Friday, June 10, 2005

புத்தகங்களோடு பிறந்தேன், வளர்ந்தேன், வாழ்ந்தேன்


புத்தகங்கள், வாசிப்பு... என்னும் போது என் முன்னே முதலில் வந்து நிற்பது எனது அப்பாதான். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து புத்தகங்கள் இல்லாமல் எனது அப்பா பயணத்தால் வந்ததில்லை. சொக்கிளேட்ஸ்... தேங்காய்ப்பூரான்... என்பதிலிருந்து அவர் கடமையிலிருக்கும் நகரத்தில் என்னென்ன பழங்கள் மலிவோ அத்தனையையும் கட்டிக் காவிக்கொண்டு வரும் அப்பாவின் சூட்கேசுக்குள் கண்டிப்பாக சில புத்தகங்களும் இருக்கும். அவைகளில் எமது வயதுக்கேற்ப சிறிய, பெரிய புத்தகங்களும் அம்மாவுக்கேற்ப புத்தகங்களும் இருக்கும்.

கடனே என்று வேண்டிக் கொண்டு வருவதோடு நின்று விடாமல் மடியில் இருத்தி வைத்து அப்புத்தகங்களில் உள்ளவைகளை வாசித்து கூடவே அபிநயித்து அவர் சொல்லும் அழகே தனி. சின்னவயதில் அப்படி நான் கேட்ட ஒவ்வொரு கதையும் இன்னும் என்னுள் பதிந்து போயிருக்கின்றன.

நளன்தமயந்தி கதையை அப்பா வாசித்துச் சொல்லும் போது நளனின் சமையற்பாகத்தையும், தமயந்தியின் அழகையும் மிகவும் வர்ணித்துச் சொன்னார். அதை நான் ரசித்து எனக்குள் பதித்து வைத்திருந்தேன். பின்னர் ஒரு முறை ரவிவர்மா தமயந்தியையும், நளனையும் ஓவியமாக வரைந்திருந்ததைப் பார்த்த போது எனக்குள் பதிந்திருந்த அந்த அழகு, அவர் வரைந்த தமயந்தியில் இல்லாததால் ரவிவர்மாவுக்கு ஓவியம் வரையத் தெரியாதோ என்று யோசித்தேன்.

இதே போல இரணியன், பரதன்... போன்ற சரித்திரக்கதைகள் எல்லாமே எனது சின்ன வயதிலேயே எனது அப்பாவால் வாசித்துக் காட்டப்பட்டு என்னுள் பதிந்து போயிருப்பவை.

அப்பா வரும் போது மட்டுந்தான் எமக்கு புத்தகங்களும் பத்திரிகைகளும் கொண்டு வருவாரென்றில்லை. அவர் இலங்கையின் எந்த மூலையில் இருந்தாலும் கிழமையில் ஒரு நாளைக்கு அஞ்சலில் ஒரு கட்டுப் பத்திரிகையை எமக்கு அனுப்பி வைப்பார். அவைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பிரத்தியேகமாக வெளிவருகின்ற சிந்தாமணி, ராதா.. வில் தொடங்கி Sunday Observer வரை இருக்கும்.

அப்பாவுக்கு மட்டுந்தான் வாசிப்பு ஆர்வம் என்றிருந்திருந்தால் எப்படியிருந்திருக்குமோ தெரியாது. எனது அம்மாவும் அதேதான். அம்மாவுக்கு வீட்டில் நிறைய வேலையிருக்கும். ஆனாலும் அப்பா அனுப்பும்.., கொண்டு வரும் எல்லாப் பத்திரிகைகளையும், புத்தகங்களையும் வாசித்து முடித்து விடுவா. அதை விட ஆனந்தவிகடன், குமுதம், கல்கி.. போன்ற எல்லா சஞ்சிகைகளையும் வாரம் தவறாமல் வாங்கி வாசிப்பா. அவவின் பெயர் போட்ட படியே ரவுண் கடையொன்றில்(பெயர் ஞாபகமில்லை) இந்தப் புத்தகங்கள் காத்திருக்கும். சித்தப்பா யாராவது போய் வாங்கிக் கொண்டு வருவார்கள். வாசித்தவைகளை எறிந்து விடாமல் கவனமாக வைத்து... கதைகளை, கட்டுரைகளை என்று கிழித்து, சேர்த்து, கட்டி.. புத்தகங்களாக்கி விடுவா.

