Monday, August 06, 2007

பால்யம்

- சந்திரா இரவீந்திரன் -

காற்றடித்தால் தலையை மட்டும் சிலுப்பி ஆரவாரம் பண்ணிவிட்டு அசையாமல் நிற்கும் போர்க்களத்து வீரனென... கோவிலின் தெற்கு வீதியையும் மேற்கு வீதியையும் இணைக்கும் அந்த மூலைப்பொட்டை உறுதிப்படுத்தும் சந்தியில் ஒரு பெரிய அரசமரம்! அருகே நீளமாய் ஆட்கள் அமர செதுக்கப்பட்தொரு பளிங்குக் கல்!

அண்ணாந்து பார்த்தால்... விண்ணையும், மண்ணையும் தனக்குள் அடக்கி விடுகிற பிரமை தோன்றும்.

வெள்ளைப் புறாக்களும், கரிக் குருவிகளும், காகங்களும் இந்த விதானத்தினுள் புகுந்து காணாமல் போய் விடுவதைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். மலைப்பாம்புகளென நீண்டு வளைந்து சுருண்டு, புரண்டு பரவிக் கிடக்கும் அரசின் திரண்ட வேர்களில் கால்களைப் பதித்து தாவித்தாவி நடக்கத் தொடங்கினால் கிழக்கு நோக்கி நீள்வரிசையாக... ஆல், சீனிப்புளி, சஞ்சீவி, வேம்பு, செவ்வரளி, திருவாத்தி, பொன்னலரி... என்று எண்ணிக் கொண்டே போகலாம்.

வீதி எல்லையோடு முட்கம்பிகளின் சில முனைகள் மரங்களின் தடித்த தண்டுகளினுள் புதைந்து... நீளமாய் வரிச்சுக் கட்டி நகரும். அதனோடு ஒட்டியபடி ஒரு குச்சொழுங்கை, வீடுகளோடும் பனம் வளவுகளோடும் நெளிந்து வளைந்து குன்றும் குழியுமாய் ஏறி இறங்கிச் செல்லும்.

கோவில் வீதி ஆலம்பழங்களோடு ஆட்டுப் புழுக்கைகளும் கலந்து சிதறிக் கிடக்க மிதிபட்ட புற்களோடு புழுதி படிந்து கலக்க காற்றில் அசைந்தாடி வந்து விழும் பழுத்த அரசிலைகளின் பட்டு விரிப்பில் வழமையான ஊர்வாசனை பறைசாற்றப்பட்டுக் கொண்டிருக்கும்!

தரையில் பாதசாரிகளின் ஒற்றையடித் தடம் வகிடாய் நீண்டு செல்ல முருகன் வாசலைக் கடந்து, கிழக்குப்புற வீதிக்கு வளைகிற விளிம்பில் ஒரு கிணறு. அந்த இடம் மட்டும் முட்கம்பிகளற்று, கோவில் வீதியையும் குச்சொழுங்கையையும் இணைக்கிற ஒரு பரஸ்பர உறவில் திளைத்தபடி கிடக்கும்! வீதி வளைகிற மூலைப்பொட்டில் அது இருப்பதனாலோ என்னவோ அதனை ´சந்தியாங்கிணறு` என்றார்கள். எங்கிருந்தோ வரும் வெள்ளை வாய்க்கால் ஒன்று குச்சொழுங்கையை குறுக்கறுத்து சந்தியாங்கிணற்று முடக்கைத் தொட்டபடி கோவிலின் கிழக்கு வீதிக்கு எல்லை போட்டுக் கொண்டு வடக்கு நோக்கி நகர்ந்து அண்ணாமுண்ணாப் பற்றைக்குள் புகுந்து காணாமற் போய்விடும். மழைக்காலங்களில் வழிய வழிய ஓடுகிற வெள்ளம்... வடக்கே இந்து சமுத்திரத்தில் போய் சங்கமிக்கிற ஓசை, ஏகாந்த வேளைகளில் இதமாய் கேட்கும்.!

சந்தியாங்கிணற்றுப் பக்கம் செவ்வரளிப் பற்றைகளை உரசியபடி கிறிச்... கிறிச் என்ற சீரான லயத்தோடு நீண்ட துலா எப்பவும் மேலும் கீழுமாய் மும்முரமாக விழுந்தெழும்பியபடி இருக்கும். துலாவில் தொங்கும் இரும்புச் சங்கிலியும் வாளியும் எந்நேரமும் தொணதொணத்தபடியே இருக்கும். கிணற்றடிக்குப் பக்கத்தில் தண்ணீர் ததும்பத் ததும்பக் கால்நடை தொட்டியொன்று. பக்கத்தில் ஒரு சாய்ப்புக் கற்றூண். ஆடுகள் நன்றாக முதுகு தேய்த்து விட்டுப் போகும். என் துள்ளல் நடையை தூரத்தில் கண்டால், “விசாலி இங்க வந்து முதுகு தேய்ச்சு விர்றியா” என்ற சீண்டல் குரல்கள் காற்றில் மிதந்து வரும். எந்நேரமும் பேச்சுக் குரல்கள், விசிலடிப்பு, சீட்டியொலி, சந்தனக்கட்டை உரசல், மஞ்சள் தேய்ப்பு, நாமக்கல் குழையல், சோப்வாசனை, தேவாரம், சினிமாப்பாடல், கவிதை வரிகள், பட்டிமன்றம்... என எப்பவுமே அங்கு பரபரப்பும் அமளியும்தான்.!

இளவேனிற் காலங்களில் மாம்பூக்கள், பனம்பூக்கள் என்று தண்ணீரெங்கும் படரும் பூவாடை மஞ்சம்... நீரினுள் ஊறிக் கிளம்பும் வாசனை ஊர் மூச்சில் கலந்தபடியிருக்கும்.

கிழக்கு வீதி.. பிள்ளையார் கோவிலின் பிரதான முகப்பையும் கோபுரத்தையும் தரிசித்தபடி வடக்கில் அகலமாய் பரந்து விரியும். வடக்கு நோக்கி வளைகிற முனைப்பில் இன்னுமோர் கிணறு. இது கோவிலுக்கு மட்டுமே உரியதென பிரத்தியேக வரையறைகளுடன் அமைதியாக இருக்கும். கோவிலின் அசையாமணிக் கோபுரத்தைத் தொடுக்கிற மாதிரி சடைத்து நிற்கும் வெள்ளரச மரத்தின் கீழ் ஒரு வைரவ சூலம் பூவும் பொட்டுமாய் சிவப்பு சால்வை சுற்றியபடி மிடுக்காய் சாய்ந்து நிற்கும்.

நான் இவையெல்லாவற்றையும் கடந்து வடக்கே பரந்து விரியும் பசும் புல்வெளியில் தனிமையாய் ஏகாந்தத்தில் லயித்து நிற்பேன். வடக்கு வீதியின் வடக்கெல்லை முட்கம்பிகளாலும், கட்டைகளாலும் செவ்வரளிச் செடிகளாலும் கோடிழுக்கப்பட்டு அதற்கப்பால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்ட நெடும் பனங்கூடல் விரியும்! காற்றில் தலைவிரித்தாடும் பனைமரங்கள் பின்னிப் பிணைந்தெழுப்பும் பேரொலி ஒருகணம் அண்டவெளி எங்கும் நிறைந்து ஆத்மாவை உசுப்பி விட்டு மீளும்! பனங்கூடல் மேற்காக நகர்ந்து, தார் வீதியுடன் சங்கமிக்கும் முனையில், ஒரு சிறிய கட்டிடம்! தகரமடித்து மறைக்கப்பட்ட பாரிய இரட்டை இரும்புக் கதவுகளில் மாங்காய் பூட்டுத் தொங்க, காஞ்சுறண்டி, பாவட்டை, அண்ணா முண்ணா, எருக்கலை என சடைத்த பற்றைகள் சூழ, இலேசாய் ஒளிந்து கிடக்கும் அந்தக் கட்டிடம் அந்த ஊரின் கிராமசபைக்குரியது. கட்டிடத்தின் உயரத்திலுள்ள சிறிய ஜன்னலினூடாய் எட்டிப் பார்த்தால் உயிர் ஒருகணம் உறைவது போல் அதிர்வு கொள்ளும்! சவ வண்டிலின் நீண்ட கருப்புக் குஞ்சங்கள் இருளில் அசையாமல் தொங்கிக் கொண்டிருப்பதை மட்டும்தான் கண்கள் காணும் எனினும் உயிர்நாடியிலிருந்து உலக ஸ்தம்பிதம் வரைக்கும் அசுர வேகத்தில் கணக்குப் போடும் மனக்குதிரை உணர்விழந்து மறுகணமே மண்கவ்வி விடும்!

நான் அந்தக் கட்டிடத்தின் பக்கம் என் கண்கள் செல்வதை எப்பவும் தவிர்த்து வந்தேன். எவை நிஜமோ... எவை நிச்சயமோ... அவை எப்பவும் என்னுள் வெறுப்பையும் பயத்தையும் பிரசவிப்பனவாகவே தோன்றினவோ??

அழகான அந்த வடக்கு வீதியில் கோவில் சுவரோடு ஒட்டியபடி நீளமாக ஒரு பூங்கா. சுவர் நீளத்துக்கு வரிசையாக நிற்கும் சிவப்பு, மஞ்சள், வெள்ளை, அடுக்குச் செவ்வரத்தம் பூக்கள் சுவர்களைத் தாவி கோவிலிற்குள் எட்டிப் பார்த்துப் புன்னகைத்த படியே இருக்கும். இன்னும் ரோஜா, திருவாத்தி, செந்தேமா, கொத்துமல்லிகை, முல்லை, துளசி, வாழை, செவ்விளநீர்த் தென்னை, திருநீற்றுப் பச்சை, இலுமிச்சை... என்று பூங்கா பசுமையில் நிறைந்து கிடக்கும். பூக்களின் வாசனைக் குழையல் வடக்கு வீதியை நிறைத்து அப்படியே கோவிலை வலம் வரும்.

யாருமற்ற தனிமையில் இதமான மாலைப்பொழுதில் பூங்காவை ஒட்டி இந்த புல்வெளியில் கால்களை நீட்டி நான் அமர்ந்து விடுவேன். மேற்கில் தார்வீதியில் ஆளரவத்தின் பின்னணி. எதிரே பனங்கூடல் சலசலப்பு. வடக்கே தொலைவிலிருந்து அலையலையாய் வந்துவிழும் இந்து சமுத்திரத்தின் பேரிரைச்சல்... என உலக ஓசைகள் என்னுள் பரவசத்தை ஏற்படுத்தும்! உடலெங்கும் அதனை பரவவிட்டு சிலகணங்கள் கண்களை இறுக மூடிக் கொள்வேன். இவற்றிற்குப் பின்னால் எங்கோ ஒளிந்து புதைந்து கிடக்குமோர் பேரமைதி மெல்ல மெல்ல ஆத்மாவில் புகுந்து அண்டங்களிற்கப்பால் என்னை அழைத்துச் சென்றுவிடும்! இந்த பிரபஞ்சம் முழுவதுமே என் ஒற்றைப் பார்வைக்குள் அடங்கிக் கிடப்பதான அதிசய உணர்வில் சில கணங்கள் மூழ்கிக் கிடப்பேன்!

விழிப்பில்... வானம் என்னருகில் வந்து நிற்கும்! மேற்கே தார்வீதிக்கு அப்பாலிருக்கும் வீட்டுக் கூரைகளிற்குப் பின்னால்... மறைகிற அந்தக் கருக்கலில், இரவும் பகலும் இரகசியமாய் சந்திக்குமந்த அபூர்வ கணங்களில் உயிரொலிகள் மெல்ல மெல்ல அடங்கி விடுகிற அந்த அமைதிப் பொழுதில் பிரபஞ்சத்தின் சூட்சுமம் வெகு அழகாய் என்னுள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்! உயிர்ப்பை என்னுள் உணர்த்தும் இந்த சுகம் நீடிக்க ஆசை கொண்டு நீள்மை தெரியாமல் மிக நீண்ட நேரமாய் மேகத்தைக் கடந்து மிதந்து கொண்டிருப்பேன்!

பல தடவைகள் பத்மாவதி வந்து என்னை இறக்கி வைப்பாள்! இன்னோர் உலகில் தவறி விழுந்தவளாய் அதிர்ந்து விழிப்பேன்! திடும்மென்று சந்தடிகள் என் உணர்வுகளைச் சூழும். சாக்கடைகள் என் நினைவுகளை சிறைகொள்ளும். துடைத்தெறிய முடியாத அழுக்குகள் என் உடலில் புசுபுசுவென்று பரவி ஒட்டிக்கொள்ளும்! உதறி எறிய வேண்டுமென்ற வெறி. எனினும் உதறத் தெரியாத பருவம்... உதறும் வலுவற்ற பலவீனம்! அருவருப்புக்களை விழுங்கியபடி எழுந்து நடப்பேன். பத்மாவதிக்குப் பின்னால் வரிசையாக வந்து நிற்கும் அத்தனை பெண்களது குடங்களையும் தண்ணீரால் நிரப்பி விடுவேன். அவர்களது விழிகள் ஆயிரம் நன்றிகளை அள்ளித் தெளித்தபடி நகரும்!

அன்றும் அப்படித்தான் விண்ணும் மண்ணும் தண்ணென்ற காற்றும் சொல்லாத பல சேதிகளை சொல்லியபடியிருக்க அவள் வந்தாள்.

பத்மாவதி....!

வடக்கே பனந்தோப்பிற்கு அப்பாலுள்ள சீவல்தொழிலாளர்கள் வாழும் சிறு குடிசையொன்றிலிருந்து அவள் வந்தாள். எப்பவும் போலவே ஒரு வெள்ளிக் குடத்தை இடுப்பில் சுமந்து மேற்கு வீதிவழி வந்து சவவண்டிச்சாலை முடக்கில் இறங்கும் புற்களிடையாய் ஊரும் ஒற்றையடிப் பாதை வழியாய் நடந்து வந்து என்னருகில் தயங்கி நின்றாள். அழுக்கில்லாத அவளின் சட்டையில் ஆறேழு கிழிசல்கள்.

“எங்கையடி அந்தத் தோ...” பத்மாவதியின் அப்பா நிறை வெறியில் பிதற்றும் வார்த்தைகளை பனங்காற்று விழுங்கி வந்து எம் காதுகளில் விழுத்திக் கொண்டிருந்தது.

“வெட்டிப் போடுவன்! சொல்லிவை...” அவளின் தடித்த அண்ணன்களில் ஒருவனாக இருக்க வேண்டும். அவர்களுக்கென்றே எழுதி வைக்கப் பட்டிருப்பது போல் அந்த வெட்டுக் கொத்து வார்த்தைகளை வீசியெறிந்து கொண்டிருந்தான்.

இதனால்தான் அம்மாவும், பாட்டியும் என்னை இந்த வடக்கு வீதிக்குப் போக வேண்டாமென்று மந்திர உச்சாடனம் பண்ணுவார்களோ...? இந்த உச்சாடனம் தானே என்னை உத்வேகத்துடன் இங்கு வர வைப்பதுண்டு. இந்தப் பசும்புல்வெளிக்குள் அடங்கிக் கிடக்கும் முழுப் பிரபஞ்சத்தையுமே என்னைத் தரிசிக்க வைப்பதுண்டு.

நான் பத்மாவதியை நிமிர்ந்து பார்த்தேன். மறைந்து விட்ட சூரியனின் மெல்லிய செம்பூச்சும், நிலவொளியும், தெருவிளக்கும் இணைய... அவளது கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. மறுகணமே பயமும் கூச்சமும் ஆட்கொள்ள... தலை குனிந்தாள்.

“பத்மா... என்னைப்பார்... என்ன தண்ணி வேணுமா?” நான் பெரிய இளவரசி பாங்கில் அதட்டுகிறேன். அவள் “ஓம்” என்று தலையாட்டினாள்.

“ஏண்டி இப்ப பள்ளிக்கூடத்துக்கு வாறேல்லை?” தன்போக்கில் ஏறுமாறாய்க் கிடந்த என் சின்னப் பாவாடையை இழுத்து விட்டுக் கொண்டு எழுந்தேன்.

“அம்மா படிப்புக் காணுமெண்டு மறிச்சிட்டா...”

அவள் எனக்குப் பின்னால் நடந்து கொண்டு வந்தாள். கள்ளும், கருவாட்டுப் பொரியலும் கலந்த வாடையொன்று வீசியது.

நான் கோவில் முகப்பிலிருந்த துலாக் கயிற்றை ஒரு எக்கு எக்கிப் பற்றுகிறேன். பற்றிய வேகத்திலேயே வாளி கிசுகிசுவென்று கிணற்றுக்குள் இறங்கியது. பத்மாவதி எல்லாம் மறந்து சிரித்தாள். சிரிப்பில் அவளது பால்யம் இழைந்து வழிந்தது.

“ஏண்டி சிரிக்கிறாய்”.

நான் தண்ணீரால் குடத்தை நிரப்பிக் கொண்டிருந்தேன்.

“இல்லை உந்த துள்ளல் இழுப்புக்கு ஒருநாளைக்கு துலாவோட நேரே உள்ளை போயிடுவாய்”. அவள் கண் வெட்டாமல் துலாக் கயிற்றையும் என்னையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். துள்ளித் துள்ளி இறைத்துப் பார்க்க வேண்டுமென்று அவளுக்கும் கைகள் துருதுருப்பது போல் தோன்றியது. எனக்கொரு வேதனை கலந்த சுகம்! தலைகீழாய் நின்றாலும் அவள் அந்தக் கயிற்றைத் தொடமாட்டாள் என்று!

குடம் நிரம்பி வழிந்தது. அவள் குனிந்து தூக்கினாள். கிழிந்த சட்டையின் கழுத்து விளிம்பினால் மார்புகள் தெரிந்தன. எங்கள் வீட்டுக் கிணற்றடித் தென்னையில் கிடக்கும் மஞ்சள் குரும்பைகள் ஞாபகத்தில் வந்தன. நான் சிரித்தேன். அவள் அவசரமாய் குடத்தைத் தூக்கி இடுப்பில் தாங்கிக் கொண்டாள். அவளுக்கு வெட்கமாக இருந்ததை முகம் சொல்லியது. நான் எட்டியெட்டி அவள் முகத்தைப் பார்த்தேன். இப்போ... பால்யம் கலைந்து... பரிதவிப்பொன்று அவள் கண்களிற்குள் நிறைந்து கொண்டது. இந்தப் பரிதவிப்பை இதே புல்வெளியில் நான் எப்பவோ பார்த்திருக்கிறேன்.

ஞாபகம் என்னை சம்மட்டியால் அடித்தது.

“பத்து... இப்பவும் அந்தப் பனந்தோப்புக்குள்ளை விறகு பொறுக்கப் போறனியே...?” அவசரமாகக் கேட்டேன்.

“ஓம்! போகாட்டில்... அம்மா அடிப்பா. விறகில்லாட்டில் அப்பா அம்மாவை உதைப்பான். மாட்டனெண்டால் சொல்லுக் கேக்கேல்லையெண்டு அண்ணன்கள் எல்லாம் மாறி மாறி குத்துவாங்கள்” அவள் கூறியவாறே புல்வெளியூடாய் நகரும் ஒற்றையடிப் பாதை வழியே போய்க் கொண்டிருந்தாள். அவளின் தண்ணீர்க் குடத்தைப் போலவே குரலும் தழும்பிக் கொண்டு போனது.

நான் அவள் போவதையே பார்த்தபடி நின்றிருந்தேன். பால்யம் என்னிலிருந்து விலகியோடியது. பசுமை உணர்வுகள் கரைந்து போயின. இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே கருமை படிந்து போனது.

பத்மாவதி விறகு பொறுக்கச் செல்லும் பனந்தோப்பிற்குள் ஒளிந்து கிடக்கும் பொத்தல் விழுந்த ஓலைக் கொட்டிலில் வேலனின் சீவற்கத்திகளும், கள்ளு முட்டிகளும் தான் இருக்குமென்பது ஊரறிந்த உண்மை. ஆனால் அதே கொட்டிலினுள் பத்மாவதி என்ற பன்னிரண்டு வயதுச் சிறுமியின் வாழ்க்கை நாளும் பொழுதும் சீவப்பட்டுக் கொண்டேயிருப்பது யாருக்குத் தெரியும்!!

தலை விரித்தாடும் இந்த பனைகளுக்குத் தெரியுமா?
அலையெறிந்து மோதும் அந்தச் சமுத்திரத்திற்குத் தெரியுமா?
இந்தக் காற்றுக்குத் தெரியுமா? நட்சத்திரங்களுக்குத் தெரியுமா?
ஓடிக் கொண்டே திரியும் இந்த முகில்களுக்குத் தெரியுமா?

யாருக்குத் தெரியும்? அல்லது யாருக்குப் புரியும்??

பத்மாவதி சமைந்து போனால் மட்டும் இந்த ஊருக்குத் தெரியும். சமைய முன்பே அவள் வாழ்வு கரைந்து கொண்டிருப்பது யாருக்குத் தெரியும்.

எனக்கு கண்கள் முட்டி வழிந்தன. பயம் உணர்வுகளை மேவி, உடலையும் பற்றிக் கொண்டது. என் சித்தப்பன் பெரியப்பனிலிருந்து கணக்குப் பாடம் சொல்லித் தரும் கமலநாதன் வாத்திவரை அத்தனை பேரின் விலங்கு முகங்களும் என் முன்னால் வந்து நின்று, கோமாளிக் கூத்தாடுவது போலிருந்தன. ஸ்பரிசம்... அணைப்பு... நசிப்பு... முத்தம்... பிடுங்கல்... ஓட்டம்... கலைப்பு... களைப்பு... பயம் இவையே பால்ய பருவத்தின் நிகழ்ச்சி அட்டவணைகளாய் நிர்ப்பந்தங்களாய்...

மூச்சுப் பெரிதாகி விம்மலெடுக்க நான் அப்படியே அழுதபடி நிற்கிறேன்.

“விசாலி... விசாலி! எங்கடி இவள் போயிட்டாள்? விசாலி..லி..லி..”
பாட்டி கத்திக் கூப்பிட்டவாறே சேலைச் சுருக்கலைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு விறுவிறுவென்று வடக்கு வீதிக்கு வருகிறாள்.

“விசாலி உங்கை என்னடி செய்கிறாய். கடைக்கு வெத்திலை, பாக்கு வாங்க விட்டால் ஒருநாளும் நேரத்துக்கு வீடு வந்து சேர மாட்டாய். பங்கை கொம்மா வீட்டில கிடந்து கத்திறாள்” பாட்டி என் கையைப் பிடித்து உலுப்பி இழுத்துக் கொண்டு போகிறாள்.

“என்னை விடு பாட்டி, நான் வரேல்லை”

“ஏண்டி அங்கை கமலநாதன் வந்திருக்கிறான். இண்டைக்கு கணக்கு வகுப்பெல்லே. உதுக்குத்தான் அங்கை கொம்மா கத்திறாள். கணக்குப் படிக்கக் கள்ளமெண்டால் இந்தக் கருக்ககலுக்கை வந்து வடக்கு வீதியில ஒளிச்சு நிற்கிறதாக்கும்”

பாட்டி வெற்றிலை பாக்கை என் பாவாடைப் பொக்கற்றிலிருந்து பிடுங்கி எடுத்துக் கொண்டு... விறுவிறென்று என்னை இழுத்து... நடக்கிறாள்.

"பாட்டி, என்னை விடு பாட்டி. எனக்கு கணக்கும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் பாட்டி..! என்னை விடு பாட்டி...” என் கண்களிலிருந்து வழியும் கண்ணீர் காற்றில் சுழன்று மீண்டும் என் முகத்திற்கே விசிறியடிக்கிறது.

"நான் வரமாட்டன்!" என் குளறல் காற்றில் கரைந்து பனந்தோப்பினூடாய் எங்கோ மறைந்து போய்க் கொண்டிருந்தது...!

சந்திரா.ரவீந்திரன்.
லண்டன்


( நன்றி:- ஊடறு.)

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite