நீதிபதி நவநீதம் பிள்ளை

64 வயதாகும் நீதிபதி நவநீதம் பிள்ளை தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததன் பிறகு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட வெள்ளையினத்தவர் அல்லாத முதல் நீதிபதி என்ற பெருமைக்குரியவர். இவரது பெயரை ஐ.நா. பொதுச்சபை அங்கீகரிக்குமானால், கடந்த நான்கு ஆண்டுகளாக கனடாவின் லூயிஸ் ஆர்பர் அம்மையார் வகித்துவந்த பதவியை நவநீதம் பிள்ளை ஏற்பார்.
நவி என்று அழைக்கப்படுகின்ற நவநீதம் பிள்ளை இந்தியத் தமிழ் பூர்வீகம் கொண்டவர். நடால் மாகாணத்தைச் சேர்ந்தவரான இவரின் தந்தை ஒரு பஸ் டிரைவர். எளிய குடும்பத்திலிருந்து வந்தவரானாலும், இனவெறி ஆட்சிக் காலத்தின்போதே சட்டத்தரணிகள் நிறுவனம் அமைத்த வெள்ளையரல்லாத முதல் தென்னாப்பிரிக்கர் என்ற பெருமை இவரைச் சாரும்.
அமெரிக்காவின் பிரபல ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மனித உரிமை சட்டங்கள் பயின்றிருந்த அவர், 1995ல் தென்னாப்பிரிக்காவின் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதுவரை வெள்ளையினத்தவர் மட்டுமே வீற்றிருந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் ஆசனத்தை அலங்கரித்த வெள்ளையரல்லாத முதல் ஆள் அவர்தான்.
ருவாண்டா இனப்படுகொலையை விசாரிப்பதற்காக டான்ஸானிவின் அருஷா நகரில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்டதிலிருந்து சர்வதேச அளவில் அவர் பங்காற்றத் துவங்கினார். நான்கு ஆண்டுகாலம் அப்பொறுப்பை வகித்த பின்னர் தி ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் நீதிபதியாக இருந்தார்.
Quelle - BBC 28.07.2008