Tuesday, September 25, 2007

உணர்வுகள்


6)
பறக்க நினைக்கும் போதெல்லாம்
வாழ்க்கைக் கோட்பாடுகள்
வலிந்திறுக்கும் விலங்குகளாய்
கட்டிப் போட்டு விடுகின்றன

7)
நடை உடைகளைக் கூட
மற்றொருவர் தீர்மானிக்கும்
இந்த சமுதாயத்தின் மத்தியில்
எப்படி சிறகசைப்பது

Monday, September 24, 2007

நெஞ்சம் மறக்குமா..?



நெஞ்சம் மறக்குமா?
நெஞ்சம் மறக்குமா?
நெஞ்சம் மறக்குமா?

வல்வெட்டித்துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
பன்னிரண்டு புலிகள் ஒன்றாய்ப்
படுத்ததை நெஞ்சம் மறக்குமா?
படுத்ததை நெஞ்சம் மறக்குமா?

குமரப்பா புலேந்தி அப்துல்லா
ரகு நளன் பழனி
மிரேஸ் றெஜினோல்ட் தவக்குமார்
அன்பழகன் கரன் ஆனந்தகுமார்
-(2)

எங்கள் தலைவர்கள் எங்கள் வீரர்கள்
இவர்களல்லவா"?
கண்கள் மூடி எங்கள் புலிகள் மாண்ட
கதையைச் சொல்லவா?
தங்கத் தமிழீழ விடுதலை காண
நெஞ்சம் துடித்தாரே
சிங்கள இந்திய அரசுகள் சதியால்
நஞ்சு குடித்தாரே

ஈழத்தமிழன் தமிழீழக் கடலில்
போனால் பிடிப்பாராம்
இந்திய உதவி கொண்டே தமிழனின்
வாழ்வை முடிப்பாராம்
ஆழக்கடலில் போனபுலிகளை
பிடித்துச் சென்றாரே
அழகும் இளமையும் பொங்கும் வயதில்
துடிக்கக் கொன்றாரே

ஆழக்கடலில் போன புலிகளை
பிடித்துச் சென்றாரே
அழகும் இளமையும் பொங்கும் வயதில்
துடிக்கக் கொன்றாரே

05.10.1987 அன்று இந்திய அரசால் கைது செய்யப்பட்டு, இலங்கை அரசிடம் கையளிக்கப்பட இருந்த நிலையில் நஞ்சுண்டு வீரச்சாவடைந்த பன்னிரு வேங்கைகள் நினைவாக

பாடல் வெளிவந்த ஒலிப்பேழை - புயற்கால இராகங்கள்
குரல் - தேனிசை செல்லப்பா

Sunday, September 23, 2007

உணர்வுகள்

1)
வாழ்க்கை
அது மிக வேகமாக விரைகிறது
எந்த அவசரத்திலும்
உன் நினைவுகளை மட்டும்
விட்டுச் செல்லாமல்

2)
அன்பு காதல் நன்றி...
போன்ற சொற்களுக்குள்
அடக்க முடியாத உணர்வுகள்
சமயத்தில் என்னை
திக்கு முக்காட வைக்கின்றன

3)
நடுநிசியில்
உன் நினைவுகள்
என்னைத் தட்டி எழுப்புகின்றன

4)
பகல் பொழுதுகளில்
ஆழ்ந்த மௌனத்தில் இருப்பதாய் நினைக்கிறார்கள்
நான் உன்னோடு பேசிக் கொண்டிருப்பது தெரியாத
அயலவர்கள்

5)
சிலதை வாய் திறந்து
யாரோடாவது பேச வேண்டும் போல
மனசு அந்தரிக்கும்
அப்படித்தான் இப்போது
உன்னைப் பற்றியும்

உணர்வுகள்

1)
வாழ்க்கை
அது மிக வேகமாக விரைகிறது
எந்த அவசரத்திலும்
உன் நினைவுகளை மட்டும்
விட்டுச் செல்லாமல்

2)
அன்பு காதல் நன்றி...
போன்ற சொற்களுக்குள்
அடக்க முடியாத உணர்வுகள்
சமயத்தில் என்னை
திக்கு முக்காட வைக்கின்றன

3)
நடுநிசியில்
உன் நினைவுகள்
என்னைத் தட்டி எழுப்புகின்றன

4)
பகல் பொழுதுகளில்
ஆழ்ந்த மௌனத்தில் இருப்பதாய் நினைக்கிறார்கள்
நான் உன்னோடு பேசிக் கொண்டிருப்பது தெரியாத
அயலவர்கள்

5)
பறக்க நினைக்கும் போதெல்லாம்
வாழ்க்கைக் கோட்பாடுகள்
வலிந்திறுக்கும் விலங்குகளாய்
என்னைக் கட்டிப் போட்டு விடுகின்றன

6)
நடை உடைகளைக் கூட
மற்றொருவர் தீர்மானிக்கும்
இந்த சமுதாயத்தின் மத்தியில்
எப்படி சிறகசைப்பேன்

7)
சிலதை வாய் திறந்து
யாரோடாவது பேச வேண்டும் போல
மனசு அந்தரிக்கும்
அப்படித்தான் இப்போது
உன்னைப் பற்றியும்

Wednesday, September 12, 2007

வசதிகளும் வசதியீனங்களும்

வீட்டுக்குள் நுழைந்ததும் வழமை போல வானொலியை அழுத்தினேன். பாடவில்லை. பேசவில்லை. மௌனம் காத்தது.

அதிகாலையிலேயே எழுந்து வேலைக்குப் போய் விட்டதால் யன்னல்களுக்குரிய சட்டர்கள் இன்னும் இழுக்கப் படாமலே இருந்தன. வெளி வெளிச்சம் இடைவெளிகளினூடு வீட்டுக்குள் நுழைய முயற்சித்தாலும் மெல்லிய இருள் கவிந்திருந்தது. ´ஏன் பாடவில்லை´ என்ற யோசனைக்கு முன்னரே வழமையான அவசரத்துடன் அடுத்த கட்ட வேலையாக யன்னலை நெருங்கி சட்டரை மேல் உயர்த்துவதற்கான பட்டனை அழுத்தினேன். ம்... கும். அதுவும் அசமந்த தனமாக அப்படியே நின்றது.

அப்போதுதான் உறைத்தது. மின்சாரம் இல்லை. ஜேர்மனியில் அப்படி நடப்பது அபூர்வம். மின்சாரத்தை ஏதாவது காரணத்துக்காக நிறுத்துவதாக இருந்தாலும் முற்கூட்டியே அறிவிப்பது மட்டுமல்லாமல் அன்றைய தினம் ஒவ்வொரு வீட்டு வாசற்கதவிலும் ´இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை மின்சாரம் நிறுத்தப் படும்´ என்பதை எழுதி ஒட்டி விடுவார்கள்.

வெளியில் விரைந்து கதவைப் பார்த்தேன். ஒன்றும் ஒட்டவில்லை.

அப்படியானால் எனது வீட்டில்தான் ஏதும் பிரச்சனையோ என்று நிலக்கீழ் அறைக்குப் போய் பார்க்க முயற்சித்தால் அங்கு கும்மிருட்டு. வெளி வெளிச்சம் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைந்த அந்த அறையில் தட்டித் தடவி, பின்னர் ரோச் நினைவு வர அதை எடுத்துப் பார்த்தால் எனது வீட்டில் பிழை இல்லை.

மின்சார இலாகாவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள எண்ணி தொலைபேசியைத் தட்டினால் அதுவும் உயிரிழந்தது போல இருந்தது.

ம்... வசதிகள் அதிகமானாலும் பிரச்சனைதான். இலக்கங்களைச் சுழற்றித் தொலைபேசிய காலம் போய் அழுத்தித் தொலைபேசும் காலம் வந்தது. அது கூடப் பரவாயில்லை. இப்போது தொலைபேசிகள் கூட மின்சாரத்தில். இந்த நிலையில் மின்சாரம் போனதும் வீட்டில்
எல்லாமே ஸ்தம்பிதம் அடைந்தது போல என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தது.

அந்த நேரத்தில் அடுத்த ஆபத்பாந்தவன் கைத்தொலைபேசிதான். வசதிகளின் அதிஉச்ச பாவனைகளில் ஒன்றான கைத்தொலைபேசி கை கொடுக்க மினசார இலாகாவுடன் தொடர்பு கொண்ட போது "வீதி திருத்த வேலையின் போது ஒரு வயர் அறுந்து விட்டது. இரண்டு மணித்தியாலங்களில் சரி செய்து விடுவோம்" என்றார்கள்.

இரண்டு மணித்தியாலங்களும் என்ன செய்வது? கணினிக்கும் மின்சாரம் வேண்டுமே. மனம் அலுத்துக் கொண்டது.

சரி எதற்கும் முதலில் தேநீரை அருந்துவோம் என நினைத்து குசினிக்குள் சென்று தண்ணீர் சூடாக்கும் குவளையை எடுத்து தண்ணீர் விட்டு சுவிச்சை அழுத்தினேன். ம்... கரண்ட் இல்லை.

சுள்ளித் தடிகளும், விறகும் மூன்றுகால் அடுப்பும் இல்லையே என்ற ஒரு ஆதங்கம் சட்டென்று மனதில் வந்தது.

இரண்டு மணித்தியாலங்களும் இருண்ட வீட்டுக்குள், இயங்காத பொருட்களுடன் என்ன செய்வது?
வெளியில் இறங்கி நடக்கத் தொடங்கினேன். மெல்லிய குளிர்ந்த காற்றும், சூரியனின் ஒளியும் என்னை இதமாகத் தழுவின.

இயற்கை அழகானது.

Friday, September 07, 2007

கலை, இலக்கியப் போட்டி அறிவிப்பு

17 ஆவது ஆண்டில் புலிகளின் குரல்: "வானோசை - 17" கலை, இலக்கியப் போட்டி அறிவிப்பு
[வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 17:54 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் 17 ஆவது ஆண்டு நிறைவையொட்டிக் கலை இலக்கியப் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

இது குறித்த விபரம்:

தமிழீழத்தில் வாழ்பவர்களுக்கான போட்டி,

புலம்பெயர்ந்து பன்னாடுகளில் வாழ்பவர்களுக்கான போட்டி,

தமிழகத்து தமிழர்களுக்கான போட்டி என மூன்றாக
வகுத்துத் தனித்தனிப் போட்டியாக நடாத்தப்படும்.

ஒவ்வொரு போட்டியிலும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழும், பரிசும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு வானொலி நாடகம், சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

ஆக்கங்கள் யாவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்கக் கூடியதாகவும், தமிழின மேம்பாடு கருதியதாகவும் அமைய வேண்டும்.

ஆக்கங்கள் எழுதுதாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட வேண்டும்.

ஆக்கத்தை எழுது தாளில் கையெழுத்துச் சுவடியாகவோ, தட்டச்சுச் சுவடியாகவோ அனுப்பி வைக்கலாம்.

ஆக்கங்களைச் சுவடியாக்கும் போது பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது சிறப்புக்குரியதாகும்.

போட்டிக்கான ஆக்கங்களை எழுதுபவர்கள் தங்கள் பெயர், முகவரி ஆகியவற்றைத் தனியான தாளில் எழுதிச் சுவடியோடு இணைக்க வேண்டும்.

எந்தப் போட்டிக்கான ஆக்கம் என்பதை மடல் உறையின் மேல் இடப்பக்க மூலையில் குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள்.

வானொலி நாடகம்:

20 நிமிடங்களுக்கு அமைவாக எழுதப்பட வேண்டும்.

எழுதுதாளில் பத்துப் பக்கங்களுக்குக் (10) குறையாமலும்

பன்னிரண்டு (12) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

சிறுகதை:

நான்கு (04) பக்கங்களுக்குக் குறையாமலும், ஐந்து (05) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

கவிதை:

மூன்று (03) பக்கங்களுக்குக் குறையாமலும், நான்கு (04) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

கவிதைகள் மரபுக் கவிதைகளாகவோ, புதுக்கவிதைகளாகவோ அமையலாம்.

ஆக்கங்களை 31.10.2007-க்கு முன் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வையுங்கள்.

போட்டிகளில் கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பங்குபற்றலாம்.

ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரிகள்:

01) புலிகளின்குரல் நிறுவனம்
நடுவப்பணியகம்
முதன்மைச்சாலை
கிளிநொச்சி
தமிழீழம்.

02) மின்னஞ்சல் முகவரி: info@pulikalinkural.com

Monday, August 06, 2007

பால்யம்

- சந்திரா இரவீந்திரன் -

காற்றடித்தால் தலையை மட்டும் சிலுப்பி ஆரவாரம் பண்ணிவிட்டு அசையாமல் நிற்கும் போர்க்களத்து வீரனென... கோவிலின் தெற்கு வீதியையும் மேற்கு வீதியையும் இணைக்கும் அந்த மூலைப்பொட்டை உறுதிப்படுத்தும் சந்தியில் ஒரு பெரிய அரசமரம்! அருகே நீளமாய் ஆட்கள் அமர செதுக்கப்பட்தொரு பளிங்குக் கல்!

அண்ணாந்து பார்த்தால்... விண்ணையும், மண்ணையும் தனக்குள் அடக்கி விடுகிற பிரமை தோன்றும்.

வெள்ளைப் புறாக்களும், கரிக் குருவிகளும், காகங்களும் இந்த விதானத்தினுள் புகுந்து காணாமல் போய் விடுவதைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். மலைப்பாம்புகளென நீண்டு வளைந்து சுருண்டு, புரண்டு பரவிக் கிடக்கும் அரசின் திரண்ட வேர்களில் கால்களைப் பதித்து தாவித்தாவி நடக்கத் தொடங்கினால் கிழக்கு நோக்கி நீள்வரிசையாக... ஆல், சீனிப்புளி, சஞ்சீவி, வேம்பு, செவ்வரளி, திருவாத்தி, பொன்னலரி... என்று எண்ணிக் கொண்டே போகலாம்.

வீதி எல்லையோடு முட்கம்பிகளின் சில முனைகள் மரங்களின் தடித்த தண்டுகளினுள் புதைந்து... நீளமாய் வரிச்சுக் கட்டி நகரும். அதனோடு ஒட்டியபடி ஒரு குச்சொழுங்கை, வீடுகளோடும் பனம் வளவுகளோடும் நெளிந்து வளைந்து குன்றும் குழியுமாய் ஏறி இறங்கிச் செல்லும்.

