Thursday, June 30, 2005

ஒரு பேப்பர் 2வது அகவையில்


2வது அகவையில் காலடி வைத்திருக்கும்
ஒரு பேப்பருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

25வது ஒரு பேப்பர் வழமை போலவே ஏதோ ஒரு வகையில் எம்மை அவாப்பட வைக்கும் விதமாக வந்துள்ளது. இம்முறை பலாப்பழம். வாயூறுகிறது. எங்கிருந்து இந்தப் படங்களையெல்லாம் எடுக்கிறார்கள் என்று வியப்போடு எழும் கேள்விக்கான பதிலை தாமாகவே 11வது பக்கத்தில் தந்துள்ளார்கள். படங்களை ஒரு பேப்பருக்குக் கொடுத்துதவிய சுரேன், முத்து, சதா, ஒட்டாவா சுரேஷ்... ஆகியோரைக் கண்டிப்பாகக் பாராட்ட வேண்டும்.

இம்முறை இடம்பெற்ற ஆக்கங்கள் பற்றி அதிகம் எழுதத் தேவையில்லை. எல்லாவற்றையும் இணையத்திலேயே தந்துள்ளார்கள். படித்துப் பாருங்கள்.

வறுமை சரித்திரம் ஆகட்டும். கடன் பழுவிலிருந்து ஏழ்மை நாடுகளுக்கு மீட்சி அளிக்கும் இயக்கம் சம்பந்தமான சுவாரஸ்யமான செய்தி.

23வது பேப்பரில் றெபேக்கா I would never marry a tamil man. என்று எழுதி பலரதும் எதிர்ப்பையும் விசனத்தையும் சந்தித்துள்ளார். போனபேப்பரில் எல்லாளன் யோசித்தார். இம்முறை செந்தூரன் செய்தி கொடுத்துள்ளார்.

செல்வநாயகியின் (எது ஆன்மீகம்?) ஒட்டடை அடிப்பது அவசியம் - பாரதிக்கும் செல்லம்மாவுக்கும் இடையில் நடந்த ஒரு உரையாடல். அருமையான கருத்து. கண்டிப்பாக வாசித்துப் பாருங்கள்.

மர்மக்கதைகளில்தான் வாசித்திருப்பீர்கள். பாவம் எல்லாளன். அவருக்கு நியத்திலேயே நடந்திருக்கிறது. இந்த அவலம் உங்களுக்கும் வராதிருக்க இதை வாசித்துப் பாருங்கள்.

கனடாவிலிருந்து கிஸோக்கண்ணன் வலைப்பூ நட்சத்திரமாக இருந்த போது எழுதிய அந்தச் சுவையான பதிவு சில லூசுகள் சீதனம் வாங்கமாட்டினமாம்.

ஓடுவதற்கு முன் ஒரு நிமிஷம் - ரசிகவ் ஞானியார்.

உளவியல் - முத்து

படம் காட்டுகிறார் நிர்மலா

கரிச்சானின் கோலங்கள்

ஏற்கெனவே இணையங்களில் சிதறிக் கிடந்தவைகளைத் தொகுத்தது மட்டுமென்றில்லாமல் பல புதிய அம்சங்களையும் சேர்த்துள்ளார்கள்.

மிக நல்ல சமூகக் கண்ணோட்டத்துடனான படைப்புக்களைத் தருகின்ற ஈழத்துப் பெண்ணெழுத்தாளர் ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் ஒரு பேப்பருக்காகப் பிரத்தியேகமாகத் தருகின்ற பாதங்கள் பேசுகின்றன. சிறுவயதில் விளையாட்டுப் போல வாசித்த அல்லது சொல்லக் கேட்ட கதைகள் வாழ்வின் வளர்ச்சிக்கும் மனப்பக்குவத்துக்கும் உதவியது பற்றி அழகாகச் சொல்கிறார்.

வைத்தியர் பாலேந்திரன் அவர்களும் மரணதுன்பத்துக்கு கவுன்சிலிங் என்ற உளவியல் சார்ந்த கட்டுரை ஒன்றை ஒரு பேப்பருக்காக எழுதியுள்ளார்.

வன்னியிலிருந்த பொன்.காந்தன் தருகிறார் ஈழக்கிழவனின் பனையடி

கனடாவிலிருந்து பொன்னையா விவேகானந்தனின் கல்லின் கதை

2010 இல் இந்தியா எயிட்சில் - அல்வாசிட்டி விஜய்

திருமணம் - ந.ஹேமராஜ் லண்டன்

அறுவை

சினிமா -1, 2

இன்னும் பல எனது ரசனைக்கு அப்பாற்பட்ட விடயங்களும் உள்ளன.
ஒரு வேளை உங்கள் ரசனைக்குட்பட்டவையாக அவை இருக்கலாம்.

Tuesday, June 28, 2005

உடல் நலன் சார் எச்சரிக்கை. (Diat)


குழைக்காட்டான் வலைப்பதிவாளர்களுக்கு உடல் நலன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டயற் சம்பந்தமாக பேராசிரியை எலிசபெத்தும், பேராசிரியர் வீலரும் சொல்லிய விடயங்களை இளங்காற்றுக்காக எழுதினேன். இந்த வழியையும் ஒருதரம் பின்பற்றித்தான் பாருங்களேன். முழுமையாக உதவாவிட்டாலும் கொஞ்சமாவது உதவலாம். கூடவே ஷண்முகி சொல்வது போல போதுமான அளவு உடற்பயிற்சியும் செய்யுங்கள்.

உண்ணும் உணவில் கலோரிகள் அதிகம் இருப்பினும் அதைப்பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. நீங்கள் விரும்பியதை உங்கள் எண்ணம் போல உண்ணலாம். உங்கள் உடலில் உள்ள ஊளைச் சதைகளைக் குறைக்க வழியுண்டு. இப்படி அடித்துக் கூறுகிறார்கள், அமெரிக்க விஞ்ஞானிகளான பேராசிரியை எலிசபெத்தும், பேராசிரியர் வீலரும்.

வயிறு நிறைவது போல் தோன்றுவது, உட்கொள்ளும் உணவின் அளவைப் பொறுத்ததல்ல, அது மனதைப் பொறுத்தது. உணவை ரசித்துச் சுவைக்காமல், கோப்பையில் உள்ளதை அடித்துப் பதைத்துக் காலி செய்வதையே எமது வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இங்கே கோப்பை காலியானவுடன் அங்கே வயிறு நிரம்பி சாப்பிட்டு முடிந்து விட்டது என்ற பிரமை எற்படும். இத்தன்மையே பலருக்கு உடல் பருமனாவதற்குக் காரணமாயிருக்கிறது.

ஆனால் உணவை ரசித்து உண்ணும் போது, சிறிதளவு உணவை உட்கொண்ட உடனேயே, வயிறு நிரம்பிவிட்டது என்ற சிக்னலை மனது தந்து விடுகிறது. உணவை எப்படி உண்ணவேண்டும் என்ற பயிற்சிகளை இந்த இரண்டு விஞ்ஞானிகளும் அறிவித்திருக்கிறார்கள். அந்தப் பயிற்சிகளுக்குத் தேவையான நேரம், வெறும் நான்கு நிமிடங்கள் மட்டுமே.

(1) உண்பதற்கு ஆயத்தமாகுதல்.
உணவை உட்கொள்ளுமுன் இரண்டு நிமிடங்களை உங்களுக்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள். முதலாவது நிமிடத்தில் உங்கள் மனதை ஒருநிலைப் படுத்துங்கள். இரண்டாவது நிமிடத்தில் அமைதியாக இருந்த படியே காற்றை ஒரு சீராக ஐந்து அல்லது ஆறு தடவைகள் உள்ளிழுத்து, வெளிவிடுங்கள். இப்பொழுது உங்கள் கவனம் உங்கள் முன்னால் உள்ள உணவின் மீது செல்கிறது. சமையலுக்கு நீங்கள் எடுத்துக் கொண்ட நேரத்தை நினைத்துப் பாருங்கள். மேசை விரிப்பிற்குச் செலவிட்ட நேரத்தைக் கவனத்தில் எடுங்கள்.
இந்த நிலையே உணவை உணர்ந்து ரசித்து உண்ணும் தன்மையை உங்களுக்குத் தருகிறது. இங்கேதான் தொடர்ந்து உண்ணவேண்டும் என்ற மனதின் உந்துதல் இல்லாமல் போகின்றது.

(2) சுவை நரம்புகளுக்கான ஓய்வு நேரம்.
உணவுத்தட்டில் இருந்த உணவின் பாதியை உண்டவுடன், உண்ணுவதை நிறுத்தி விடுங்கள். இப்பொழுது முன்னர் போலவே சீராக ஐந்து அல்லது ஆறு தடவைகள் காற்றை உள்ளிழுத்து வெளி விடுங்கள். இந்தக் கட்டத்தில், நீங்கள் எவ்வளவு உணவை உட்கொண்டிருக்கிறீர்கள் என்ற விடயம் உங்கள் மூளைக்கு அறிவிக்கப்படுகிறது. அதே நேரம் உணவின் ருசியை ரசிக்காமல் உண்ணும் உங்களது செயல் இல்லாமல் போகின்றது. இச்சிறிய இடைவெளியின் பின் உணவை உட்கொள்ளத் தொடங்குங்கள். இப்பொழுது உணவின் சுவை, ஆரம்பத்தில் இருந்தது போன்றே உங்களுக்கு இருக்கும். இது உங்கள் வயிறு நிரம்பி விட்டது போன்ற எண்ணத்தையும் கொண்டு வரும்.

