Friday, February 11, 2005

எதற்காக எழுதுகிறீர்கள்..?


ஏன் எழுதுகிறோம்..? ஏன் எழுதுகிறார்கள்..? என்ற கேள்விகளுக்கான பதில்கள் எத்தனையோ விதமாக வருகின்றன. சில பதில்கள் குதர்க்கமாகக் கூட வருகின்றன. எனது கணவரின் நண்பர் ஒருவர் சொன்னார். "ஏதோ ஒரு தேவை கருதித்தான் ஒவ்வொருவரும் எழுதுகிறார்கள். தம்மை வெளிக்காட்டிக் கொள்ளவோ அல்லது தமக்கான ஒரு அங்கீகாரத்தைப் பெறவோதான் எழுதுகிறார்கள். ஏதாவது ஒரு லாபமில்லாமல் யாரும் எழுதுவதில்லை..." என்று.

இக்கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை. தேவைகருதியும், தம்மை வளர்த்துக் கொள்வதற்காகவும், லாபம் கருதியும் எழுதுபவர்கள் இல்லாமல் இல்லை. அதற்காக எழுதுபவர்கள் எல்லோருமே லாபம் கருதித்தான் எழுதுகிறார்கள் என்று ஒரு போதும் சொல்ல முடியாது.

மீனாக்ஸ் எழுத்தைத் தவம் என்கிறார்.

மனுஷ்யபுத்திரன் எழுத்து எனக்கு தொழிலுமல்ல, தவமுமல்ல. அது ஒரு வாதை. ஒரு கனவின் திடுக்கிடல். தற்செயலாக வந்து சேரும் காதலின் ஸ்பரிஸம்... என்கிறார்.

உங்களுக்கு எழுத்து எப்படி..?
எதற்காக எழுதுகிறீர்கள்..?

ஒரு சிவராத்திரி


ஆணடுகள் சில கழித்து தாயகம் சென்ற போது

கொழும்பு றோட்டில்
கொஞ்சத் தூரந்தான் போயிருப்பேன்

"வீட்டை போன உடனை
பொலிஸ்ரிப்போர்ட் எடுக்கப் போகோணும்."
மாமாதான் சொன்னார்

வீட்டுக்குப் போனவுடன்
குளித்துச் சாப்பிட்டு
40ரூபா ஓட்டோவுக்குக் கொடுத்து
கண்ணாடிகளோ கதவுகளோ இல்லாத
அதன் வேகத்தில்
தலை கலைந்து உடல் குலுங்கி
உண்டதெல்லாம் வெளிவரும் உணர்வுடன்
பொலிஸ்ஸ்ரேசன் போனால்
"லேற்றாகி விட்டது.
சில்வா போய் விட்டார். "
சிங்களத்தில் ஒருவன்
சிரிக்காமல் தடுத்தான்
நரசிம்மராவிடம் பயிற்சி பெற்றானோ...!

சிங்களத்தில் மாமா
சிரித்துக் கதைத்து
என் யேர்மனியப் பாஸ்போர்ட் காட்ட
மெல்ல அவன் முகமிளகி
துப்பாக்கியை விலத்தி
உள்ளே போக வழி விட்டான்

தென்னைகள் குடையாக விரிந்திருக்க
குரோட்டன்கள் அழகாய் பரந்திருக்க
கூரிய கண்கள் பல
என்னையே உற்று நோக்க
தூக்கிய துப்பாக்கிகள் மட்டும்
என் கண்களுக்குத் தெரிய
படபடக்கும் நெஞ்சுடன் படியேறி
பல் இளித்து
பத்திரங்களை நிரப்பி
பவ்வியமாய் சிங்களப் பெண்களிடம் கொடுத்து
வெளி வருகையில்

"இண்டைக்கு வவுனியாக்குப் போகேலாது
நாளைக்குத்தான் பொலிஸ்ரிப்போர்ட் கிடைக்கும்"
மாமாதான் சொன்னார்.

ஆளுடன் ஆளுரச
அவசர நடைபோடும் வெள்ளவத்தை றோட்டில்
இரண்டு இடத்தில் செக்கிங்
பாஸ்போர்ட் காட்டி
Flight time சொல்லி
வீடு திரும்புகையில்
யேர்மனியிலும் இல்லாமல்
வவுனியாவிலும் இல்லாமல்
வீணான நாளை எண்ணி
மனசுக்குள் சலிப்பு

இரவும் வந்தது...

யேர்மனிக்கும் வவுனியாவுக்குமாய்
மனசு அலைய
தூக்கம் என்பது தூர விலகி நிற்க
கட்டிலில் புரள்கையில்
"டொக்.. டொக்.. டொக்.. "

ஜன்னலினூடு இராணுவத்தலைகள்..!

நெஞ்சுக்குள் பந்து உருள
"ஆமி.. ஆமி.." என்று
மாமி கிசுகிசுக்க
இரவின் நிசப்தம்
இராணுவத்தால் குலைக்கப்பட்டு
வேண்டாமலே ஒரு சிவராத்திரி
வீடு தேடி வந்திருந்தது

மீண்டும்
பாஸ்போர்ட் காட்டி
Flight time சொல்லி...
சோதனை என்ற பெயரில்
வீடு குடையப் படுகையில்
குளிர்ந்த நிலவிலே
இரவுடையுடன் நிறுத்தப்பட்டு
அப்பாடா....
கூச வைத்தன இராணுவக் கண்கள்
மனம் குலுங்கி அழுதது
என் தேசப்பெண்களை எண்ணி...

சந்திரவதனா
3.1.1998

ஒரு சாகரமோ..!


தமிழ்வலைப்பதிவுகளின் வளர்ச்சி ஒரு பெரு விருட்சமாகியுள்ளது. சில சமயங்களில் ஒரு சமுத்திரமோ என்று கூட எண்ணும் படி இவ்வளர்ச்சி எம்மைப் பிரமிக்க வைக்கிறது. அறிவியல், தொழில்நுடப்பம், விஞ்ஞானம், இலக்கியம், சமையற்கலை, வரைகலை என்று எல்லாவற்றையும் தனக்குள்ளே நிரப்பி வைத்திருக்கின்றன வலைப்பதிவுகள். இவ் வலைப்பதிவுகள் பற்றிய செய்தியை என் போன்றவர்களுக்கு முதலில் அறிமுகப் படுத்திய பெருமை திசைகளுக்கே.

இம்மாத திசைகளில் வலைப்பதிவுகளுக்ப் பரிசு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்துள்ளது. அதில் இப்படிக் குறிப்பிடப் பட்டுள்ளது.
தமிழ் வலைப்பூக்கள் என்கிற கருத்தாக்கத்தையும் திசைகள்தான் முதலில் அறிமுகப்படுத்தியது. திசைகள் இதழ் வெளிவந்த ஐந்து மாதங்களுக்குள் ஜூலை 2003 இதழில் 'வலைப்பூக்கள்' என்று வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தி, மாவின் வார்த்தைகளில் " நூறு பூக்கள் மலரட்டும்" என்று வாழ்த்தியது. இன்று 300 வலைப்பதிவுகளுக்கு மேல் மலர்ந்திருக்கின்றன. அவற்றில் அலசப்படும் கருத்துக்கள் பல துறையைச் சார்ந்தவை. சில மூத்த எழுத்தாளர்கள் கருதுவது போல அவை 'கையெழுத்துப் பத்திரிகை' அல்ல. தமிழர்களின், குறிப்பாக இளைய தலைமுறையின் சிந்தனைப் போக்குகளை நேரிடையாக அறிந்து கொள்ள உதவும் சாதனம்.

உண்மைதான் வலைப்பதிவுகளில் வயது பேதமின்றிப் பலரும் எழுதுகின்றனர். இளையதலைமுறையினர் தமது சிந்தனைகளையும் கருத்துக்களையும் தயக்கமின்றிப் பகிர்நது கொள்கிறார்கள். இதை விட இலைமறைகாய்களாக இருந்த எத்தனையோபேர் எழுத்துலகில் தம் தடங்களையும் பதித்துள்ளார்கள். தனிமைப் படுத்தப்பட்ட சூழலிலிருந்து தம்மைத் தாமே மீட்டெடுத்திருக்கிறார்கள். எந்த ஊடகங்களையும் காத்திராமல் தாமே தமது கருத்துக்களை துணிவோடு வெளியில் சொல்லியிருக்கிறார்கள். கூடவே முகந்தெரியாதவர்களுடன் நல்ல நட்பையும் வளர்த்துக் கொண்டுள்ளார்கள். சமூகச்சீரழிவாளர்களைப் புடம் போட்டுக் காட்டியுள்ளார்கள். இந்த வலைப்பதிவுகளை செழுமைப் படுத்தும் நோக்கோடு செயற்பட்டு கணினி பற்றியதான பலதொழில்நுட்பங்களைக் கூடக் கற்றுக் கொண்டுள்ளார்கள்.

இலக்கியச் சந்திப்புக்களும் நடக்கின்றன. முன்னர் ஒருமுறை ஈழநாதன் தனது பதிவில் சிங்கப்பூரில் வலைப்பதிவாளர்கள் சிலர் சந்தித்தது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். வேறுசில சந்தோசமான சந்திப்புகள் பற்றியும் வலைப்பதிவுகளில் வாசித்த ஞாபகம். இன்று மூர்த்தி நேற்று சிங்கப்பூரில் வலைப்பதிவாளர்களில் சிலர் சந்தித்தது பற்றி மிகவும் அழகாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளார். (கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கிறது.)

உயிரோடு திரும்புவேனா..?


இன்று நாம் நினைத்ததும் தாயகம் சென்று திரும்புகிறோம். அப்படிச் செல்ல முடியாத ஒரு நிலை அன்று இருந்தது. அந்தப் பொழுதில் நான் என் குழந்தைகளை யேர்மனியில் விட்டுவிட்டு போர்முகம் காட்டி நிற்கும் என் தாயகத்தை நோக்கிப் பயணித்த போது என்னுள் எழுந்த உணர்வுகளில் ஒரு துளி.
1997 மார்கழியில் தாயகம் சென்ற போது...

யேர்மனிய மண்விட்டு மேலெழுந்து
விண்ணோக்கி முன்னேறும் விமானத்துள்...
"உயிரோடு திரும்புவேனா - நான்
உயிரோடு திரும்புவேனா...?"
அலைமோதும் எண்ணங்கள்
நெஞ்சில் சதிராட நான்...

கருவோடு உருவாகி
உயிரோடு உறவாடும் - என்
உதிரத்து உறவுகளை
யேர்மனியில் விட்டு வரும் பரிதவிப்பு
அவர்கள் சிறகிழந்து விடுவார்களோ
என்ற பதைபதைப்பு

சின்ன வயசிலே
சிட்டாகப் பறக்கையிலே
தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட
பட்டு மேகங்களினூடே
விமானம் வட்டுமிட்டுப் பறக்கையிலே
மேகத்தைத் தொட்டுப் பார்க்கவோ
ஒரு மெட்டுக் கட்டவோ
சொட்டுக்கூட ஆசையின்றிய படபடப்பு
"உயிரோடு நான் - என்
உதிரத்து உறவுகளிடம் திரும்புவேனா...!"
என்ற பயத்துடிப்பு

கருக்கொண்ட நாள் முதலாய்
கர்ப்பப்பையில் காத்து
வெளிவந்த பின்னாலும்
அன்புச் சிறகுகளினால் அணைத்த
அம்மாவையும்
உயிரோடு போராடும் கனமான வேளையிலும்
என் முகங்காண ஏங்கி நிற்கும்
அப்பாவையும் பார்க்க
விழி சிவந்து
மனம் கசிந்து
பயணிக்கும் என்னுள்ளே படபடப்பு
"என் உதிரத்து உறவுகளிடம்
உயிரோடு திரும்புவேனா...!"
என்ற பரிதவிப்பு

கடல் தாண்டி மலை தாண்டி
பனி தாண்டி வெண்முகில் தாண்டி
தரையிறங்கும் விமானத்துள் சலசலப்பு
கரை வந்த அலை வந்து
மனம் தொட்ட சிலுசிலுப்பு
அங்கோடி இங்கோடி
வயிற்றிற்கோர் வழிதேடி
மீண்டும் தாயின் இறகுக்குள்
ஒழிந்து கொள்ளும் உயிர்த்துடிப்பு

இருந்தும்...
"உயிரோடு திரும்புவேனா - நான்
உயிரோடு உயிரோடு திரும்புவேனா...?"
அலைமோதும் எண்ணங்கள்
என் நெஞ்சோடு...

சந்திரவதனா
12.12.1997

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite