட்டிட்டு அடுத்த வேலைக்குப் போயிடுவார். வர இரவு பத்து மணியாகீடும்." என்றாள்.
வீட்டில் ரீரீஎன், வெக்ரோன், தீபம்... என்று பல தமிழ் தொலைக்காட்சிகளுக்கான இணைப்புகளும், ஐரோப்பியத் தமிழ் வானொலிகள் அனைத்தையும் கேட்பதற்கான இணைப்புகளும் இருந்தன. "எல்லாவற்றையும் தன்னந்தனியே குந்தியிருந்து எத்தினை நாளைக்கெண்டுதான் பார்க்கிறது." அலுத்தாள்.
"நீங்கள் வேறை தமிழாக்கள் வீட்டை போறேல்லையே..?"
"எங்கை அக்கா.! அவருக்கு நேரமில்லை. என்னெண்டு போறது..?தானில்லாமல் தனிய நான் தமிழாக்கள் ஆற்றையும் வீட்டை போனாலும் அவருக்குப் பிடிக்காது"
"......"
"சும்மா சொந்த வீடென்று சொல்லுறது. மாதக்காசு அதுக்குக் கட்டிறதே பெரும்பாடாக் கிடக்கு. அதோடை அவருக்கு இன்னும் இரண்டு தங்கச்சிமார் கலியாணம் செய்யாமல் இருக்கினம். அவையளின்ரை பிரச்சனையளும் முடியோணும்..... அதுதான் அக்கா நானும் ஒரு வேலை செய்வம் எண்டு பார்க்கிறன். ஏதாவது புட்ற்சன்(Putzen) அப்பிடியேதும் இருந்தாலாவது சொல்லுங்கோ.
என்னால் அதிக நேரம் அங்கு இருக்க முடியவில்லை. பிள்ளைகள் மதியச் சாப்பாட்டுக்கு வந்து விடுவார்கள். ஓடிப் போய்ச் சமைக்க வேண்டும். புறப்பட்டு விட்டேன். "அடிக்கடி வாங்கோ அக்கா." இரண்டு மூன்று தரங்களாகச் சொன்னதை நான் படியில் இறங்கும் போதும் சொன்னாள்.
திரும்பிப் பார்த்தேன். எப்படித்தான் உழைத்தாலும் விமோசனம் கிடைக்காத ஐரோப்பியத் தமிழர்களில் அவளும் ஒருத்தியாக... பாவமாக இருந்தது. கட்டாயம் அவளுக்கு ஒரு வேலை எடுத்துக் கொடுக்க வேண்டும். இடைக்கிடையாவது அவள் வீட்டுக்குப் போக வேண்டும். நினைத்துக் கொண்டே விரைந்தேன்.
சந்திரவதனா
யேர்மனி
1.7.2004
திண்ணையில் - (30.8.2004)
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
▼
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ▼ August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )
5 comments :
//முன்னர், புலம் பெயர்வு பற்றிய பிரக்ஞைகள் எதுவும் எம்மத்தியில் இல்லாத காலகட்டத்தில், பணம் தேட என்று ஐரோப்பியாவை நோக்கிக் கடல் கடந்தவர்கள் எழுதும் கதைகளின் தலைப்புகள் எல்லாம் "செர்ரி பழங்கள் காய்த்து விட்டன", "ப்ளம்ஸ் மரங்கள் பூத்து விட்டன..." என்று எங்களுக்கு ஒரு வித ஆவலைத் தூண்டுவனவாகவே இருந்திருக்கின்றன. இப்போ இவையெல்லாம் எமக்குக் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தாலும், அவைகளைப் பணம் கொடுத்து வாங்கி வாய்க்குள் போட்டுச் சுவைப்பதோடு அவைகளின் கதைகள் முடிந்து விடுகின்றன. பெரியளவாக யார் கதைகளிலும் இடம் பெறுவதில்லை.//
ஆகா, அருமை!
கஷ்டம் வரும்போதுதான் கடவுளை நினைக்கிறோமென்று, எப்போதும் கஷ்டமே கொடுக்கச் சொல்லி வேண்டினாளாம் குந்தி கண்ணனை.
வலியில் இருந்து பிறக்கும் இந்த மாதிரி அற்புத வரிகளை எப்போதும் எழுத உம்மை வலியில் வைக்கக் கேட்க முடியுமோ எம்மால்? என்னே முரண்!
-கண்ணன்
கண்ணன்
உங்கள் கருத்துக்கு நன்றி
மேலதிகமாகப் பதியப் பட்டதை அழித்து விடுகிறேன்.
வசந்
உங்கள் கருத்துக்கு நன்றி.
நட்புடன்
சந்திரவதனா
Post a Comment