எங்கள் ஊரில் எங்கள் வீடும் வாசிகசாலை போலத்தான். பலர் வந்து இரவல் வாங்கிப் போய் வாசித்து விட்டுக் கொணர்ந்து தருவார்கள். அம்மாவுக்குத் தாராள மனசு. யார் கேட்டாலும் மறுப்பதில்லை. இரவல் கொடுத்து விடுவா.

இப்படியே நான் புத்தகங்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகளுக்கு நடுவிலேயே பிறந்தேன். வளர்ந்தேன். வாழ்ந்தேன்.

ஊரில் எனது வீட்டில் ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன.
அவைகளில் எனக்கு மிகவும் பிடித்த நான் வாசித்த புத்தகங்கள்

கல்கியின்
அலையோசை
பார்த்திபன் கனவு
பொன்னியின் செல்வன்
சிவகாமியின் சபதம்
கள்வனின் காதலி
மகுடபதி
தியாகபூமி

சாண்டில்யனின்
மலைவாசல்
ஜவனராணி
கடற்புறா
ஜீவபூமி
ஜலதீபம்
ராஜமுத்திரை

அகிலனின்
சித்திரப்பாவை
பாவைவிளக்கு
வேங்கையின் மைந்தன்

தி.ஜானகிராமனின்
மோகமுள்

டாக்டர்.மு.வரதராஜனின்
அகல் விளக்கு

லக்சுமியின்
மிதுலா விலாஸ்
காஞ்சனையின் கனவு
பெண்மனம்
அடுத்த வீடு
அரக்கு மாளிகை
இலட்சியவாதி
சூரியகாந்தம்

சிவசங்கரியின்
பாலங்கள்
47நாட்கள்

பாரதியாரின் கவிதைகள்
பாரதிதாசனின் கவிதைகள்


இன்னும்
முள்ளும் மலரும்(கதை தந்த பாதிப்பு படமாக வந்த போது இருக்கவில்லை.)
குறிஞ்சி மலர்
கயல்விழி

- தொடரும் -

எனக்குப் பிடித்த பல கதைகள் இன்னும் என் மனசுக்குள் உள்ளன. ஆனால் கதையின் தலைப்பு மட்டும் ஞாபகத்தில் இல்லை. சுரேஸ்கண்ணன் இது தம்பட்டம் அடிக்கும் வேலை என்பது போலச் சொன்னார். என்னை பாலாவும் ஜெயந்தியும் அழைத்த போது நான் அப்படி நினைக்கவில்லை. மாறாக சந்தோசப் பட்டேன். இவைகளையெல்லாம் பட்டியலிட வேண்டும் என்று எனக்கு வெகுநாளாக ஆசை. சில ஆசைகள், இப்படியே மனசோடு நின்று விடுகின்றன. செயற்படுத்தப் படுவதில்லை. இந்தப் புத்தகச் சங்கிலி விளையாட்டு எனது ஆசையை செயலாக்க எனக்கு ஒரு உந்துதலாகவே அமைந்துள்ளது. அதனால் மீண்டும் ஒரு முறை ஜெயந்திக்கும் பாலாவுக்கும் நன்றி கூறிக் கொண்டு தொடர்கிறேன்.

ஊரிலே புத்தககங்களோடே வாழ்ந்த நான் ஜேர்மனிக்கு வந்த பின் பத்து வருடங்களாக புத்தகம் என்பதே கிடைக்காது பெரிதும் தவித்தேன். அப்போது எரிமலை, ஈழநாடு பத்திரிகைகள் மட்டுமே இங்கு புலத்தில் கிடைத்தன. இந்தியாவிலிருந்து ஆனந்தவிகடனையும், பிள்ளைகளுக்காக அம்புலிமாமா, chandamama மூன்றையும் சந்தா கட்டி எடுத்துப் படித்தோம். தற்போது என்னிடமுள்ள புத்தகங்கள் 300க்குள்தான் இருக்கும். அவைகளிலும் தமிழ்புத்தகங்கள் மிகச் சொற்பமே. மற்றவை ஜேர்மனிய, ஆங்கிலப் புத்தகங்களே.

தொடரும்.

17 comments :

Thangamani said...

குறிஞ்சி மலர் - அது ஒரு காலம்.
அப்புறம் யவனராணி - நீங்கள் இப்படித்தான் எழுதுவீர்களா? கரித்துண்டு (மூ.வ) படிக்கவில்லையா?

உங்கள் அப்பா மிக அருமையான நபராக இருந்திருக்கிறார்.

நன்றிகள்.

எம்.கே.குமார் said...

சரித்திரக்கதைகள் எதையும் விட்டு வைத்தாற் போலத் தெரியவில்லை! எல்லாம் இருக்கிறது.

எந்த நாட்டு இளவரசியார் தாங்கள்? :-)

பாலாவும் ஜெயந்தியும் தங்களை அழைத்திருந்ததைப் பார்த்தேன், இல்லாவிட்டால் எனது லிஸ்டில் உங்களது பெயரும் இருந்திருக்கும்.

சீக்கிரம் தொடருங்கள்.

எம்.கே.

enRenRum-anbudan.BALA said...

சுவாரசியமான பதிவு !

nanRi !

Chandravathanaa said...

நன்றி தங்கமணி
பார்த்தீங்களா? கரித்துண்டுவும் படித்தேன். நினைவில் வரவில்லை.
மூ.வ வின் இன்னொரு கதை படித்ததாக ஞாபகம்.
அதன் பெயர் நினைவில் வர மறுக்கிறது.

யவனராணி என்ன..? இப்போது யேர்மனியையே ஜே.. என்று மாற்றி விட்டேன்தானே!
டோண்டு ராகவன் ஆதங்கப் பட்டதுடன் அதைத் திருத்தி விட்டேன்.

Chandravathanaa said...

எம்.கே.குமார் said
எந்த நாட்டு இளவரசியார் தாங்கள்?


எனது வீட்டில் மட்டும்

நன்றி குமார். விரைவில் தொடர்கிறேன்.

பாலா
உங்களுக்கும் நன்றி.

Anonymous said...

சுதா சந்திரனின்(என்று நினைக்கிறேன்) நாவலை அப்படியே திரைப்படமாக எடுக்கவில்லை மகேந்திரன். இடைவேளைக்குப் பிறகு திரைக்கதை வேறு திசையிற் செல்லும். நாவலின் முடிவு சோகமானது. பொதுவாக நாவல்கள் திரைக்கதையாகும்போது அதன் உயிர்தன்மை கொஞ்சம் பாதிப்படையும். ஆனால் மகேந்த்திரன் இத்தவறைச்செய்யவில்லை என்றே கூறலாம். உதாரணம்; உதிரிப்பூக்கள்(புதுமைப்பித்தனின் சிற்றன்னை), நண்டு(சிவசங்கரி).
நீங்கள் பதிவு செய்துள்ள மோகமுள்,47 நாட்கள்கூடத் திரைப் படமாக வந்தனவே. பார்த்தீர்களா?
Sanjeevan

Chandravathanaa said...

சஞ்சீவன்
நீங்கள் சொல்லும் போதுதான் நண்டு சிறுகதையை வாசித்ததே ஞாபகம் வருகிறது. படத்தைக் கூடப் பார்த்தேன். இப்படி நிறையப் புத்தகங்கள் என் நினைவுக்குள் வரவில்லை. சாண்டில்யன், ஜெகத்சிற்பியன், கல்கி... போன்றோரின் இன்னும் பல புத்தகங்களை வாசித்திருக்கிறேன். கதைகள் கூட பல ஞாபகமாக உள்ளன. தலைப்பு ஞாபகமில்லை.

47நாட்கள் படத்தையும் பார்த்தேன். கதை வந்த நாட்களில் அது என்னை வெகுவாகப் பாதித்தது. அதனால் நான்கு முறைகள் வாசித்தேன். அதனாலோ என்னவோ படம் என்னுள் அவ்வளவான பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

உதிரிப்பூக்களும் எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை.

முள்ளும் மலரும் எழுதியது சுதா சந்திரனா? சுதா சந்திரனின் இன்னும் சில கதைகள் வாசித்திருக்கிறேன். உங்களுக்கு நினைவுள்ளவைகளையும் சொல்லுங்கள்.

நட்புடன்
சந்திரவதனா

Boston Bala said...

அருமையாக ஆரம்பித்து இருக்கிறீர்கள். பட்டியல் மட்டும் போடாமல், இவ்வாறு படிப்பதும் நன்றாக இருக்கிறது.

Anonymous said...

சுதா சந்திரன் இல்லை, உமா சந்த்திரன். தவறுக்கு வருந்துகின்றேன். அவருடைய வேறு கதைகள் எனக்குத்தெரியாது.
நான் சிவசங்கரியின் நாவல்களையே அதிகம் விரும்பிப் பட்டித்தேன். மலையின் அடுத்த பக்கம், சுட்டமண், ஒரு சிங்கம் முயலாகிறது(அவன், அவள், அது என்ற படம்), என்பவை ஞாபகத்தில் உள்ள சில.

Chandravathanaa said...

நன்றி பாலா.

சஞ்சீவன்.
நானும் நிறைய சிவசங்கரியின் கதைகளை வாசித்திருக்கிறேன். எவையெவை என்பதுதான் ஞாபகமில்லை.
நீங்கள் படித்த புத்தகங்கள் பற்றி உங்கள் பதிவில் எழுதினீர்கள் என்றால் நாங்களும் அவை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

Dear Chandra,
Great to read your posting !


Uma Chanran is actor Poornam Viswanathan's brother.

anbudan, J

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

Uma Chanra wrote MuLLum malarum.
NOT sudha chandra/ramani chandran.

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

sorry I misspelt : )

it is

Uma Chandran

Chandravathanaa said...

சரியான தகவலுக்கு நன்றி ஜெயந்தி.
காலத்தின் ஓட்டத்தில் நினைவும் மறதியுமாய்.... நிறையவே குழப்பங்கள்.
எத்தனையோ கதைகளும் கதாசிரியர்களும் ஒன்றுக்குள் ஒன்றாய் பின்னப்பட்டுக் கூட இருக்கின்றார்கள்.

அதனால்தான் இப்படி ஒரு புத்தக விளையாடடுத் தொடங்கியபோது நான் சந்தோசப் பட்டேன்.
எனது நினைவுகளை மீண்டும் நிலைப் படுத்தி, நான் வாசித்த.. என்னோடு வாழ்ந்த.. புத்தகங்களையும் கதாசிரியர்களையும் ஓரளவுக்கேனும் அட்டவணைப் படுத்த முயல்கிறேன்.

Anonymous said...

//மூ.வ வின் இன்னொரு கதை படித்ததாக ஞாபகம்.
அதன் பெயர் நினைவில் வர மறுக்கிறது.//

அகல்விளக்கு / அல்லி / மலர் விழி / பெற்ற மனம் / கயமை / நெஞ்சில் ஒரு முள் / வாடா மலர் / கள்ளோ காவியமோ ? / செந்தாமரை / பாலை / அந்த நாள் / மண் குடிசை ?

SP.VR. SUBBIAH said...

///புத்தகங்களோடு பிறந்தேன், வளர்ந்தேன், வாழ்ந்தேன்///

அட்டே நீங்களுமா?
நானும் அப்படித்தான் அம்மணி!(Sister)

கூடவே என் நண்பனின் உதவியால்
James Hadley Chase, Jefferey Archer
என்று...... அந்தக் கால கட்டமெல்லாம் - இப்போது இல்லை!
...ம்ம்ம்ம்!

மஞ்சூர் ராசா said...

இந்த புத்தக விளையாட்டில் ஒன்று மட்டும் கவனித்தேன். முக்கியமாக அனைத்து நண்பர்களும் தவறாமல் கல்கியின் படைப்புகளை படித்திருக்கிறார்கள் என்பதே...

பல படைப்பாளிகளின் படைப்புகளை மறந்துவிட்டீர்களோ அல்லது படிக்கவில்லையோ என தெரியவில்லை.

புதுமை பித்தன், கி.ராஜநாராயணன், காநாசு, சிசு.செல்லப்பா, அசோகமித்திரன், ஸ்ரீ வேணுகோபாலன் (புஸ்பா தங்கதுரை) தேவன், ராகிரா etc. etc.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite