Monday, August 31, 2009

நானும் இணையமும்

முன்கதை:
இலங்கைத் தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் உரையாடப்பட்டதற்கு அமைவாக இந்த விளையாட்டினை மு.மயூரன் தொடக்கி வைத்துள்ளார். வெறும் விளையாட்டு என்றில்லாமல் இந்த விளையாட்டுக்கு ஓர் ஆழமான நோக்கம் இருக்கிறது. ஒவ்வொருவரும் வலைபதிய வந்த கதையைச் சொல்வதன் ஊடாக வெவ்வேறு கோணத்தில் தமிழ் இணையத்தின் வரலாற்றுத் தகவல்களோடு அதற்கும் தமக்குமான உறவையும் சொல்லத் தொடங்குவார்கள். அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இந்தக்கதைகள் தகவல்களாக ஆவணமாகப் போய்ச்சேரும்.

விதிமுறை:
1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.
2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் மூவருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.
3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்ல வேண்டும்.
மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

வலைபதிய வந்த கதை:
தினமும் இரவில் அன்றைய நாளின் நிகழ்வுகளை டயறியில் எழுதி விட வேண்டுமென்பது எனது அப்பா எனக்குக் கற்றுத் தந்த பாடங்களில் ஒன்று. அதனால் நான் எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டிருப்பேன். தாயகத்தில் வாழ்ந்த போது எனது எழுத்துக்களில் சிலதை அங்கு வெளியாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி.. என்று எல்லாவற்றிற்கும் அனுப்புவேன். நான் அனுப்பிய எதுவும் பிரசுரமாகால் போனதில்லை. அந்த உற்சாகத்தில் நான் தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருந்தேன்.

புலம் பெயர்ந்த பின்னும் எழுதினேன். ஆனால் புலத்தில் ஆரம்ப காலத்தில் எனது எழுத்துக்களுக்கான தளங்கள் இருக்கவில்லை. எழுதி எழுதி எனது லாச்சிகளையும், அலுமாரிகளையும் நிரப்பிக் கொண்டேன்.


1990 இலேயே எனது வீட்டுக்குள் கணினி வந்து விட்டாலும், 1993-1994 களில்தான் எனக்கு கணினியோடு பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது அதனைப் பயன்படுத்தும் முறை அவ்வளவாகத் தெரியாதிருந்தது. 1996 வரை என் பிள்ளைகளோடு சேர்ந்து தூர தேசத்தில் வாழும் எனது உறவுகளுடன் அரட்டை அடிப்பது, விளையாடுவது என்ற ரீதியில்தான் கணினியைப் பயன் படுத்தினேன்.

1997 இல் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஊடகங்களின் பற்றாக் குறையைக் கவனத்தில் கொண்ட எனது மகன் திலீபன், தான் ஒரு மாதாந்த சஞ்சிகையை வெளியிட விரும்புவதாகச் சொன்னான். அவனது அந்த எண்ணம் நல்லதாகவே பட்டதால் அதைச் செயற்படுத்த உதவும் முகமாக கணினியில் சில விடயங்களைப் பழக ஆரம்பித்தேன். எனது கணவர் கீறுவது, வடிவமைப்பது சம்பந்தமான விடயங்களைக் கவனிக்க நான் எழுதுவது எப்படி என்பதைக் கவனிக்கத் தொடங்கினேன். திலீபனின் முழு முயற்சியுடன் எனதும், கணவரதும் பங்களிப்புடன் "இளங்காற்று" என்ற பெயரில் அழகிய சஞ்சிகை உருவானது.

அதோடு ஆங்கில எழுத்துக்களை மட்டும் எழுதப் பழகியிருந்த நான் தமிழ் எழுத்துக்களையும் கணினியில் தட்டத் தொடங்கினேன். ஆனாலும் இப்போது போல அப்போது அது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. எழுத்துக்களை நினைவில் வைத்திருப்பதுவும், வேகமாகத் தட்டுவதும் மிகச் சிரமமாகவே எனக்குத் தெரிந்தன. நான் படும் சிரமத்தைப் பார்த்த எனது கணவரிடம் ஒரு உத்தி தோன்றியது. அவர் கீபோர்ட்டின் மாதிரி ஒன்றை வரைந்து அதில் எங்கெங்கே என்னென்ன தமிழ் எழுத்துக்கள் வரும் என்பதையும் குறித்து எனது கணினிக்குப் பின்னுள்ள சுவரில் ஒட்டி விட்டார். ஏற்கேனவே ஆங்கிலத்தில் தட்டச்சத் தெரிந்த எனக்கு அதை வைத்து தமிழ் எழுத்துக்களைப் பழகுவது வெகு சுலபமாக இருந்தது. ஒரு வாரத்தில் எந்தெந்த விரல்களுக்கு என்னென்ன எழுத்துக்கள் என்பதை நான் நினைவு படுத்தி எழுதத் தொடங்கி விட்டேன். அப்போது எனக்கு பாமினி அறிமுகமாகவில்லை. Ravi A என்ற எழுத்துருவையும், நல்லூர் என்ற எழுத்துருவையும் தான் பாவித்தேன். இளங்காற்று சஞ்சிகைகளும் முழுக்க முழுக்க இந்த எழுத்துருக்களை வைத்தே உருவாகின.

அதன் பின், அதாவது 1997இன் நடுப்பகுதியிலிருந்து மெது மெதுவாக ஐரோப்பிய நாடுகளில் தமிழ் ஊடகங்கள் முகம் காட்டத் தொடங்கின. எனது எழுத்துக்களுக்கு அவைகள் தளமாகின. சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்ல எனக்கு ஒரு வழி கிடைத்தது.

எனது எழுத்துக்கள், பெண்களிடையே புதிய மாற்றங்களை ஏற்படுத்துமளவுக்கு பல புலம் பெயர்ந்த வீடுகளிலும் எனது கருத்துக்கள் ஒலிக்கத் தொடங்கின. சில வீடுகளில் இந்த மாற்றங்களை ஏற்க முடியாத ஆண்களால் வானொலிகள் உடைத்தெறியப் பட்டன. அப்போதுதான் கத்திக் கூறுவதை விட, எழுத்து வலிமையாக இருப்பதை உணர்ந்தேன். எனது சமூகத்தின் பல தவறான கொள்கைகளையும், செய்கைகளையும் சுட்டிக் காட்டவும், அதில் உள்ள பாதிப்புகளை அவர்களை உணர வைக்கவும் எனக்கு என் எழுத்துக்கள் உதவின.

அந்த எழுத்துக்களைச் சேமித்து எப்போதும் எவர் விரும்பிய நேரமும் பார்க்கக் கூடிய வகையில் செய்து வைக்க இணையம் என்ற ஒன்று சாத்தியமானது என்பதை 2001, 2002 களில் உணர்ந்து கொண்டேன். எனக்கென ஒரு தளத்தை உருவாக்குவது உடனடியாக எனக்குச் சுலபமானதாக இருக்கவில்லை. HTML என்றாலே என்னவென்று எனக்கு அப்போது தெரியாது.

என்னால் எனக்கென ஒரு இணையத்தளத்தை உருவாக்க முடியவில்லையே என நான் ஆதங்கப் பட்ட போது எனது மகன் துமிலன் ஒரு HTML புத்தகத்தை என்னிடம் தந்து "அம்மா இதைப் படித்துப் பாருங்கள்" என்றான்.

மெதுமெதுவாக எனக்குத் தெரிந்தளவு ஜேர்மன் மொழியோடு அவைகளைப் பார்த்தும், படித்தும், கிரகித்தும்… எனக்கென ஒரு தளத்தை உருவாக்கினேன். அது http://www.selvakumaran.com/

எனக்கென ஒரு தளத்தை உருவாக்குவதற்கு முன்னரே 2001அளவில் மோகன் அவர்களின் யாழ் இணையம் எனக்கு அறிமுகமானது. அந்த சமயத்தில் யாழ்கருத்துக்களத்தில் ஒரு சிலரே எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் காரசாரமான விவாதங்கள், சண்டைகள், கருத்து மோதல்கள்... என்று இணையத்தினூடான ஊடாடல்களுக்கும், கருத்துப்பகிர்வுகளுக்கும் அது ஒரு பெரும்தளமாக விளங்கியது. எழுதவும், வாசிக்கவும், பலவிடயங்களை அறிந்து கொள்ளவும் அது உதவியது. ஆனாலும் காலப்போக்கில் அது மோகன் என்பவரின் தனிப்பட்ட மேலாண்மையிலிருந்து விலகி பலரும் உரிமை கொண்டாடும் ஒரு தளமாக மாறியது. கருத்துமோதல்களை விட தனிமனித மோதல்களே அதிகமாயின. இந்த நிலையில் ஆரோக்கியமான விவாதங்களையோ, கருத்தாடல்களையோ அங்கு தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அதிலிருந்து மெதுமெதுவாக விலக வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. ஆனாலும் அந்த நேரத்தில் புலம்பெயர் தமிழர்களின் படைப்புகளின் களமாகவும், பெரிய விவாதக்களமாகவும் யாழ்கருத்துக்களம் இருந்ததை யாரும் மறந்து விடவோ, மறுத்து விடவோ முடியாது.

யாழ்கருத்துக்களத்தில் எழுதத் தொடங்கிய போதுதான் எனக்கு பாமினி அறிமுகமானது என்ற ஞாபகம். ரவியிலிருந்து பாமினிக்கு மாறிய போது சில எழுத்துக்களை எனது விரல்களுக்கு மாற்றிப்பழக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் எனது இணையத்தளத்தையும் முழுக்க முழுக்க பாமினி எழுத்துருவுடன்தான் உருவாக்கினேன். அப்போதெல்லாம் எனது இணையத்தளத்தை அலுவலகத்திலிருந்தோ, வேறு இடங்களிலிருந்தோ பார்க்கும் போது ஒன்றையுமே வாசிக்க முடியாத நிலைதான் இருந்தது. இதே போல மற்றவர்களின் தளங்களை என்னால் சரியாக வாசிக்க முடியாதிருந்தது. இது எனக்குள் எப்போதும் ஒரு எரிச்சலையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. `ஏன் எல்லோருமே ஒரு எழுத்துருவைப் பாவிக்கக் கூடாது?` என்று எனக்குள்ளே கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. நிவாரணம் தேடுமளவுக்கு என்னிடம் கணினித்துறையிலான அனுபவமோ, அறிவோ இல்லாதிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில்தான் அதாவது 2003 ஜூலை மாதத் திசைகளில் ´உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு இணையத்தளம் ஓசியில்...` என்று காசி அவர்களின் கட்டுரை வெளியானது. அப்போது ´இது எப்படிச் சாத்தியமாகும்!` என்று ஆச்சரியப் பட்டேன்.

காசி அவர்கள் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று வாசகர்களைக் கேட்டு ´வலைப்பூ` என்று நண்பர்கள் சொல்கிறார்கள். வலைப்பூ என்ற பெயர் எப்படி என்றும் கேட்டிருந்தார். உண்மையிலேயே வலைப்பூ என்ற பெயர் கவித்துவமாக என்னைக் கவர்ந்தது. அதன் பின் இது பற்றி யாழ் கருத்துக்களத்திலும் பேசினார்கள்.

வலைப்பூவில் எழுதுவதாயின் கண்டிப்பாக யூனிக்கோட் தேவைப்பட்டது. சும்மா பாமினியில் எழுதிக் கொண்டிருந்த எனக்கு யூனிக்கோட்டுக்கு மாற்றி எழுதுவதெல்லாம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஆர்வம் என்னை விட்டு வைக்கவில்லை. சுரதாவின் ஆயுதத்தின் உதவியுடன், எனது முதற் பரீட்சார்த்தப் பதிவாக நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த நாகரீகம் என்ற குட்டிக்கதையை 27.7.2003 அன்று பதிந்து பார்த்தேன். சந்தோசமாகத்தான் இருந்தது. எனது வலைப்பூவிற்கு மனஓசை என்ற பெயரிட்டுக் கொண்டேன்.

யாருடைய குறுக்கீடோ, எந்த விதமான தடைகளோ இல்லாத எனக்கான சுதந்திரத்துடன் எதை விரும்பினாலும் அதை என்னால் வலைப்பூவில் பதிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு வித ஆரோக்கியமான திருப்திகரமான உணர்வையே தந்தது. இவைகளோடு இலவசம், சுலபமாக எதையும் இணைக்கக் கூடிய தன்மை... என்று எல்லாம் சாதகமாகவே இருந்தன. கூடவே பல விடயங்களை உடனுக்குடன் பலரின் பார்வைக்குக் கொண்டு வரவும், சந்தோசங்கள், உணர்வுகள், நினைவுகள், அறிந்தவைகள்.. படித்தவைகள்... என்று பல விடயங்களை தனித்தனிப் பதிவுகளாகப் பதிந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களின் எண்ணங்கள், கருத்துக்களை அறிந்து கொள்ளவும் ஏதுவாக இருந்தது. உலகத்தின் எங்கோ ஒரு மூலையை ஆறுதலாக வீட்டில் இருந்து தரிசிக்க முடிந்தது.

அந்த நேரத்தில் மிகக் குறைந்த தொகையினரே தமிழில் வலைபதியத் தொடங்கியிருந்தார்கள். அதனால் மதி கந்தசாமியின் வலைப்பதிவுகளின் தொகுப்பு http://tamilblogs.blogspot.com/ இன் உதவியுடன் எல்லோருடைய பதிவுகளையும் ஓடி ஓடி வாசிக்க முடிந்தது.

தமிழ்மணத்தின் வரவின் பின் http://tamilblogs.blogspot.com/ இன் தேவை இல்லாமற் போனது.

நான் Blogspot இல் தான் எனது முதல் வலைப்பதிவை ஆரம்பித்தேன். அதன் பின் வேறு பலதளங்கள் அறிமுகமாயின. ஆயினும் நான் Blogspot இலேயே இருக்கிறேன்.

அதே போல பாமினியில் எழுதி யூனிக்கோட்டுக்கு மாற்றுவது எனது வழக்கம். எனது விரல்கள் பாமினி எழுத்துருவுடன் நன்கு பரிச்சயமாகி விட்டன. மீண்டும் இன்னொரு எழுத்துக்கு மாறுவது பற்றிய எண்ணம் எனக்கு இதுவரை வரவில்லை. சில சமயங்களில் வேறு எழுத்துருக்களில் ஏதாவது தேவைப்படும் போது அதைக் கூட பாமினியில் எழுதி விட்டு சுரதாவின் புதுவையிலோ அன்றி இஸ்லாம்கல்வியிலோ மாற்றிக் கொள்வதே எனக்கு மிகுந்த வசதியாகத் தெரிகிறது.

எனது கீபோர்ட் சாதாரணமான ஜேர்மனியக் கீபோர்ட். ஆங்கிலக் கீபோர்ட்டுகளுடன் பார்க்கும் போது இதில் Ä Ü Ö என்ற எழுத்துக்கள் கூடுதலாக இருக்கின்றன. அதை விட ´ல` வும், ´ண` வும் இடம் மாறியுள்ளன. , . - போன்றவைகளும் மாறித்தான் உள்ளன. லண்டனுக்கோ, அவுஸ்திரேலியாவுக்கோ போகும் போது கீபோர்ட்டை பழக்கப்படுத்த எனக்கு ஒரு சில நாட்கள் தேவைப்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.

வலையுலகப் பிரவேச அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்:
டிசே த‌மிழ‌ன்
சயந்தன் - சாரல்
மலைநாடான் -Kurinchimalar
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

8 comments :

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

அப்படியே மயூரனில் பதிவின் மேலுள்ள விளக்கத்தையும் விதிமுறைகளையும் இணைத்துவிட்டீர்களானால் இத்தொடர்பதிவு மாற்றமடைவதை சிறிது தடுக்கமுடியும். பதிவிற்கான தெளிவான விளக்கமும் போய்ச் சேரும்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

மு. மயூரன் said...

அழைப்பை ஏற்றமைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

தமிழ் கணினித் தலைமுறையின் ஆரம்பங்களிலேயே நீங்கள் கணித்தமிழை உள்வாங்கியிருப்பது சிறப்பானது.

ramachandranusha(உஷா) said...

சந்திரா! அந்த நாள் நினைவுகளை அழகாய் கிளறி விட்டீர்கள். நன்றி

KarthigaVasudevan said...

நீங்கள் சொல்லியிருக்கும் தகவல்களைப் பார்த்தால் இன்றைக்கு வலைபதிவு எழுதுவது என்பது வெகு எளிதான சமாச்சாரம் மட்டும் அல்ல...தமிழில் இப்படி பலர் எழுத சிலர் வெகு முனைப்போடு செயல் பட்டிருக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.
அத்தகைய நண்பர்களுக்கு மிக்க நன்றிகள்.

DJ said...

அன்பின் சந்திரவதனா,
அழைத்தமைக்கு நன்றி. திண்ணை/பதிவுகள் விவாதக்களத்தில் எழுதியன் தொடர்ச்சியில் வலைப்பதிய வந்தேன் என்பதைத் தவிர குறிப்பிடும்படியாக இதுகுறித்துச் சொல்ல எதுவுமில்லை. நினைவில் வேறு எதுவும் வந்தால் விரிவாக எழுத முயற்சிக்கின்றேன். அழைப்புக்கு மீண்டும் நன்றி.

அன்புடன்,
டிசே

Muruganandan M.K. said...

மிக அழகாகவும் சுவார்ஸமாகவும் உங்கள் வலைப்பதிவு அனுபவங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

எனது அனுபவங்களை எழுத அழைத்திருக்கிறீர்கள்.

மிக்க நன்றி.
வேறு சற்று அலுவல்கள் காத்து நிற்கின்றன. துடிந்ததும் எழுதுகிறேன்.

மலைநாடான் said...

சந்திர வதனா!
அழைப்புக்கு நன்றி. தாமதமாகவே அறிந்து கொண்டேன். நினைவுகளை மீள் பதிய நிச்சயம் முயற்சிக்கின்றேன். சற்றுப் பொறுங்கள்

Chandravathanaa said...

மதுவதனன், மயூரன், உஷா, திருமதி தேவ், டி.சே, டொக்டர் முருகானந்தம், மலைநாடான்
அனைவருக்கும் நன்றி.

டி.சே, டொக்டர் முருகானந்தம், மலைநாடான் நீங்கள் மூவரும் எழுத முடிந்தால் எழுதுங்கள்.

நன்றி

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite