உலகத்தில் பயங்கரவாதங்களைப் பட்டியலிடும் அமெரிக்கா தனது பயங்கரவாதத்தைப் பற்றி மூச். என்னதான் மறைக்க முயன்றாலும் சமீபகாலமாக பத்திரிகைகள் அமெரிக்க இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர்ந்து கொண்டே இருக்கின்றன. இன்றைய பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் ஈராக்கைச் சேர்ந்த இமான் வலிட் என்ற ஒன்பது வயது சிறுமியின் பேட்டியே முதலிடம் பெறுகின்றது.மேற்கு ஈராக்கில் உள்ள ஹடீத்தா என்ற நகரத்தில் 2005 நவம்பர் 19ம் திகதி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 24பேர்களை அமெரிக்க இராணுவம் அநியாயமாகச் சுட்டுக் கொன்றது. இந்த நிகழ்வை நேரடியாகப் பார்த்த இமான் வலிட்டின் பேட்டியே தற்போது முக்கிய செய்தியாக இடம் பெற்றிருக்கிறது. இந்த பயங்கரமான அமெரிக்க இராணுவத்தின் வெறியாட்டத்தில் இமான் வலிட் தனது தாய் தந்தை உட்பட ஏழு உறவினர்களை இழந்திருக்கிறாள்.
தனது தந்தையைக் கொலை செய்த இராணுவத்தினர் அவரது உடலை முற்றாக எரியுமாறு செய்து விட்டுத் தாயைக் கொலை செய்யும் போது அந்தக் காட்சியைக் காண முடியாது தானும் தனது தம்பியும் தலையணைகளால் தமது முகத்தை மூடிக் கொண்டதாகச் சொல்லும், இந்த அனர்த்தத்தில் இருந்து தப்பிக் கொண்ட இமான் வலிட் "நாங்கள் அனுபவிக்கும் எங்களது மனவலிகளை எங்களைப் போன்று அமெரிக்கர்களுக்கும் உணர்த்த வேண்டும் " என்று கூறியிருக்கிறாள். ஒரு சிறுமி துணிந்து கமராவிற்கு முன்னால் இப்படி பேட்டி தருகிறாள் என்றால் எந்தளவுக்கு அவள் பாதிக்கப் பட்டிருக்கிறாள் என்பது புரிகிறது.
அமெரிக்காவே பயங்கரவாதப் பட்டியல் தயாரிப்பதால் ஒரு போதும் அதன் பெயர் அதில் வராது.
