இரண்டு நாட்களுக்கு முன் மருந்துக்கடைக்குப் போனபோது இந்தக்
காலாண்டுக்கான மருத்துவசஞ்சிகையையும் இலவசமாகத் தந்து விட்டார்கள். இம்முறை ஹோமியோபதி
சம்பந்தமான செய்திகளும், மருத்துவக் குறிப்புகளும் விரவிக் கிடந்தன.
அவற்றில், „வாசிப்பது
மனதின் அழுத்தங்களைக் (Stress) குறைக்கும்“ என்ற
தலைப்பிலும் ஒன்று இருந்தது. நரம்பியல் உளவியலாளர் டேவிட் லெவிஸ் சொல்கிறார் „மனதுக்குப்
பிடித்த ஒரு புத்தகத்தை ஆறு நிமிடங்கள் வாசிக்கும் போதே, மனம் உலகை மறந்து, மனதின்
அழுத்தம் மிகவும் குறைந்து விடுகிறது“ என்று.
மனதின் அழுத்தம் நடப்பதினால் (walk) 42% குறைகிறது என்றும்,
வாசிப்பதனால் 68% குறைகிறது என்றும் வாசிப்பது திகில் கதையோ அன்றில் காதல் சமூக, அறிவியல்
கதையோ என்பது பிரச்சனையே இல்லையென்றும் உதிரியாக இன்னொரு தகவலையும் தந்துள்ளார்.
அதை நாமும் எமது வாசிப்பின் போது உணர்கிறோம்.
மனஅழுத்தம் குறைகிறதோ இல்லையோ நான் வாசிக்கும் போது உலகையே
மறந்து விடுகிறேன். என்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன். சமயங்களில்
வீட்டில் வாழைப்பழம் தீர்ந்து விட்டது, தோடம்பழம் தீர்ந்து விட்டது போன்றதான விடயங்களைக்
கூட கவனிக்க மறந்து போய் விடுகிறேன்.
***************************

ஜெயரூபனின் (மைக்கல்) எழுத்துக்கள் வசீகரமானவை. கதை சொல்லும் உத்தியும் வித்தியாசமானது. புனைவுகள் இன்றிய நியங்களின் வடிவங்களான இவரது கதைகளை வாசிக்கும் போது கதைப்புலம் ஒரு படம் போல மனதுள் விரியும். கதை மாந்தர்கள் அங்கு நடமாடிக் கொண்டிருப்பார்கள். கதைகளை தன்னிலையிலும் சொல்லியிருப்பார். படர்க்கையிலும் சொல்லியிருப்பார். அவை பெரும்பாலும் எம் வாழ்வோடு நெருங்கிய விடயங்களைப் பேசுவனவாகவும், எமக்கு நெருக்கமாகவும், எம்முள் தாக்கத்தை ஏற்படுத்துவனவாகவும் அமைந்திருக்கும். நாம் நெகிழ்ந்து, கசிந்து, நெக்குருகி வாசித்துக் கொண்டிருப்போம். நினைவுகள் கிளறப்பட்டு, எம் வாழ்வில் நிகழந்த ஏதோ ஒரு துயரமானதோ அல்லது சந்தோசமானதோ சம்பவத்தை அந்தக் கதையோடு பொருத்திப் பார்த்து, அந்தக் காலத்துக்கே சென்று அந்தப் பொழுதுகளில் கரைவோம்.
அவரது கதைகளில் `ஜடாயு` என்ற சிறுகதையை கடைசியாக வாசித்தேன். மனசு கனமானது. நினைவுகளில் இருந்து அகற்ற முடியாமல் காலைகளின் விழிப்பில் கூட மனக்கண்ணுள் ஒரு சிறுவனும், அவனது தந்தையும் ஒரு கடற்கரையில் நடக்கும் காட்சி தெரிந்தது. அன்பால் பின்னப்பட்ட ஒரு குடில் தெரிந்தது. அச்சிறுவன் வளர்ந்து கொண்டிருக்கும் போது அந்தத் தந்தையின் கனவிலும், கற்பனையிலும் எத்தனையெல்லாம் இருந்திருக்கும் என்ற சிந்தனை தவிர்க்க முடியாமல் எழுந்து கொண்டே இருந்தது.
மகன் கூட வே வளர்வான், உறுதுணையாக இருப்பான், படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தைத் தாங்குவான், தோள் கொடுப்பான்... என்று எல்லா யாழ்ப்பாணத் தந்தையர்க்கும் இருந்த கனவு அந்தத் தந்தையிடமும் கண்டிப்பாக இருந்திருக்கும். அந்த அம்மா, அக்கா...
இவையெல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு ஓடும் தைரியம் எங்கள் நாட்டில் எத்தனையோ ஆயிரம் இளைஞர்களிடம் வந்தது. பாடசாலைக்குப் போன பிள்ளைகள் பசியோடு திரும்புவார்கள் என்று அன்போடும், அவதியோடும் சமைத்து வைத்து விட்டுக் காத்திருந்த அம்மாமாரையெல்லாம் சைக்கிளையும், புத்தகப் பையையும் யாரோ ஒருவனிடம் கொடுத்தனுப்பி ஏமாற்றிய தைரியம் அது. அக்காமாருடனும், தங்கைமாருடனும் சண்டை பிடித்து, அடம் பிடித்து, அன்பைப் பொழிந்து… வாழ்ந்து விட்டு ஒரு பொழுதில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்ட பயங்கரத் தைரியம் அது.
`ஜடாயு´ மீன்பிடித் தொழிலை சீவனமாகக் கொண்டு வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதை. அம்மாவையும், அப்பாவையும், அக்காவையும் விட்டு விட்டு அவர்களது அன்புத் தம்பி போராடப் போய் விடுகிறான். பாடசாலைக்குப் போனவனின் சைக்கிளும், புத்தகப்பையும்தான் வீட்டுக்கு வந்தன. அது தந்த ஏமாற்றத்திலும், ஏக்கத்திலும் மனதாலும், உடலாலும் சாய்ந்து போன ஒரு தந்தையின் கதை அது.
ஈழத்தில் எத்தனையோ ஆயிரம் குடும்பங்களில் இது நடந்திருக்கிறது. அது வலியாக, தாள முடியாத சோகத்தின் சுமையாக ஒட்டுமொத்தக் குடும்பத்தையே ஆட்டிப் படைத்திருக்கிறது. வருத்தியிருக்கிறது. பெரும்பாலும் அந்த வலியை, அந்தக் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவர்தான் எங்களுக்குச் சொல்லியிருப்பார். இக்கதையில் குடும்பத்தை விட்டுச் சென்ற அந்த மகனே, தான் போனபின்னான தனது குடும்பத்தின் வலியை தன் பார்வையில் இருந்து சொல்கிறார். கதையை வாசிக்கும் போது நான் அங்கே அந்தக் கடற்கரை வீட்டுக்கே போய் விட்டேன்.
வாசித்து முடித்த பின், அந்தத் தந்தை, எனது தந்தை... இன்னும் எத்தனையோ தந்தையர் என் நினைவுகளில் மிதந்தார்கள். இன்றைய பொழுதில் எதுவுமே இல்லையென்று ஆனபின்னும் அந்த வலிகளுடனேயே மடிந்து போன அவர்களை நினைத்து ஆதங்கப் படுவததைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.
ஜடாயு கதையையும் மறக்க முடியவில்லை.
அதன் முடிவை எழுதும் போது ஜெயரூபன் என்ன நினைத்தாரோ எனக்குத் தெரியாது. எனக்குள் தோன்றுவது 'எங்கள் பிள்ளைகள் நாட்டின் பிள்ளைகள் ஆன போது, ஊர்ப்பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளானார்கள்' என்பதே.
ஜெயரூபனின் (மைக்கல்) `ஏழாவது சொர்கம்´ நாவல் பற்றி பதிவுகளிலும், வேறு தளங்களிலும் பலர் சிலாகித்துள்ளார்கள். புலம்பெயர் நாவல்கள் பற்றிய ஆங்காங்கு காணப்படும் கட்டுரைகளிலும் கூட மறக்காமல் இந்த `ஏழாவது சொர்க்கம்` குறிப்பிடப் பட்டுள்ளது. அதையும் கிரிதரனின் பதிவுகள் தளத்தில் தேடி எடுத்து வாசித்தேன்.
அதை வாசிக்கத் தொடங்கிய பின் நிறுத்த முடியாத அளவுக்கு அந்நாவல் என்னை ஈர்த்திருந்தது. ஜடாயு சிறுகதையை வாசிக்கும் வரை அந்த உலகிலிருந்து மீள முடியாதிருந்தேன்.
அதை இன்னொரு தரம் வாசித்து விட்டு அது பற்றி ஏதும் எழுத முடிந்தால் எழுதுகிறேன்.
சந்திரவதனா
11.09.2016