
கடனே என்று வேண்டிக் கொண்டு வருவதோடு நின்று விடாமல் மடியில் இருத்தி வைத்து அப்புத்தகங்களில் உள்ளவைகளை வாசித்து கூடவே அபிநயித்து அவர் சொல்லும் அழகே தனி. சின்னவயதில் அப்படி நான் கேட்ட ஒவ்வொரு கதையும் இன்னும் என்னுள் பதிந்து போயிருக்கின்றன.
நளன்தமயந்தி கதையை அப்பா வாசித்துச் சொல்லும் போது நளனின் சமையற்பாகத்தையும், தமயந்தியின் அழகையும் மிகவும் வர்ணித்துச் சொன்னார். அதை நான் ரசித்து எனக்குள் பதித்து வைத்திருந்தேன். பின்னர் ஒரு முறை ரவிவர்மா தமயந்தியையும், நளனையும் ஓவியமாக வரைந்திருந்ததைப் பார்த்த போது எனக்குள் பதிந்திருந்த அந்த அழகு, அவர் வரைந்த தமயந்தியில் இல்லாததால் ரவிவர்மாவுக்கு ஓவியம் வரையத் தெரியாதோ என்று யோசித்தேன்.
இதே போல இரணியன், பரதன்... போன்ற சரித்திரக்கதைகள் எல்லாமே எனது சின்ன வயதிலேயே எனது அப்பாவால் வாசித்துக் காட்டப்பட்டு என்னுள் பதிந்து போயிருப்பவை.
அப்பா வரும் போது மட்டுந்தான் எமக்கு புத்தகங்களும் பத்திரிகைகளும் கொண்டு வருவாரென்றில்லை. அவர் இலங்கையின் எந்த மூலையில் இருந்தாலும் கிழமையில் ஒரு நாளைக்கு அஞ்சலில் ஒரு கட்டுப் பத்திரிகையை எமக்கு அனுப்பி வைப்பார். அவைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பிரத்தியேகமாக வெளிவருகின்ற சிந்தாமணி, ராதா.. வில் தொடங்கி Sunday Observer வரை இருக்கும்.
அப்பாவுக்கு மட்டுந்தான் வாசிப்பு ஆர்வம் என்றிருந்திருந்தால் எப்படியிருந்திருக்குமோ தெரியாது. எனது அம்மாவும் அதேதான். அம்மாவுக்கு வீட்டில் நிறைய வேலையிருக்கும். ஆனாலும் அப்பா அனுப்பும்.., கொண்டு வரும் எல்லாப் பத்திரிகைகளையும், புத்தகங்களையும் வாசித்து முடித்து விடுவா. அதை விட ஆனந்தவிகடன், குமுதம், கல்கி.. போன்ற எல்லா சஞ்சிகைகளையும் வாரம் தவறாமல் வாங்கி வாசிப்பா. அவவின் பெயர் போட்ட படியே ரவுண் கடையொன்றில்(பெயர் ஞாபகமில்லை) இந்தப் புத்தகங்கள் காத்திருக்கும். சித்தப்பா யாராவது போய் வாங்கிக் கொண்டு வருவார்கள். வாசித்தவைகளை எறிந்து விடாமல் கவனமாக வைத்து... கதைகளை, கட்டுரைகளை என்று கிழித்து, சேர்த்து, கட்டி.. புத்தகங்களாக்கி விடுவா.
எங்கள் ஊரில் எங்கள் வீடும் வாசிகசாலை போலத்தான். பலர் வந்து இரவல் வாங்கிப் போய் வாசித்து விட்டுக் கொணர்ந்து தருவார்கள். அம்மாவுக்குத் தாராள மனசு. யார் கேட்டாலும் மறுப்பதில்லை. இரவல் கொடுத்து விடுவா.
இப்படியே நான் புத்தகங்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகளுக்கு நடுவிலேயே பிறந்தேன். வளர்ந்தேன். வாழ்ந்தேன்.
ஊரில் எனது வீட்டில் ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன.
அவைகளில் எனக்கு மிகவும் பிடித்த நான் வாசித்த புத்தகங்கள்
கல்கியின்
அலையோசை
பார்த்திபன் கனவு
பொன்னியின் செல்வன்
சிவகாமியின் சபதம்
கள்வனின் காதலி
மகுடபதி
தியாகபூமி
சாண்டில்யனின்
மலைவாசல்
ஜவனராணி
கடற்புறா
ஜீவபூமி
ஜலதீபம்
ராஜமுத்திரை
அகிலனின்
சித்திரப்பாவை
பாவைவிளக்கு
வேங்கையின் மைந்தன்
தி.ஜானகிராமனின்
மோகமுள்
டாக்டர்.மு.வரதராஜனின்
அகல் விளக்கு
லக்சுமியின்
மிதுலா விலாஸ்
காஞ்சனையின் கனவு
பெண்மனம்
அடுத்த வீடு
அரக்கு மாளிகை
இலட்சியவாதி
சூரியகாந்தம்
சிவசங்கரியின்
பாலங்கள்
47நாட்கள்
பாரதியாரின் கவிதைகள்
பாரதிதாசனின் கவிதைகள்
இன்னும்
முள்ளும் மலரும்(கதை தந்த பாதிப்பு படமாக வந்த போது இருக்கவில்லை.)
குறிஞ்சி மலர்
கயல்விழி
- தொடரும் -
எனக்குப் பிடித்த பல கதைகள் இன்னும் என் மனசுக்குள் உள்ளன. ஆனால் கதையின் தலைப்பு மட்டும் ஞாபகத்தில் இல்லை. சுரேஸ்கண்ணன் இது தம்பட்டம் அடிக்கும் வேலை என்பது போலச் சொன்னார். என்னை பாலாவும் ஜெயந்தியும் அழைத்த போது நான் அப்படி நினைக்கவில்லை. மாறாக சந்தோசப் பட்டேன். இவைகளையெல்லாம் பட்டியலிட வேண்டும் என்று எனக்கு வெகுநாளாக ஆசை. சில ஆசைகள், இப்படியே மனசோடு நின்று விடுகின்றன. செயற்படுத்தப் படுவதில்லை. இந்தப் புத்தகச் சங்கிலி விளையாட்டு எனது ஆசையை செயலாக்க எனக்கு ஒரு உந்துதலாகவே அமைந்துள்ளது. அதனால் மீண்டும் ஒரு முறை ஜெயந்திக்கும் பாலாவுக்கும் நன்றி கூறிக் கொண்டு தொடர்கிறேன்.
ஊரிலே புத்தககங்களோடே வாழ்ந்த நான் ஜேர்மனிக்கு வந்த பின் பத்து வருடங்களாக புத்தகம் என்பதே கிடைக்காது பெரிதும் தவித்தேன். அப்போது எரிமலை, ஈழநாடு பத்திரிகைகள் மட்டுமே இங்கு புலத்தில் கிடைத்தன. இந்தியாவிலிருந்து ஆனந்தவிகடனையும், பிள்ளைகளுக்காக அம்புலிமாமா, chandamama மூன்றையும் சந்தா கட்டி எடுத்துப் படித்தோம். தற்போது என்னிடமுள்ள புத்தகங்கள் 300க்குள்தான் இருக்கும். அவைகளிலும் தமிழ்புத்தகங்கள் மிகச் சொற்பமே. மற்றவை ஜேர்மனிய, ஆங்கிலப் புத்தகங்களே.
தொடரும்.