
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
பாடியவர்கள் - இளையராஜா ஜானகி
இசை - இளையராஜா
படம் - அவதாரம்
கண் இல்லாமல் காதலே இல்லையென்பது இன்னும் பல பேரின் வாதமாயுள்ளது.
ஆனால் தினமும் கண்களால் எத்தனையோ பேரைக் காண்கிறோம். எத்தனையோ கண்களை நேருக்கு நேர் சந்திக்கிறோம். அத்தனை கண்களும் காதல் வயப் பட்டு விடுகின்றனவா? இல்லையே! காரணம் அங்கு மனங்கள் இணையவில்லை.
மனங்கள் இணையும் போதுதான் அங்கு நியமான காதல் மலர்கிறது. பார்த்த மாத்திரத்தில் சிலரின் அழகில் மயங்கிப் போவதுண்டுதான். ஆனால் அது வெறும் அழகின் கவர்ச்சி. பழகும் போது மனம் இணையவில்லையானால் அந்த அழகின் கவர்ச்சி மெதுமெதுவாகக் குறைந்து விடும்.
அத்தோடு கண்களின் கலப்பில் மட்டுந்தான் காதல் மலரும் என்றால் இந்த உலகில் அழகில்லாத எவருமே காதலைச் சந்தித்திருக்க மாட்டார்கள்.
சேர்ந்து பழகும் போது மனங்களின் சங்கமிப்பில் அழகில்லாதவர்கள் கூட அழகாகத்தான் தெரிவார்கள். எல்லாமே மனங்களில்தான் தங்கியிருக்கிறது.
அதைத்தான் இப்பாடலும் சொல்கிறது.
இப்பாடல் இடம் பெற்ற அவதாரம் படத்தை நினைத்தாலே ரேவதியினதும் நாசரினதும் அருமையான நடிப்புத்தான் நினைவில் வருகிறது. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வகையில் மிக நல்ல திரைப்படங்களில் இவ் அவதாரம் படமும் ஒன்றாக உள்ளது.
இதில் கண்பார்வையற்ற ரேவதிக்கும், நாசருக்கும் இடையில் ஒருவர் மீதொருவர் காதல் வருகிறது. இந்தக் காதல் கூட மனங்களின் இணைவில்தான் வருகிறது.
ரேவதிக்கு வெளியுலகம் எப்படியிருக்கும், வர்ணங்கள் எப்படியிருக்கும் என்று அறிந்து கொள்வதில் ஆர்வம். எல்லாம் மனம்தான். மனங்களின் எண்ணம்தான் வண்ணம் என்பதை நாசர் பாடலினாலேயே சொல்லி, ரேவதியை ஆறுதல் படுத்துவது அருமையாக உள்ளது.
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா
உண்மையிலேயே எப்படித்தான் வண்ணம் வண்ணமாக எங்கள் முன் எல்லாம் கொட்டிக் கிடந்தாலும், எமது மனதுக்குள் சந்தோசம் இல்லையென்றால், எந்த வண்ணமும் எங்களை அவ்வளவாகக் கவராது. அதே நேரம் எமது மனது சுத்தமாய், சந்தோசமாய் இருக்கும் போது எல்லாமே அழகாய் வண்ணம் வண்ணமாய்த் தெரியும்.
தென்றல் வந்து தீண்டுவதைக் கண்களால் பார்க்க முடியாது. திங்களின் குளிர்ச்சியையும் கூடப் பார்க்க முடியாது. இவைகளை உணரத்தான் முடியும்.
உணர்தலின் போது மனசுக்குள் தோன்றும் உவகைக்கு இணையாக உலகில் வேறெந்த சந்தோசங்களும் இருக்க முடியாது. எங்கள் எண்ணங்கள்தான், எங்கள் மனசின் பார்வையில் தோன்றுபவைதான் நியமான சந்தோசங்கள். அந்த சந்தோசங்களின் வர்ணங்களை தீட்ட முடியாது.
அதைக் கவிஞர் அழகாகச் சொல்லியுள்ளார். இளையராஜாவினதும், ஜானகியினதும் குரல்கள் பொருத்தமாக இணைய, ரேவதியும் நாசரும் காட்சியுடன் கலந்து நடிக்க, இசையுடன் இணைந்து இனிமையாகிவிட்ட அருமையான பாடல்.
பாடலைக் கேட்கும் போதும், வர்ணம் வர்ணமாய் ஊற்றிய படியுள்ள அந்தப் பாடல் காட்சியில் ரேவதியையும் நாசரையும் பார்க்கும் போதும் மனதுக்குள் ஏற்படும் அந்த சிலிர்ப்பான உணர்வை வார்த்தையில் வடிக்க முடியவில்லை.
வார்த்தையில் வடிக்க முடியாத ஏதோ ஒன்று மனசுக்குள் ஒரு நியத்தை உணர்த்துவதை மட்டும் நன்கு உணர முடிகிறது.
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது
ஓடை நீரோடை இந்த உலகம் அது போலை
ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போலை
நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே அழகெல்லாம் கோலம் போடுது
குயிலே குயிலினமே அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
3.9.1999