Sunday, August 24, 2003

மேடைப்பேச்சு

அவருடன் எப்படிப் பேசலாமென மீண்டும் மீண்டுமாய் மனசு ஒத்திகை பார்த்தது. எப்படித்தான் பார்த்தாலும் எந்தளவுக்கு ஒத்திகை பார்க்கிறேனோ அந்தளவுக்கு நா ஒத்துழைக்க மறுத்து, ஒத்திகைக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லாது எத்தனையோ பேருடன்.. வாய் குளறி... தடுமாறியிருக்கிறேன். அப்படியான சமயங்களில் எழுத்தின் ஆங்காரம், பேச்சில் ஓங்கவில்லையே எனப் பலர் என்னிடம் ஆச்சரியப் பட்டுள்ளார்கள். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒத்திகை பார்ப்பு என்பது எனக்குள்ளே அரங்கேறி அசை மீட்கும்.

அவர் மீது எனக்கு நல்ல மதிப்பு. அதனால்தான் இன்று இத்தனை தரமாய் ஒத்திகை பார்ப்பு. மேடைகளிலும், வானொலிகளிலும் வாய் திறந்தாலே அருவியாகக் கொட்டும் அவர் தமிழில் நான் மெய் மறந்து போயிருக்கிறேன். வார்த்தைகளில் அழகு மட்டுமா? வயதான அவரிடமிருந்து வெளிப்படும் முற்போக்குச் சிந்தனையுடனான, புதுமை நிறைந்த, சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் என்ன ஒரு தெளிவு. அடித்து வைத்துச் சொல்லும் கருத்துக்களிலுள்ள நியாயம். உண்மையிலேயே நான் வியந்து போவேன்.

கடந்த வாரமும் ஐரோப்பிய வானொலி ஒன்றில் கிட்டத்தட்ட 40 நிமிட நேரங்கள் அவரது வீச்சான உரை ஒலிபரப்பானது. எடுத்துக் கொண்ட விடயம் ஐரோப்பியாவில் நடைபெறும் ஆடம்பரமான சாமத்தியச்சடங்குகள் அவசியமானதுதானா..? என்றதாக இருந்தது. இன்றைய எமது கணினி உலகப் பெண்களே சாமத்தியச்சடங்கு அவசியந்தான் என்று எண்ணி தமது பெண் குழந்தைகளைக் காட்சிப் பொருளாக்கிக் கொண்டிருக்கும் அவல நிலையில் அவர் அது அவசியமே இல்லை.. என்று வாதிட்டு, வானொலி அறிவிப்பாளருக்கு இடையிடையே எழுந்த அது சம்பந்தமான சந்தேகங்களுக்கும்; தங்கு தடையின்றிப் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஐம்பதைத் தொட்ட ஒருவர் இப்படி முற்போக்கு நிறைந்த ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்ததில் எனக்கு மெய்சிலிர்த்தது. அவரைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.

அந்த எனது நினைப்பை இன்று எப்படியாவது செயலாக்க வேண்டும் என்ற முனைப்பில், மீண்டும் ஒரு முறை மனசுக்குள் எப்படி அவருடன் பேசுவது என ஒத்திகை பார்த்து விட்டு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன்.

வழமைக்கு மாறாக எனக்கும் இன்று தங்கு தடையின்றிப் பேச வந்தது. பாராட்டினேன். அவரை நியமாகவே மனசாரப் பாராட்டினேன். அவரின் தமிழ்ப்புலமையை, பேசுந்திறனை, பொருள் கொண்ட கருத்துக்களை, அதைச் சபையோர்க்குத் தரும் விதத்தை ... என்று பாராட்டினேன். பேச்சு அலுக்கவில்லை. இருந்தாலும் பின்பொருமுறை பேசுகிறேன் என்று சொல்லி தொடர்பைத் துண்டிக்க முனைந்தேன்.

அவர் பல தடவைகள் நன்றி சொன்னார்.
இண்டைக்கெண்ட படியால் என்னைப் பிடிச்சிங்கள். இனி இரண்டு கிழமைக்கு எனக்கு ஒண்டுக்கும் நேரமிராது. என்றார்.

ஏன் நாட்டுக்குப் போறிங்களோ..?
இன்றைய இப்போதைய நிலையில் புலத்தில் இதுதானே சகயம் என்பதால் உடனேயே எந்த சிந்தனையுமின்றிக் கேட்டு விட்டேன்.

இல்லையில்லை... மகள் பெரியபிள்ளையாகி ஒரு மாசமாச்சு. வாற சனிக்குத்தான் ஹோல் கிடைச்சுது. அதுதான் அந்த வேலையளோடை ஓடித் திரியிறன். எல்லாருக்கும் கார்ட் குடுத்திட்டன்... அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.

நான் தொலைபேசியை வைத்து விட்டேன்.

சந்திரவதனா - 21.8.2003
பிரசுரம் - வடலி-லண்டன்(செப்டெம்பர்-2003)

Wednesday, August 20, 2003

இதற்கு என்ன பெயர்..???

ஈமெயில் பார்த்து
இதயச் சுவர்கள் வேர்த்து
முகம் தெரியா உனக்காய்
முழுமதியாய் சிரித்து..!

இதற்கு என்ன பெயர்..!
இதுவும் காதலா..?

சந்திரவதனா - 1999

Monday, August 18, 2003

எம்மவர் மட்டும் எங்கே...?

பனியின்றி குளிரின்றி
இந்த வருடத்தின் முதல் சிரிப்பு

இயற்கையின் சிரிப்பில்
துளிர்ப்பது மரம் மட்டுந்தானா..!
மலர்வது மலர் மட்டுந்தானா..!
மனிதர்களுந்தான்..!

நகரமே சிரித்தது
யேர்மனியின் அந்த நகரமே சிரித்தது
சிரித்துக் களித்தது
இயற்கையும் சிரிக்க மனிதரும் சிரிக்க
மலராய்த் தெரிந்தது

குட்டைப் பாவாடைகளும்
கட்டை ரீசேர்ட்டுகளும்
தலை காட்டா விட்டாலும்
சிட்டுக் குருவிகளாய் இளசுகள்
உதட்டோடு உதடுரசி
மூக்கோடு மூக்குரசி
கெஞ்சலும் கொஞ்சலுமாய்.....

வட்ட மேசைகளைச் சுற்றி
வட்ட மிட்ட கதிரைகளில்
பெரிசுகளும் சிறிசுகளும்
கண் பார்த்துக் கதை பேசி
மெல்லுதட்டில் தமை மறந்து
ஐஸ் சுவைத்து......
கை கோர்த்து நடக்கையிலும்
காதலுடன் இடை தழுவி
உடல் உரசி
மனம் சிலிர்க்க மலர் பரிமாறி....

இயற்கையோடு இயற்கையாக
சிரித்து... சிலிர்த்து...
ஊரே களித்திருக்கையில்
இந்நகரில் வாழும் இருபது தமிழரில்
ஒருவரையும் காணோமே...!

வன்னியும் வாகரையும்
மனத் திரையில் ஓட
எங்கேயும்
பிற்சேரியாவிலும் ரெஸ்ரோறண்டிலும்
கனவுகளைக் கழுவிக் கொண்டிருக்கிறார்களோ.....???

சந்திரவதனா செல்வகுமாரன்
3.4.1999

Thursday, August 14, 2003

நட்பென்றுதானே நம்பினேன்.....!

போரிலும்
புலம் பெயர் வாழ்விலும்
வாழ்வின் வசந்தங்கள்
வாடி விட்ட
தனிமை பூத்த
ஒரு பொழுதில் தானே
உன் தொலைபேசி அழைப்பு
எனைத் தேடி வந்தது.

நட்பென்றுதானே நம்பினேன்
கை கோர்க்க எண்ணி
விரல் நீட்டினேன்

என் விரலை
சிறை வைத்து
பின் முறித்தெறிவதற்கான
முன்னேற்பாடுதான் அது என்று
முற் கூட்டியே நீ
சொல்ல மறந்ததேன்......?

சந்திரவதனா 12.12.2001

Monday, August 04, 2003

மனசு சூனிய வெளிக்குள்..........

மனசு சூனிய வெளிக்குள்
சிக்கித் தவிக்கிறது.

உன்னவள்
உன் அஸ்தியை
ஊருக்கு அனுப்புவது பற்றிப் பேசினாள்.
அவள் புண்ணியவாட்டி.
உன் அருகிருந்து
தன் கடன் முடித்து விட்டாள்.

நான்
எதுவுமே செய்யாதிருந்து விட்டு
இப்போ..........
சூனிய வெளிக்குள் நின்று
சுற்றிச் சுழல்கிறேன்.

உயிர் போன பின்னும்
நீ அருகிருக்கிறாய் என்பதில்
வலி தெரியாதிருந்தது.
சிதையேறிய போதுதான்
நீ இனியில்லை என்ற நினைப்பில்
மனசு பதை பதைக்கிறது.

நாடொன்றுதானே
நன்றாக உறவாடியிருப்பேன் என்று
ஊரவர்கள் நினைப்பார்கள்.
யாருக்கும் நான் ஏதும் சொல்லவில்லை.
போரென்று வந்து புலம் பெயர்ந்த பின்
வேர்களும் விழுதுகளும் வெகு தூரமாகி.......
போனதை நினைத்துப்
புலம்புவதுதானே வாழ்வாகிப் போச்சு

நாமெல்லோரும்
- நேரமில்லை - யென்றும்
- தூரமாப் போச்சு - என்றும்
இயலாமைகளுக்கு
போர்வை போர்த்திப் பழகி விட்டோம்.

இத்தனை வருடங்களில்
எத்தனை தரம் சந்தித்திருப்போம்.
மின்னஞ்சலும்
தொலைபேசியும் இல்லையென்றால்
தொடர்பாடல்
என்றைக்கோ அறுந்து போயிருக்கும்
எமது ஓரிரு சந்திப்பின் போதான
உறவு முறை சொல்லி அழைக்கும்
உன் இதமான சிரிப்பு மட்டுந்தான்
என்னோடு நின்றிருக்கும்.

நான் அழவில்லை.
மனசுதான் அலைகின்றது
இல்லாத உன்னோடு கை கோர்த்து
உல்லாச உலா வருகின்றது
நீ இல்லை என்பது
உறைக்கும் சமயங்களில்
மல்லாக்காய் வீழ்கின்றது.

சந்திரவதனா - 3.8.2003

Sunday, August 03, 2003

நீயே ஒரு அழகிய கவிதைதானே.!

நீயே..!
அதிசயமாய்
அழகிய ஓவியமாய்
நகர்ந்து கொண்டே இருக்கும் நதியாய்
தழுவுகின்ற காற்றலையாய்.....
எத்தனை பேருக்கு வசந்தமானாயோ..?

உன்னை எண்ணி...!
பூக்களின் நறுமணங்களை
எத்தனை பேர் நுகர்ந்தார்களோ..!

உனது விழிமொழிதலால்
எத்தனை விழி வாசல்கள் பூச்சொரிந்தனவோ..!

உனது குடிபுகுதலினால்
எத்தனை மனமுகடுகளில்
இனிய கானங்கள் ஒலித்தனவோ..?

இன்று உன் பிரிதலினால்
எத்தனை மனங்கள் ஏக்கப் புள்ளிகளுடன்
காதல் கோலங்களுக்காய் காத்திருக்கின்றனவோ..?

புரியாமல்.... புலம்பாதே...!
நீயே ஒரு அழகிய கவிதைதானே.!
பிறகேன் தேடுகிறாய் கவி - தை யை..?

சந்திரவதனா - 4.8.02
******************************************************************************

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite