நதி எங்கே வளையும் கரை இரண்டும் அறியும்
மதி எங்கே அலையும் ஆகாயம் அறியும்....
விதி எங்கே விளையும்.............???
அது யாருக்குத் தெரியும்...!
(உயிரோடு உயிராக படத்தில் இடம் பெற்ற பாடல்)
நதி எங்கே வளையுமென்பது கரைக்கும்
மதி எங்கே அலையும் என்பது ஆகாயத்துக்கும் தெரியும்
ஆனால் விதி............? அது எங்கே, எப்போது, எந்த ரூபத்தில் வரும் என்பது யாருக்கும் தெரியாது.
விரும்பி யாரும் பிறப்பதுமில்லை.
விரும்பிப் பாத்திரம் கிடைப்பதுமில்லை
முடிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோசமில்லை.
எந்த வித ஆர்ப்பாட்டமுமின்றி மிகவும் அமைதியான முறையில் பாடப்படும் இப்பாடலைக் கேட்கும் போதே மனதில் ஒரு கேள்வி எழும்.
வாழ்க்கை அதை நாம் வாழ்கிறோமா...?
உண்மையில் வாழ்க்கை அதை நாம் வாழ்கிறோமா...?
இதென்ன கேள்வி...! வாழாமல் வேறென்ன செய்கிறோம் என்ற இளக்காரமான கேள்வி தொக்கிய பதில் உங்கள் மனதிலும் எழலாம்.
எம்மில் எத்தனை பேர் மனதில் எதையிட்ட சலனமும் இன்றி வாழ்க்கை என்னும் மேடையில் எமக்குக் கிடைத்த பாத்திரத்தை சந்தோசத்துடன் ஏற்று வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தெளிவுடன் வாழ்கிறோம்.
"இப்பிடிச் செய்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருப்பமே! என்னோடுதானே அவன் படிச்சவன். அவனைப் போல என்னாலை முடியாமற் போச்சே.........! சா... பேய்த்தனம் பண்ணீட்டனே..! " என்று வருத்தப் பட்டு எமது நிலையில் நாமே திருப்தி கொள்ளாது எத்தனை தரம் சலனித்திருப்போம். அத்தனை தரமும் எமது சந்தோசங்களை நாங்கள் தொலைத்து விடுகிறோம் என்பதை மட்டும் மறந்து போகிறோம். எமக்குக் கீழே உள்ளவர் கோடி... என்று எப்போதாவது எண்ணிப் பார்க்கிறோமா? உயர்ந்தவர்களைப் பார்த்து தாழ்மை கொள்வதுதான் எமது பணியென்று கிடப்போம். மிஞ்சினால் பொறாமை கொள்வோம்.
நல்லவர்கள், மற்றவர் மேல் அனுதாபம் கொண்டவர்கள், எவர் மேலாவது பிரியம் கொண்டவர்கள், எமக்கென உறவுகளைச் சேர்த்துக் கொண்டவர்கள்.......... என்ற வரிசையில் நாம் இருந்தோமானால், "அது சரியா, இது சரியா, அவனுக்கேதாவது நடந்து விடுமா, இவன் மனதைப் புண் படுத்தி விட்டேனா........" என்பது போன்றதான உணர்வுச் சிந்தனைகளால் எம்மைக் குழப்பிக் கொள்வோம்.
ஒரு தாயாக இருந்தால் மகவை பாடசாலைக்கு அனுப்பி விட்டு அவனோ அவளோ வீட்டுக்குத் திரும்பி வரும் வரை சதா அதே நினைவாய் "சரியாகப் பாடசாலை போய்ச் சேர்ந்திருப்பானோ... அங்கு யாருடனும் சண்டை பிடிக்காமல் இருப்பானோ....... பரீட்சையை சரியாக எழுதியிருப்பானோ.. காலையில் சரியாகச் சாப்பிட்டிருப்பானோ... நல்ல படி வீடு வந்து சேருவானோ..." என்பது போன்றதான கேள்விகளால் மனசைக் குழப்பிக் கொண்டிருப்பதுவும் அந்த மகவு வீடு வந்து சேர்ந்ததும் அப்பாடா என்று நிம்மதியடைந்த கையோடு அடுத்து இன்னொன்றுக்காய் குழம்ப ஆரம்பிப்பதுவும் வழமையான விடயங்கள். தந்தையாயின் அவருக்கு இன்னுமொரு விதமான குழப்பம்.
இப்படியே......... சங்கிலித் தொடராய் உறவுகளைப் பிணைத்துக் கொண்டு.... சந்தோசங்களை மட்டும் தொலைத்துக் கொண்டு எதுக்காய் அலைகிறோம். வாழ்வின் அர்த்தத்தைப் புரிகிறோமா........?
இவ்வளவு மட்டுந்தான் என்றால் பரவாயில்லை. எங்கள் எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்துள்ள மிகப்பெரிய பயம் சாவைப் பற்றியது. நாம் இறந்து விடுவோம் என்ற பயத்தை விட எமக்குப் பிரியமானவர்களை இழந்து விடுவோம் என்ற பயம்தான் எமது மனதின் ஆழத்தில் அமுங்கிக் கிடந்து சதா மனதைப் பதைக்க வைக்கிறது.. பிறப்பவர் இறந்துதான் ஆக வேண்டும் என்பது நியதியென்றாலும் அதை எதிர் கொள்ள மட்டும் எமது மனம் தயாராக இருப்பதில்லை. ஏதாவது ஏடாகூடமாக நடந்திடுமோ..? என்றே எப்போதும் பயந்து கொண்டிருப்போம். எட்டு நாள் வாழும் பட்டாம் பூச்சி அநுபவிக்கும் அந்தச் சந்தோசத்தைக் கூட, இப்படியான பயம் நிறைந்த துன்பச் சலனங்களால் அறுபது வருடங்கள் வாழும் மனிதராகிய நாம் அநுபவிக்கத் தவறி விடுகிறோம்.
அதைக் கவிஞர்
எட்டுநாள் வாழும் பட்டாம் பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை
அறுபது வயதில் ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழ்வதுமில்லை
என்று மிகவும் சாதாரணமான வார்த்தைகளைக் கோர்த்துச் சொல்லி விடுகிறார்.
உண்மையில் நாளைக்கு என்ன நடக்கும் என்று யோசித்து யோசித்தே இன்றைய பொழுதை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை.
எந்த நிலையிலும் துவண்டு விடாது, நாளையை எண்ணிப் பயந்து கொண்டிராது இன்றைய வாழ்வை நாம் வாழ வேண்டும். அதற்காக எல்லாம் விதி என்று சொல்லி விட்டு, நாம் முயற்சி செய்யாதும் இருந்து விடக்கூடாது.
அதைக் கவிஞர் சொல்லும் விதம் மிகவும் அழகு.
நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர் துளியை கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து...
இவ் வரிகளைக் கேட்கும் போதே துன்பம் என்னும் ஆடையை களைந்து ஒரு புறம் வைத்து விட்டு இன்பத்தை அணிந்து வாழ வேண்டும் என்றதொரு துணிவும், எதிலும் மகிழ்வைத் தேட வேண்டுமென்ற மகிழ்வான எண்ணமும் நெஞ்சில் தோன்றுகிறது.
வாழ்வில் மரணம் என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த இழப்புக்கும் நாம் அஞ்சத் தேவையில்லை. எதை இழந்தாலும் மனம் தளர்ந்து போகாது மீண்டும் முயற்சித்தோமானால் அதைத் திரும்பப் பெற முடியாவிட்டாலும் வேறொன்றில் வெற்றியைப் பெற முடியும். இப் பாடலைக் கேட்கும் போது மனதில் அந்த அந்த நம்பிக்கையும் தைரியமும் எழுகிறது.
கனவு காண்பது கண்களின் உரிமை
கனவு கலைவது காலத்தின் உரிமை
சிதைந்த கனவைச் சேர்த்துச் சேர்த்து
அரண்மனை கட்டுவது அவரவர் திறமை
ஒவ்வொரு நொடியிலும் உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை
பாடலின் வரிகள் அர்த்தங்களில் மட்டும் அழகு கொண்டிராமல், அதைக் கவிதையாக்கிச் சொல்லிய விதத்திலும் மிகுந்த அழகைக் கொண்டுள்ளது.
சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி