Thursday, July 31, 2003

நினைவு நதியிலிருந்து..... (1985 ம் ஆண்டு)

"என்ரை தலேணியை ஆர் எடுத்தது? அம்மா என்ரை தலேணியைக் காணேல்லை. என்னெண்டு நான் படுக்கிறது."

தம்பி பரதனின் குரல் கேட்டு அவனது அறையை எட்டிப் பார்த்தேன்.

தலைக்கு ஒரு தலையணி, காலுக்கு ஒரு தலையணி, வலதுபக்கத்துக்கு ஒரு தலையணி என்று மூன்று தலையணிகள் தெரிந்தன. இடது பக்கத் தலையணியைக் காணவில்லை. இன்னும் நன்றாக அறையை எட்டிப் பார்த்தேன். அறையின் மற்றப் பக்கத்தில் சபா நாலு தலையணிக்குப் பதிலாக ஐந்து தலையணியுடன் ஆழ்ந்து தூங்கியிருந்தான்.

"அம்மா...! தலேணி...! "
பரதனின் குரல் எனக்கு எரிச்சலைத் தந்தது.

"டேய்..! என்ன நேரமெண்டு தெரியுதில்லே. பிறகேன் இப்பிடிச் சத்தம் போடுறாய்?"
கோபித்த படி அறையினுள் போய் சின்னவன் சபாவின் கட்டிலில் இருந்து ஒன்றை எடுத்துப் பரதனிடம் கொடுத்தேன்.

"அக்கா என்றால் அக்காதான்."
முன் இரண்டு பெரிய பற்களையும் காட்டிச் சிரித்தான்.

"சும்மா பல்லைக் காட்டாதை. கிழட்டு வயசாகுது. கொஞ்சங் கூட விவஸ்தையில்லாமல்..... தலேணிக்காண்டி இந்தக் கத்துக் கத்திறாய்..!"

டக்கென்று சுண்டிப் போன அவனது முகத்தைப் பார்க்க எனக்குக் கவலையாகி விட்டது.
"என்னடா.. நீ..........! பதினாலு வயசாச்சு.. இன்னும் சின்னப் பிள்ளை மாதிரி.. "என்ற படி
அவனின் பக்கத்தில் கட்டில் நுனியில் அமர்ந்தேன். அவன் பெரிதாகச் சிரித்தான்.

"ஏமாந்துட்டா...! ஏமாந்துட்டா...!" என்று கத்தினான். கவலை போல் நடித்து என்னை ஏமாற்றிய சந்தோசம் அவனுக்கு.

"சும்மா படு. எனக்கு வேலையிருக்கு."
என்ற படி லைற்றை அணைத்து விட்டு வெளியில் வந்தேன்.

திடீரென இரவின் நிசப்தத்தைக் குலைத்துக் கொண்டு முழங்கிய பீரங்கியின் முழக்கத்தில் ஏதேதோ நினைவுகளில் மூழ்கியிருந்த என் நெஞ்சு திக்கிட்டது. எட்டிப் பார்த்தேன். தம்பி பரதனின் கட்டில் வெறுமையாக இருந்தது. நான்கு தலையணைகள் மட்டும் அப்படியே இருந்தன.

இப்படிக் காலுக்கும் கையுக்குமாக தலையணைகளை வைத்துப் படுத்தவன் இப்போ எந்தக் கல்லிலும் முள்ளிலும் படுக்கிறானோ.! நெஞ்சுக்குள் நிறைந்திருக்கும் சோகத்தின் கனம் தாங்காது கண்ணுக்குள் நீர் நிறைந்து கன்னங்களில் வழிந்தது. வழிந்த கண்ணீரைத் துடைக்க வேண்டுமென்று கூடத் தோன்றாததால், அப்படியே வந்து கதிரையில் அமர்ந்து யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து விட்ட எனது கணவருக்கு எழுதத் தொடங்கிய கடிதத்தைத் தொடர முனைந்தேன்.

மீண்டும் பீரங்கி. இப்போ சங்கிலிக் கோர்வை போல 9 பீரங்கிகள். பேனா தொடர்ந்து எழுத மறுத்தது. எனது மனசைப் போலப் பேனா மையும் உறைந்து விட்டதோ.. என்னவோ..!

எனக்குத் தனியாக இருப்பது போலப் பிரமை ஏற்பட்டதால் மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். அம்மா பரதனின் அறை வாசலின் ஒரு ஓரமாக பாயைப் போட்டுப் படுத்திருந்தா. அவ தனது கட்டிலில் படுத்து மூன்று மாதங்களாகின்றன. எப்போ தம்பி பரதன் வீட்டை விட்டுப் புறப்பட்டானோ..! அன்றிலிருந்து அவனது கட்டிலைப் போலவே அம்மாவின் கட்டிலும் வெறுமையாகத்தான் இருக்கிறது.

பலமாதங்களுக்கு முன் பாடசாலை நேரம் யாரோ அவனை ரோட்டிலே கண்டதாகச் சொன்ன போது நாங்கள் யாருமே அலட்டிக் கொள்ள வில்லை.
பிறகுதான் அவன் நோட்டீஸ் ஒட்ட பாடசாலைச் சுவரைத் தாண்டிச் சென்று வருகிறான் என்று அறிந்து அதிர்ந்தோம். ஆனாலும் இவ்வளவு து}ரம் வருமென நாங்கள் நினைக்கவில்லை. அன்று பின்னேரம் அவன் வீட்டுக்கு வந்த போது நானும் தங்கையுமாக
"பரதன்..! நீயென்ன ஸ்கூலிலை இருந்து எங்கையாவது போறனியே..?"
என்று கேட்டோம்.

உடனே அவன் தடுமாறி "இல்லை...இல்லை... ஆர் சொன்னது..?" என்றான்.

பின்னர் ஒரு நாள் "அம்மாக்கு இப்பச் சொல்லாதைங்கோ. நான் போனாப் போலை சொல்லுங்கோ." என்று சொல்லி இரண்டு சோடி உடுப்புகளுடன் அவன் போய் விட்டான்.

எங்கள் வீட்டில் எல்லாம் மாறி விட்டது. அம்மா சிரித்து நாளாகி விட்டது. சாப்பிடும் போதும் சேர்ந்து கூடிக் கதைக்கும் போதும் முன்னர் போலச் சிரிப்பலைகள் எம்மிடமிருந்து எழுவதில்லை. கண்ணீர்தான் வழிகின்றது.

(1985ம் ஆண்டின் ஒரு அழியாத நினைவு)

Monday, July 28, 2003

மௌனமே.......

இதுவரை
என் மௌனத்தையே
பலருக்குப் பதிலாக்கியுள்ளேன்.
இப்போதெல்லாம்
உன் மௌனமே
எனக்குள் கேள்வியாகின்றது.

சந்திரவதனா
18.1.2003

Sunday, July 27, 2003

நாகரிகம்

"என்ன தாலிக்கொடியைப் போடாமல் வந்தனீரே..?"

"ஓம் நான் போடுறேல்லை."

"என்ன நீர்..! அவை இதெல்லாம் கவனமாப் பார்ப்பினம். தாலியில்லாட்டில் என்ன நினைப்பினம்..! சீ.. எவ்வளவு மரியாதை இல்லைத் தெரியுமே..!"

அவள் தனது மொத்தத் தாலிக்கொடியில் கொழுவியிருந்த காசுப் பென்ரனை விரல்களால் அளாவியபடி என்னுடன் அலுத்துக் கொண்டாள்.

நான் உடுத்திய ஜோர்ஜெட் சேலை கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. தன்னைப் போல சருகைக் கரை போட்ட சேலையுடன்தான் அங்கு எல்லாப் பெண்களும் வருவார்களாம். கழுத்தோடு ஒட்டியபடி கல்லுப் பதித்த அட்டியலும் அணிந்திருந்தாள்.

நான் மேகவண்ண நீல ஜோர்ஜெட் சேலை உடுத்தி ஒரு தும்புச் சங்கிலியைக் கழுத்தில் தொங்க விட்டிருந்தேன்.

இது அவளுக்குப் பெரிய அவமானமாம். என்னைத் தனது சொந்தம் என்று சொல்லவே வெட்கமாம். அதுதான் இந்தத் தொணதொணப்பு. பிறந்தநாள் கொண்டாடும் வீட்டுக்குள் நுழையும் வரை அவளின் தொணதொணப்பு ஓயவில்லை. ஏன்தான் இவளைச் சந்திக்க என்று யேர்மனியிலிருந்து லண்டன் வந்தேனோ..! என்றிருந்தது.

பிறந்தநாள் கொண்டாடும் வீட்டில் எல்லோரும் கலகலப்பாக இருந்தார்கள். தாலி சேலைக்குள் சாடையாக மறைந்தாலும் எடுத்தெடுத்து வெளியே விடுவதும் தாலிச் சரட்டைப் பிசைவதுமாய் சில பெண்களும், பஞ்சாபிகளுடன் இன்னும் சில பெண்களும் ஒரு புறம் இருக்க, ஆண்கள் அடிக்கடி பல்கணியில் போய்ப் புகைப்பதுவும் பெரிய பெரிய போத்தல்களிலிருந்து வார்த்து வார்த்துக் குடிப்பதுமாய் இருந்தார்கள்.

அவள் சற்று சங்கடத்துடன் "இவ யேர்மனியிலையிருந்து வந்திருக்கிறா" என என்னை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தினாள். அங்குள்ள மற்றவர்களும் நகைகளையும் சேலையையும் வைத்துத்தான் என்னை அளந்தார்களோ தெரியாது. எனக்கு அது பற்றிக் கவலையில்லை. அவள்தான் இதை மறந்து போகாதவளாய் "பஞ்சப் பிரதேசத்திலையிருந்து வந்த ஆள் மாதிரி வந்திருக்கிறீர்" என்று எனது காதுக்குள் முணுமுணுத்தாள்.

பிறந்தநாள் பிள்ளையை மட்டும் காணவில்லை. உள்ளை எங்கையோ விளையாடுதாம். வந்திடுமாம். இதனிடையே கோழிக்கால்கள், கட்லட்டுகள் என்று பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தன. திடீரென்று ஒரு பெண் ஒரு தட்டில் ஏதோ குடிக்கக் கொண்டு வந்தாள்.

"ம்.... வைன் போலை இருக்கு" என்னை அறியாமலேயே முகத்தைச் சுளித்து விட்டேன்.

"ஓம் வைன்தான். இது பொம்பிளையளுக்கு." சொன்ன படி அந்தப் பெண் என்னிடம் வைன் கிளாஸை நீட்டினாள்.

"சீ.. எனக்கு வேண்டாம். நான் உதுகள் குடிக்கிறேல்லை"

அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. கொஞ்சம் அவமானப் பட்டது போன்றதான பின் வாங்கல்.

நிலைமை புரிந்தது. அவளைப் சங்கடப் படுத்தி விட்டேனோ..!

"சொறி. குறை நினைக்காதைங்கோ. எனக்கு ஒறேஞ்யூஸ் இருந்தால் தாங்கோ. நான் அற்ககோல் குடிக்கிறேல்லை" சமாளித்தேன்.

"இஞ்சை லண்டனிலை இது கட்டாயம் குடிக்கோணும். இல்லாட்டி மரியாதையில்லை. உம்மைச் சரியான பட்டிக்காடு எண்டுதான் எல்லாரும் நினைப்பினம்." அவள் நியமான எரிச்சலுடன் என்னைக் கடிந்து கொண்டாள்.

´ஓ.. வைன் குடிக்காத பெண்கள் பட்டிக்காடுகளோ..? இது லண்டன் நாகரீகமோ..?` நினைத்தபடி நான் யூஸைக் குடிக்கத் தொடங்கினேன்.

சந்திரவதனா - 12.3.2003

விடை கிடைக்காத கேள்விகள்

அந்தத் தாம்பாளம் இன்னும் உறுத்தலாய் முள்ளாய் என் கண்களுக்குள் நிற்கிறது. காரணம் அந்தத் தாம்பாளத்திலிருந்த 6 இலட்சம் ரூபாய்கள்.

வெளிநாட்டு அண்ணன்மாரின் பணம் தண்ணீராய் செலவழிக்கப் பட்டு கல்யாண வீடு அன்று காலை கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஒரு மண்டபத்தில் கோலாகலமாக முடிந்து விட்டது.

மாலை றிசெப்ஷனுக்குத்தான் என்னால் போக முடிந்தது.
றிசெப்ஷன் அவர்கள் வீட்டில் - லண்டன் பெற்றோல் ஸ்டேசனில் வேலை செய்யும் அவளுடைய அண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் மாப்பிள்ளை வந்தார். பாரிஸ் மாப்பிள்ளை. முன்பக்கம் வழுக்கைத் தலையுடன் மாநிறம் கொண்ட அவரைப் பார்த்த போது அடக்கமாகத் தெரிந்தார்.

சிரிப்புகள் வரவேற்புகள் முடிந்து சட்டப்படி கல்யாணம் எழுத மேசையில் அமர்ந்த போதுதான் அழகான தங்கப் பதுமை போன்ற மணப்பெண் அந்தத் தட்டை ஏந்தி வந்தாள். அதில் கட்டுக் கட்டாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது பணம்.

எனக்கு அதைப் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. உடனே மணப்பெண்ணின் தாயிடம் சென்று
மாமி..! என்ன காசு.. அது? ஏன்...? என்று கேட்டேன்.

அதற்கு மாமி
என்ன பிள்ளை இப்பிடிக் கேட்கிறாய். சீதனம்தான். என்றா

ஏன் மாமி சீதனம் குடுக்கிறியள்?

அவரைத் தாயவை கஷ்டப் பட்டுப் படிக்க வைச்சவையாம். - மாமி இயல்பாய் சாதாரணமாய்ப் பேசினாள்.

ஏன் மாமி உங்கள் பெண்ணை மட்டும் நீங்கள் கஷ்டப் படாமல் சுகமா வளர்த்தனிங்களோ..? காசு செலவழிக்காமல் படிப்பிச்சனிங்களோ..? என்று கேட்க வந்த வார்த்தைகளை எனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு பெற்றோல் ஸ்டேசன் அண்ணனைப் பார்த்தேன்.

அவன் அப்பாவியாக மணமகன் அருகில் நின்றான்.
அந்தப் பணம் அவன் வியர்வை.
எத்தனை இரவுகள் அந்தப் பணத்துக்காக அவன் நித்திரையைத் தொலைத்திருப்பான்.
எத்தனை தடவைகள் பனியில் கால்கள் புதைய குளிரில் உடல் நடுங்க ஓடி ஓடிப் போய் வேலை செய்து பணத்தைச் சேர்த்திருப்பான்.
இன்னும் எத்தனை கஸ்டங்களை அனுபவித்திருப்பான்.

அதை வாங்க பாரிஸிலிருந்து வந்த இன்னொருவனுக்கு எப்படி மனசு வந்தது?
விடை கிடைக்காத கேள்வி எனக்குள்ளே..!


- சந்திரவதனா
   1997

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite