Thursday, December 21, 2006

உராய்வு கவிதைத்தொகுப்பு - ஒரு பார்வை

முந்தைய நாயன்மார்களின் தேவாரங்களையும், புறநானூற்றுக் காவியங்களையுமே பாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்த எம்மை வியக்க வைக்கும் படியாக இன்று எம்மிடையே புதிய புதிய கவிஞர்களும், கதாசிரியர்களும் உருவாகிச் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மிக மிக இளவயதினர்கள் கூட கவி புனையும் ஆற்றல் கொண்டு கவிதைகளிலேயே தமது உணர்வுகளைக் கொட்டிக் கொண்டிருப்பதும் யாவரும் அறிந்ததே.

போர் தந்த பாதிப்பிலும், புலப்பெயர்வு தந்த சோகத்திலும், அநியாயங்களைக் கண்டு மனசு கொதித்ததிலும், சமூகத்தின் கோட்பாடுகளோடு முரண் பட்டதிலும்... என்று ஆர்ப்பரித்து எழுந்த, ஆற்றல்களை வெளிக் கொணர்ந்த… இளங் கவிஞர்களில் இளைஞன் என்ற சஞ்சீவ்காந்தும் ஒருவன்.

சஞ்சீவ்காந், இளைஞனாய் என்னுள் வியப்பை ஏற்படுத்தியவன். புலம் பெயர்ந்த இளைஞர்கள் அனைவருக்கும் உள்ள இரு மொழிகளோடும், இரு கலாச்சாரங்களோடுமான போராட்டம் சஞ்சீவ்காந்துக்கும் கண்டிப்பாக இருந்திருக்கும். புலம்பெயர் மண்ணின் மொழியோடும், கலாச்சாரத்தோடும் தன்னை இணைத்து தனது வாழ்நிலையை வளம் படுத்த வேண்டிய கட்டாயத்தின் மத்தியில் ஒரு இளைஞன் தழிழோடும் ஒன்றி நின்று தமிழில் இலக்கியம் படைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆனாலும் இவைகளின் மத்தியில் நின்று தான் எதிர் கொண்ட ஒவ்வொரு முரணோடும் எழுத்தால் முட்டி மோதியவன் சஞ்சீவ்காந். இவனது தமிழின் ஆற்றலும் ஒவ்வொரு கருத்தை முன் வைக்கும் போதும் அதில் இருந்த தெளிவும், சிந்தனா சக்தியும் என்னை மட்டுமல்லாமல் பலரையும் வியக்க வைத்திருக்கின்றன.

இவன் கவிதைகளில் ஒன்று வானலையில் பாடலாக ஒலித்த போதும், தானே வந்து தன் குரலில் ஐபிசி வானொலியில் கவிதைகளை மிக அழகாக வாசித்த போதும் நான் மனம் வியந்து மிகவும் ரசித்தேன். இப்போது இவனின் கவிதைத் தொகுப்பு ஒன்று என் கரங்களில் தவழும் போது மகிழ்வாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

உராய்வு அழகு, கவித்துவம் என்று சொல்ல முடியாத, ஆனால் ஒருவித ஈர்ப்பைத் தன்னுள்ளே கொண்ட தலைப்பு.

"புதிய சிந்தனைகள், அவற்றை முதலாக்கிய செயற்பாடுகள், காணும் வெற்றிகள் என்று ஒழுங்கமைத்து முன்னேறும் மனித சமுதாயத்தின் நீண்டு நெடுத்திருக்கும் வாழ்வியற் கோட்பாட்டோடும், வரலாற்றோடும் முரண்பட்டு முட்டி மோதியும், உடன்பட்டு ஒட்டி உரசியும் உருவான சிந்தனைகளைக் கருவேற்றுப் பிரசவித்தவையே எனது கவிதைகள்" என்று சொல்லும் சஞ்சீவ்காந்தின் இக் கவிதைத் தொகுப்பில் மிகச் சிறியதாயும், அளவில் பெரியதாயும் என்று 54கவிதைகள் உள்ளன. கவிதைக்கு அழகும், மெருகும், கருவோடு கூடிய பொருளும், உணர்வும் தரக்கூடிய விதமாக மூனாவின் 41ஓவியங்களும், கணினியில் வடிவமைக்கப்பட்ட 14 ஓவியங்களும் கூடவே உள்ளன. 128 பக்கங்களைக் கொண்ட கைக்கு அடக்கமான சிறிய புத்தகம். 2005இல் பதிப்பாகி இருக்கிறது.

முதற் பக்கத்தைத் திறந்த உடனேயே, மதிப்புரையாகவோ அன்றி முகவுரையாகவோ ஒரே ஒரு வரியில் அமைந்த காலத்தின் கவிக்கூர் இவன் என்ற திரு.தாசீசியஸ் அவர்களின் வரி கவிதைகளுக்கும், புத்தகத்துக்கும் அழகையும், அர்த்தத்தையும் சேர்த்திருக்கின்றது.

திரு.கி.பி.அரவிந்தன் அவர்கள் தனது பார்வையை ஒரு கடிதம் போல அழகிய முகவுரையாகத் தந்துள்ளார்.

வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப் பட்ட தேசத்திலிருந்து பிடுங்கி எறியப் பட்ட ஒருவனின் சீற்றத்தோடு ஆரம்பிக்கிறது இத் தொகுப்பின் முதற் கவிதை.
வருகவென வரவேற்று
வாழ வைத்த ஆண்டுகளே
வரலாற்றில் நீர் எங்கு போனீர்?

திரும்பிப் பார்த்தால் நடந்து வந்த பாதையெங்கும் படிந்திருக்கும் போரின் சுவடுகளே இன்றைய எமது நிலையில் வரலாறாகியுள்ள கோபத்தைச் சொல்கிறது, வருக 2004 என்ற கவிதை.

இக் கவிதையிலேயே, யதார்த்தமான வாழ்வு மட்டுமே வேண்டும் என்ற மனதின் யாசிப்பு
வெள்ளை நிழல் வேண்டாம்
வெளிச்ச இரவு வேண்டாம்
சூரிய நிலவு வேண்டாம்
சுடாத வெயில் வேண்டாம்

என்ற வரிகளில் அழகாக வெளிப் படுகிறது.

தொடரும் கவிதைகள் விடுதலையின் வேட்கை, புலப்பெயர்வின் அவலம், சமூதாயத்தின் மூடக்கொள்கைகள் மீதான வெறுப்பு, கலாச்சாரம் என்ற பெயரிலான அறியாமைகள், பெண்விடுதலையின் மீதான ஆர்வம், பெண்கள் மீதான அழுத்தங்களில் எழுந்த கோபம், சமூகச் சிக்கல்கள், சமூகத்தின் மீதான மாற்றத்தின் வேண்டுதல்கள், அறிவியல் வளர்ச்சி, கணினி மொழி, காதல்… என்று பல்வேறு பட்ட விடயங்களைக் கருப்பொருளாகக் கொண்டு புதிய சிந்தனைகளை வேண்டி நிற்பவையாகவே இருக்கின்றன.

மொத்தத்தில் சமுதாய வளர்ச்சியிலும், வாழ்வியல் முன்னேற்றங்களிலும் அக்கறை கொண்ட ஒரு இளைஞனின், உணர்வுகளின் குவியல்களாயும், ஒரு இளைஞனுக்கே உரிய துடிப்புகளின் வெளிப்பாடுகளாயும்… கவிதைகள் அமைந்துள்ளன.

கவிதைக்கு எது அழகு? என்று கேட்டால், சரியாகச் சொல்ல முடியாத படி இன்றைய கவிதைகள் எதுகை, மோனை, அணி, நயம்… என்று எதுவுமே இல்லாமலும் கூட ஏதோ ஒரு வகையில் அழகு பெற்று பலரையும் கவர்கின்றன.

இத்தொகுப்பில் இடம் பெற்ற கவிதைகளில் எதுகை, மோனை, நயம்… என்று அழகிய வடிவிலான கவிதைகளும் உள்ளன. அந்த எந்த வடிவங்களும் இல்லாமல் நல்ல கருப்பொருட்களை மட்டும் தமக்குள்ளே புகுத்தியுள்ள கவிதைகளும் உள்ளன.

அவைகளில் மிகுந்த நயத்தோடும், கருத்தோடும் மட்டுமல்லாமல், இத் தொகுப்புக்கே மகுடமாகவும் அமைந்தது போன்ற கவிதை கடிதம்
ஏர் பிடித்த கைகளிலே
போர் கொடுத்த ஆயுதமோ
நேர் நிமிர்ந்த மார்பினிலே
யார் பதித்த குண்டுகளோ

நான் நடந்த தெருவினிலும்
வான் அளந்த வடக்கினிலும்
ஏன் இந்த சோதனையோ
என் மனசில் வேதனையே...

புலம் பெயர்ந்த இளைஞன் ஒருவன், போரிலே தகித்திருக்கும் தாயகத்தையே தாயாக உருவகித்து எழுதும் கடிதம் போல அமைந்த இந்தக் கவிதை எல்லோர் மனதையும் தொடக் கூடிய ஒரு கவிதை. மிகவும் அழகாகவும், மனதை ஆழமாகத் தொடக் கூடியதாகவும் கோர்க்கப் பட்ட வார்த்தைகள். அன்புள்ள தாயகமே ஆசை மகன் எழுதும் மடல்... என்று தொடங்கும் இக்கவிதை பாடலாக்கப் பட்டு ஒரு அழகிய பாடலாகவும் வெளி வந்து பலர் மனதையும் கவர்ந்தது குறிப்பிடத் தக்கது.
அன்புள்ள தாயகமே…
ஆசை மகன் எழுதும் மடல்

நானிங்கு நலமம்மா
நீயங்கு நலம் தானா?
எழுத மனம் நினைக்கிறதே
கண்ணீர் அதை நனைக்கிறதே….

….நில்லாமல் ஓடி வரும்
நிலவொளியும் காண்பீரோ
சொல்லாமல் பாடல் தரும்
குயிலோசை கேட்பீரோ

ஆராரோ கீதம் படிக்க
ஏணையும் அசைகின்றதா
ஊரெல்லாம் ஓலம் ஒலிக்க
உறவுகளும் அழுகின்றதோ...

ஏக்கமும், தாயகத்தின் மீதான தாபமும் மனதின் அடிநாதத்திலிருந்து ஆற்றாமையோடும், அழகாகவும் வெளிப்படுகின்ற அருமையான கவிதை. இது இளைஞனின் கவிதை உணர்வை அழகாக வெளிப்படுத்திய கவிதையும் கூட.

குறிப்பிடத்தக்க கவிதைகளில் திலீபன் என்ற கவிதையும் ஒன்று. நயமாக எழுதப்படும் கவிதைகளுக்கு உள்ள கவர்ச்சி போலவே, திருக்குறள் போல நறுக்கென்று சொல்லி விடும் கவிதைகளிலும் ஒரு வித கவர்ச்சி இருக்கிறது.
உண்ணாவிரதத்தின் பசிக்கு
தன்னை உணவாய் கொடுத்தவன்

நீட்டி முழக்காமல் நறுக்கென்று சொல்லி விட்ட அழகான கவிதை.

சில கவிதைகள் மற்றவர்களுக்கு ஆணையிடுவது போலவும், போதிப்பது போலவும் அமைந்துள்ளமையும் கண்டிப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அந்தத் தொனிகள் தவிர்க்கப் பட்டிருக்கலாம். உதாரணமாக

இருட்டைக் கவிழ்த்து
வேளிச்சத்தின் மேல் ஏறி நில்

சுதந்திரத்தை விரி
உலகை அதில் கிடத்து
பண்பாட்டால் போர்த்து

சமுதாயத்தை நிர்வாணப்படுத்து
அதன் காயங்களில் முத்தமிடு
அழுக்குகளை நக்கு…

என்று தொடரும் செயற்படு(பொருள்)என்ற கவிதை
ஆசைகளோடு உறவு கொள்
தேவைகளைக் கருத்தரி
தேடல்களைப் பிரசவி

பழசை மென்று
புதுசாய் துப்பு

(பக்-54)
என்று முடிகிறது. இக்கவிதை சொல்ல வந்த விடயத்தை போதனை போலவோ அன்றி கட்டளை போலவோ இல்லாமல் கொஞ்சம் வேறு விதமாகச் சொல்லியிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.

ஓரிரு கவிதைகளில் கருப்பொருள் பிசகுவது போன்ற பிரமை ஏற்படுகிறது. உதாரணமாக
ஈழம் என்ற நான்காவது கவிதை
குருதி
கண்ணீர்
வியர்வை
நீருற்றி

என்பு
சதை
அங்கம்
பசளையிட்டு

ஏக்கம்
தவிப்பு
எதிர்பார்ப்பு
காவல்
வைத்து

நிழலுக்காய்
வளர்க்கும்
மரம்

இக்கவிதையைப் படிக்கும் போது, குருதி, கண்ணீர், சதை, அங்கம், உயிர்… இத்தனையையும் பயிரிட்டு வெறுமே நிழலுக்காக மட்டுமா எமக்கு ஈழம்? என்ற கேள்வி எழுகிறது. தாயகத்தின் விடுதலை என்பதும் அதற்காகக் கொடுக்கப் படும் விலையும் வெறும் நிழல் என்ற வார்த்தைகளுக்குள்ளோ அல்லது அர்த்தத்துக்குள்ளோ அடங்கி விடாது. ஆனாலும் இளைஞனின் பார்வையில் இதன் கருப்பொருள் வேறு விதமாகக் கூட இருக்கலாம். நான் பார்க்கும் கோணம் வேறாக இருக்கலாம்.

இவைகளோடு அதிகமான கவிஞர்களால் தொடப்படாத அறிவியல் சம்பந்தமான சில கவிதைகளையும் இளைஞன் படைத்திருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது. அப்படியான ஒன்றான
மரபணு என்ற கவிதையிலிருந்து சில வரிகள்
பாய் படுக்கை பாலின்றி
கரு ஒன்று உருவாகும்
தாய் தந்தை உறவின்றி
ஒரு பிள்ளை உருவாகும்

நிறம் என்ன திறம் என்ன
அத்தனையும் தேர்ந்தெடுத்து
யார் யாரைப் போலென்று
அற்புதமாய் அச்செடுத்து….


இப்படி பல்வேறு திசைகளிலும் விரிவு பட்ட சிந்தனைகளோடு உதித்த கவிதைகளின் தொகுப்பு இது. இதனோடு ஓய்ந்து விடாமல் இளைஞன் இனியும் கவி படைக்க வேண்டும். குறைகளைத் திருத்தி இன்னும் நிறைவாக எழுத வேண்டும். அத்தோடு நின்று விடாமல் படைப்புக்களைத் தொகுத்து பதிப்பாக்கி விடவும் வேண்டும்.

சந்திரவதனா
ஜேர்மனி
18.12.2006

Tuesday, December 19, 2006

Bala Anna

Editorial Tamil Guardian 17 December 2006

His driving purpose was always the well being of his people, as all those who engaged with him from any side of the table quickly came to understand. It is entirely in character that his final public words in November, confirming his diagnosis with cancer, were mainly about the plight of the Tamil people. He loved us as much as we adored him.News that Mr. Anton Balasingham had passed away after a brief battle with cancer was met this week with shock and profound grief across the Tamil community. In the thirty years he was associated with the Tamil freedom struggle, he had truly become a legend in his own time. He was the LTTE’s theoretician for thirty years and its chief negotiator for most of that time. In that period, a fledgling guerilla group dedicated to the emancipation of the Tamil people grew and expanded into a national liberation movement with a powerful military and an apparatus of civil administration, while Bala Anna became an icon of the Tamil cause.

Mr. Balasingham was many things to the Tamil struggle. The formal titles of theoretician and chief negotiator do not capture them all. Within the LTTE he was a father figure. His door was always open to cadres and commanders alike. No subject was taboo, confidentiality was assured. Most importantly, of course, he was the struggle’s political strategist. Beyond the LTTE, he was approached for advice and guidance by a range of Tamils, from parliamentarians to journalists, supportive of the cause of freedom. He was eloquent in formal Tamil, but he could also address us in the colloquial, unraveling the complexities our struggle faced and bringing every one of us closer to it. Which is why his public addresses were so eagerly awaited.

It was Mr. Balasingham’s demonstrably keen intellect and political acumen that compelled LTTE leader Vellupillai Pirapaharan to ask him in 1979 to join the tiny group of young revolutionaries their movement then was. (And it was Mr. Balasingham’s recognition of Mr. Pirapaharan’s abilities as a leader and the LTTE’s institutional strengths that persuaded him to throw in his lot with the Tigers rather than any of the many other Tamil militant groups setting out on the long road of struggle.) The strength of the personal bond that grew between them is reflected in Mr. Pirapaharan’s poignant words this week as he awarded Bala Anna that unique title ‘Voice of the Nation.’

Nothing captures what Bala Anna meant to the Tamils as that title does. For three decades he spoke for us, the Tamil people. He led LTTE delegations in five attempts to negotiate a political solution with the Sinhala state. He represented us in our dialogue with the international community, both in public fora and private discussion. He explained the oppression we endure and defended our struggle for freedom. He was a formidable representative, aggressively and adeptly pursuing our interests. He could not be intimidated – though it was often tried. His razor sharp intellect was matched by a powerful personality.

But he was, as one commentator puts it, a quintessential negotiator. Amidst the heat of dispute he could find the sites of compromise. And, armed with the complete trust of the LTTE leadership, he would compromise – but not surrender. Thus he earned the begrudging respect of his interlocutors, both Sinhala and international. His driving purpose was always the well being of his people, as all those who engaged with him from any side of the table quickly came to understand. It is entirely in character that his final public words in November, confirming his diagnosis with cancer, were mainly about the plight of the Tamil people. He loved us as much as we adored him.

It is inevitable that Mr. Balasingham’s passing has brought joy to our enemies. Reflecting the character of some of them, there has been public jubilation at his death in parts of the south - just as when his illness was announced last month. This ugliness is characteristic of the oppression we fight.

It also reflects a misunderstanding of what Mr. Balasingham’s multi-faceted role was, of where the LTTE now is as a movement and where the Tamils are as a nation. The growth of LTTE over the past three decades has been inexorable, despite the ferocious violence unleashed on it and the Tamil people by the Sri Lankan state and its allies. Mr. Balasingham contributed immeasurably to that growth. His analytical, calculative approach has been institutionalized. Every arm of the LTTE routinely weighs its decisions before committing to a course of action, the long-term benefit to the Tamil cause the overarching priority. As the LTTE’s multi-faceted international engagement has grown in scale and complexity, new capabilities have emerged, both in the LTTE and wider Tamil nationalist movement. Mr. Balasingham guided many of these, devising strategies and advising key individuals. As deepening illness precluded a frontline role for Mr. Balasingham for much of this year, he was able to rest, secure his many tasks were being competently carried forward by others. The extent of his legacy will only be discernible in the fullness of time.

This newspaper and its staff are privileged to have had a very special relationship with Bala Anna. It began soon after he arrived in London in 1999. He readily agreed to meet the volunteers of the Tamil Guardian when we asked. Our discussions quickly became regular and frequent. We always met at the study in his home, where we were warmly welcomed by him and his wife, Adele. An experienced journalist, Mr. Balasingham had a passion for media. He also appreciated that we were committed to articulating the Tamil cause. He spent considerable time with us in prolonged discussion on the ethnic question, on the Tamil struggle, on international affairs, and many other subjects. The depth of his knowledge was unfathomable. A warm, convivial and humorous man, he was a patient tutor. He scrutinized our work and was generous with his praise and scathing in his criticism. Yet he never constrained us, encouraging us to write freely on the Tamil cause. As with a handful of other Tamil correspondents, he took us into his confidence in exchange for our discretion. In March 2000 we were privileged to be exclusively granted his first media interview after leaving Vanni. He gave many of his infrequent subsequent interviews to us.

Our relationship with the Balasinghams went beyond the production of the newspaper. It was individual, personal and very affectionate. They took an active interest in each of us, inquiring of those who met them about those who were not there. Bala Anna encouraged us to develop our individual interests and offered welcome advice on our academic and professional pursuits. We drew much inspiration and not a little courage from him. Being close to Bala Anna, we were, for a long time, acutely aware of his health difficulties. His health declined rapidly this year, but only until recently were we unable to converse regularly with him. His death comes as a devastating personal loss to each of us. Our hearts go out to Adele Aunty, his beloved wife and constant companion. Her loss is the deepest. We will all miss him very much. We, at the Tamil Guardian, couldn’t be more proud of our close association with Mr. Balasingham over the past seven years. He was, quite simply, a remarkable man.

Quelle - Tamil guardian(19 December 2006)

பொ. கருணாகரமூர்த்தியின் இருநூல்கள் வெளியீடு

1.கூடு கலைதல் - 11 சிறுகதைகளின் தொகுப்பு.
2.பெர்லின் இரவுகள் - நினைவலைகள்.

28.12.2006 அன்று மாலை 18:00 மணி
இடம் :
Mathura Restaurant
Kolonnen Str.43
19829 Berlin


வெளியீட்டுரைகள்:-
பெர்லின் இரவுகள்
சுசீந்திரன்
கூடுகலைதல்
உமா

விமர்சன உரைகள்:-
கலா ரஞ்ஜினி
தனபாலன்
பாமினி துஷ்யந்தன்
சந்தூஸ்
பரமு சிவா
வரதராஜன்
சாரு நிவேதிதா

ஆசிரியர் ஏற்புரை.
இராப்போசனம்

இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்!

தொடர்புகளுக்கு: பொ.கருணாகரமூர்த்தி
Tel.: 030-5449337

Friday, December 15, 2006

பாலாண்ணைக்கு ''தேசத்தின் குரல்'' எனும் கெளரவப்பட்டம்

Mr. Pirapaharan meets Mr. Anton Balasingham in Vanni in January 2005

வியாழன் 14-12-2006 23:08 மணி தமிழீழம் [செந்தமிழ்]

பாலாண்ணைக்கு ''தேசத்தின் குரல்'' எனும் கெளரவப்பட்டம் வழங்குவதில் பெருமையடைகிறேன் - தேசியத் தலைவர்

ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து ''தேசத்தின் குரல்'' என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார் என தமிழீழத் தேசியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழத் தேசியத் தலைவரின் அறிக்கையின் முழுவடிவமும் வருமாறு........

தலைமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
2006-12-14

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.

பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.

பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.

எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.

ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து ''தேசத்தின் குரல்'' என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.

''புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்''

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்


Quelle - Pathivu

Friday, December 01, 2006

பதியப்படாத பதிவுகள்

இன்று அப்பாவின் நினைவு நாள்.
அப்பாவின் நினைவுகளையும் சுமந்த கதை ஒன்றை மீள் பதிவு செய்கிறேன்.


"சோ" வென்று கொட்டி விட்ட மழையில் மரங்களும் செடிகளும் சிலிர்த்து நின்றன. பீலியால் இன்னும் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வேலிக்கு மேலால் தெரிந்த இராணுவத் தலைகளும், கண்களும் காணாமல் போயிருந்தன.

சற்று நேரத்துக்கு முன் இராணுவக் கண்களைக் கண்டு மருண்டு, முகம் இருண்டு போயிருந்த சங்கவி இப்போது தன்னை மறந்து இலைகளில் இருந்து சொட்டும் மழை நீரைப் பார்த்து ரசித்த படி விறாந்தை நுனியில் நிற்பதைப் பார்த்த கதிரேசருக்குச் சந்தோஷமாக இருந்தது.

கதிரேசர் இன்று என்றுமில்லாத சந்தோஷத்தில் குளித்துக் கொண்டிருந்தார். பின்னே என்ன இருக்காதா? மகள் சங்கவி யேர்மனியில் இருந்து வந்திருக்கிறாள். அதுவும் பன்னிரண்டு வருடங்களின் பின்.

கதிரேசர் இப்படிக் கதிரைக்குள்ளும் கட்டிலிலுமாய் முடங்கிப் போய் இருக்கக் கூடிய ஆள் அல்ல. மீசையையும் முறுக்கி விட்டுக் கொண்டு வாட்ட சாட்டமான கட்டுடலுடன் அவர் ராஜநடை போடும் அழகே தனி அழகுதான். எப்போதும் சந்தோசமாக இருக்க விரும்பும் அவர் விடுமுறையிலே வீட்டுக்கு வந்தாலே வீடு அசாதாரண கலகலப்பில் மிதந்து அவர் அன்பில் திளைத்திருக்கும். மனைவி செல்லமும் பெரிய குங்குமப் பொட்டுடன் வளையல்கள் குலுங்க வீட்டுக்குள் வளைய வரும் காட்சி மங்களகரமாகவே இருக்கும்.

பின்னேரம் என்றாலே கதிரேசர் வீட்டுக்குள்ளே இருக்க மாட்டார். பிள்ளைகளையும் செல்லத்தையும் அழைத்துக் கொண்டு Beach, Park, படம் என்று சுற்றித் திரிவார்.

பருத்தித்துறைத் தோசை என்றாலே அவருக்குக் கொள்ளை பிரியம். அதற்காகவே மகள் சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஓடக்கரைக்குப் போவார். பகலில் எந்த வித அசுமாத்தமும் இல்லாமல் வேலியோடு வேலியாக மூடப் பட்டிருக்கும் சின்னச் சின்னச் சதுரத் தட்டிகள் மாலையானதும் திறக்கப் பட்டிருக்கும். உள்ளேயிருந்து "கள்" விட்டுப் புளிக்க விடப்பட்ட தோசைமாவில் சுடப்படும் தோசையின் வாசம் மூக்கைத் துளைக்கும்.

கதிரேசர் சைக்கிளையும் உருட்டிக் கொண்டு ஒவ்வொரு தட்டியாகத் தாண்டும் போது சங்கவி "ஏனப்பா போறிங்கள்? இங்கையே வேண்டுங்கோவன்." பொறுமையிழந்து கேட்பாள்.

கதிரேசர் "இவளட்டைத் தோசை சரியில்லை. இவளின்ரை பச்சைச் சம்பல் சரியில்லை." என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொன்றாகத் தாண்டி குறிப்பிட்ட தட்டியடியில் குனிந்து மூடு பெட்டியைக் கொடுத்து "முப்பது தோசை சுட்டு வையணை." என்கிற போது "என்ரை ராசா வந்திட்டியே." என்பாள் தோசை சுடும் பெண்.

ஏதோ அவளும் கதிரேசரும் நெருங்கிய உறவினர்கள் போல இருக்கும் அவளின் கதை. தோசை வாங்கி வாங்கியே பரிச்சயமான உறவு. "நல்லா நிறையச் சம்பல் போட்டு வையணை. பத்துப் பாலப்பமும் புறிம்பாச் சுட்டு வையணை. " கதிரேசர் சொல்லி விட்டு, சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு, ரவுணுக்குள் போய் இன்னும் தேவையான வீட்டுச் சாமான்களையும் வாங்கிக் கொண்டு, திரும்பி வந்து தோசை பாலப்பத்தையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார்.

வவுனியாவில் நிற்கும் சங்கவியின் நினைவலைகள் பருத்தித்துறையை வலம் வந்தன. பிறந்த மண்ணையும் அப்பா, அம்மா, சகோதரர்களுடனான அந்த வாழ்க்கையையும் நினைக்கும் போதெல்லாம் வீணையின் நரம்பை மீட்டும் போதெழுகின்ற மெல்லிய நாதத்தின் இனிமை தரும் சிலிர்ப்பு அவளுள் ஏற்படும்.

"என்ன சங்கவி ஆமியைக் கண்டு பயந்து போட்டியே? இஞ்ச வா. வந்து பக்கத்திலை இரு." மிகவும் ஆதரவாகவும் ஆசையாகவும் கதிரேசர் சங்கவியை அழைத்தார். நினைவுகள் தந்த சிலிர்ப்புடன் சங்கவி வந்து அவர் பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்து இடது கையால் அவர் முதுகைத் தடவி அணைத்துக் கொண்டு வீதியை நோக்கினாள்.

சற்று நேரத்துக்கு முன் சிங்கள இராணுவத்தின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபட்டுக் கிடந்த வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்ரேசன்ரோட், சைக்கிள்களும், ஓட்டோக்களும், மனிதர்களுமாய் மீண்டும் உயிர்ப்புடன் தெரிந்தது.

பக்கத்தில் அமர்ந்திருந்த அப்பா கதிரேசரைப் பார்க்கப் பார்க்க சங்கவிக்கு ஒரே கவலையாக இருந்தது. அவரது அகன்ற தோள்கள் ஒடுங்கி மார்பகங்கள் வலுவிழந்து, கைகளும் கால்களும் சோர்ந்து... உடலுக்குள் நெளிந்து திரியும் நோயின் கொடிய வேதனையைக் கொன்று விடும் அளவு கொடிய வேதனை பிள்ளைகள் நாடு நாடாகச் சிதறியதால் ஏற்பட்ட தனிமையில் கண்ணுக்குள் தெரிய துவண்டு போயிருந்தார்.

அவர் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையாகிப் போனதை "மேற்கொண்டு வைத்தியம் செய்ய முடியாது எல்லாம் கை நழுவி விட்டது." என்று டொக்டரே கை விரித்த பின்தான் செல்லம் யேர்மனிக்கு ரெலிபோன் பண்ணி சங்கவியிடம் சொன்னாள். சங்கவியை ஒரு தரமாவது பார்த்து விடவேண்டுமென்ற ஆசைத் துடிப்பிலேயே அவர் இன்னும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறார் என்றும் சொன்னாள்.

உயிருக்கு உத்தரவாதமில்லாத தாயகத்தில் தனக்கொன்று ஆகி விட்டால் ஜேர்மனியில் விட்டு வரும் குழந்தைகள் சிறகிழந்து போவார்களே என்ற பயம் சங்கவியின் மனதைக் குழம்ப வைத்தாலும் அப்பாவின் பாசம் வலிந்திழுக்க போராடும் மனதுடன்தான் புறப்பட்டாள்.

தாயகத்தில் கால் வைத்த போது மனதுக்குள் ஏற்பட்ட இனம் புரியாத சந்தோசத்தையும் துள்ளலையும் முண்டித் தள்ளிக் கொண்டு முன்னுக்கு வந்து நின்றது பய உணர்ச்சிதான்.

"பொட்டை அழித்து விடு." பின்னுக்கு நின்ற சிங்களப் பெண் ஆங்கிலத்தில் கிசுகிசுத்த போது, பன்னிரண்டு வருடங்களாக ஜேர்மனியிலேயே தவிர்க்காத பொட்டைத் தவிர்த்து, பாழடைந்த நெற்றியுடன், கால்கள் பின்னித் தடுமாற, படபடக்கும் நெஞ்சுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்ததை நினைக்க சங்கவிக்கு மனசு கூசியது. "ஏன் இப்படி முகம் இழக்கப் பண்ணப் படுகிறோம்." என்று குமுறலாகக் கூட இருந்தது.

விமான நிலையத்தில் மாமாவை இனங் கண்டு, செக்கிங் பொயின்ற்ஸ் தாண்டி, வெள்ளவத்தை வரை போய் பொலிஸ் ரிப்போர்ட் எடுத்து, வவுனியா புறப்படுவதற்கிடையில் சங்கவி நிறையத் தரம் எரிச்சல் பட்டு விட்டாள்.
"அந்நிய நாட்டில் எமக்கிருக்கும் சுதந்திரம் கூட எமது நாட்டில் எமக்கு இல்லையே" என்று மாமாவிடம் குமுறினாள்.

"வவுனியாவிலை ரெயின் நிண்டதும் ஓடிப் போய் லைன்ல நில். இல்லாட்டி பாஸ் எடுத்து வீட்டை போய்ச் சேர மத்தியானம் ஆகீடும்." மாமா ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் சங்கவி ஓடவில்லை.

அதன் பலனாக வவுனியா ரெயில்வே ஸ்ரேசனை நிறைத்து நின்ற சிங்கள இராணுவப் படைகளுக்கு நடுவில் நீண்டு, வளைந்து, நெளிந்து நின்ற மூன்று மனித வரிசைகளின் மிக நீண்ட வரிசையில் இறுதி ஆளாக அவள் நின்றாள். இறுதிக்கு முதல் ஆளாக அவளது மாமா நின்றார்.

அலுப்பு, களைப்பு, பயம், சலிப்பு, எல்லாவற்றையும் மீறிய ஆர்வத்துடன் அவள் முன்னுக்கு எட்டிப் பார்த்தாள். மூன்று வரிசைகளும் ஆரம்பிக்கும் இடங்களில் ஐந்து ஐந்து பேராகச் சிங்களப் பெண்கள் Uniform உடன் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். மேசைகளில் பெரிய பெரிய கொப்பிகள் இருந்தன. வரிசையில் முன்னுக்கு நிற்பவரை ஒரு பெண் எதுவோ கேட்டு எழுத, அடுத்த பெண் ஒரு கொப்பியைப் புரட்டி எதுவோ தேட, மற்றைய இரு பெண்களும் எழுதுவதும் பொலிஸ் ரிப்போர்ட்டையோ அல்லது வேறு எதையோ அக்கு வேறு ஆணி வேறாய் அலசிப் பார்த்து முடிப்பதுமாய் தொடர இறுதிப் பெண் ஒரு சின்ன ரோஸ் கலர் துண்டைக் கொடுக்க மனித வரிசை ஒவ்வொருவராக ஆறுதலாகக் கலைந்து கொண்டிருந்தது.

6.30 க்கு ரெயினால் இறங்கிய சங்கவியும் மாமாவும் சிங்களப் பெண்கள் இருந்த மேசையடிக்கு வரும் போது நேரம் எட்டு மணியைத் தாண்டியிருந்தது. மற்றைய இரண்டு வரிசைகளும் ஏற்கெனவே முடிந்து, அந்த வரிசைகளுக்குப் பொறுப்பாக இருந்த சிங்களப் பெண்கள் எழுந்து நின்று கைகளை மேலே உயர்த்தி உளைவு எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு வரிசைகளும் ஏற்கெனவே வவுனியாவில் இருந்து கொழும்பு வரை போய் வருபவர்களுக்காம். இந்த வரிசை சங்கவி போல் புதியவர்களுக்காம்.

அப்பா கதிரேசர் வவுனியாவில் ஸ்ரேசன் மாஸ்டராகப் பணி புரிந்த காலங்களில் அவரோடு கைகோர்த்துக் கொண்டு துள்ளித் திரிந்த Flattform இன்று சிங்கள இராணுவங்களால் நிறைந்திருக்கும் காட்சியை ஜீரணிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த சங்கவியை அந்தச் சிங்களப் பெண்கள் கேள்விகளாய்க் கேட்டு கோபப் படுத்தினார்கள்.

சங்கவிக்கு சிங்களம் விளங்குகிறதோ இல்லையோ என்பது பற்றியே அக்கறைப் படாத சிங்களப் பெண்கள் அவளின் கோபத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவர்கள் கேள்விகளால் குடைந்து ஜேர்மனியப் பாஸ்போர்ட், ஐசி பார்த்து பொலிஸ் ரிப்போர்ட்டை ஆராய்ந்து பாடசாலை வரவுப் பதிவேடு போன்ற கொப்பியில் பெயர் விலாசம் எல்லாம் பதிந்து கடைசியாக முத்திரை போன்ற சைஸில் ஒரு ரோஸ் கலர் துண்டை நீட்டிய போது "அப்பாடா" என்ற உணர்வுடன் அதை வாங்கிப் பார்த்தாள்.

எல்லாம் சிங்களத்தில் எழுதப் பட்டிருந்தன. ஒன்றுமே புரியவில்லை.
சிங்கள இராணுவத்தின் விறைப்புகளையும், முறைப்புகளையும் தாண்டி செக்கிங்கில் கிளறப்பட்ட சூட்கேஸை அமத்திப் பூட்டிக் கொண்டு, வெளியில் வந்த போது நேரம் ஒன்பது மணியை நெருங்கியிருந்தது.

"மாமா...! என்ன இது? எல்லாம் சிங்களத்திலை எழுதியிருக்கு. ஒண்டுமே விளங்கேல்லை. இதுதான் பாஸோ..?" ரோஸ் துண்டை நீட்டிய படி சங்கவி மாமாவை நோக்கினாள்.

"ஓமோம். இதுதான் பாஸ். கவனமா வைச்சிரு. துலைச்சியோ....! உன்ரை சரித்திரம் அவ்வளவுதான். இது ஒரு நாள் பாஸ்தான். நாளைக்குக் காலைமை வந்துதான் ஒரு கிழமைப் பாஸ் எடுக்கோணும்."

மாமா சொன்ன பின் சங்கவிக்கு அந்த மெல்லிய ரோஸ் கலர் பேப்பர் துண்டு மகா கனமாக இருந்தது. Handbag க்குள் வைத்து விட்டு அடிக்கடி திறந்து திறந்து அது பத்திரமாக இருக்கிறதா..! எனப் பார்த்துக் கொண்டாள்.

"ஏன் ஒருநாள் பாஸ்தான் தந்தவையள்? ஒரேயடியா ஒரு கிழமைக்குத் தந்தால் என்ன?" திருப்தியின்மையுடன் கேட்டாள்.

"உடனை அப்பிடித் தரமாட்டினம்."

"அப்ப நாளைக்கு இன்னொரு தரம் இங்கை வந்து தூங்கிக் கொண்டு நிக்கோணுமோ? ஏன் இந்தளவு கெடுபிடி? இதிலை இவையளுக்கு என்ன லாபமிருக்கு?"

"எல்லாம் தங்கடை கட்டுப் பாட்டுக்கை வைச்சிருக்கத்தான். பெடியளை(புலிகளை)உள்ளை நுழைய விடாமலிருக்கத்தான்."

"அப்ப இங்கை பெடியளே இல்லையோ..?"

"இருக்கிறதுக்கான சந்தர்ப்பம் இல்லை. இது ஆமியின்ரை கட்டுப் பாட்டுக்குள்ளை இருக்கிற இடம்."

சங்கவிக்கு எல்லாமே விசித்திரமாக இருந்தது.
"என்ன பிள்ளை.. ஒரே யோசிச்சுக் கொண்டு இருக்கிறாய். பிள்ளையளை நினைச்சுக் கவலைப் படுறியோ?" கதிரேசர் கேட்டதும்தான் சங்கவி மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்தாள்.

"இல்லையப்பா... இவங்கள் காலைமை ரெயில்வே ஸ்டேசனிலை மணித்தியாலக் கணக்கிலை என்னையும் மாமாவையும் மறிச்சு வைச்சு கணக்கெடுப்பும், பதிவும் செய்ததை நினைக்க நினைக்க எனக்குக் கோபம் கோபமாய் வருது. அப்பிடியெண்டால்... இந்தப் பெடியள்(விடுதலைப்புலிகள்) இதுக்குள்ளை வரேலாதோ..? "

இப்பக் கதிரேசர் குனிந்து இரகசியமாக.. அவள் காதுக்குள்.. "எங்கடை பெடியளை இவங்களாலை என்ன செய்யேலும்..?" என்றார். சொல்லும் போதே நோயில் வாடிப் போயிருந்த அவர் கண்கள் பிரகாசித்ததை சங்கவி கவனிக்கத் தவறவில்லை. இரண்டு மாவீரர்களைப் பெற்றெடுத்த கதிரேசரிடம் தேசப்பற்றும் தமிழ்த்தாகமும் மரணத்தின் வாசலில் நிற்கும் இந்த நேரத்திலும் குறையாமல் இருந்தன.

சங்கவி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதிரேசர் "என்ன பிள்ளை அப்பிடிப் பார்க்கிறாய்? உன்னைப் பார்த்திட்டன். இனி நான் நிம்மதியாக் கண்ணை மூடுவன்." என்றார்.

"இல்லையப்பா அப்பிடியொண்டும் நடக்காது..." சொல்லிக் கொண்டிருக்கும் போதே சைக்கிள் ஒன்று வந்து கேற் வாசலில் நிற்க, அழகிய இளைஞனொருவன் இறங்கி உள்ளே வந்தான். பக்கத்து அறைகளில் குடியிருப்பவர்களிடம்தான் அவன் வருகிறான் என சங்கவி நினைத்த போது "வா விமலன் வா." கதிரேசரும் செல்லமும் அவனைக் கோரசாக வரவேற்றார்கள்.

மாவீரனான தம்பி மொறிஸ் இப்போ உயிரோடு இருந்தால் இவன் வயதில்தான் இருப்பான். சங்கவி தனக்குள் நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

நடக்கவே கஸ்டப் படுகிற கதிரேசர் முக்கித்தக்கி கதிரைக்குள்ளால் எழுந்து சுவரைப் பிடித்துக் கொண்டு மெதுமெதுவாய் நடந்து அவரது அந்தக் குச்சி அறைக்குள் நுழைய விமலன் அவர் பின்னால் அறைக்குள் நுழைந்தான். செல்லமும் பின் தொடர சங்கவியும் உள்ளே போனாள்.

யார் வந்தாலும் வெளி விறாந்தையில் இருத்திக் கதைக்கும் அம்மாவும் அப்பாவும் நடந்த விதம் அவளுக்குச் சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தது.
கதிரேசர் கட்டிலில் அமர உதவி செய்த விமலன் தானும் அவர் அருகில் அமர்ந்து கொண்டான். "எப்பிடியப்பு இருக்கிறாய்..?" செல்லம் ஆதரவாய்க் கேட்டாள்.

"யார் இவன்..?" சங்கவிக்குள் ஆர்வம் கேள்வியாய் எழுந்தது.

"நீங்கள்..?" சங்கவி அவனை நோக்கினாள்.

"அக்கா..! நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தனனான். உங்கடை தம்பி மொறிசின்ரை நண்பன்தான் நான்."

தம்பி மாவீரனாகி வருடங்கள் பல ஓடிய பின் தம்பியின் நண்பனாக வந்தவனை வியப்புடன் பார்த்து "நான் வந்தது எப்பிடித் தெரியும்..?" என்றாள்.

"எல்லாம் தெரியும்." என்றான் அர்த்தத்துடன்.

இப்போ செல்லம் கிசுகிசுத்தாள். " விமல் வெளியாக்களுக்குத்தான் எங்கடை மருமகன். ஆனால் உள்ளுக்கு..."

செல்லம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விமலன் சேர்ட்டை மேலே உயர்த்தி, இடுப்பிலே சொருகியிருந்த கடிதமொன்றை எடுத்து செல்லத்திடம் கொடுத்தான்.

அப்போதுதான் சங்கவி அதிர்ந்தாள். தலைக்குள் குருதி வேகமாகப் பாய்ந்ததை உணர்ந்தாள். விமலனின் இடுப்பின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு Pistole கள்.

"எப்படி..? எப்படி இது சாத்தியம்? இத்தனை தடைகளை மீறி...?"
இத்தனை தடைகளை மீறி எப்படி இவன் வைரவர் புளியங்குளத்துக்குள் நுழைந்தான்? குருமன் காட்டுச் சந்தியில் நிற்கும் சிங்கள இராணுவத்தின் கண்களுக்குள் நிற்கும் இந்த வீட்டுக்குள் எப்படி நுழைந்தான்..?

"எப்படி விமலன்..? எப்படி இதெல்லாம் சாத்தியமாயிற்று..? உங்களட்டைப் பாஸ் இருக்கோ..?" கேள்விகளை அடுக்கினாள்.

"இல்லை அக்கா. என்னட்டைப் பாஸ் இல்லை."

"அப்ப... பிடிபட்டால்...?" சங்கவி நியமான பயத்துடன் கேட்டாள்.

விமலன் கழுத்து மாலையை இழுத்துக் காட்டினான். குப்பி தொங்கியது. வாயைக் கூட்டி உமிழ்வது போலச் செய்தான். இரண்டு குப்பிகள் கடைவாயின் இரண்டு பக்கங்களிலும் வந்து நின்றன. மீண்டும் அவைகளை உள்ளிழுத்து கொடுப்புக்குள் அடக்கி விட்டு இயல்பாகச் சிரித்தான். செல்லம் கொடுத்த தேநீரைக் குடித்தான். சங்கவிக்கு வியப்பும் படபடப்பும் அடங்க முன்னமே சைக்கிளில் ஏறிப் போய் விட்டான்.

சங்கவிக்கு தான் காலையில் ரெயில்வே ஸ்டேசனில் பார்த்த பதிவுக் கொப்பிகள் நினைவில் வர தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.

நிகழ்வு-21.11.1997

சந்திரவதனா
யேர்மனி
1999

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite