
வீட்டில் தொலைக்காட்சியில் எத்தனை விதமான Circus நிகழ்சிகளைக் காணக் கிடைக்கும். அப்போதெல்லாம் எனது கணவரும், குழந்தைகளும் அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க நான் மெதுவாக அவ்விடத்திலிருந்து நழுவி வேறேதாவது எனக்குப் பிடித்தமானதைச் செய்து கொள்வேன். இருந்தாலும் நேரில் பார்ப்பது வித்தியாசமான உணர்வைத் தரலாம் என்ற நம்பிக்கையோடு உள் நுழைந்தேன்.
எனது மகன்தான் இந் நகரத்துக்குரிய பத்திரிகை நிரூபராக வந்திருந்தான். தோளில் பாரமான ஒரு பெரிய கமராவைக் கொழுவிக் கொண்டு இன்னொரு சிறிய டிஜிற்றல் கமராவால் கிளிக் செய்து கொண்டு திரிந்த அவனை எனக்குத் தெரிந்தது. அவனால் எம்மைக் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு ,இன்று ஒரு வேலைநாள் என்பதையும் பொருட்படுத்தாது எமது ஸ்வெபிஸ்ஹால் நகரமே கூடியது போல சனம் நிறைந்து வழிந்தது.
Circus நன்றாகத்தான் இருந்தது. வீட்டிலே தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், மண்டபத்தினுள்ளே இருந்து நிகழ்ச்சியை நேரே பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் அதிகம்தான். வீட்டில் போல காலைத் தூக்கி மேசை மேலே போட்டுக் கொண்டு ஒய்யாரமாகச் சோபாவில் சாய்ந்திருந்து பார்க்கும் வசதி மண்டபத்தினுள் இல்லையாயினும், சில - நேரடி - என்பதற்கான சுவாரஸ்யங்கள் இல்லாமல் இல்லை.


இருந்தாலும் சின்ன வயதில் கொழும்பு வீதிகளில் அம்மா அப்பாவுடன் கைகோர்த்து நடந்து சென்று, ஒவ்வொரு Circus கொட்டகையினுள்ளும் புகுந்து Circus பார்க்கும் போதிருந்த அதீத பரவசம் நேற்றைய பொழுதில் எனக்கு வரவில்லை. பறக்கும்பாவை படத்தில் வந்த Circus காட்சிகள் கூட என்னை அப்போது மிகவும் சந்தோசப் படுத்தியிருக்கின்றன.