கலாசாரம் பண்பாடு சம்பிரதாயம் சாமிக்குற்றம் என்ற போர்வைக்குள்தான் எத்தனை வக்கிரங்கள் ஒழிந்து கிடக்கின்றன. தற்போது ஓரிரு நாட்களுக்கு முன்புதான் பத்மா அர்விந்தின் பதிவில் இறந்து போன கணவனை சொர்க்கத்துக்கு அனுப்ப ஆபிரிக்காவில் நடக்கும் ஒரு சீரழிவை வாசித்தேன். அதை வாசித்த போது இப்படியும் நடக்குமா என்றிருந்தது.
இன்று குமுதத்தை வாசித்தேன். அங்கு இன்னொரு கொடுமை. நம்ப முடியவில்லை. இப்படியும் மூடத்தனம் தலைவிரித்தாடுமா? அந்தத் தாத்தாவுக்கு மனசாட்சியே இல்லையா?

பெண்ணின் கண்களுக்குள் உள்ள சோகத்தைப் பாருங்கள்
மம்மானியூர் _ திண்டுக்கல்லிருந்து 40 கிலோ மீட்டர் தள்ளி மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அடியில் ஒளிந்து கிடக்கிற ஊர். வடமதுரையில் இறங்கி ஆட்டோவுக்குக் கெஞ்சினால் சொத்தையே விற்றுக் கொடுக்கிற தொகை கேட்கிறார்கள். நமக்கு அங்கே போகவேண்டிய தேவையிருக்கிறது. நிறைய மரங்கள். அங்கங்கே செம்மறியாடுகளை மேய்த்துக் கொண்டு சிறுமியர்கள். ஏதாவது உடம்புக்குக் கேடு என்றால் நெருங்க முடியாத மருத்துவ வசதி. அங்கொன்றும், இங்கொன்றுமாக தலைக்கட்டு வீடுகள். நெருஞ்சி முள்ளால் நிரம்பிக் கிடக்கிறது வழி. மண் ரோடு வெறிச்சோடி கிடக்கிறது. கொஞ்சம் நில்லுங்கள்.... இந்தக் கிராமத்தை இத்தனை விளக்கமாக வர்ணித்துப் போவது எதற்கு என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. கண்ணீர்க் கதைகள் நிறையவே இருக்கிறது.
மம்மானியூர் முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் நிரம்பியிருக்கிறது. பெண்டுபிள்ளைகளும், ஆண்களும் இவ்வளவு தூரம் நடந்து திண்டுக்கல்லுக்கு வந்தால் ஒரு வாய்த் தண்ணீரை வாயில் வைக்காமல் ஊருக்குத் திரும்புகிறார்கள். கம்பு, சோளம், இரும்புசோளம், திணை, கேப்பை பயிரிடுவது மட்டும்தான் வாழ்க்கை. இப்போது தான் ஒரு வருஷத்துக்கு முன்னால் மின்சாரம் எட்டிப்பார்த்திருக்கிறது. ஊருக்கு ஒளியூட்டப்பட்டாலும், அங்கேயிருக்கிற பெண்களின் வாழ்க்கை இருண்டு கிடக்கிறது.
கல்யாணத்திற்குப் பரிசம் போட்டால் 7ரு ரூபாய். மணவாழ்க்கை முறிவுக்கு 7ரு ரூபாய் என்று பெண்களின் வாழ்க்கை அடித்து நொறுக்கப்பட்டு இருக்கிறது. மம்மானியூரில் ஆண்களுக்கு சர்வசாதாரணமாக நாலைந்து மனைவிகள். அறுபது, எழுபது வயது ஆண்களை இருபது வயதுப்பெண்கள் திருமணம் செய்து கொள்வது சுலபம். ஐந்து கிலோ மீட்டர் தாண்டி டீ குடிக்கப் போயிருக்கிற எண்பது வயது புருஷனுக்காகக் காத்திருக்கிறாள் பழனியம்மாள். அவருக்கு இருபது வயதிற்கு மேலிருக்காது. ஏன் இந்த வாழ்க்கை? என்று கேட்டால், கண்ணீர் உடனே ‘குபுக்’கென்று எட்டிப்பார்க்கிறது. சம்மணம் போட்டு உட்கார்ந்து வெறித்துக் கொண்டு பேச ஆரம்பிக்கிறார்.
‘‘எங்க தாய்மாமனுக்குத்தான் என்னைக் கல்யாணம் கட்டிக்கொடுத்தாங்க. ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. ரெண்டு வருஷம் போச்சு இது மாதிரி. அப்பத்தான் இந்தப் பையன் பிறந்தான். பிறக்கும் போதே ஒரு காலு வளைஞ்சுயிருந்துச்சு. ஆனால் இதிலேயே நடந்தான். ஓடினான். கவலைப்படலை. ஆனால், என் மாமன்தான் தலைவலின்னு சொல்லி படுத்தாங்க. ரெண்டு நாள் அப்படியரு காய்ச்சல். மூணாம்நாள் ‘பொட்டு’னு போயிட்டாங்க. அடக்கம் பண்ணிட்டு பத்துநாள்தான் ஆச்சு. அப்படியே மாமன் நினைவு மனசுக்குள்ளே இருந்த நேரம். ஒரு மாதம் கழிச்சு, உங்க தாத்தாவுக்கு ஆரு ஆதரவு இருக்குன்னு என்னையே அவருக்குக் கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க. அவருக்கு எண்பது வயது ஆகுது. என் பிள்ளையை நல்லா கவனிச்சுக்கும் தாத்தா. என்னைய கல்யாணம் பண்ணிக்க நான் நீன்னு போட்டி போட்டு வந்தாங்க. ஆனால் என் தாத்தாதான் அதில ஜெயிச்சு வம்படியாக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு’ சுத்துப்பட்டு கிராமத்துல முழுக்க இது நடக்குது. நான்தான் வெளியே பேசுறேன். இதுமாதிரி கஷ்டங்களை முழுங்கிக்கிட்டுத்தான் இங்கே கிடக்கிறோம். வேறே என்ன இருக்கு. இந்தக் குழந்தை முகத்தைப் பாத்திட்டு உட்கார்ந்து இருக்கிறேன். இது முளைச்சு வந்து எத்தனை கல்யாணம் பண்ணிக்கப் போகுதோ’’ என்று மகனை காட்டிப் பேசுகிறார் பழனியம்மாள்.
பழனியம்மாளின் கணவர் ஆண்டியை கேட்டால், சிரிக்கிறார். ‘‘இவ என் பேத்திதான். மகனுக்குத்தான் கட்டி வைச்சேன். ஆனால் அவன் வாழ்க்கையும் சட்டுனு முடிஞ்சுப்போச்சு. எனக்கும் யாரும் இல்லை. அவளுக்குத்தான் குழந்தை இருக்கே. அந்தப்புள்ளையை வேறு எங்கேயும் கட்டிக்கொடுத்தால், என் பேரனை அவன் நல்லா வளர்ப்பானா? கடைசிகாலத்தில் நான் விழுந்து கிடந்தால் என்னைப் பார்த்துக்கறது யாரு?’’ என்று புது நியாயம் பேசுகிறார் ஆண்டி. மொரட்டு தாத்தாவை கண்கள் பனிக்கப் பார்க்கிறார் பழனியம்மாள். அவரின் மன ஆழங்களை அறியமுடியாமல் நம் மனது பாடுபடுகிறது.
‘இதை விடுங்க, அங்கே பாருங்க இன்னொரு ஜோடி’ என்று நம்மை கூட்டிப்போனவர் கைகாட்டிய திசையில் இருக்கிறார்கள் பிச்சையும், ஆண்டியம்மாவும். பிச்சைக்கு 70 வயது, ஆண்டியம்மா முப்பதைத் தொடுகிறார்.
‘‘இவர் ஏற்கெனவே ரெண்டு பொண்டாட்டி கட்டி பஞ்சாயத்தில் தீத்துவிட்டுவிட்டாரு. இப்ப நான்தான் அவருக்கு பொஞ்சாதி. நல்லாத்தான் வச்சுக்கிறாரு. என் பிள்ளைகளை நல்லா பார்த்துக்கிறாரு. அது போதும்னு தோணுது. பிள்ளைக முகத்தை பாத்திட்டு மீதிக்காலத்தை பொரட்டிப் போட வேண்டியதுதான்’’ என்கிறார் ஆண்டியம்மா.
‘வேறு ஆட்கள் இங்கே வந்து சம்பந்தம் பண்ண முடியாதுங்க. சாமி குத்தம் ஆயிடும். இந்த ஊருக்கு வசதி எதுவும் இல்லை. பொண்ணு கொடுக்க பக்கத்து ஊர்க்காரனே அஞ்சி நடுங்குவான். எங்க ஊர் பரவாயில்லை. பக்கத்திலே முத்தாரு இருக்கே, அங்கே போக தைரியம் இருந்தால் போய்ப்பாருங்க. ஏழெட்டு வயசுப்பொண்ணுங்க கழுத்தில கூட மஞ்சக்கயிறு கிடக்கும். வேண்டிய வசதிகளை பண்ணிக் கொடுத்திட்டுதான் இந்தப் பிரச்னையை கவனிக்கணும்’ என்கிறார் வனக்குழுத் தலைவி பொன்னம்மா.
இந்தக் கிராமத்து பெண்களின் துயரங்களை மீட்டெடுக்க நாம் நிறைய உழைப்பும், விலையும் கொடுக்க வேண்டியிருக்கும். கொடுப்போம். அந்தக் கண்ணீருக்கு விடை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
_நா. கதிர்வேலன்
படங்கள்: சித்ராமணி
nantri-Kumutham