
ஒரு குடும்பத்தில் கணவன், மனைவியிடையே எடுக்கப்படக்கூடிய எந்தவிதமான முடிவிலும் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியமோ அல்லது வேறு எந்த அமைப்போ தலையிட அனுமதிக்கக்கூடாது என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் எழுத்தாளரான சல்மா கூறியுள்ளார்.
மாமனாரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு முஸ்லிம் பெண் தனது கணவனைவிட்டு விலகி, மாமனாரையே திருமணம் செய்ய வேண்டும் என்று உள்ளூர் முஸ்லிம் அமைப்பு ஒன்று கூறிய தீர்ப்பு தொடர்பாக, அனைத்திந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர்கள் இருவர் தெரிவித்த கருத்துக் குறித்து கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே இவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மாமனாரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட அந்தப் பெண், இந்தப் பாலியல் வல்லுறவு மூலம், தனது கணவனுடன் சேர்ந்து வாழும் தகுதியை இழந்து விட்டதாக அந்த உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் அவர்களுடைய குழந்தைகளை கணவனே தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும், எப்படியிருந்த போதிலும் பாலியல் வல்லுறவை செய்தவர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆயினும் இவர்களது கருத்து அவர்களது சொந்தக் கருத்து என்றும், அது வாரியத்தின் கருத்து அல்ல என்று கூறப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்கள் இருவரது கருத்துகள் குறித்து இந்திய பெண் உரிமை அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
இவர்களது கருத்தை வன்மையாக கண்டித்த முஸ்லிம் பெண் எழுத்தாளரான சல்மா, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பெண்கள் விடயத்தில் சரியாக நடந்து கொள்வதில்லை என்ற கருத்தே பொதுவாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் அந்த அமைப்பு ஆணாதிக்க மனப்பாங்குடன் நடந்து கொள்கிறது என்பதை நிரூபித்துள்ளதாகவும், அந்த அமைப்பில் பெண்கள் எவரும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
சமூகத்தின் உரிமைகளை இந்த அமைப்பு தனது கைகளில் எடுத்துக்கொள்ள முயலுவதாகவும் ஆனால் சமூகத்தில் அதற்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாடியாது என்றும் சல்மா கூறினார்.
nantri-பிபிசி-29.6.2005