அப்பா, அப்போது அந்தப் புகையிரதநிலையத்தில்தான் புகையிரதநிலைய அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். நாங்கள் அப்பாவின் ரெயில்வே குவார்ட்டேர்ஸில் தங்கியிருந்தோம். அந்த பங்களா, Platform இன் ஒரு அந்தத்தின் முடிவில் இருந்தது. அன்று அப்பாவுக்குப் பகல் வேலை. மாலை நான்கு மணியளவில் அம்மா கடலைப் பருப்பு வடை சுட்டு, சுடுதண்ணீர்ப்போத்தலில் தேநீரும் விட்டு, அப்பாவிடம் கொண்டு போய்க் கொடுக்கும் படி சொல்லித் தந்து விட்டா.
"கவனமாகப் போ. Platform கரைக்குப் போயிடாதை. விழுந்திடுவாய். ரெயின் வந்திடும்“ என்ற அம்மாவின் அன்பு நிறைந்த கட்டளை என் மூளையின் ஆழத்தில் பதிந்திருந்து என்னை எச்சரித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் நான் அந்த எச்சரிக்கையைச் சட்டை செய்யாமல் ஒரு பக்கம் கையிடையில் சுடுதண்ணீர் போத்தலை அணைத்த படியும் மறு கையில் வடைப் பார்சலை இறுகப் பிடித்த படியும், எனக்கேயுரிய துள்ளலில் நடந்து கொண்டிருந்தேன். அம்மா எங்கே பார்க்கப் போகிறா என்ற தைரியம்.
நாகொல்லகம போலவே புகையிரதநிலையமும் அழகாக இருந்தது. தண்டவாளம் தாண்டிய புல்வெளியில் சிலர் Volley Ball விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களையும் தாண்டிய பச்சை மரங்களிடையே சிவப்பு, மஞ்சள், வெள்ளை... என்று பற்பல வர்ணங்களில் பூக்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. மாங்காய்கள் போல ஏதோ காய்கள் சில மரங்களில் காய்த்துத் தொங்கின.
நீலமாய், அழகாய் வானம் இருக்க, வானவெளியில் கூட்டங் கூட்டமாய் சிறுபறவைகள் சிறகை விரித்துப் பறந்து கொண்டிருந்தன. நகரும் முகில் கூட்டங்களுக்குள் விதம் விதமான உருவங்கள் தெரிந்தன. ம்.... என்ன நடந்தது?
இயற்கையோடு சேர்ந்து நடக்கையில் ஒரு கணம் என்னை மறந்து போனேன். கீழே வீழ்ந்து விட்டேன். தண்டவாளத்தில் "டொங்" என்று இடிபட்ட சத்தத்தோடு சுடுதண்ணீர்ப்போத்தல் உருண்டது. வடைப்பார்சல் அருகில்தான் இருந்தது. உதட்டில் வலித்தது. தடவினேன். சிவப்பாக இரத்தம். உதடு வெடித்து விட்டது.
‘யாராவது பார்க்கிறார்களா‘ என்று பார்த்தேன். ஒருவரும் பார்க்கவில்லை. வலியை விட யாரும் பார்த்து விடக் கூடாது என்பதில்தான் என் முழுக்கவனமும் இருந்தது. பார்த்து விட்டால் வீழ்ந்ததிலான அவமானத்தோடு தகவல் அப்பாவுக்கும் போய் விடும்.
அவசரமாக பிளாஸ்கைத் தூக்கிக் கொண்டு Platform இல் ஏற முயற்சித்தேன். எனது அந்தரமும் அவசரமும் உடலில் திடீரென்று ஏற்பட்டு விட்ட வலியும் சேர்ந்து என்னால் Platform இன் உயரத்துக்குத் தொங்கி ஏற முடியாமல் இருந்தது. திரும்பிப் பார்த்தேன். ஒரு கணம் நெஞ்சு சில்லிட்டது. சிக்னல் வீழ்ந்து விட்டது. ஏதோ ஒரு லைனில் ரெயின் வரப் போகிறது. Platform கரையோடு நான் நின்றேன். தண்டவாளங்களைக் கடந்து மற்றப் பக்கம் ஓடலாம் என்ற யோசனை ஏனோ உடனே வரவில்லை. ஓடினாலும் ரெயின் வருமுன் தாண்டுவேனா என்பது அடுத்த விடயம்.
அப்போதுதான் புகையிரதநிலைய உதவிஅதிபரான டிக்சன் அங்கிள் Tablet உடன் வந்தார். அவர் அப்பாவின் உதவியாளர். என்னைக் கண்டதும் திடுக்கிட்ட அவர் ஓடி வந்து கையை நீட்டினார். நான் அவரது கையைப் பிடித்ததும் இழுத்து.... எறியாத குறையாய் Platform இல் என்னைப் போட்டார்.
ரெயின் காற்றைக் கிழித்துக் கொண்டு வந்து, Platform இன் தொடக்கத்தில் நின்ற போர்ட்டர் மார்ட்டினிடம் Tablet ஐக் கொடுத்து, டிக்சன் அங்கிளின் கையிலிருந்த Tablet ஐ வாங்கிக் கொண்டு நிற்காமலே போய் விட்டது. அதன் பின்தான் டிக்சன் அங்கிள் என்னை மிகுந்த கோபத்தோடு பார்த்தார். சிங்களத்தில் திட்டினார்.
நான் அப்பாவின் அலுவலக அறைக்குள் போய் விட்டேன். அப்பா தொலைபேசியில் அலுவலக விடயமாக யாருடனோ சிங்களத்தில் கதைத்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் மெல்லிய முறுவலுடன் நோக்கியவர் உடனேயேமுகத்தில் கேள்விக்குறி தொக்க.. என்னைப் பார்த்து விட்டுக் கதையைத் தொடர்ந்தார். உடைந்திருந்த சொண்டும் அதன் வழி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த இரத்தமும் அவரைக் குழப்பியிருக்க வேண்டும்.
‘நின்றால் பிழை‘ என்று வடையையும் தேநீரையும் உள் அறை மேசையில் கொண்டு போய் வைத்து, விட்டு உடனேயே ரெயில்வே குவார்ட்டர்ஸ்சுக்குத் திரும்பி விட்டேன். சொண்டை உடைத்துக் கொண்டு வந்திருந்த என்னைக் கண்ட அம்மா பதறிப் போய் "என்ன நடந்தது..?" என்று கேட்டா. அம்மாவுக்குப் பொய் சொல்ல அப்போது, அந்த எட்டு வயதில் எனக்குத் தெரியாது. பிறகென்ன அம்மாவிடம் மாட்டினேன்.
அது மட்டுமா..? அப்பாவிடமும்தான். வேலை முடிந்து அப்பா வந்த விதத்திலேயே டிக்சன் அங்கிள் எல்லாம் சொல்லி விட்டார் என்பது தெரிந்தது. கோபம் தெறிக்க வந்தவர் என்னைக் கண்டதும் சற்று ஆறி விட்டார்.
"என்ன பிள்ளை... இப்பிடியே பொறுப்பில்லாமல் நடக்கிறது..?" என்று கண்டித்து விட்டு, அம்மாவிடம் "உம்மடை மகள் இண்டைக்கு என்ன செய்தவள் தெரியுமே..? டிக்சன் மட்டும் இல்லையெண்டால் ஒரு செத்த வீடெல்லோ இப்ப கொண்டாடியிருப்பம்" என்றார்.
உண்மைதான். அன்று டிக்சன் அங்கிள் மட்டும் இல்லாதிருந்திருந்தால், இன்று நான் இதை எழுதக் கூட இங்கில்லாது போயிருப்பேன்.
(இது ஏற்கெனவே சந்திரமதி அவர்களின் ‘மரத்தடி‘யில் 2004 இல் வெளியானது. இப்போது சற்று மெருகேற்றி மீண்டும் பதிகிறேன்.)
https://www.facebook.com/chandravathanaa.selvakumaran/posts/pfbid036m3V3NAgLqQxcRmgm7iVe569FxgeSmGHsn3UV7HWwnUWuHuFE5LxXfH31xakUJASl
No comments :
Post a Comment