(3) வயிறு நிறைந்து விட்டது என்று மூளைக்கு அறிவிக்கும் தன்மை.
உணவை உட்கொண்டு பத்து நிமிடங்களின் பின் மனதை ஒரு நிலைப் படுத்தி ஆறுதல் எடுக்க வேண்டிய நேரம். வயிறு நிறைந்து விட்டது என்ற உணர்வு கூடுதலாக ஏற்படும் நேரமும் இதுவே. எனவே மீண்டும் ஒரு தடவை மனதை ஒரு நிலைப்படுத்தி ஐந்து அல்லது ஆறு தடவைகள் மீண்டும் காற்றினை உள்வாங்கி, வெளிவிடுங்கள். இந்த நிலையில் நீங்கள் உட்கொண்ட உணவு உங்கள் உடலுக்கு என்ன பயன் தருகிறது என்று சிந்தித்துப் பாருங்கள். உங்களது இந்த எண்ணம் உங்கள் மூளையில் பதிவாகிவிடும்.

இப்படி உங்களை ஒருநிலைப் படுத்தி மேற்சொன்ன முறையில் உணவினை உட்கொண்டால் உடல் பருமனாவதற்கு வாய்ப்பேயில்லை, என்று சொல்லும் இவ் விஞ்ஞானிகள் சுலபமான சில வழிகளையும் தருகிறார்கள்.
1 - உண்பதற்குச் சிறிய கோப்பைகளைப் பாவியுங்கள்.
2 - கொஞ்ச உணவுடன் சாப்பாட்டுத்தட்டு நிரம்பி விடுவதால் அதிகமாகச்
சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
3 - மேசையை அழகுபடுத்தி, மெழுகுதிரியை எரியவிட்டுச் சாப்பிடுங்கள். அந்த
ரம்மியமான சூழ்நிலை குறைவாகச் சாப்பிடும் எண்ணங்களைத்
தோற்றுவிக்கும்.
4 - உங்கள் வீட்டை வெளிச்சமாக வைத்திருங்கள்.
ஏனெனில் இருண்ட நேரங்களில்தான் சொக்கிலேற் போன்ற இனிப்பு வகைகளை உண்ணுவதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கும்.

Sunday, June 26, 2005

மரணத்தை உடம்பில் குண்டுகளாய்...


மரணத்தை உடம்பில் குண்டுகளாய் கட்டிக் கொண்டு..
சிரித்த படி கை காட்டி விட்டுப் போய் வெடித்துச் சிதறுபவர்களை நினைத்தாலே... மனசு பதறும். எப்படி..? எப்படி...? என்று உள்ளுக்குள் ஏதோ ஒன்று அலறும்.

திடீரென்று வந்த ஒரு வேகத்தில் தற்கொலை செய்வதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.

தப்புவதற்கான சாத்தியங்கள் குறைவாயினும், தப்புவதற்கான சாத்தியம் இருக்கும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையுடன் ஆயுதமேந்திப் போராடுவதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.

சாவேன் என்று தெரிந்து கொண்டு... அதற்கான ஆயத்தங்களை முற்கூட்டியே செய்து கொண்டு... உடம்பிலே குண்டைக் கட்டிக் கொண்டு... சிரித்துக் கொண்டு... கை காட்டிச் செல்லும்... அந்த மனசுக்குள் என்ன இருக்கும்...?

என்னுள் ஆயிரந்தடவைகள் அல்லது இலட்சந்தடவைகள் அல்லது அதையும் விட அதிகமான தடவைகள் எழுந்து விட்ட கேள்வி இது.


சாகப் போகிறேன் என்று தெரிந்து கொண்டு, குண்டு வெடிப்பதற்கான ஆழியை அழுத்தும், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான அந்தக் கணப்பொழுதில்... 21வயதுகள் மட்டுமே நிரம்பிய பலஸ்தீனப் பெண்ணான Wafa al-Biss

பரிதாபம். சாகவில்லை என்பதற்காகச் சந்தோசப்பட முடியாத பொழுதுகளும் உண்டென்றால் இதுதான். குண்டு வெடிக்கவில்லை. Wafa al-Biss இப்போ சிறையிலிருந்து அழுகிறாள்.

புகைப்படங்கள் - ஈ.பீ.ஏ

Thursday, June 23, 2005

புத்தங்களோடு... - 3


செங்கை ஆழியானின் வாடைக்காற்றுப் போலவே தற்சமயம் ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும், பூவரசு இதழ் ஆசிரியர் இந்துமகேஸ் அவர்கள் எழுதிய ஒரு விலைமகளைக் காதலித்தேன் என்ற கதையும் அப்போது வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்து பலராலும் பேசப் பட்டது.

இப்படியும் இன்னும் சில பல சஞ்சிகைகள் வெளியீடுகள் மூலமும் அறிமுகமான எழுத்துக்களில் டொமினிக் ஜீவா, வ.அ.இராசரத்தினம், முருகபூபதி, செ.யோகநாதன், செங்கை ஆழியான்.. போன்ற இன்னும் பல உடனடியாக நினைவுகளுக்குள் சிக்காத ஈழத்து எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள்.

இவர்களின் கதைகளின் நடுவே பாடசாலையில் மர்மக்கதைகளை வாசிப்பதிலும் நான் பின் நிற்கவில்லை. மர்மக்கதைகளை வாசிப்பதில் அந்தளவான பிரயோசனம் இல்லையென எனது அம்மா ஓரிரு தடவைகள் சொல்லியிருந்தாலும் வாசிக்கக் கூடாது என்ற கண்டிப்பான தடையெதுவும் விதிக்கவில்லை. பாடசாலையில் மர்மக்கதை வாசிக்கக் கூடாது என்பது கண்டிப்பான கட்டளையாக இருந்தது. ஆனாலும் எனது வகுப்பு மாணவிகளில் ஒரு சிலர் மர்மக்கதைப் பிரியர்கள். அவர்களிடமிருந்து எனக்கும் தாராளமாகக் கிடைத்ததால் அவைகளையும் தாராளமாக வாசித்து முடித்தேன்.

மிகச்சிறியதாக இருந்த எனது பாடசாலை வாசிகசாலையும் நான் பத்தாம்வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது புதிதாகப் பெருப்பித்துக் கட்டப் பட்டு அரிய புத்தகங்களைத் தனக்குள் சேர்த்துக் கொண்டது. அதன்பின் நெற்போல், கிளித்தட்டு.. என்று விளையாட்டு மைதானத்தையே சுற்றிச் சுற்றி வந்த நானும், எனது நண்பிகளும் எமது பெரும்பான்மையான நேரத்தை வாசிகசாலைக்குள் முடக்கிக் கொண்டோம். இலக்கியப்புத்தகங்களும் அவைகள் பற்றியதான நண்பிகளுடனான அலசல்களும்... அது ஒரு ஆனந்தமான பொழுது.

ஒரு முறை வாசிகசாலைக்கு வந்த, எங்கள் ஊரிலிருந்து வெளியாகும் ஒரு கையெழுத்துப் பிரதியில் எனது ஆக்கத்துக்கு எனது பெயரிலேயே அதாவது என்னை எனது சகமாணவிகள் கூப்பிடும் "சந்தி" என்ற பெயரிலேயே ஓவியம் வரையப் பட்டிருந்தது. இது பாடசாலையில் பெரியவகுப்பு மாணவிகளிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியம் எனக்கும் ஓரளவு வரும் என்றாலும் பத்திரிகையில் வருமளவுக்கு நான் வரைந்ததில்லை. "யாரடி அது...? யாரப்பா அது...?" என்று கேள்விக்கணைகள் வேறு. அது மூனாதான் என்பது அப்போது ஒரு சிலருக்கு மட்டுந்தான் தெரியும்.

எனது கணவரும் ஒரு வாசிப்புப் பிரியர் என்பதை, திருமணத்தின் பின்தான் முழுமையாக அறிந்து கொண்டேன். முதன்முதலாக எனது புகுந்த வீட்டுக்குப் போனபோது, ஏதோ ஒரு தேவைக்காக அவர்களின் ஒரு அறைக்குள் நுழைந்த போது... அங்கும் புத்தகக் குவியல். முதற்புத்தகமாக என் கண்களுக்குள் தட்டுப் பட்டது சாண்டில்யனின் ராஜமுத்திரை. எனது அம்மா போலவே அவர்களும் கதைகளைச் சேர்த்து புத்தகங்களாகக் கட்டி வைத்திருந்தார்கள். அது எனக்கு மிக இனிமையான ஆச்சரியமாகவே இருந்தது.

எனது கணவரின் குடும்பம் கொப்பிகள் கட்டும் தொழிற்சாலை ஒன்றை வைத்திருந்தார்கள். Binding என்பது அவர்களுக்கு அத்துபடி. அதனால் எல்லாப் புத்தகங்களையும் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் கட்டி வைத்திருந்தார்கள். எங்கள் திருமணம் நடந்து சில மாதங்களில் "Kamala and Brothers" என்றொரு புத்தகக் கடையையும் குடும்பமாக ஆரம்பித்தார்கள். இது தொடரும் காலங்களிலும் சுடச்சுட வரும் புத்தகங்களையெல்லாம் வாசித்துத் தள்ளுவதற்கு ஏதுவாக இருந்தது.

அந்தக் கால கட்டத்தில்தான் சுஜாதாவின் முதற் கதையான அனிதா இளம் மனைவி என்ற கதையை வாசித்தேன். அந்த நேரத்தில் சுஜாதாவின் எழுத்து நடை, கதை எழுதும் உத்தி... எல்லாமே என்னை மிகவும் கவர்ந்திருந்தன. என்னை மட்டுமல்ல, என் கணவரையும்தான். இருவரும் சுஜாதாவின் கதைகளை ஒன்று விடாமல் வாசித்தோம். சுஜாதாவின் கதை எது புத்தகமாக வந்தாலும் எனது கணவர் அதைத் தப்ப விடுவதில்லை. வீட்டுக்குக் கொண்டு வந்து விடுவார். பல இரவுகளில் கட்டிலின் ஒரு நுனியில் எனது கணவரும், மறுநுனியில் நானுமாக இருந்து நித்திரையை மறந்து சுஜாதாவின் கதைகளை நேரம் போவதே தெரியாமல் ஒரே மூச்சில் வாசித்து முடித்திருக்கிறோம். நான் நினைக்கிறேன், 1990க்கு முன் வெளியான சுஜாதாவின் அத்தனை கதைகளையும் நான் வாசித்திருக்கிறேன் என்று.

(தொடரும்)

புத்தங்களோடு... - 1
புத்தங்களோடு... - 2

Tuesday, June 21, 2005

சொக்கப்பான்Photo-Thumilan

உரிலே கார்த்திகை விளக்கீடு அன்று கோயில்களின் முன்னால் தென்னோலை, பனையோலை... போன்றவற்றை ஒரு கூடு போலக் குவித்து, எரித்துக் கொண்டாடும் சொக்கப்பான்(சொக்கப்பனை) என்னும் நிகழ்வு இங்கு ஜேர்மனியிலும் இன்று நடைபெறுகிறது. இதற்கு இவர்கள் வைத்திருக்கும் பெயரோ Sonnwendfest. (midsummer festival)

நாங்கள் கார்த்திகையில் கொண்டாடுகிறோம். இவர்கள் கோடை தொடங்கும் இன்றைய நாளில், அதாவது ஒவ்வொரு June21 இலும் கொண்டாடுகிறார்கள்.

Sunday, June 19, 2005

வடலி

மோப்பக் குழையும் அனிச்சம் - முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

பிள்ளைகளின் மனமோ அனிச்சம் பூவை விடவும் மென்மையானது. பெற்றோரின் முகம் கோணினாலே வாடிப் போய் விடக் கூடியது. பெற்றோர்கள் பிள்ளைகள் மீது செலுத்தும் அதி கூடிய கட்டுப்பாடு குடும்பத்தின் பொருளாதாரநிலை, தாயின் மனநிலை, பிள்ளைகளுடனான தந்தையின் நெருக்கமின்மை... போன்றவை குழந்தைகள் வன்முறையாளர்களாக, பொதுநல நோக்கற்றவர்களாக, நற்பண்புகளை இழந்தவர்களாக வளர்வதற்கான காரணிகளாக அமைகின்றன என்பது கனேடிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கைகளில் தெரிய வந்துள்ளது. பிள்ளைகள் 100வீதம் சரியானவர்களாக, தாங்கள் நினைப்பது போலானவர்களாக வளர வேண்டும் என நினைத்து, பல பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அளவுக்கதிமான கட்டுப்பாட்டை மிகக் கடுமையாகத் திணிக்கிறார்கள். இது பிள்ளைகளை உளரீதியாக எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். த.சிவபாலு(எம்.ஏ) அவர்கள் எழுதிய இது சம்பந்தமான கட்டுரை ஒன்று யூன் மாத வடலியில் இடம் பெற்றுள்ளது. பெற்றோர்கள் வாசித்துப் பயன் பெறுங்கள்.

இதை விட வைத்திய கலாநிதி ஆ.விசாகரெத்தினம் எழுதும் ஆய்வுக் கட்டுரை(சீவ உற்பத்தி) சுவாரஸ்யமான தகவல்களைத் தாங்கி வந்துள்ளது. விந்து பற்றிய இன்றைய விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்களை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருமூலர் சொல்லி வைத்திருக்கின்றார் என்ற செய்தி அதில் இடம் பெற்றுள்ளது. ஆச்சரியந்தான்.

இவைகளோடு இன்னும் பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. வடலியை இணையத்தில் காணமுடியாதது பெருங்குறையே!

வடலியிலிருந்து கிடைத்த தகவல்களில் சில
நீரைக்காணாத வேர்கள் என்னும் திரைப்படம் வைகாசிமாதம் 22ம் திகதி விம்பிள்டன் பொல்கா அரங்கில் காண்பிக்கப் பட்டுள்ளது.வளர்ந்து வரும் இளங்கவிஞர் இரா.திலீபன் அவர்களின் புகழில்லாப் புகலிடம், ஈரவிழிகள், சொல் ஓவியம் என்ற மூன்று நூல்கள் கடந்த சித்திரையில் லண்டன் ஈலிங் துர்க்கையம்மன் ஆலயத்தில் வெளியிடப் பட்டன.

Thursday, June 16, 2005

நம்பமுடியவில்லை


காஞ்சி பிலிம்ஸ்ஸின் பதிவிலிருந்த கற்பழித்த மாமனாருக்கே மருமகளை மனைவி ஆக்கி கிராம பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. என்பதைப் படித்தேன். நம்ப முடியவில்லை. இப்படியும் இந்த 21ம் நூற்றாண்டில் மூடத்தனமான தீர்ப்பு வழங்குவார்களா?

சம்பவத்தன்று நூர் முகமது வெளியே சென்றிருந்தார். அப்போது நூர் முகமதுவின் தந்தை அலி முகமது அவரை(இம்ரானா) கற்பழித்து விட்டாராம்.கணவன் வீடு திரும்பியதும் அவரிடம் நடந்ததை சொல்லியிருக்கிறார் இம்ரானா. ஆனால் கணவன் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.
இவர் ஒரு கணவனா? எந்தக் கணவனாலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று இது. இதை எப்படி அவர் அலட்சியப் படுத்தினார். இப்படியும் கணவன்மார்கள் இருப்பார்களா?

பஞ்சாயத்தினர் எப்போது அலிமுகமது இம்ரானாவை கற்பழித்துவிட்டாரோ அது முதல் அவர் நூர் முகமதுவின் மனைவி என்ற அந்தஸ்தை இழந்துவிட்டார். எனவே 7 மாதம் 10 நாள் அவர் தனித்து இருந்து சுத்தமானவராக மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அலிமுகமதுவை அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தனர்.
நல்ல தீர்ப்பு! அந்த ஆண்களின் மனசெல்லாம் அழுக்கு. இம்ரானா சுத்தமாக வேண்டுமா?

நம்பமுடியவில்லை.

காஞ்சிபிலிம்ஸ்ஸின் பதிவில் இதற்கான எனது கருத்தை எழுத முடியவில்லை. அதனால்தான் இங்கு எழுதியுள்ளேன்.

Monday, June 13, 2005

புத்தகங்களோடு...2


ரா.சு நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் கல்கியில் தொடராக வந்தது. அம்மா சேர்த்து புத்தகமாகக் கட்டி வைத்திருந்தா. அக்கதையை நான் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்.. கதைகள் போல இருதடவைகள் வாசித்தேன்.

இந்தப் பெரிய பெரிய அரச கதைகளை நான் வாசிக்கத் தொடங்குவதற்கு முன்னமே 60வதுகளின் இறுதிப் பகுதியிலோ, அல்லது 70வதுகளின் ஆரம்பத்திலோ தெரியவில்லை. எங்கள் வீட்டில் தமிழ்வாணனின் கல்கண்டு அறிமுகமாகியது. அப்போதுதான் அது வெளிவரத் தொடங்கியதோ அல்லது அம்மாவுக்கு அப்படியொரு சஞ்சிகை வெளிவருவது அப்போதுதான் தெரிய வந்ததோ என்பது எனக்குத் தெரியாத விடயம்.

கல்கண்டு எங்கள் வீட்டில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதில் வரும் தொடர்கதைகளை வாசித்து விட்டு, அடுத்த கிழமைக்காகக் காத்திருப்பது சிறுவர்களான எங்களுக்கு யுகங்களைக் கடப்பது போலிருந்தது. அண்ணன், நான், பெரியதம்பி மூவருமே போட்டி போட்டு வாசித்தோம். யார் முதலில் என்று சண்டை பிடித்தோம். விலக்குத் தீர்ப்பதே அம்மாவுக்குப் பெரும் பாடாய் இருந்தது. துப்பறியும் சங்கர்லால், நம்பூதிரி.. போன்ற கல்கண்டுக் கதைகளின் நாயகர்கள், வில்லர்கள் எல்லோருமே எங்களுடன் மிகவும் ஐக்கியமாகி விட்டார்கள். குளிக்கும் போதும், சாப்பிடும் போதும் அவர்கள் பற்றிப் பேசினோம். கதைகளை அலசினோம். வில்லன் வெளிக்கேற்றில் வரும் போதே, உள்ளிருக்கும் அறையிலிருந்து சங்கர்லால் அவர் வருகையைக் கண்டு பிடிப்பதைப் பற்றி நிறையக் கதைத்தோம். வியந்தோம். அப்போது தமிழ்வாணன் எங்கள் வீட்டில் பிரியமாகப் பேசப்படும் ஒருவராக இருந்தார். கல்கண்டில் வரும் துணுக்குச் செய்திகளைக் கூட நாங்கள் விட்டு வைப்பதில்லை. நாங்கள் மட்டுமென்ன அம்மாவும் கல்கண்டுக்காய் காத்திருப்பா.

அப்பாச்சி வீட்டுக்குப் போனால், அங்கே எனது சித்தப்பாமாரின் கேத்திரகணிதம், தூயகணிதப் புத்தகங்களுக்கிடையே பொம்மை அம்புலிமாமா.. போன்ற புத்தகங்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். எனக்கு அம்புலிமாமாக் கதைகளில் அவ்வளவான ஈடுபாடு இல்லாவிட்டாலும் "தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினான்" என்ற சித்தப்பாவின் வாய்ப்பாட்டைக் கேட்டுக் கொண்டு அவைகளை வாசித்து முடித்து விடுவேன். குட்டிச்சித்தப்பா ஒரு எம்.ஜி.ஆர் பைத்தியம். வீடு முழுக்க அது முத்திரை குத்தப் பட்டிருக்கும். ஆனாலும் சினிமாப் படங்களைப் பார்த்த அளவுக்கு சினிமாச்செய்திகளை வாசிப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. பொம்மையில் உள்ள படங்களைப் பார்த்து விட்டு, ஏதாவது சினிமாப்பாடல்கள் இருந்தால் அவைகளையும் மனப்பாடம் செய்து விடுவேன். மேற்கொண்டு சினிமா சம்பந்தமாக நான் வாசிப்பதில்லை.

இதை விட எங்கள் வீட்டிலும் சரி, அப்பாச்சி வீட்டிலும் சரி ரொபின்சன் குரூசோ சிந்துபாத்.. போன்ற ஆங்கிலக் கதைப்புத்தகங்கள் நிறைய இருக்கும்.

சுந்தரியும் ஏழு சித்திரக்குள்ளர்களும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மாயவிளக்கு, சிந்திரில்லா... போன்ற கதைப்புத்தகங்கள் முதலில் ஆங்கிலத்திலேயே கிடைத்தன. பின்னர் அவை பாடசாலையிலும் தமிழில் சொல்லப் பட்டன.

பஞ்சதந்திரக்கதைகள் பெரிய புத்தகமாக வீட்டில் இருந்தது. அக்கதைகளை நான் வாசிக்க முன்னரே அப்பா ஒரு புறமும், அம்மா இன்னொரு புறமுமாகச் சொல்லி விட்டார்கள். ஆனாலும் மீண்டும் அவைகளை வாசித்தேன்.

ஐந்தாம் ஆறாம் வகுப்புகளில் திருக்குறள் மனனப்போட்டி, எழுத்துப் போட்டி இரணடிலுமே பரிசில்களைப் பெற்றுக் கொள்ளுமளவுக்கு திருக்குறளை முழுமையாக மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.

மகாபாரதம், இராமாயணம் இரண்டையுமே எனது அப்பாவிடம்தான் வாசித்தேன். அவ்வப்போது துண்டுதுண்டுகளாக எங்காவது தட்டுப் பட்டவைகளை புத்தகம் வழியே வாசித்திருந்தாலும், முழுமையாக அக்கதைகளை அப்பாதான் கொஞ்சங் கொஞ்சமாகச் சொல்லி முடித்தார். கூடவே ஊரில் நடைபெறும் சப்பறத் திருவிழாவிலோ, அல்லது சிவராத்திரி இரவுகளிலோ நடைபெறும் கதாகலாட்சேபம், வில்லுப்பாட்டு போன்றவைகளுக்கு என்னையும் எனது சகோதரர்களையும் அழைத்துச் சென்று மகாபாரத, இராமாயணக் கதைகளை மனதில் பதிய வைத்தார். அப்பா எப்போதுமே இராவணன் பக்கம்தான்.

இது ஒரு புறம் தன்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபுறத்தில் பாடசாலை வாழ்க்கையோடு கதைப்புத்தகங்களும் உலாவின. பாடசாலையில் கதைப் புத்தகங்கள் வாசிப்பதற்கு ஆசிரியர்களின் அனுமதி என்பது இருந்ததில்லை. அளவுக்கதிகமான எந்தக் கட்டுப்பாடுகளும் யாரையும் கட்டிப் போடுவதில்லைத்தானே! எல்லா மாணவர்களையும் போலவே நானும் களவாகக் கதைப்புத்தகங்களைத் தாராளமாக வாசித்தேன்.

பண்டமாற்றுப் போல மாணவிகள் மாற்றி மாற்றிப் படித்த புத்தகங்களில் அதிகப் படியான எண்ணிக்கைக்குரியவை இந்தியாவிலிருந்து வரும் இந்திய எழுத்தாளர்களின் படைப்புக்களைக் கொண்ட ராணிமுத்து வெளியீடுகளும் எமது தாய்மண்ணில் வெளியாகும் தாயக எழுத்தாளர்களின் படைப்புக்களைக் கொண்ட வீரகேசரி மித்ரன், வெளியீடுகளுமே. இந்த வெளியீடுகளினூடு நான் வாசித்துத் தள்ளி விட்டவை ஏராளம். இப்படி ஒரு பிரசுரமாகத்தான் செங்கைஆழியானின் வாடைக்காற்றும் என் கைக்கு வந்தது.

- தொடரும் -

சந்திரவதனா
13.6.2005

Friday, June 10, 2005

புத்தகங்களோடு பிறந்தேன், வளர்ந்தேன், வாழ்ந்தேன்


புத்தகங்கள், வாசிப்பு... என்னும் போது என் முன்னே முதலில் வந்து நிற்பது எனது அப்பாதான். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து புத்தகங்கள் இல்லாமல் எனது அப்பா பயணத்தால் வந்ததில்லை. சொக்கிளேட்ஸ்... தேங்காய்ப்பூரான்... என்பதிலிருந்து அவர் கடமையிலிருக்கும் நகரத்தில் என்னென்ன பழங்கள் மலிவோ அத்தனையையும் கட்டிக் காவிக்கொண்டு வரும் அப்பாவின் சூட்கேசுக்குள் கண்டிப்பாக சில புத்தகங்களும் இருக்கும். அவைகளில் எமது வயதுக்கேற்ப சிறிய, பெரிய புத்தகங்களும் அம்மாவுக்கேற்ப புத்தகங்களும் இருக்கும்.

கடனே என்று வேண்டிக் கொண்டு வருவதோடு நின்று விடாமல் மடியில் இருத்தி வைத்து அப்புத்தகங்களில் உள்ளவைகளை வாசித்து கூடவே அபிநயித்து அவர் சொல்லும் அழகே தனி. சின்னவயதில் அப்படி நான் கேட்ட ஒவ்வொரு கதையும் இன்னும் என்னுள் பதிந்து போயிருக்கின்றன.

நளன்தமயந்தி கதையை அப்பா வாசித்துச் சொல்லும் போது நளனின் சமையற்பாகத்தையும், தமயந்தியின் அழகையும் மிகவும் வர்ணித்துச் சொன்னார். அதை நான் ரசித்து எனக்குள் பதித்து வைத்திருந்தேன். பின்னர் ஒரு முறை ரவிவர்மா தமயந்தியையும், நளனையும் ஓவியமாக வரைந்திருந்ததைப் பார்த்த போது எனக்குள் பதிந்திருந்த அந்த அழகு, அவர் வரைந்த தமயந்தியில் இல்லாததால் ரவிவர்மாவுக்கு ஓவியம் வரையத் தெரியாதோ என்று யோசித்தேன்.

இதே போல இரணியன், பரதன்... போன்ற சரித்திரக்கதைகள் எல்லாமே எனது சின்ன வயதிலேயே எனது அப்பாவால் வாசித்துக் காட்டப்பட்டு என்னுள் பதிந்து போயிருப்பவை.

அப்பா வரும் போது மட்டுந்தான் எமக்கு புத்தகங்களும் பத்திரிகைகளும் கொண்டு வருவாரென்றில்லை. அவர் இலங்கையின் எந்த மூலையில் இருந்தாலும் கிழமையில் ஒரு நாளைக்கு அஞ்சலில் ஒரு கட்டுப் பத்திரிகையை எமக்கு அனுப்பி வைப்பார். அவைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பிரத்தியேகமாக வெளிவருகின்ற சிந்தாமணி, ராதா.. வில் தொடங்கி Sunday Observer வரை இருக்கும்.

அப்பாவுக்கு மட்டுந்தான் வாசிப்பு ஆர்வம் என்றிருந்திருந்தால் எப்படியிருந்திருக்குமோ தெரியாது. எனது அம்மாவும் அதேதான். அம்மாவுக்கு வீட்டில் நிறைய வேலையிருக்கும். ஆனாலும் அப்பா அனுப்பும்.., கொண்டு வரும் எல்லாப் பத்திரிகைகளையும், புத்தகங்களையும் வாசித்து முடித்து விடுவா. அதை விட ஆனந்தவிகடன், குமுதம், கல்கி.. போன்ற எல்லா சஞ்சிகைகளையும் வாரம் தவறாமல் வாங்கி வாசிப்பா. அவவின் பெயர் போட்ட படியே ரவுண் கடையொன்றில்(பெயர் ஞாபகமில்லை) இந்தப் புத்தகங்கள் காத்திருக்கும். சித்தப்பா யாராவது போய் வாங்கிக் கொண்டு வருவார்கள். வாசித்தவைகளை எறிந்து விடாமல் கவனமாக வைத்து... கதைகளை, கட்டுரைகளை என்று கிழித்து, சேர்த்து, கட்டி.. புத்தகங்களாக்கி விடுவா.