கோவில் வீதி ஆலம்பழங்களோடு ஆட்டுப் புழுக்கைகளும் கலந்து சிதறிக் கிடக்க மிதிபட்ட புற்களோடு புழுதி படிந்து கலக்க காற்றில் அசைந்தாடி வந்து விழும் பழுத்த அரசிலைகளின் பட்டு விரிப்பில் வழமையான ஊர்வாசனை பறைசாற்றப்பட்டுக் கொண்டிருக்கும்!

தரையில் பாதசாரிகளின் ஒற்றையடித் தடம் வகிடாய் நீண்டு செல்ல முருகன் வாசலைக் கடந்து, கிழக்குப்புற வீதிக்கு வளைகிற விளிம்பில் ஒரு கிணறு. அந்த இடம் மட்டும் முட்கம்பிகளற்று, கோவில் வீதியையும் குச்சொழுங்கையையும் இணைக்கிற ஒரு பரஸ்பர உறவில் திளைத்தபடி கிடக்கும்! வீதி வளைகிற மூலைப்பொட்டில் அது இருப்பதனாலோ என்னவோ அதனை ´சந்தியாங்கிணறு` என்றார்கள். எங்கிருந்தோ வரும் வெள்ளை வாய்க்கால் ஒன்று குச்சொழுங்கையை குறுக்கறுத்து சந்தியாங்கிணற்று முடக்கைத் தொட்டபடி கோவிலின் கிழக்கு வீதிக்கு எல்லை போட்டுக் கொண்டு வடக்கு நோக்கி நகர்ந்து அண்ணாமுண்ணாப் பற்றைக்குள் புகுந்து காணாமற் போய்விடும். மழைக்காலங்களில் வழிய வழிய ஓடுகிற வெள்ளம்... வடக்கே இந்து சமுத்திரத்தில் போய் சங்கமிக்கிற ஓசை, ஏகாந்த வேளைகளில் இதமாய் கேட்கும்.!

சந்தியாங்கிணற்றுப் பக்கம் செவ்வரளிப் பற்றைகளை உரசியபடி கிறிச்... கிறிச் என்ற சீரான லயத்தோடு நீண்ட துலா எப்பவும் மேலும் கீழுமாய் மும்முரமாக விழுந்தெழும்பியபடி இருக்கும். துலாவில் தொங்கும் இரும்புச் சங்கிலியும் வாளியும் எந்நேரமும் தொணதொணத்தபடியே இருக்கும். கிணற்றடிக்குப் பக்கத்தில் தண்ணீர் ததும்பத் ததும்பக் கால்நடை தொட்டியொன்று. பக்கத்தில் ஒரு சாய்ப்புக் கற்றூண். ஆடுகள் நன்றாக முதுகு தேய்த்து விட்டுப் போகும். என் துள்ளல் நடையை தூரத்தில் கண்டால், “விசாலி இங்க வந்து முதுகு தேய்ச்சு விர்றியா” என்ற சீண்டல் குரல்கள் காற்றில் மிதந்து வரும். எந்நேரமும் பேச்சுக் குரல்கள், விசிலடிப்பு, சீட்டியொலி, சந்தனக்கட்டை உரசல், மஞ்சள் தேய்ப்பு, நாமக்கல் குழையல், சோப்வாசனை, தேவாரம், சினிமாப்பாடல், கவிதை வரிகள், பட்டிமன்றம்... என எப்பவுமே அங்கு பரபரப்பும் அமளியும்தான்.!

இளவேனிற் காலங்களில் மாம்பூக்கள், பனம்பூக்கள் என்று தண்ணீரெங்கும் படரும் பூவாடை மஞ்சம்... நீரினுள் ஊறிக் கிளம்பும் வாசனை ஊர் மூச்சில் கலந்தபடியிருக்கும்.

கிழக்கு வீதி.. பிள்ளையார் கோவிலின் பிரதான முகப்பையும் கோபுரத்தையும் தரிசித்தபடி வடக்கில் அகலமாய் பரந்து விரியும். வடக்கு நோக்கி வளைகிற முனைப்பில் இன்னுமோர் கிணறு. இது கோவிலுக்கு மட்டுமே உரியதென பிரத்தியேக வரையறைகளுடன் அமைதியாக இருக்கும். கோவிலின் அசையாமணிக் கோபுரத்தைத் தொடுக்கிற மாதிரி சடைத்து நிற்கும் வெள்ளரச மரத்தின் கீழ் ஒரு வைரவ சூலம் பூவும் பொட்டுமாய் சிவப்பு சால்வை சுற்றியபடி மிடுக்காய் சாய்ந்து நிற்கும்.

நான் இவையெல்லாவற்றையும் கடந்து வடக்கே பரந்து விரியும் பசும் புல்வெளியில் தனிமையாய் ஏகாந்தத்தில் லயித்து நிற்பேன். வடக்கு வீதியின் வடக்கெல்லை முட்கம்பிகளாலும், கட்டைகளாலும் செவ்வரளிச் செடிகளாலும் கோடிழுக்கப்பட்டு அதற்கப்பால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்ட நெடும் பனங்கூடல் விரியும்! காற்றில் தலைவிரித்தாடும் பனைமரங்கள் பின்னிப் பிணைந்தெழுப்பும் பேரொலி ஒருகணம் அண்டவெளி எங்கும் நிறைந்து ஆத்மாவை உசுப்பி விட்டு மீளும்! பனங்கூடல் மேற்காக நகர்ந்து, தார் வீதியுடன் சங்கமிக்கும் முனையில், ஒரு சிறிய கட்டிடம்! தகரமடித்து மறைக்கப்பட்ட பாரிய இரட்டை இரும்புக் கதவுகளில் மாங்காய் பூட்டுத் தொங்க, காஞ்சுறண்டி, பாவட்டை, அண்ணா முண்ணா, எருக்கலை என சடைத்த பற்றைகள் சூழ, இலேசாய் ஒளிந்து கிடக்கும் அந்தக் கட்டிடம் அந்த ஊரின் கிராமசபைக்குரியது. கட்டிடத்தின் உயரத்திலுள்ள சிறிய ஜன்னலினூடாய் எட்டிப் பார்த்தால் உயிர் ஒருகணம் உறைவது போல் அதிர்வு கொள்ளும்! சவ வண்டிலின் நீண்ட கருப்புக் குஞ்சங்கள் இருளில் அசையாமல் தொங்கிக் கொண்டிருப்பதை மட்டும்தான் கண்கள் காணும் எனினும் உயிர்நாடியிலிருந்து உலக ஸ்தம்பிதம் வரைக்கும் அசுர வேகத்தில் கணக்குப் போடும் மனக்குதிரை உணர்விழந்து மறுகணமே மண்கவ்வி விடும்!

நான் அந்தக் கட்டிடத்தின் பக்கம் என் கண்கள் செல்வதை எப்பவும் தவிர்த்து வந்தேன். எவை நிஜமோ... எவை நிச்சயமோ... அவை எப்பவும் என்னுள் வெறுப்பையும் பயத்தையும் பிரசவிப்பனவாகவே தோன்றினவோ??

அழகான அந்த வடக்கு வீதியில் கோவில் சுவரோடு ஒட்டியபடி நீளமாக ஒரு பூங்கா. சுவர் நீளத்துக்கு வரிசையாக நிற்கும் சிவப்பு, மஞ்சள், வெள்ளை, அடுக்குச் செவ்வரத்தம் பூக்கள் சுவர்களைத் தாவி கோவிலிற்குள் எட்டிப் பார்த்துப் புன்னகைத்த படியே இருக்கும். இன்னும் ரோஜா, திருவாத்தி, செந்தேமா, கொத்துமல்லிகை, முல்லை, துளசி, வாழை, செவ்விளநீர்த் தென்னை, திருநீற்றுப் பச்சை, இலுமிச்சை... என்று பூங்கா பசுமையில் நிறைந்து கிடக்கும். பூக்களின் வாசனைக் குழையல் வடக்கு வீதியை நிறைத்து அப்படியே கோவிலை வலம் வரும்.

யாருமற்ற தனிமையில் இதமான மாலைப்பொழுதில் பூங்காவை ஒட்டி இந்த புல்வெளியில் கால்களை நீட்டி நான் அமர்ந்து விடுவேன். மேற்கில் தார்வீதியில் ஆளரவத்தின் பின்னணி. எதிரே பனங்கூடல் சலசலப்பு. வடக்கே தொலைவிலிருந்து அலையலையாய் வந்துவிழும் இந்து சமுத்திரத்தின் பேரிரைச்சல்... என உலக ஓசைகள் என்னுள் பரவசத்தை ஏற்படுத்தும்! உடலெங்கும் அதனை பரவவிட்டு சிலகணங்கள் கண்களை இறுக மூடிக் கொள்வேன். இவற்றிற்குப் பின்னால் எங்கோ ஒளிந்து புதைந்து கிடக்குமோர் பேரமைதி மெல்ல மெல்ல ஆத்மாவில் புகுந்து அண்டங்களிற்கப்பால் என்னை அழைத்துச் சென்றுவிடும்! இந்த பிரபஞ்சம் முழுவதுமே என் ஒற்றைப் பார்வைக்குள் அடங்கிக் கிடப்பதான அதிசய உணர்வில் சில கணங்கள் மூழ்கிக் கிடப்பேன்!

விழிப்பில்... வானம் என்னருகில் வந்து நிற்கும்! மேற்கே தார்வீதிக்கு அப்பாலிருக்கும் வீட்டுக் கூரைகளிற்குப் பின்னால்... மறைகிற அந்தக் கருக்கலில், இரவும் பகலும் இரகசியமாய் சந்திக்குமந்த அபூர்வ கணங்களில் உயிரொலிகள் மெல்ல மெல்ல அடங்கி விடுகிற அந்த அமைதிப் பொழுதில் பிரபஞ்சத்தின் சூட்சுமம் வெகு அழகாய் என்னுள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்! உயிர்ப்பை என்னுள் உணர்த்தும் இந்த சுகம் நீடிக்க ஆசை கொண்டு நீள்மை தெரியாமல் மிக நீண்ட நேரமாய் மேகத்தைக் கடந்து மிதந்து கொண்டிருப்பேன்!

பல தடவைகள் பத்மாவதி வந்து என்னை இறக்கி வைப்பாள்! இன்னோர் உலகில் தவறி விழுந்தவளாய் அதிர்ந்து விழிப்பேன்! திடும்மென்று சந்தடிகள் என் உணர்வுகளைச் சூழும். சாக்கடைகள் என் நினைவுகளை சிறைகொள்ளும். துடைத்தெறிய முடியாத அழுக்குகள் என் உடலில் புசுபுசுவென்று பரவி ஒட்டிக்கொள்ளும்! உதறி எறிய வேண்டுமென்ற வெறி. எனினும் உதறத் தெரியாத பருவம்... உதறும் வலுவற்ற பலவீனம்! அருவருப்புக்களை விழுங்கியபடி எழுந்து நடப்பேன். பத்மாவதிக்குப் பின்னால் வரிசையாக வந்து நிற்கும் அத்தனை பெண்களது குடங்களையும் தண்ணீரால் நிரப்பி விடுவேன். அவர்களது விழிகள் ஆயிரம் நன்றிகளை அள்ளித் தெளித்தபடி நகரும்!

அன்றும் அப்படித்தான் விண்ணும் மண்ணும் தண்ணென்ற காற்றும் சொல்லாத பல சேதிகளை சொல்லியபடியிருக்க அவள் வந்தாள்.

பத்மாவதி....!

வடக்கே பனந்தோப்பிற்கு அப்பாலுள்ள சீவல்தொழிலாளர்கள் வாழும் சிறு குடிசையொன்றிலிருந்து அவள் வந்தாள். எப்பவும் போலவே ஒரு வெள்ளிக் குடத்தை இடுப்பில் சுமந்து மேற்கு வீதிவழி வந்து சவவண்டிச்சாலை முடக்கில் இறங்கும் புற்களிடையாய் ஊரும் ஒற்றையடிப் பாதை வழியாய் நடந்து வந்து என்னருகில் தயங்கி நின்றாள். அழுக்கில்லாத அவளின் சட்டையில் ஆறேழு கிழிசல்கள்.

“எங்கையடி அந்தத் தோ...” பத்மாவதியின் அப்பா நிறை வெறியில் பிதற்றும் வார்த்தைகளை பனங்காற்று விழுங்கி வந்து எம் காதுகளில் விழுத்திக் கொண்டிருந்தது.

“வெட்டிப் போடுவன்! சொல்லிவை...” அவளின் தடித்த அண்ணன்களில் ஒருவனாக இருக்க வேண்டும். அவர்களுக்கென்றே எழுதி வைக்கப் பட்டிருப்பது போல் அந்த வெட்டுக் கொத்து வார்த்தைகளை வீசியெறிந்து கொண்டிருந்தான்.

இதனால்தான் அம்மாவும், பாட்டியும் என்னை இந்த வடக்கு வீதிக்குப் போக வேண்டாமென்று மந்திர உச்சாடனம் பண்ணுவார்களோ...? இந்த உச்சாடனம் தானே என்னை உத்வேகத்துடன் இங்கு வர வைப்பதுண்டு. இந்தப் பசும்புல்வெளிக்குள் அடங்கிக் கிடக்கும் முழுப் பிரபஞ்சத்தையுமே என்னைத் தரிசிக்க வைப்பதுண்டு.

நான் பத்மாவதியை நிமிர்ந்து பார்த்தேன். மறைந்து விட்ட சூரியனின் மெல்லிய செம்பூச்சும், நிலவொளியும், தெருவிளக்கும் இணைய... அவளது கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. மறுகணமே பயமும் கூச்சமும் ஆட்கொள்ள... தலை குனிந்தாள்.

“பத்மா... என்னைப்பார்... என்ன தண்ணி வேணுமா?” நான் பெரிய இளவரசி பாங்கில் அதட்டுகிறேன். அவள் “ஓம்” என்று தலையாட்டினாள்.

“ஏண்டி இப்ப பள்ளிக்கூடத்துக்கு வாறேல்லை?” தன்போக்கில் ஏறுமாறாய்க் கிடந்த என் சின்னப் பாவாடையை இழுத்து விட்டுக் கொண்டு எழுந்தேன்.

“அம்மா படிப்புக் காணுமெண்டு மறிச்சிட்டா...”

அவள் எனக்குப் பின்னால் நடந்து கொண்டு வந்தாள். கள்ளும், கருவாட்டுப் பொரியலும் கலந்த வாடையொன்று வீசியது.

நான் கோவில் முகப்பிலிருந்த துலாக் கயிற்றை ஒரு எக்கு எக்கிப் பற்றுகிறேன். பற்றிய வேகத்திலேயே வாளி கிசுகிசுவென்று கிணற்றுக்குள் இறங்கியது. பத்மாவதி எல்லாம் மறந்து சிரித்தாள். சிரிப்பில் அவளது பால்யம் இழைந்து வழிந்தது.

“ஏண்டி சிரிக்கிறாய்”.

நான் தண்ணீரால் குடத்தை நிரப்பிக் கொண்டிருந்தேன்.

“இல்லை உந்த துள்ளல் இழுப்புக்கு ஒருநாளைக்கு துலாவோட நேரே உள்ளை போயிடுவாய்”. அவள் கண் வெட்டாமல் துலாக் கயிற்றையும் என்னையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். துள்ளித் துள்ளி இறைத்துப் பார்க்க வேண்டுமென்று அவளுக்கும் கைகள் துருதுருப்பது போல் தோன்றியது. எனக்கொரு வேதனை கலந்த சுகம்! தலைகீழாய் நின்றாலும் அவள் அந்தக் கயிற்றைத் தொடமாட்டாள் என்று!

குடம் நிரம்பி வழிந்தது. அவள் குனிந்து தூக்கினாள். கிழிந்த சட்டையின் கழுத்து விளிம்பினால் மார்புகள் தெரிந்தன. எங்கள் வீட்டுக் கிணற்றடித் தென்னையில் கிடக்கும் மஞ்சள் குரும்பைகள் ஞாபகத்தில் வந்தன. நான் சிரித்தேன். அவள் அவசரமாய் குடத்தைத் தூக்கி இடுப்பில் தாங்கிக் கொண்டாள். அவளுக்கு வெட்கமாக இருந்ததை முகம் சொல்லியது. நான் எட்டியெட்டி அவள் முகத்தைப் பார்த்தேன். இப்போ... பால்யம் கலைந்து... பரிதவிப்பொன்று அவள் கண்களிற்குள் நிறைந்து கொண்டது. இந்தப் பரிதவிப்பை இதே புல்வெளியில் நான் எப்பவோ பார்த்திருக்கிறேன்.

ஞாபகம் என்னை சம்மட்டியால் அடித்தது.

“பத்து... இப்பவும் அந்தப் பனந்தோப்புக்குள்ளை விறகு பொறுக்கப் போறனியே...?” அவசரமாகக் கேட்டேன்.

“ஓம்! போகாட்டில்... அம்மா அடிப்பா. விறகில்லாட்டில் அப்பா அம்மாவை உதைப்பான். மாட்டனெண்டால் சொல்லுக் கேக்கேல்லையெண்டு அண்ணன்கள் எல்லாம் மாறி மாறி குத்துவாங்கள்” அவள் கூறியவாறே புல்வெளியூடாய் நகரும் ஒற்றையடிப் பாதை வழியே போய்க் கொண்டிருந்தாள். அவளின் தண்ணீர்க் குடத்தைப் போலவே குரலும் தழும்பிக் கொண்டு போனது.

நான் அவள் போவதையே பார்த்தபடி நின்றிருந்தேன். பால்யம் என்னிலிருந்து விலகியோடியது. பசுமை உணர்வுகள் கரைந்து போயின. இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே கருமை படிந்து போனது.

பத்மாவதி விறகு பொறுக்கச் செல்லும் பனந்தோப்பிற்குள் ஒளிந்து கிடக்கும் பொத்தல் விழுந்த ஓலைக் கொட்டிலில் வேலனின் சீவற்கத்திகளும், கள்ளு முட்டிகளும் தான் இருக்குமென்பது ஊரறிந்த உண்மை. ஆனால் அதே கொட்டிலினுள் பத்மாவதி என்ற பன்னிரண்டு வயதுச் சிறுமியின் வாழ்க்கை நாளும் பொழுதும் சீவப்பட்டுக் கொண்டேயிருப்பது யாருக்குத் தெரியும்!!

தலை விரித்தாடும் இந்த பனைகளுக்குத் தெரியுமா?
அலையெறிந்து மோதும் அந்தச் சமுத்திரத்திற்குத் தெரியுமா?
இந்தக் காற்றுக்குத் தெரியுமா? நட்சத்திரங்களுக்குத் தெரியுமா?
ஓடிக் கொண்டே திரியும் இந்த முகில்களுக்குத் தெரியுமா?

யாருக்குத் தெரியும்? அல்லது யாருக்குப் புரியும்??

பத்மாவதி சமைந்து போனால் மட்டும் இந்த ஊருக்குத் தெரியும். சமைய முன்பே அவள் வாழ்வு கரைந்து கொண்டிருப்பது யாருக்குத் தெரியும்.

எனக்கு கண்கள் முட்டி வழிந்தன. பயம் உணர்வுகளை மேவி, உடலையும் பற்றிக் கொண்டது. என் சித்தப்பன் பெரியப்பனிலிருந்து கணக்குப் பாடம் சொல்லித் தரும் கமலநாதன் வாத்திவரை அத்தனை பேரின் விலங்கு முகங்களும் என் முன்னால் வந்து நின்று, கோமாளிக் கூத்தாடுவது போலிருந்தன. ஸ்பரிசம்... அணைப்பு... நசிப்பு... முத்தம்... பிடுங்கல்... ஓட்டம்... கலைப்பு... களைப்பு... பயம் இவையே பால்ய பருவத்தின் நிகழ்ச்சி அட்டவணைகளாய் நிர்ப்பந்தங்களாய்...

மூச்சுப் பெரிதாகி விம்மலெடுக்க நான் அப்படியே அழுதபடி நிற்கிறேன்.

“விசாலி... விசாலி! எங்கடி இவள் போயிட்டாள்? விசாலி..லி..லி..”
பாட்டி கத்திக் கூப்பிட்டவாறே சேலைச் சுருக்கலைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு விறுவிறுவென்று வடக்கு வீதிக்கு வருகிறாள்.

“விசாலி உங்கை என்னடி செய்கிறாய். கடைக்கு வெத்திலை, பாக்கு வாங்க விட்டால் ஒருநாளும் நேரத்துக்கு வீடு வந்து சேர மாட்டாய். பங்கை கொம்மா வீட்டில கிடந்து கத்திறாள்” பாட்டி என் கையைப் பிடித்து உலுப்பி இழுத்துக் கொண்டு போகிறாள்.

“என்னை விடு பாட்டி, நான் வரேல்லை”

“ஏண்டி அங்கை கமலநாதன் வந்திருக்கிறான். இண்டைக்கு கணக்கு வகுப்பெல்லே. உதுக்குத்தான் அங்கை கொம்மா கத்திறாள். கணக்குப் படிக்கக் கள்ளமெண்டால் இந்தக் கருக்ககலுக்கை வந்து வடக்கு வீதியில ஒளிச்சு நிற்கிறதாக்கும்”

பாட்டி வெற்றிலை பாக்கை என் பாவாடைப் பொக்கற்றிலிருந்து பிடுங்கி எடுத்துக் கொண்டு... விறுவிறென்று என்னை இழுத்து... நடக்கிறாள்.

"பாட்டி, என்னை விடு பாட்டி. எனக்கு கணக்கும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் பாட்டி..! என்னை விடு பாட்டி...” என் கண்களிலிருந்து வழியும் கண்ணீர் காற்றில் சுழன்று மீண்டும் என் முகத்திற்கே விசிறியடிக்கிறது.

"நான் வரமாட்டன்!" என் குளறல் காற்றில் கரைந்து பனந்தோப்பினூடாய் எங்கோ மறைந்து போய்க் கொண்டிருந்தது...!

சந்திரா.ரவீந்திரன்.
லண்டன்


( நன்றி:- ஊடறு.)

Thursday, July 12, 2007

எனக்கு எட்டிய எட்டுக்கள்

எட்டுப் பதிவுக்கு நிர்மலாவும், சுதர்சனும், கவிப்பிரியனும் என்னையும் அழைத்திருக்கிறார்கள். நான் அப்படி எதுவும் சாதிக்கவில்லையே, அப்படியிருக்க என்னத்தை எழுதுவது என்ற யோசனை ஒரு புறமும், நேரமின்மை மறுபுறமுமாய் சில நாட்கள் ஓடி விட்டன.

1 - அப்போது எனது அப்பா மருதானை புகையிரத நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கென ஒதுக்கப் பட்ட ரெயில்வேக்குச் சொந்தமான வீடு வத்தளையில் இருந்தது. கர்ப்பப்பையில் என்னைச் சுமந்திருந்த அம்மா தவறுதலாக வீழ்ந்ததில் மேல் மாடியிலிருந்து இருந்து கீழ்மாடிக்குரிய படியில் உருளத் தொடங்கி விட்டா. கடைசிப்படியில் உருண்ட போது நினைவை இழந்து விட்டா. அதன் பலனாக அவசரமாக மருத்துவமனை.. அதே வேகத்துடன் பருத்தித்துறை வந்து சேர்ந்து மந்திகையில்தான் அவசரமாக எட்டுமாதக் குழந்தையாகப் பிறந்தேன். சரியாக ஒரு மாதம் மூச்சைத் தவிர வேறெந்த சத்தமும் இன்றி கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்திருக்கிறேன். உயிரோடு வாழ்வேனா, என்று அம்மாவும், அப்பாவும் மற்றைய உறவுகளும் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். 47வயதுகள் வரை வாழ்ந்து விட்டேன். அது சாதனைதானே.

2 - சனிக்கிழமை பெரியார் படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான் இது நினைவில் வந்தது. எங்கள் வீட்டில் அப்போதெல்லாம் எங்களுக்குத் தலைமயிர் வெட்டும் கதிரமலைக்கு தேங்காய்ச் சிரட்டையில்தான் தேநீர் கொடுப்பார்கள். சாதித்திமிர் என்பது எனது அம்மம்மா, பாட்டாவுக்கு மட்டுமன்றி எங்கள் ஊரான ஆத்தியடி மக்களுக்கும் அதிகமாகவே இருந்தது. அந்தச் சிரட்டைப் பழக்கத்தை நிற்பாட்டி கிளாசில் தேநீர் கொடுத்தேன்.

3 - எனக்கு நினைவு தெரிந்து அவதானிக்கத் தொடங்கிய காலங்களில் (அறுபது, எழுபதுகளில்) மாதத்தில் மூன்று நாட்கள் எங்கள் வீட்டுப் பெண்கள், அதாவது அம்மா, மாமிமார், சித்தி, பக்கத்து வீட்டு குஞ்சியம்மா... என்று பலரும் ´தொடமாட்டாள்´ என்ற பட்டப் பெயரோடு தள்ளி வைக்கப் பட்டார்கள். சாப்பாடு கூட தீண்டத்தகாதவர்கள் என்பது போல வெளியிலே கொண்டு போய்க் கொடுக்கப் பட்டது. அந்த நேரத்தில் சாப்பிடத் தனிக்கோப்பை.

அப்பாச்சி வீட்டில் வெளியில் கரிக்கட்டியால் பெட்டி போட்டு அதற்குள்ளேதான் மாமிமார் இருந்தார்கள்.

எங்கள் வீட்டில், அந்த மூன்று நாட்களிலும் எனது அம்மா குசினிக்குள் போவதில்லை. அம்மம்மாதான் வந்து சமைப்பா. அம்மா குசினி வாசலில் வந்து நிற்க அம்மம்மா சாப்பாட்டைப் போட்டுக் கொடுப்பா. அம்மா ஒரு ஓரமாக விறாந்தை நுனியில் இருந்து சாப்பிடுவா. அந்த நாட்களில் அம்மா சுவாமி அறைக்குள் போக மாட்டா. அலுமாரிக்குள் இருக்கும் காசு தேவைப்பட்டாலும் என்னையோ, அண்ணனையோ அனுப்பித்தான் எடுப்பா. கிணற்றில் தண்ணி அள்ள மாட்டா. வீட்டின் வெளி விறாந்தையில்தான் அந்த மூன்று நாட்களும் படுக்கை. இது பற்றி நான் சின்னவளாக இருந்த போது பெரிதாகச் சிந்திக்கவில்லை. அதென்ன தொடமாட்டாள், எதையும் தொடக் கூடாதோ என்ற கேள்விகள் எனக்குள் எழுந்திருந்தாலும், பெரிதாக அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் எனது 12வது வயதில் என் முறை வந்த போதுதான் நான் விழித்துக் கொண்டேன். முதல் முறை எட்ட நின்றே சாப்பாட்டை அம்மாவிடம் வாங்கிச் சாப்பிட்டேன். ´தீட்டு´ என்று சொல்லி அம்மம்மா என்னிலிருந்து இரண்டடி தள்ளி நடந்த போது மௌனமாய் இருந்து எரிச்சல் பட்டேன்.

ஆனால் இரண்டாவது முறை என்னால் அப்படி இருக்க முடியவில்லை. எனது வீட்டுக்குள் நான் போவதற்கு யாரும் கோடு போட்டு வைப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்காக நான் சண்டை பிடிக்கவோ கூப்பாடு போடவோ இல்லை. அம்மாவிடம் பக்குவமாகச் சொன்னேன். வீட்டில் உள்ளவர்களுக்கும், வீட்டுக்கு வருபவர்களுக்கும் இதைப் பறை தட்டுவது போல, தெரியப் படுத்த வேண்டுமா? என்று தொடங்கி, இன்னும் சில கருத்துக்களையும் சொன்னேன். குறிப்பாக “எனது வீட்டுக்குள்ளேயே அங்கு போகாமல், இங்கு போகாமல் என்னால் இருக்க முடியாது“ என்பதையும் அம்மாவிடம் விளக்கினேன். அம்மாவின் சம்மதம் கிடைக்க முன்னரே பசித்த போது குசினிக்குள் போய் சாப்பிட்டேன். எனது வழமையான கட்டிலிலேயே படுத்தேன். அம்மா கொஞ்சம் சங்கடப் பட்டா. அம்மம்மாவுக்குத் தெரிந்தால் வில்லங்கம் என்று பயந்தா. ஆனாலும் என்னைத் தடுக்கவில்லை. சில மாதங்களில் அம்மாவும் அந்த மூன்று நாட்கள் பற்றி யாரிடமும் சொல்லாமல் தானே குசினிக்குள் போய் சமைக்கத் தொடங்கி விட்டா.

மிகுந்த ஆச்சாரம் பார்க்கும் அம்மம்மாதான் இடையிடையே அம்மாவிடம் கேட்டா “உவளென்ன மாசம் முழுக்க வீடெல்லாம் திரியிறாள். இவளுக்கு எல்லாம் ஒழுங்கா வாறதோ“ என்று.

4 – ஊரில், சோறு தீத்துவதும், ஏடு தொடக்குவதும்… கோயிலில்தான் செய்யப்படும். கோயில் ஐயர்தான் முதலில் சோறு தீத்துவார். அவரேதான் ஏடு தொடக்குவதும். எனது முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் முறைப்படி கோயிலிலேயே இவை தொடங்கப் பட்டன. மூன்றாவது மகனுக்கு ´எனக்கில்லாத அக்கறை ஐயருக்கு இருக்கா´ என்ற கேள்வி என் மனதில் எழ நானே பென்சில் பிடித்து அவனை எழுத வைத்தேன். இற்றை வரைக்கும் எழுத்திலோ, படிப்பிலோ அவனுக்கு எந்தக் குறையும் இல்லை. ஒரு பத்திரிகை நிரூபராக, எடிட்டிராக இருக்கிறான்.

5 – பாடசாலையில் மிகவும் கெட்டித்தனமாக இருந்தேன். கணக்கிடும் வேகத்தை வைத்து எனக்கு ´கொம்பியூட்டர்´ என்ற பட்டப் பெயரை கணித ஆசிரியர்கள் தந்திருந்தார்கள். பரீட்சையில் Algebraவுக்கு மட்டுமல்லாது, Geomatryக்கும் 100புள்ளிகளையே பெறுவேன். இத்தனை இருந்தும், ஒரு ஆர்க்கிரெக் ஆக வரும் எனது எண்ணத்தை மட்டுமல்லாது, எனது அம்மா, அப்பாவின் கனவையும் காதலுக்காகத் தூக்கி எறிந்தேன். இந்த சாதனைக்காக நானே வருந்தியிருக்கிறேன். (இப்போது வருத்தம் இல்லை. பிள்ளைகளை சீராக வளர்த்து விட்டேன் என்ற பெருமைதான் இருக்கிறது.)

5 – சின்ன வயதிலேயே காதல் திருமணம். அம்மா, அப்பாவின் சம்மதத்தைப் பெற நிறையப் போராட வேண்டி இருந்தது. போராட்டம் என்பதை விட சகிப்புத்தன்மை அவசியமாயிருந்தது. பேச்சு, அடி.. எல்லாம் வாங்கினேன். என்றைக்குமே அடிக்காத அப்பாவிடம் கூட முதலும் கடைசியுமாக காதலுக்காக ஒரு அடி வாங்கினேன். அது வாழ்நாளுக்கும் மறக்காத அடி.

ஆனால் திருமணத்தின் போது தாலி வேண்டாமென்று சொல்லி விட்டேன். பெரிய புரட்சி செய்கிறேன் என்ற எண்ணம் எதுவும் இருக்கவில்லை. மனதால் ஒன்று பட்டிருக்கிறோம். தாலி என்னத்துக்கு என்ற உணர்வே இருந்தது. மஞ்சள் கயிறைக் கூட விரும்பவில்லை. அம்மா, அப்பாவும் பெரிய தடைகள் எதுவும் சொல்லவில்லை. இன்றை வரைக்கும் தாலி கட்டவில்லை.

6 – 17வயதிலேயே முதற் குழந்தையைப் பெற்றெடுத்தேன். இந்த வயதில் எப்படிப் பெற்றெடுக்கப் போகிறாள் என்று எங்களூர்க் கிழவிகள் அவலாய் மென்றார்கள். அக்கறையோடு கதைத்தார்கள். அம்மா தந்த புத்தகங்களையும், தைரியமான வார்த்தைகளையும் பெரிதும் நம்பினேன். எந்தப் பிரச்சனையுமின்றிய சுகப்பிரசவமே.

7 – பேனா பிடித்து எழுதத் தொடங்கிய காலத்திலேயே அப்பா தந்த டயறியில் எனது அன்றாட உணர்வுகளை எழுதத் தொடங்கினேன். அப்போதிருந்து நான் எதையாவது தினமும் எழுதிக் கொண்டிருந்தாலும், எனது முதற்கவிதையை 1975இல் எழுதினேன். அதை 1981இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பி வைத்தேன். உடனேயே அது ஒலிபரப்பானது. அன்றிலிருந்து ஊடகங்களுக்கு எனது ஆக்கங்களை அனுப்பத் தொடங்கினேன். அந்த நாட்களில் எனது கவிதையோ, கட்டுரையோ அன்றி விமர்சனமோ வெளி வராத நாட்களே இல்லையென்று சொல்லுமளவுக்கு எழுதித் தள்ளினேன். எனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. பாராட்டுக் கடிதங்கள் இந்தியாவிலிருந்து கூட வந்து குவிந்தன. இரண்டு பெரிய சூட்கேஸ் நிறைய கடிதங்கள் வைத்திருந்தேன். (இந்திய இராணுவத்தினர் 1989இல் அவைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம்.)

8 - இன்று இணையத்திலும் எழுதுகிறேன். எல்லோரையும் போல எனக்கெனச் சொந்தமாக இணையத்தளம், வலைப்பதிவு என்று வைத்துக் கொண்டிருக்கிறேன்.

பிள்ளைகளுக்கும் திருமணமாகி, பேரப்பிள்ளைககளுடனும் கொஞ்சுகிறேன். முடிந்தவரை தேவைப்படுகின்ற எல்லோருக்கும் உதவி செய்து கொண்டு, அமைதியாக வாழ வேண்டும் என்பதே விருப்பம்.

கடவுள் நம்பிக்கை இல்லை. சின்னவயதில் இருந்தது. அம்மாவோடு சேர்ந்து விரதங்களும் பிடிப்பேன். இப்போது இல்லை. கோயிலுக்கும் செல்வதில்லை. மற்றவர்களைத் துன்புறுத்தாமல், மற்றவர்களுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வது கோயிலுக்குச் செல்வதை விட நல்லது என நினைக்கிறேன். அதற்காக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை தடுப்பதும் இல்லை. மதங்களைத் தூற்றுவதும் இல்லை. ஆனால் ஒவ்வொரு மதத்திலும் உள்ள மூடக் கொள்கைகளை முற்றிலுமாக வெறுக்கிறேன்.

இவையெல்லாம் பெரும் சாதனைகள் என்று நான் சொல்லவில்லை. இவைகளை விடப் பெரிதாக நான் எதையும் சாதிக்கவும் இல்லை.

சந்திரவதனா
12.7.2007

Tuesday, July 10, 2007

எமக்கான கதவு (ஒரு டயறிக் குறிப்பு)

மனநிலை சரியில்லாதிருந்தது. வேலையில் இருந்து விரைவாக வீட்டுக்குப் போய் விட வேண்டும் போல ஒரு அந்தரம் இருந்தது.

"என்ன, இண்டைக்கு ஆழ்ந்த அமைதியில் இருக்கிறாய்? பேச்சையே காணோமே...” என்று எனது வேலைத்தோழிகள் ஒவ்வொருவராகக் கேட்டு வைத்தார்கள். "தலையிடிக்குது" என்று பொய் சொல்லி விட்டு வேலையைச் செய்து கொண்டிருந்தேன். என்னதான் அவசரமாக இருந்தாலும், வேலை முடிந்து விட்டது என்றாலும், சரியான காரணம் காட்டி பிரத்தியேக அனுமதி எடுக்காத பட்சத்தில் குறிப்பிட்ட நேரம் வரை அங்கு இருந்துதான் ஆக வேண்டும். கடனே என்று இருந்து முடித்தேன்.

அடுத்து, பகுதி நேர வேலை. அதை நான் எவ்வளவு வேகமாகச் செய்கிறேனோ, அந்தளவு கெதியில் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்.

விரைவாக வேலையை முடித்து விரைவாக வீட்டுக்கு ஓடி விட வேண்டுமென்ற எண்ணத்தில் மிகவும் அவசரமாகச் செய்து கொண்டிருந்தேன். இடையிடையே மேலதிக வேலைகள் வந்து சேர்ந்ததால் வேலைகளை முடித்து நேரத்தைப் பார்த்த போது நேரம் 8.39ஆகி இருந்தது. 8.40க்குப் பேரூந்து. இனி ஓடினாலும் பேரூந்தைப் பிடிக்க முடியாது என்பதில் மனம் சோர்ந்து விட்டது. இத்தனை அவசரமும், வேகமும் காட்டியும் நினைத்ததைச் சாதிக்க முடியாது போய் விட்டதே, என்பதில் கவலையாகி விட்டது.

இரவு நேரம் என்பதால் அடுத்த பேரூந்து 40நிமிடங்கள் கழித்து 9.20க்குத்தான் வரும். வழமையில் 30நிமிடங்கள் நடந்தாவது வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடுவேன். இன்றைய மனநிலையில் நடப்பதற்கான எந்தவித ஆர்வமும் இருக்கவில்லை. அத்தோடு கோடைகாலத்துக்கு ஒவ்வாத குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது. இன்னொரு பிரச்சனை, நான் வழமையாகச் செல்லும் பாதையில் "இந்தப் பாதையில் உள்ள மரங்களில் மயிர்க்கொட்டி இருக்கிறது. அதன் மயிர்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. அவை உங்கள் உடலிலும், தோலிலும் பாரதூரமான அலர்ஜியை உண்டு பண்ணும். இதை மீறி நீங்கள் இந்தப் பாதையால் சென்று உங்களுக்கு ஏதாவது ஆகினால் அது உங்கள் பொறுப்பே" என்ற வார்த்தைகளுடன் பெரிய பதாதை கொழுவியிருந்தது.

அனேகமான பொழுதுகளில் இந்த நேரத்தில் எனது வேலையிடத்தில் இருக்கும் Treadmiller இல் அரைமணி நேரம் ஓடுவேன். இன்று அதற்கான மனநிலையும் துளியும் இருக்கவில்லை.

சோர்ந்த மனதுடன் வெளிக்கிட்டுப் படிகளில் இறங்கிய போதுதான் அந்தப் பெண்ணைக் கவனித்தேன். என்னைப் போலவே லிப்றைப் பாவிக்காமல் அவள் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள். முதலே அவளை அந்த அலுவலகத்தின் வேறொரு பகுதியில் நான் கண்டேன்தான். ஆனாலும் அவள் அவ்வளவாக என் கவனத்தைக் கவரவில்லை.

இப்போது என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு போனாள். அவளை விட வேகமாக நான் நடந்ததில் அவளருகில் போன போது மெலிதாகச் சிரித்தாள்.

ஏதாவது கதைக்க வேண்டுமென்று தோன்றியது. "ஹலோ" என்றேன்.

அவளும் "ஹலோ" என்றாள்.

சேர்ந்து நடந்து கொண்டிருந்தோம். சும்மா கதைத்தோம்.

வேளைக்குப் போகவேண்டும் என்ற முனைப்போடு அவசரமாக வேலை செய்தும் எனது பேரூந்தை விட்டு விட்டேன் என்ற ஆதங்கத்தை அவளிடம் சொன்னேன்.

"ஓ.." என்று எனக்காகக் கவலைப் பட்டாள்.

"எங்கே இருக்கிறாய்?" என்றாள்

இடத்தைச் சொன்னதும் நான் உனது வீட்டைத் தாண்டித்தான் போக வேண்டும் என்று சொல்லி தனது இடத்தைச் சொன்னாள். தன்னோடு என்னை வரும்படி இன்முகத்துடன் அழைத்தாள்.

காரினுள் ஏறும் போதுதான், "உனது முகம் என்னுள் எதையோ ஞாபகப் படுத்துகிறது. நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள்?" என்றாள்.

"சிறீலங்கா" என்றேன்.

"அப்ப உனக்கு திலீ யைத் தெரியுமா?" என்றாள்.

எனது மகன் திலீபனைத்தான் கேட்கிறாள் என்பது புரிந்தது.
"ம், எனது மகன்தான் என்றேன்."

மிகுந்த சந்தோசமாகி விட்டாள்.

கிட்டத்தட்ட 10வருடங்களின் முன், தான் எனது மகனின் 12ம், 13ம் வகுப்பு பிரெஞ் பாஷைக்குரிய ஆசிரியராக இருந்ததிலிருந்து தொடங்கி எனது மகனின் கெட்டித்தனம் பற்றி.. நட்புடன் பழகும் தன்மை பற்றி என்று மிகுந்த சந்தோசமாக என்னோடு பேசிக் கொண்டு வந்தாள்.எனது மகனுக்கு மறக்காமல் தனது வாழ்தைச் சொல்லும் படி வேண்டினாள்.

வீட்டடியில் இறங்கும் போது "பார்த்தியா, சந்திப்புகள் எப்படி எப்படி வருமென்றே தெரியாது. உன்னை இன்று சந்தித்தது ஒரு அதிசயமே. எனக்கு மிகுந்த சந்தோசமாக இருக்கிறது. மீண்டும் சந்திப்போம்" என்றாள்.

நான் பேரூந்தில் வருவதையும் விட வேகமாக வீட்டுக்கு வந்து விட்டேன். அந்த சந்திப்பு ´எதற்காகவும் சோரத் தேவையில்லை. எங்கோ ஒரு கதவு எமக்காகத் திறந்திருக்கும்´ என்ற நம்பிக்கையை எனக்குத் தந்தது. என் மனதும் ஓரளவு லேசாகியிருந்தது.

சந்திரவதனா
9.7.2007

Monday, July 09, 2007

தமிழ் கலைஞர்கள்

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் கலைஞர்கள் பற்றிய விபரம் தேவைப் படுகிறது.
உங்களுக்குத் தெரிந்த கலைஞர்களையும்,
கலைஞர்களாகிய உங்களையும் இங்கு அறிமுகப் படுத்துங்கள்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite