
மற்றவர்களைப் போல ஒரே மூச்சில் அத்தனையையும் என்னால் எழுதி முடித்து விட முடியும் போல் தெரியவில்லை. கண்டிப்பாக எப்போதாவது எழுத வேண்டும் என நினைத்த எனது தூயகணித ஆசிரியையோடான நினைவுகளோடு தொடங்குகிறேன். அழைத்த வந்திக்கு நன்றி.
அந்த ரீச்சரை எல்லோரும் பொல்லாத ரீச்சர் என்றுதான் சொல்வார்கள். ஒன்பதாம் வகுப்புக்கு அவதான் எங்களுக்கு வகுப்பு ரீச்சராக வந்தா.
எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்து வந்த நாம் எட்டாம் வகுப்பு பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் Arts, Science எனப் பிரிக்கப் பட்டோம். அப்போதெல்லாம் சயன்ஸ் மாணவர்களுக்குத்தான் மதிப்பு. ஆர்ட்ஸ் மாணவர்கள்தான் பிற்காலத்தில் சட்டத்தரணியாகவோ, அன்றி இன்ன பல நல்ல வேலைகளிலோ அமரப் போகிறார்கள் என்ற சிந்தனை அந்த நேரத்தில் யாருக்கும் எழுந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆர்ட்ஸ்க்குப் போகும் மாணவர்களைக் கொஞ்சம் மட்டமாக நினைப்பது இயல்பாக இருந்தது. இதற்கு, சயன்ஸ்க்குப் போனால்தான் ஒரு டொக்டராகவோ அன்றி என்ஜினராகவோ வரலாம் என்ற அந்தக் காலப் பெற்றோரின் கனவு காரணமாக இருக்கலாம்.
சயன்ஸ் பிரிவினருக்கான 9ம் வகுப்புக்குத்தான் அந்தப் பொல்லாத ரீச்சர் வகுப்பாசிரியையாகினா. அவ எங்களுக்கு வகுப்பாசிரியை மட்டுமல்ல தூயகணிதத்துக்கும் அவதான் ஆசிரியர் எனத் தெரிய வந்தது. இது எங்கள் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் பல மூலைமுடுக்குகளிலும் பேசப்படும் ஒரு விடயமாக எல்லோரையும் கலக்கியது.
'பெரிய மாணவிகளுக்குக் கூட அடிப்பாவாம். உலுப்பி எடுத்து விடுவாவாம்...` பலரும் சொன்னார்கள்.
ஆனால் அந்த ரீச்சரைப் பார்த்த போது எனக்கு அப்படி ஒன்றும் பொல்லாத்தனமாய் தெரியவில்லை. வெள்ளையாக, அழகாக, ஆனால் என்னைப் போலக் கட்டையாக இருந்தா. சுருட்டைத் தலைமயிரை மடித்துச் சின்னதாகக் கொண்டை போட்டிருந்தா. முதல் நாள் பார்வையிலே நட்பாகச் சிரித்தா. எப்போதுமே ஒரு முறுவல் அவவின் முகத்தில் ஒட்டியிருப்பது போலத்தான் எனக்குத் தெரிந்தது.
முதல் நாளைய தூயகணிதத்தில் அல்ஜிபிராவில் பிளஸ்(+), மைனஸ்(-) என்று வந்த போது எல்லோருமே சற்றுத் தடுமாறினோம். நாம் குழம்பும் போதுதான் ரீச்சர் பொறுமையிழப்பது தெரிந்தது.
சின்ன வகுப்பிலிருந்து சாதாரணமாகப் படித்துக் கொண்டு வந்த கணிதத்தை விடுத்து எட்டாம் வகுப்பில் New Maths என்று எதையோ போட்டுக் குழப்பி விட்டு ஒன்பதாம் வகுப்புக்கு வந்த போது அங்கு PureMaths, AppliedMaths என்று வேறு வடிவங்களைக் காட்டினார்கள். எங்கள் சயன்ஸ் பிரிவிலேயே டொக்டர் கனவோடு இருந்தவர்கள் Chemistry, Physics உடன் Biologyயையும் Zoologyயையும் தமக்கான பாடங்களாக எடுக்க, நான் ஆர்க்கிரெக் கனவுடன் தூயகணிதத்தையும்(Pure Maths), பிரயோககணிதத்தையும்(Applied Maths) எனக்கான பாடங்களாகத் தேர்ந்தெடுத்திருந்தேன். பிளஸ்(+), மைனஸ்(-) கொஞ்சம் குழப்பியது..
அன்றிரவே எனது அண்ணனிடம் பிளஸ்(+), மைனஸ்(-) பற்றிய குழப்பத்தைச் சொன்னேன். பொல்லாத ரீச்சர் பற்றியும் சொன்னேன்.
அவன்
பிளஸ் + பிளஸ் = பிளஸ்
மைனஸ் + மைனஸ் = மைனஸ்
மைனஸ் x மைனஸ் = பிளஸ்
“இதை சரியான படி ஞாபகம் வைத்திரு. தூயகணிதத்தில் எந்தக் குழப்பமும் வராது” என்றான். இன்னும் சில அடிப்படை நுணுப்பங்களைச் சொல்லித் தந்தான். அந்த ஒரு நாள் அதுவும் வெறுமனே அரைமணி நேர அண்ணனின் விளக்கம் எனக்கு கணிதத்தை மிக்சுலபமாக்கி விட்டது. என்னை மிஞ்ச யாருமில்லை என்ற அளவுக்கு கணிதம் என்னோடு மிகவும் இசைந்தது. பரீட்சைகளில் தூயகணிதத்தின் Algebraவுக்கும் சரி Geomatryக்கும் சரி 100 புள்ளிகளே எப்போதும் கிடைத்தன. பிரயோககணித ஆசிரியரிடமிருந்து Computer என்ற பட்டம் கிடைத்தது.
பொல்லாத ரீச்சர் என்று மற்றவர்களால் வர்ணிக்கப்பட்ட அந்த ரீச்சர் என்னோடு மட்டும் எப்போதுமே அன்பாகவும், நட்பாகவும் நடந்து கொண்டா.
ஒருநாள் றிலே நடக்கும் என்பதால் அன்றைய எல்லாப் பாடங்களும் ரத்து என்ற நினைப்பில் முதல் நாள் தந்து விட்ட தூயகணித homeworkஐ வகுப்பில் யாருமே செய்யவில்லை. ஆனால் தூயகணிதம் முடியத்தான் றிலே ஆரம்பமாகும் என்ற போது எல்லோரும் விழித்தோம். ஒட்டு மொத்த வகுப்பே செய்யவில்லை. ரீச்சர் ஒவ்வொருவராகப் பார்த்து கொப்பிகளைத் தூக்கி எறிந்து கொண்டும், அடித்துக் கொண்டும் வந்தா. மிகவும் மரியாதையான இன்னொரு ரீச்சரின் மகளை ஒரு உலுப்பு உலுப்பி வகுப்புக்கு வெளியில் போய் நிற்கும் படி பணித்தா. அந்த மாணவி மிகவும் கெட்டிக்காரி. எல்லோராலும் மதிக்கப்படும் மாணவி. அவளுக்கே இந்நிலை என்றால் என் நிலை என்ன? பயம் என்னைத் தின்றது. மற்றவர்கள் எல்லோரும் Homework கொப்பியாவது வைத்திருந்தார்கள். நான் கொப்பியைக் கூடக் கொண்டு செல்லவில்லை.
ரீச்சர் என்னை நெருங்க நெருங்க பயமும் அதிகரித்தது. ரீச்சர் எனக்கு முதல் பிள்ளையின் கொப்பியைப் பார்த்து விட்டு அந்தப் பிள்ளைக்கு அடித்தா. எனக்கு உடலும் மனதும் பயத்தில் பரபரத்தது. அடுத்தது நான். ´என்ன நடக்கப் போகிறது. அடிப்பாவா? கொப்பியைத் தூக்கி எறிவாவா?` கைகளைப் பிசைந்தேன். கோபாவேசத்துடன் சுழலும் ரீச்சரின் முகத்தைப் பார்த்தேன். சட்டென மாறிய அவவின் முகத்தில் சாந்தம் நிலைக்க மெல்லிய முறுவலுடன் என்னைத் தாண்டிப் போய் எனக்கு அடுத்த பிள்ளையின் கொப்பியைத் தூக்கி எறிந்து விட்டு அடுத்த லைனுக்குப் போனா.
என்னை Homework செய்தாயா? கொப்பி கொணர்ந்தாயா என்ற எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஒரு வகையில் அது நியாயமற்றதுதான். வகுப்பில் அத்தனை பேரும் தண்டனை பெறும் போது எனக்கு மட்டும் தண்டனை தராதது பிழையே. அந்த நேரத்தில் எனக்கு அது பிழையென்று தெரியவில்லை. தப்பினேன் பிழைத்தேன் என்ற நிம்மதியும், ஒரு மனதார்ந்த நன்றியுமே இருந்தது. இன்றைக்கும் அந்த ரீச்சரின் நினைவு என்னோடு இருக்கிறது.
சந்திரவதனா
17.09.2009