செல்வராஜின் பதிவை வாசித்த போது கண்கள் கலங்கி விட்டன.
எனது பிள்ளைகள் அவர்களே பெற்றோராகுமளவுக்கு வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். ஆனாலும் பல சமயங்களில் என் சிந்தனை ஓட்டத்தில்
- அவர்கள் சிறியவர்களாக இருக்கும் போது
நான் அந்த விடயத்தில் பிழை விட்டு விட்டேன்.
அந்த சந்தர்ப்பத்தில் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. –
போன்றதான குற்ற உணர்வுகள் தோன்றும்.
ஆனால் என் மகள் கர்ப்பமாக இருந்த போது
"அம்மா நான் உங்களைப் போல ஒரு நல்ல அம்மாவாக என் குழந்தைக்கு இருப்பேனோ என்று சந்தேகமாக இருக்கிறது." - என்று அடிக்கடி சொல்லுவாள்.
நேற்று என் மகனுக்குக் குழந்தை பிறந்து விட்டது.
அவன் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது நியூ படத்துக்காக உன்னி கிருஸ்ணன் பாடிய அம்மா சம்பந்தமான ஒரு பாடலைப் போட்டுக் கொண்டு வந்தான்.
இப்படியான சமயங்களில் குற்ற உணர்வுகள் பறந்து மனசு இலேசாகி விடுகிறது.
ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால்..
குழந்தைகளும் வளர்ந்த பின் பெற்றோர்களது சின்னச் சின்னத் தவறுகளைப் பெரிதாக நினைத்துக் கொண்டிராமல்
பசிக்குதுப்பா என்ற போது பால் வார்த்துக் கொடுத்த அப்பாவின் அன்பு போன்ற, அம்மா அப்பாவின் அன்பு தோய்ந்த சின்னச் சின்ன விடயங்களையெல்லாம் நினைத்து நினைத்துத்தான் நெக்குருகுவார்கள்.