எங்கள் ஊரில் எங்கள் வீடும் வாசிகசாலை போலத்தான். பலர் வந்து இரவல் வாங்கிப் போய் வாசித்து விட்டுக் கொணர்ந்து தருவார்கள். அம்மாவுக்குத் தாராள மனசு. யார் கேட்டாலும் மறுப்பதில்லை. இரவல் கொடுத்து விடுவா.

இப்படியே நான் புத்தகங்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகளுக்கு நடுவிலேயே பிறந்தேன். வளர்ந்தேன். வாழ்ந்தேன்.

ஊரில் எனது வீட்டில் ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன.
அவைகளில் எனக்கு மிகவும் பிடித்த நான் வாசித்த புத்தகங்கள்

கல்கியின்
அலையோசை
பார்த்திபன் கனவு
பொன்னியின் செல்வன்
சிவகாமியின் சபதம்
கள்வனின் காதலி
மகுடபதி
தியாகபூமி

சாண்டில்யனின்
மலைவாசல்
ஜவனராணி
கடற்புறா
ஜீவபூமி
ஜலதீபம்
ராஜமுத்திரை

அகிலனின்
சித்திரப்பாவை
பாவைவிளக்கு
வேங்கையின் மைந்தன்

தி.ஜானகிராமனின்
மோகமுள்

டாக்டர்.மு.வரதராஜனின்
அகல் விளக்கு

லக்சுமியின்
மிதுலா விலாஸ்
காஞ்சனையின் கனவு
பெண்மனம்
அடுத்த வீடு
அரக்கு மாளிகை
இலட்சியவாதி
சூரியகாந்தம்

சிவசங்கரியின்
பாலங்கள்
47நாட்கள்

பாரதியாரின் கவிதைகள்
பாரதிதாசனின் கவிதைகள்


இன்னும்
முள்ளும் மலரும்(கதை தந்த பாதிப்பு படமாக வந்த போது இருக்கவில்லை.)
குறிஞ்சி மலர்
கயல்விழி

- தொடரும் -

எனக்குப் பிடித்த பல கதைகள் இன்னும் என் மனசுக்குள் உள்ளன. ஆனால் கதையின் தலைப்பு மட்டும் ஞாபகத்தில் இல்லை. சுரேஸ்கண்ணன் இது தம்பட்டம் அடிக்கும் வேலை என்பது போலச் சொன்னார். என்னை பாலாவும் ஜெயந்தியும் அழைத்த போது நான் அப்படி நினைக்கவில்லை. மாறாக சந்தோசப் பட்டேன். இவைகளையெல்லாம் பட்டியலிட வேண்டும் என்று எனக்கு வெகுநாளாக ஆசை. சில ஆசைகள், இப்படியே மனசோடு நின்று விடுகின்றன. செயற்படுத்தப் படுவதில்லை. இந்தப் புத்தகச் சங்கிலி விளையாட்டு எனது ஆசையை செயலாக்க எனக்கு ஒரு உந்துதலாகவே அமைந்துள்ளது. அதனால் மீண்டும் ஒரு முறை ஜெயந்திக்கும் பாலாவுக்கும் நன்றி கூறிக் கொண்டு தொடர்கிறேன்.

ஊரிலே புத்தககங்களோடே வாழ்ந்த நான் ஜேர்மனிக்கு வந்த பின் பத்து வருடங்களாக புத்தகம் என்பதே கிடைக்காது பெரிதும் தவித்தேன். அப்போது எரிமலை, ஈழநாடு பத்திரிகைகள் மட்டுமே இங்கு புலத்தில் கிடைத்தன. இந்தியாவிலிருந்து ஆனந்தவிகடனையும், பிள்ளைகளுக்காக அம்புலிமாமா, chandamama மூன்றையும் சந்தா கட்டி எடுத்துப் படித்தோம். தற்போது என்னிடமுள்ள புத்தகங்கள் 300க்குள்தான் இருக்கும். அவைகளிலும் தமிழ்புத்தகங்கள் மிகச் சொற்பமே. மற்றவை ஜேர்மனிய, ஆங்கிலப் புத்தகங்களே.

தொடரும்.

Thursday, June 09, 2005

புத்தக விளையாட்டு


ஜெயந்தியும் பாலாவும் என்னையும் புத்தக விளையாட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். நன்றி ஜெயந்தி. நன்றி பாலா.

இன்று எழுத முடியும் போலத் தெரியவில்லை. நேரம் பிரச்சனையாயிருக்கிறது. தங்கமணி போல அழகாக எழுத முடியாவிட்டாலும் எனக்குப் பிடித்த புத்தகங்களையாவது நாளை வந்து எழுதுகிறேன்.

அது வரைக்கும் சிறிதாய்...

ஏமாற்றம்
ஒவ்வொரு பக்கமாகத்தானே
புரட்டிப் புரட்டி உன்னைப் படித்தேன்
எப்படி மறைத்தாய்
உனது அந்தப் பக்கங்களை...?

Monday, June 06, 2005

காகம் இருக்க பனம்பழம் வீழ்ந்ததா - 2


அப்பா மட்டும் அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாக விறாந்தையில் நடந்த படி புறுபுறுத்துக் கொண்டிருந்தார். அவர் புறுபுறுப்பில் நியாயமிருந்தது. எனது எதிர்பர்ர்ப்பு மாமாவின் பிள்ளைகளுடனான சந்திப்பும் அதன் பின் தொடரப் போகும் பம்பலைப் பற்றியுமென்றால், அப்பாவின் கோபமோ தான் சொல்லச் சொல்லக் கேளாமல், தன் தங்கையைக் கொழும்புக்குக் கூட்டிப் போன மாமாவின் மேல் இருந்தது.

"எத்தினை தரம் சொன்னனான். கொழும்பு வாழ்க்கை வேண்டாம். நீ போய் வேலையைச் செய்திட்டு லீவுக்கு வா. தங்கச்சியும் பிள்ளையளும் இங்கை இருக்கட்டும் எண்டு. கேட்டவனே?! 58 இலை வேண்டின அடி அவனுக்குக் காணாது. இப்ப என்ரை தங்கச்சியையும் அவதிப்பட வைச்சிட்டான்." இன்று முழுக்க அப்பாவின் புறுபுறுப்பு இப்படித்தான் தொடர்கிறது.

அம்மாவுக்குக் கூட ஆத்தியடிச் சனம் எல்லாம் கொழும்பில் ஒரு வீடு, இங்கை ஆத்தியடியில் ஒரு வீடு என்று வைத்துக் கொண்டு, கொழும்பில் போய் இருந்து பிள்ளைகளை கொழும்புப் பாடசாலைகளில் படிக்க வைப்பதைப் பார்த்து நாங்களும் அப்பிடிச் செய்தாலென்ன என்ற நப்பாசை இடைக்கிடை வரும். அப்பாவோ "இஞ்சை பாரும் உந்த ஆசையை மட்டும் விட்டுத் தள்ளும். எங்கடை இடம் இதுதான். கொழும்பிலை இருக்கிற ஆக்கள் பாரும், ஒரு நாளைக்கு நல்லா வேண்டிக் கட்டிக் கொண்டு ஓடி வருவினம்." என்று ஒரேயடியாச் சொல்லிவிடுவார். தான் கொழும்பில் வேலையாய் இருக்கும் காலங்களிலும் பாடசாலை விடுமுறைக்கு மட்டும் எங்களை அங்கு கூட்டிப் போவாரே தவிர எந்தக் கட்டத்திலும் எங்களை அங்கு நிரந்தரமாக இருக்க விடமாட்டார்.

இப்படியிருக்கையில் தான் யாழ்ப்பாண அரச மருத்துவமனையில் கடமையிலிருந்த மாமாவுக்கு 1971 இல் தெகிவளை மருத்துவமனைக்கு மாற்றலாகியது. மாமா தனியப் போக விரும்பாது மாமி பிள்ளைகளையும் தன்னோடு அழைத்துப் போய் விடத் தீர்மானித்த போதுதான் அப்பா எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தார். மாமா கேட்க வில்லை. வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு தெகிவளைக்கு மாமி பிள்ளைகளுடன் போய் விட்டார்.

நினைவு தெரிந்த நாளிலிருந்து அல்லும் பகலும் பழகி வளர்ந்த மச்சாள் சுகி, மச்சான் பாபு எல்லோரும் போய் விட்டதில் எனக்கும் கவலைதான். அவர்கள் இன்று வரப்போகிறார்கள். சும்மா இல்லை. அடி வேண்டிக் கொண்டு வருகிறார்கள். சிங்களக் காடையர்கள், இவர்களை அடித்தது மட்டுமில்லாமல் வீட்டிலும் எல்லாவற்றையும் உடைத்துத் தள்ளிப் போட்டார்களாம். எழுபத்தி ஏழுக் கலவரம் தெரியும்தானே! அவதிப் பட்டு, அவலப் பட்டு எங்கேயோ ஒழித்து இருந்து தப்பிப் பிழைத்து வருகிறார்கள்.

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. பல தடவைகள் மதிலால் எட்டிப் பார்த்து விட்டேன். ஆத்தியடிச் சந்தியில் யாராவது பயணத்தால் வருவது தெரிகிறதா என்று.

கடைசியாக அவர்கள் ஒரு பாடசாலை லீவுக்கு வந்து போய் ஒரு வருஷத்துக்கு மேலாகி விட்டது. அவர்கள் நின்ற அந்த ஒரு மாதமும் நல்ல பம்பல். விளையாட்டு, சிரிப்பு, கேலி, பந்தயம் என்று ஒரே கும்மாளம். அவர்கள் போறதுக்கு முதல் நாள் அவர்களுக்குக் கொடுத்து விட என்று அம்மா குசினிக்குள் பலகாரங்கள் செய்து கொண்டிருந்தா. அம்மம்மாவும் மாமியும், அம்மாவுக்கு ஒத்தாசையாக இருக்க அப்பாவும், மாமாவும் கூட இருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

பெரியவர்கள் குசினிக்குள் கலகலக்க, நாங்கள் பிள்ளைகள் வீட்டின் முன் பக்கம் மல்லிகைப் பந்தலின் கீழிருந்து விளையாடிக் கொண்டிருந்தோம். எங்கள் விளையாட்டுக்கள் லூடோ, கரம் என்று துவங்கி அது அலுக்க கெந்திப் பிடித்து விளையாடி, அதுவும் களைக்க ஆளாளாக படிகளிலும் விறாந்தை நுனிகளிலுமாகக் குந்தி விட்டோம். வேர்த்து ஊத்தி சட்டைகள் தெப்பமாக நனைந்திருக்க ஆளாளுக்கு ஏதேதோவெல்லாம் கதைத்தோம். எங்கள் கதைகள் எங்கெல்லாமோ சுற்றி கடைசியில் கடவுள் நம்பிக்கை பற்றிய கதையில் வந்து நின்றது. கடவுள் இருக்கிறார் என்றும், இல்லை என்றும் பல விதமாக வாதம் பண்ணினோம்.

மாமாவின் மகன் பாபு அடிச்சு வைச்சுச் சொல்லி விட்டான். "கடவுளும் இல்லை. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. நான் உதுகளை ஒரு நாளும் நம்பவே மாட்டன்." என்று.

என்னுடைய தம்பி பாலுவால் அவனுடைய நாஸ்திகத் தனத்தை ஆமோதிக்க முடியவில்லை. "என்ன நீ இப்பிடிச் சொல்லுறாய். எங்கடை ஆத்தியடிப் பிள்ளையாரிலை கூட உனக்கு நம்பிக்கையில்லையோ?!" ஆச்சரியமாகக் கேட்டான்.

பாபு "இல்லை" என்று திடமாகப் பதிலளித்தான்.

"உனக்கு உள்ளுக்கை நம்பிக்கை இருக்கு . வெளீலை சும்மா லெவலுக்கு கடவுள் இல்லை எண்டுறாய்." என்று மறுதலித்தான் பாலு.

"எனக்கு நம்பிக்கை இல்லையெண்டுறன். கடவுளே இல்லாத போது ஏன் நான் நம்போணும்?." பாபு அறுத்துறுத்துச் சொன்னான்.

இப்படியே பாலுவுக்கும், பாபுவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டு பந்தயம் வரை வந்து விட்டது. பாபு தனக்கு கடவுளில் நம்பிக்கை இல்லை என்பதை நிரூபிக்க, ஆத்தியடிப் பிள்ளையார் கோவிலுக்குப் போய் பிள்ளையாரின் மேல் துப்பிவிட்டு வருவதாகத் தீர்மானிக்கப் பட்டு, எங்கள் சம்பாஷணை இடை நிறுத்தப்பட்டுது.

அவர்கள் பிள்ளையார் கோவில் வரை போக ஆயத்தமானார்கள். எனக்கும் போக ஆசைதான். நான் வளர்ந்த பெண் பிள்ளை என்பதால் பாடசாலை தவிர்ந்த நேரத்தில் அம்மாவைக் கேளாது வெளியில் போகத் துணிவு வரவில்லை. எனது சின்னத் தம்பிமாரும், தங்கைமாரும் மட்டும் அவர்களுடன் சேர்ந்து போனார்கள். நான் கேற் வாசலில் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.

எனது அரை மணி நேரக் காத்திருப்பின் பின் அவர்கள் திரும்பி வந்தார்கள். என்னுடைய முழு நம்பிக்கையும் பாபு சும்மா சொல்லியிருப்பான். ஆனால் கடைசி மட்டும் பிள்ளையாரின் மேல் துப்பியிருக்க மாட்டான் என்பதே.

அந்த நம்பிக்கையுடன் சிரித்த படி "என்ன பாலு...! பந்தயத்திலை பாபுப்பிள்ளை தோத்திட்டாரே?" கேட்டேன்.

"இல்லை நான் தான் தோத்திட்டன்." பாலுவின் குரலில் பந்தயக் காசு கொடுக்க வேண்டுமே என்ற கவலை தெரிந்தது.

"உண்மையா பிள்ளையாருக்கு மேலை துப்பினவனே?" நம்ப முடியாததால் சந்தேகத்துடன் மீண்டும் நான் கேட்டேன்.

"ம்..கும்.. கதவு பூட்டியிருந்தது. அதாலை பிள்ளையாருக்கு நேரே இருக்கிற தலை வாசல் கதவை காலாலை உதைஞ்சு போட்டு, பிறகு கதவிலை துப்பியும் போட்டு வந்தவன்." பாலு கொஞ்சம் அசாதாரணமாகத்தான் சொன்னான்.

"நான் நம்பமாட்டன். எந்தக் காலாலை உதைஞ்சவன்?" என்னிடம் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற தீர்க்கமான எந்த முடிவும் இல்லையென்றாலும், கடவுள் இல்லையென்று சொல்லி எங்கள் ஊர் பிள்ளையாரை அவமதிக்க ஒரு போதும் சம்மதமில்லை. அதனால்தானோ என்னவோ என் குரலும் அசாதாராணமாகவே ஒலித்தது.

பாபு வலது காலைத்தூக்கி எங்கள் மதிலை உதைந்து காட்டி, "இப்பிடித்தான் இந்தக் காலாலைதான் உதைஞ்சனான் மச்சாள்." என்றான்.

எனக்கு நம்ப முடியவில்லை. தம்பி பாலு பந்தயக்காசு கொடுக்க வேண்டுமென்று அம்மாவிடம் ஒரு ரூபாவுக்குக் கெஞ்சிய போது கூட இரண்டு பேரும் நடிக்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தேன்.

"உண்மையா உதைஞ்சவன் அக்கா." தம்பி என்ரை கையில் அடித்து சத்தியம் பண்ணிய போது தான் நம்பினேன். அதற்குப் பிறகு அன்றைய பொழுது எனக்கு என்னவோ போலவே இருந்தது.

அடுத்த நாள் மாமா குடும்பம் பயணமாகி விட்டது. வழமை போல் அவர்கள் பயணமான அன்றைய நாள், எங்கள் வீடு வெறிச்சோடிப் போனது போல் அமைதியாக இருந்தது. அடுத்த நாள் மீண்டும் நானும் தம்பியும் தனியாக கரம், அது, இது... என்று விளையாடத் தொடங்கி விட்டோம். ஆனால் பாபு செய்த வேலையை மட்டும் மறக்காமல் அடிக்கடி நினைத்தோம் அவன் அப்பிடிச் செய்திருக்கக் கூடாது என்று பலமுறை கதைத்தோம்.

இன்றும் அந்த நினைவு என் மனத்திரையில் பல முறை முகம் காட்டி விட்டது. பாபுவின் பிடிவாதமான முகத்தை நினைத்த படியே மீண்டும் மதிலால் எட்டிப் பார்த்தேன்.

"வாவ்...!" மக்கள் வெள்ளம். எனக்குள் சந்தோஷம் மின்னலிட்டது. அப்பாவின் முகத்திலும் சந்தோஷம். ஆனால் அது ஒரு இனம்புரியாத கோபமும் சோகமும் கலந்த சந்தோஷம்.

நான் ஓடிப்போய் கேற்றைத் திறந்து, மனித வெள்ளத்தை முழுமையாகப் பார்த்தேன். எல்லோர் முகங்களிலும் களைப்பு. நடைகளில் தளர்வு. எல்லோரும் எமது ஊர்க்காரர்கள்தான். அப்பா விழுந்து விழுந்து எல்லோரையும் விசாரித்தார்.

"அநுராதபுரம் மாதிரி கொழும்பிலை அடி விழேல்லைத் தம்பி. சில சில இடங்களிலைதான் சிங்களக் காடையங்கள் இருக்கிறாங்களே. அவங்கள் தங்கடை வேலையைக் காட்டிப் போட்டாங்கள். எனக்குத்தான் காங்கேசன் துறையிலை வந்து இறங்கு மட்டும் ஒரே சத்தி. எனக்கு இந்தக் கப்பல் பயணம் ஒத்து வராது தம்பி." சுந்தரிப்பாட்டி இழுத்து இழுத்து சொல்லிக் கொண்டு போனா.

"அப்ப தங்கச்சியவையளும் உங்கடை கப்பலிலேயே வந்தவை?"
அப்பா அவசரமாய் கேட்டார்.

"ஓமடா தம்பி. அங்கை பின்னுக்குப் பார். வந்து கொண்டிருப்பினம்."
சுந்தரிப்பாட்டி சொல்லி வாய் மூடவில்லை. தூரத்தில் வரும் மாமா என் கண்களுக்குள் அகப்பட்டு விட்டார். பக்கத்தில் கொஞ்சம் பின்னால் மாமி மிக மெதுவாக நடந்து கொண்டு வந்தா.

அது யார் நொண்டியபடி, காலை இழுத்து இழுத்து...? வடிவாகப் பார்த்தேன்.
அட அது பாபு. ஏன் இவன் நொண்டுறான்? ஏதும் விழுந்து கிழுந்து போட்டானோ? நான் யோசித்துக் கொண்டிருக்க, அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.

அப்பா நிம்மதிப் பெருமூச்சோடு அவர்களை உள்ளே அழைத்தபடி "இவன் பாபு ஏன் கிழவங்கள் மாதிரி காலை இழுத்திழுத்து நடக்கிறான். என்ன நடந்தது இவனுக்கு?" மாமியைக் கேட்டார்.

"அதையேன் அண்ணை கேக்கிறிங்கள்? பள்ளிக்கூடத்திலை புற்போல்(Football) விளையாடக்கை முழங்காலுக்கை முறிஞ்சு போட்டுதாம். உடனையே பிரின்சிப்பல்(Principle) ரெலிபோன் பண்ணிக் கூப்பிட்டவர். இவர் போய் ரக்ஸி(Taxi) பிடிச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவர். எல்லாம் உடனையே கவனிச்சு ஒப்பிரேசன் எல்லாம் செய்தும் போட்டாங்கள். பிறகுதான் கண்டு பிடிச்சாங்கள். எலும்பு சரியாப் பொருந்தேல்லையெண்டு. திருப்ப ஒப்பிரேசன் செய்யிறதுக்கெண்டு நாளெல்லாம் குறிச்சிருக்கக்கைதான் இந்தப் பிரச்சனையெல்லாம் வந்திட்டுது. டொக்டேர்ஸ்(Doctors) எல்லாரும் ஸ்றைக்(strike) பண்ணீட்டினம். ஒண்டும் செய்யேலாமல் போட்டுது. எல்லாரும் இவற்றை ப்ரெண்ட்ஸ்(Friends) தான். இவருக்காண்டியாவது வந்து செய்யிறம் எண்டு சிலர் சொன்னவைதான். ஆனால் ஸ்றைக்(Strike) எண்ட படியால் ஆஸ்பத்திரியிலை ஒப்பரேசன் செய்யக் கூடிய நிலைமையளும் இருக்கேல்லை. இதைப் பாத்துக் கொண்டு நிண்டு உயிரையே குடுக்க வேண்டி வந்திடும் எண்டு வெளிக்கிட்டிட்டம். அவனுக்குத்தான் எங்களிலை கோவம். நிண்டு ஒப்பிரேசனை முடிச்சிட்டு வெளிக்கிட்டிருக்கலாம் எண்டு வழியெல்லாம் ஒரே புறுபுறுப்பு."

மாமி சொல்லி முடித்ததும், "அப்ப இனி என்ன நடக்கும்?" அப்பா அக்கறையுடன் வினவினார்.

"என்ன... எலும்பை பொருத்திறதெண்டு சொல்லி ஒரு எலும்புக்கு மேலை ஒரு எலும்பை வைச்சு தங்கடை வேலையை முடிச்சிட்டாங்கள். இப்ப எனக்கு இந்த வலது கால் இடது காலை விட நீளத்திலை ஒரு இஞ்சி குறைஞ்சிட்டுது. ஒப்பரேசன் செய்யிறதெண்டால் உடனையே செய்யோணுமாம். நாள் போனால் ஒண்டுமே செய்யேலாதாம். அம்மாக்கும் அப்பாக்கும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தன். கேட்கேல்லை. என்னை இங்கை இழுத்துக் கொண்டு வந்திட்டினம். இனி என்ன? இப்பிடியே வாழ்நாள் பூரா கிழவன்கள் மாதிரி நான் காலை இழுத்து இழுத்து நடக்க வேண்டியதுதான்.
கப்பலுக்குள்ளை கூட சாப்பாடு குடுத்த ஆக்கள் என்னைப் பின் பக்கமாப் பார்த்திட்டு, ஒரு சின்னப் பெடியனைக் கூப்பிட்டு, "அந்தக் கிழவனுக்கு இந்தப் பாணைக்குடு" எண்டு சொன்னாங்கள். "நானொண்டும் கிழவனில்லை. எனக்கு இப்பதான் பதின்னாலு வயசு எண்டு கத்தோணும் போலை இருந்திச்சு." பாபு மிகவும் சலிப்பும் வேதனையும் இழைந்தோடச் சொன்னான். எனக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

பாலு என்ன நினைத்தானோ, விரைந்து பாபுவின் அருகில் சென்று "நீ பிள்ளையாருக்கு உதைஞ்சதுக்குப் பாத்தியோ கிடைச்சிட்டு." என்றான்.

"காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதை சொல்லாதை." பாபு, அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்பதை வலியுறுத்தினான்.

நான் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் பாபு இன்று வரை வலது காலை விட ஒரு இஞ்சி நீண்ட இடது காலை மெதுவாக இழுத்து இழுத்துத்தான் நடக்கிறான்?

அது எதனால்? எனக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை.

சந்திரவதனா
யேர்மனி


பிரசுரம் - பூவரசு (செப்டெம்பர்-ஒக்டோபர்-2002)

Thursday, June 02, 2005

அடித்து நொருக்கப் படும் பெண்களின் வாழ்க்கை.


கலாசாரம் பண்பாடு சம்பிரதாயம் சாமிக்குற்றம் என்ற போர்வைக்குள்தான் எத்தனை வக்கிரங்கள் ஒழிந்து கிடக்கின்றன. தற்போது ஓரிரு நாட்களுக்கு முன்புதான் பத்மா அர்விந்தின் பதிவில் இறந்து போன கணவனை சொர்க்கத்துக்கு அனுப்ப ஆபிரிக்காவில் நடக்கும் ஒரு சீரழிவை வாசித்தேன். அதை வாசித்த போது இப்படியும் நடக்குமா என்றிருந்தது.

இன்று குமுதத்தை வாசித்தேன். அங்கு இன்னொரு கொடுமை. நம்ப முடியவில்லை. இப்படியும் மூடத்தனம் தலைவிரித்தாடுமா? அந்தத் தாத்தாவுக்கு மனசாட்சியே இல்லையா?


பெண்ணின் கண்களுக்குள் உள்ள சோகத்தைப் பாருங்கள்

மம்மானியூர் _ திண்டுக்கல்லிருந்து 40 கிலோ மீட்டர் தள்ளி மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அடியில் ஒளிந்து கிடக்கிற ஊர். வடமதுரையில் இறங்கி ஆட்டோவுக்குக் கெஞ்சினால் சொத்தையே விற்றுக் கொடுக்கிற தொகை கேட்கிறார்கள். நமக்கு அங்கே போகவேண்டிய தேவையிருக்கிறது. நிறைய மரங்கள். அங்கங்கே செம்மறியாடுகளை மேய்த்துக் கொண்டு சிறுமியர்கள். ஏதாவது உடம்புக்குக் கேடு என்றால் நெருங்க முடியாத மருத்துவ வசதி. அங்கொன்றும், இங்கொன்றுமாக தலைக்கட்டு வீடுகள். நெருஞ்சி முள்ளால் நிரம்பிக் கிடக்கிறது வழி. மண் ரோடு வெறிச்சோடி கிடக்கிறது. கொஞ்சம் நில்லுங்கள்.... இந்தக் கிராமத்தை இத்தனை விளக்கமாக வர்ணித்துப் போவது எதற்கு என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. கண்ணீர்க் கதைகள் நிறையவே இருக்கிறது.

மம்மானியூர் முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் நிரம்பியிருக்கிறது. பெண்டுபிள்ளைகளும், ஆண்களும் இவ்வளவு தூரம் நடந்து திண்டுக்கல்லுக்கு வந்தால் ஒரு வாய்த் தண்ணீரை வாயில் வைக்காமல் ஊருக்குத் திரும்புகிறார்கள். கம்பு, சோளம், இரும்புசோளம், திணை, கேப்பை பயிரிடுவது மட்டும்தான் வாழ்க்கை. இப்போது தான் ஒரு வருஷத்துக்கு முன்னால் மின்சாரம் எட்டிப்பார்த்திருக்கிறது. ஊருக்கு ஒளியூட்டப்பட்டாலும், அங்கேயிருக்கிற பெண்களின் வாழ்க்கை இருண்டு கிடக்கிறது.
கல்யாணத்திற்குப் பரிசம் போட்டால் 7ரு ரூபாய். மணவாழ்க்கை முறிவுக்கு 7ரு ரூபாய் என்று பெண்களின் வாழ்க்கை அடித்து நொறுக்கப்பட்டு இருக்கிறது. மம்மானியூரில் ஆண்களுக்கு சர்வசாதாரணமாக நாலைந்து மனைவிகள். அறுபது, எழுபது வயது ஆண்களை இருபது வயதுப்பெண்கள் திருமணம் செய்து கொள்வது சுலபம். ஐந்து கிலோ மீட்டர் தாண்டி டீ குடிக்கப் போயிருக்கிற எண்பது வயது புருஷனுக்காகக் காத்திருக்கிறாள் பழனியம்மாள். அவருக்கு இருபது வயதிற்கு மேலிருக்காது. ஏன் இந்த வாழ்க்கை? என்று கேட்டால், கண்ணீர் உடனே ‘குபுக்’கென்று எட்டிப்பார்க்கிறது. சம்மணம் போட்டு உட்கார்ந்து வெறித்துக் கொண்டு பேச ஆரம்பிக்கிறார்.

‘‘எங்க தாய்மாமனுக்குத்தான் என்னைக் கல்யாணம் கட்டிக்கொடுத்தாங்க. ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. ரெண்டு வருஷம் போச்சு இது மாதிரி. அப்பத்தான் இந்தப் பையன் பிறந்தான். பிறக்கும் போதே ஒரு காலு வளைஞ்சுயிருந்துச்சு. ஆனால் இதிலேயே நடந்தான். ஓடினான். கவலைப்படலை. ஆனால், என் மாமன்தான் தலைவலின்னு சொல்லி படுத்தாங்க. ரெண்டு நாள் அப்படியரு காய்ச்சல். மூணாம்நாள் ‘பொட்டு’னு போயிட்டாங்க. அடக்கம் பண்ணிட்டு பத்துநாள்தான் ஆச்சு. அப்படியே மாமன் நினைவு மனசுக்குள்ளே இருந்த நேரம். ஒரு மாதம் கழிச்சு, உங்க தாத்தாவுக்கு ஆரு ஆதரவு இருக்குன்னு என்னையே அவருக்குக் கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க. அவருக்கு எண்பது வயது ஆகுது. என் பிள்ளையை நல்லா கவனிச்சுக்கும் தாத்தா. என்னைய கல்யாணம் பண்ணிக்க நான் நீன்னு போட்டி போட்டு வந்தாங்க. ஆனால் என் தாத்தாதான் அதில ஜெயிச்சு வம்படியாக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு’ சுத்துப்பட்டு கிராமத்துல முழுக்க இது நடக்குது. நான்தான் வெளியே பேசுறேன். இதுமாதிரி கஷ்டங்களை முழுங்கிக்கிட்டுத்தான் இங்கே கிடக்கிறோம். வேறே என்ன இருக்கு. இந்தக் குழந்தை முகத்தைப் பாத்திட்டு உட்கார்ந்து இருக்கிறேன். இது முளைச்சு வந்து எத்தனை கல்யாணம் பண்ணிக்கப் போகுதோ’’ என்று மகனை காட்டிப் பேசுகிறார் பழனியம்மாள்.

பழனியம்மாளின் கணவர் ஆண்டியை கேட்டால், சிரிக்கிறார். ‘‘இவ என் பேத்திதான். மகனுக்குத்தான் கட்டி வைச்சேன். ஆனால் அவன் வாழ்க்கையும் சட்டுனு முடிஞ்சுப்போச்சு. எனக்கும் யாரும் இல்லை. அவளுக்குத்தான் குழந்தை இருக்கே. அந்தப்புள்ளையை வேறு எங்கேயும் கட்டிக்கொடுத்தால், என் பேரனை அவன் நல்லா வளர்ப்பானா? கடைசிகாலத்தில் நான் விழுந்து கிடந்தால் என்னைப் பார்த்துக்கறது யாரு?’’ என்று புது நியாயம் பேசுகிறார் ஆண்டி. மொரட்டு தாத்தாவை கண்கள் பனிக்கப் பார்க்கிறார் பழனியம்மாள். அவரின் மன ஆழங்களை அறியமுடியாமல் நம் மனது பாடுபடுகிறது.
‘இதை விடுங்க, அங்கே பாருங்க இன்னொரு ஜோடி’ என்று நம்மை கூட்டிப்போனவர் கைகாட்டிய திசையில் இருக்கிறார்கள் பிச்சையும், ஆண்டியம்மாவும். பிச்சைக்கு 70 வயது, ஆண்டியம்மா முப்பதைத் தொடுகிறார்.
‘‘இவர் ஏற்கெனவே ரெண்டு பொண்டாட்டி கட்டி பஞ்சாயத்தில் தீத்துவிட்டுவிட்டாரு. இப்ப நான்தான் அவருக்கு பொஞ்சாதி. நல்லாத்தான் வச்சுக்கிறாரு. என் பிள்ளைகளை நல்லா பார்த்துக்கிறாரு. அது போதும்னு தோணுது. பிள்ளைக முகத்தை பாத்திட்டு மீதிக்காலத்தை பொரட்டிப் போட வேண்டியதுதான்’’ என்கிறார் ஆண்டியம்மா.

‘வேறு ஆட்கள் இங்கே வந்து சம்பந்தம் பண்ண முடியாதுங்க. சாமி குத்தம் ஆயிடும். இந்த ஊருக்கு வசதி எதுவும் இல்லை. பொண்ணு கொடுக்க பக்கத்து ஊர்க்காரனே அஞ்சி நடுங்குவான். எங்க ஊர் பரவாயில்லை. பக்கத்திலே முத்தாரு இருக்கே, அங்கே போக தைரியம் இருந்தால் போய்ப்பாருங்க. ஏழெட்டு வயசுப்பொண்ணுங்க கழுத்தில கூட மஞ்சக்கயிறு கிடக்கும். வேண்டிய வசதிகளை பண்ணிக் கொடுத்திட்டுதான் இந்தப் பிரச்னையை கவனிக்கணும்’ என்கிறார் வனக்குழுத் தலைவி பொன்னம்மா.
இந்தக் கிராமத்து பெண்களின் துயரங்களை மீட்டெடுக்க நாம் நிறைய உழைப்பும், விலையும் கொடுக்க வேண்டியிருக்கும். கொடுப்போம். அந்தக் கண்ணீருக்கு விடை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.


_நா. கதிர்வேலன்
படங்கள்: சித்ராமணி
nantri-Kumutham

காகம் இருக்க பனம்பழம் வீழ்ந்ததா?


அவர் ஒரு பெரிய நாட்டாண்மை போலத்தான் நடந்து கொள்வார். பேச்சும் செயலும் தன்னை விட்ட ஆட்கள் இல்லையென்பது போலத் தொனிக்கும். வார்த்தைகளில் அதிகாரம் உதிர்க்கும். பணம் அவரிடம் கொட்டிக் கிடப்பதால் திமிர் அவர் நடையில் துள்ளும்.

அவர் வீட்டுக்குள் ஆடுகள் வந்து பூங்கன்றுகளில் வாய் வைத்து விட்டால் போதும். தனது உயிரைக் கிள்ள யாரோ வந்து விட்டது போலக் கோபப் படுவார். தகாத வார்த்தைகளால் அந்த வாய் பேசாப்பிராணிகளைத் திட்டிக் கொட்டுவார். எட்டிப் பிடிக்க முடிந்தால் பிடித்து அந்த ஆட்டுக் குட்டிகளின் ஒற்றைக்காலை முறித்து விடுவார். பெரிய ஆடுகள் என்றால் அதற்கென ஒரு கொட்டன் வைத்திருந்து, அதனால் அடித்து காலை முறித்து விடுவார்.

அவர் வீட்டுக் கேற் சரியாகப் பூட்டப் படாமல் இருக்கும் சமயங்களில் அவர் வீட்டுக்குள் நுழையும் ஒவ்வொரு ஆட்டின் காலும் முறிக்கப் படும் போது அந்த ஆடுகளும் குட்டிகளும் எழுப்பும் அவலக்குரல்கள் இன்னும் கூட என் ஞாபகத்துள் உறைந்து கிடக்கின்றன.

எங்கள் வீதியில் ஒரு சமயத்தில் நொண்டி நொண்டிச் செல்லும் ஆடுகளே அதிகமாகியிருந்தன. வசதி குறைந்தவர்கள் ஆடுகளை ஊர்களில் மேயவிட்டுத்தான் வளர்த்தார்கள். அவர்களுக்கு வேறு வழியில்லை. இவர் கால்களை முறிக்கிறார் என்பதற்காக ஆடுகளை வீட்டில் வைத்துச் சாப்பாடு போட அவர்களால் முடியவில்லை. ஆனாலும் மனம் நொந்து சாபமிட்டார்கள். திட்டிக் கொட்டினார்கள். எல்லாம் தமக்குள்ளேயும் அவருக்குப் பின்னேயும்தான். நேரே நின்று "நீ செய்வது சரியா?" எனக் கேட்க யாருக்கும் துணிவு வரவில்லை.

கால ஓட்டத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்குக் கால் முறிந்து விட்டது. எந்த வைத்தியத்திலும் காலைப் பொருத்த முடியாமல் போய் விட்டது. பணம் எவ்வளவு செலவழித்தும் பலனளிக்கவில்லை. அவர் எழுந்து நடப்பதாயினும் மனைவியின் துணை தேவைப்பட்டது. திமிர்த்த நடை ஊன்றுகோலுக்குள் பதுங்கிப் போனது.

கால் இனிப் பொருந்தும் என்ற நம்பிக்கையும் விடுபட்ட போது அவர் முழுவதுமாகத் தொய்ந்து போய் விட்டார். நொண்டிய படி ஆடுகள் வந்து பயிர்களைத் தின்று தின்று போயின. கத்திக் கத்திக் கூப்பிட்டுத்தான் மனைவியிடம் உதவிகளைப் பெற்றுக் கொண்டார். ஊன்று கோல் மட்டும் போதாமல் மனைவியிடம் அடிக்கடி மண்டியிட்டார். அதிகாரமும் ஆணவமும் அவரது நித்திய படுக்கையான மரக்கட்டிலுக்குள் முடங்கிப் போயின.

இப்போதும் எனக்குள்ளே எழும் கேள்வி. காகம் இருக்கப் பனம்பழம் வீழ்ந்ததா?
சந்திரவதனா
2.6.2005

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite