Wednesday, December 22, 2004

பர்தா

1986 இல் யேர்மனிக்கு வந்து சேர்ந்த போது எனக்கு லெபனானைச் சேர்ந்த இஸ்லாமிய நண்பி ஒருத்தி கிடைத்தாள். இருவருக்குமே பாஷை தெரியாது. அதாவது யேர்மனிய மொழி தெரியாது. அவளுக்கு ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக் கூடத் தெரியாது. இருவரும் சைகைகளாலேயே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.

அவள் எனது வீட்டுக்கு அடிக்கடி வருவாள். நான் அவள் வீட்டுக்குப் பல நாட்களாகப் போகவில்லை. ஒரு நாள் அவள் மிகவும் வருந்தி அழைத்ததால் போனேன். அவள் வீட்டில் அவளோடு இருந்து கதைக்கத் தொடங்கும் போது அவள் தனது தலையைச் சுற்றிக் கட்டியிருந்த பர்தாவைக் கழற்றினாள். என்ன ஆச்சரியம்! இதுவரை என்கண்ணுக்குத் தெரியாத அழகு. நீண்ட சுருண்ட கேசத்துடன் அவள் மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தாள். அன்றுதான் முதன் முதலாக பர்தா அணியும் பெண்ணின் மீது எனக்கு அனுதாபம் ஏற்பட்டது. அதுவரை பாடசாலையில் இஸ்லாமியப் பெண்கள் முக்காடு போடுவதைப் பற்றிப் படித்த போதோ அல்லது எனது தாயகத்தில் முக்காடிட்ட முஸ்லிம் பெண்களைப் பார்த்த போதோ ஏற்படாத வருத்தம் அன்று எனக்குள் எழுந்தது. "ஏன் சூரியனையே காட்டாமல் அந்தத் தலைமயிரை ஒளித்து வைக்க வேண்டும்" என்ற ஆதங்கம் தோன்றியது.

அவளிடமும் அது பற்றிப் பேசினேன். எனது ஆதங்கத்தைச் சொன்னேன்.
"உனது தலைமயிரில் காற்றே படுவதில்லையா?" என்று கேட்டேன்.

அவள் எந்த வித உணர்வுகளையும் காட்டாது
"வெளியில் போகும் போதும், வீட்டுக்கு பிற ஆண்கள் வரும்போதும் கண்டிப்பாகப் பர்தா அணிய வேண்டும்" என்றாள்.

இது அவர்கள் முறை. இதில் தலையிட எனக்கு எந்தவித உரிமையும் இல்லை. ஆனாலும் மனசு விடாமல் என்னைத் தொந்தரவு பண்ணிக் கொண்டே இருந்தது. பிற ஆண்கள் பார்க்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக சூரியஒளி கூடப் படாமல் அந்தக் கூந்தலை மறைத்துக் கொண்டு திரிய வேண்டுமா? இது ஒரு அடக்கு முறை போலவே எனக்குப் பட்டது. ஆண்கள் பார்க்கக் கூடாது என்பதைத் தவிர வேறேதும் நன்மை அந்தப் பர்தாவில் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் எனக்கு அவளின் அந்த நிலை வருத்தத்தையே தந்தது.

பின்னர் எனது மகளின் பாடசாலை நண்பி சல்மா. சல்மா துருக்கிய நாட்டைச் சேர்ந்தவள். அவளது ஒன்பதாவது வயதில்தான் அவளைச் சந்தித்தேன். எனது மகளோடு விளையாட வீட்டுக்கு வருவாள். பர்தா அணிந்திருப்பாள். எட்டு வயதிலேயே அணியத் தொடங்கி விட்டாளாம். ஒரு நாள் எனது மகளுக்கு தலை இழுத்து விடும் போது அவளுக்கும் இழுத்துப் பின்னினேன். பின்னும் போது இன்னதென்று சொல்ல முடியாத வேதனை என்னை ஆட்கொண்டது. மிக நீண்ட அழகிய கூந்தல். அதற்கு இனிச் சூரியஒளி கிடைப்பதே கடினம். ஆனாலும் நான் எதுவுமே சொல்லவில்லை. நான் சொல்வது அந்தப் பிஞ்சு உள்ளத்தில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் மௌனித்து விட்டேன்.

இன்றும் கூட எனக்குள் கேள்வி இருக்கிறதுதான். பிற ஆண்கள் அவர்களின் அழகைக் கண்டு விடக் கூடாது என்பதைத் தவிர வேறு ஏதாவது நன்மை அதாவது மருத்துவ ரீதியான.. உடல் ரீதியான நன்மைகள் பர்தாவால் உண்டா...?

உஷா தோழியர் பகுதியில் பெண்கள் எங்கும் அடக்கப் படுகிறார்கள் என்பதை மனதில் கொண்டு முஸ்லீம் அல்லாதவர்கள் பார்வையில் இஸ்லாம்- ஏன் இந்த துரியோதனப் பார்வை? என்று எழுதப் போக அது ஒரு சிறிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இப்படியான வாதங்கள் சில தெளிவுகள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும். ஆனாலும் நான் நேசகுமாரினதோ நாகூர்ரூமியினதோ இது சம்பந்தமான எழுத்துக்களை வாசிக்கவில்லை. அதனால் எந்தக் கருத்தையும் என்னால் இந்தச் சர்ச்சை சம்பந்தமாகச் சொல்ல முடியவில்லை.

அதே நேரம் யாரோ ஒருவரின் பின்னூட்டம் பொட்டு பற்றி எழுதியிருந்தது. இந்துக்கள் பொட்டு வைப்பது மருத்துவரீதியான நன்மைகளைக் கொண்டிருந்தது. இதே போன்று மருத்துவரீதியான நன்மை பர்தாவில் இல்லாத பட்சத்தில் பொட்டையும் பர்தாவையும் ஒப்பிட முடியாது.

இது விடயத்தில் எனது கருத்து என்று பார்த்தால் ஒரு இஸ்லாமியப் பெண்ணை பர்தா அணி என்றோ அல்லது அணியாதே என்றோ சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அது அவளாக முடிவெடுக்க வேண்டிய விடயம்.

எந்த ஒரு விடயம் சம்பந்தமாகவும் யாரும் யாருக்கேனும் விழிப்புணர்ச்சியை மட்டுமே கொடுக்கலாம். அதனாலான நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து சொல்லலாம். ஆனால் "செய்" என்றோ "செய்யாதே" என்றோ சொல்வது அவர்களது சுதந்திரத்தில் கை போடுவதற்குச் சமனானது.

உஷாவின் இது சம்பந்தமான கருத்துக்களில் எனக்கு உடன்பாடும் உண்டு. முரண்பாடும் உண்டு. உதாரணமாக உஷா கூறிய பர்தா அணிவதைப் பற்றி முடிவெடுக்க வேண்டியது சம்மந்தப்பட்ட பெண்ணே தவிர மற்றவர்களுக்கு (அதிலும் பிற மதத்தினருக்கு) என்ன கவலை? இதோடு நானும் உடன் படுகிறேன். உஷா கூறிய எந்த இந்து பெண்ணையும் பார்த்தாலே இந்து என்று நெற்றியில் இருக்கும் குங்குமமும், தாலியும், வகிடில் இட்ட குங்குமமும், காலில் மிஞ்சியும் சொல்லும். அது மூட நம்பிக்கை என்று பீட்டரும், அமீதும் சொல்லலாமா? என்ற இந்தக் கருத்தில் முரண்படுகிறேன். மூலிகைகளில் செய்யப்பட்ட குங்குமத்திலும், பனைஓலையில் செய்யப் பட்ட மஞ்சள் பூசிய தாலத்திலும், கால்பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணியப் படும் மிஞ்சியிலும் மருத்துவ ரீதியான நன்மைகள் இருந்தன. இன்றைய மருத்துவ வளர்ச்சிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் இவைகள் அவசியப் பட்டன. அதனால் பொட்டையும் பூவையும் பொன்னையும் பர்தாவுடன் ஒப்பிட முடியாது. (இதே போல ஏதாவது நன்மைகள் பர்தாவில் இருந்தால் சம்பந்தப் பட்டவர்கள் தெரியப் படுத்துங்கள்.)

மற்றும் உஷா தான் தோழியரில் தொடர்ந்து எழுதலாமா என்றொரு கேள்வியையும் வைத்திருக்கிறார்.

ஏன் எழுதக் கூடாது? என்பது எனது கேள்வியாகிறது.

அங்கு எழுதக் கூடாத எதையும் உஷா எழுதவில்லை. தனது கருத்தை எழுதியிருக்கிறார். அதற்கான மற்றவர்களின் கருத்துக்கள் அவரவர் கருத்துக்கள். அதற்காக உஷா ஒதுங்க வேண்டிய அவசியமெதுவுமே இல்லை.
நான் உஷாவுக்குப் பதில் சொல்வதானால்
உஷா தொடர்ந்தும் எழுதுங்கள். உங்கள் கருத்துக்களைத் தயங்காமல் முன் வையுங்கள். உங்களுக்குத் தோழியரில் எழுதுவதுதான் வசதி என்றால் அங்கேயே தொடருங்கள்
.

Wednesday, December 15, 2004

இன்று முகுந்தின் திருமணம்


எனது நகரம் குளிரில் உறைந்து கிடக்கிறது. ஆனாலும் யேர்மனிய மக்கள் நத்தாரை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள்.

நானும் அவர்களில் ஒருத்தியாய் தெருவிலும், வேலையிடத்திலும் பின்னர் குழுந்தைகள் பேரக்குழந்தைகளுடன் வீட்டிலும்.. என்று விரைந்து கொண்டிருக்கிறேன். இந்த அவசரத்துள் கணினிப் பக்கம் எட்டிப் பார்த்தாலும் எதையும் உருப்படியாகப் பதிக்க முடியவில்லை.

நிறைய விடயங்கள் எழுத உள்ளன. நிறையப்பேரின் மின்னஞ்சல்கள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. பின்னூட்டம் என்பது ஒன்று கிடைத்தாலே பெரிய விடயம். அவைகளுக்குக் கூட பதில் எழுதவில்லை.

இன்று முகுந்தின் திருமணம். இந்த அவசரத்திலும் முகுந் சரஸ்வதி தம்பதியினரை வாழ்த்த முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

http://mugunth.tamilblogs.com/files/Invitation_English.jpg

Thursday, December 09, 2004

KG பேனா

அப்போதெல்லாம் ஊற்றெழுத்துப் பேனாக்களில் ஒன்றான Ciel பேனாவைத்தான் பாடசாலைகளில் பாவிக்கத் தொடங்குவோம். அதுவும் ஆறாம் வகுப்புக்கு வந்த பின்னர்தான். அதுவரை பென்சில்தான். தற்போது நாங்கள் பாவிக்கும் குமிழ்முனைப் பேனாவைத் தொடவே விடமாட்டார்கள்.

Ciel பேனாதான் உறுப்பெழுத்துக்கு நல்லது என அந்த நேரத்தில் எல்லோருமாகத் தீர்மானித்திருந்தார்கள். அதற்கு முன்னர் அதாவது எங்கள் அப்பா, அம்மா படித்த காலங்களில் தொட்டெழுதும் பேனாவைத்தான் பாவித்தார்களாம். அதனால் எழுதும்போது எழுத்து இன்னும் உறுப்பாக அமையும் என ஆசிரியர்கள் கருதியதால் தமிழ்வகுப்பில் உறுப்பெழுத்துப் பாடம் வரும் போது தொட்டெழுதும் பேனாவையும் பாவிக்க நிர்ப்பந்தப் படுத்தப் பட்டோம்.

Ciel பேனா மிகவும் மலிவானதாக இருந்தது. ஆனால் அதில் ஒரு பிரச்சனை. வேண்டி ஒரு வாரத்துக்குள்ளேயே அதன் கழுத்து வெடித்து மை கசியத் தொடங்கி விடும். இதனால் பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல் மூன்றிலுமே மை பிரண்டு விடும். அசிரத்தையாக இருந்தால் அது வெள்ளைச் சட்டையிலும் பட்டு விடும். எல்லோரும் மை பூசிக் கொண்டு திரிவதைப் பார்த்து விட்டு ஒரு நாள் எங்கள் தமிழ்ரீச்சர் சொன்னா "KG பேனை நல்லது" என்று.

KG பேனையின் விலை 6 ரூபா. Ciel என்றால் 2ரூபாதான். இதனால் தமிழ்ரீச்சரின் ஆலோசனையை அவ்வளவாக ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் வீட்டில் பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளவில்லையென்றே நினைக்கிறேன்.

பின்னொருநாள் ரீச்சர் KG பேனா ஒன்றைக் கொண்டு வந்து எழுதிப் பார்க்கத் தந்தா. உண்மையிலேயே அதன் வடிவமும் எழுத்தும் எனக்குப் பிடித்திருந்தது. வாங்கி விட வேண்டுமென்ற ஆசையும் என்னுள் எழுந்தது.

எனது அப்பா அப்போது(1970) கொடிகாமம் புகையிரதநிலையத்தில் கடமையில் இருந்தார். அதனால் தினமும் வேலை முடிய பேரூந்திலோ, துவிச்சக்கர வண்டியிலோ வீட்டுக்கு வந்து விடுவார். அன்றும் இரவு வேலை முடித்து அதிகாலையிலும் சில மணித்தியாலங்குள் Overtime செய்து, வரும் வழியில் நெல்லியடிச் சந்தையில் சாமான்களும் வாங்கிக் கொண்டு, கொளுத்தும் வெயிலில் வீடு வந்து சேர்ந்தார்.

அப்போது பாடசாலையின் மதிய இடைவேளைப் பொழுது. நான் வந்து மதிய உணவையும் முடித்திருந்தேன். ஏற்கெனவே அப்பாவிடம் இந்தக் KG பற்றிச் சொல்லியிருந்ததால், மீண்டும் சுலபமாக அது பற்றிச் சொல்லி வாங்கி விட வேண்டுமென்ற ஆசையையும் சொன்னேன். அன்று மதியம் உறுப்பெழுத்து வகுப்பு இருப்பது பற்றியும் சொன்னேன்.

அப்பா வேலை முடிந்து, சந்தைக்கு அலைந்து வந்த களைப்போடு, என்னைச் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ரவுணை நோக்கிச் சைக்கிளை உழக்கினார். அப்போது எனக்கு அப்பாவின் கஷ்டம் பற்றிய எந்த சிந்தனையும் எழவில்லை. காலை எழும்பியதும் அடுப்புச் சாம்பலை அள்ளிக் கொட்டுவது எப்படி அம்மாவின் நித்திய வேலையாக உள்ளதோ அது போல வேலைக்குப் போய் வருவது அப்பாவின் நித்திய வேலை என்பதே எனது மூளையில் பதிந்திருக்க வேண்டும். அதனாலான களைப்பு, அலுப்பு போன்றவை பற்றிய பிரக்ஞைகள் எதுவும் என்னிடம் அவ்வளவாக இல்லை.

அப்பா எனக்குக் கரும்பச்சை நிறத்தில் KG பேனா வாங்கித் தந்தார். Ciel பேனாவுக்கு மைவிடுவதாயின் அதன் நிப்பை மைப்போத்தலுக்குள் விட்டு அதன் கழுத்துப் பகுதியோடு சேர்ந்த ரீயுப்பை அழுத்த மை வந்து விடும். KG பேனாவுக்கு அப்படியில்லை. கழுத்தைக் கழற்றி விட்டு இன்னொரு ரியூப்பால் மையை உறிஞ்சி கீழ் உடம்பினுள் விட வேண்டும். எனக்குப் பாடசாலைக்கு நேரமாகி விட்டதால் அப்பா கடையிலேயே கேட்டு மையை விடுவித்துத் தந்தார்.

எனக்கு சந்தோசமும் பெருமையும். அன்றைய உறுப்பெழுத்து வகுப்பில் ரீச்சர் எனது பேனையையும், எனது எழுத்தையும் மற்றப் பிள்ளைகளுக்கும் காட்டியது எனக்கு இன்னும் அதிகப் படியான பெருமையைச் சேர்த்தது.

எனக்குப் பேனா கிடைத்து மூன்று நாளுக்குள் நான் நிறையவே எழுதி விட்டேன். எனது டயறியின் பக்கங்களை நிரப்பினேன். வெளியிடங்களில் இருக்கும் மாமாமார், சித்தப்பாமார் என்று எல்லோருக்கும் கடிதங்களாக எழுதி அனுப்பினேன். முடிந்தவரைக்கும் எழுதிக் கொண்டே இருந்தேன். அந்தளவுக்கு அந்தப் பேனா எனக்குப் பிடித்திருந்தது.

மூன்றாம் நாள் ஸ்போர்ட்ஸ் வகுப்பு. புத்தகங்கள் கொப்பிகள் என்று எல்லாவற்றையும் வகுப்பிலேயே வைத்து விட்டு விளையாட்டு மைதானம் வரை சென்று 45நிமிட வகுப்பை முடித்துத் திரும்பிய போது எனது கொம்பாஸ் சரியாக மூடப் படாமல் மெலிதாகத் திறந்திருந்தது. அவசரமாகத் திறந்து பார்த்தேன். பேனையைக் காணவில்லை. வகுப்பில் உள்ள எல்லோரையும் கேட்டுப் பார்த்தேன். ஒருவரும் தமக்குத் தெரியாது என்று விட்டார்கள். விளையாட்டுப் பாடம் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு மாணவி தனக்கு தண்ணீர் விடாய்க்குது என்று சொல்லி தண்ணீர்ப் போத்தலை எடுக்க வகுப்புக்கு வந்தது எனக்குத் தெரியும். ஆனால் அவளும் கண்கள் கலங்க தான் எடுக்கவில்லையென்று மறுத்து விட்டாள்.

என் பேனா களவு போய் விட்டது. அப்போதுதான் அப்பா வேலையால் வந்து களைப்போடு கொளுத்தும் வெயிலில் சைக்கிளை உழக்கிச் சென்று பேனாவை வாங்கித் தந்தார் என்பது உறைத்தது. அதனால் பேனா தொலைந்த விடயத்தை அப்பாவிடம் சொல்ல எனக்கு மனம் ஒப்பவில்லை. பழையபடி கையில் மையைப் பிரட்டிக் கொண்டு Ciel பேனாவால் எழுதிக் கொண்டிருந்தேன்.

அப்பாவுக்கு அந்தப் பேனா தொலைந்த விடயம் இன்றைவரைக்கும் தெரியாது. இனித் தெரியவும் மாட்டாது. ஆனால் இந்த நிகழ்வு எனக்குள் அவ்வப்போது தோன்றி நான் கேட்டதும் களைப்பையும் பொருட்படுத்தாது, என்னையும் அழைத்துச் சென்று, பேனா வாங்கித் தந்த அப்பாவின் அன்பை நினைக்க வைத்து ஒருவித நெகிழ்வை ஏற்படுத்தும்.

Tuesday, December 07, 2004

முல்லை நானில்லை.


முல்லை எனக்கு வேண்டியவர். அவரது படைப்புக்களை நான் ரசிப்பேன்.
அதனால் அவரது படைப்புக்களில் சிலதை திண்ணைக்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் நான்தான் முல்லையென நினைத்து எனது பெயரில் முல்லையின் ஆக்கங்களைப் போட்டு விட்டார்கள். தற்போது பலரும் நான்தான் முல்லை என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால் முல்லை நானில்லை.

Friday, December 03, 2004

சாதனை


ஜெயேந்திரர் என்ற சொல்லுக்கு உள்ள மவுசை நேற்றுத்தான் பார்த்தேன். எனது பதிவில் எத்தனையோ விடயங்களை ஒரு வருடங்களுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நேற்று இந்த ஜெயேந்திரர் பற்றி எழுதிய பின் எனது தளத்துக்கு வந்து போனவர் தொகை நான் எதிர்பாராதது. எனது பதிவைப் பொறுத்தவரையில் இது ஒரு சாதனையே.

இன்றைய திண்ணையில் நேசகுமார் சக இந்துக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அச்சமும் அதனாலான வேண்டுகோளும் நியாயமானதுதான். சில புல்லுருவிகளால் ஒட்டுமொத்த சாமியார்களையும், துறவிகளையும் நாம் தப்பாக எடை போட்டு விடக் கூடாதுதான்.

ஆனால் புல்லுருவிகளை இனங்காண்பது எப்படி?
அதற்கிடையில் அவர்களிடம் ஏமாந்து போபவர்கள் எத்தனை பேர்?

Thursday, December 02, 2004

சாமியார்கள்

ஜெயேந்திரர் பற்றிய செய்திகள் குமுதம் தொடங்கி வலைப்பதிவுகள் வரை ஆக்கிரமிப்பைப் பெற்ற போதும் நான் அதை வாசிக்கவேயில்லை. இந்தப் பொய்ச் சாமியார்களின் வேலைகளே பெண்தேடல்தானே! இதுவும் அப்படியான ஒரு கேஸாகத்தான் இருக்குமென்று நினைத்து, விட்டு விட்டேன். எனக்கு இந்தச் சாமியார்களை விட இவர்களிடம் ஏமாந்து போகும் பெண்களிடம்தான் அதிக வெறுப்பு. ஒரு தரமா இரு தரமா? காலங்காலமாய் கபடமாய் ஏமாற்றப் படுபவர்கள் ஒரு புறமிருக்க, தெரிந்து தவறிப் போபவர்கள் எத்தனை பேர்? அதனால்தான் எனக்கு இந்தச் சாமியின் விடயத்தை வாசிக்கவே தோன்றவில்லை.

இப்படியிருக்க ஒரு நாள் எனது கணவர் இந்தச் சாமி பற்றிய பேச்சைத் தொடங்கினார். எனக்குள் எரிச்சல். "என்ன பெண் கேஸ்தானே! எனக்கு வேண்டாம்." என்றேன்.

"இல்லையில்லை அவர் ஒரு ஊழல் செய்திருக்கிறார். அதை மறைக்க கொலை செய்திருக்கிறார்." என்றார்.

"சாமியார்களுக்கு இதுவும் அத்துபடியோ..!" என்று கேட்டு விட்டு, அதை விட்டு விட்டேன்.

இப்போது எழுத்தாளர் அனுராதா ரமணனின் வாக்குமூலம் எப்படியோ என்பார்வைக்குக் கிட்டி விட்டது. சும்மா விட்டுப் போக முடியவில்லை.

அனுராதா ரமணனின் குமுறல்

ஆன்மீகவாதியாக திகழ்ந்த ஜெயேந்திரர் என்னிடம் மிகவும் ஆபாசமாக பேசினார். கையைப் பிடித்து இழுத்து மிக அநாகரீகமாக நடந்து கொண்டார். தனது ஆசைக்குப் பணியுமாறு கேட்டுக் கொண்டார் என்று ஜெயேந்திரர் குறித்து பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் பரபரப்புப் புகார் கூறியுள்ளார்.

காவல்துறையிடம் ஒரு பெண் எழுத்தாளர் புகார் கூறியிருப்பது குறித்து தகவல்கள் கிடைத்தவுடன், அது அனுராதா ரமணன் தான் என்றும் தெரியவந்தது. ஆனால் அவரது பெயரைக் கெடுக்க வேண்டாம் என்பதால் நிருபர்கள் அனைவருமே பெயரைச் சுட்டிக் காட்டுவதைத் தவிர்த்தனர்.

பல ஆண்டுகளுக்கு முன் அனுராதா ரமணனிடம் ஜெயேந்திரர் ஆபாசமாகவும், அத்துமீறியும் நடந்து கொண்டதாக கடந்த ஆண்டு தான் அரசல் புரசலாக பேச்சு எழுந்தது.

ஜெயேந்திரரின் அந்தரங்க அசிங்க வாழ்க்கை குறித்து குமுதம் வார இதழில் அவர் தொடராக எழுத ஆரம்பித்தார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சில பிரபல பாஜக தலைவர்களின் 'இருண்ட முகங்கள்' குறித்தும் அவர் எழுதினார். ஆனால் பல்வேறு தரப்பு பிரஷர்களால் அந்தத் தொடர் நிறுத்தப் பட்டுவிட்டது.

தற்போது சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார் அனுராதா. சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

பேச்சின்போது பலமுறை உடைந்த அழுதார்.

அவரது பேட்டி விவரம்:

சில ஆண்டுகளுக்கு முன் சங்கர மடத்திலிருந்து என்னை அழைப்பதாக சங்கர மடத்திற்கு நெருக்கமான ஒரு பெண் என்னை அழைத்தார். காஞ்சி சங்கராச்சாரியார்களை தெய்வமாக நினைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவள் நான்.

எனவே தெய்வமே என்னை அழைத்துள்ளதாக எனது தந்தை சந்தோஷப்பட்டார். உடனே செல்லுமாறு என்னை அனுப்பி வைத்தார்.

நானும் மிகவும் சந்தோஷமான மன நிலையில் அந்தப் பெண்மணியுடன் காஞ்சிபுரம் சென்றேன். சங்கர மடம் சார்பில் தொடங்கப்படவுள்ள 'அம்மா' என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றுவது தொடர்பாக என்னுடன் ஜெயேந்திரர் பேசினார்.

அவர் பேசியவற்றில் சிலவற்றை எனது குறிப்பேட்டில் நான் எழுதிக் கொண்டிருந்தேன். தற்செயலாக நான் நிமிர்ந்து பார்த்தபோது, என்னை அழைத்து வந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் ஜெயேந்திரர். அவர்கள் இருவரும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு செய்த அசிங்கம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.

அதிலிருந்து நான் சுதாரிப்பதற்குள், ஆன்மீகவாதியாக பேசிக் கொண்டிருந்த ஜெயேந்திரர் ஆபாசமாக பேசத் தொடங்கினார். அறுவறுப்பான சிரிப்புடன் அவர் என்னிடம் பேசிய வார்த்தைகள் மிகவும் அநாகரீகமானவை.

அந்தப் பெண்மணியைப் போலவே என்னையும் ஒத்துழைப்பு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அதிர்ந்து போன நான் சட்டென எழுந்து விட்டேன். சீ.. நீயும் ஒரு மனுஷனா என்று வேகமாக கேட்டவாறே அங்கிருந்து கிளம்ப எத்தனித்தேன். உடனே அதிர்ந்த ஜெயேந்திரர் "முன் கூட்டியே இவளிடம் (என்னிடம்) எல்லாவற்றையும் கூறவில்லையா" என்று அந்தப் பெண்ணிடம் ஆவேசமாக கேட்டார்.

அவர் "இல்லை" என்றவுடன், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் அந்தப் பெண்மணியை திட்டினார்.

பின்னர் அதே வேகத்தில் என்னிடம் திரும்பி " என்னுடன் ஒத்துழைத்துப் போனால் நல்லது. இங்கு நடந்தவற்றை வெளியில் கூற நினைத்தால், உனக்கும் 10 ஆண்களுக்கும் தொடர்பு உள்ளதாக கதை கட்டி உன் வாழ்க்கையையே சீரழித்து விடுவேன்" என்று மிரட்டினார்.

"புருசனை இழந்த நீ என்ன விதவைக் கோலத்திலேயே இருக்கே... பூவும் பொட்டுமாகத்தானே இருக்கே" என்று கூறியவாறே என் உடலை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த அசிங்கத்தில் கூனிக் குறுகிப் போன நான் அங்கிருந்து எப்படியோ திரும்பி விட்டேன். மறுநாள் என்னை சங்கர மடத்துக்கு அழைத்துப் போன பெண் தன் கணவருடன் என் வீட்டுக்கு வந்தாள். இருவரும் குடித்திருந்தனர். இருவரும் சேர்ந்து மடாதிபதியை எதிர்த்துப் பேசுறியா என்று கேட்டபடி அடித்து உதைக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் நான் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் அதிர்ந்து போனேன். அடுத்து உடல் நலமும் பாதிக்கப்பட்டது.

இந்தத் தகவலை அப்போது உயர் பதவியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரியை தனியே சந்தித்துக் கூறினேன். அவர் உடனே புகார் கொடுங்க.. அவனை உள்ளே வைக்கிறேன் என்றார்.

ஆனால் சங்கர மடத்தின் பலம் அறிந்தவள் நான். இதனால் புகார் கொடுக்க நான் தயாராக இல்லை என்றேன். அவரிடம் கதறி அழுதபடியே எழ முயன்றேன்.

அப்போது எனக்கு ஒரு கால் வரவில்லை. தொடர்ந்து ஒரு கையும் வரவில்லை. பக்கவாதம் தாக்கியிருந்தது. சரிந்து விழுந்த என்னை அந்த அதிகாரி தான் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்.

மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அங்கு வைத்து என்னைக் கொலை செய்யவும் முயற்சி நடந்தது. சங்கர மடத்து ஆட்கள் இருவர் விஷ ஊசியுடன் அங்கு அனுப்பப்பட்டனர். ஆனா அதிர்ஷ்டவசமாக நல்லவர்கள் சிலரின் துணையால் தப்பிவிட்டேன்.

ஒரு வழியாய் பக்கவாதத்தில் இருந்து மீண்டு வந்தேன். ஆனால் மடத்தில் எனக்கு நடந்த ஆபாசம் என் மனதை புண்படுத்தியிருந்தது. இதனால் ஒரு வருடம் எழுதுவதையே கூட நிறுத்திவிட்டேன்.

அப்புறம் நடந்து சென்றபோது லாரி ஏற்றிக் கொல்லவும் அவர்கள் முயற்சித்தார்கள். அதிலிருந்தும் நான் மீண்டேன்.

ஆனால் இதை போலீசில் சொல்லவில்லை. என்னையும் என் இரு மகள்களையும் அவர்கள் அழிக்கும் சக்தி படைத்தவர்கள் என்பதை நான் உணர்ந்திருந்தேன். என் மகள்கள் மீது ஆசிட் வீசப் போவதாகவும் மிரட்டினார்கள்.

கணவர் இல்லாத நான் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வரையிலாவது உயிரோடு இருக்க வேண்டுமே என்பதற்காக அனைத்தையும் எனக்குள்ளேயே புதைத்துக் கொண்டேன்.

என் மகள்களுக்கு மணமுடித்த பின்னர் என் ஒட்டுமொத்த மன பலத்தையும் திரட்டிக் கொண்டு வார இதழ் ஒன்றில் மடத்தில் நடந்த ஆபாச சம்பவத்தை தொடராக எழுத ஆரம்பித்தேன்.

இதையடுத்து எனக்கு மடத்திலிருந்து மிரட்டல்கள் வந்தன. அந்தப் பத்திரிக்கைக்கும் பல வகையில் மிரட்டல்கள் வந்தன. இதனால் அந்தத் தொடர் நிறுத்தப்பட்டுவிட்டது.

பின்னர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் என்னை கூப்பிட்டு அனுப்பியது மடம். இந்த முறை சிலரது துணையுடன் அங்கு போனேன். அப்போது "நடந்த சம்பவத்தை அப்படியே மறைத்துவிட வேண்டும். என்னை மன்னிக்க வேண்டும். இதை யாரிடமும் சொல்லக் கூடாது. எவ்வளவு பணம் வேண்டும்" என்று பேரம் தொடங்கினார் சங்கராச்சாரியார்.

ஆனால் "உன்னை நானும் கடவுளும் மன்னிக்க வேண்டும் என்றால் உன் காவி உடையை உடனே நீ கலைந்துவிட்டு மடாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும். அது தான் நீ செய்துள்ள பாவங்களைப் போக்க ஒரே வழி" என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.

லட்சக்கணக்கான குடும்பங்களில் கடவுளாக பூஜிக்கப்படும் ஒரு மனிதரின் மறு பக்கம் எனக்குத் தெரிய வந்தபோது நான் மிகவும் அதிர்ந்து போனேன். அவர் தற்போது செய்திருக்கும் செயல்கள் கடவுளால் கூட மன்னிக்க முடியாதது.

அந்த கருப்பு மனிதரின் முகத் திரையை கிழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனக்கு நேர்ந்த அவமானத்தை இப்போது வெளியிட்டுள்ளேன். மற்றபடி இதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது.

மேலும் என் பெயரை மறைமுகமாகக் குறிப்பிட்டு பல செய்தி ஊடகங்களும் எழுத ஆரம்பித்துவிட்ட நிலையில் இனியும் உண்மையை மறைப்பதில் பலனில்லை என்பதால் வெளியில் சொல்கிறேன் என்றார்.

பேசும்போது பல முறை மூத்த எழுத்தாளரான அனுராதார ரமணன் உடைந்து போய் அழுததும் தனக்கு நேர்ந்த அவமானங்களை கண்ணீருடன் அவர் சொன்னதும் மனதை பெரிதும் வருத்தியது.

பேட்டியின்போது இந்திய ஜனநாயக மகளிர் அமைப்பைச் சேர்ந்த சுதா சேஷய்யன் உள்ளிட்ட மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர். அனுராதாவின் சார்பில் மடத்துக்கு எதிராக வழக்கை நடத்தவும் அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

- அனுராதா ரமணன் -


அனுராதாவிடம் போலீஸ் விசாரணை:

இந் நிலையில் அனுராதா ரமணன் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.

மடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் இன்ஸ்பெக்டர் சரஸ்வதியிடம் விளக்கினார். இதை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்துள்ளது.

தற்ஸ்தமிழ்
30 நவம்பர் 2004


Wednesday, December 01, 2004

அப்பா


அப்பாவின் அன்பு பற்றி வலைப்பதிவில் பலர் எழுதியுள்ளார்கள்.
முன்னரெல்லாம் "வெயிலில் தான் நிழலின் அருமை தெரியும்
அப்பன் செத்தால்தான் அப்பன் அருமை தெரியும்" என்று சிலர் சொல்வார்கள்.

நான் இருக்கும் போதே அப்பாவின் அருமையை உணர்ந்திருந்தேன். அப்பா என் மேல் நிறையவே பாசம் வைத்திருந்தார். 1.12.1997இல் அவர் இறந்துவிட்டார். ஆனால் அவரோடான நினைவுகள் இன்னும் என்னோடு வாழ்கின்றன. அதனால்தானே என்னவோ அனேகமான எனது படைப்புக்களில் அப்பாவின் நினைவுகளும் இடம் பிடித்து விடுகின்றன.



அப்பாவின் நினைவுகளைச் சுமந்த சில கதைகள்

எதனால்...?
கல்லட்டியல்
சங்கிலித்துண்டங்கள்
பதியப்படாத பதிவுகள்
குண்டுமணிமாலை

அப்பா அம்மாவுடன் - 1956

இது சில வருடங்களுக்கு முன் எழுதப் பட்டது.

"நான் தமிழன்"
மார் தட்டிச் சொன்னாய்

"மமே கொட்டியா"
புத்தன் வழி வந்தவர்கள்
மத்தியில் சொல்லி
எத்தனை இன்னல்கள் பட்டாய்

58இல் தமிழன் அடிபட்டதிலிருந்தே
இரத்தம் கொதிக்க
கொழும்பு மோகம் கொண்டவர் மீது
கோபப் பட்டாய்

கொழுந்து விட்ட உன் கோபத் தீயில்
வளர்ந்து விட்ட உன் பிள்ளைகள்
உணர்வு கொண்டெழுந்து
விடுதலை வேட்கையுடன்
களம் புகுந்த போது
பாசத்தில் நெஞ்சு வெந்தாலும்
தேசத்தை எண்ணிப் பேசாதிருந்தாய்
புத்திரரின் வீரத்தை எண்ணி
பூரித்தும் இருந்தாய்

தாண்டிக்குளம் தாண்டும்
விதியொன்று வந்த போது
மீண்டும் ஊர் திரும்பும் நம்பிக்கையோடு
தாண்டினாய்
கொழும்பு வசதி பிடிக்காது
வவுனியாவிலே தஞ்சம் கொண்டாய்

வருத்தமுற்ற போது
வைத்தியம் செய்ய
போதிய மருத்துவர் இன்றி
எல்லாத் தமிழரையும் போல்
அடிபட்டும் போனாய்

வலிந்த
என்னைச் சுமந்த உன் தோள்கள்
வலுவிழந்து..
கால்கள் நடை தளர்ந்து...

களத்தில் இரு புத்திரரையும்
புலத்தில் மறு பிள்ளைகளையும்
தொலைத்து விட்டு
எங்கோ அந்தகாரத்துக்குள்
பிள்ளைப் பாசத்தைத் தேடித் தேடி
களைத்த உன் விழிகள்
பன்னிரண்டு வருடங்கள் கழித்து
என் முகம் பார்த்ததும்
கொட்டும் அருவியாகி
எனை நனைத்த போது
உனை அணைத்துத் தாயானேன்
எனை நனைத்த அக்கணத்தை
உயிருள்ளவரை மறவேன்.

சந்திரவதனா
1.12.1999

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite